நெஞ்சுக்கு நீதி
ஆருயிர் நண்பர்களை · 363 / 391
2. ஆருயிர் நண்பர்களை இழந்த துயரம்! "1999 ஆம் ஆண்டு - செப்டம்பர் திங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும்" என்று ஜூலை திங்கள் மத்தியில் அறிவிப்புகள் வந்தன. தலைமைத் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை எல்லாம் தொடங்கியது. தேர்தல் அறிவிப்புகள் வந்ததுமே, நாடாளுமன்றத் தேர்தல் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில்- ✽ "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் தனித் தனியாக போட்டியிடப்போகும் இந்தச் சூழ்நிலையில், என்னுடைய ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்குறி அரசியல் வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும், அன்பு ரசிகர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு பொது காரணத்திற்காக தி.மு.க.வும், த.மா.கா.வும் ஒன்று சேர்ந்தது. அவர்கள் ஒன்று சேர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்தக் கூட்டணி தொடர்ந்து இருந்த நிலையில், என்னுடைய ஆதரவும் தொடர்ந்து இருந்தது. தி.மு.க., த.மா.கா. கூட்டணி இல்லாத இன்றைய சூழ்நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் நான் ஆதரவு அளிப்பதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
✽ "கடந்த மூன்றாண்டு காலத்தில், என்மீது அன்பும் பாசமும் வைத்து, நான் சந்தித்த சில சங்கடமான சூழ்நிலைகளில் எனக்காக குரல் கொடுத்த மதிப்பிற்குரிய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையும் - ✽ "என்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் திரு.மூப்பனார் அவர்களையும் நான் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. ✽ "எங்கள் நட்பு அரசியல் ரீதியாக இல்லை என்றாலும், தனிப்பட்ட முறையில், பாசத்துடன் என்றென்றும் தொடரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
24.7.1999 அன்று, கிண்டி ராஜ்பவனத்தில், ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களைச் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்துப் பேசுவது குறித்தும் கலந்துரையாடினேன். அதே நாளில், காஞ்சிபுரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காஞ்சி மாவட்ட முதல் மாநாடு (மாநில சுயாட்சி மாநாடு) நடைபெற்றது.
அந்த மாநாட்டில் நானும், அத்வானி அவர்களும், டாக்டர் ராமதாஸ் அவர்களும், வைகோ ,வெங்கய்யா நாயுடு, இல. கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டோம். ★ ★ ★ இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டும். முறையாக நடைபெற்று வந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டு - அதற்காக டெல்லியில் ஒரு புகழ் பெற்ற தேநீர் விருந்தும் ஏற்பாடு செய்தார் சுப்பிரமணியன் சுவாமி. அந்த விருந்தை ஏற்பாடு செய்து - அதிலே சோனியா காந்தியை ஜெயலலிதா சந்திக்க வைத்து, அதன் காரணமாக மத்தியில் ஆட்சிக் கவிழவும், இந்தியாவில் ஒரு பொதுத் தேர்தல் நடைபெறவும் காரணமாக இருந்த ஜெயலலிதாவிற்கு, 15.7.1999 அன்று சுப்பிரமணியன் சுவாமி ஒரு கடிதம் எழுதி, அதனை ஏடுகளிலும் வெளியிட்டிருந்தார்.
