உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வாழ்நாளின் வரலாற்றுச் சாதனை!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வாழ்நாளின் வரலாற்றுச் சாதனை! · 366 / 391

5. வாழ்நாளின் வரலாற்றுச் சாதனை! 12-11-1999 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கியமானதொரு முடிவு எடுக்கப்பட்டது. 31-12-1975ஆம் நாள், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்தவாறு, வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், உலகில் வியப்புக்குரியதுமான 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலைத் திறக்கின்ற விழா நிகழ்ச்சியினை கன்னியாகுமரியில், 1999ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், 31ஆம் நாள் - மற்றும் 2000ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1 ஆம் நாள் ஆகிய இரு நாட்களிலும் தமிழக அரசின் சார்பில் மிகச்சிறப்பாக நடத்துவதென்றும், அந்த விழா நிகழ்ச்சியின்போது பல்வேறு நாடுகளிலே உள்ள தமிழறிஞர்களை எல்லாம் அழைத்துச் சிறப்பு செய்வது என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 30ஆம் தேதியன்று தேனியிலும், திண்டுக்கல்லிலும் 'உழவர் சந்தை'கள் திறப்பு விழா - மற்றும் ஆண்டிப்பட்டியில் "வருமுன் காப்போம்" திட்டத் துவக்க விழா ஆகியவைகளில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து கன்னியாகுமரிக்குக் காரிலேயே சென்றேன். இரவு 10 மணிக்குத்தான் கன்னியாகுமரியை அடைந்தேன். சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்து விழாக் குழுவினரிடம் கேட்டறிந்தேன். பின்னர் விழா மேடைக்குச் சென்று ஏற்பாடுகளையெல்லாம் கவனித்தேன்.

★ ★ ★ 31-12-1999 அன்று காலையில் குமரி முனையில் எனது பெருமுயற்சியால், முக்கடல் சங்கமத்தில், விண்முட்ட எழுந்துள்ள 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழா தொடங்கியது. பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்கள் திறந்து வைத்த ஓவியக் கண்காட்சி - மற்றும் நூல்கள் கண்காட்சியை நானும், பேராசிரியரும், அமைச்சர்களும் பார்வையிட்டோம். பின்னர் முனைவர் கு. மோகனராசு நடத்திய திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளைக் கண்டு அவர்களைப் பாராட்டியதோடு, அந்தக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தேன்.

அதைத் தொடர்ந்து, இரா.கனகசுப்புரத்தினத்தின் பதினாறு கவன நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து, முனைவர் தமிழண்ணல் தலைமையில் குறள் ஆய்வரங்கம் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலர் அதிலே கலந்து கொண்டு உரையாற்றினர். முதல் நாள் இறுதி நிகழ்ச்சியாக, எனது தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதில் உவமைக் கவிஞர் சுரதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் நிர்மலா சுரேஷ், கவிஞர் கவிதைப்பித்தன், கவிஞர் பொன்.

செல்வ கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 2000ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளன்று, திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக "குறள் அமுதம்", "கோட்டம் முதல் குமரிவரை" சிறப்பு மலரினையும் - கனடா இராம் மோகனின் குறுந்தகடு ஆகியவற்றையும் மத்திய வனத் துறை அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலு வெளியிட்டார். சிறப்பு மலர்களை முனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களும், குறுந்தகட்டினை முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

காலை 10 மணியளவில், குறள் கருத்தரங்கம், முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் முனைவர் க.ப.அறவாணன் , பேராசிரியர் பா.நமசிவாயம், முனைவர் திருமதி சக்தி பெருமாள் , முனைவர் சிலம்பொலி செல்லப்பன் , பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் , முனைவர் பா.வளனரசு , சிகாகோவைச் சேர்ந்த ரிச்சர்ட் வீஸ் , புலவர் இரா. இளங்குமரன், வலம்புரி ஜான் ,ஜப்பானைச் சேர்ந்த திருமதி யூகோ புக்குராய் , முனைவர் சி.நயினார் முகமது , திருமதி இளம்பிறை மணிமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிலை திறக்கும் விழா மாலை 4.30 மணி அளவில் தொடங்கியது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். சீர்காழி சிவசிதம்பரம், டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் தங்களது வெண்கலக் குரலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். செய்தித் துறை அமைச்சராக இருந்த வ. முல்லை வேந்தன் வரவேற்புரையாற்றினார். விண்முட்டும் திருவள்ளுவர் சிலையினை குவிந்திருந்த இலட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்த்துக்களுடன் நான் திறந்து வைத்தேன்.

