நெஞ்சுக்கு நீதி
அரசியல் நாகரிகம் · 371 / 391
10. அரசியல் நாகரிகம் தெரிந்த ஜோதிபாசு 25-8-2000 அன்று கலைவாணர் அரங்கத்தில், நான் எழுதிய "சங்கத்தமிழ்" இசை நாட்டிய நாடகத்தின் 150வது வெற்றி விழா நடைபெற்றது. சங்கத் தமிழ் நூலில், நான் எழுதிய ஒரு சில கவிதைகளைத் தொகுத்து, அவைகளை இசைப் பாடலாக ஆக்கி, ஒரு நாட்டிய நாடகமாகத் தம்பி சொர்ணத்தின் அன்பு மகள் முத்தரசி மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். 1997 ஜனவரி திங்கள் 14ஆம் நாள் அரங்கேற்றப்பட்டது, அந்த நாடகம்.
நானே பலமுறை அந்த நாட்டிய நாடகத்தைக் கண்டு பாராட்டியிருக்கிறேன். அந்த நாட்டிய நாடகத்தின் 150வது விழாதான் அன்றைக்கு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அருமை நண்பர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன், கவிப் பேரரசு வைரமுத்து, கலைமாமணி இயக்குநர் இராம.நாராயணன், டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இயல், இசை, நாடக மன்றச் செயலாளராக இருந்த சொர்ணம் வரவேற்புரையாற்றினார்.
திருமதி முத்தரசி பரதத்தின் பெருமை சொல்லும் பாரம்பரிய அடையாளங்களின் கூடமாகத் திகழும் கலைக் கோயில் எனும் கலைப்பள்ளி மூலமாக, பரத நாட்டியம் மற்றும் வாய்ப்பாட்டு பயிற்சியினை அளித்து வருவதோடு, ஆர்வமுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளித்து வருகிறார். முத்தரசி ரவி, திருமதி சந்திரகலா ஜெகநாதன் மற்றும் வழுவூர் சாம்ராஜ் ஆகியோரிடம் முறையாக பரதம் பயின்று, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அந்த விழாவில், நான் முத்தரசியை வாழ்த்திப் பேசிவிட்டு, அருமை நண்பர் சிவாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பைப் பற்றி நீண்ட நேரம் பேசினேன். ஏனென்றால் அவர் பேசும்போது, தமிழகத்திலேயே. கலை உலகத்தில் தனக்குத்தான் நான் அதிகமாக வசனம் எழுதியிருக்கிறேன் என்றும், தான்தான் என்னுடைய வசனங்களை அதிகமாகப் பேசியிருக்கிறேன் - என்றும் சொன்னார். "அதிகமாகப் பேசியது மாத்திரமல்ல - மிகவும் அழகாக என்னுடைய வசனங்களைப் பேசியதே நீங்கள்தான்!"
என்று நான் பேசும்போது குறிப்பிட்டேன். "கலைஞர் எனக்குக் காதல் வசனமே எழுதவில்லை!" என்றார். "அனார்கலியை மறந்துவிட்டு - திரும்பிப்பார் திரைப்படத்தை மறந்துவிட்டு அப்படிச் சொல்லலாமா?" என்று கேட்டதோடு, அந்த வசனங்களையெல்லாம் அந்த விழாவிலே சொல்லிக் காட்டினேன். அந்த விழாவில் அருமை நண்பர் சிவாஜி ஆற்றிய உரையையும், நான் என்னுடைய இந்த வரலாற்றுச் சித்திரத்தில் இடம் பெறச் செய்ய எண்ணுகிறேன். நடிகர் திலகம் சிவாஜி அந்த விழாவில் பேசும்போது - "விழா அழைப்பிதழிலே சிவாஜி சிறப்புரையாற்றுவார் என்று உள்ளது.
