நெஞ்சுக்கு நீதி
முந்திக் கொண்டு பெற்ற · 370 / 391
9. முந்திக் கொண்டு பெற்ற முதல் இடம்! கன்னட "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ராஜ்குமார், 30-7-2000 அன்று நள்ளிரவில் சந்தன வீரப்பன் குழுவினரால் கடத்தப்பட்டார். கர்நாடக எல்லையை ஒட்டி தமிழகப் பகுதியில் உள்ள தாளவாடி காஜனூரில் தனது பண்ணை வீட்டில் அவர் தங்கியிருந்தபோது, இந்தச் சம்பவம் நடை பெற்றது. ராஜ்குமாரின் மருமகன், மற்றோர் உறவினர் நாகேஷ், திரைப்பட துணை இயக்குநர் நாகப்பா ஆகியோர் அவருடன் சேர்ந்து கடத்தப்பட்டனர்.
ராஜ்குமாருடன் தங்கியிருந்த அவரது மனைவி பர்வதம் அம்மாள் மூலம் கர்நாடக மாநில முதலமைச்சருக்கு ஒரு கேசட்டை வீரப்பன் கொடுத்தனுப்பியிருந்தான். கர்நாடக முதலமைச்சர் உடனடியாகக் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, எனக்கும், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த திரு. அத்வானிக்கும் தகவல் அனுப்பினார். ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரையும் மீட்க, தமிழக அரசின் உதவியைக் கர்நாடக அரசு கோரியது. 31-7-2000 அன்று காலையில் தனி விமானம் மூலம் சென்னை வந்த கர்நாடக முதலமைச்சர் அருமை நண்பர் திரு.
எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் என்னைச் சந்தித்து, தமிழக பண்புடை நண்பரின் பாராட்டு மடல்: நன்றி - நன்றி - நன்றி பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய என் அன்புத் தலைவருக்கு- வணக்கங்கள் - எந்த ஆசை நிறைவேறாது என்று நினைத்திருந்தேனோ - அது கடைசியாக நிறைவேறி விட்டது. காலத்தால் அழியாத கருவூலமாக அமையும் 'நெஞ்சுக்கு நீதி' காவியத்தில் என் பெயர் பதிந்ததைத்தான் சொல்கிறேன். தலைவரே! என் ஆனந்தத்தை அளவிட்டுச் சொல்லவே முடியாது - 85 வயதைத் தொட்டுக் கொண்டு இருக்கும் எனக்கு இதைவிட பேரின்பம் யார் தரப் போகிறார்கள்?
உங்கள் புகழ் காலமெல்லாம் வாழும்போது அதற்கு எழுத்துக்காட்டாக அமையப்போவது இந்தக் கருவூலம் தானே! நன்றி தலைவரே - நன்றி! தாழ் பணிந்து எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! சென்னை பக்கம் வந்து இரண்டு வருடத்திற்கு மேலாகிறது- உடல் நிலைதான் காரணம். எப்படியும் இந்த வருட முடிவிற்குள் அங்கு வருவேன் - தங்களை நேரில் சந்தித்து மகிழ்வேன். நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன். தமிழ் வாகைச் செம்மல் ரா.வேங்கடசாமி (தலைவர்: சேலம் தமிழ்ச் சங்கம்) அரசின் உதவியைக் கோரினார்.
கர்நாடக முதலமைச்சருடன், ராஜ்குமாரின் மனைவி பர்வதம் அம்மாள், மகன் ராகவேந்திர ராஜ்குமார், கர்நாடக உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., ஆகியோரும் வந்திருந்தனர். பகல் 12.30 மணி முதல் 2 மணிவரை தலைமைச் செயலகத்தில், கர்நாடக முதல்வருடன் ஆலோசனை நடத்தினேன். பின்னர் என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், "ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கைகளில் இரு மாநில அரசுகளும் இணைந்து ஈடுபடும். இரண்டு மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் விடுதலை செய்வாரென்று எதிர்பார்க்கிறேன்!"
என்றும், ராஜ்குமாரை மீட்க எடுக்கும் முயற்சிகளுக்கு இரண்டு மாநில மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டு மென்றும், அமைதி காக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். ராஜ்குமாரை விடுவிக்கத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மத்திய அரசு உறுதி கூறியது. 31-7-2000 அன்று மாலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, "வீரப்பனைச் சந்தித்துப் பேச நக்கீரன் கோபால் செல்வார்" என்று செய்தியாளர்களிடம் கூறினேன்.
