நெஞ்சுக்கு நீதி
அன்றே முழங்கிய · 369 / 391
8. அன்றே முழங்கிய மாநில சுயாட்சிக் குரல்! தி ராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழா ஆண்டை யொட்டி, கழக அமைப்புகளுக்கான தேர்தல், 1998ஆம் ஆண்டு தொடங்கி, தமிழகம் முழுவதும் நடந்தது. கிளைக் கழகம், பேரூர்க் கழகம், ஒன்றியக் கழகம், நகரக் கழகம், பகுதிக் கழகம், மாநகர் மற்றும் மாவட்டக் கழகங்கள் வரையில் கழக அமைப்புக்களின் தேர்தல்கள் படிப்படியாக நிறைவடைந்தன. இறுதியாக, தலைமைக் கழகத்திற்கான தேர்தல் - கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் 8-4-2000 அன்று நடைபெற்றது.
அதற்காகக் கழகப் பொதுக்குழு கலைஞர் அரங்கில் நடந்தது. நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மதுரை அக்கினிராசு அவர்கள் தேர்தல் ஆணையாளராக இருந்து தலைமைக் கழகத் தேர்தலை நடத்தினார். நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் மேடையின் எதிரே முன் வரிசையிலே அமர்ந்திருந்தோம். தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை அறிவித்த அக்கினிராசு, தலைவர் பதவிக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தவர்கள் பெயரையும், அவர்களை முன் மொழிந்தும், வழி மொழிந்தும் மனுக்களைக் கொடுத்தவர்களின் பெயர்களையும் படித்து, போட்டி எதுவும் இல்லாத நிலையில், ஒருமனதாக தலைவர் பதவிக்கு நானும் - பொதுச் செயலாளர் பதவிக்குப் பேராசிரியரும், பொருளாளர் பதவிக்கு ஆர்க்காடு வீராசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
பொதுக்குழுவின் முக்கிய தீர்மானமாக, முல்லைப் பெரியாறு பிரச்சினையில், கேரள இடதுசாரி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஏப்ரல் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. ★ ★ ★ 17-4-2000 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. சோ.பாலகிருஷ்ணன் அவர்கள், "காங்கிரஸ் தியாகி மறைந்த கக்கன் அவர்களுக்கு நினைவுச் சின்னமாக, கக்கன் பிறந்த தும்பைப்பட்டி கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா?"
என்று கேட்டார். உடனே நான் எழுந்து, "எதிர்க் கட்சித் தலைவர் அவர்களுடைய கருத்தின்படி, கக்கன் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக அமைப்பதற்கு இந்த அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏனென்றால், தொடர்ந்து தேசத்தியாகிகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் மதித்துப் போற்றி அவர்களுடைய நினைவை மக்களிடத்திலே பரப்புகின்ற அந்த முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. "காங்கிரஸ் அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த கக்கன் அவர்களுக்கு மாத்திரமல்ல - அந்த அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த திரு.
இராமய்யா அவர்களுடைய துணைவியார், சமீபத்திலே நான் புதுக்கோட்டை சென்றிருந்தபோது, தனக்கு ஒரு வீடு வேண்டும், வீடுகூட தனக்கு இல்லை என்று சொன்னபோது, ராமையா அவர்களுடைய தியாகத்தைப் போற்றிப் பாராட்டி, அவருடைய துணைவியாருக்கு ஒரு இல்லமே இந்த அரசின் சார்பாக வழங்கப்பட்டிருக்கிறது. "அதைப்போல மறைந்த காங்கிரஸ் கட்சியின் தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் இந்த அரசு, அவர்களுடைய தேவைகளையெல்லாம் கேட்டறிந்து, பல நேரங்களிலே உதவி செய்திருக்கின்றது.