அறுபது வருடங்களுக்கும் மேலாக, சிரித்துக் கொண்டே ஒருவர் பக்கத்திலே ஒருவர் உட்கார்ந்திருக்கிறோமே கலைஞரும் நானும், இதைவிடச் சிறப்பிக்க வேறு என்ன வேண்டும்? இது கடைசிவரை நீடிக்கும். 150வது முறையாக இந்த இசை நாடகம் நடந்திருக்கிறது. 300 நாடகம் நான் நடத்த வேண்டும், எப்போது எனக்கு எழுதுவீர்கள்? நான் பெரும் சுயநலக்காரன்! கலைஞர் எழுதிய வசனத்திலே அதிகமாகப் பேசியவன் நானாகத்தான் இருக்க முடியும். கடைசி வரை பேசப் போகிறவனும் நானாகத்தான் இருப்பேன்.
கலைஞர் அவர்களே! எனக்கு எப்போது எழுதப் போகிறீர்கள்? யாருக்கய்யா "கலைஞர்" என்று பெயர் இருக்கிறது? நானும் வாழ்நாள் முழுதும் நடித்துக்கொண்டே இருக்கிறேன். பல பேர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஒருவருக்குத்தான் 'கலைஞர்' என்ற பெயர் இருக்கிறது. அந்தப் பெயர் கடைசிவரை மறையாது. கலைஞர் அவர்கள்மீது எனக்குக் கோபம்! நீளமான வசனத்தை எழுதியிருக்கிறார் - அருமையான வசனத்தை எழுதியிருக்கிறார் - காதல் வசனம் மட்டும் எனக்கு எழுதவே இல்லை.
ஒருவேளை என்மீது நம்பிக்கை இல்லையோ? ஒருவேளை என் மனைவி கமலாமீது அனுதாபமோ? ஒரு முறையாவது காதல் வசனம் எழுதுங்க!" என்றெல்லாம் கூறியது இன்னமும் பசுமையாக என் நினைவிலே பதிந்துள்ளது. ★ ★ ★ மறுநாள் - 26ஆம் - தேதி இரவு புகை வண்டியில் புறப்பட்டு நாகப்பட்டினம் சென்று, 27-8-2000 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். குறிப்பாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவினையும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவினையும் நடத்தி வைத்தேன்.
★ ★ ★ இதற்கிடையில், தமிழகச் சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. வி.கே.இராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழா 28-8-2000 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனர் நண்பர் எம்.பி. நிர்மல் அந்த விழாவிற்குத் தலைமை வகித்தார். திரு.மோகன் வரவேற்புரை ஆற்றினார். சட்டப் பேரவைத் தலைவராக இருந்த பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் முன்னிலை வகித்தார். வி.கே.ராமசாமி முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை நான் திறந்து வைத்து உரையாற்றினேன்.
அந்த விழாவில் வி.சுபாஷ்சந்திரன் , நீதியரசர்கள் எஸ்.நடராசன், மு.இஸ்மாயில் , நாடாளுமன்ற உறுப்பினராக அப்போதிருந்த திருமதி ஜெயந்தி நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வி.கே.ஆர். அவர்கள் மேலவையிலும் உறுப்பினராக இருந்து, அவரது பதவிக் காலம் முடிந்து விடைபெறுகின்ற நேரத்தில் நான் அவரைப்பற்றியும், அவரது பணிகள் பற்றியும் மேலவையில் பாராட்டிப் பேசினேன். அந்தப் பாராட்டுரைக்குப்பின் அவர் நன்றி தெரிவித்து ஆங்கிலத்திலே பேசினார்.
பொதுவாக அவர் எப்போதும் தமிழிலே பேசமாட்டார். அவர் பேசும்போது - "I would most sincerely and from the bottom of my heart thank the Hon'ble Chief Minister for the encomiums paid to me and also for the words said about me. I am one of those who earnestly feel that this Upper House must continue. It consists of very experienced and able men. However, much people talk outside about its abolition.
I know the Hon'ble Chief Minister and his Colleagues are of the opinion that this House should continue, and I am sure that it will continue. I must thank the Hon'ble Chief Minister and his Colleagues for their uniform kindness, goodwill and courtesy they have been showing me. I feel the present Chief Minister is one of the best administrators. He takes very quick decisions and passes orders and has won the admiration of the people at large.
