உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/முல்லைப் பெரியாறும்,
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

முல்லைப் பெரியாறும், · 368 / 391

7. முல்லைப் பெரியாறும், முரட்டுப் பிடிவாதமும்! 8-2-2000 அன்று, மதுரை இரண்டாவது அமர்வு நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பு கூறப்பட்டது. அது எந்த வழக்கிலே என்றால், 23-4-1997 அன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலராக இருந்த திருமதி லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளராக இருந்த முத்துராமலிங்கம் உட்பட ஆறு பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு - வழக்கு முடிந்து - தீர்ப்பு கூறப்படும்வரை ஜாமீனில்கூட வெளியே வர அனுமதிக்கப்படாமல் வழக்கு நடை பெற்று - அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

23-4-1997 அன்று அந்தக் கொலை சம்பவம் நடந்த மறுநாளே சட்டப் பேரவையில் அது குறித்து ஒரு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு நான்தான் பதிலளித்து உரையாற்றினேன். அந்தப் பதிலில் ✽ "23-4-1997 அன்று காலை சுமார் 8.15 மணியளவில், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் திருமதி லீலாவதி என்கிற குப்புசாமி அவர்களின் துணைவியார் கொலை செய்யப் பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட லீலாவதியின் கணவர் குப்புசாமி மதுரை கீரைத் துறை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். ✽ "அந்தப் புகாரில், தன் மனைவி திருமதி லீலாவதி மதுரை மாநகராட்சிக்கு 59வது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்றும், அதே வார்டில் அவருக்கெதிராக திருமதி வள்ளி, கருமலையான் என்கின்ற அண்ணாதுரையினுடைய துணைவியார் தோல்வி அடைந்து விட்டார் என்றும், அதற்குப் பிறகு கருமலையான் என்கின்ற அண்ணாதுரையும் - அவரது சகோதரர் முத்துராமலிங்கமும் - திருமதி லீலாவதியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்து அவரைப் பயமுறுத்திச் சென்றார்கள் என்றும், லீலாவதி வில்லாபுரம் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகத்திற்காகத் தீவிர முயற்சி மேற்கொண்டபோது கருமலையான், முத்துராமலிங்கம் இருவரும் அவருக்கு எதிராகச் செயல்பட்டதின் காரணமாக முன் விரோதம் கொண்டு, 23-4-1997 காலை திருமதி லீலாவதி கடைக்குச் சென்றபோது, அவரை மேற்கண்ட இரு நபர்களும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால், திருமதி லீலாவதி அதே இடத்தில் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

✽ "லீலாவதியின் கணவர் குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறை காவல் நிலையக் குற்ற எண். 334-97 பிரிவுகள் 147, 148, 324 மற்றும் 302 இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ✽ "இந்த வழக்கில் கருமலையான் என்கின்ற அண்ணாதுரை கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற எதிரிகளையும் கைது செய்ய காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்வது, இந்தக் கொலையிலே சம்பந்தப்பட்டவர்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்த தி.மு.க.வினர் என்றாலும்கூட, எந்தவிதமான தயவு தாட்சண்யமும் காட்டாமல், பாரபட்சமின்றி அரசு காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. ✽ "மறைந்தவர் அல்லது கொல்லப்பட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய நினைவைத் திருப்புவீர்களேயானால், குடவாசலில் தங்கையன் என்ற ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கொல்லப் பட்டார்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த ஆட்சியிலே அமைச்சர்களுடைய காரிலேயே பாதுகாக்கப் பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே ஆளும் கட்சியாக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும், குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் - நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவார்கள் - என்பதற்கு மேலும் ஒரு சான்றாக மதுரை மாநகரத்திலே நடைபெற்ற இந்தப் படு கொலையை இந்த அரசு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று கூறினேன்.

