நெஞ்சுக்கு நீதி
நான் ஆற்றிய பணிகள் - · 372 / 391
11. நான் ஆற்றிய பணிகள் - அன்றைய "தினமணி"யில்! அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் அவர்களின் பதவிக் காலம் 2001ஆம் ஆண்டு ஜனவரியோடு முடிவடைவதாக இருந்ததையொட்டி, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அமெரிக்காவின் புதிய அதிபராக வரப் போகிறவர் யார் என்று உலகமே எதிர் நோக்கி இருந்தது. அமெரிக்கத் தேர்தல் முறை 1787ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்திலே வகுக்கப்பட்ட ஒன்றாகும்.
1787ஆம் ஆண்டு, அந்த நாட்டிற்கான அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது, அந்தச் சட்டத்தை உருவாக்கக் காரணமாக இருந்தவர்கள், புதிதாக தேசிய அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் உருவாகும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதனால், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேர்தலில் பல கட்சிகள் சார்பில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனாலும், பெரிய கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையேதான் உண்மையான போட்டி இருக்கும்.
அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அல்கோர் போட்டியிட்டார். அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிப- ராக இருந்த பில் கிளிண்டன் அவர்களே தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அல்கோர் அவர்களை எதிர்த்து, குடியரசுக் கட்சியின் சார்பில், ஜார்ஜ் டபிள்யூ புஷ் போட்டியிட்டார். இவர் 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பர்ட் புஷ்ஷின் மகன்.
இரண்டு வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தவிர, பசுமைக்கட்சி சார்பில் ராடர் போட்டியிட்டார் எனினும், அல்கோர் - ஜார்ஜ் புஷ் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவியது. அமெரிக்காவில் உள்ள முறைப்படி நியூஹாம் ஷயர் மாநிலத்தில், 7-11-2000 அன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மற்ற இடங்களில் வாக்குப் பதிவு மறுநாள் காலையில் தொடங்கியது. அமெரிக்காவில் வாக்கு எண்ணப்படும் முறை சற்று வித்தியாசமானது.
அங்கே மொத்தம் 51 மாநிலங்கள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு எலெக்ட்ரோல் வாக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் இருக்கிறதோ, அந்த மாநிலத்திற்குரிய எலெக்ட்ரோல் வாக்குகள் அந்த வேட்பாளரின் கணக்கிலே சேரும். உதாரணமாக, புளோரிடா மாநிலத்திற்கு 25 எலெக்ட்ரோல் வாக்குகள் உண்டு. அங்கு அதிக வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு அந்த 25 வாக்குகள் சேரும். 51 மாநிலங்களில் உள்ள மொத்த எலெக்ட்ரோல் வாக்குகள் 538 ஆகும்.
அதில் 270 எலெக்ட்ரோல் வாக்குகள் யாருக்குக் கிடைக்கிறதோ அவர் வெற்றி பெற்றவர் ஆவார். அந்தத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செய்த செலவு மட்டும் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. 8-11-2000 அன்று பகல் 12 மணியளவில் கிடைத்த தகவலின் படி, புஷ்ஷுக்கு 246 எலெக்ட்ரோல் வாக்குகளும், அல்கோருக்கு 242 வாக்குகளும் கிடைத்திருந்தன. பிற்பகலில் அல்கோர் சற்று முன்னேறி, 249இல் இருந்தார்.
இறுதியாக புளோரிடா மாநில வாக்குகள் எண்ணப்பட்டதில், புஷ் மிகச்சிறிய வித்தியாசத்தில் அல்கோரைவிட அதிக வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 25 எலெக்ட்ரோல் வாக்குகள் கொண்ட புளோரிடா மாநிலத்தில் புஷ் வெற்றி பெற்றார். ஏற்கனவே 246 எலெக்ட்ரோல் வாக்குகள் பெற்றிருந்த புஷ், இந்த 25 எலெக்ட்ரோல் வாக்குகள் மூலம் 271 எலெக்ட்ரோல் வாக்குகளைப் பெற்றார். எனவே 270 எலெக்ட்ரோல் வாக்குகளை விட அவர் ஒரு வாக்குகள் கூடுதலாகப் பெற்றதால் அதிபர் தேர்தலில் புஷ் வென்றார்.
