உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தீர்க்கதரிசிபோல மாறன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தீர்க்கதரிசிபோல மாறன் · 373 / 391

12. தீர்க்கதரிசிபோல மாறன் சொன்னது! நா ன், எழுத்தாளர் சாவி அவர்களுக்கும் எனக்கும் உள்ள நட்பினைப்பற்றி ஏற்கனவே விரிவாக இத்தொடரில் எழுதியிருக்கிறேன். "சாவி-85" என்ற தலைப்பில் எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய நூல் ஒன்றினை நான் வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தி, அந்த விழா 20-1-2001 அன்று நாரத கான சபாவில் நடைபெற்றது. நூலினை நான் வெளியிட, அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

டாக்டர் வா.செ. குழந்தைசாமி, கவிப் பேரரசு வைரமுத்து, பொள்ளாச்சி மகாலிங்கம், ஆர்.எம்.வீரப்பன், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அந்த விழாவில் கலந்து கொண்ட சாவி அவர்கள் பேசும்போது, மிகுந்த உணர்ச்சி வயப்பட்டதால், தன்னால் தொடர்ந்து பேச இயலவில்லை என்றும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறிக் கொண்டே மயங்கி விழப் போகும்போது நானும் என் அருகே இருந்த எனது பாதுகாப்புப் பிரிவினரும் ஓடிச் சென்று அவரைப் பிடித்துக் கொண்டோம்.

விழாவிற்காக வருகை தந்திருந்த ஆற்காடு வீராசாமியையும், தம்பி ஸ்டாலினையும் அழைத்து, உடனே சாவி அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பணித்தேன். அவர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடனடி சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்காமல் சாவி அவர்கள், 9-2-2001 அன்று இயற்கை எய்தினார். சாவி அவர்கள் பார்ப்பன சமுதாயத்தில் பிறந்தவர் என்ற போதிலும், அவர் என்னிடம் எந்த அளவிற்கு அன்போடும், பாசத்தோடும் பழகினார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.

பத்திரிகை உலகின் பிதா மகனாகவே திகழ்ந்தவர் அவர். அவருடைய படைப்பில் வெளிவந்த "வாஷிங்டனில் திருமணம்" என்ற நகைச்சுவை நாடகம், தமிழகத்திலே ஒரு வரலாற்றினை உருவாக்கியது. சாவி மறைவு குறித்து, நான் எழுதிய இரங்கல் செய்தியில் - "எழுத்துலகில் பீடுநடை போட்டவரும், எழுத்தாளர்கள் பலரை உருவாக்கக் காரணமாக இருந்தவருமான என் ஆருயிர் நண்பர் ஆசிரியர் சாவி அவர்கள் இயற்கை எய்திவிட்டார் எனும் செய்தி கேட்டு என் கண்கள் குளமாகின்றன.

எத்தனை ஆண்டுக் காலம் எனக்கும் அவருக்கும் நட்பு! ஆம்; பிரிக்க முடியாத நட்பு! அந்த நண்பரை இழந்துவிட்டேன். வயது 85 என்றாலுங்கூட, அவர் மறைந்த விதம் இருக்கிறதே, அது என்றென்றும் என் மனக்கண் முன்னால் நிழலாடிக் கொண்டே யிருக்கும். "அவரது 85வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்தார்கள். ஆன்றோர்களும், சான்றோர்களும் கூடியிருந்த அவையில் அவருக்கு ஒவ்வொருவராக வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தோம்.

"என் அருகில் அமர்ந்திருந்த ஆசிரியர் சாவி அவர்கள், "நெஞ்சு வலித்துக் கொண்டேயிருக்கிறது- ஆனாலும் பேசப் போகிறேன்" என்றார். "பேச வேண்டாம்" என்று தடுத்தேன். என்னையும் மீறி ஒலிபெருக்கியின் முன்னால் சென்று உணர்ச்சி மிகுந்த ஓர் உரையாற்றினார். அந்த உரை, எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பை விவரிப்பதாக இருந்தது. என்னை அவர் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கும் போதே, நிலை குலைந்து மேடையிலேயே விழுந்தார்.