எனவே, யாரையும் மறந்து விடுகின்ற அரசு அல்ல இது. "உலகத்திற்கு அறிவிக்கின்ற வகையிலே இந்தத் தி.மு.க. அரசினர் இதைச் செய்வார்களா?" என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே கேட்டார். உலகத்திற்கு அறிவிக்கின்ற வகையிலே கூட அல்ல - எங்களுடைய உள்ளத்திற்கு ஒரு ஆறுதல் தேடிக் கொள்கின்ற வகையில், கக்கன் அவர்கள் வாழ்ந்த - அவர் பிறந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக ஆக்குவதற்கு இந்த அரசு தயங்காது, நிச்சயமாக ஆக்கப்படும்!"
என்று அறிவித்தேன். அறிவித்ததை பின்னர் நடத்தியும் முடித்தேன். ★ ★ ★ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை என்பது நீண்ட பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து இருந்துவரும் பிரச்சினையாகும். அதற்காகத் தமிழகத்திலிருந்து எந்தக் கட்சி ஆட்சியிலே இருந்தாலும், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்தப் பிரச்சினையைப் போலவே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதும், கொலை செய்வதும் என்ற போக்கும் பல ஆண்டுக்காலமாக நீடித்து வருகின்றது.
அதற்காகவும் நாம் பல முறை போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். மத்திய அரசும் பல முறை இலங்கை அரசிடம் அதைப் பற்றிப் பேசியும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தப் பிரச்சினைபற்றி எப்போது பேசினாலும், அறிக்கை விடுத்தாலும், அ.தி.மு.க.வினராக இருந்தாலும் சரி, அந்தக் கட்சியின் தலைவராக உள்ள ஜெயலலிதாவானாலும் சரி, "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டது - அதனால்தான் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை!"
என்று கழகத்தின்மீது பழி போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். அந்தக் குற்றச்சாட்டிற்கு தி.மு.கழகத்தின் சார்பில் பலமுறை பதில் அளிக்கப்பட்டபோதும், அவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. திருமதி இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த நேரத்திலேதான், கச்சத் தீவினை இலங்கைக்குத் தர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் என்னிடம் அனுப்பி, விவாதிக்கச் செய்து, அந்த நேரத்தில் தமிழக அரசின் சார்பில் நாங்கள் எங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்த பிறகும், கச்சத்தீவினை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியது.
அந்த நேரத்திலே கூட தமிழக அரசின் பிடிவாதம் காரணமாக ஒப்பந்தத்திலே சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து - தமிழ்நாட்டு யாத்திரிகர்கள் கச்சத் தீவுக்குச் சென்று வரவும் - தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கக் கூடாது - என்பதாகும். ஆனால் 1976ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி கலைக்கப்பட்டவுடன், பின்னர் நடைபெற்ற ஆளுநர் ஆட்சியில் கடிதப் போக்குவரத்து பரிவர்த்தனை அடிப்படையில் அந்த ஷரத்துக்கள் என்ன காரணத்தாலோ எடுக்கப்பட்டுவிட்டன.
அந்த ஷரத்துக்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வாதாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் அது அமலுக்கு வந்தபாடில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பதை எடுத்துக் கொண்டால் - ✽ "1992ஆம் ஆண்டு 6சம்பவங்களில், 4பேர் கொல்லப்பட்டு, 11 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ✽ "1993ஆம் ஆண்டு 13 சம்பவங்களில், 8 பேர் கொல்லப்பட்டு, 16 பேர் காயமடைந் திருக்கிறார்கள்.
✽ "1994ஆம் ஆண்டில் 17 சம்பவங்களில், 8 பேர் கொல்லப்பட்டு, 28 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ✽ "1995ஆம் ஆண்டில் 15 சம்பவங்களில், 14 பேர் கொல்லப்பட்டு 14 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ✽ "1996இல் 37 சம்பவங்களில், 8 பேர் கொல்லப்பட்டு, 39 பேர் காயம் அடைந் திருக்கிறார்கள். ✽ "1997ஆம் ஆண்டில் 21 சம்பவங்களில், 22 பேர் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ✽ "1998ஆம் ஆண்டில் 7 சம்பவங்களில், 6 பேர் கொல்லப்பட்டு, 4 பேர் காயமடைந் திருக்கிறார்கள்.
