நெஞ்சுக்கு நீதி
அ.தி.மு.க. உறவுபற்றி அன்றே · 364 / 391
3. அ.தி.மு.க. உறவுபற்றி அன்றே சொன்னார், வாஜ்பய்! செ ப்டம்பர் 15, 2000 - பேரறிஞர் அண்ணா அவர்களின் 92வது பிறந்த நாள் விழா! வழக்கம்போல முப்பெரும் விழாவாகக் கொண்டாடினோம். காலையில், வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். அதற்கு முன்பு தொண்டரணிச் செயலாளர்கள் மாஸ்டர் தமிழ்ப்பித்தன், ரோகிணி நாராயணன் தலைமையில் நடைபெற்ற தொண்டரணியினர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டோம்.
தொண்டரணியில் சிறப்பாகப் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் அ.உதயசூரியன், நாகை மாவட்ட அமைப்பாளர் அ. முருகேசன், மத்திய சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் அ.இராஜா ஆகியோருக்கு பதக்கங்களை அணிவித்தேன். சென்னை கலைஞர் அரங்கில், அன்று மாலையில் நடை பெற்ற விருது வழங்கும் விழாவில், பெரியார் விருதினை என்னுடைய இளமைக்கால நண்பன் திருவாரூர் கு.தென்னன் அவர்களுக்கும், அண்ணா விருதினை முகவை மாவட்டக் கழகச் செயலாளர் சுப.
தங்கவேலன் அவர்களுக்கும், கலைஞர் விருதினை பெங்களூர் திராவிடமணி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை ச.அமுதன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பு செய்தேன். வழக்கம்போல சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், மாணவ - மாணவிகளுக்கும் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. 16-9-2000 அன்று, முப்பெரும் விழாவினையொட்டி, இளைஞர் அணியின் சார்பில், தம்பி மு.க. ஸ்டாலின் முன்னின்று நடத்திய திருச்சி கலைக் காவேரி நுண்கலைக் கல்லூரி மாணவ மாணவியரின் "வேர்கள் - விழுதுகள்" என்ற பல்கலை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
17-9-2000 அன்று காலையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 122வது பிறந்த நாளையொட்டி அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினோம். அதே செப்டம்பர் இறுதியில், 27-9-2000 அன்று திருப்பெரும்புதூருக்கு அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில், 525 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட " செயின்ட் கோபைன் " கண்ணாடித் தொழிற்சாலையைத் தொடங்கிவைத்தேன்.
★ ★ ★ மாபெரும் மக்கள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு கன்னியாகுமரி கடற்கரையில் நினைவிடம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. நாகர்கோவிலில் 19-4-1998 அன்று நடைபெற்ற பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்பு விழாவிலே நான் பேசும்போது, அது பற்றி நான் அறிவித்திருந்தேன். காமராஜரின் அஸ்தி, கடலில் கரைப்பதற்கு முன்னதாக காந்தி மண்டபத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.
நினைவிடம் கட்டுவதற்கு அந்த இடத்தைத் தவிர, மற்ற இடம் மன நிறைவளிப்பதாக அமையவில்லை என்பதால், முக்கடல் சங்கமிக்கும் அந்தப் பகுதியிலேயே - 6300 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த நினைவிடத்தைக் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது. நினைவிடம் கட்டத் திட்டமிடப்பட்ட இடம் கடற்கரை ஒழுங்கு முறை விதிகளுக்கு உட்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளது என்பதால், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகச் செயலாளருக்கு 1998ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் (7-8-1998) கடிதம் ஒன்று எழுதப்பட்டு, பாதுகாப்புச் சட்ட விதிகளின்கீழ் தேவையான வகையில் விலக்கு அளிக்க வேண்டுமென்று கழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுப்பிய 7-10-1998 தேதிய பதில் கடிதத்தில், மேலும் சில விவரங்களைக் கோரியிருந்தார்கள். அந்த விவரங்களும் தமிழக அரசின் சார்பில் 21-1-1999 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு