நெஞ்சுக்கு நீதி
சேலத்தில் தொடர்ந்த · 367 / 391
6. சேலத்தில் தொடர்ந்த கலையுலக நிகழ்வுகள்! ஆம் ஆண்டு, ஜனவரி, 1ந் தேதியன்று அய்யன் வள்ளுவரின் சிலையினைத் திறந்து வைத்த நான், அதற்கடுத்த சில நாட்களில் சென்னையிலே ஒரு சிலையினைத் திறந்து வைக்க அழைக்கப்பட்டேன். அந்தச் சிலைக்குரியவர் - சீர்திருத்த எண்ணங்கள்- முற்போக்குக் கருத்துக்கள் - மக்களிடத்திலே பரவ வேண்டுமென்பதில் துடிப்பு மிக்கவராக விளங்கிய- டி.ஆர்.எஸ் . என்று கலையுலகத்தினரால் அழைக்கப்பட்ட டி.ஆர்.சுந்தரம் அவர்களின் சிலையாகும்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த அவருடைய சிலையினைத் திறக்க நான் அழைக்கப்பட்டிருந்தேன். சற்றொப்ப 60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் டி.ஆர். சுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பே, அவர் என்னுடைய எழுத்துக்களைச் சந்தித்தார். எங்கே சந்தித்தார் என்றால், கும்பகோணத்தில் நடைபெற்ற ரத்தினம் கம்பெனியாருடைய "மந்திரி குமாரி" நாடகத்தில் சந்தித்தார்.
அப்போது நான் அவர் பக்கத்திலே இல்லை. அவரை அழைத்துச் சென்று, அந்த நாடகத்தை நேரடியாகக் காட்டியது என்னுடைய அருமை நண்பரும், நான் அண்ணன் என்று அன்போடு அழைத்தவருமான கவி கா.மு.ஷெரீப் அவர்களும், திரு. மருதகாசி அவர்களும் ஆவார்கள். நாடகத்தைப் பார்த்துவிட்டு சேலம் சென்றதும், உடனடியாக என்னை வரும்படித் தந்தி கொடுத்தார்கள். நான் சென்றேன். "மந்திரி குமாரி நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க வேண்டும். திரைக்கதை வசனம் தீட்டித் தர வேண்டும்!"
என்று கேட்டார்கள். அது "பராசக்தி" படம் வெளிவந்த காலக் கட்டம். அப்பொழுதுதான் மந்திரி குமாரியும் வெளிவந்தது. மந்திரி குமாரி வெளிவந்ததைக் கண்டு, அதைக் காண சேலத்திற்கே கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் வந்து, சேலம் பேலஸ் தியேட்டரிலே அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சேலத்திலே இருந்த என்னை அவரது "மணமகள்" படத்திற்குக்கதை வசனம் எழுத வேண்டுமென்று கேட்டு, அதற்கும் நான் ஒப்புதல் அளித்ததும்; அப்போது தபால் துறையில் பணியாற்றிய எழுத்தாளர் நண்பர் சேலம் வேங்கடசாமி யோடு பழகியதும், அதன் பிறகு சென்னை வந்ததும் - இதெல்லாம் என்னுடைய கடந்த கால நினைவுச் சுழல்கள்!
திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர் தான் டி.ஆர்.சுந்தரம். சேலம் மாடர்ன் தியேட்டரில் அவரை "முதலாளி" என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். டி.ஆர்.எஸ். என்பது எங்களைப் போன்ற சிலர் மட்டுமே உரிமையோடு சொல்கின்ற பெயர். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசன் அங்கேயிருந்த காலக் கட்டத்தில்தான் நான் மந்திரி குமாரி படத்திற்காக வசனம் எழுத அங்கே அழைக்கப்பட்டேன். அதற்குப் பிறகுதான் "திரும்பிப்பார்" திரைப் படம்.