✽ "1999ஆம் ஆண்டில் 5 சம்பவங்களில், 2 பேர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந் திருக்கிறார்கள். - எனவே இவ்வாறு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்ற நேரத்தில் எல்லாம் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு - குறிப்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும், அவர்களும் நமது கடிதத்தைக் கண்டவுடன் இலங்கை அரசுக்கு உடனடியாக ஒரு கண்டனக் கடிதம் எழுதுவதும், ஆனாலும் அடுத்த சில நாட்களுக்கெல்லாம் இலங்கை கடற்படை அதே தாக்குதலை நடத்துவதும் - வாடிக்கையாக இருந்து வருகின்ற நடைமுறையாகும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து 4-5-2000 அன்று சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று வந்த போது நான் அதற்கு விரிவாகப் பதில் அளித்தேன். மத்திய அரசுக்கு -வெளியுறவுத்துறை அமைச்சருக்கு - நான் எழுதிய கடிதத்தையெல்லாம் படித்துக் காட்டினேன். யாழ்ப்பாணம் தீபகற்பப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் தடுமாறி வருவதை யொட்டி, இந்தியாவிடம் இலங்கை அரசு உதவி கேட்டதாகவும், அதற்குப் பதிலாக இந்தியா ஆயுத உதவியைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சில பத்திரிகைகளில் வெளி வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு சட்டப் பேரவையில் பல உறுப்பினர்கள் ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் கொடுத்திருந்தார்கள்.
அப்போது பிரதமராக இருந்த திரு. வாஜ்பய், அவர்கள் என்னை உடனடியாக டெல்லிக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வரச் சொல்லி தகவல் கொடுத்தார். நான் டெல்லி செல்வதற்கு முன்பாக, 5-5-2000 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களுக்கு விரிவாகப் பதில் அளித்தேன். அப்போது நான் பேசும்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் எந்தத் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் அவர்களுடைய வன்முறைகளுக்கோ, தீவிரவாதச் செயல்களுக்கோ இடம் இல்லை, இடம் நிச்சயமாக அளிக்கப்பட மாட்டாது.
அதிலே தமிழக அரசு மிகுந்த கண்காணிப்பாக இருக்கும். அதே சமயத்தில் இலங்கையிலே தமிழர்களைப் பலிவாங்கிட - தமிழர்களைக் கொன்று குவித்திட இந்தியாவோ - இந்திய ராணுவமோ ஆயுதத் தளவாடங்களோ காரணமாக இருக்கக் கூடாது என்பது தான் என்னுடைய பலமான, வலுவான கருத்தாகும்!"
என்று கூறினேன். அன்று மாலையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி பேசுவதற்காகப் பிரதமரின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றடைந்தேன். பத்திரிகைச் செய்திகளின் பேரில், பிரதமர் அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலே அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த எல்.கே. அத்வானி, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரசொலி மாறன், டி.ஆர். பாலு, பி.ஆர்.குமாரமங்கலம், பொன்னுசாமி, செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி நீண்ட நேரம் நான் அங்கே பல கருத்துக்களை எடுத்துத் தெரிவித்த பிறகு, அதற்கெல்லாம் பதிலளித்து வாஜ்பய் அவர்கள் அரசுத் தரப்பிலான பதிலைக் கூறினார். ★ ★ ★ 20-5-2000 அன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பன் மாநில மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பன் மாநில மன்றம், மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு - சந்திக்க வேண்டிய சிக்கலான பிரச்சினைகளில் ஒத்தக் கருத்தை எட்டுவதற்கு முயற்சித்து - அதனை அடைவதற்கு உதவுகின்ற அமைப்பாகும்.