அந்தக் கடித வாசகங்களைப் படித்தால், ஜெயலலிதா எத்தகையவர்-எந்த அளவிற்கு நன்றி உணர்வற்றவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்தக் கடிதத்தில் - ✽ "வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு உங்களைச் சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக உங்கள் வீட்டிலிருந்து இன்று காலை 11.45க்கு தொலைபேசியில் தெரிவித்தார்கள். ஜனதா கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில், புதன்கிழமையே உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்தேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் ஜனதா கட்சிக்கு உள்ள அந்தஸ்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே, நேரம் ஒதுக்குமாறு கேட்டேன். ஆனால் அது நடைபெறாததால், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தங்கள் இஷ்டப்படி செய்திகளை வெளியிட்டுள்ளன. மதுரைத் தொகுதியை ஜனதா கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தால்தான் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்திப்பு பயன் உள்ளதாக இருக்கும். மதுரை தொகுதியை ஒதுக்குவது குறித்து ஏற்கனவே பல முறை உங்களுடன் விவாதித்துள்ளேன்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏதாவது ஒரு வகையில் முடிவு செய்திருக்க வேண்டும். எங்களுக்கு எதிராக நீங்கள் முடிவு செய்திருந்தால் நம் சந்திப்பு, நேரத்தை வீணடிக்கும் வேலையே. நீங்கள் இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டுமானால், இன்று மாலை 6 மணி அளவில் முடிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களிடம் இருந்து சாதகமான பதில் எனக்கு வரவில்லை என்றால், வெள்ளிக் கிழமை நடைபெறுவதாக இருந்த நம் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
அத்துடன் அ.தி.மு.க. - ஜனதா கட்சி உறவும் முடிவுக்கு வருகிறது!" என்று எழுதியிருந்தார். தோழமைக் கட்சியாக இருந்தவர்களைப் புறக்கணிக்கும் பண்பு, ஜெயலலிதாவிற்கு இயல்பாகவே இருந்தது என்பதை மெய்ப்பிக்கும் மற்றொரு உதாரணம் இதுவல்லவா? இந்தக் கடிதத்தை வெளியிட்ட "தினமணி" தொடர்ந்து எழுதும்போது, பா.ஜ.க. ஆட்சிக்கு ஜெயலலிதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதா டெல்லியில் 20 நாட்கள் முகாமிட்டதற்கு சுப்பிரமணியன் சுவாமியே முக்கிய காரணம் என்றும், ஆனால் அவருக்குப் போட்டியிட அந்த அணியிலே இடம் தரப்படவில்லை என்றும், அதுபோலவே தனக்குக் கண்டிப்பாக 'சீட்'கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போயஸ் கார்டன் சென்ற ஐக்கிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தா.பாண்டியனு க்கும் 'சீட்' தரப்படவில்லை - என்றும் எழுதியிருந்தது.
சுப்பிரமணியன் சுவாமி 16.7.1999 அன்று நிருபர்களைச் சந்தித்துக் கூறும்போது, "ஜெயலலிதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்! இன்னும் அவர் மாறவில்லை - மன்னார்குடி மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதா உள்ளார்! ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டாலும், இனி அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, வைகோ போன்றவர்கள் விலகும்போது, நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா கூறினார்.
ஆனால், இப்போது அவரது கூட்டணியில் தொடர்ந்து இருந்த ஒரே கட்சியான ஜனதா கட்சிக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக நாடு முழுவதும் கருதுகின்றனர். டெல்லியில் சோனியா காந்தி - ஜெயலலிதா சந்திக்க, விருந்து ஏற்பாடு செய்யும்படி ஜெயலலிதாதான் கூறினார், நான் ஏற்பாடு செய்யவில்லை. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவிற்கு உதவி செய்தேன். கடந்த 3 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்தேன். எல்லோரும் அவரை விட்டுவிட்டுப் போன போதிலும், நான் மட்டும் இருந்தேன்.
ஆனால் அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்" என்றெல்லாம் கூறினார். இந்த அளவிற்குப் பேட்டி கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி அதற்குப் பிறகாவது படிப்பினை பெற்றாரா என்பதை தமிழகத்தின் பிற்கால சரித்திரம் நமக்குத் தெளிவாக்கியுள்ளது. ★ ★ ★ 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஈடுபட்டிருந்தபோது நடை பெற்ற மூன்று சோகச் சம்பவங்கள் மறக்க முடியாதவை! 27.8.1999 அன்று திருச்சியில் பா.ஜ.க. வேட்பாளர் ரெங்க ராஜன் குமாரமங்கலத்தை ஆதரித்து நடைபெற்ற பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
அந்த மேடையில் என்னுடன் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார் தம்பி பொய்யாமொழி . திருச்சி மாவட்டத்தில் என்னோடு இணைந்து கழகம் வளர்த்த தளகர்த்தர் புரவலர் அன்பில் தர்மலிங்க த்தின் மூத்த மகன்தான் அன்பில் பொய்யாமொழி. என்னுடைய அன்பிற்கும், பாசத்திற்கும் பெரிதும் பாத்திரமானவர். திருச்சி இரண்டாவது தொகுதியில் அவர் கழகச் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு, பெரு வெற்றி பெற்றவர். கழக இளைஞரணியின் இணைச் செயலாளராகவும் தம்பி மு.க.