I wish him well and the best of luck in the discharge of his duties" என்று என்னைப் பலபடப் பாராட்டினார். அவரது நூற்றாண்டு விழாவில், மேலவையில் அவரை நான் பாராட்டியதையும், அவர் ஆற்றிய நன்றியுரையையும் குறிப்பிட்டுக் காட்டி உரையாற்றினேன். ★ ★ ★ தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இணைந்து, புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக 27-8-2000 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், க.ராஜாராம் ஆகியோர் தெரிவித்தனர்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் க.ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், நாமக்கல் அருணாசலம், ராஜா முகமது ஆகியோர் சென்னை, நந்தனத்தில் உள்ள எஸ்.டி. சோமசுந்தரத்தின் "நமது கழகம்" அலுவலகத்திலே கூடி செய்தியாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். ★ ★ ★ நான் ஏற்கனவே எழுதியவாறு, 2-9-2000 அன்று வேலூர் மாவட்டத்தில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் - பேரனாம்பட்டு தொகுதியிலே 100 கோடி ரூபாய்ச் செலவிலே கட்டப்பட்ட மோர்தானா அணைக்கட்டுத் திறப்பு விழா - அடுத்து மனித நேயத்திற்கு விரோதம் இல்லாமல் ஆன்மீகத்தைக் கடைப் பிடித்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் மணி மண்டபத் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் முயற்சியினாலும், வலியுறுத்தலாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டம்தான் மோர்தானா அணைக்கட்டுத் திட்டம். அதன் திறப்பு விழாவிற்கு அவரும் என்னோடு வந்திருந்தார். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் என்னுடன் வரும் அவர், சொந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா? மோர்தானா அணைக்கட்டின் காரணமாக குடியாத்தம் வட்டத்தில் 15 கிராமங்களும் - காட்பாடி வட்டத்தில் 16 கிராமங்களும் - வேலூர் வட்டத்தில் 19 கிராமங்களும் பயன்பெறும் என்றும் - அந்தக் கிராமங்களில் உள்ள எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் என்றும் - அதனால் நான்காயிரம் விவசாயக் குடும்பங்களுக்கும், பத்தாயிரம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் பயன் உண்டாகும் என்றும், அந்தத் திறப்பு விழாவில் நான் விளக்கினேன்.
அந்த விழாவில் நண்பர் ஞானசேகரன் பேசும்போது, மோர்தானா அணைக்கட்டுத் திட்டம் 1962ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் என்று கூறியதுபற்றி - நான் பேசும்போது, "காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் இந்தக் "காமராஜர் ஆட்சி" தொடர்ந்து நடத்தும் என்பதற்கானச் சான்றுதான் இத்திட்டத்தின் திறப்பு விழா" என்று குறிப்பிட்டேன்.
★ ★ ★ 2000ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் நெல்லை, குமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள்! 1-10-2000 அன்று தூத்துக்குடியில் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகச் சங்கத்தின் பவள விழா - அன்று மாலையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் தொடக்க விழா மற்றும் கழகப் பணிமனைத் திறப்பு விழா. 2-10-2000 அன்று காலையில் இரண்டு அணைகள் திறப்பு விழா - நம்பியாறு அணை திறப்பு விழா மற்றும் பொய்கையாறு அணை திறப்பு விழா - முறையே வள்ளியூரிலும், ஆரல்வாய்மொழியிலும் நடைபெற்றன.
அன்று மாலையில், குமரியில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் திறப்பு விழா. இந்த மணி மண்டபம் அமைவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள்பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். 3-10-2000 அன்று திருநெல்வேலியில் உழவர் சந்தை திறப்பு விழா. அன்று மாலையில் பாளையங்கோட்டையில் சட்டக் கல்லூரி கட்டிடத் திறப்பு விழா - தொடர்ந்து திருநெல்வேலியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
காமராஜரின் மணி மண்டபத்தையும், சிலையையும் நான் திறந்து வைத்த செய்தி அனைத்து ஏடுகளிலும் பெரிதாக வந்ததும், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ஆண்டிப் பட்டியிலும், திண்டுக்கல்லிலும் எம்.ஜி.ஆர். சிலை வைக்க கருணாநிதி அரசு தாமதம் செய்து வருகிறது. அனுமதி வழங்காவிட்டால், நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்" என்று அறிவித்தார்.