✽ " இந்த வழக்கு நீதி மன்றத்திலே நடைபெற்ற சமயத்தில் கூட, நாகை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த தோழர் வீரையன் அவர்கள் என்னைச் சந்தித்து, இந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக வாதாட தங்கள் கட்சி விரும்பும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரையே நியமிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்ற போதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரும்பியவரையே அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிடச் செய்தேன் என்பதை இன்று வீரையன் அவர்களைக் கேட்டாலும் தெரிந்து கொள்ளலாம்".

★ ★ ★ மதுரையில் கொலை நடந்த மறுநாள் சட்டமன்றத்திலே நான் இப்படிப் பேசியது எந்த அளவிற்குக் காப்பாற்றப்பட்டது என்பதற்கு உதாரணமாகத்தான், 8-2-2000 அன்று மதுரை நீதி மன்றத்திலே வழங்கப்பட்ட தீர்ப்பாகும். என்னுடைய கட்சிக்காரர்களே குற்றவாளிக் கூண்டிலே நின்றபோதும், இம்மியளவும் ஆடாமல் அசையாமல் இருந்து, ஜாமீனில்கூட அவர்கள் வெளியே செல்லத் துணையாக இருக்காமல், அவர்கள் இந்த வழக்கிலேயிருந்து தப்பிக்கவும் வழிவகை செய்யாமல் நடந்து கொண்டதற்குச் சத்தியப்பூர்வமான சாட்சியமாக எனது பேச்சும் செயலும் இருந்ததை இதன் மூலம் அறியலாம்.

ஆனால், இந்த உண்மைகள்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடோ - அதன் தலைவர்களோ - தங்கள் ஏட்டிலே செய்தி வெளியிட்ட நேரத்திலேகூட, ஒரு வரி பாராட்டு தெரிவிக்கவில்லை. ஆனால் 1994ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியிலே அதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினரால் கொல்லப்பட்ட நிகழ்ச்சியிலே குற்றவாளிகளைக் கைது செய்யாமல், அமைச்சர்களே தங்கள் காரிலே பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

★ ★ ★ 2000ஆம் ஆண்டில் சேலம் இரும்பாலையைத் தனியார் மயமாக்குவதற்கான முயற்சியில் வாஜ்பய் அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைப்பற்றி 19-2-2000 அன்று திருச்சியில் என்னைப் பேட்டி கண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான், "சேலம் இரும்பு தொழிற்சாலை பற்றி எல்லா தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு தனது முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். இந்திரா காந்தி அம்மையார் மத்தியில் ஆட்சியிலே இருந்தபோது, தி.மு.கழக ஆட்சியில் இருந்த நான், சேலம் இரும்பாலையை வாதாடிப் போராடிப் பெற்றவன் என்கின்ற முறையில், பொதுத் துறையில் இயங்கும் அந்த நிறுவனத்தைத் தனியாருக்குத் தருவது சரியல்ல என்பது எனது கருத்து. பிரதமர் அவர்கள் மறு பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.

முரசொலி மாறன் தற்போது வெளிநாட்டில் - சீனாவில் இருக்கிறார். அவர் வந்ததும் அவர் மூலமும் இதுபற்றிய கருத்தைப் பிரதமருக்குத் தெரிவிப்பேன்" என்று கூறினேன். மீண்டும் 23-2-2000 அன்று மதுரையில் செய்தியாளர்கள் இதே பிரச்சினை குறித்து கேள்வி கேட்டபோது, "சேலம் உருக்காலையைப் பொறுத்தவரையில் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று ஏற்கனவே பிரதமரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சீனாவின் தலைநகரான பீகிங்கிலிருந்து என்னிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் திரு.முரசொலி மாறனிடமும் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன்.

அவர் டெல்லி திரும்பியதும், இதைப்பற்றி பிரதமரிடம் பேசுவதாக என்னிடம் கூறியிருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது மத்திய அரசின் விளக்கமாகும். இவைகளையெல்லாம் கருத்திற் கொண்டு, பிரதமரிடம் விவாதித்து, ஒரு நல்ல முடிவு காண முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினேன்.