ஸ்டாலினோடு அரும்பணியாற்றி வந்தவர். 28ஆம் தேதி விடிவதற்குள் திடீர் மாரடைப்பு காரணமாக மறைந்து விட்டார் என்ற செய்தி என்னைப் பெரிதும் அதிர்ச்சியடையச் செய்தது. விடியற்காலை 3.30 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவ மனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது. அவர் மறைந்தபோது 48 வயதுதான். உடனடியாக அவர் இல்லத்திற்குச் சென்றேன். எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொள்ள முடியாத நிலையில், அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முயன்று தோற்றேன்.
திருச்சி நகரமே சோக வடிவாய் உருமாறிற்று. என்னுடைய தேர்தல் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. தேனிப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தம்பி ஸ்டாலின் திருச்சிக்கு வந்து, தன் நண்பனுக்கு இரங்கல் தெரிவித்தார். என் கைப்பட அன்பில் பொய்யாமொழிக்காக எழுதிய இரங்கல் செய்தி இதோ:- ✽ "அன்பில் தர்மலிங்கம் என்னிடம் விட்டுச் சென்ற மகனை இழந்து விட்டேன். ஆம் - என் பிள்ளைகளில் ஒருவரை இழந்து விட்டேன்.
அன்பில் பொய்யாமொழி இளைஞர் அணியின் மாநில இணைச் செயலாளர்! தம்பி ஸ்டாலினுக்கு வலது கரம். எப்போதும் சிரித்த முகம். சிற்றெறும்பு போன்ற சுறுசுறுப்பு. திருச்சியில் இரவு நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் என்னுடன் இருந்த அந்தப் பிள்ளை - கூட்டம் முடிந்த பிறகும் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து மகிழ்ச்சியுடன் அளவளாவிச் சென்ற பிள்ளை - விடியற் காலையில் உயிரோடு இல்லை என்றால், இந்தக் கொடுமையை, நான் திருச்சியில் இருந்தே அனுபவித்ததைவிட வேறு ஒரு துயரம் எனக்கு உண்டோ?
மாநில இளைஞர் அணியின் மாவீரர்களில் தலைச் சிறந்து விளங்கிய பொய்யாமொழி, சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் தன் தந்தை அன்பில் தர்மலிங்கத்தைப் போலவே மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கருதி செயல்பட்டதையெல்லாம் எப்படி என்னால் மறக்க முடியும்? "புத்திர சோகத்தால் புழுப்போலத் துடிக்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் யார்தான் ஆறுதல் சொல்லித் தேற்றமுடியும்? கழக இளைஞர் பட்டாளம் அன்பில் பொய்யா- மொழியின் துடிப்பையும், தூய கொள்கை உறுதியையும் தொடர்ந்து கொண்டிருப்பதே அந்த வீர இளைஞனுக்கு வழங்கும் காணிக்கையாக அமையும்."
- என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். மறைந்த தன் நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பினை தம்பி மு.க.ஸ்டாலின் எடுத்துக் கொண்டு இன்றுவரை பாதுகாத்து வருகிறார். நானும் அன்பிலும் எப்படி நண்பர்களாக இருந்தோமோ, அது போலவே என் மகன் ஸ்டாலினும் அன்பில் மகன் பொய்யா மொழியும் நல்ல நண்பர்களாக விளங்கி, தற்போது அந்தப் பாசமும் பிணைப்பும் மூன்றாவது தலைமுறைக்கும் படர்ந்து - ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யாமொழியின் மகன் மகேசும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
அன்பில் பொய்யாமொழியின் இளவல் அன்பில் பெரியசாமி கழகத் தொண்டினை தொடர்ந்து ஆற்றி வருகிறார். ★ ★ ★ இது போலவே மற்றொரு சோகச் சம்பவம்! இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த அருமை நண்பர் ஏ.கே.ஏ. அப்துஸ் சமத் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலே மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்து மருத்துவமனைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தேன்.
