உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வழக்கும் - வரையற்ற
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வழக்கும் - வரையற்ற · 365 / 391

4. வழக்கும் - வரையற்ற வன்முறையும்! தி ராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எவ்வெப்போதெல்லாம் தமிழகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததோ, அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் உதவிகளைச் செய்ய முடியுமோ, அந்த வகையில் உதவிகளைச் செய்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். விவசாயிகளுக்காக தி.மு.கழக அரசில் தீட்டப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் "உழவர் சந்தைகள்". விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை, இடைத்தரகர்கள், வணிகர்கள் குறுக்கீடு இல்லாமல், உழவர்களே நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய இந்த உழவர் சந்தைகள் மூலமாக வழி வகை செய்யப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம்.

விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி, அவற்றை லாபம் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து -அந்தச் சில்லரை வியாபாரிகள் மேலும் லாபம் வைத்து விற்க, அதனைப் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை முன்பு இருந்தது. அதனால் காய்கறிகளை உற்பத்தி செய்த விவசாயிகள் குறைந்த விலையே பெறும் அதே நேரத்தில், பொது மக்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை இருந்து வந்தது.

அந்த நிலையைப் போக்க கழக அரசினால் கண்டுபிடிக்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இவற்றை அமைத்ததின் காரணமாக இடைத் தரகர்களுக்கு வழியில்லாமல் செய்யப்பட்டது. உழவர் சந்தைகளுக்குக் காய்கறிளை விற்பதற்காகக் கொண்டுவரும் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டன. விவசாயிகள் அந்த அடையாள அட்டையைக் காட்டி, அரசுப் பேருந்துகளில் இலவசமாகக் காய்கறி மூட்டைகளைக் கொண்டு வரலாம்.

அதற்குச் சுமைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. சந்தைகளில் விற்பனை செய்யும் காய்கறிகளுக்கு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த நிர்ணய விலை விவரம் ஒவ்வொரு கடையின் முன்னும் எழுதிப் போடப்படும். எனவே உழவர்கள் அதிக விலைக்கு விற்க முடியாது. பொது மக்கள் குறைந்த விலைக்குக் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். 1999ஆம் ஆண்டு நவம்பர் 14ந் தேதியன்றுதான் தமிழகத்தில் முதலாவது உழவர் சந்தை மதுரை மாநகரில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 100 உழவர் சந்தைகள் தொடங்கப்பட வேண்டுமென்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்ட அந்த உழவர் சந்தைகள் தற்போது 100க்குமேல் உள்ளன. அந்த உழவர் சந்தைகளை அ.தி.மு.க. ஆட்சியிலே சரியாகப் பராமரிக்கப்படாத நிலை இருந்தபோதிலும், கழக ஆட்சி நடைபெறும் போதெல்லாம் அந்த உழவர் சந்தைகள் சிறப்பாக நடைபெற்று, உழவர்களும், பொது மக்களும் பயன்படுகின்ற அளவிற்கு நடந்து வருகின்றன. அந்த உழவர் சந்தைகள்பற்றி 16-11-1999 தேதியிட்ட "தினமணி" நாளிதழில், ஒரு தலையங்கமே பாராட்டி எழுதியிருந்தது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு :- ✽ "விவசாய வளத்தில் அகில இந்திய அளவில் பஞ்சாபுக்கு அடுத்தபடியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள மாநிலம் தமிழகமே. வேளாண்மை வளர்ச்சிக்கு நிதி உதவி புரிவதற்கென்றே தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியாகிய 'நபார்டு' தோன்றிய பிறகு, விவசாயத் துறையில் புதிய சகாப்தமே ஆரம்பித்துள்ளது. பல வகையான கூட்டுறவு வங்கிகள் மூலம், எளிய விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

✽ "உதாரணமாக காய்கறிச் சாகுபடி, பழச் சாகுபடி, மலர்ச் சாகுபடி, பால் பண்ணை, கோழிப் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டுப் பூச்சி வளர்ப்பு - போன்றவற்றுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயினும் இவற்றை நல்ல விலைக்கு விற்று -ஆதாயமடைவதற்கு ஏற்ற வசதிகள் அந்த விவசாயிகளுக்கு வாய்க்கவில்லை. அங்காடிகளில் காய்கறிகளும், பழங்களும் நல்ல விலைக்கு விற்கின்றன. ஆனால் அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதில் ஆதாயம் போய்ச் சேருவதில்லை.

விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையேயுள்ள மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், இடைத் தரகர்கள் மூலம் இவை கைமாறி வருகின்றன. அதனால் இடையில் உள்ளவர்களுக்கே கணிசமான ஆதாயம் சென்று விடுகிறது. பொது மக்கள் அதிக விலை தருகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்குக் கிடைப்பதோ கட்டுப்படியாகாத வருவாயே. ✽ "இந்த அவலத்தைப் போக்குவதற்குத் தமிழக (தி.மு.க.) அரசு அருமையான திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

வணிகர்கள் மற்றும் இடைத் தரகர்களின் குறுக்கீட்டுக்கு இடம் இல்லாமல், விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளையும், பழங்களையும் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்து தருவதற்காக உழவர் சந்தைகள் நிறுவப்படுகின்றன. இது எளிய விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதம்."

-இவ்வாறு இத்திட்டத்தைப் பற்றி அன்றைய "தினமணி" பாராட்டி எழுதியது. 14-11-1999 அன்று மதுரையில் உழவர் சந்தை திறப்ப விழாவில் கலந்து கொண்ட நான், 14-11-2000 அன்று பல்லவபுரத்தில், 100வது உழவர் சந்தையினைத் திறந்து வைத்தேன் என்றால், ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் 100 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு ஆர்வத்துடன் அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ★ ★ ★ 1999ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரில் உலக வர்த்தக சபை மாநாடு நடந்தது.

அதில் இந்தியாவின் சார்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் கலந்து கொண்டார். உலகின் 135 நாடுகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டினை யொட்டி 2-12-1999 அன்று விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க அதிபராக அப்போது இருந்த பில்கிளிண்டனும், இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனும் அந்த விருந்தின் போது சந்தித்துப் பேசினர்.

இருவரும் அருகருகே அமர்ந்து, இந்தியாவிற்கு கிளிண்டன் வருகை குறித்தும், இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் குறித்தும் விவாதித்தனர். பில்கிளிண்டனின் வருகையை இந்தியா வெகு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அப்போது முரசொலி மாறன் தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கையில், வெகு விரைவில் தாம் இந்தியாவிற்கு வர உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். அந்த மாநாட்டில் உரையாற்றிய தம்பி மாறன், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சாதகமான அம்சங்களை தட்டிப் பறித்துக் கொள்ள வளர்ச்சி அடைந்த நாடுகள் முயற்சிப்பதாகக் கூறினார்.

சியாட்டல் மாநாட்டின் பிரகடனத்தைத் தயாரிக்க ஐந்து விதமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஐந்து குழுக்களிலும் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இடம் பெற்றார். தொழிலாளர்களின் பிரச்சினைகளை வர்த்தகத்திற்கு நிபந்தனையாக விதிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. "அதை இறுதிவரை எதிர்த்துப் போராடித் தடுத்து நிறுத்துவோம்" என்று முரசொலி மாறன் அந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவித்தார்.

சீனா, ஜப்பான், சுவீடன், கனடா நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை முரசொலி மாறன் சந்தித்துப் பேசினார். ★ ★ ★ முதலமைச்சர் ஜெயலலிதா, பெரும்பாலும் அவர் விடுக்கின்ற அறிக்கைகளிலே, தான் ஏதோ புனிதவதி என்பதைப் போலவும், ஊழல் என்றால் என்னவென்றே தெரியாததைப் போலவும் விளம்பரப்படுத்திக் கொள்ளத் தவறுவது இல்லை. எதிர்க் கட்சியினர்மீது வழக்குகளைத் தொடுக்கவும் தவறுவதில்லை. ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு சில வழக்குகளை அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

அதிலே ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். ★ ★ ★ சென்னையில் அமிர்தாஞ்சன் கம்பெனிக்குச் சொந்தமான வீடும், நிலமும், மைலாப்பூரில் லஸ் அவென்யூவில் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து அந்த வீட்டையும், நிலத்தையும் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி அல்லது தோழி என். சசிகலா, வி.என். சுதாகரன், ஜே. இளவரசி, ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மென்ட் லிமிடெட் (அதன் பங்குதாரர் சசிகலா), ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் (பங்குதாரர் இளவரசி), ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் (தலைவர் வி.என்.