பொது மக்களின் வாக்குகள் அடிப்படையில் பார்த்தால், புஷ் 4 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 353 வாக்குகளையும், அல்கோர் 4 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 780 வாக்குகளையும் பெற்றனர். பொது மக்களின் 2 லட்சத்து 16 ஆயிரத்து 427 வாக்குகள் குறைந்த நிலையிலும், புஷ் குடியரசுத் தலைவராக வரக் கூடிய வாய்ப்பு அரும்பியது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முடிவு வெளியானதால், இந்த வெற்றியை அறிவிப்பதில் பெரிய தடங்கல் ஏற்பட்டு, நீதிமன்றத்தின் துணையை நாட வேண்டிய அளவிற்கு நிலைமை முற்றியது.
இருந்தாலும், 13-12-2000 அன்று அமெரிக்க உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் அதிபரானார். செனட் உறுப்பினர் பதவிக்கு அதிபர் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி நியூயார்க்கில் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் அங்கு வேட்பாளராக நின்றார். ஹிலாரியை எதிர்த்துக் குடியரசுக் கட்சி சார்பில் ரிக் வாசியோ என்பவர் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஹிலாரிக்கு ஆதரவாக அதிபர் கிளிண்டன், அவரது மகள் செல்சியா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். வாக்குப் பதிவு முடிந்து, தேர்தல் முடிவு வெளியானபோது, ஹிலாரி கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனது மனைவி ஹிலாரி வெற்றி பெற்றதை அறிந்த கிளிண்டன் மகிழ்ச்சி அடைந்து, எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார். வாக்காளர்களுக்கு நன்றி கூறிய ஹிலாரி, "தேர்தலில்தான் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே போட்டி நடந்தது.
இனிமேல் நாம் அனைவரும் சேர்ந்து நியூயார்க் மக்களின் நலனுக்காகப் பாடுபடுவோம்" என்று கூறினார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த ரிக் வாசியோ, தொலைபேசியில் ஹிலாரியைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதிபர் தேர்தலுடன் 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபைக்கு 34 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு சபைகளிலும் அப்போது குடியரசுக் கட்சிதான் மெஜாரிட்டியுடன் இருந்து வந்தது.
நடைபெற்ற அந்தத் தேர்தலிலும் குடியரசுக் கட்சி கணிசமான இடங்களில் வெற்றிபெற்று தனது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. இதற்கிடையே, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறையின் பொன் விழா ஆண்டு நிறைவு விழாவில், 31-10-2000 அன்று கலந்துகொண்டு, கல்வெட்டினைத் திறந்து வைத்தேன்.அந்த விழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நரம்பியல் துறை நிறுவனர் டாக்டர் பி. ராமமூர்த்தி, டாக்டர் எம்.ஜி.ஆர்.
பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த டாக்டர் ஆனந்தக் கண்ணன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கடுத்த நாள், சென்னை சமூகக் கலாச்சாரக் கழகத்தின் சார்பில் உலகக் கவிஞர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதியரசர் திரு. எஸ்.மோகன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு அவரைப் பாராட்டினேன். அடுத்த நாள், மற்றொரு வித்தியாசமான நிகழ்ச்சி! "தினமலர்" என்றாலே தி.மு.க.விற்கு எதிரானப் பத்திரிகை என்று சொல்லக்கூடிய அளவிற்குச் செய்திகளை வெளியிடக் கூடிய பத்திரிகை.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி ஒரு நாள் என்னைச் சந்தித்து, நாணயங்களைப்பற்றி தான் ஓர் ஆங்கில நூல் "Non Roman Ancient Foreign Coins From Karur in India" ("இந்தியாவிலுள்ள கரூரில் ரோமானிய நாணயங்கள் அல்லாத பிற அயல்நாட்டுப் பழைய நாணயங்கள்") என்ற தலைப்பில் எழுதியிருப்பதாகவும், அதை நான் வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். 2-11-2000 அன்று அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டேன்.