8-10-2000 அன்று அந்த அறிக்கைக்கு பதிலளித்த நான், "ஆண்டிப்பட்டியிலும், திண்டுக்கல்லிலும் எம்.ஜி.ஆர். சிலை வைப்பது பற்றிய பிரச்சினையிலே எந்தவிதமான கால தாமதமும் இல்லை - உள்ளாட்சி நிறுவனமோ மாவட்ட ஆட்சியரோ அதற்கு எந்த மறுப்பும் கூறவில்லை -1997ஆம் ஆண்டே அ.தி.மு.க. ஒன்றியக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிக்கப் பட்டு, 30-5-1997 அன்று ஆண்டிப்பட்டி பேரூராட்சி மன்றம் சிலை வைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - ஒன்றிய அ.தி.மு.க.விற்கு எம்.ஜி.ஆர்.
சிலை வைக்க அனுமதி வழங்கப் பட்டுவிட்டது. ஆனால், மூன்றாண்டு காலமாக ஆண்டிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. தான் எம்.ஜி.ஆர். சிலை வைக்க முயற்சி எடுக்கவில்லை, அதன் பிறகு 4-7-2000இல் மீண்டும் ஒரு மனு எம்.ஜி.ஆர். சிலை வைக்கக் கோரி கொடுத்திருக்கிறார்கள்" என்று விளக்கினேன்.
அதைப்போலவே திண்டுக்கல் நகராட்சி மன்றத்திலும் அனுமதி கொடுக்கப்பட்டதை விளக்கினேன். விளக்கிவிட்டு, ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க." சார்பில் ஈரோட்டிலே எம்.ஜி.ஆர். சிலை வைக்க எந்த அளவிற்குச் சிரமப் பட்டார்கள், எப்படியெல்லாம் அந்தச் சிலை அலைக்கழிக்கப்பட்டது - என்பதையெல்லாம் ஆதாரப் பூர்வமாகக் குறிப்பிட்டேன். ★ ★ ★ உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகா. 10-10-2000 அன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கை அளித்துவிட்டு, வீட்டுக்கு வரும் வழியில், தனது 84வது வயதில் காரிலேயே மாரடைப்பால் காலமானார்.
கொழும்புக்கு பக்கத்திலே உள்ள அட்டனகள்ளி தொகுதியில் அந்தத் தேர்தலில் அவருடைய மகன் அனுரா பண்டார நாயகா அப்போது வேட்பாளராக நின்றிருந்தார். அந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்து விட்டுத் திரும்பும் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயகாவின் கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா அவர்கள் 1959ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை, திருமதி சிறிமாவோ பண்டார நாயகா ஏற்றார்.
1960ஆம் ஆண்டு இலங்கையில் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960, 1970, 1994 ஆகிய மூன்று முறை அவர் பிரதமர் பதவி வகித்துள்ளார். 1977 தேர்தலில் சிறிமாவோவின் கட்சி தோல்வி அடைந்தது. ஜே.ஆர். ஜயவர்த்தனா பதவியை அப்போது பிடித்தார். சிறிமாவோவின் மகள்தான் சந்திரிகா குமாரதுங்கா . அவர் இலங்கையின் அதிபரானார். நாடாளுமன்றத்திற்கு அப்போது நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தலைமையிலான மக்கள் கூட்டணிக்கு 109 தொகுதிகளும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு 90 இடங்களும் கிடைத்தன.
இடதுசாரி அமைப்பான "ஜனதா விமுக்தி பெருமன" வுக்கு 10 தொகுதிகளும், இதரக் கட்சி களுக்கு 16 தொகுதிகளும் கிடைத்தன. ★ ★ ★ 2000ஆம் ஆண்டு அக்டோபர் கடைசியில், மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறனின் ஒற்றைத் தலைவலி கடுமையாகி, அப்பல்லோ மருத்துவமனையில் 28-10-2000 அன்று சேர்க்கப்பட்டார். நவம்பர் 7ஆம் தேதி நள்ளிரவில் சற்றுக் கவலைக்கிடமாயிற்று. நான் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன்.