நினைவூட்டும் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த அமைச்சகத்திடமிருந்து தமிழக அரசுக்கு 22-2-1999 தேதியிட்டு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், கடற்கரையின் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் திட்டமிட்டுள்ளவாறு நினைவிடம் கட்ட அனுமதிக்க இயலாது என்றும், அந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு, அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு 2-4-1999 அன்று நான் ஒரு கடிதம் எழுதியதோடு, அந்தப் பிரச்சினையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உதவிட வேண்டுமென்றும், நிர்ணயிக்கப்பட்ட இடத்திலேயே காமராஜர் நினைவிடத்தை அமைக்க சிறப்பு நேர்வாகக் கருதி அனுமதி வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். அதற்குப் பதில் வராத காரணத்தால் 19-4-1999 அன்று தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட "பேக்ஸ்" செய்தியில் - குறிப்பிட்ட இடத்திற்கு அருகிலேயே காந்தி மண்டபம் உள்ளது என்றும் - மேலும் பல கட்டிடங்கள் அந்தப் பகுதியிலே கட்டப் பட்டுள்ளன என்றும் - எனவே அந்த இடத்தை கடற்கரை ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பகுதி 2 என்று எடுத்துக் கொண்டு - அங்கேயே காமராஜர் மணி மண்டபம் கட்ட அனுமதி அளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
நமது தொடர் முயற்சியின் விளைவாக 21-4-1999 அன்று மத்திய அரசின் சார்பில், நாம் கேட்ட இடத்திலேயே காமராஜர் மணிமண்டபம் கட்ட அனுமதி அளித்து ஒப்புதல் வழங்கி "பேக்ஸ்" மூலமாகவே தெரிவித்திருந்தார்கள். பேரவை அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், இந்தத் தகவலை பேரவையிலேயே நான் அறிவித்தேன். காமராஜர் மணி மண்டபம் எழுப்பப்பட்டு, 2000ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் அதன் திறப்பு விழாவும் என்னால் நடத்தப்பட்டது.
அந்த விழாவில் பேசிய நண்பர் குமாரதாஸ், "டெல்லியிலே ஆள்வது வாஜ்பய் அல்ல கலைஞர்தான் அங்கே ஆட்சியிலே இருக்கிறார்" என்றார். அந்த விழாவிலே நான் பேசும்போது, அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்ட நேரத்தில், அவரை எதிர்த்து மத்தியாஸ் சுயேச்சையாகப் போட்டியிட்டதையும், அவரை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்ததையும், அப்படிப் பிரச்சாரம் செய்த நானே பெருந் தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் நிறுவியிருப்பதையும் எடுத்துக்காட்டி, "தமிழ்நாட்டு அரசியலிலே நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பண்பாடு, நாகரிகம் இதுதான்!"
என்றும் கூறினேன். மேலும், பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையிலே நடைபெற்ற முக்கிய சம்பவங்களையெல்லாம் அங்கே நான் தொகுத்துக் கூறினேன். ★ ★ ★ அரசியல் துறையில் கட்சி சார்பற்ற முறையில் எப்படி எனக்குப் பல நண்பர்கள் உண்டோ - கலைத் துறையிலேயும் எப்படி பல நண்பர்கள் எனக்கு உண்டோ - அதைப்போலவே தான் பத்திரிகைத் துறையிலேயும் ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும், எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் எனக்குப் பல நண்பர்கள் உண்டு.
குறிப்பாக அவர்கள் என்னை எதிர்த்து எழுதினாலும், ஆதரித்து எழுதினாலும், அவற்றையெல்லாம் கடந்து தவழ்ந்திடும் நட்பினை நான் பெரிதும் மதித்து எப்போதும் நடப்பவன். அவர்களில் பலர் இன்று மறைந்து போயிருக்கலாம். இருந்தாலும், பத்திரிகைத் துறை நண்பர்கள் ஒருசிலரையாவது நான் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் - "இந்து" ராம் , எழுத்தாளர் சாவி , "தினமணி" ஏ.என்.சிவராமன் , "தினத் தந்தி"யின் நிறுவனர் ஆதித்தனார் , பிறகு சிவந்தி ஆதித்தன், ராமச்சந்திர ஆதித்தன் , "தினகரன்" கே.பி.கந்தசாமி - பின்னர் அவரது புதல்வர் கே.பி.கே.