ஓடிப் போய் தாங்கிப் பிடித்துக் கொண்டோம். மேடையிலிருந்த அனைவரும் ஒரு விநாடி மரங்களாகவே ஆனோம். "மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஒவ்வொரு நாளும் பிழைத்துக் கொள்வார் என்றே எதிர் பார்த்தோம். ஆனால், இயற்கை அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டது. என் உயிர் நண்பரை இழந்த துக்கத்தில் அவருடைய அருமைத் துணைவியாருக்கும், அவரது மக்களுக்கும் ஆறுதல் கூறக் கூடச் சக்தியற்றவனாக ஆகிவிட்டேன். சாவி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

ஆனால், அவருக்கும் எனக்கும் இடையிலே உள்ள நட்பு ஆழமானது. அதை யாராலும் பிரிக்க முடியாது. வாழ்க சாவியின் புகழ்!" என்று எழுதினேன். 26-1-2001 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் நானும், ஆளுநர் பாத்திமா பீவி அவர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்டோம். மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்ட கோட்டை அமீர் பெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தை குடியரசு தின விழாவில் தஞ்சை சுல்தான் மொய்தீனுக்கு நான் வழங்கினேன்.

கள்ளச் சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுப் பாராட்டத்தக்க பணியாற்றிய நான்கு காவலர்களுக்கும் உத்தமர் காந்தி காவல் பதக்கங்களை வழங்கினேன். தொடர்ந்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரின் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டோம். மாலையில், ஆளுநர் இல்லத்தில், அவரால் தரப்பட்ட தேநீர் விருந்திலும் கலந்து கொண்டேன். அதற்கடுத்த நாளான 27-1-2001 அன்று "முரசொலி" அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கலைஞர் விருது வழங்கும் விழாவிலே கலந்துகொண்டு, டத்தோ சாமிவேலு, கே.பாலசந்தர், வைரமுத்து ஆகியோருக்கு கலைஞர் விருதினை வழங்கினேன்.

விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் அவர்களுக்கு என்னால் வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு, ஜனவரி, இறுதியில் குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல மாடிக் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்தன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வாஜ்பய் அவர்களும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட அந்த நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டு மறைந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்ததோடு, அங்கே நடைபெற்ற நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசின் சார்பில் உடனடியாக ஐந்து கோடி ரூபாய் வழங்கிடச் செய்தேன். அமைச்சர்கள் எல்லாம் தங்கள் ஒரு மாத ஊதியத்தை குஜராத் மக்களின் துயர் துடைப்பதற்காக வழங்கினார்கள். தி.மு. கழகத்தின் சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. 29-1-2001 அன்று 2001-2002ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையினைத் தமிழகச் சட்டப் பேரவையில் நான் தாக்கல் செய்தேன்.

2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டு என்ற அடிப்படையில், ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்டக் கழக முன்னணியினரை அழைத்து உரையாடல் நடத்தினோம். தமிழகத்தில் ஏப்ரல், மே திங்களில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலை இருந்தது. அதற்கு முன்பு நான்காண்டு காலம் அதிகமாக அரசியலில் ஈடுபாடு இல்லாமல் ஓய்வாக இருந்த ஜெயலலிதா தேர்தல், வருகிறது என்றதும் பரபரப்புடன் செயல்படத் தொடங்கினார்.

ஆளுங் கட்சியாக ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், தி.மு.கழகத்தின்மீது மக்களுக்கு ஒரு வித அசூயை இருந்தது. 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் தோழமை கொள்ள நினைத்த நேரத்தில், அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு எதிராக திடீரென புதிய கூட்டணி அமைந்தது. நரசிம்மராவின் காங்கிரசிலிருந்து வெளியேறி வந்து, காமராஜரின் ஆதரவாளர்கள் மூப்பனாரின் தலைமையின்கீழ் தமிழ் மாநிலக் காங்கிரசைக் கண்டார்கள்.