மாறனின் இதயத் துடிப்பைச் சீரமைக்க விசேஷ பேஸ் மேக்கர் கருவி மார்புக்கு வெளியே பொருத்தப்பட்டது. அந்தக் கருவியின் செயல்பாடுகள்பற்றி மருத்துவர்களிடம் நான் கேட்டபோது, "ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு நிமிஷத்துக்கு 72 முறை இதயம் துடிக்கும். அந்த அளவு 50க்கு கீழே குறையும்போது இதய அடைப்பு என்று குறிப்பிடப்படும். அந்த இதய அடைப்புக்கும் கொழுப்பு சேருவதால் ஏற்படும் இதய கரோனரி ரத்தக் குழாய் அடைப்புக்கும் தொடர்பு இல்லை.
இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இதயத்தில் இரண்டு மேல் அறைகளும், இரண்டு கீழ் அறைகளும் உள்ளன. இதயத்தின் மேல் வலது அறையில் "எஸ்ஏ நோட்" எனப்படும் விசேஷ அமைப்பு மின் உற்பத்தி செய்து 72 முறை இதயத்தைத் துடிக்க வைக்கிறது. மேல் அறைக்கும், கீழ் அறைக்கும
் நடுவில் "ஏவி நோட்" என்ற அமைப்பு உள்ளது. மேல் அறையில் உருவான மின் உற்பத்தி இந்த ஏவி நோட் அமைப்புக்குப் பரவும். பிறகு மின் கற்றைகள் மூலம் இதயத் தசை நாண்களுக்கு மின் ஆற்றல் பரவி இதயம் துடிக்கிறது. இந்த இதயத் துடிப்பின் அளவு குறைந்தவுடன், தற்காலிக பேஸ் மேக்கர் மார்புக்கு வெளியே பொருத்தப்படும். இது பொருத்தப்பட்டவுடன் ஓரிரு நாளில் இதயத்தின் துடிப்பு அதிகரித்து விட்டால், தற்காலிக பேஸ் மேக்கர் கருவி அகற்றப்பட்டு விடும்" என்றெல்லாம் எனக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
தம்பி மாறனுக்கும் அந்தக் கருவி பொருத்தப்பட்டதை அடுத்து, உடல் நிலை சீராக உள்ளது என்றும், எனினும் உடல்நிலை நன்கு தேறியவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம், கழுத்து எலும்புக்குக் கீழே நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படும் - என்றும் கூறினார்கள். மாறனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய "லண்டன் ராயல் பிராம்ப்டன்" மருத்துவமனைத் தலைமை இதய மருத்துவர் அல்ரிச் சிக்வார்ட் வரவழைக்கப்பட்டார்.
அவர் மாறனின் உடல் நிலை மற்றும் ஆஞ்சியோ கிராஃபி பிலிம்களை ஆய்வு செய்தார். மாறனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் அப்பல்லோ மருத்துவர்கள் அவரிடம் விளக்கினர். அதையெல்லாம் கேட்டுவிட்டு, அவர், "அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். உடனடி பலனை எதிர்பார்க்காமல் காத்திருப்பது அவசியம். சிகிச்சை பலன் அளிப்பது உறுதியான பிறகே செயற்கை சுவாசக் கருவியை அகற்ற முடியும்" என்றார்.
ஜெர்மனியிலிருந்து இதய மருத்துவ நிபுணர் ஹோஸ்ட்குன் அவர்களும் சென்னை வந்து மாறனின் உடல் நிலையைப் பரிசோதித்தார். இதற்கிடையில் நவம்பர் 10ஆம் தேதியன்று இரவு மாறன் கண் விழித்துப் பார்த்தார். மாறன் அப்பல்லோ மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் எஸ்.தணிகாசலம் காலையிலும் மாலையிலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மாறனைப் பரிசோதனை செய்து வந்தார்.