அங்கே பேசும்போது, "இந்தியாவில் உள் ஆறுகள் அனைத்தையும் தேசிய மயமாக்கி - அவற்றை எல்லாம் இணைக்க வேண்டும்" என்பதை என் பேச்சின்போது வலியுறுத்தினேன். பன் மாநில மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற நான், 19-5-2000 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி.பி. தாக்கூர் கூட்டிய முல்லைப் பெரியாறு பற்றிய கூட்டுக் கூட்டத்திலும் கலந்து கொண்டேன். பெரியாறு அணை தொடர்பாக சுமுக முடிவு காணும்படி உச்ச நீதி மன்றம் அளித்த அறிவுரையின்படி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
நான் உரையாற்றும்போது, முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை முதல் கட்டமாக 145 அடியாகவும், பேபி அணையை வலுப்படுத்தியபின், 152 அடியாகவும் உயர்த்த வேண்டுமென்றும், தமிழகத்திலே வாழும் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையில் சுமுகத் தீர்வுக்கு வழி வகுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டாக்டர் சி.பி. தாக்கூர் - தமிழக, கேரள முதலமைச்சர்களை அழைத்து நடத்திய கூட்டத்தில் நானும், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளராக இருந்த முத்துசாமி, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த குப்தா, இ.ஆ.ப., மோகனகிருஷ்ணன், ஆதிசேஷய்யா ஆகியோர் கலந்து கொண்டோம்.
அந்தக் கூட்டத்தில் பெரியார் அணையில் தற்போது 145 அடியும், அதற்கு மேலும் நீரினைத் தேக்கலாம் என்ற நமது கருத்தையும் - 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்க முடியாது என்ற கேரளாவின் கருத்தையும் பரிசீலிக்க - மத்திய நீர்க் குழுமத் தலைவர் தலைமையில் - இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த பொறியாளர்கள் ஐவரையும், தமிழ்நாட்டுப் பொறியாளர் ஒருவரையும், கேரளப் பொறியாளர் ஒருவரையும் கொண்ட குழு அமைத்து, அறிக்கை பெறுவதென முடிவு செய்யப்பட்டது. ★ ★ ★ பல்வேறு மேடைகளில் - பல்வேறு விழாக்களில் - பல்வேறு தலைப்புக்களில் நான் ஆற்றிய சுமார் நூறு உரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பூம்புகார் பதிப்பகத்தாரால் "முத்துக் குளியல்" என்ற பெயரோடு இரண்டு பாகங்களாக 29-6-2000 அன்று கலைவாணர் அரங்கில் வெளியிடப்படும் விழா சிறப்பாக நடைபெற்றது.
அத்துடன் "பொன்னர் சங்கர்" என்ற வரலாற்றுப் புதினத்தின் நான்காம் பதிப்பின் வெளியீட்டு விழாவும் இணைக்கப்பட்டிருந்தது. பூம்புகார் பதிப்பக நிறுவனர் திரு. பிரதாப் சிங் வரவேற்புரையாற்றினார். உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும், இலக்கியங்களில் தலை சிறந்த மேதையுமான நீதியரசர் திரு. மோகன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று, இந்த நூல்களையெல்லாம் வெளியிட்டார். "முத்துக்குளியல்" நூலின் முதல் பாகத்தை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், இரண்டாவது பாகத்தை திரு.