திரும்பிப்பார், தேவகி , மந்திரி குமாரி போன்ற படங்களுக்கு முழுமையான திரைக்கதை வசனம் எழுதியவன் என்றபோதிலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய "எதிர் பாராத முத்தம்" என்ற கதையை, "பொன்முடி" என்ற பெயரில் தயாரித்த போது, ஜலகண்டபுரம் ப. கண்ணன் அவர்கள் எழுத, சில காட்சிகளை கண்ணன் மற்றும் டி.ஆர்.எஸ். ஆகியோருடைய விருப்பத்தின் பெயரில் உரையாடல்களை நான் எழுதித் தந்தேன். அதைப் போலவே "திகம்பர சாமியார்" படத்தில் சில காட்சிகளையும் நான் எழுதித் தந்தேன்.
டி.ஆர். சுந்தரம் அவர்களிடத்தில் கண்டிப்பும் இருக்கும் - கடமை உணர்வும் இருக்கும். அதே நேரத்தில், அவரிடம் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான மனக் கஷ்டமும் இல்லாமல் பழகுவார். அப்படி அவர்களை நடத்துவார். எல்லாவற்றிலும் கறாராக இருப்பார். யாருக்கும் தரப்பட வேண்டிய ஊதியம் - ஒரு படத்திற்காக பேசப்பட்ட சம்பளம் - போன்றவைகளில் ஒரு நயா பைசா பாக்கி இல்லாமல் தருவதில் டி.ஆர். சுந்தரத்திற்கு இணை டி.ஆர். சுந்தரம் அவர்கள்தான் என்று அவரை அந்தக் காலத்திலேயே பாராட்டுவார்கள்.
அவரை "முதலாளி" என்று அழைப்பார்கள் என்று சொன்னேனே, அதற்குத் தகுந்தாற்போல்தான் அவர் நடந்து கொள்வார். அவர் ஒரு நாற்காலி போட்டு, ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருப்பார். பேச வேண்டுமென்று யாரையாவது அழைப்பார். ஆனால், அவர்களுக்கு இன்னொரு நாற்காலி அங்கே போடப்படமாட்டாது. என்னைப் போன்றவர்கள், புரட்சிக் கவிஞரைப் போன்றவர்கள் வந்தால், கூடுதலாக ஒரு நாற்காலி கொண்டு வந்து போடப்படும். நாங்கள் அங்கே- யிருந்து எழுந்து விட்டால், அந்த நாற்காலியும் அந்த இடத்திலிருந்து உடனடியாக எடுக்கப் பட்டுவிடும்.
அப்படிப்பட்ட "முதலாளி"யாக கடைசிவரை அவர் விளங்கினார். திருச்சி சிறைச்சாலையிலே கல்லக்குடி போராட்டம் என்று கருதுகிறேன் - நான் இருந்தேன். டி.ஆர்.எஸ். திருச்சி சிறைச்சாலைக்கு வந்து என்னைப் பார்த்து, "திரும்பிப்பார்" படத்தை வெளியிடப் போவதில்லை" என்றார்.
காரணம் கேட்டபோது, "அந்தப் படத்தில் இரண்டாயிரம் அடியை வெட்டினால் தான் வெளியிட அனுமதிப்பேன் என்று "சென்சார்" அதிகாரி கூறிவிட்டார் - இரண்டாயிரம் அடியை வெட்டிவிட்டு எதை வெளியிடுவது?" என்றார். "எந்தெந்த வசனங்களை வெட்டச் சொல்கிறார்கள்?"
என்று நான் அவரிடம் கேட்டேன். "கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரம் ஏறி நிற்கின்ற தலைவர்களே! அந்தக் கொள்கையிலிருந்து எத்தனை முறை நீங்கள் வழுக்கி விழுந்திருக்கிறீர்கள்? ஒரு முறை திரும்பிப் பாருங்கள்!" என்ற வசனம் வெட்டப்பட்டுள்ளவற்றில் ஒன்றாகும் - என்றார். ஏன் இதை வெட்டச் சொல்கிறார்கள் என்று கேட்டபோது, - "அந்தக் காலத்தில் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்திலிருந்து ராமானுஜர் கீழே குதித்தார்.