நூலின் முதல் பிரதியை பொள்ளாச்சி திரு. மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். நீதியரசர் மோகன், டாக்டர் சுப. அறவாணன், டாக்டர் சிலம் பொலி செல்லப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் நான் பேசும் போது, "தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பொறுத்தவரையில், தமிழனு- டைய வரலாறு, தமிழின் வளர்ச்சி ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வளர்ச்சியிலே ஈடுபாடு கொண்ட எங்களைப் பற்றி அவருக்கு என்ன நினைப்போ எனக்குத் தெரியாது.
ஆனால், எனக்கு அவரிடத்திலே அது குறித்த பெருமதிப்பும், நல்லெண்ணமும் அன்பும் பாசமும் உண்டு. அதனால்தான் அவரைப் பாராட்ட - அல்லது அவருடைய நூலை வெளியிட - அவர் அழைக்கிற நேரத்தில் எல்லாம் தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன்!" என்று குறிப்பிட்டேன். 2000ஆம் ஆண்டில் அந்த விழாவில், நான் இதைக் குறிப்பிட்டது மாத்திரமல்ல; 2010ஆம் ஆண்டில் - கழக ஆட்சியில் - தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை கோவையிலே கொண்டாடியபோது, அந்த விழாவில், தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று நானே நினைவுபடுத்தி, அந்த நிகழ்ச்சியிலே அவரும் கலந்து கொண்டார் என்பதும் உண்மையாகும்.
அந்த விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் இரண்டு பேர் கோவையில் அடித்துக் கொண்டதை "தினமலர்" நாளிதழில் "பேனர்" செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். அதைச் சுட்டிக் காட்டி, "அந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டுமா?"
என்று என்னிடம் சிலர் கேட்டபோது, அந்த விழாவில்தான் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறி, அவ்வாறே கலந்து கொண்டேன். ★ ★ ★ அதற்கடுத்த நாளான 3-11-2000 அன்று சென்னைக்கு வந்த ஜப்பான் நாட்டு வர்த்தகக் குழுவினருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலே கலந்துகொண்டு தமிழகமும், ஜப்பானும் பயன்பெறும் வகையில் "கூட்டுப் பணி முனைப்புக் குழு" ஒன்று அமைக்கவேண்டும் என்று கூறினேன். அதே திங்கள், 18-11-2000 அன்று நாரத கான சபாவில் இசை மேதை செம்மங்குடி சீனிவாசய்யர் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு, திரு.
ஏ.கே.சி.நடராஜன், முனைவர் அ.ச. ஞானசம்பந்தன், திருமதி. சுதா ரகுநாதன், திருமதி வைஜயந்திமாலா பாலி, திரு. சிவபுரி பத்மநாபன், திருநாகேஸ்வரம் திரு. டி.ஆர்.சுப்பிர மணியம், தஞ்சை திரு. நடராஜன், மாயவரம் திரு. சோமு ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தினேன். ★ ★ ★ 21-11-2000 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று, கழக அரசின் சீர்மிகு திட்டங்களான நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தைகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பொது விநியோகத் திட்டம், மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பு, கால்நடை பாதுகாப்புத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், பட்டா வழங்குவதற்கான சிறப்புத் திட்டம், மினி பஸ் திட்டம், பூமாலைத் திட்டம், கணினி மயமாக்கும் திட்டம், ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வழங்கல் திட்டம், கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்பாட்டுத் திட்டம் - போன்றவைகள் சிறப்பாக நடைபெற விவாதிக்கப் பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
★ ★ ★ 24-11-2000 அன்று சென்னையை அடுத்த சிறுசேரியில், உயிரியல் தொழில் நுட்பப் பூங்காவினைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டேன். அதற்கடுத்த நாளான 25-11-2000 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக ஆளுநராக அப்போதிருந்த நீதிபதி செல்வி எம். பாத்திமா பீவீ அவர்கள் தலைமையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றினேன். ★ ★ ★ 2000ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இறுதியிலே, ஒவ்வொரு நாளும் 1996ஆம் ஆண்டு முதல் தி.மு.கழக அரசு ஒவ்வொரு துறை வாயிலாக என்னென்ன சாதனைகளைச் செய்தது என்ற விவரங்களை அன்றாடம் தொகுத்து, 'முரசொலி'யிலே கட்டுரையாக எழுதினேன்.