குமரன் , "விடுதலை" சம்மந்தம், கலி பூங்குன்றன் , "விடுதலை" ராதா , "கல்கி" ராஜேந்திரன் , "ஆனந்தவிகடன்' நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் , அதன் பின்னர் அவரது புதல்வர் பாலசுப்பிரமணியன் , "இதயம் பேசுகிறது" மணியன் , "இந்து" பார்த்தசாரதி, ராதாகிருஷ்ணன், "கல்கண்டு" ஆசிரியர் தமிழ்வாணன் , "நவமணி" கல்யாணம் , திருச்சியில் ராமநரசு, கோபால், "எக்ஸ்பிரஸ்" சம்மந்தம் , "முரசொலி" யில் சின்னக் குத்தூசி ,க.திருநாவுக்கரசு, அடியார், கயல் தினகரன், சொர்ணம், சக்திவேலு, சேது, சோலை , "துக்ளக்" சோ, பகவன் தாஸ் , "நக்கீரன்" கோபால், காமராஜ் , "எதிரொலி" ராமதாஸ் , பெங்களூர் "தினச்சுடர்" பா.சு.மணி , கலைஞர் தொலைக் காட்சி ரமேஷ் பிரபா, டாயல், "குமுதம்" எஸ்.ஏ.பி .
அண்ணாமலை, எழுத்தாளர் கோபண்ணா , "தினத்தந்தி" சுகுமார், திருவேங்கிமலை சரவணன் , "புதிய தலைமுறை" குண சேகரன் , டெல்லி பாலாஜி, மாலன் - என்று நீண்ட பட்டியல் எழுதிக் கொண்டே போகலாம். இவர்களில் ஒருவரான பெங்களூர் தினச்சுடர் பா.சு. மணி , சென்னைக்கு வந்தால் என்னைச் சந்திக்காமல் போக மாட்டார். நான் என் மகள் செல்வி வீட்டில் ஒரு சில நாட்கள் கட்டாய ஓய்வெடுக்க பெங்களூருக்கு அழைத்துச் செல்லப் பட்டால், அங்கே ஒவ்வொரு நாளும் என்னைச் சந்தித்து, அளவளாவி மகிழ்ந்திட மணி தவறவே மாட்டார்.
பா.சு.மணி அவர்கள் பத்திரிகை ஆசிரியர் மாத்திரமல்ல - சென்னையிலே மாநிலக் கல்லூரியிலே தமிழ் மொழியிலே பட்ட மேற்படிப்பு படித்தவர். "தினத்தந்தி"யிலே ஆதித்தனாருடைய வழிகாட்டலில் பிழை திருத்துவபராக பத்திரிகைத் தொழிலைத் தொடங்கி, செய்தியாளராக உயர்ந்து, பிறகு பத்திரிகை ஆசிரியராக இன்றளவும் புகழ்க்கொடி நாட்டி வருபவர். அவர் 99ஆம் ஆண்டு மார்ச் திங்களில் என்னை அணுகி, அவர் எழுதிய "செய்தி பிறந்த கதை" என்ற நூலினை நான் வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தி, அதன் பேரில் 2-4-1999 அன்று கலைவாணர் அரங்கத்தில் அந்த நூலினை நான் வெளியிட்டேன்.
முதல் பிரதியை பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகவேல் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கர்நாடக மாநில செய்தித் துறை அமைச்சராக இருந்த எம்.பி. பிரகாஷ் , கர்நாடக மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த வள்ளி நாயகம் , "தினமணி" ஏ.என். சிவராமன் , "மாலை முரசு" ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தன் , "தினமலர்" கிருஷ்ணமூர்த்தி , "கல்கி" ராஜேந்திரன் , "தினகரன்" குமரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் உரையாற்றிய பா.சு.
மணி அவர்கள், அந்த விழாவிற்கு முதல் நாள் விடியற்காலையில் நான் கோட்டைக்குச் சென்றது குறித்தும், புழல் ஏரிக்குச் சென்றது குறித்தும், விடியற்காலை 4 மணி அளவில் கோட்டைக்குச் சென்ற "முதல்வர் கோட்டைச் சாவியையும் அவரே கையில் எடுத்துக் கொண்டு போனாரோ?"