சரத்குமார் அவர்களும், "பொன்னர் - சங்கர்" நான்காம் பதிப்பின் முதல் நூலினை கழகத் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திருமதி சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், கவிப்பேரரசு வைரமுத்து, துணை வேந்தராக இருந்த க.ப. அறவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நான் ஏற்புரை ஆற்றினேன். ★ ★ ★ ஆதிக்க சக்திகளின் கொடூரமான வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிக் கிளம்பிய அரிமாதான் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
அவர் இந்தியா முழுமைக்கும் சொந்தக்காரர் என்றாலும்கூட, தமிழ்நாட்டிலே கழக ஆட்சியில் அவர் கொண்டாடப்பட்ட அளவிற்கு அம்பேத்கரைப் பாராட்டியவர்கள் இந்தியாவிலே யாரும் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், கட்சி மாறுபாடு இல்லாமல், அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களா - நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்களா - அல்லது திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களா - அல்லது வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களா என்றெல்லாம் பகுத்துப் பார்க்காமல், அவர்களால் நாட்டிற்கு - மக்களுக்கு - சமுதாயத்திற்கு என்ன நன்மை கிடைத்தது - அவர்களால் சமுதாயத்திற்குக் கிடைத்த முன்னேற்றம் என்ன என்பவைகளை மாத்திரம் கணக்கிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துகின்ற பணியிலும் - அவர்களுக
்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகின்ற பணியிலும் ஈடுபட்ட அரசைப்போல இந்தியாவிலே வேறு எந்த அரசும் கிடையாது. உதாரணமாக, அவற்றில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமேயானால், சென்னையிலே வ.உ.சிதம்பரனாருக்குச் சிலை - தூத்துக்குடியிலே சிதம்பரனாருக்குச் சிலை - சென்னையிலே பாரதியாருக்குச் சிலை - மதுரையிலே முத்துராமலிங்கத் தேவருக்குச் சிலை - சென்னையில் ருக்மணி லெட்சுமிபதி என்கிற தேசிய போராட்ட வீராங்கனைக்குச் சிலை - மதுரையிலே கக்கன் அவர்களுக்குச் சிலை - சென்னை கடற்கரையிலே நேதாஜிக்குச் சிலை - சென்னையிலே சிங்காரவேலருக்குச் சிலை - தீரன் சின்னமலைச் சிலை - நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித் தேவனுக்குச் சிலை - புதுக்கோட்டையிலே ராஜகோபால் தொண்டைமானுக்குச் சிலை - மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
நினைவிடங்களில் அவரவர் மார்பளவுச் சிலைகள் - சென்னையிலே தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென்ற முனைப்போடு, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், இன்றைக்கு இருக்கின்ற கோட்டை கொத்தளத்தில் கொடிக் கம்பத்திலே ஏறி கொடியேற்றிய ஆர்யா என்ற பாஷ்யம் அவர்களின் சிலை - உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட தியாகி சங்கரலிங்கனாருக்குச் சிலை - தியாகிகளுக்கு மணி மண்டபம் - நாகர்கோவிலில் அண்ணன் ஜீவானந்தத்திற்கு மணி மண்டபம் - பட்டுக்கோட்டையில் கவிஞர் கல்யாண சுந்தரத்திற்கு மணி மண்டபம் - குமரியிலே காமராஜருக்கு மணி மண்டபம் - உடுமலையில் பெரும் புலவர் நாராயணக் கவிக்கு மணி மண்டபம் - குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் - திருமங்கலத்திலே தியாகி விசுவநாத தாஸ் நினைவில்லம் - பூலித் தேவன் மாளிகை - சுவர்னகிரியிலே வீரன் சுந்தரலிங்கம் நகர், சென்னையில் ம.பொ.சி.க்குச் சிலை, நடிகர் திலகம் சிவாஜிக்குச் சிலை (நினைவில் உள்ள வரை எழுதியிருக்கிறேன்) என்ற பட்டியல் எழுதிட மாளாது.
அண்ணல் அம்பேத்கருக்கு என்று எடுத்துக் கொண்டால் - 1972ஆம் ஆண்டிலேயே வியாசர்பாடியில் அம்பேத்கர் பெயரால் கலைக் கல்லூரி - சட்டப் பல்கலைக் கழகம் - ஹாமில்டன் பாலத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் 1989இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிட கழகம் மேற்கொண்ட முயற்சிகள் - என்று அம்பேத்கர் அவர்களுடைய நினைவோடு - அவருடைய பெருமையைப் பாடுகின்ற அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்றது. இத்தகைய புகழுக்குரிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சியில் மணி மண்டபம் கட்டி - சென்னையிலே 10-6-2000 அன்று கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் தலைமையில், நான் திறந்து வைத்தேன்.