பின்னர் அந்தத் தொகுப்பு நூல் "சாதனைச் சரித்திரம்" என்ற பெயரிலே வெளிவந்தது. ★ ★ ★ நாட்டின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், முதுபெரும் அரசியல் தலைவரும், "பாரத ரத்னா" விருது பெற்றவரும், "சி.எஸ்." என்று இந்தியா முழுவதும் அழைக்கப்பட்டவருமான சி. சுப்பிரமணியம் அவர்கள், 7-11-2000 அன்று பகல் 1 மணி அளவில், தனது 90வது வயதில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே காலமானார். அவர் என்னிடம் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு, எத்தகைய அன்பு கொண்டிருந்தார் என்பதற்கு இந்த ஆறாம் பாகத்தின் முதல் அத்தியாயத்திலேயே அவர் என்னுடைய பவள விழாவிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும்.
அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தார். 1952 முதல் பத்தாண்டுகள் தமிழகத்திலும், 1962 முதல் 1980 வரை 18 ஆண்டுகள் மத்திய அரசிலும், முக்கிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். மத்திய அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்த தமிழர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1990 முதல் மூன்றாண்டுகள் மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் சி.எஸ். பணியாற்றியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். அப்போது நான் விடுத்த இரங்கல் செய்தியில், "தொடக்க காலத்தில் இருந்தே, தனிப்பட்ட முறையில் அவர்மீது நான் கொண்டிருந்த மரியாதையும், பாசமும், அவர் என்மீது கொண்டிருந்த அன்பும், அக்கறையும் என்றைக்கும் குறைந்தது கிடையாது. அந்த வயதிலும் பல முறை என்னைச் சந்தித்து, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான பல யோசனைகளை அவர் சொல்லத் தவறியதில்லை.
தமிழை ஆட்சி மொழியாக்குவது குறித்து அவர் காட்டிய அக்கறையும், "தமிழால் முடியும்" என்ற ஒரு நூலை அவர் எழுதி வெளியிட்டதும், நினைத்து நினைத்துப் போற்றத் தக்கவையாகும்" என்று குறிப் பிட்டிருந்தேன். மேலும் 8-11-2000 அன்று சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் போதும், சி.எஸ். அவர்களின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றும், அவருடைய தியாகம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றும் பேசினேன்.
அரசு மரியாதையுடன் சி.எஸ். அவர்களின் உடல் அடக்கம் நடைபெற்றது. ★ ★ ★ 30-11-2000 அன்று நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா, அவர்களுடைய குடும்பத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு நான் அவசியம் என் குடும்பத்தினரோடு வரவேண்டுமென்று அவருடைய மகள்கள் வலியுறுத்தி அழைத்- திருந்தனர். அது மாத்திரமல்ல - கழகம் ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், அதை யெல்லாம் பார்க்காமல், ஒவ்வொரு ஆண்டும், என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது, கூட்டம் எவ்வளவு இருந்த போதிலும், அதையெல்லாம் பார்க்காமல், நேரில் என்னைக் கண்டு ஜெமினி கணேசன் வாழ்த்தாமல் இருந்ததே கிடையாது.