சுதாகரன்) ஆகிய ஆறு பேருக்கு மார்ச் 1995இல் 54 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அவர்கள் ஆறு பேரும் தலா ஒன்பது இலட்ச ரூபாய் கொடுத்து அந்த வீட்டை வாங்கியதாகக் கணக்குக் காட்டப் பட்டது. வருமான வரிச் சட்டம் 269 யு.சி. பிரிவின்படி, பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கும்போது, வருமான வரித் துறையினரிடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழைப் பெறாமல் இருப்பதற்காகத்தான் ஆறு பேர் சேர்ந்து ஒவ்வொருவரும் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக ஒன்பது இலட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்து சொத்து வாங்கியதாகக் கணக்குக் காட்டப்பட்டது.

மேலும், இவர்கள் ஆறு பேரும் ராமாயி அம்மாளுக்கு மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தெரிந்தது. எனவே இவர்கள் 6 பேர்மீதும் வருமான வரி ஏய்ப்பு வழக்கு அப்போது பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில்,பல ஆண்டுகளாக இன்னமும் உள்ளது. ★ ★ ★ இதோ இன்னொரு வழக்கு. திருநெல்வேலி மாவட்டம், வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் . ஜெயலலிதா அமைச்சரவையில் 15-2-1992 முதல் 17-5-1993 வரை ஊரகத் தொழில் துறை அமைச்சராகவும் - 18-5-1993 முதல் 12-5-1996 வரை சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

அவரது துணைவியார் டாக்டர் நூர் ஜமீலா. அவர்கள்மீதும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக முதலாவது தனி நீதிபதி எஸ். சம்பந்தம் முன்னிலையில் விசாரணை நடைபெற்று, 2-12-1999 அன்று நாகூர் மீரானுக்கும், அவரது துணைவியாருக்கும் மூன்றாண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. அத்துடன் அபராதமாக பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டு- மென்றும், தவறினால் மேலும் மூன்று மாதங்கள் தண்டை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும் அவர்கள் உயர்நீதி மன்றத்தில்மேல் முறையீடு செய்வதற்காக 27-1-2000 வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பைப்பற்றி அன்றைய "தினமணி" தலையங்கத்தில் - ✽"இந்த வழக்கு சில அம்சங்களில் விசித்திரமானது. வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த நூதன உத்திகள் அரங்கேற்றப்பட்டன. அதைவிட சொத்துக்களை வாங்கியதற்கான வருவாய் எந்தெந்த வழிகளில் கிடைத்தது என்பதைக் காட்டுவதற்கு, அவர் காட்டிய ஜோடனைக் கணக்குகள் ஆச்சரியமானவை.

அவற்றில் ஒன்று, அவருடைய திருமணம் நடைபெற்றபோது, மொய்ப் பணமாக மட்டும் பதினோரு லட்சம் ரூபாய் சேர்ந்தது என்ற அசாத்தியக் கணக்கு. அதுபோக, தனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து தென்னை, மா, பனை மரங்கள் மூலம் பதிமூன்று இலட்ச ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக மீரான் அளித்துள்ள கற்பனைக் கணக்கு சுவை மிக்கது. அந்த ஒப்பனைக் கணக்குகளின் உண்மையான சொரூபத்தை நீதிபதி சம்பந்தம் விஞ்ஞான ரீதியாகத் தோலுரித்துக் காட்டியுள்ள விமர்சனம் எவரையும் பிரமிக்கச் செய்யக்கூடியது " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைத்தார். இந்த வழக்கும் பல ஆண்டுக் காலமாக உயர்நீதி மன்றத்தில் இப்போதும் நிலுவையிலே உள்ளது. ★ ★ ★ அந்த வழக்கினைத் தொடர்ந்து, அடுத்து சில அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமதி மல்லிகா என்ற அம்மையாரைப் பற்றியும், அவரது குடும்பத்தினரைப் பற்றியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அந்த அ.தி.மு.க.

சட்டமன்ற உறுப்பினருக்கு ஏழு ஆண்டு காலக் கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். வருவாய்க்கு அதிகமாக இரண்டு கோடியே 35 இலட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கு நடைபெற்றது. மேலும், தனது தீர்ப்பில், "ஒரு நீதிபதியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படை பண்பாடுகூட இல்லாத ஒரு குற்றவாளிக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது!"

என்றும் குறிப்பிட்டிருந்தார். ★ ★ ★ 2-2-2000 அன்று இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி, கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக ஜெயலலிதா கூறினார். கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு 1991ஆம் ஆண்டு அனுமதி தரப்பட்டது.