அவ்வாறு தூதுவராகச் செல்ல நக்கீரன் கோபாலும் என்னிடம் சம்மதம் தெரிவித்தார். அவ்வாறே 1-8-2000 அன்று வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிவசுப்பிரமணியன், பாலமுருகன், சுப்பு ஆகியோரும் சென்றார்கள். 2-8-2000 அன்று ராஜ்குமார் அவர்களின் மருமகன் ராம்குமார், ராஜ்குமார் மகன் சிவராஜ் ஆகியோர் என்னை வந்து சந்தித்தனர். "நக்கீரன் கோபால், வீரப்பனைச் சந்தித்து கோரிக்கைகளைப்பற்றி அறிந்து சொல்வார் - நல்லதே நடக்கும் - நிறைவேற்றக்கூடிய கோரிக்கையாக இருந்தால், நிச்சயம் நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் - வீரப்பன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சில சூழ்நிலைகளில் இரக்கத்தோடு அவர் நடந்து கொண்டுள்ளார் - ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரையும் விடுவிக்க வேண்டும் - அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று வீரப்பனுக்கு திரு.
கோபால் மூலம் செய்தி அனுப்பியிருக்கிறோம்" என்று அவர்களிடம் கூறினேன். வீரப்பனின் ஆட்கள் கொடுத்த கோரிக்கைகள் அடங்கிய கேசட்டை பாலமுருகன் சென்னைக்குக் கொண்டு வந்து, நக்கீரன் காமராஜ் மூலம் என்னிடம் சேர்த்தார். வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநில முதலமைச்சர் கிருஷ்ணா அவர்கள், 6-8-2000 அன்று மீண்டும் சென்னைக்கு வந்தார். அவருடனும் அதிகாரிகளுடனும் வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம்.
வீரப்பனின் பத்து கோரிக்கைகளுக்கும் பதில்களைத் தயார் செய்து, நக்கீரன் கோபாலின் நண்பர் மூலமாக அனுப்பினோம். பத்திரிகைகளுக்கும் கோரிக்கைகளையும், அதற்கான பதில்களையும் கொடுத்தோம். பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பிறகும், ராஜ்குமார் விடுதலையில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. 9-8-2000 அன்று நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், அவரை உடனடியாக மீட்பதற்கு ஆவன செய்யுமாறும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் என்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டனர்.
நடிகர் கமலஹாசன், ஏ.வி.எம். சரவணன், எல் சுரேஷ், கேயார் மற்றும் நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். 11-8-2000 அன்று, நக்கீரன் கோபால் வேறு சில கோரிக்கைகளுடன் சென்னை திரும்பினார். 13-8-2000 அன்று, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து, நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெல்லாம் பாராட்டு தெரிவித்ததோடு, விரைவில் அவரை மீட்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டார்.
வீரப்பன் விதித்த நிபந்தனைகளில் ஒன்றான தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ்த் தேச மீட்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு இவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ராணுவத்தை அனுப்புவதுதான் ஒரே தீர்வு" என்று கூறினார்.
"நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்ற நல்ல முடிவை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இதைப்போல யாரும் குறுக்குசால் ஓட்டிக் கெடுத்திட வேண்டாம்" என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். 16-8-2000 அன்று நக்கீரன் கோபால் மீண்டும் ராஜ் குமாரைத் தேடி காட்டிற்குள் சென்றார். இதற்கிடையே மீண்டும் ஜெயலலிதா; வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதற்காகத் தமிழக, கர்நாடக மாநில முதலமைச்சர்கள் பதவி விலக வேண்டு மென்று ஓர் அறிக்கை விடுத்தார்.
வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அதிரடிப்படை ஈடுபட்டபோது, பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக தமிழகமும், கர்நாடகமும் ஐந்து கோடி ரூபாய் வழங்குவதென இரண்டு மாநில முதல் அமைச்சர்களும் 25-8-2000 அன்று சென்னையில் சந்தித்தபோது முடிவெடுக்கப் பட்டது. ராஜ்குமாரை மீட்க நக்கீரன் கோபால் நான்கு முறை காட்டுக்குச் சென்று வந்த போதிலும், வெற்றி பெற முடியவில்லை. ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக, கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஒரு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்தது.