மணி மண்டப வாயிலில் அம்பேத்கரின் மார்பளவு சிலையையும் நான் திறந்து வைத்தேன். அந்த மணி மண்டபம் இன்றைக்கும் கழக அரசின் சாதனைகளில் ஒன்றாக எழுந்து நிற்கின்றது. ★ ★ ★ 27-3-1998 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கையினை நான் தாக்கல் செய்தபோது "சென்னை தரமணியில் 7.5 ஏக்கர் பரப்பில் எல்காட் நிறுவனத்துடன் இணைந்து, மென் பொருள் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை நிறுவும் முயற்சியில் டிட்கோ முனைந்துள்ளது, இத்திட்டம் மென் பொருள் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்கி வழங்கும்" என்று அறிவித்தேன்.
அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் தமிழக அரசு 338 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய "டைடல்" மென் பொருள் பூங்காவினை அப்போது பிரதமராக இருந்த வாஜ்பய் அவர்களை சென்னைக்கு அழைத்து, என்னுடைய தலைமையில் திறந்து வைக்கச் செய்தேன். 7.5 ஏக்கர் பரப்பில் இந்த மென்பொருள் பூங்கா அமையும் என்று நான் அறிவித்தபோதிலும், 15 ஏக்கர் பரப்பில் எழில் குலுங்கும் பிரமாண்டமான தோற்றத்துடன் இந்தப் பூங்கா உருவானது.
இந்த 'டைடல் பூங்கா'வில் கட்டுமான இடத்தின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 12 லட்சம் சதுர அடியாகும். இந்தப் பூங்கா, டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனங்களால் உருவாக்கபபட்டது. இது வணிக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டுக் கழகங்கள் ஆகியவற்றையும், ஈ.பி.சி. ஒப்பந்ததாரர்களைப் பங்குதாரர்களாகவும் கொண்டுள்ளது. டைடல் பூங்காவின் கட்டிடம் தரைத்தளத்துடன் 12 மேல் தளங்களையும், கார்களை நிறுத்திட 2 தளங்களையும் கொண்டு அமைந்தது.
அலுவலக உபயோகத்திற்கான இடங்கள், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான அலுவலகங்களின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டது. பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் தேவைக்கேற்ப 4000 சதுர அடியிலிருந்து 90000 சதுர அடிவரை ஒரே தளத்தில் இட வசதிகள் அமைந்தன. அகன்ற இட வசதிகளும், சிறந்த தகவல் தொடர்பு வசதிகள், தடையற்ற மின் வசதி (ஜெனரேட்டர்) வசதிகளுடன் நிறுவப் பட்டது. இந்த மிகப் பெரிய மென்பொருள் பூங்காவின் அனைத்து, தளங்களும் குளிர்ச்சாதன வசதியைக் கொண்ட - உலகின் மிகப்பெரிய பூங்காக்களில் மூன்றாவது இடத்தை வகித்து வருகிறது.
நல்லவேளையாக, இந்த டைடல் பூங்கா கழக ஆட்சிக் காலத்திலேயே திறக்கப்பட்டு விட்டது. ஓராண்டு காலம் தாமதமாகியிருக்குமானால், 2001ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சி வந்த போது, அதைப்பற்றி யாராவது நினைவூட்டியிருப்பார்களானால், அந்த டைடல் பூங்காவிற்கும் கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்திற்கு ஏற்பட்ட கதிதான் ஏற்பட்டிருக்கும். ★ ★ ★ 2000ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் முதல் நாள் ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க.வின் தமிழ் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
அந்த மாநாட்டில் மத்திய நிதித் துறை அமைச்சராக அப்போதிருந்த யஷ்வந்த் சின்கா, ஆந்திர மாநில முதல் அமைச்சராக இருந்த நண்பர் சந்திரபாபு நாயுடு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டார்கள். ★ ★ ★ கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எந்தப் புத்தகத்தை எழுதி அல்லது தொகுத்து வெளியிட்டாலும், அதனை என் கையால் வெளியிடவேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கக்கூடியவர் என்பதை நான் பல முறை சொல்லியிருக்கிறேன் அல்லவா?