அந்தத் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தி.மு. கழகத்துடன் சேர்ந்து அமைத்த கூட்டணி, 1996 தேர்தலில் அரசியல் பிரளயமாகவே மாறி ஜெயலலிதாவின் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டது. அதன் பிறகு மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சிகளில் - தேவகவுடா அரசிலும், ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையிலும் - தி.மு.க.வும், த.மா.காவும் பங்கு கொண்டன. எனினும் வேறு சில காரணங்களால் தி.மு.க.வுக்கும் த.மா.கா.வுக்கும் இடையே உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

அந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்ற பிறகு, த.மா.கா.வும், தி.மு.க.வும் நேர் எதிர்க்கட்சிகளாக ஆகி விட்டன. த.மா.கா. மாத்திரமல்ல - கம்யூனிஸ்ட் கட்சிகளும், முஸ்லீம் லீக் கட்சியும்கூட தி.மு.க. அணியிலிருந்து விலகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் நெருங்கிய அரசியல் உறவை த.மா.கா. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டன. அந்த உறவு 2001ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியாக மாறுமா என்று தெரியாத நிலை.

இந்த நிலையில்தான் தேர்தல் கூட்டணி எவ்வாறு உருவாகுமோ என்ற பேச்சு அரசியலில் பலமாகப் பேசப்பட்டது. ஏடுகள் எல்லாம் தங்கள் கற்பனைக்கேற்ற வண்ணம் மாறி மாறி எழுதின. ★ ★ ★ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு 3-1-2001 அன்று கூடியது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி.ராஜா, கேரள மாநில முன்னாள் முதல்வர் பி.கே. வாசுதேவன் நாயர், தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.

நல்லகண்ணு உட்பட 32 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாளே பரதனும் அந்தக் கட்சியின் முன்னணியினரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தனர். அவர்களைத் தொடர்ந்து சென்னை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டிய இடது சாரிக் கட்சிகள், தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாவதைத் தவிர்க்கும் முயற்சியிலே ஈடுபட்டார்கள்.

தமிழகத்தில் குறிப்பாக பா.ஜ.க. இடம் பெறும் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அந்தக் கட்சிகள் தீவிர அக்கறை காட்டின. ஜெயலலிதாமீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி, அ.தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்த கம்யூனிஸ்டுகள், பா.ஜ.க. அணியைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அ.தி.மு.கவோடு கை கோர்த்தன. "தனித்து ஆட்சி அமைப்போம்" என்ற அ.தி.மு.க.வும், "ஆட்சியில் பங்கு வேண்டும்" என்று த.மா.கா.வும் கூறிவந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, கூட்டணி ஆட்சிபற்றி தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம் என்று இருவரும் முடிவுக்கு வந்தனர். ஆனால் 16-1-2001 அன்று சென்னையில் ஒரு விழாவில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. கூட்டணி வென்றால், தானே முதல்வர் என்று அறிவித்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதைப் பற்றி ஆலோசிக்க த.மா.கா. குழு ஒன்றை அமைத்தது.

19-1-2001 அன்று எம்.ஆர்.சி. நகரில் உள்ள பத்திரிகையாளர் சோ வீட்டிற்குச் சென்று அவரை ஜெயலலிதா சந்தித்தார் என்றும், வாஜ்பய் அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் சோ என்றும், அரசியலில் பா.ஜ.க.வின் எதிரணியான அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்றும் ஏடுகள் செய்தி வெளியிட்டன. ★ ★ ★ சென்னை வர்த்தக மையத்தின் திறப்பு விழாவும், மற்றும் 16வது இந்திய பன்னாட்டுத் தோல் பொருள் கண்காட்சியின் தொடக்க விழாவும் 31-1-2001 அன்று நந்தம் பாக்கத்தில் நடைபெற்றது.