என்று கேட்டார். நான் பேசும்போது, "கோட்டைச் சாவி என்னிடத்திலே இல்லை - அது மக்கள் இடம்தான் இருக்கிறது - அந்த மக்கள் திறந்து விட்டால்தான் கோட்டைக்குள்ளே யாரும் போக முடியும்" என்று கூறினேன். மேலும் அவர் பேசும்போது, பத்திரிகைத் துறையில் சிங்கம் போல பலர் இருக்கும் போது, கொசுபோல் அவர் இருப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டார். அதைப்பற்றியும் நான், "மனிதன் சிங்கத்திற்குக்கூடப் பயப்படுவதில்லை - ஆனால் கொசுவிற்குத்தான் அதிகம் பயப்படுவான்" என்று சிரிப்பினிடையே கூறினேன்.
மணி அவர்களின் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது. ★ ★ ★ அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு மறுநாள், சென்னை பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில், டெல்லியில் நடை பெற்ற விழா ஒன்றிலே கலந்து கொண்டு, அகிம்சை மற்றும் புலால் உண்ணாமைக் கொள்கையில் சீரிய முறையில் தொண்டாற்றிய மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்திக்கு அறக்கட்டளை சார்பில் விருதினை வழங்கி உரையாற்றினேன்.
மராட்டிய மாநில முன்னாள் ஆளுநர் பெரியவர் சி.சுப்ரமணியம் அவர்களும், மகாவீரர் அறக் கட்டளையின் அறங்காவலர் சுகல்சந்த் ஜெயின் அவர்களும் அந்த விழாவிலே கலந்து கொண்டனர். ★ ★ ★ 21-8-1999 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பய் அவர்களும், நானும், டாக்டர் ராமதாஸ், வைகோ, திருநாவுக்கரசர் போன்றவர்களும் கலந்து கொண்டோம். பிரதமர் வாஜ்பாய் அன்றைய தினமே டெல்லி திரும்ப வேண்டியிருந்ததால், அந்தக் கூட்டத்தில் நான் நீண்ட நேரம் பேசவில்லை.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பய் பேசும்போது - ✽ "தி.மு.க. ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கூட்டத்தில் - மேடையிலும், எனக்கு முன்னாலும் ஒரு மகத்தான ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் நான் பார்க்கிறேன். எனக்கு முன்னால் ஒரு மக்கள் கடலைப் பார்க்கிறேன். அந்தக் கடல் மெரினா கடற்கரையிலே மோதும், மாபெரும் கடலைப் போன்று காட்சி அளிக்கிறது. மேடையில் உறுதிப்பாட்டையும், ஒற்றுமையையும் நான் காண்கிறேன். இங்கே தமிழ்நாட்டில், தி.மு.க.
தலைமையில் இயங்குகின்ற, கூட்டணியைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க., தமிழக ராஜீவ் காங்கிரஸ், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். கழகம், பா.ஜ.க. - ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நான் இங்கே பார்க்கிறேன். ✽ "மேடையிலும், மேடைக்கு முன்னாலும் இந்த பிரம்மாண்டமான காட்சிக்கு, காரணமானவர் யார் என்றால் - இது யாரால் சாத்தியம் ஆயிற்று என்றால் - தி.மு.கழகத்தின் உயர்ந்த தலைவர், தமிழகத்தினுடைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால்தான்.
"அ.இ.அ.தி.மு.க. எங்களுடைய அரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நேரத்தில், இதே தமிழ்நாடுதான் எங்களுக்கு உதவிட வந்தது. ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. "உற்ற நேரத்திலே உதவுகிறவன் தான் உண்மையான நண்பன்" என்று. அந்தப் பழமொழியை நான் இன்று நினைவு கூர்கிறேன். ✽ "என்னுடைய நினைவுகள் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கின்றன. மிக முக்கியமான அந்த நேரத்திலே தி.மு.க.
தானாகவே முன் வந்து - எந்தவித நிபந்தனையும் இன்றி - தங்களுடைய ஆதரவை எங்களுக்கு அளித்தது. ஏன் அவர்கள் ஆதரித்தார்கள் - ஏன் தி.மு.க. ஆதரித்தது என்றால், நாட்டினுடைய இதர பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் எப்படி கொதித்துப் போனார்களோ, அதைப் போலவே தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் கொதித்துப் போனார்கள். ஏனென்றால், அ.தி.மு.க. மக்கள் தந்த வாக்குறுதியை நிலை குலைப்பதற்கு முடிவு எடுத்ததுதான். ✽ "உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும், எங்களுடைய ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அ.தி.மு.க.