அவருடைய அருமை மகள் பாத்திமா முசாபர் மருத்துவ மனையில் தந்தையுடன் இருந்தார். சில மணி நேரங்களுக்கு மேல் அவர் வாழமாட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவ்வாறே அன்று மாலையில் அவர் இயற்கை அடைந்தார். நானும் அமைச்சர்களும் அவரது இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் அருமை நண்பர் சமத். அவர் ஒருமுறை அண்ணாவிடம், தி.மு.கழகத்திற்கே வந்து விடுவதாகக் கூறியபோது, அண்ணா அவர்கள் வேண்டாமென்றும், அவர் முஸ்லீம் லீக் இயக்கத்திலேயே தொடர்ந்து பணியாற்றுவதே தனக்குப் பெருமை தரும் என்றும் பதிலளித்தார்.
அவர் மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். யூனியன் முஸ்லீம் லீகினுடைய பொன் விழாவைக் கொண்டாட வேண்டுமென்றும், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காயிதே மில்லத் அவர்களுடைய தலைமையிலே உருவான அந்தக் கால கட்டத்தில், இராஜாஜி மண்டபத்திலேதான் அதன் முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றதால், அந்தக் கட்சியின் பொன் விழாவையும் அதே ராஜாஜி மண்டபத்தில் நடத்த வேண்டுமென்றும், அரசின் சார்பாக அதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டுமென்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
காயிதே மில்லத் தலைமையிலே நடைபெற்ற சிறுபான்மை சமுதாயத்தினருக்கான மாபெரும் ஓர் அரசியல் கட்சி, அதனுடைய பொன்விழா என்கிற அளவில் அதனை அங்கேயே நடத்திக் கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன். அதற்குப் பிறகு அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய பிறகு நானும் பேராசிரியரும் அவர் இல்லத்திற்குச் சென்று பார்த்தோம். மற்றொரு சோகச் சம்பவம் - "துக்கம் துணையோடு வரும்" என்பார்களே -அதைப் போலவே, "அரங்கு" என்று அன்பொழுக என்னால் அழைக்கப்பட்ட இராம.அரங் கண்ணல் அவர்கள் தனது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சிமிகு செய்தி அடுத்து என்னை வந்தடைந்தது.
தஞ்சை மாவட்டத்தில் கோமல் என்கிற கிராமத்தில், அரங்கண்ணல் 31-3-1928 அன்று பிறந்தவர். பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு உற்றத் தோழராகத் திகழ்ந்தவர். கழகத்திலே அவரை நான்தான் அறிமுகப்படுத்தினேன். தந்தை பெரியாரின் "குடியரசு" பத்திரிகையிலே பணியாற்றியவர். அண்ணாவின் "திராவிட நாடு" பத்திரிகையிலும் அவர் பணியாற்றினார். அதன் பிறகு "அறப்போர்" என்ற பெயரில் வார இதழை நடத்தினார். 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில், மயிலாப்பூர் தொகுதிச் சட்டப் பேரவை உறுப்பினராக இரண்டு முறையும் - 1971இல் எழும்பூர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான் முதலமைச்சராக இருந்தபோது முதன் முதலாக தமிழக அரசின் சார்பில் குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கிய போது, அரங்கண்ணல் அவர்களைத்தான் அதன் தலைவராக ஆக்கினேன். திறமையாகப் பணியாற்றி, அந்த வாரியத்தின் சார்பில் சென்னையில் ஆயிரக்கணக்கான வீடுகளை எழுப்பிய பெருமை அவருக்கு உண்டு. கலைத்துறையிலும் அரங்கண்ணல் ஈடுபாடு கொண்டு, "பூவா தலையா?"