அந்த வர்த்தக மையத்தினை சென்னையில் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டவர் மத்திய அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன். அவரும் அன்றைய தினம் அந்த விழாவிலே கலந்து கொண்டார். அந்த வர்த்தக மையம் அங்கே அமைவதற்காக தமிழக அரசு 25.48 ஏக்கர் பரப்புடைய நிலத்தினை வழங்கியது. அந்த விழாவினையொட்டி, 4-2-2001 தேதிய "கல்கி" வார இதழ் ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சி எந்த அளவிற்கு இருந்தது என்பதை விளக்கும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்திருந்தது.

அந்தத் தலையங்கத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் வருமாறு:- ✽ "ஹார்வர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின்படி சர்வ தேச முதலீடுகளை ஈர்ப்பதில், பாரதத்திலேயே முதன்மை இடத்தில் இருப்பது தமிழகம் தான். உற்பத்திப் பொருளை நூறு சதவிகிதம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தான் அதிகம். தகவல் தொழில் நுட்பப் புரட்சியிலும் இம்மாநிலமே முந்தி நிற்கிறது. பயோடெக்னாலஜி எனப்படும் உயிரியல் தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கிறது.

இவ்விரண்டு துறைகளும்தான் எதிர்காலத்தில் உலகையே மாற்றி அமைக்கப் போகின்றன. ✽ "1914 கோடி ரூபாய் பெறுமானமுள்ள தகவல் தொழில் நுட்பம் தமிழகத்தில் இருந்து கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியாகியிருக்கிறது. "சமுதாய முன்னேற்றப் பணிகளிலும் தமிழகம் சளைத்து விடவில்லை" என்கிறார் ஹார்வர்ட் பிரதிநிதியான பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ். திட்டக் கமிஷன் உறுப்பினர் மான்டெக் சிங் அலுவாலியா, "புதிய பொருளாதார கொள்கைக்கு மிகச் சிறப்பாக ஈடு கொடுத்து முன்னேறியுள்ள மாநிலம்" என்று தமிழகத்தைப் பாராட்டியுள்ளார்.

அக்கொள்கையானது மாநிலங்களுக்கு அளித்தக் கூடுதல் உரிமைகளையும் செயல்பாட்டுச் சுதந்திரங்களையும் தமிழகம் மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ✽ "நடப்பு தி.மு.க. ஆட்சியில் குறைகள், லஞ்ச ஊழல் இல்லையா என்று கேட்கலாம். இருக்கவே செய்கின்றன. எனினும் அவை கட்டுக்கடங்காத பிரும்மாண்ட குற்றம் குறைகள் அல்ல. ஆனால், ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வினர் நடத்திய பகிரங்க சுரண்டலும், சூறையாடலும் வரலாறு காணாதவை.

மீண்டும் அக்கட்சியிடத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தரவல்ல எந்த அரசியல் முடிவும் தமிழகத்தின் பின்னடைவுக்கே வழி செய்யும்" என்று எழுதியிருந்தது, 'கல்கி'! ★ ★ ★ பேரறிஞர் அண்ணா அவர்களின் 32வது நினைவு நாள் அமைதிப் பேரணி என் தலைமையில் வழக்கம்போல பிப்ரவரி 3ஆம் தேதியன்று நடைபெற்றது. அதற்கடுத்த நாளான 4-2-2011 அன்று கலைவாணர் அரங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்த ஆலடி அருணா எழுதிய Unfederal Features of Indian Constitution (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சிக்கு மாறான அம்சங்கள்) என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.

ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் தலைமையில் அந்த விழா நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் முன்னிலை வகித்தார். நீதியரசர் மோகன், நடிகர் சரத்குமார் ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். மத்திய மாநில உறவுகள் - மத்திய சர்க்காரிடத்திலே குவிந்திருக்கின்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல ஆய்வுகளை நடத்தி, ஆன்றோர்கள் பலர் வழங்கிய ஆழமானக் கருத்துக்களை யெல்லாம் தொகுத்து அந்த நூல் உருவாக்கப்பட்டிருந்தது.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதாக அரசியல் சட்ட மறு ஆய்வு அமைய வேண்டும் என்று அந்த விழாவிலேதான் நான் பேசினேன். அந்த விழாவிலே கலந்து கொள்வதற்காக வந்த நண்பர் பரூக் அப்துல்லா அவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னுடனும், தம்பி மாறனுடனும் நீண்ட நேரம் உரையாடினார். அவருடைய அருமைத் தந்தையார் ஷேக் அப்துல்லா அவர்கள் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தது பற்றியெல்லாம் அப்போது அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

7-2-2001 அன்று காலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற "தினகரன்" (புதுவை பதிப்பு) வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, மாலையில் திண்டிவனத்தில் இருபது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தினைத் திறந்து வைத்தேன். 2001ஆம்

ஆண்டு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், "சோ" ராமசாமி அவர்கள் ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தீவிரவாதத்தை நான் ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்துக்கு நான் துணை போனதாகவும், பத்மநாபாவைக் கொலை செய்த பிறகும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்த பிறகும் விடுதலைப் புலிகளுக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்றும், அதனால் தான் அவர் தி.மு.கழக ஆட்சியை எதிர்ப்பதாகவும் கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்டுச் செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்ட போது - "பத்மநாபா கொலை செய்யப் பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆங்கில ஏடுகளுக்கு அளித்த பேட்டியில், "இந்த இரண்டு மாதங்களாக விடுதலைப்புலிகளால் எந்தவிதமான வன்முறையும் இல்லை.

அதனால் அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை. இந்திய அரசு இலங்கையின் மீது படையெடுத்து, இந்திரா காந்தி பாகிஸ்தானில் ஒரு பங்களாதேஷ் உருவாக்கியதுபோல இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும். பிரபாகரனுக்கு ஈழத்தில் ஒரு ஆபத்து என்றால், தமிழ்நாடு எரிமலையாகும்! விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்ததில் அணுவளவுகூட கருணாநிதி உதவி செய்யவில்லை. தமிழ் நாட்டு மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும்" என்று கருத்துக் கூறிய ஜெயலலிதாவை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிற சோ இராமசாமி அவர்கள், என்னைப் பற்றி இட்டுக்கட்டி அவதூறு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகும் நான் விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக திரு. சோ. இராமசாமி சொல்வது உண்மையாக இருக்குமானால், பிறகு ஏன் 1996 தேர்தலில் தி.மு. கழகத்தையும், த.மா.கா.வையும் கூட்டணி சேர்க்க இவர் தூதராக வேலை பார்த்தார் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்?"

என்று வினவினேன். ★ ★ ★ 11-2-2001 அன்று காலையில், சென்னையில் அய்யநாதன் இல்லத் திருமண விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நான், அன்று மாலையில் நாங்குனேரியில் நடைபெற்ற உயர் தொழில் நுட்பத் தொழில் பூங்காவின் தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். மறுநாள் 12-2-2001 அன்று திருநெல்வேலியில் கருப்பசாமிப் பாண்டியன் இல்ல மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, மாலையில் உசிலம்பட்டி வந்து பார்வர்ட் பிளாக் நண்பர் பி.என்.

வல்லரசு நினைவிடத்திலே அஞ்சலி செலுத்தி விட்டு, தேனி சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்றேன். அதற்கடுத்த நாளான 13ஆம் தேதி காலையில் மட்டும் மூன்று நிகழ்ச்சிகள்! திருவாதவூரில் நூறாவது சமத்துவபுரத் திறப்பு விழா - தும்பைப்பட்டியில் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் மணி மண்டபத் திறப்பு விழா - மதுரையில் கிராம நிர்வாக அலுவலர் மாநாடு - மாலையில் மதுரையிலேயே மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநாடு.