தரைத் தளம், முதல் மாடிக் கட்டிடம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் ஐந்து மாடிகள் கட்டிக் கொள்ள அனுமதி கேட்டபோது, கொடைக்கானல் நகர கமிட்டி அனுமதிக்க மறுத்து விட்டது. ஆனாலும், அதை மீறி கூடுதலாக ஐந்து மாடிகள் கட்டப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்டதை மீறி, கட்டடம் கட்டப்பட்டதை எதிர்த்து, 1992ஆம் ஆண்டிலிருந்து வழக்கு நடந்தது. விதிகளுக்குப் புறம்பாக ஓட்டல் கட்டப்பட்டதை எதிர்த்து, பழனி மலைகள் பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.

இரு மாடிகளுக்கு அதிகமாகக் கட்டப் பட்டபோதே நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி கட்டடம் எழும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கில், 2000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென்று மார்ச் 1994இல் உயர்நீதி மன்றம் உத்தர விட்டது. அந்த நிலையில், ஓட்டல் கட்டடத்துக்கு கட்டுப்பாட்டு விதிகளின்கீழ் விதிவிலக்கு அளித்து தமிழக அரசு 13-5-1994 அன்று ஆணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

அரசாணையின் நகலைப் பெறுவதற்கு பழனி மலைகள் பாதுகாப்பு கவுன்சில் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டியதாயிற்று. அந்த அரசாணை செல்லுமா என்பது குறித்து 94ஆம் ஆண்டு ஜூலையில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஓட்டல் நிர்வாகம் கட்டுமானப் பணிகளைத் தொடர்வதற்கு உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, அந்த ஓட்டலுக்கு விதிமுறைகளிலிருந்து விலக்களித்து 6-12-1994 அன்று ஓர் உத்தரவை ஜெயலலிதா அரசு வெளியிட்டது.

அந்த உத்தரவு 13-5-1994 முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு கூறியது. தமிழ்நாடு நகரமைப்புத் திட்டச் சட்டத்தின் 113வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, விதிவிலக்கு வழங்கப்படுவதாக அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் அந்த இரண்டு உத்தரவுகளையும் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எம். சீனிவாசன், எஸ். ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 10-4-1995 அன்று ரத்து செய்தது.

★ ★ ★ 1996ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு சிறப்பு நீதி மன்றத்தில

் வழக்கு தொடுக்கப்பட்டு, 2-2-2000 அன்று தனி நீதிமன்றத்தில் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பைக் கேள்விப்பட்டவுடன் நீதிமன்றம் முன்பு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் நீதிமன்ற வளாகம் முன்பே வன்முறையில் ஈடுபட்டார்கள். அந்த வழியாக வந்த பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.

அங்கிருந்த கடைகள்மீது கல் வீசித்தாக்கிக் கடைகளைச் சூறையாடினர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பீதிக்கு ஆளாயினர். அது மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வகையில் தர்மபுரியில், கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் - இரண்டு பேருந்துகளில் - கிருஷ்ணகிரி அருகே உள்ள பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து விட்டு கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்தை அ.தி.மு.க.வினர் மறித்துத் தாக்குதலில் ஈடுபட்டு - மாணவிகள் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகும் கேளாமல், பேருந்துக்குத் தீ வைத்தனர். அந்த விபத்தில் மூன்று மாணவிகள் - கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உயிரோடு எரிக்கப்பட்டனர். மேலும் 17 மாணவிகள் தீக்காயமடைந்தனர். அருமைச் செல்வங்கள் மூவரை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் வழங்கினேன்.

"கண்ணே, மணியே!" என்று கொஞ்சி தலைவாரிப் பூச்சூடி நித்தம் பாடசாலைக்கு அனுப்பி வைத்த பெற்றோர், அந்தச் செல்வங்கள் அரும்பாகி, மலராகி, கல்லூரி வரை சென்று பயின்று, காயத்ரியாக - ஹேமலதாவாக - கோகிலவாணியாகத் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அம்மூவரும் அவரவர் வீடுகளை நோக்கிக் கரிக்கட்டைகளாய் - சாம்பல் பொடிகளாய் வந்தனர் என்றால், அந்த மகள்களைப் பெற்ற மகராசிகளின் வயிறு எப்படிப் பற்றி எரிந்திருக்கும்?

இந்தச் சம்பவம்பற்றி சுந்தரப் பெருமாள் கோயில் இராமலிங்கம் என்ற தோழர் அப்போது எழுதிய கவிதை ஒன்றில் - "பாரதி புரத்திலா இந்தப் பாதகச் செயல்? மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தச் சொன்னவன் பாரதி! ஆனால், மாதர்களையே கொளுத்தி விட்டார்களே மாபாவிகள்?"