விழாவினை நேரில் கண்ணுற்றோர் வாழ்வில் பெரும் பேறு பெற்றோர் எனும் அளவிற்கு எழுச்சிக் கோலம் பூண்டிருந்தது அந்த விழா. கண்ணொளி கொண்ட தமிழரெல்லாம் கண்டு களித்த காட்சி! செவிப்பறை சிறிதும் பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி! இதயமுள்ள தமிழனெல்லாம் உணர்ச்சியால் உந்தியெழுந்து குதித்திட்ட எழுச்சி! ஆம்; முக்கடலும் தம் அலை இதழ்களால் முத்தமிட்டு மயங்கும் குமரிக் கடற்கரையில் - முப்பால் யாத்த ஞானத் தமிழ் அய்யன் திருவள்ளுவருக்கு விண் முட்டும் சிலை வடித்து - அதைத் திறந்து வைத்திடும் வாய்ப்பு அமைந்ததே; அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் என் நினைப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த வரமல்லவா?

வழக்கமாகக் கதைகளிலும், புராணங்களிலும் வரம் பெறுவோர் எல்லாம் தம்மை வலுப்படுத்திக் கொண்டு, தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே அக்கறை செலுத்துவர். ஆனால் எனக்கோ, கிடைத்த வரம், என் அய்யன் திருவள்ளுவனைச் சிலையாகக் கண்டிட - அதுவும் அவன் குறளில் எத்தனை அதிகாரம் இயற்றினானோ - அத்தனை அதிகாரம் - அதாவது 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி சிலையை - இந்தியப் பூபாகத்தில் வட இமயத்துக்கு நிகராகத் திகழும் தென் குமரியில் நிறுவிட முடியும் என்னால் என்ற வரமல்லவா?

அந்த வரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல், அதனை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காக, 25 ஆண்டு காலம் நித்தமும் தவம் செய்தேன் - அந்தத் தவம் பலித்தது - என் தாபம் தணிந்தது - பிறவியெடுத்த பயனைக் கண்டேன், முழுமையாக! அந்தச் சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது, என் விரல் என்னை அறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல - என்னையே நான் மறந்துவிட்டேன். நாதஸ்வர இசைவாணர்களும், தவில் வித்வான்களும், அவர்தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கு மேற்பட்டோர்; அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம்.

மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு மெய்மறந்து போயிருந்திருக்கிறேன். சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன். இளமைப் பருவ முதல் எந்தவொரு தத்துவ வித்தகனை இமைப் பொழுதும் மறவாமல் - எழுத்தில், பேச்சில், இயக்கத்தில் நினைவு படுத்திக் கொண்டே இருந்தேனோ - யாருக்கு வரலாறு போற்றும் வள்ளுவர் கோட்டம் அமைத்தேனோ - யாருக்காக ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் வள்ளுவர் திருநாள் என அறிவித்தேனோ - பேருந்துகளிலும், பயணியர் விடுதிகளிலும், ஒழுக்கம் போதிக்கும் குறளை எந்த ஒளிமிகு ஏந்தலுக்காக எழுதச் செய்து உருவப்படத்துடன் அமைத்தேனோ - யாருடைய குறளுக்கு குறளோவியம் தீட்டி - பின்னர் 1330 குறளுக்கும் உரையும் எழுதினேனோ - அந்த அய்யன் திருவள்ளுவருக்கு இருபத்தி ஐந்து ஆண்டு காலப் பெருமூச்சுக்குப் பிறகு சிலை அமைந்தது - அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது என் மன நிலையை வர்ணித்திட தமிழ்த்தாய், தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லிவிட்டாளே, நான் என்ன செய்ய!