இத்தனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விட்டு - மறுநாள் சென்னைக்கு வந்து, அன்று காலையில், சென்னையில் ராணிப் பேட்டை காந்தி இல்ல மண விழாவிலும், மாலையில் ராஜ் தொலைக் காட்சியினர் நடத்திய குஜராத் பூகம்ப நிதியளிப்பு விழாவிலும், அதற்கடுத்து சென்னை தலித் கிறித்தவர்களின் மாநாட்டிலும் கலந்து கொண்டேன். ★ ★ ★ 15ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கான அரசு அலுவல்களில் பின்னடைவுப் பணி இடங்களை நிறைவு செய்யும் ஆணை குறித்து ஆய்வு செய்திட நீதிபதி சாமிதுரை அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைப்பதென்ற முடிவினை வேறு சில முடிவுகளோடு எடுத்தேன்.

16ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சட்டப் பேரவைத் தேர்தலில் தோழமைக் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதிப் பங்கீடு பற்றிக் கலந்து பேசிடவும் அப்போது கழகப் பொருளாளராக இருந்த ஆர்க்காடு வீராசாமி தலைமையில் கழகத்தின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படுமென்று தெரிவித்தேன். ★ ★ ★ 1998இல் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.

அணியில் இடம் பெற்ற பா.ம.க., அப்போது அமைந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் பங்கேற்றது. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியபோதும், பா.ம.க. அதே அணியில் நீடித்தது. அதைத் தொடர்ந்து 1999இல் நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அந்தக் கட்சி இடம் பெற்றது. 2001ஆம் ஆண்டு தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, பா.ம.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டது. ★ ★ ★ 17-2-2001 அன்று கலைவாணர் அரங்கத்தில் மத்திய அமைச்சர் தம்பி முரசொலி மாறன் தலைமையில் நடைபெற்ற தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

பேராசிரியர், முனைவர் தமிழ்க்குடிமகன், முனைவர் வா.செ. குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் இலங்கை உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. இண்டிகா குணவர்தனே, இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக் குழுத் தலைவர் திரு. சு. சிவதாசன், சிங்கப்பூர் அரசின் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆர்.ரவீந்திரன், ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் தாமஸ் மால்ட்டன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நான் பெரிதும் மதிக்கும் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அந்த விழாவில் வரவேற்புரையாற்றும்போது, "கலைஞர் விட்டுச் செல்லும் எச்சங்கள் தமிழக வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும்" என்றும், "தமிழக முதலமைச்சர் கலைஞர் இந்த விழாவில் ஒரு இளங்கன்றை நட்டிருக்கிறார், அது தென்னையின் கன்று அல்ல - பனையின் கன்று அல்ல - வேம்பின் கன்றுகூட அல்ல அது ஆலின் கன்று!

உலகின் நாற்பது நாடுகளில் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அந்த நாட்டின் மண்ணில் விழுது இறக்கி, விரிவாக வளரக் கூடிய தன்மையை தன்னுள் கொண்ட ஒரு ஆலின் கன்றை இன்று அவர்கள் நட்டிருக்கிறார்கள்!" என்றெல்லாம் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமையேற்ற மத்திய அமைச்சர் தம்பி மாறன் பேசும்போது, "கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்திருக்கலாம், ஆனால் இந்தத் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்திற்கு நிகரான சாதனை எதுவுமே கிடையாது.

டாக்டர் குழந்தைசாமி இதை ஆல விழுது என்றார். ஆலவிழுதுகூட அல்ல - இது ஆயிரங் காலத்துப் பயிர்! இந்தப் பல்கலைக் கழகம் தமிழ் உள்ளளவும் இருக்கும். இன்னும் பத்தாண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் தற்போது டெலிபோன் இருப்பதைப் போலவும், டெலிவிஷன் இருப்பதைப் போலவும், கம்ப்யூட்டரும் வந்துவிடும். கலைஞர் அவர்களின் சாதனை கிரீடத்தில் எத்தனையோ வைரங்கள் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற வைரம் கிடையாது!"