-"அவள் ஒரு தொடர்கதை" -"பச்சை விளக்கு" -"மரோசரித்திரா" போன்ற சிறந்த படங்களைத் தயாரித்த பெருமையும் அவருக்கு உண்டு. அண்ணா அவர்களின் "தாய் மகளுக்குக் கட்டிய தாலி" திரைப்படத்திற்கு அரங்கண்ணல் உரையாடல் தீட்டினார். கழகத்தின் செயற்குழு - பொதுக் குழு - தணிக்கைக் குழு - போன்றவற்றில் உறுப்பினராக இருந்து, தி.மு.கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கினார். அவர் மறைந்த செய்தி அறிந்ததும், நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்ல - அவருடைய துணைவியாரான ஆண்டாள் அம்மையாருக்கும், அவரது ஐந்து மகன்களுக்கும் ஆறுதல் கூறினேன்.
நான் விடுத்த இரங்கல் செய்தியில்-
✽ "ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக - பள்ளிப் பருவம் முதல் இணைபிரியாத சகோதரராக - இனிய நண்பராக - இலட்சிய மனிதராக - என்னுடன் பழகி என் உள்ளத்தில் தனித்ததோர் இடம் பெற்றிருந்த அரங்கண்ணலை இழந்து விட்டேன். சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய அரும் பணிகளும் - தமிழக அரசின் குடிசைமாற்று வாரியத் தலைவராக அவர் செய்து காட்டிய சாதனைகளும் - விடுதலை, திராவிடநாடு, காஞ்சி, அறப்போர் ஆகிய ஏடுகளில் அவர் வாரி வழங்கிய எழுத்தோவியங்களும் - அனைத்துக்கும் மேலாக என் குடும்பத்தில் ஒருவராக இருந்து அவர் அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த அன்பும் மறக்கக் கூடியவைகளா?
அவரை இழந்து தவிக்கும் என்னைப் போலவே துடித்திடும் என் சகோதரர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கண்ணீர்ததும்பிட ஆறுதல் கூறுகிறேன். என்றென்றும் என் அருமைச் சகோதரரின் புகழும் பெயரும் நிலைத்திருக்கும்" என்று எழுதினேன்.
★ ★ ★ 1999ஆம் ஆண்டில், செப்டம்பர் திங்கள் 2ஆம் தேதியன்று வேலூர் மாவட்டத்தில் கழக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன், பெருமுயற்சி எடுத்து சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைத்த மோர்தானா அணையின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும், ராணிப் பேட்டையில் கழகச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆர்.காந்தியின் அலுவலகத்தைத் திறந்து வைக்கவும், திருமுருக கிருபானந்த வாரியார் மணி மண்டபத்தைத் திறந்து வைக்கவும் ஒருநாள் பயணமாகச் சென்றிருந்தேன். வாரியார் மணி மண்டபத்தை நான் திறந்து வைப்பதைப் பற்றி அப்போது ஒருசில வார ஏடுகள் தங்களுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தி எழுதியிருந்தன.
எனவே அந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்து, நான் உரையினைத் தொடங்கும்போது, இவ்வாறு ஆரம்பித்தேன் :- ✽ "இங்கே மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பேட்டில் குருவை விட உயர்ந்த பரம் பொருள் இல்லை; குருவைவிட உயர்ந்த தத்துவம் இல்லை; குரு வழங்கும் ஞானத்திற்கும் அதிகமான சுகமில்லை; குருபக்தியை விடச் சிறந்த பூசனைகள் இல்லை என நமது வேத மறைகள் எடுத்தோதுகின்றன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
✽ "எனக்குக் குருதந்தை பெரியார். அந்தக் குருவை விட உயர்ந்த பரம் பொருள் இல்லை என்கிற நினைவோடு இந்த மேடையில் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அந்தப் பெரியாரும், அந்தப் பெரியாரின் தளபதியாக விளங்கிய எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களும் பாராட்டிய பெரியவர் தான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். எத்தனையோ கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும்கூட, ஒரு தமிழர் - சிறந்த தமிழர் - திறமையான தமிழர் - தமிழை வாழ வைக்கின்ற எண்ணத்தோடு தமிழகம் எங்கும் உலா வந்த தமிழர் தமிழக மெங்கும் என்று மாத்திரம் சொல்ல முடியாது, தரணி எங்கும் உலா வந்த தமிழர் என்ற முறையில் அவரைத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நாங்களும் போற்றிப் பாராட்டியிருக்கிறோம்" என்று தொடங்கினேன்.