தலைவர் ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார் என்பது! அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டு சேர்ந்து தேர்தலிலே போட்டியிட்டிருந்தாலும், அவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடைசி விநாடிவரையிலே தங்கள் ஆதரவுக் கடிதத்தைக் கொடுப்பதற்கு மறுத்து வந்தார்கள். அதற்குப் பிறகும், எங்கள் ஆட்சி டெல்லியிலே உருவான பிறகுகூட, அ.தி.மு.க. தலைவர் முதல் நாளிலிருந்து எங்களுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஜெயலலிதா ஏதாவது ஒரு அறிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
அந்த அறிக்கை எங்கள் அரசின், எங்கள் கூட்டணியின் ஒற்றுமையைப் பலகீனப்படுத்தியது. ✽ "சுதந்திர தினம் என்பது இந்த நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான நாள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த நேரம், அவர் எங்கள் அரசுக்குத் தந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மிரட்டினார். என்னுடைய அரசியல் வளர்ச்சியிலே மிகவும் கஷ்டமான காலம் அ.தி.மு.க.வோடு நாங்கள் கூட்டாக
இருந்த நேரம்தான்! ✽ "அந்த அம்மையார் இப்படி செய்வதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டு மக்கள் கூடியிருக்கின்ற இந்த முக்கியமான பொதுக்கூட்டத்தில் அந்த அம்மையாருக்குப் பின்னணியில் இருந்த முக்கியமான இரண்டு காரணங்களைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ✽ "முதலாவதாக, ஜெயலலிதா தன்மீது போடப் பட்டிருக்கிற - பல்வேறு நீதி மன்றங்களிலே தொடரப்பட்டிருக்கிற ஊழல் வழக்குகளையெல்லாம் வாபஸ் பெறவேண்டும் - என்று கூறினார்.
அதைப்போலவே, தன்மீது மத்திய அரசினால் தொடங்கப்பட்டிருக்கிற அந்த புலன் விசாரணையையும் நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். இரண்டாவதாக, அவர் எங்களை வற்புறுத்தியதெல்லாம் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - என்பதுதான்! ஆனால், நாங்கள் இரண்டையும் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டோம். அவர்களுடைய அந்த "பிளாக் மெயிலுக்கு" நாங்கள் உடன்பட முடியாது என்று மறுத்து விட்டோம்."
- இவ்வாறு வாஜ்பய் அவர்கள் அன்று பேசியது என்றைக்கும் பழைய ஏடுகளில் உள்ள மறைக்க முடியாத - யாராலும் மறுக்க முடியாத செய்தியாகும். ★ ★ ★ அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வாஜ்பய் தலைமையில் மத்தியில் பதவிப் பொறுப்பேற்றது. மத்திய அமைச்சரவையில் தி.மு.கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் காபினட் அமைச்சர்களாகவும், ஆ.இராசா , இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
பா.ஜ.க. சார்பில் ரெங்கராஜன் குமாரமங்கலம் , ம.தி.மு.க. சார்பில் மு.கண்ணப்பன் ,செஞ்சி ராமச்சந்திரன் , பா.ம.க. சார்பில் என்.டி. சண்முகம் ,பொன்னுசாமி ஆகியோர் அமைச்சர்களாயினர். அந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி பெருந்தன்மையோடு, "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் - அதற்காகக் கட்சி என்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்" என்று கூறியதோடு, அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
"மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு எட்டு அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன" என்றும் - அதில் "தி.மு.க. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் முழுத் திருப்தி அளிப்பதாக உள்ளன" என்றும் - என்னிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் கூறினேன்.
★ ★ ★ நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற சில நாட்களில், வங்காள விரிகுடாக் கடலில் உருவான பயங்கரப் புயல் ஒன்று ஒரிசா மாநிலத்தைத் தாக்கி, வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 25 இலட்சம் வீடுகள் இடிந்து நொறுங்கின! சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் மடிந்தார்கள்! புயல் சேதத்தை நேரில் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி , ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் , சுரங்க அமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் ஆகியோர் தனி விமானத்தில் ஒரிசா சென்றபோது -புவனேசுவரத்தில் தரை இறங்க முயற்சித்தபோது முடியாமல், மேற்கு வங்கம் சென்று கலைகுண்டா விமானப் படைத் தளத்தில் விமானம் இறக்கப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் அவர்கள் ஒரிசா புறப்பட்டுச் சென்றனர்.