அதைக் கருணாநிதி இந்த வசனத்தின் மூலம் கிண்டல் செய்திருக்கிறார்- ஆகவே அதை அனுமதிக்க மாட்டோம்" என்று சொன்னார்களாம். இதற்காக டிஆர்.எஸ். கோபித்துக் கொண்டு படத்தையே வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்த போது, திரு.ஏ.வி.எம். அவர்களும், திரு. எஸ்.எஸ்.வாசன் அவர்களும்தான் டி.ஆர். எஸ். அவர்களைச் சமாதானம் செய்து படத்தை வெளியிடச் செய்தார்கள். இத்தகைய புகழுக்குரிய டி.ஆர்.எஸ். அவர்களின் சிலையினை நான் திறந்து வைத்து, அவரது அருமை பெருமைகளையெல்லாம் அந்த விழாவிலே பேசினேன்.
★ ★ ★ "அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் மனிதாபிமானத்தோடு பழக வேண்டும் - வெறுப்புணர்வோடு பேசிக் கொள்ளக்கூடாது பண்பாடு அரசியல் கட்சிகளிடையே வளர வேண்டியது மிகவும் முக்கியம்-இந்தியாவில் மற்ற மாநிலங்களில் - டெல்லியில் இப்படித்தான் அரசியல் மேடைகளில் எதிரெதிர்க் கொள்கைகளை விமர்சிக்கும் தலைவர்கள் தனியாகச் சந்திக்கும்போது எந்த அளவிற்குப் பழகுகிறார்கள்!"
என்பதையெல்லாம் நான் பல முறை கூறியிருக்கிறேன். உதாரணமாக, தி.மு.கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பகை உணர்வு இருந்தபோதிலும், அ.தி.மு.க. வின் அவைத் தலைவராக இருந்த நாவலருக்கு 2000ஆம் ஆண்டு, ஜனவரியில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, "அப்பல்லோ" மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவராக - பொதுச் செயலாளராக - இருந்ததுதான் நினைவுக்கு வந்தது.
செய்தி கேள்விப்பட்டதும், உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று நாவலரைப் பார்த்தேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அழைத்து, அவரது உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தேன். மருத்துவமனையில் நாவலருடன் இருந்த அவரது துணைவியாரையும், புதல்வரையும், இளவலையும் கண்டு நாவலரின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டுத்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்.
அங்கிருக்கும்போதே நாவலர் மறைந்து விட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. உடனடியாக விமானத்தைப் பிடித்து, சென்னைக்குத் திரும்பினேன். விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டையிலே இருந்த நாவலர் இல்லத்திற்குச் சென்று, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். என்னுடன் ஆர்க்காடு வீராசாமி, துரை முருகன், ஆலடி அருணா, தமிழ்க்குடிமகன் , அப்போது மேயராக இருந்த தம்பி ஸ்டாலின், சைதை கிட்டு ஆகியோர் உடன் வந்தனர்.
ஆனால், அந்த நேரத்திலேகூட அவருடைய இல்ல வாசலில் காத்திருந்த அ.தி.மு.க.வினர் சிலர், அநாகரிகமாக நடந்து கொண்டனர். பிறகு என் இல்லம் திரும்பியவுடன், நாவலர் மறைவு குறித்து இரங்கல் செய்தியினை எழுதி, முரசொலி அலுவலகத்திற்கு அனுப்பி விட்டுத்தான் தூங்கச் சென்றேன். அந்த இரங்கல் செய்தியில் - நாவெல்லாம் தமிழ் மணக்க செவியெல்லாம் தமிழ் மணக்க சிந்தையெல்லாம் தமிழ் மணக்க அன்று மேடையேறிய நாவலர் - என் நண்பர்- தன்மான இயக்கத்தின் தூண் சாய்ந்து விட்டதே எனத் தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்!