அந்த அளவிற்கு என்னிடம் நெருங்கிய பாசம் அவருக்கு உண்டு. எனவே அவருடைய எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு நான் குடும்பத்தோடு சென்றிருந்தேன். திரை உலகைச் சேர்ந்த பெரும்பாலோர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து ஜெமினி கணேசன் அவர்களை வாழ்த்தினார்கள். ★ ★ ★ 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலில் வாஜ்பய் தலைமையில் மத்திய அரசு அமைந்தபோது, அந்த அரசில் திராவிட முன்னேற்றக் கழகமும் இடம் பெற்றக் காரணத்தால், அ.தி.மு.க.வினரும், குறிப்பாக அதன் தலைவர் ஜெயலலிதாவும் "பெரியார் தலைமையில் வந்தவர்கள் பண்டாரங்களின் பின்னால் போகலாமா?"
என்றும், "சிறுபான்மையினருக்கு விரோதமான கட்சி தி.மு.க." என்றும் வேகமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். எனவே, உண்மை நிலையை விளக்கி 9-12-2000 அன்று நான் ஓர் அறிக்கைவிடுத்தேன். அந்த அறிக்கையில் - ✽ "1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மத்தியிலே ஆட்சியிலே இருந்தவர்கள் - அயோத்திக்கு அருகிலேயே ராணுவத்தை வைத்துக்கொண்டு, இடிக்கும் வரை வேடிக்கை பார்த்தவர்கள் - அப்படி ஒரு பிரச்சினை நடந்ததாகவே கண்டு கொள்ளாதவர்கள் - தேசிய வளர்ச்சி மன்றக் குழு கூட்டத்திலேயே கர சேவைக்கு ஆதரவாகப் பேசியவர்கள் - கரசேவைக்கு இங்கிருந்து ஆள் அனுப்பியவர்கள் சில பேர்; இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்காக இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து என்ன உணர்வோடு செயல்பட்டதோ, அதே உணர்வோடுதான் என்றைக்கும் இருக்கும். ✽ "தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது மதச் சார்பற்றது. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கருத்துடைய கட்சிகள் இருக்கின்றன. பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து வரவேண்டுமே தவிர, வேறு ஒரு கருத்து திணிக்கப்படுவதை ஏற்க இயலாது.
✽ "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்கான செயல் திட்டத்தில் இந்திய நாட்டு மக்கள் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் நாங்கள் பாதுகாப்போம். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எங்களது அன்பான சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எங்களுடைய நேசக் கரத்தை முழு மனதுடன் நீட்டி நாம் கைகோத்துக் கொண்டு புதிய உத்வேகம் நிறைந்த இந்தியாவை உருவாக்க, இணைந்து பீடுநடை போட்டிடுவோம் என்றுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் கூறியிருக்கிறோம்.
எனவே புதிதாக எதையும் இப்போது எழுப்புவது ஏற்கத்தக்கதல்ல. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் என்றைக்கும்போல் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவும், பாசம் உள்ள தோழனாகவும் இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறேன்" என்று தெளிவுபடுத்தினேன்.
★ ★ ★ அதே டிசம்பர் 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இந்திய நரம்பியல் சங்கத்தின் 49வது மாநாட்டிலும் - 15ஆம் தேதியன்று சென்னை இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியிலும் - 16ஆம் தேதியன்று சீரணி அரங்கத்தில் நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் துவக்க விழாவிலும் - 17ஆம் தேதியன்று காலையில், அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற தஞ்சை தெற்கு மாவட்டக் கழகக் கூட்டத்திலும் - மாலையில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிதி தொடக்க விழாவிலும் - 19ஆம் தேதியன்று நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் 79வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திலும் - 20ஆம் தேதியன்று காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் - மாலையில் ஆளுநர் இல்லத்தில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியிலும் - 30ஆம் தேதியன்று சென்னையில் மெரிடியன் ஓட்டல் திறப்பு விழாவிலும் - 31ஆம் தேதியன்று சென்னையில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் பொன் விழாவிலும் கலந்து கொண்டேன்.