ஒரிசா மாநில புயல் நிவாரண நிதியாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தின் சார்பாக 50 இலட்சம் ரூபாயை, அப்போது ஒரிசா மாநில முதல்வராக இருந்த கிரிதர் கோமாங் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, அவர் ஒரிசா மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். மேலும், ஒரிசா மாநில புயல் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன்.
ஒரிசா புயல் வெள்ள நிவாரணப் பணிக்கு 45 கோடி ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட வேட்டி- சேலைகளை அனுப்பியதோடு, தமிழகத்திலிருந்து மருத்துவக் குழு ஒன்றும் சென்றது. நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வேகன்களை நானே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று அனுப்பி வைத்தேன். ★ ★ ★ 'கல்கி' அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலினை "சி.வி. கார்த்திக் நாராயணன்" அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து - மாக்மில்லன் இந்தியா நிறுவனப் பதிப்பகத்தின் சார்பில் அச்சிடப்பட்டது - அதை நான் 6.11.1999 அன்று கலைவாணர் அரங்கில் வெளியிட்டேன்.
அதன் முதல் பிரதியினை 'கல்கி' ராசேந்திரன் பெற்றுக் கொண்டார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் லலிதா காமேசுவரனும் , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் டாக்டர் சிலம்பொலி செல்லப்பனும் அந்த விழாவிலே கலந்து கொண்டனர். ★ ★ ★ சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த வழக்கறிஞரும், ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொற்பொழிவாளரும், பேரறிஞர் அண்ணா அவர்களின் கல்லூரித் தோழரும், என்னிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தவருமான தியாகி செங்கல்வராயன் அவர்கள் தனது 92வது வயதில், 8-11-1999 அன்று இயற்கை எய்தினார்.
வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தும், இளமைக் காலத்தை சுதந்திரப் போராட்டத்தில் செலவிட்ட செங்கல்வராயன் அவர்கள், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தான் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். மாவட்டக் காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி இருந்தபோது, செயலாளராக இருந்த செங்கல்வராயன் பின்னர் தலைவரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரானார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், சென்னை மாநகர மேயர் (1952), மாநிலங்களவை உறுப்பினர் (1964-1972) ஆகிய பதவிகளில் இருந்தார்.
1939-40இல் தனி நபர் சத்தியாகிரகம் நடைபெற்றபோது சிறைவாசம் அனுபவித்தார். "கவிக்குயில்" சரோஜினி நாயுடு, பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பாராட்டையும், காந்தி அடிகளின் அன்பையும் பெற்ற இவர் தீரர் சத்தியமூர்த்தியையும், பெருந்தலைவர் காமராஜரையும் தனது வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவர் வரத் தவறியதே இல்லை. அவருடைய குடும்பத்தினர் அனைவரும் என்னிடமும், என்னுடைய குடும்பத்தாரிடமும் மிகுந்த அன்போடு பழகக் கூடியவர்கள்.
அவர் மறைந்தபோது, நான் எழுதிய இரங்கல் செய்தியில் - "வாழ்வாங்கு வாழ்ந்த தியாகச் சுடர் - விடுதலைப் போராட்ட தளநாயகர்களில் தலைச் சிறந்தவர் - பதவி எதுவும் வேண்டுமென்று விரும்பிடாத பண்பின் பெட்டகம் - காந்தி அடிகளின் அன்பையும், காமராஜரின் நேசத்தையும் பெற்றதோடு - அறிஞர் அண்ணாவின் கல்லூரித் தோழராகவும் - அதனைக் கடைசிவரையில் மறவாத தூய நண்பராகவும் விளங்கிய மனித நேயப் பேரறிஞர் - என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நேரில் வந்து வாழ்த்துரைத்த அன்பு வள்ளல் - என் குடும்பத்துப் பெரியவராக, பெரும் தலையாக விளங்கிய வித்தகர் - அரசியலில் எவருக்கும் தலைதாழாச் சிங்கமாக உலவியவர் - என் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பெற்ற உத்தமத் தியாகி செங்கல்வராயன் அவர்கள் மறைந்து விட்டாராம் - என்னால் நம்ப முடியவில்லை - தன்மானத் தமிழர்கள் உள்ளம் எல்லாம் நீக்கமற நிறைந்து விட்டார் என்பதே உண்மை!"