இவற்றைத் தொடர்ந்து பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதினேன். அந்தத் தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதின் மூலம் அந்த மாவட்டத்திலே உள்ள தொழிலாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பிரதமர் அவர்கள் இந்தப் பிரச்சினையிலே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, தொடர்ந்து அந்த நிறுவனம் பொது நிறுவனமாக நடைபெற்றிட உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். சேலம் உருக்காலை தொடர்ந்து பொதுத்துறையிலேயே நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற தீர்மானம் சட்டப் பேரவையிலே என்னால் முன்மொழியப்பட்டு, 8-3-2000 அன்று ஒருமனதாக நிறைவேறியது.

★ ★ ★ 3-4-1949 தேதியிட்ட "திராவிட நாடு" இதழில் "பேரறிஞர் அண்ணா" அவர்கள் எழுதியதில் ஒரு பகுதி இதோ:- "சுயமரியாதை இயக்கத்தின் சுடர்! தன்மதிப்பு இயக்கத்தின் தனிப் பெரும் தளபதி! மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்கும் தலைவன்! வைதீகத்தின் வைரி! வருணா சிரமத்தின் விரோதி! சீர்திருத்தச் செம்மல்! சொற்செல்வன்! சோர்வற்ற உழைப்பாளி! தன்னலம் மறந்து தன் நாட்டுக்குப் பணியாற்றிய பண்புடையோன்! அறிவுப் பாதையில் அங்கும் இங்கும் கிடந்த பள்ளம் படுகுழிகளை நிரப்பிய பகுத்தறிவாளன்!

அறியாமையை அகற்ற அஞ்சா நெஞ்சுடன் அவனி சுற்றி வந்த ஆண்மையாளன்! கல்லடியா? கவலைப்படாதே! சொல்லடியா? சோர்வடையாதே! பகைவரின் படையா? பயப்படாதே! எதிர்க் கட்சியினரா? ஏமாந்துவிடாதே! சனாதனமா? சாய்ந்து விடாதே! சதியா? சாகடி! மதமா? அதனை மங்க வை! மாசுகளைத் துடை! மன்பதையின் மாணிக்கமாக விளங்கு! மரியாதையைப் பெறு! சுயமரியாதையைப் பெற்று சுக வாழ்வு வாழ முற்படு! இதுவே உன்னுடிடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்" - என்று, எங்கு சென்றாலும் எக்காளமிட்டு, மூலை முடுக்கெல்லாம் முரசொலி கிளப்பி, தன்மான இயக்கத்தின் முன்னணித் தலைவனாக விளங்கி, அஞ்சா நெஞ்சுடன் அறிவுப் பணி புரிந்து வந்தவர் அழகிரிசாமி" - அத்தகைய புகழுக்குரிய பகுத்தறிவுச் சிங்கம், பட்டுக்கோட்டை தளபதி அழகிரி அவர்களின் நூற்றாண்டு விழா தலைமைக் கழகத்தின் சார்பில், 16-3-2000 அன்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

அந்த விழாவில் இறுதியாக நான் உரையாற்றும்போது, "அண்ணன் வழியிலே வந்து - அந்த அண்ணன் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை - உடன்பிறப்புக்களாகிய உங்கள் அனைவருடைய உறுதுணையோடு நடத்திக் கொண்டிருக்கின்ற நாங்கள், எங்களையெல்லாம் ஆளாக்கிய அந்தத் தளபதியின் குடும்பத்திற்கு இந்த நூற்றாண்டு விழாவிலே செய்ய வேண்டிய கடமையைச் செய்தாக வேண்டும். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் குடும்பத்திற்கு ஐந்து இலட்ச ரூபாய் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்தேன்.