★ ★ ★ 1975ஆம் ஆண்டு (31.12.1975) நான் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைத்திட முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. 1975 டிசம்பர் 31ல் அறிவிப்பு - அடுத்த 30 நாட்களுக்குள் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. நான் முன்னின்று கட்டி முடித்த வள்ளுவர் கோட்டத்திலும் என் பெயர் பொறித்த அடிக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சி கலைக்கப்பட்டதற்கு அடுத்த சில நாட்களுக்குள் எனக்கு அழைப்புகூடத் தராமல் கோட்டத்தைத் திறந்து முடித்தனர், அன்றைய கோலேந்திகள்!

13 ஆண்டு காலம் அந்த வள்ளுவர் கோட்டத்திற்குள் நானும் காலடி எடுத்து வைக்க வில்லை - என் பெயருக்கும் ஓர் அங்குல இடமளிக்க யார் இதயமும் இடங்கொடுக்கவில்லை. ★ ★ ★ 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தலில் வென்று நமது கழக அரசு பதவியேற்றது. கல்லில் சிலை அமைப்பதே ஏற்புடையது என்பதாலும், காலங்கடந்து நிற்கும் இந்தியக் கற்கோவில்கள்போல் கல்லால் சிலை அமைப்பது, நமது கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும் என்பதாலும், தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி முதல்வர், திரு.கணபதி ஸ்தபதி அவர்களுடன் மக்கள் தொடர் புத்துறை இயக்குநர் பேசி, ஆலோசனை பெற்று, அதன்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, 10.11.1989 அன்று திரு.கணபதி ஸ்தபதி அவர்களுடன் நானே விவாதித்து - அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக திரு.கணபதி ஸ்தபதி 1.3.1990 அன்று வரைபடமும், திட்ட மதிப்பீடும் தந்தார்.

17.3.1990 அன்று நிதி நிலை அறிக்கையைச் சட்டமன்றப் பேரவையில் வைத்தபோது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் நிறுவப்படும் என்று அறிவித்தேன். அது தொடர்பாக 25.3.1990 அன்று திரு. கணபதி ஸ்தபதி அவர்களுடன் விவாதிக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலையினைச் செம்பால் செய்வதற்குப் பதில், கல்லால் செய்ய முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை அமைக்கும் பணியைத் திரு.

கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஆணை வழங்கப்பட்டது. 6.9.1990 அன்று கன்னியாகுமரியில் சிலை வடிக்கும் பணியை நான் தொடங்கி வைத்தேன். 1991 ஜனவரி 31 அன்று மீண்டும் கழக ஆட்சி கலைக்கப் பட்டுவிட்டது ("விடுதலைப் புலி"களோடு உறவு என்று காரணம் காட்டி!) 13.5.1996ல் நான்காவது முறையாக கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சிலை அமைப்புப் பணி மீண்டும் தொடங்கியது. 25.6.1997 அன்று - என் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிலை அமைப்புப் பணிகளை உடனடியாக விரைவுபடுத்துவதுபற்றி விவாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் சிலை அமைப்புப் பணியை முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு, அது தொடர்பாக திரு.கணபதி ஸ்தபதி அவர்களுக்கு அரசே நேரிடையாக இனி நிதியை வழங்குவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

30.7.1997 அன்று சிலை அமைப்புப் பணிக்குரிய திருத்திய மதிப்பீடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு, சிலை அமைப்புப் பணிக்கு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ. 614 இலட்சம் - தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு திருத்திய மதிப்பீடாக ரூ. 172 இலட்சம் - என நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணையிடப்பட்டது. திரு.கணபதி ஸ்தபதி மேற்கொண்ட பணிகளை, ஒவ்வொரு மாதமும் பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, செய்த பணியின் அளவிற்கு ஏற்ப நிதி வழங்கப்பட்டு வந்தது.