2000ஆம் ஆண்டு, அக்டோபர், பத்தாம் தேதியன்று நக்கீரன் கோபால், பேராசிரியர் பா.கல்யாணி, பழ.நெடுமாறன், கோ. சுகுமாரன், என். சந்திரசேகரன் ஆகியோர் ஒரு தூதுக் குழுவாக வீரப்பனைச் சந்திப்பதற்காகக் காட்டிற்குள் சென்றார்கள். ஆனால், அப்போது ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்- தமிழ் ஈழ ஆதரவாளர்களான நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன் ஆகியோரிடம் ராஜ்குமாரை மீட்டுவரும் பொறுப்பை இரு மாநில அரசுகளும் ஒப்படைத்தது, விஷமச் சக்திகளிடம் அடிபணிந்ததையே எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்துவரும் இவர்கள் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையை உடையவர்கள். இம்மூவரையும் அரசின் தூதுவர்களாக அனுப்ப சம்மதித்தது எப்படி என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும். ஆரம்ப காலம் முதலே விடுதலைப் புலிகளின்பால் கருணாநிதி காட்டும் பரிவுக்கு இந்த மூவரையும் அரசு தூதுவர்களாக அனுப்பியதே போதிய சான்றாகும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
அந்தத் தூதுக் குழுவினர், வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமாரின் மருமகன் கோவிந்த ராஜை மட்டும் மீட்டு வந்ததோடு, மைசூர் சிறையில் உள்ள 121 தடா கைதிகளையும், தமிழகச் சிறைகளில் உள்ள 5 தமிழ்த் தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டுமென்பதில் வீரப்பன் பிடிவாதமாக இருப்பதால், ராஜ்குமாரை மீட்டு வருவதில் சிக்கல் உள்ளதாக என்னைச் சந்தித்துக் கூறினர். 20-10-2000 அன்று நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகிய மூவரும் என் இல்லத்தில் என்னைச் சந்தித்து, தமிழக அரசு அவர்களுடைய தந்தையாரை மீட்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தனர்.
11-11-2000 அன்று இரவு பழ. நெடுமாறன் குழுவினர் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வீரப்பனின் பிடியில் 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், இறுதியாக 15-11-2000 அன்று விடுதலை செய்யப்பட்டார். நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் தலைமையிலான தூதுக் குழுவினர் வீரப்பனிடம் பேச்சு நடத்தி ராஜ்குமாரையும், மற்றொரு பிணைக் கைதியான நாகேஷையும் மீட்டனர். காட்டுப் பகுதியின் எல்லையில் ராஜ்குமாரை பொன்னாடை போர்த்தி வீரப்பன் வழியனுப்பி வைத்தார்.
ராஜ்குமாரும் பதிலுக்கு வீரப்பனுக்கு நினைவுப் பரிசளித்தார். விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் ஏற்கனவே திட்டமிட்டபடி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டார். அங்கே ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இருந்தனர். அங்கேயிருந்து பழ.நெடுமாறன் என்னிடமும், கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா அவர்களிடமும், ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவித்தார். ராஜ்குமாரும் தொலைபேசியில் என்னோடு பேசி, அவரை மீட்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அப்போது மருத்துவமனையிலே இருந்த முரசொலி மாறன் நலம் குறித்தும் ராஜ்குமார் விசாரித்தார். ராஜ்குமாரை பெங்களூருக்கு அனுப்பிவிட்டு, சென்னை திரும்பிய நக்கீரன் கோபால், நெடுமாறன் குழுவினர் என்னைச் சந்தித்து நடைபெற்ற விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறினர். ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதுபற்றி பலரும் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக, நான் பெரிதும் மதிக்கும் இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் எழுதிய கடிதத்தில், "பேரன்புமிக்க கலைஞர் அவர்களுக்கு, முதற்கண் நன்றி!