16-3-2000 அன்று நடை பெபற்ற நூற்றாண்டு விழாவில் நான் அறிவித்ததற்கேற்ப, 17-4-2000 அன்று அழகிரியின் வாரிசுகளான மகன்கள் அழகிரி ராமமூர்த்தி, துலிப் அழகிரி, மகள்கள் டயானா, பேபி, ராணி ஆகியோருக்கு தலா ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினேன். ★ ★ ★ அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் யாரை வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், அவர்கள் எத்தகைய தியாகங்களைச் செய்தவர்களாக இருந்தாலும் - அதைப்பற்றியெல்லாம் சிறிதும் எண்ணிப்பாராமல் - எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு நீக்குவார்கள், அவர்களையே மீண்டும் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.

ஏன் விலக்கினார்கள், ஏன் சேர்த்துக் கொண்டார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அப்படிப்பட்டவர்களில், மத்திய அமைச்சராகவும், பேரவையின் தலைவராகவும் இருந்த சேடப்பட்டி முத்தையா, முன்னாள் அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கருப்பசாமிப் பாண்டியன் உட்பட ஐந்து பேரை 14-4-2000 அன்று ஜெயலலிதா திடீரென்று கட்சியிலிருந்து நீக்கினார்.

கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் முரணான வழியில் அவர்கள் செயல்பட்டதாகவும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தியதாகவும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தியதாகவும் கூறி, அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட - அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக காரணங்களைக் கூறினார், ஜெயலலிதா. சேடப்பட்டி முத்தையா அந்தக் கட்சியின் முன்னாள் பொருளாளர் - கருப்பசாமிப் பாண்டியன் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் - ரகுபதி முன்னாள் அமைப்புச் செயலாளர்.

தான் நீக்கப்பட்டதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய சேடப்பட்டி முத்தையா, "சசிகலா பிடியில் சிக்கிக் கொண்டு கட்சியை ஜெயலலிதா அழித்து வருகிறார்" என்றும், கடந்த 17 ஆண்டுகளாக கட்சிக்காக தன் உழைப்பை, சிந்தனையை செலவழித்து வந்ததாகவும், அப்படிப்பட்ட தன்னை உழைப்பையெல்லாம் உறிஞ்சி, ஓடாக்கி விட்டு, தூக்கி எறிந்து விட்டதாகவும், அ.தி.மு.க.வை அழிக்க மன்னார்குடிக் கும்பல் செய்த சதியை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்" என்றும் தாங்கள் போற்றி மதித்த கட்சித் தலைமை தற்போது தன் சுயகட்டுப்பாட்டிலில்லை என்றும், ஒருவரைப் பிடிக்க வில்லை என்றால் அவர்மீது எத்தகைய பழியையும் சுமத்தத் தயங்காதவர் ஜெயலலிதா என்றும், காலம் காலமாக யாரைத் தன் தலையிலே வைத்துப் போற்றிக் கொண்டாடி ஆடினேனோ அவர் தன்மீது அபாண்டமாக ஐந்து கோடி ரூபாய் வாங்கியதாகப் பழி சுமத்துவதாகவும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்களோ, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன்மீது குற்றஞ் சாட்டுவது அபாண்டமானதென்றும், ஆண்டவனுக்கே அது பொறுக்காது என்றும், தனது வீட்டுத் திருமணத்திற்கு ஜெயலலிதா புதுக்கோட்டையில் அன்றைய தினம் இருந்தும்கூட வரவில்லை என்றும், ஆனால் தினகரன் இல்ல நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலைக்கே ஜெயலலிதா சென்றார் என்றும், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஒன்றிய, மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை விளக்கம்கூடக் கேட்காமல் நீக்கியது செல்லாது - என்றும் கருத்து தெரிவித்தார். இவ்வாறு அ.தி.மு.க.விலிருந்து விரட்டப்பட்ட - அ.தி.மு.க.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கருப்பசாமிப் பாண்டியனும் - முன்னாள் அமைச்சர் ரகுபதியும் 2-5-2000 அன்று சுமார் 7500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினருடன் - அந்தக் கட்சியிலிருந்து விலகி - திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்தனர்.