★ ★ ★ 6.2.1999 அன்று திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அதற்கு அருகேயுள்ள கப்பலோடையைச் சரி செய்வதற்கு 86 இலட்சம் ரூபாயும், அதற்குத் தேவையான பற்பல பொருட்களை கரையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு 7 இலட்சம் ரூபாயும், ஆக 93 இலட்சம் ரூபாய் கட்டுமானக் கழகத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது. 19.10.1999 அன்று சிலை அமைப்புப் பணிகள் அனைத்தும் முற்றுப் பெற்றன. அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மின்விளக்குகள் அமைக்க 19 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டது.

திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் வெடிப்புகளை நிரப்பிச் சரி செய்வதற்கும், சிலையின் உட்புறத்தில் தேவையான பணிகளுக்கு கட்டுமானப் பொருட்களையும், சாரப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கும் 44.50 இலட்சம் ரூபாய்க்கு 22.12.1999 அன்று ஒப்பளிப்பு வழங்கப் பட்டுள்ளது. சிலை வரலாறு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் முறைப்படி எடுத்துரைத்துள்ளேன். திருவள்ளுவர் சிலையினை நான் திறந்து வைத்தது கண்டு பல பேருக்கு வயிற்றெரிச்சல்!

அதனைத் தீர்த்து அறவே அகற்றும் அருமருந்தாக உள்நாட்டு வெளி நாட்டுச் சான்றோர் ஆன்றோர்களின் இனிய உரைகளும், கருத்துக்களும், வாழ்த்துக்களும் அமைந்துவிட்டன என எண்ணி நான் பூரித்தேன். விழுப்புண் பெற்றவனுக்கு அவன் வேல்விழிக் காதலி வேது கொண்டு ஒத்திடும்போது ஏற்படும் ஒருவிதமான சுகமன்றோ தமிழ் ஆர்வலர்களின் ஆறுதல் வார்த்தைகளால் எனக்கு ஏற்பட்டது. இதோ தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமல்ல; வடபுலத்திலிருந்து வரும் ஆங்கில ஏடுகள் எழுதியுள்ள நீண்ட கட்டுரைகளில் இருந்து சில பகுதிகளைத் தருகிறேன்.

★ ★ ★ "டைம்ஸ் ஆப் இந்தியா" எனும் பிரபல ஆங்கில நாளேட்டில், 2.1.2000 அன்று சுவாதிதாஸ் என்பவர் எழுதியது:- ✽ "133 அடி உயரமுள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையைப் புத்தாண்டு நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் கன்னியாகுமரியில் திறந்து வைத்துள்ளார். இந்த மிகச் சிறந்த நினைவுச் சின்னம் தமிழ்ச் சமுதாயப் பண்பாட்டினை மட்டும் உணர்த்துவது அல்ல-ஜைன சமயத்தில் நிலைபெற்ற போதனைகளையும் உணர்த்துவதாகும்.

அவர் தனது நூலில் ஆதிபகவன் என - ஜைன சமயத்தை முதன் முதல் நிறுவிய ஆதிநாதரைக் குறிப்பிடுகிறார். மனித உளவியல் பற்றிய முழுமையான அறிவாற்றலை இவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தீமைக்கு எதிராகப் போராடுவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைப் பண்புகளை மக்களுக்கு அளிப்பதே வள்ளுவரின் அணுகுமுறை!"

வள்ளுவரை பல மதத்தினரும் தமது சமயத்தவர் என்று உரிமை கொண்டாடுவதின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கருத்தும்! "ஏசியன் ஏஜ்" என்ற மற்றொரு ஆங்கில நாளேடும் பாராட்டி எழுதியது. ஆர்.பகவான் சிங் அந்த ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில் சில பகுதிகளை மட்டும் தருகிறேன். ✽ "இச்சிலைத் திறப்பு விழா நிககழ்ச்சி முதலமைச்சர் திரு.கருணாநிதியின் உடல் நலத்திற்கு உகந்ததல்ல என சோதிடர்கள் எச்சரித்திருந்த போதிலும், கன்னியாகுமரியில் - முக்கடல்களும் கூடும் தென்முனையில் - 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் முனிவர் திருவள்ளுவரின் சிலையினைப் புத்தாண்டின் தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார்.