என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மூன்று மாணவிகள் இறந்த நிகழ்ச்சி குறித்த வழக்கினை புலனாய்வு செய்ய மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் பொறுப்பினை முதலமைச்சர் என்ற முறையில் ஒப்படைத்தேன். இறந்த மூன்று மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா ஒரு இலட்ச ரூபாய் நிதி அளிக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்த போதிலும் - அந்த நிதியை வாங்க மாட்டோம் என்று அந்த மூன்று மாணவிகளின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

இந்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதி மன்றத்தில் அப்பீல் செய்து கொண்டார். அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா தண்டிக்கப்படும் போது, இத்தகைய போராட்டங்களை எல்லாம் அ.தி.மு.க.வினர் நடத்துவது என்பது வழக்கம். ★ ★ ★ உதாரணமாக, 1993ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் என்றால், திறந்தவெளியில் - பொது இடத்தில் - பொது மேடையில் - பொது மக்கள் முன்னிலையில் என்று எண்ணி ஏமாந்துவிடாதீர்கள்.

எல்லா வசதிகளும் கொண்ட தன்னுடைய சொந்த வாகனம் ('வேன்') ஒன்றின் உள்ளே - தன் தோழியுடன் - அந்த வாகனத்தின் கதவும் சாத்தப்பட்டிருந்த நிலையில் - யாரும் பார்க்க முடியாத வகையில் - அந்த விசித்திர உண்ணா விரத நிகழ்ச்சி நடைபெற்றது என்றும், உள்ளே என்ன நடக்கிறது என்று யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அக்காலத்தில் ஊரே பேசிக்கொண்டது. அந்தப் புது முறை உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி, மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நேரத்தில் அங்கேயிருந்த ரயில்வே சிக்னல் அடித்து நொறுக்கப்பட்டது.

✽ தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திரு.டி.என். சேஷன் சென்னைக்கு வந்தபோது, அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் தடுக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்டது. ✽ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முறைகேடு குறித்து தீர்ப்புக் கூறிய நீதியரசர் சீனிவாசன் வீட்டில் கல்வீச்சு நடந்தது. குடிநீர், மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ✽ அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த ஆனந்த கிருஷ்ணன் வீடு தாக்கப்பட்டது.

✽ மத்திய அமைச்சராக இருந்த திரு. ப.சிதம்பரம் திருச்சியிலும், காரைக்குடியிலும் வழிமறித்துத் தாக்கப் பட்டார். ✽ முன்னாள் அமைச்சர் ராஜாராம் வீடு தாக்கப்பட்டது. ✽ உயர் நீதிமன்றத்தின் வாசலில் சுப்பிரமணியம் சுவாமியைத் தாக்க முயற்சி நடைபெற்றது. ✽ சட்டப்பேரவை விடுதி வளாகத்தில் பீட்டர் அல்போன்ஸ் தாக்கப்பட்டார். ✽ திண்டிவனம் அருகே ஆளுநர் சென்னாரெட்டி கார் தாக்கப்பட்டது. ✽ அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் சொக்கலிங்கம், மோகனன், ரமேஷ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

✽ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் சிவபுண்ணியம் வீடு தாக்கப்பட்டது. பழனிச்சாமியும் தாக்கப்பட்டார். ✽ நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் மருமகன் மீது கஞ்சா கடத்தியதாக வழக்கு போடப்பட்டது. ✽ எம்.ஜி.ஆர். நினைவு இல்ல நிர்வாகி முத்து மீது கஞ்சா கடத்தியதாக வழக்கு போட்டார்கள். ✽ நமது வழக்கறிஞர் சண்முக சுந்தரம் , அவரது உடலில், 80 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்டுத் தாக்கப்பட்டார். ✽ வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டார்.

✽ இந்தத் தாக்குதல் நிகழ்ச்சிகள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிந்தவை! இவை தவிர, செய்தி வெளியே வராமல் வேறு தாக்குதல்களும் நடந்திருக்கலாமோ - என்னவோ என்று அன்று பொது மக்களிடம் சந்தேகம் நிலவியது - பல்வேறு வதந்திகள் உலவின! அந்த வதந்திகளை யாரும் மறுக்கவும் இல்லை - மறுத்து வழக்கு மன்றம் எதற்கும் போகவும் இல்லை! ✽ இந்த வரிசையிலே தான் தர்மபுரியில் மாணவிகளும் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அம்மையாரின் "அமைதிப் பூங்கா" ஆட்சியில் இந்த அவலங்கள் தொடர்ந்தன - இன்னும் தொடர்கின்றன.