நன்றி! மிகமிகப் பொறுமையுடனும், மிகமிகக் கவனத்துடனும் செயல்பட்டு; டாக்டர் ராஜ்குமார் அவர்களின் விடுதலையைப் பெற்றுக் கொடுத்த தங்களது ராஜதந்திரத்திற்கும், தங்களது விடா முயற்சிக்கும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் தலைவணங்கி, எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
★ ★ ★ இதற்கிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவரும் - என்னால் ஆருயிர் இளவல் என்று அழைக்கப்பட்டவரும் - கழக உடன்பிறப்புகளால் "நாஞ்சிலார்" என்று வாஞ்சையுடனும், பாசத்துடனும் அழைக்கப்பட்டவரும் - வருவாய்த் துறை அமைச்சராக திறம்படப் பணியாற்றி வந்தவருமான நாஞ்சிலார் அவர்கள், 1-8-2000 அன்று அதிகாலையில் மாரடைப்பு காரணமாக இயற்கையெய்தினார்.
செய்தியினைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக அவரது இல்லம் சென்று, அவரது உடல்மீது மலர் வளையம் வைத்துக் கதறி அழுதேன். அவருடைய குடும்பத்தினருக்கு என்னால் ஆறுதல் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தேன். விடியற்காலை 5 மணி அளவில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக - சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக - பல்வேறு பொறுப்புக்களிலே திறம்பட செயல்பட்டவர் நாஞ்சிலார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் கரம் பிடித்து வளர்ந்து - என் இதயத்திலே இடம்பெற்று - பேச்சிலும் சரி, பழகுவதிலும் சரி, ஆடை அணிவதிலும் சரி, தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு, இறுதிவரையில் அந்தப் பாதையில் நடை போட்டவர், அவர். எந்த நேரத்திலும் புன்னகை தவழும் முகத்துடன், இனிய சொற்களால் அளவளாவி, தான் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் வகையில் நடந்து கொள்வது நாஞ்சிலாருக்குரிய தனிச் சிறப்பு.
அ.தி.மு.க. அரசிலே அவர் நிதியமைச்சராக இருந்தபோது - ஒரு பிரச்சினை குறித்து நான் கேள்வி எழுப்பி, "அது எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும்?" என்று கேட்டபோது - நாஞ்சிலார் எழுந்து, "செவ்வாய் அன்று நீ வெல்வாய்"என்று பதிலளிக்க, அவையே கலகலப்பாகியது.
உடனே நான் எழுந்து, "நீ அடிக்கடி இப்படித்தான் சொல்வாய்" என்று கூறியதும் அவையே சிரிப்பில் மூழ்கியது. இடையில் கழகத்தைவிட்டுப் பிரிந்திருந்தாலும், 1980ஆம் ஆண்டு மீண்டும் கழகத்திலே என் தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டபோது, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பினைக் கழகம் அவருக்கு அளித்தது. தனது இறுதிக் காலம்வரையில் அந்தப் பொறுப்பினை தன்னிடமே வைத்திருந்தார். மென்மையான சுபாவம் - யாரிடமும் அதிர்ந்து பேசத் தெரியாதவர், அவர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவராய் இருந்த காலத்திலேயே, பல்வேறு தலைப்புக்களில் அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்திய உரைகள் வரலாற்றுப் புகழ்மிக்கவை. அவரது நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நாஞ்சில் வளம் காட்டும் பைந்தமிழ், இனிய குரல் தமிழ் மக்களை அவரிடம் ஈர்த்தன. திராவிட இயக்கத்தில் இளம் வயதிலேயே பெயர் பெற்றவராக விளங்கினார் என்பதற்கு உதாரணம் கூற வேண்டுமேயானால், கல்லூரி மாணவராக அவர் இருந்த போதே, நாகர்கோயிலில் தமிழகம் தழுவிய அளவிற்கு அவர் நடத்திய பெரும் திராவிட இயக்க மாநாட்டினைக் கூறலாம்.