அவர் புகழ் வாழ்க! அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க! - என்று குறிப்பிட்டிருந்தேன். ★ ★ ★ 21-1-2000 அன்று எனது தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில் அடுத்து நடைபெறவிருந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், திருச்சி இரண்டாவது தொகுதியிலும், நெல்லிக் குப்பத்திலும் தி.மு.கழக வேட்பாளர்களை நிறுத்துவதென்றும் - அறந்தாங்கியில் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. திருச்சி இரண்டாவது தொகுதியில் அன்பில் பெரியசாமியும், நெல்லிக்குப்பம் தொகுதியில் பேராசிரியர் வி.சி.சண்முகமும் கழக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள். அந்த இடைத் தேர்தல்களில் தி.மு.கழகத்தை நேரடியாக எதிர்த்த அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க த.மா.கா. முடிவு எடுத்தது. அதைப்பற்றி அப்போது செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது "அது ஒரு காலச் சுழல்" என்று மட்டும் பதிலாகக் கூறினேன்.
அந்த இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்ற த.மா.கா.வின் முடிவில் அதிருப்தி அடைந்த அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு. ஆர். சொக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் சட்டப்பேரவையில் த.மா.கா. கட்சியின் கொறடாவாகச் செயலாற்றி வந்தார். அவர் பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், "பொது வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொண்டு, பதவியில் இருக்கலாம் என்று எண்ணாமல், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கி நிற்கிறது.
தலைவருடைய தன்மானத்தை அடகு வைத்தால்தான் தங்களுக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில் எனக்கு இந்த எம்.எல்.ஏ. பதவி என்பது சுகமாகத் தெரியவில்லை. தாங்க முடியாத சுமையாகவே இருக்கின்றது. எனவே தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மூப்பனாரின் அந்த முடிவுபற்றி ம.தி. மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்த தம்பி வைகோ செய்தியாளர்களிடம் கூறும் போது - "அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தந்ததற்காகப் பின்னர் மூப்பனார் வருத்தப்படுவார்" என்று கூறினார். ஆனால் அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் சொக்கரின் பதவி விலகலை ஏற்கவில்லை. அதைப்பற்றி பேரவைத் தலைவர் எனது கருத்தைக் கேட்டபோது, "சொக்கர் தனது எதிர்ப்பைக் காட்டி விட்டார் - அதுவே போதும் - பதவியில் தொடரக் கோரலாம்!"
என்று கூறினேன். அந்த மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், திருச்சி 2 சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. கொடுத்த புகாரின் அடிப்படையில், இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒத்தி வைப்பதாகத் தேர்தல் கமிஷன் அறிவித்தது. "இடைத் தேர்தல் குறித்து சில புகார்கள் வந்திருப்பதாகவும், அவைகளை விசாரிக்கின்றவரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறாது" என்றும் தேர்தல் கமிஷன் கூறியது.
25-2-2000 அன்று, நெல்லிக்குப்பம், அறந்தாங்கி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, இரண்டு இடங்களிலும் தி.மு.கழகக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திருச்சி தொகுதியைப் பொறுத்த வரை, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் திருச்சிக்கு வருகை தந்து, பொது மக்களிடமும், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் "ஏதாவது முறை கேடுகள் வாக்குப் பதிவின் போது நடந்ததா?"
என்று விசாரணை நடத்தினார். அவரது அறிக்கையைப் பெற்றுக் கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் அவர்கள் - "அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்று கூறி, "திருச்சியில் வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம்" என்று அறிவித்தார்.
அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தி.மு.கழக வேட்பாளர் தம்பி அன்பில் பெரியசாமி வெற்றி பெற்றார். ★ ★ ★ 2000ஆம் ஆண்டில், சிங்கப்பூர் பிரதமராக இருந்த திரு. கோ சோக் டாங் அவர்கள் இருபது அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவினருடனும், 23 வர்த்தக நிர்வாகிகளுடனும் சென்னைக்கு வருகை தந்தார். நானும், தலைமைச் செயலாளரும் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலரும், சிங்கப்பூர் பிரதமர் அவர்களையும், அவருடைய குழுவினரையும் சந்தித்து, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு - குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தோம்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதை நான் எடுத்துக் கூறியதோடு, தமிழகத்தில் மிகவும் குறைந்த, நியாயமான செலவில் கிடைக்கும் மிகச் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் - மேம்பட்ட மனித வளங்கள் ஆகியவை குறித்தும் விளக்கினேன். என்னுடைய வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய சிங்கப்பூர் பிரதமர், சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள வலுவான பண்பாட்டு மொழியியல், தொடர்புகளை மேலும் வளர்க்க தமது வருகையும், நாவலர்.
நெடுஞ்செழியன் 1999 ஜனவரியில் நான் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றதும் வழி வகுக்கும் என்று குறிப்பிட்டார். சிங்கப்பூர் பிரதமருக்கு நான் ஒரு விருந்தளித்தேன். திருவள்ளுவர் சிலை ஒன்றினையும் அன்பளிப்பாக அவருக்கு அளித்தேன். ★ ★ ★ 1999ஆம் ஆண்டு, டிசம்பர் 24ந்தேதி நேபாளத் தலைநகர் காத்மாண்டிலிருந்து 155 பேருடன் டெல்லிக்குப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு முதல், இந்தியச் சிறையில் இருந்துவந்த காஷ்மீர் தீவிரவாத அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் உட்பட 36 தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் - என்பதே அவர்களின் கோரிக்கை.
ஆயுதமேந்திய ஐந்து பயங்கரவாதிகளின் பிடியில் எட்டு நாட்களாக பிணைக் கைதிகளாகி சித்திரவதைக்கு ஆட்பட்ட 155 பயணிகளும், விமானக் குழுவினரும் டிசம்பர் 31ந்தேதி மாலை விடுதலை அடைந்தனர். அனைவரும் அன்றிரவே டெல்லி திரும்பினர். விமானத்தைக் கடத்திய ஐந்து பயங்கரவாதிகளின் நிபந்தனைப்படி - இந்தியச் சிறையிலே இருந்த மூன்று கொடிய தீவிரவாதிகளை விடுதலை செய்து, காந்தஹாரில் தலிபான்களிடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் விடுவிக்கப்பட்
டனர். மௌலானா மசூத் அசார், முஷ்டாக் அகமது சர்கார் என்கிற லாட்ராம், அகமது உம்மர் சையது ஷேக் என்ற மூன்று கொடிய தீவிரவாதிகளை காஷ்மீரச் சிறையிலிருந்து விடுதலை செய்து - தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தனர். பிறகு டெல்லியிலிருந்து மற்றொரு தனி விமானத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் - ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் நகருக்கு அழைத்துச் சென்று, அங்கே தலிபான் ராணுவத்திடம் அவர்களை ஒப்படைத்தார்.