2000ஆம் ஆண்டு துவக்கத்தைக் குமரியில் அய்யன் வள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில் ஆரம்பித்து, அந்த ஆண்டின் முடிவில், குமரி அனந்தன் பொது வாழ்வுப் பொன்விழாவிலே முடித்தேன். அந்த நேரத்தில் அ.தி.மு.க.வும், த. மா.கா.வும் தோழமையோடு இருந்த நேரம். எனினும் குமரி அனந்தன் அவர்களின் விழாவிற்கு என்னை அழைத்திருந்ததால், நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் நான் பேசும்போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு த.மா.கா.வுடன் ஒட்டுமில்லை - உறவுமில்லை என்று பேசியிருந்தாலும், அது கட்சி அளவிலே தான்.
ஆனால் எனக்கும் மூப்பனாருக்கும் உள்ள உறவும் நட்பும் எங்கே போய் விடும்? யாரால் அதை அழிக்க முடியும்? மருத்துவ மனையில் முரசொலி மாறன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், நான் மருத்துவ மனையிலே இருந்த போது, இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு 3.45 மணிவரை விழித்திருந்த மூப்பனாரின் அந்த நட்புக்கு யாரால் பங்கம் ஏற்படுத்திவிட முடியும்? அரசியலில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்!"
என்று பேசினேன். ✽ குமரி அனந்தனைப்பற்றி நான் பேசும்போது, "குமரி அனந்தனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அனந்த கிருஷ்ணன். வீட்டில் அப்பாவு என்று அழைப்பார்களாம். அரசியலில் அவர் ஒரு அப்பாவி! நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். வேறு சில தலைவர்கள் ஒவ்வொருவராக வரவர, அவர் எழுந்து தன் இடத்தைக் கொடுத்துவிட்டு, மாறி மாறி உட்கார்ந்து, கடைசியில் பின்னணியாக நின்று கொண்டிருப்பார். அதனால்தான் அரசியலில் அவர் ஒரு அப்பாவி என்று சொன்னேன்.
காமராஜரின் செல்லப் பிள்ளை அவர். எங்களைப் போன்றவர்களின் பாசப் பிணைப்பில் கட்டுண்டவர். ✽ "கோலாலம்பூரில் நடந்த தமிழ் மாநாட்டுக்கு நான் சென்றிருந்தபோது, நான் முதல்வராக இல்லை. அங்கு என்னைப் பார்த்த குமரி அனந்தன் ஓடோடி வந்து, "எப்போது வந்தீர்கள்?"
என்று கேட்ட பாங்கு உண்மையான தமிழனுடைய பண்பு. ஆயிரம் கருத்து மாறுபாடு இருந்தாலும் - சட்டப் பேரவையில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தாலும் - இருவரிடையே இனிய பாச உணர்வு இருந்தது. அதற்குக் காரணம் நட்பு! குமரியில் காமராஜர் மணி மண்டபம், தியாகிகள் மணி மண்டபம், விஸ்வநாத தாஸ் நினைவகம் போன்ற பல்வேறு பணிகளை நான் நிறைவேற்றத் தூண்டுதலாக இருந்தவர் குமரி அனந்தன். அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வாழ வழி பிறக்கும்.
தமிழனுடைய உணர்வு செழிக்கப் பயன்படும்" என்றேன். ★ ★ ★ 2001ஆம் ஆண்டு, ஜனவரி 3ஆம் தேதியன்று, கலைவாணர் அரங்கத்தில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் உலகச் சதுரங்கச் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற விஸ்வநாதன் அவர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றினை தமிழக அரசின் சார்பில் நடத்தினேன். அவர் வெற்றி பெற்ற செய்தி கிடைத்ததும் தொலைபேசியிலே அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தும் தெரிவித்தேன்.
விழாவில் அவரைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நகரிலே "ஏ" வகை குடியிருப்பு ஒன்றினை விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு அன்பளிப்பாகவும் தமிழக அரசின் சார்பில் வழங்கினேன். ஆனந்த் தனது ஏற்புரையில், தமிழக அரசுக்கு நன்றி கூறியதோடு, "நான் வெற்றி பெற்றபோது முதன் முதலில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது கலைஞர் தான்" - என்று கூறினார்.