✽ "சுமார் 7000 டன் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலையை அமைப்பது குறித்த சிந்தனை, தமிழ் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றி வரும் தி.மு.க. தலைவரின் எண்ணத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் (1975ல்) உதித்தது. இது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோளாகும். இச்சிலை திருவள்ளுவருக்குச் செய்யும் மிகப் பெரிய நினைவுச் சின்னமாகும். ✽ "1989ஆம் ஆண்டில் சிலைக்கு அடிக்கல் நாட்டியபோது, திரு.

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில், அவர் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும், பல கடுமையான சோதனைகளையும், வீழ்ச்சிகளையும் சந்திக்க நேரிட்டது. ஆனால், திராவிட இலக்கியப் படைப்பாளி தனக்கு மிகவும் பிடித்தமான இந்தத் திட்டத்தை கைவிட்டு வி

டவில்லை. 1996ல் மீண்டும் ஆட்சி அமைந்ததும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகளில் ஒன்றாக, பத்து கோடி ரூபாய் செலவில் இச்சிலையினை வடித்தெடுக்க உலக அளவில் சிலை வடிப்பில் தேர்ச்சி பெற்றவரும், தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளவருமாகிய திரு.கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. வாஸ்து சாஸ்திர முறைப்படியும் - சிலைகளை வடிவமைப்பதில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அண்மைக் காலத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும் - மிகப் பிரம்மாண்டமான இச்சிலை அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது."

- என்று குறிப்பிட்டிருந்தது. ★ ★ ★ குறளை அவரவர்களும் தமது கோணத்தில் பொருள் கொண்டு பார்ப்பதைப்போலவே; அய்யன் குறளாசானின் கருத்துக்களையும் - அந்த அய்யனின் சிலையை அமைத்திட்ட என்னையும்-என் இலட்சியங்களையும்-அவரவர் கோணத்தில் பார்க்கின்றனர் என்பதற்கு இந்த இரு ஏடுகளின் கட்டுரைகளே தக்க சான்று! எதுவாயினும், ஜனவரி 1ஆம் நாள் குமரி முனையில் திறக்கப்பட்ட வானுயர வள்ளுவர் சிலையை மறுநாள் காலை அருகில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பியதிலிருந்து, என் நெஞ்சு ஓயாது உச்சரித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சி மிக்க சொற்றொடர் "ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதைப் போல - "அனைவரும் சமம்!

அய்யன் வள்ளுவனே தெய்வம்!" என்பதுதான்! ★ ★ ★ அய்யன் வள்ளுவரின் சிலைத் திறப்பு விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் - அருமை நண்பர் ஜி.கே. மூப்பனார், இல. கணேசன், என். சங்கரய்யா, தம்பி வைகோ, வாழப்பாடி ராமமூர்த்தி, ஆர். நல்லகண்ணு, எஸ். திருநாவுக்கரசு, ஆர்எம். வீரப்பன், குமரி அனந்தன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தமிழறிஞர்கள், மலேசிய அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீசாமிவேலு , இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் , மொரீசியஸ் அமைச்சர் இராமசாமி சிதம்பரம் பிள்ளை , சிங்கப்பூர் வை.

திருநாவுக்கரசு , ஸ்காட்லாந்து ஆர்.ஈ.ஆஷர் , ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர் தாமஸ் மால்டன், பேராயர் முனைவர் ஆரோக்கியசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் , திருமதி இராதா தியாகராஜன் , பேராயர் எஸ்றா சற்குணம் , ஆசிரியர் சாவி ஆகியோர் உரையாற்றினர். சிறப்புமிக்க அந்தத் திருவள்ளுவர் சிலையினை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி, மற்றும் திருக்குறளை மொழி பெயர்த்த அறிஞர்கள் ஆகியோர் விழாவிலே சிறப்பிக்கப்பட்டனர்.