அவர்களை அன்றைய தினம் இரு கையேந்தி வரவேற்ற தி.மு.கழகம் அவர்களைக் கழகத்திலே இணைத்துக் கொண்டதோடு அப்படியே விட்டுவிட வில்லை. கருப்பசாமிப் பாண்டியனை மாவட்டக் கழகச் பொறுப்பாளராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஆக்கியது! அது போலவே, முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்களை நாடாளு மன்ற உறுப்பினராக ஆக்கியதோடு மத்திய அமைச்சராகவும் அமரவைத்தது!! ★ ★ ★ முல்லைப் பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி - மேற்கு நோக்கி ஓடி - கேரள

மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் நுழைந்து - பின் அரபிக்கடலில் கலக்கின்ற ஒரு நதி. தென் மேற்குப் பருவக் காற்றின் மூலம் அதிகமான மழை நீரைப் பெற்று, பெருத்த வெள்ளத்தைக் கடலுக்குக் கொண்டு செல்லும் ஆறுகளில் அது மிகவும் முக்கியமானது. இடுக்கி மாவட்டத்தில் அந்த ஆற்றின் நீர் குறைவாகப் பயன்படுவதால், மீதி இருக்கின்ற பெருத்த வெள்ளம் வீணாகக் கடலில் கலந்துவிடுவதைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் வறட்சியின் பிடியில் ஆண்டாண்டு காலமாகச் சிக்கிக் கொண்டு, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குக் கொடுக்க முடியுமா என்று அந்தக் காலத்தில் நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசு சிந்தித்தது.

மேற்கு நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு நீரை அணை கட்டித் தடுத்து நிறுத்தலாம் - அந்த அணையில் தேங்கி நிற்கும் நீரை மலைகளைக் குடைந்து, குகை வழி மூலம் கிழக்கே திருப்பலாம் - அந்த நீரை மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அளிக்கலாம் என்று வெடுத்து - 1895ஆம் ஆண்டு லார்டு பென்னி குயிக் என்ற வெள்ளைக்காரப் பொறியாளரால் முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப் பட்டது. முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்ட 1895ஆம் ஆண்டு முதல், எந்தவிதமான பிரச்சினையும் இன்றி, 152 அடிவரை தண்ணீர் அணையில் தேக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நல்ல முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

1979ஆம் ஆண்டுதான் முல்லைப் பெரியாறு அணையைக் குறித்த பிரச்சினையே உருவானது. கேரளத்தில் சில அரசியல்வாதிகளும் பத்திரிகைக்காரர்களும் சேர்ந்துகொண்டு ஒரு புரளியைக் கிளப்பினார்கள். அதாவது, "முல்லைப் பெரியாறு அணை கட்டி முடித்து 86 ஆண்டுகள் ஆகப் போகின்றது, அணை மிகவும் பழமையாகி விட்டது. உடையும் அபாயம் இருக்கிறது. அப்படிப் பட்ட நிலை உருவாகுமானால், இடுக்கி மாவட்டமே அழிந்து விடும்" என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதியும் - பொதுக் கூட்டங்களில் பேசியும் - ஒருவித பீதியை மக்கள் மனதில் கிளப்பிவிட்டார்கள்.

அதன் விளைவாக இந்தப் பிரச்சினை சட்ட மன்றத்திலும் எதிரொலித்தது. விளைவு? பிரச்சினை மத்திய நீர்க் குழுமம்வரை சென்றது. அன்றைய தினம் மத்திய நீர்க் குழுமத்தின் தலைவராக இருந்த டாக்டர் கே.சி. தாமஸ் அவர்களும், அவர் குழுவினரும் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்ட பின் The Dam is safe and there is no need for panic என்று கூறினர். அதாவது - "அணை பாதுகாப்பாக இருக்கிறது, எனவே கவலை அடையத் தேவையில்லை!"