அது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும், தமிழக அரசு இவ்வளவு பெரிய வரவேற்பை தனக்கு வழங்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அந்த விழாவில் பொள்ளாச்சி மகாலிங்கம், சிவந்தி ஆதித்தன், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். ★ ★ ★ அதுபோலவே 1990ஆம் ஆண்டு, ஜூலை 22ந்தேதி சென்னை சோழா ஓட்டலில் நடை பெற்ற தமிழ்நாடு சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் இந்தியன் வங்கி சார்பில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும் நான் கலந்துகொண்டு பாராட்டினேன்.
அந்த விழாவில் என்னுடன் இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணன் அவர்களும், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும், ஆரோன் அவர்களும் கலந்து கொண்டார்கள். 2007ஆம் ஆண்டு அவர் மீண்டும் உலகச் சதுரங்கச் சாம்பியன் பட்டத்தை வென்ற போது, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயினை வழங்கிப் பாராட்டினேன். 2012ஆம் ஆண்டு, ஐந்தாவது முறையாக அவர் உலகச் சதுரங்கச் சாம்பியன் பட்டத்தை வென்றபோதும், அவரை வாழ்த்திச் செய்தி ஒன்று வெளியிட்டேன்.
★ ★ ★ 12-1-2001 அன்று, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, விருது பெற்ற கலைஞர்களை யெல்லாம் கௌரவித்தேன். குறள்பீட விருதை அ.ச. ஞானசம்பந்தனுக்கு கழக அரசு வழங்கியதுபற்றி 11-1-2001 தேதிய "தினமணி", தனது தலையங்கத்தில் - 🞸 "குறள்பீட விருதை முது பெரும் தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய ஆய்வு விற்பன்னருமாகிய பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தனுக்கு வழங்கியதன் மூலம் தமிழ் உலகையே தமிழக அரசு கெளரவித்துள்ளது.
அரசியல் சூழல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மொழி, புதிய புதிய துறைகளில் படர்ந்து வளர்வதற்கும் பொலிவைப் பெறுவதற்கும் அருந்தொண்டு ஆற்றியிருப்பவர் அ.ச.ஞா. தமிழில் திறனாய்வுக் கலைக்கு வளம் சேர்த்த மிகச் சில அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். ✽ "நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் பல்வேறு தமிழ்ப் படைப்புகள் பற்றிய இவருடைய திறனாய்வு தமிழுக்கு மெருகைக் கூட்டியது. குறள்பீடத்து தலையாய விருது அ.ச.ஞா.வுக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் - ஒரு தனி மரியாதையைப் பெறுகிறது.
இதையடுத்து கவிதை, அறிவியல், நாட்டுப் புறவியல், மொழி பெயர்ப்பு, திறனாய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்குக் குறள்பீடப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே குறள் பீடப் பாராட்டுதல் பெறுவதற்கு எழுவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆக மொத்தத்தில், தக்கவர்களுக்குத் தக்க பெருமையைச் சேர்த்திருப்பதன் மூலம் - குறள் பீடம் தமிழ் மக்களின் நெஞ்சகங்களில் தமிழ்ப் பீடமாக அமர்ந்து கொண்டு விட்டது" என்று எழுதியிருந்தது.
15-1-2001 அன்று, முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் திருநாளில், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு குறள் பீட விருதும், முனைவர் வா.மு. சேதுராமன் அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதும், மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரு மணவை முஸ்தபா, முனைவர் தே.லூர்து, திரு. சேஷ நாராயணா, கவிஞர் இளவேனில் ஆகியோருக்கு குறள் பீடப் பரிசும் வழங்கப்பட்டது. மதுரை திருமதி சின்னப் பிள்ளை அம்மையாருக்கு பொற்கிழி வழங்கி சிறப்பிக் கப்பட்டது.
விழாவில் நானும், பேராசிரியரும் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