சுற்றுலாத் துறை அமைச்சர் தம்பி என். சுரேஷ் ராஜன் நன்றி கூறினார். ★ ★ ★ அந்த நிகழ்ச்சியில் அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் பேசும்போது, அங்கே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து, அவர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, "கலைஞரைப் பாராட்டுங்கள் - பாராட்டுவதற்கு அடையாளமாக கையொலி செய்யுங்கள்" என்று கூறியதும் - அந்த விழா மேடைக்கு வந்ததும் - என் அருகே வந்து அன்பளிப்பாக "You can win" (உன்னால் ஜெயிக்க முடியும்) என்ற ஆங்கிலப் புத்தகத்தை அளித்ததும், அந்த விழாவிலே நான் பேசும்போது அதைக் குறிப்பிட்டு உரையாற்றியதும் மறக்கக் கூடியவைகளா?

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த விழாவிலே பேசியபோது என்னுடைய அன்னையை நினைவுபடுத்தி, "அவர் இருந்து இந்த விழாவினைப் பார்த்தால் என்ன உணர்ச்சி வயப்படுவாரோ, அதே உணர்ச்சியோடு நான் உன்னை வாழ்த்துகிறேன்" என்றார். நம்முடைய பேராசிரியரோ திருக்குறளுக்கு தான் ஆற்றியப் பணிகளுக்கு சிகரமாக "திருவள்ளுவர் சிலை அமைத்த கலைஞரின் புகழ் - வள்ளுவரின் சிலைபோல - திருக்குறள்போல நிலைத்து நிற்கும்" என்றார்.

மேலும் அவர், "கலைஞர் அவர்களே! நீங்கள் உங்களின் மிகப் பெரிய ஆசையை நிறைவேற்றி விட்டதற்காக மகிழ்கிறேன் என்று சொன்னீர்கள். உங்கள் ஆசையை நிறைவேற்றிவிட்டதாகச் சொல்லி நீங்கள் மகிழ்கிறீர்கள், நாங்களும் மகிழ்கிறோம் - எங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கு நீங்கள் தொடர்ந்து வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேன்!"

என்றார். இன்றைக்கு என்னைத் திட்டித் தீர்க்கும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் தம்பி வைகோ , அன்றைக்கு அந்த விழாவிலே பேசும்போது, "கலைஞர் அவர்களே! நீங்கள் குறளோவியம் தீட்டினீர்கள், வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் கண்டீர்கள். இன்று சிலையைத் திறந்து வைத்திருக்கின்றீர்கள். இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரும். அப்பொழுதெல்லாம் இந்த நாளை தமிழ்க் குலம் நினைவிலே வைக்கும். இந்த நாளும், நீங்களும் வரலாற்றின் பொன் எழுத்துக்களிலே நிலைத்து நிற்பீர்கள்" என்றார்.

இப்போது அவர் திட்டுகின்ற வார்த்தைகள் என் மனதிலே நிற்பதில்லை - அன்றைக்கு அவர் வாழ்த்தியது தான் நினைவிலே உள்ளது. 4-1-2000 தேதியிட்ட "தினமணி" தனது தலையங்கத்தில், "குமரி முனையில் நடைபெற்ற இவ்விழாவில் உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழ்ச் சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருக்கிறார்கள். முதல்வர் கருணாநிதி முன்னின்று எடுத்த இவ்விழா சர்வ கட்சி விழாவாகவே நடைபெற்றிருக்கிறது. சென்னையில் தனித்த வடிவத்தில் வள்ளுவர் கோட்டத்தை எழுப்பிய கருணாநிதியே - திருவள்ளுவர் சிலையையும் திட்டமிட்டு எடுத்திருக்கிறார்.

இச்சிலை கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்துக்கு மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியின் தமிழ் உள்ளத்துக்கும் நிலைத்த சான்றாக விளங்கக் கூடியது!" என்று எழுதியிருந்தது.