என்று குறிப்பிட்டதோடு, என்னை நானே தேற்றிக் கொண்டேன். ★ ★ ★ ஜெயலலிதாவின் மீதான டான்சி வழக்கு 3வது தனி நீதி மன்றத்தில் அப்போது விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த திரு. டி.வி. வெங்கட்ராமன் 11-11-1999 அன்று தனி நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்த போது - ✽ "1991 ஜூன் முதல் 1994ஆம் ஆண்டு மே மாதம் முடிய தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினேன்.
ஜெயா பப்ளிகேஷனுக்கு டான்சி நிலத்தை விற்பதற்கான அரசாணை 20-1-1992 அன்று பிறப்பிக்கப் பட்டது. டான்சி எனாமல் யூனிட்டை விற்பதற்கான ஆணை 18-2-1992 அன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலத்தை விற்பதிலும், வாங்குவதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அரசு சொத்துக்களை முதல்வரோ - அவருடைய நிறுவனங்களோ வாங்குவது பொருத்தமாக இருக்காது என்றும், அந்த அரசாணைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினேன்.
அதில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்பதால், "அந்த இரண்டு ஆணைகளை ரத்து செய்துவிடலாம்" என்றேன். ✽ "ஆனால் நான் சொன்னதை ஜெயலலிதா ஏற்கவில்லை. "மற்ற முதல்வர்களுக்கு இதைப் போலச் சொல்வீர்களா?" - என்று கோபமாகப் பேசினார். நான் அவரது அறையிலிருந்து வெளியேறி விட்டேன்" என்று கூறியது அனைத்து ஏடுகளிலும் அப்போதே இது செய்தியாக வெளிவந்தது.
அந்தக் காலக் கட்டத்தில் தொழில் துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான லத்திகா படால்கர் நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்தபோது, "ஜெயா பப்ளிகேஷன்ஸ் குறிப்பிட்ட விலை மிகவும் குறைவு. அங்கிருந்த கட்டிடத்தையும் ரூ.19.20 லட்சத்துக்கு வாங்குவதற்காக ஜெயா பப்ளிகேஷன்ஸ் விண்ணப்பித்திருந்தது. பொதுப்பணித்துறை இக்கட்டடத்துக்கு நிர்ணயித்திருந்த விலையைவிட இது மிகவும் குறைவு. ஒரு நாள் ஊரகத் தொழில் துறை அமைச்சர் முகமது ஆசிப் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.
"சொத்தை விற்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதியிருப்பதை நீக்க வேண்டும்" - என்று கூறினார். நான் எனது இயலாமையை அவருக்குத் தெரியப்படுத்தினேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்பவர்கள் அமைச்சருக்கு நண்பராகவும், குருவாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டியவர்கள். அந்த உறவில் சிக்கல் ஏற்பட்ட பிறகு, தொடர்ந்து அமைச்சருடன் பணியாற்றுவதில் பலனில்லை என்பதால் விடுப்பில் சென்றேன். 30 நாட்கள் கழித்து நான் பணியில் சேர்ந்த போது என்னைவிட ஆறு ஆண்டுகள் பணியில் இளையவரான பூரணலிங்கம் பணியாற்றிய மீன் வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டேன்.
✽ "விடுப்பில் இருந்தபோது என்னுடைய வீட்டின் முன்னால் ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டார். பத்திரிகையாளர்களை நான் சந்திக்கிறேனா என்பதைக் கண்காணிக்கத்தான் அவர் நியமிக்கப்பட்டார் என்று அறிந்து கொண்டேன்" என்று கூறிய சாட்சியம் ஏடுகளில் எல்லாம் இடம் பெற்றது.