13-10-2000 அன்று டாக்டர் தணிகாசலம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த பதினாறு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். முதலில், இதயத் துடிப்புக்குத் தேவையான மின் உற்பத்தியில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வலது மார்பகத்துக்குள் அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. ஒரு வாரம் முன்பு அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ததில், இதயத் தசை தடிமனாகியிருப்பதும், தொடர் விளைவாக உடல் உறுப்புகளுக்கு ரத்தம் செல்லும் இடது வென்ட்ரிக்கிள் அமைப்பு குறுகலாகி இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் நுரையீரலில் நீர் தேங்கும் பிரச்சினையும் ஏற்பட்டது. அதனைச் சரி செய்ய நவீன சிகிச்சையான சிறப்பு ஊசி சிகிச்சை (Alcohol Ablation) அளிக்கப்பட்டது. லண்டனிலிருந்து வந்த டாக்டர் அல்ரிச் சிக்வார்ட் இந்தச் சிகிச்சையை அங்கீகரித்தார். இந்தச் சிகிச்சையில் நிபுணரான ஜெர்மனியிலிருந்து வந்த டாக்டர் ஹோஸ்ட் குன்னும் இந்தச் சிகிச்சை முறை மிகுந்த பலனை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் முன்னிலையில் மாறனுக்கு சிறப்பு ஊசி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு மாறனின் உடல் நிலை முன்னேறத் தொடங்கியது. மாறனின் இதயத் துடிப்பு தற்போது பேஸ் மேக்கரின் உதவியின்றி நிமிஷத்துக்கு 75 என்ற அளவில் உள்ளது. ரத்த அழுத்தம், சிறுநீர் வெளியேறும் அளவு ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று விளக்கமாகத் தெரிவித்தார்.
தம்பி மாறன் அப்பல்லோ மருத்துவ மனையில் 32 நாள் சிகிச்சைக்குப் பிறகு, நவம்பர் 30ஆம் தேதியன்று இல்லம் திரும்பினார். நாங்கள் எல்லாம் அவர் பூரண உடல் நலத்தோடு திரும்பிவிட்டார் என்ற மகிழ்ச்சியோடுதான் அப்போதிருந்தோம். ஆனால் அது தற்காலிகமானது என்பது பின்னர்தான் புரிந்தது! வீடு திரும்புவதற்கு முன்பு, ஒரு நாள் காலையில் நானும், ஆற்காடு வீராசாமியும் அப்பல்லோ மருத்துவமனைக்கு தம்பி மாறனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம்.
நான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய பிள்ளை அல்லவா தம்பி மாறன்! பால பாடம் கற்றுத் தந்த ஆசிரியன் நான் என்றாலும், மாறன், குருவையும் மிஞ்சிடும் சிஷ்யனாக அரசியல் கலையைக் கற்றறிந்து, அறிஞர் அண்ணாவின் செல்லப் பிள்ளையாக - அவரது அடியொற்றிய அரசியல் வித்தகனாக - வளர்ந்தவன் அல்லவா? நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்ற போது, மேற்கு வங்க முதலமைச்சராக பல ஆண்டுக் காலம் இருந்த தோழர் ஜோதிபாசு பதவி விலகியதைப் பற்றி எங்களிடம் விரிவாகவும், உருக்கமாகவும் பேசத் தொடங்கினார்.
உடல் நலம் தேறி வருகின்ற நிலையில், அதிகம் பேச வேண்டாமென்று நான் தடுத்தும் கேளாமல், ஜோதிபாசுமீது அவர் கொண்டிருந்த அன்பையும், வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அள்ளிக் கொட்டி மகிழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தூண்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு அவர்களை 1969 முதல் நான் நன்கறிவேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு. வி.வி.கிரியை ஆதரிப்பது என்ற முடிவு டெல்லி தமிழ்நாடு மாளிகையில் எடுக்கப்பட்ட போது, அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த திரு.
அஜாய் முகர்ஜி அவர்களும், அப்போது மேற்குவங்கத் துணை முதல்வராக இருந்த ஜோதிபாசு அவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி, இன்னமும் என் நெஞ்சை விட்டகலவில்லை. ★ ★ ★ தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் (National Develpment Council) டெல்லியில் நடைபெற்றது. அப்போதுதான், அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின், முதலமைச்சர் பொறுப்பையேற்றிருந்த நான், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு வயது 46தான்.