என்றனர். இருந்தாலும் அணைக்குக் கீழே வாழும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், அணையின் வடிவமைப்பைப் பலப்படுத்தலாம், அப்போது இந்த அணை புத்தம் புதிய அணையைப்போல் வலுவாக நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று சில யோசனைகளையும் கூறினர். இந்த யோசனையைத் தமிழக அரசும் அன்று ஏற்றுக் கொண்டு, அணையைப் பலப்படுத்தும் பணியைச் செய்வதாக ஒப்புக் கொண்டது. அணையைப் பலப்படுத்தும் பணியை மூன்று கட்டமாகப் பிரித்தார்கள்.

அதாவது அவசரக் கால நடவடிக்கைகள் - இடைக்கால நடவ டிக்கைகள் - நீண்ட கால நடவடிக்கைகள்! எந்தெந்த வேலைகளை எந்தெந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டு, இப்பணிகள் முடியும்வரை முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் அறிவுறுத்தப்பட்டது. எனினும் அவசரக் கால நடவடிக்கை மூலம் செய்ய வேண்டிய பணிகளும், இடைக்கால நடவடிக்கையாகச் செய்ய வேண்டிய பணிகளும் முடிவுற்றதும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 145 அடிவரை உயர்த்தலாம் என்றும் ஒப்பந்தத்தில் போடப் பட்டது.

மத்திய நீர்க் குழுவின் வழிகாட்டுதலை ஏற்று, ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டு, பின் ஒவ்வொரு பணியை நிறைவேற்றும்போதும், நம்முடைய பொறியாளர்கள், கேரள மாநிலப் பொறியாளர்களின் ஒப்புதலைப் பெற்றே இரண்டு கட்டப் பணிகளையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். அவசர, இடைக்கால நடவடிக்கைப் பணிகளை முடித்ததும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 145 அடிவரை உயர்த்தலாம் என்று ஒப்பந்தத்தில் விதி இருந்தும், அப்படி உயர்த்துவதற்கு கேரள அரசு மறுத்தது.

"முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது" என்று கேரள அரசும், "இல்லை, இல்லை - பலமாக இருக்கிறது" என்று தமிழக அரசும் பல ஆண்டுக் காலமாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கே ஒரு கேள்வி எழலாம். இரண்டு அரசுகளுக்கிடையே மத்திய நீர்க் குழுவின் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி தமிழ்நாடு அரசு அவசர - இடைக்கால நடவடிக்கைப் பணிகளை முடித்ததும், ஏன் நீர் மட்டத்தை உயர்த்தக்கூடாது - எதற்காக கேரள அரசிடம் போய்க் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் - 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அணை தமிழ்நாடு வசம்தானே இருக்கிறது, பின் ஏன் இந்தப் போராட்டம் - என்று ஒரு கேள்வியைக் கேட்கலாம்.

இந்தக் கேள்வியில் உண்மையும் இருக்கலாம். ஆனால் பதில் கசப்பானது. 1979க்கு முன் முல்லைப் பெரியாறு அணை நம்மிடம் மட்டுமே இருந்தது. ஆனால், அதன் பின்னர் அணையின் இயக்கம் - அணையின் பாதுகாப்பு - பாதுகாக்கின்ற காவலர் - படகுத் துறை - தேக்கடி பகுதியில் இருக்கும் நிலப் பகுதி - போன்றவைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக 1979ஆம் ஆண்டிற்கும் 1988ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், கேரள அரசின் கைக்குப் போய் விட்டது.