9-10-2000 அன்று மூன்றாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி. அன்பழகன் அளித்த தீர்ப்பில், அரசுக்குச் சொந்தமான டான்சியின் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு வாங்கிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் - சசி எண்டர் பிரைசஸ் நிறுவனத்துக்கு வாங்கிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களிலும் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள்.
இரு வழக்குகளிலும் மொத்தம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், சிறையில் இருக்க வேண்டிய ஆண்டுகள் மூன்று! இருவரும் பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். உயர் நீதி மன்றத்தில் அப்பீல் செய்வதற்கு வசதியாக, நவம்பர் 7ஆம் தேதிவரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்தத் தீர்ப்பிலேதான் நீதிபதி அன்பழகன் அவர்கள், "கிரயப் பத்திரத்தில் உள்ளது தனது கையெழுத்து அல்ல - போலியானது என்று முதல் எதிரியான ஜெயலலிதா கூறியிருப்பது பொய்!
தன்னுடைய பின் யோசனை காரணமாக இவ்வாறு அவர் கூறியிருப்பது விசாரணையில் தெளிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கும், தண்டனைகளுக்கும் உரியவர்தான், பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் வந்ததோடு, மற்றவர் மீதெல்லாம் பொய்ப் புகார்களை சுமத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். ★ ★ ★ இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமிழக மெங்கும் அ.தி.மு.க.வினர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. 10-10-2000 தேதிய "தினமணி" நாளேடு எழுதிய தலையங்கத்தில் - ✽ "ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் ஊழல்கள் சம்பந்தமான வழக்கில் அவர் தண்டனைக்கு உள்ளாகியிருப்பது இது இரண்டாவது தடவை. ஏற்கனவே கொடைக்கானல் "பிளசண்ட் ஸ்டே" ஓட்டலுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக அவருக்குத் தனி நீதி மன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கில் ஜெயலலிதா செய்து கொள்ளக்கூடிய மேல்முறையீட்டு மனு விசாரணையில் - தனி நீதி மன்றத்தின் இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டாலொழிய, ஜெயலலிதா அடுத்த 6 ஆண்டுக் காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
✽ "இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவுக்கு எதிராக மேலும் மூன்று ஊழல் வழக்குகள் தற்பொழுது தனி நீதி மன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன. ஜெயலலிதாவையும், சசிகலாவையும் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் - ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில், 1992ல் டான்சிக்குச் சொந்தமான நிலத்தையும் கட்டிடத்தையும் சட்டத்துக்குப் புறம்பாக மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாகத் தொடரப்பட்ட இவ்வழக்கில் விசாரணையை முடக்குவதற்குப் பலப்பல உத்திகள் கையாளப்பட்டன.
ஊழல் வழக்குகள் அரசியல் நோக்கத்துடன் தொடரப் பட்டவை என்று ஜெயலலிதா சகட்டு மேனியாகக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. பொய் வழக்கு என்றால், நீதி மன்ற விசாரணைப் பீடத்தில் நிற்க முடியுமா? ✽ "எனவே தனி நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஜெயலலிதா அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டு சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும். எனினும், தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போன்ற கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இது எந்த விதத்திலும் முறையாகாது. எனவே தனது கழகத்தவரை நெறிப்படுத்துவதில் ஜெயலலிதா முழு முனைப்புக் காட்டுவது அவசியம்" - என்று எழுதியது; ஆம் - தினமணி! ★ ★ ★ அ.தி.மு.க. தலைவர்களில் ஒருவராக அப்போதிருந்த முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரான க. ராஜாராம், 12-10-2000 அன்று விடுத்த ஓர் அறிக்கையில், ஜெயலலிதா தன் கையெழுத்தையே இல்லை என்று மறுத்ததையும், நீதிபதி அது பொய் என்று தீர்ப்பில் கூறியதையும் எடுத்துக் காட்டி, "தன் கையெழுத்தையே இல்லை என்று மறுத்தவர் பதவியில் இருந்தபோது, கோப்புகளில் போட்ட கையெழுத்துக்களின் நிலை என்ன" என்று கேட்டதோடு - "அ.தி.மு.க.வில் இருந்தே ஜெயலலிதாவை தொண்டர்கள் நீக்கி வைக்க வேண்டும்!"
என்றும் குறிப்பிட்டார்.