கடத்தப்பட்ட இந்திய விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஜஸ்வந்த் சிங் சென்ற விமானம் இறங்கி நின்றது. அத்தகவல் கிடைத்த பிறகு - ஐந்து தீவிரவாதிகளும் தாங்கள் கடத்திய இந்திய விமானத்திலிருந்து கையில் ஆயுதங்களுடன் கீழே இறங்கி - ஜஸ்வந்த் சிங்கின் விமானம் இருந்த இடத்துக்குக் காரில் சென்றனர். அங்கு மற்றொரு காரில் ஜஸ்வந்த் சிங்கும் மூன்று தீவிர- வாதிகளும் இருப்பதைக் கார் கண்ணாடி வழியாகப் பார்த்து, உறுதி செய்துகொண்ட பிறகு, தலிபான் வீரர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
கடத்தல்காரர்கள் இறங்கிச் சென்ற பிறகும், இந்திய விமானத்திலிருந்து யாரும் இறங்கி வராததால், சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் இந்திய அதிகாரிகள் கலக்கமடைந்தனர். விமானத்திற்கருகே ஓடிச் சென்று பார்த்தனர். எட்டு நாட்களாக நடமாட முடியாமல் முடங்கியிருந்த பயணிகள் மெதுவாக எழுந்து வருவதைக் கண்டதும் நிம்மதி அடைந்தனர். பத்து மணி நேரத்திற்குள் ஆப்கானிஸ்தானத்தைவிட்டே வெளியேற வேண்டுமென்று ஐந்து பயங்கரவாதிகளுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டதாக நிருபர்களிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
"விமானப் பயணிகள் மற்றும் அதன் ஊழியர்கள் பாதுகாப்பைக் கருதியும், நாட்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டும், விமானக் கடத்தல்காரர்களிடம் மூன்று தீவிரவாதிகளை அரசு ஒப்படைத்தது" என்று பிரதமர் வாஜ்பய் தெரிவித்தார். கடத்தப்பட்ட விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பயணிகள் இருந்தார்கள். அவர்களும் பத்திரமாக டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார்கள். தமிழக அரசின் சார்பில் அப்போது அமைச்சராக இருந்த திருமதி சற்குணப் பாண்டியனை விமான நிலையத்திற்கு அனுப்பி, அந்தப் பயணிகளை யெல்லாம் வரவேற்று, அவரவர்கள் தங்கள் இல்லம் திரும்ப அரசின் சார்பிலேயே கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு - அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
★ ★ ★ 2000ஆம் ஆண்டு, ஜனவரித் திங்களில் மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் இடம் பெற வேண்டிய இரண்டு இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.கழகக் கூட்டணியில் இருந்த தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும், தங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் இடமளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி , மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறாததால், மீண்டும் அமைச்சராகும் வகையில் மாநிலங்கள் அவை தேர்தலில் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
மேலும் அப்போது தி.மு.க.வுடன் கூட்டணியிலே இருந்த பா.ஜ.க., ம.தி.மு.க., உட்பட மற்ற தோழமைக் கட்சிகளும் தங்களுக்கு ஒரு இடம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். இதைப்பற்றி விவாதித்து முடிவெடுப்பதற்காக கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் 8-1-2000 அன்று எனது தலைமையில் நடைபெற்றது. நிர்வாகக் குழுவில் ஒருவருக்கு ஓரிடத்தை அளித்தால், மற்றவர்களுக்கு வருத்தம் வரக்கூடுமென்ற நிலையில் இரண்டு இடங்களிலும் தி.மு.கழகமே நிற்பதென்றும், அந்த இடங்களுக்கு திருச்சி சிவாவையும் , கோவை க.ரா.சுப்பையனையும் போட்டியிடச் செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அவ்வாறே அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ★ ★ ★ உலகம் தழுவி வாழும் தமிழ் மக்கள் தமிழ்க் கல்வி பெறவும், தமிழ் இலக்கியம், பண்பாடு, பாரம்பரிய வளம் இவற்றோடு தொடர்பு கொள்ளவும், உதவும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் நிறுவப்படும் என்று 8-2-1999இல் நடந்த தமிழ்நெட் 99 மாநாட்டில் நான் அறிவித்திருந்தேன். அதைத் தொடர்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் செய்ய டாக்டர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலே ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் - தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள், பாடத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை வழங்க டாக்டர் வா.செ.குழந்தைசாமியைத் தலைவராகக் கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை அமைப்பதற்கான ஆணையினை 10-1-2000 அன்று பிறப்பித்தேன். 12-1-2000 அன்று தேசிய வளர்ச்சிக் குழுவின் துணைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற நான், பிரதமராக அப்போதிருந்த வாஜ்பய் அவர்களைச் சந்தித்து, "சமச்சீர் வரியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு காலக் கெடு எதையும் விதிக்கக் கூடாது" என்று கேட்டுக் கொண்டேன்.
அது பற்றி பரிசீலிப்பதாகப் பிரதமர் உறுதியளித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா , உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி ஆகியோரையும் சந்தித்தேன். என்னுடன் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் உடன் வந்தார்.