அவரைப்பற்றி அப்போது நான் எழுதிய இரங்கல் செய்தியில் - "இனிய இளவலே! எப்படித் தீரும் இந்தத் துயரம்? - என வினவிடும் நிலையில் எம் கண் எதிரே வீழ்ந்து பட்டனையே - தாங்க முடியவில்லை - ஏங்கித் தவிக்கிறேன். துடித்தழும் உன் குடும்பத்தினருக்கும் தூய உடன் பிறப்புக்களுக்கும் ஆறுதல் சொல்லும் வகையற்று
நிற்கின்றேன். ஒன்றா? இரண்டா? எத்தனை ஆண்டுக் காலம் நம் நட்பு? இடையே எழுந்த வேறுபாடுகள்கூட புகையாய் மறைந்ததே தவிர, பகையாய் நிலைக்கவில்லையே! ஏற்றுக் கொண்ட பெரும் பொறுப்பை எவ்வளவு கச்சிதமாக நிறைவேற்றி என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்தாய்! எமக்குத் துணையிருக்கத் தானே துணைப் பொதுச் செயலாளராக ஆக்கினோம்; எம் நெஞ்சு புலம்பிடப் பிரிந்து விட்டாயே! "மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குக்கூடச் செல்லாமல் கழகத் தலைவரின் அனுமதிபெற்று இந்தச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன்" என்று நீ பேசியதை நேற்றுத்தான் மாலை ஏடுகளில் கண்டேன்.
போய் வருவதற்குத்தான் அனுமதி அளித்தேன் - வராமலே நீ போவதற்கு அனுமதி அளிக்கவில்லையே! பரவாயில்லை - என் கண்ணீரைக் காண்பதற்கு உனக்கும் ஓர் ஆசை - அதை நிறைவேற்றிக் கொண்டாய் - என் இதயத்தில் என்றென்றும் வீற்றிருப்பாய்" - என்று குறிப்பிட்டிருந்தேன். அவரது இறுதி ஊர்வலம் 2-8-2000 அன்று காலையில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தலைமைக் கழகத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நாஞ்சிலார் அவர்களின் திருவுருவப் படத் திறப்பு 1-9-2000 அன்று நடைபெற்றது.
பேராசிரியர் தலைமையில் படத்தினை நான் திறந்து வைத்தேன். நாஞ்சிலார் கடைசியாக எனக்கு எழுதிய மடல் ஒன்றினை இந்தத் தொடரிலே பதிவு செய்ய விரும்புகிறேன். வருவாய்த் துறையின் அமைச்சர் என்ற முறையில் அவர் எனக்கு எழுதிய அந்தக் கடிதம் - "மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு - அன்புடையீர்! நமது அரசு பதவியேற்ற 13-5-1996 முதல் 2-1-2000 வரை எனது அலுவலகம் பெறப்பட்ட கோப்புகளின் மொத்த எண்ணிக்கை 7,401.
அனைத்துக் கோப்புகளிலும் உடனுக்குடன் முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2-1-2000 வரை பெறப்பட்ட கோப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை. (இதைப் போலத்தான் அவர் மறைவதற்கு முதல் நாள் வரையிலேகூட ஒரு கோப்புகூட நிலுவையிலே இல்லாமல், அத்தனை கோப்புகளிலும் கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்றார் என்ற செய்தியை பின்பு நான் கேள்விப்பட்டேன்) இதே போல், சட்டமன்றப் பேரவை மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், கழகத்தினரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 21,000 மனுக்கள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவைகளில் 80 சதவிகிதம் மனுக்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. இதர மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையின் பரிசீலனையில் உள்ளன என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புள்ள, நாஞ்சில் கி. மனோகரன்." கழகத்திற்காக மேலும் பல ஆண்டுகள் அவர் இருந்து பணியாற்ற வேண்டிய நிலையில், இயற்கை அவரை நம்மிடமிருந்து கொத்திக் கொண்டு சென்று விட்டது. ★ ★ ★ 3-8-2000 அன்று சென்னையிலே ஒரு திரைப்பட விழாவிலே கலந்துகொண்டேன்.