என்று குறிப்பிட்டார். 11 ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்குமென்று எவ்வளவு தீர்க்கதரிசியாக மாறன் அன்றைக்கு அந்த விழாவிலே பேசியிருக்கிறார் என்பதைத் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர்களை நமது குழந்தைகள் கையாளுகின்ற நேரத்திலே நாம் உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா? அந்த விழா நடைபெற்ற அதே நாளில், நீதிக் கட்சி நிறுவனர் டாக்டர் சி.

நடேசனார் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 90 வயது நிரம்பிய பெரியவர் சி.எஸ். மணி அவர்கள், அந்த நாள் நடேசனார் அவர்களின் 63வது நினைவு நாள் என்ற வகையில் என்னைச் சந்தித்து உரையாடினார். இந்தத் தொடரில் சற்று விரிவாக நான் கலந்து கொண்ட முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் இடம் பெற்று, பிற்காலத்தில் ஆய்வு செய்வோருக்குப் பயன்படும்படியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதால், பெரும்பாலான நிகழ்ச்சிகளை இடம்பெறச் செய்திருக்கிறேன்.

அதே நேரத்தில், 2001ஆம் ஆண்டு என்பது என்னுடைய 77ஆம் அகவை - அந்த வயதிலும்கூட நான் எந்த அளவிற்கு உழைத்திருக்கிறேன் என்பதை நானே ஒருமுறை எழுத்திலே பார்க்கும்போது மனநிறைவாகவே உள்ளது. ★ ★ ★ வன்னிய சமுதாயப் பெருமக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் திருவுருவச் சிலையை சென்னையிலே நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையினை டாக்டர் ராமதாஸ், திரு. வாழப்பாடி ராமமூர்த்தி, திரு.

வன்னிய அடிகளார், திரு. தீரன், எம்.எல்.ஏ., மற்றும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக தொடர்ந்து தெரிவித்தார்கள். ராமசாமி படையாச்சியார் அவர்களை நானும் 1952ஆம் ஆண்டிலிருந்து - அவரது உழைப்பாளர் கட்சியுடன் தி.மு.க. தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த காலத்திலிருந்து - நன்கறிவேன். அவருடன் நெருங்கியும் பழகியிருக்கிறேன். எனவே சென்னையில் ராமசாமி படையாச்சியார் சிலை வைப்பதென்று அரசின் சார்பில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

வன்னிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்து கொண்டார்கள். சென்னை மாநகரில் வன்னிய சமுதாயத்தினருக்காகப் பெரிதும் உழைத்த பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாசசியார் அவர்களின் திருவுருவச் சிலை வைக்கப்படும் என்று நான் 19-6-2000 அன்று அறிவித்தேன். அறிவித்ததோடு நில்லாமல், அதற்கான ஆணையையும் பிறப்பித்தேன். படையாச்சியாரின் வெண்கலச் சிலை தயாராகி 21-2-2001 அன்று நானே அதனைத் திறந்து வைக்கும் பேற்றினையும் பெற்றேன்.

அந்த விழாவிற்குச் செல்வதற்கு முன்பாகத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, கோடைக் காலத்தில் வழக்கமாக ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளித்திட துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அரசின் மூத்த அதிகாரிகளோடு கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியாரின் சிலை திறப்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி, துரைமுருகன், முல்லைவேந்தன், பேராசிரியர் தீரன், வன்னிய அடிகளார், இன்றைய மத்திய துணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.

பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி, ஏ.ஜி. சம்பத் ஆகியோரும் படையாச்சியாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். படையாச்சியாரின் சிலை வைப்பது பற்றி வாழப்பாடியாரும், வன்னிய அடிகளாரும் தான் ஒரு முறை என்னைச் சந்தித்து ராமசாமி படையாச்சியாரின் சிலை வைக்க ஓர் இடம் வேண்டுமென்று கேட்டார்கள். "இடம் மாத்திரமல்ல- இடத்திலே நிச்சயமாக சிலையும் கழக அரசின் சார்பாகவே நிறுவப்படும்" என்று பதிலளித்தேன்.

அதைச் செய்தும் முடித்தேன். அந்த விழாவில் உரையாற்றிய வாழப்பாடியார் அதைப்பற்றி தனது உரையிலே விரிவாக எடுத்துக் கூறினார். ★ ★ ★ 1980ஆம் ஆண்டு இந்திரா காங்கிரசுக்கும் தி.மு.க.விற்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு, தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒரு பிரதியை, அதை வெளியிடுவதற்கு முன்பாக தோழமைக் கட்சியின் தலைவன் என்ற முறையில் எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதைப் பார்த்த போது தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் பெரும்பாலாக வாழ்கின்ற சமுதாயத்தின் சார்பில் ஒரு வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை என்பதை அறிந்து, உடனே தொலைபேசியில் இந்திரா காந்தி அம்மையாரைத் தொடர்பு கொண்டு, "தென் ஆற்காடு, வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் வாழும் ஒரு பெரும் சமுதாயம் - உழைக்கும் சமுதாயம் - தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இடம் பெற்ற சமுதாயம் - ஏழைஎளிய பாட்டாளி மக்கள் இடம் பெற்ற சமுதாயம் - ஒரு அரசு அப்படிப்பட்ட சமுதாயத்திற்கு அதிகமாகச் செய்ய வேண்டும் - ஆனால், தங்கள் பட்டியலில் அந்தச் சமுதாயத்திலிருந்து ஒருவரைக் கூட வேட்பாளராக இடம் பெறச் செய்யவில்லையே" என்று சொன்னேன்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டார்கள். "நான்கைந்து பாராளுமன்றத் தொகுதிகளை இணைக்கக் கூடிய அளவிற்கு ஒரு வேட்பாளர் இருக்கிறார், அந்த வேட்பாளரை நிறுத்தினால் நான்கைந்து பாராளுமன்றத் தொகுதியிலும் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்களை நிறுத்தியதாக அர்த்தம். அவ்வளவு மக்களும் திருப்தி அடைவார்கள்" என்று சொன்னேன்.

"பெயரைச் சொல்" என்றார்கள். நான் "ராமசாமி படையாச்சியார்" என்று சொன்னேன். உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே அறிவித்தார்கள். அந்தத் தேர்தலில் தான் ராமசாமி படையாச்சியார் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தச் சம்பவத்தை அந்தச் சிலை திறப்பு விழாவின் போது, படையாச்சியாரின் மகன் திரு. ராமதாஸ் அவர்களே எடுத்துக் கூறினார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டிருந்தபோது, கடலூர் கூட்டத்திலே கலந்து கொண்டபோது படையாச்சியார் பற்றி விசாரித்தேன்.

அவர் உடல் நலம் இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார் என்று சொன்னார்கள். நான் கடலூர் கூட்டம் முடிந்து, தொடர்ந்து பல ஊர்களுக்கு பிரச்சாரத்திற்காக செல்ல வேண்டியிருந்தாலும், நேராக ராமசாமி படையாச்சியார் வீட்டிற்குச் சென்றேன். அப்போது நான் எந்தப் பதவியிலும் இல்லை. இருந்தாலும் அவர் தன் வீட்டு வாசலுக்கே வந்து, என்னை வரவேற்று அழைத்துச் சென்றார். அந்தப் பண்பாட்டினை நான் இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

அந்தப் பெருமகனாருக்கு கழக ஆட்சியில் சிலை வைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது - பெரும் பேறுதானே!