என்னுடன் அன்றைய நிதியமைச்சர் நண்பர் மதியழகன் அவர்களும் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் அஜாய் முகர்ஜி அவர்களும், துணை முதல்வர் ஜோதிபாசு அவர்களும் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் வங்கிகளைத் தேசிய மயமாக்கிட வேண்டுமென்ற கருத்தை நான் முதன் முதலாக வலியுறுத்திப் பேசினேன். அப்போது அன்னை இந்திரா காந்தி அவர்கள்தான் பிரதமர். மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமர். நான் பேசிய "வங்கிகளைத் தேசிய மயமாக்க வேண்டு" மென்ற கருத்தை மொரார்ஜி ஆதரிக்கவில்லை.
மறுப்புக் கருத்து வெளியிட்டார். அப்போது இந்தச் செய்தி, மறுநாள் டெல்லி ஏடுகளிலே பெரிதாக வெளி வந்தது. நான் பேசிய கருத்தைப் பற்றி பல மாநில முதல் அமைச்சர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்காவிட்டாலும், மேற்கு வங்க துணை முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்கள்தான், நான் வெளியிட்ட வங்கிகள் தேசிய மயம் என்ற கருத்துக்கு ஆணித்தரமான ஆதரவாளராக அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
★ ★ ★ அனைத்திந்தியத் தலைவர்களை யெல்லாம் அழைத்து கொல்கத்தாவில், ஜோதிபாசு முன்னின்று நடத்திய "மாநில சுயாட்சி" மாநாட்டுக்கு நானும், தம்பி முரசொலி மாறனும், ஆற்காடு வீராசாமியும் சென்றிருந்தோம். மாநாடு முடிந்ததும், ஒரு பெரிய மாடித்தளத்தில் தலைவர்கள் எல்லாம் "குரூப் போட்டோ" எடுக்க ஏற்பாடாகி யிருந்தது. போட்டோவுக்கு எல்லோரும் தயாராக இருந்த நேரத்தில், ஆந்திர முதல்வராக இருந்த நண்பர் என்.டி.
ராமராவ் அவர்கள் வருவதற்கு சற்றுத் தாமதமாயிற்று. அப்போது ஜோதிபாசு அவர்கள், "நடிகர் அல்லவா? மேக் அப் போட்டுக் கொண்டு வர நேரமாகத்தான் செய்யும்" என்று கிண்டல் அடித்ததும் என் நினைவிலே உள்ளது. தி.மு.கழக ஆட்சியை 356வது பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு இரண்டு முறை கலைத்த போதும், உடனடியாகக் கண்டன அறிக்கை வெளியிட்ட முதல் அமைச்சர் தோழர் ஜோதிபாசு அவர்கள். அப்படிப்பட்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுக் காலம் முதலமைச்சர் பதவியிலே இருந்துப் பணியாற்றி விட்டு - அந்தப் பதவியிலிருந்து 2000வது ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது - அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில், அவரது கட்டுப்பாடுமிக்க பொது வாழ்க்கையையும், கண்ணியம் மிக்க அரசியல் நடவடிக்கைகளையும், பண்பார்ந்த நட்புறவின் நிலைத்த தன்மையையும் நினைத்து அவரைப் பாராட்டி வாழ்த்தினேன்.
கட்சிகள், கொள்கைகள், திட்டங்கள், கருத்து வேறுபாடுகள் இவைகள் ஒரு புறம் இருப்பினும் - அந்த இயக்கங்களில் முன்னணித் தலைவர்களாக இருந்தோர் - இருப்போர் - தலைமையேற்று வழி நடத்துவோர் - ஆகியோரின் அருமை பெருமைகளை நினைவு கூர்வது என்பது அரசியல் பண்பாடு மட்டுமல்ல; அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு தோன்றாத் துணையெனும் பாடமும் ஆகும். ஜோதிபாசு அவர்களைப் பற்றி அப்போது 4-11-2000 தேதிய "பிசினஸ் லைன்" ஆங்கில ஏடு குறிப்பிடும்போது, "Mr.