அந்த விழாவில் வாரியார் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் உரை பற்றியும், கழக ஆட்சியில் அவர் காட்டிய பற்று குறித்தும் விரிவாகப் பேசினேன். ★ ★ ★ வேலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பிய நான், செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் ராமதாஸ் இல்ல மணவிழாவிலும், அன்று மாலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடை பெற்ற "டிட்டோ ஜாக்" ஆசிரியர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டேன்.
5ஆம் தேதியன்று ஆசிரியர்கள் தின விழாவில் கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரிலான விருதுகளை வழங்கி உரையாற்றினேன். அதற்கு முன்பு அந்த விருதுகளுக்குப் பெயர் "நல்லாசிரியர் விருது" என்றிருந்தது. கழக ஆட்சியில்தான், நான் முதல் அமைச்சராக இருந்தபோது "எல்லா ஆசிரியர்களும் நல்லாசிரியர்கள்தானே! அதிலே வேறுபாடு ஏன்?"
என்பதற்காக அந்த விருதின் பெயரை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றி வழங்கிடச் செய்தேன். அடுத்த நாளான செப்டம்பர் 6ந்தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர், முன்னாள் அ.தி.மு.க. எம்.பி., என்.ராஜேந்திரன் , முன்னாள் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆறுமுக நாயனார் ஆகியோர் தலைமையில் தி.மு.கழகத்தில் இணைந்தார்கள். ★ ★ ★ 8-9-2000 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர்.
பல்கலைக் கழகத்தில் ஒரு கட்டிடத் திறப்பு விழா. அந்த விழாவிலே நான் பேசும்போது - ✽ "அ.தி.மு.க. ஆட்சியிலே மருத்துவப் பல்கலைக் கழகம் அறிவிக்கப்பட்டது என்றாலும், அது தி.மு.கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது என்றும், அந்தப் பல்கலைக் கழகத்தினை டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரிலேயே அமைக்க வேண்டுமென்று உறுதி பூண்டு, அந்தப் பெயரிலேயே பல்கலைக் கழகத்தைத் தொடங்கி, இந்தியக் குடியரசுத் தலைவரை அழைத்து தொடக்க விழா நடத்தினேன் என்றும் குறிப்பிட்டேன்.
ஏன் இதைக் குறிப்பிட்டேன் என்றால், 'முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் ஆயிற்றே - அதை நாம் தொடங்க வேண்டுமா? தொடங்கினாலும் பெயரை அப்படியே வைக்க வேண்டுமா' என்றெல்லாம் "அற்ப புத்தி"யோடு கழகம் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு ஓர் உதாரணம் தான் இது. ★ ★ ★ அதற்கடுத்த நாளான செப்டம்பர் 9ஆம் தேதியன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பவள விழாவிலே கலந்து கொண்டு, "சமுதாய மக்களுடைய நன்மை பெருகவேண்டும் என்பதற்காகப் பாடுபடும் தொண்டரே!
தோழரே! தூயவரே! உங்களை வாழ்த்துகிறேன். பெரியாரின் பேரப் பிள்ளையே! அண்ணாவின் அருமைத் தம்பியே! என்னுடைய ஆருயிர்ச் சகோதரரே! உங்களை வாழ்த்துகிறேன். வாழ்க, வாழ்க பல்லாண்டு!" என்று வாழ்த்தினேன்.