1979க்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் உரிமையெல்லாம் கேரளத்திற்கு விட்டுக் கொடுத்தது, அ.தி.மு.க. ஆட்சியின் கைங்கர்யம்! என்னுடைய தலைமையில், தி.மு.கழக ஆட்சி 1989லும், 1996லும் வராமல் இருந்திருக்குமேயானால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் மிச்ச சொச்ச உரிமையைக்கூட அ.தி.மு.க. ஆட்சி அடியோடு கை விட்டிருக்கும். காரணம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அ.தி.மு.க., தான் ஆண்ட காலத்தில் அத்தகைய மெத்தனப் போக்கைத்தான் கடைப்பிடித்தது.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூற வேண்டுமேயானால்,பெரியாறு பிரச்சினை குறித்து கேரள முதல்வருக்கு தமிழக முதல்வராக 1991 முதல் 1996 வரை இருந்த ஜெயலலிதா ஐந்தாண்டுகளில் எழுதிய கடிதம் ஒன்றே ஒன்றுதான்! ஆனால், நான் முதலமைச்சராக இருந்த 1996 முதல் 2001 வரையிலான காலக் கட்டத்தில் நான் எழுதிய கடிதங்களில் எண்ணிக்கை 17. அதற்கு முன்பு 1989-1991இல் நான் முதல்வராக இருந்தபோது எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 2.

ஆக மொத்தம் 19. ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர் இதற்காக எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை ஒன்று மட்டுமே. ஆனால் எனது அமைச்சரவையில், பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 10. அமைச்சர் அளவில் கேரளாவுடன் அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் என்னுடைய ஆட்சியில் இரண்டு முறை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒரு முறைகூட இல்லை. முதலமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்று எடுத்துக்கொண்டால், என்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒரு முறை.

ஜெயலலிதா காலத்தில் ஒரு முறைகூட பேசவில்லை. இதையெல்லாம் மனதிலே கொண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனக் கூட்டங்களை நடத்திட முடிவெடுத்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினை தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே பல ஆண்டு காலமாக நீடித்து வருகின்ற ஒரு பிரச்சினையாகும். தி.மு.கழகம் எவ்வெப்போதெல்லாம் பதவிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அதிலே ஒரு தீர்வு காண்பதற்காக முயற்சி எடுத்துக் கொள்ளும்.

அந்த வகையில், 5-4-2000 அன்று முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து கேரள முதலமைச்சர் திரு.ஈ.கே.நாயனார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் திருவனந்தபுரம் சென்றேன். என்னுடன் அமைச்சர்களாக இருந்த ஆர்க்காடு வீராசாமி அவர்களும், துரைமுருகன் அவர்களும் வந்தார்கள். திருவனந்தபுரம் சென்றடைந்த எங்களை விமான நிலையத்தில் கேரள மாநில பாசனத் துறை அமைச்சராக இருந்த இராமகிருஷ்ண பிள்ளை , மின்துறை அமைச்சராக இருந்த சர்மா ஆகியோர் வரவேற்று, பேச்சுவார்த்தை நடைபெற்ற ராஜீவ் காந்தி மாநாட்டு அரங்கிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே கேரள முதல்வர் நாயனார் அவர்கள் எங்களை வரவேற்றார். பேச்சுவார்த்தையின்போது நான் ஆற்றிய உரை வருமாறு:- ✽ "பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக விவாதித்துத் தீர்வு காண்பதற்காக நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று இங்கு நாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கூட்டம் இப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு வழி வகுக்கும் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ✽ "தமிழகமும், கேரளமும் அண்ணனும் தம்பியும்போல உறவுடைய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள மாநிலங்கள்.

1886இல் முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் - 1970இல் நீர் மின் திட்ட ஒப்பந்தங்கள் - 1970இல் பரம்பிக்குளம் ஆளியாறு திட்ட ஒப்பந்தம் - கோவை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி ஒப்பந்தம் - ஆகியவைகளில் இரண்டு மாநிலங்களும் வழங்கிய ஒத்துழைப்புகள் இதற்கு ஆதாரமாகும். ✽ "தற்பொழுது அவசர மற்றும் நடுத்தரமான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசு அணையினுடைய பாதுகாப்புத் தொடர்பாக எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை; மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அறிவுரைகளின்படி நீர் மட்டத்தினை 145 அடி அளவுக்கு உயர்த்திட உடனடியாக இசைவளித்திட வேண்டும்.