Basu Can take legitimate pride in the fact that he provided a clean Government and became a role model at a time when the whole country was stinking with corruption all over" GT GOT MI என்று எழுதியிருந்தது. அதாவது "நாடு முழுவதும் ஊழல் சகதியிலே மூழ்கி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நேர்மையான ஓர் அரசை நடத்தியதற்காக ஜோதிபாசு அவர்கள் பெருமை அடையலாம்" என்று பாராட்டியிருந்தது.
ஜோதிபாசு அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடு மிக்க தொண்டராக - சட்டப் பேரவை உறுப்பினராக - நிதி அமைச்சராக - உள் துறை அமைச்சராக - துணை முதல் அமைச்சராக - முதல் அமைச்சராக - ஐம்பதாண்டு காலத்திற்கு மேல் பொதுத் தொண்டாற்றி நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும், "பொது வாழ்விலும், கட்சிப் பணியிலும் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அப்போது தெரிவித்திருந்தார்.
அரசியல் ரீதியாகவும், கருத்துப் பரிமாற்ற ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் நான் பழகிய அந்தப் பண்பாளர் ஜோதிபாசு அவர்கள் பதவியில் இல்லாவிட்டாலும், அவரது மக்கள் பணி தொடர வேண்டுமென்றும், அவர் பல்லாண்டுக் காலம் மேலும் வாழ்ந்து புகழொளி பரப்ப வேண்டுமென்றும் வாழ்த்தி, பாராட்டி, நான் அப்போதே 'முரசொலி'யில் விரிவாக எழுதினேன். 'முரசொலி'யில் நான் கடிதம் எழுதிய இரண்டொரு நாட்களில் அதாவது 9-11-2000 தேதிய அவருடைய கடிதத்தில், "தாங்கள் என்னைப்பற்றி முரசொலியில் எழுதியுள்ள கட்டுரையை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன்.
அக்கட்டுரையில் என்னைப் பற்றித் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளைப் பெரிதும் மதித்துப் போற்றுகிறேன். தங்கள் மருமகன் முரசொலி மாறன் அவர்களை நான் நீண்ட காலமாகவே அறிவேன். அவர் அண்மையில் நோய்வாய்ப்பட்டிருப்பது அறிந்து வருந்துகிறேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்" என்று எழுதியிருந்தார்.
★ ★ ★ 15-11-2000 அன்று காலையில் சென்னை வடபழனியில் உள்ள விஜய சேஷ மகாலில், ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.யின் அன்பு மகள் செல்வி கண்ணகி க்கும், கோவை பேராசிரியர் பெருமாள்சாமி அவர்களின் மகன் செல்வன் ஜான் புஷ்பராஜ்க் கும் நடை- பெற்ற மணவிழாவினை நான் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன். வைகோ தனது வரவேற்புரையில், தம்பி மாறன் மருத்துவ மனையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த நிலையிலும் மண விழாவில் கலந்து கொள்ள நான் வந்திருக் கிறேன் - என்று குறிப்பிட்டார்.
அதைப்பற்றி நான் பேசும்போது, "அதுவும் என் குடும்பம் தான் - இதுவும் என் குடும்பம் தான். அந்த நிகழ்ச்சி அங்கே - இந்த நிகழ்ச்சி இங்கே. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நான் பொதுவானவன் - இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நான் சொந்தக்காரன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறேன். வைகோ இல்லத்தில் நடைபெற்ற இரண்டு மூன்று திருமணங்களுக்கு நான் வர இயலவில்லை என்றார். "வர எனக்கும் இயலவில்லை - அழைக்க அவருக்கும் இயலவில்லை என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
அரசியல் மாறுபாடுகள் காரணமாக ஐந்தாறு ஆண்டுகள் நாங்கள் பிரிந்திருந்தாலும், அண்ணன் - தம்பி என்கின்ற பாச உணர்வின் காரணமாக இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டேன். ஆனால், அதன் பிறகு அண்ணன், தம்பி என்ற பாச உணர்வு மறைந்து, அரசியல் மாறுபாடுகள்தான் முன்னிலை பெற்றன என்பதைத் தமிழ்நாடு அறியும்.