"வானத்தைப்போல" என்ற திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி அது. அந்த விழாவிலே கலந்துகொண்டு அதன் வெற்றிக்காகப் பாடுபட்ட கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்குகின்ற பணியிலே கலந்து கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த எழுச்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு நான்தான் கேடயம் வழங்கினேன். அந்த நிகழ்ச்சியிலே என்னுடன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், நடிகர் விஜய், இயக்குனர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4-8-2000 அன்று முதலாவது தனி நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அது, ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் 2 கோடியே 18 இலட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மீது விசாரணை நடைபெற்று, நீதிபதி ஆறுமுகப் பெருமாள் தீர்ப்பு கூறினார். ஜீவா போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் மற்றும் இருக்கைகள் வாங்கியதிலும், பயணச்சீட்டுகளை அச்சடித்ததிலும், பேருந்துக் கூண்டு கட்டும் பணியைத் தனியாருக்கு அளித்ததிலும் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் கூறப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு சிறப்பு தணிக்கை யாளர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார். அவருடைய அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் செங்கோட்டையனுக்கு நான்காண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஜீவா போக்குவரத்துக் கழக முன்னாள் நிர்வாக இயக்குநர் வீரப்பன், கமிஷன் பணத்தைப் பெற்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கோபி நடராஜன் என்ற யுனிவர்சல் நடராஜன் ஆகியோருக்கும் நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த வழக்குபற்றி நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, "ஊழலுடன் தங்களைப் பிணைத்துக் கொண்ட பின்னரே சிலர் பொது வாழ்க்கைக்கு வருகின்றனர். இதனால் தங்களை மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் இவர்கள் அழிவுக்கு இட்டுச் செல்கின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளியான முன்னாள் அமைச்சரைப் பார்த்தால், இது நன்கு புரியும். மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வந்த இவர், சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிக்காமல் செயல் பட்டுள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ரூபாய் இரண்டு கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் சமூகத்தில் சாமானியர்களைவிட நல்ல நிலையில் இருப்பவர்கள். இருப்பினும் முறைகேடான, குறுக்கு வழிகளைக் கையாண்டு சொத்து சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பொது வாழ்க்கைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு இரக்கம் காட்டத் தேவையில்லை.
அதற்கு இவர்கள் தகுதியானவர்களும் அல்ல" என்று வேதனையுடன் குறிப்பிட்டார். நீதிபதி அந்த அளவிற்குக் குற்றம் சாட்டிய போதிலும், பின்னர் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மேல் முறையீட்டில் என்ன ஆயிற்று என்பதைப் பின்னர் எழுதுகிறேன். ★ ★ ★ திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியிலே இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலே மிகுந்த அக்கறை காட்டி வருவதை அனைவரும் அறிவார்கள்.
1989-91 கால கட்டத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அப்போதைய கழக அரசு அளித்த ஊக்கத்தின் காரணமாக, தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தை அடைந்தது. 1991-96ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின் தங்கி ஐந்தாம் இடத்திற்குச் சென்றது. 1996இல் மீண்டும் கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தமிழகம் தொழில் வளர்ச்சியில் தலை நிமிர்ந்தது. 22-7-2000 அன்றைய நிலையில் "இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்" (Centre for Monitoring Indian Economy) வெளியிட்ட அறிக்கையின்படி, 1 லட்சத்து 56 ஆயிரத்து 893 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, தமிழகம் தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே முதலாவது மாநிலமாக முன்னேற்றம் கண்டது.
21-7-2000 அன்று "இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்", இந்திய மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை எல்லாம் தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம் தொழில் முதலீடுகளில் இந்தியாவில் முதலிடம் பெறும் நிலை மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 804 கோடியே 40 இலட்ச ரூபாய் முதலீடுகள் பெற்று, தமிழ்நாடு முதல் இடத்திலே உள்ளது. இது ஒப்புதல் அளிக்கப்பட்டு செயலாக்கத்தில் உள்ள இந்தியாவில் மொத்த முதலீட்டில் 12.07 சதவிகிதம் ஆகும்.
8-8-2000 அன்று வெளிவந்த "தி எகானமிக் டைம்ஸ்" நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில், "தொழில் முதலீடு செய்வதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் இத்தருணத்தில், மகாராஷ்டிராவை முந்திக் கொண்டு பெரும் இடைவெளியுடன் தமிழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவைவிட தமிழகம் ரூ.2,394 கோடி அதிக முதலீடு செய்துள்ளது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் முதலீடுகள் குறித்து கடைசியாக ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஆண்டு ஜூலை 31 வரையிலான முதலீடுகள் உள்ளன. அதன்படி தமிழ்நாடு ரூ. 1,60,804 கோடி முதலீட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. அப்போது தமிழகமும், மராட்டியமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் முதலீடுகளை உயர்த்தத் தொடங்கின. அவைகளுக்கிடையே நடந்த இந்தப் போட்டியில் தமிழகம் வெற்றி பெற்று, ரூ. 2,394 கோடி வித்தியாசத்தில் முன்னணிக்கு முதல் இடத்திற்குச் சென்று விட்டது" என்று எழுதியிருந்தது.