பேபி அணையை பலப்படுத்துவதும், கைப்பிடிச் சுவரைக் கட்டி முடிப்பதும் அணையினுடைய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதாகும். அந்த முயற்சிகளுக்கு எந்தவிதத் தடையும் தேவையில்லை. அணை பாதுகாப்பாக இல்லை என்று கூறுவதும், அதே நேரத்தில் அணையைப் பலப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதும் முரண்பாடுகளைப் புலப்படுத்தும். ✽ "முதற்கட்டமாக பெரியாறு அணையின் நீரளவை 145 அடிக்கு உயர்த்தவும், தடுப்புச் சுவர் மற்றும் பேபி அணை பலப்படுத்துதல் பணி முடிவடைந்தவுடன் நீரளவை 152 அடிக்கு உயர்த்தவும் தமிழ்நாட்டை அனுமதிக்க வேண்டு மெனவும், தடுப்புச் சுவர் கட்டுவதையும், பேபி அணை பலப்படுத்தும் பணியையும் விரைந்து முடிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!"

என்று கூறினேன். அதைப்பற்றி சட்டப் பேரவையில் பொதுப் பணித்துறை அமைச்சர் என்ற முறையில் துரைமுருகன் படித்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு உச்ச நீதி மன்றம் மூலமாகப் பரிகாரம் காண்போம் என்று தெரிவித்தார். பெரியாறு அணையின் உயரத்தினை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு கேரள அரசு உடன்படாததைத் தொடர்ந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், மக்களில் ஒரு பகுதியினரும் போராட்டம் நடத்த முற்பட்டனர்.

அந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, எனக்குக் கேரள முதலமைச்சர் நாயனார் அவர்கள் 24-4-2000 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு உடனடியாக நான் எழுதிய பதிலில் - ✽ "பெரியாறு அணையின் உயரத்தை 145 அடியாக உயர்த்துவதற்கு நமது நாட்டிலேயே மிக உயர்ந்த தொழில்நுட்ப அமைப்பாகிய மத்திய நீர்க்குழு வழங்கிய ஆலோசனைகளைக் கேரள அரசு எந்தவிதக் காரணமுமின்றி எடுத்த எடுப்பிலேயே பிடிவாதமாக ஏற்க மறுத்ததினால் இப்பிரச்சினையில் நமக்கிடையே ஒருமித்த முடிவு ஏற்படாமல் போனது முற்றிலும் எதிர் பாராததாகும்.

இந்தப் பிரச்சினையில் கேரள அரசின் பிடிவாத நிலை எனக்கு முற்றிலும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்சினையில் இத்தகைய பிடிவாத நிலைமையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை எந்தவொரு முடிவுக்கும் வழி வகுக்காது. எனவே அண்மையில் நடைபெற்றிருக்கிற பேச்சுவார்த்தையின் முடிவினை உச்சநீதி மன்றத்திற்குத் தெரிவித்து, தகுந்த நிவாரணம் கோருவதைத் தவிர வேறுவழியில்லை என தமிழக அரசு கருதுகிறது.

தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மக்களின் ஒரு பிரிவினரின் ஆர்ப்பாட்டங்கள், ஒப்பந்தப்படி பெரியாறு அணை மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காததனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவினை எதிரொலிப்பதாக உள்ளது என்று கருதுகிறேன். ✽ "இருந்த போதிலும், தமிழகம் மற்றும் கேரள மாநில மக்களுக்கிடையிலே ஆரோக்கியமான உறவுகள் செழித்து வளர்வதையே எப்பொழுதும் விரும்புகிறேன்.

நமது இரு மாநில மக்களும் தொடர்ந்து இரு தரப்பு ஒத்துழைப்புகளையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்!" - என்று தெரிவித்தேன்.