அவரால் படைக்கப்பட்ட பல்வேறு கவிதைகளைத் தொகுத்து "வைரமுத்து கவிதைகள்" என்ற நூலை 12-7-2000 அன்று சென்னையில் என்னைக் கொண்டு வெளியிடச் செய்தார். அந்த நூலின் முதல் படியினை கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். அந்நூல் வெளியிடப்படுவதற்கு முன்பே அதனை என்னிடம் கொடுத்து அணிந்துரை ஒன்றினை எழுதித்தர வேண்டு மென்று கேட்டுக்கொண்டார். அந்த நூலை ஆய்வு செய்து நெடிய ஆய்வுரை ஒன்றையே நான் அப்போது எழுதிக் கொடுத்தேன்.
காமராசர் அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் க.ப.அறவாணன், பேராசிரியர் டாக்டர் கு.ஞானசம்பந்தன், மரபின் மைந்தன் ம. முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வைரமுத்து அவர்கள் ஏற்புரை ஆற்றினார். ★ ★ ★ 14-7-2000 அன்று பிரதமர் வாஜ்பய் அவர்கள் கூட்டிய காவேரி ஆணையக் கூட்டத்திலும், அதற்கடுத்த நாள் 15-7-2000 அன்று டெல்லியில் நடைபெற்ற தகவல் தொழில் நுட்ப அமைச்சர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டேன்.
காவேரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடக முதல்வராக இருந்த திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களும், கேரள முதல்வராக இருந்த ஈ.கே. நாயனார் அவர்களும், புதுவை முதல்வராக இருந்த பி. சண்முகம் அவர்களும் என்னுடன் கலந்து கொண்டார்கள். கூட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில் - 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதி காவேரி நதிப் படுகை மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது என்றும், நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை 1991ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியும், அதன்மீதான விளக்கம் அளிக்கும் உத்தரவுகளை முதலில் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதியும், இரண்டாவதாக 1995ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியும் பிறப்பித்தது என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், பிரதமர் அவர்களைத் தலைவராகவும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் புதுவை மாநில முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு காவேரி நதி நீர் ஆணையம் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி அமைக்கப் பட்டது. 17-7-2000 தேதிய "இந்து" நாளிதழ் வெளியிட்ட தலையங்கத்தில், காவேரி நதி நீர் ஆணையக் கூட்டம் சுமூகமாக நடந்தது என்றும், அது காவேரிப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் என்றே சொல்ல வேண்டுமென்றும் பாராட்டி எழுதியது.
அதற்கடுத்த நாள், பிரதமர் தலைமையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் உரையாற்றும்போது, தமிழகத்தை தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு சிறந்த மாநிலமாக உருவாக்கிட மத்திய அரசு உதவிகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ★ ★ ★ காஷ்மீர் சிங்கம் என்று புகழப்பட்ட ஷேக் அப்துல்லா அவர்கள் அந்த மாநில முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு 1974ஆம் ஆண்டு சென்னைக்கு வருகை தந்து என்னை இல்லத்தில் சந்தித்து விவாதித்தார்.
அதற்குப்பின் 26 ஆண்டுகள் கழித்து, 21-7-2000 அன்று ஷேக் அப்துல்லா அவர்களின் திருமகன் திரு. பரூக் அப்துல்லா அவர்கள் என் வீட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது மாநில அதிகாரங்களைப்பற்றி தமிழக அரசு நியமித்த நீதியரசர் ராஜமன்னார் குழுவின் அறிக்கை, மாநில சுயாட்சி மற்றும் ராஜ மன்னார் குழு அறிக்கையில் மாநில அரசின் கருத்து, 1974ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி குறித்து நான் ஆற்றிய உரை - அடங்கிய மூன்று புத்தகங்களை பரூக் அப்துல்லா அவர்களுக்கு வழங்கினேன்.
அன்று மாலையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உருது அகாடமி யின் தொடக்க விழாவிலும் நானும் அவரும் கலந்து கொண்டோம்.
