உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இயற்கையின் துணையை நம்பி!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இயற்கையின் துணையை நம்பி! · 391 / 391

30. இயற்கையின் துணையை நம்பி! நா ன் பல முறை சிறை வாசம் அனுபவித்த கால கட்டங்களில், தவறாமல் கையில் எடுத்துச் செல்லும் புத்தகங்களில் ஒன்று மாக்சிம் கார்க்கியின் "தாய்" - எந்தவொரு வார இதழ், நாளிதழ் சிறப்புப் பேட்டியின்போதும், எனக்குப் பிடித்த வெளிநாட்டுப் புதினம் எது என்று கேட்டால், நான் அதற்குச் சொல்லும் ஒரே பதில், மாக்சிம் கார்க்கியின் "தாய்" என்ற புதினம் - என்பதுதான். கார்க்கியின் "தாய்" என்னும் புதினத்தை ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகச் சிறப்புற மொழி பெயர்த்த நண்பர் ரகுநாதன் அவர்கள், அவரது முன்னுரையிலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"தாய்" புதினம் வெளியானதைக் கண்ட ரஷ்யாவின் ஜார் அரசாங்கம் ஆத்திரம் தாங்காமல், கார்க்கியின்மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்தது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கான அரசாங்கத் தஸ்தாவேஜ்கள் எவற்றிலும் கார்க்கியை ஓர் எழுத்தாளன் என்று குறிப்பிடக்கூட ஜார் அரசாங்கம் விரும்பவில்லை. கார்க்கியின் இயற்பெயரான "அலெக்ஸி மாக்ஸி மோவிச் பெஷ் கோவ்" என்பதை மட்டும் குறிப்பிட்டு, அதன் அருகில், "ஒரு கொல்லுலைத் தொழிலாளி" என்றும் குறிப்பிட்டு, கார்க்கியின் இலக்கியத் திறமையைத் திரையிட்டு மறைக்க எண்ணியது, ஜார் அரசாங்கம்.

ஆனால் கார்க்கியோ, ஜார் அரசாங்கத்தின் காவல் நாய்களின் கையிலே சிக்கவே இல்லை. காப்ரித் தீவு என்ற இடத்தில் பத்திரமாக வாழ்ந்து வந்தார். பின்னர் கார்க்கி ரஷ்யாவுக்குத் திரும்பி வந்த காலத்தில், ரஷ்ய மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்துக் கௌரவித்தார்கள். கார்க்கியின் இலக்கியத்தில் பாட்டாளி மக்கள் மனிதர்களாக உலவுகிறார்கள் - வீரர்களாகத் திரிகிறார்கள். தமது வாழ்க்கைச் சூழ்நிலையிலிருந்தே தவிர்க்க முடியாதவாறு பொங்கியெழும் தொழிலாளி வர்க்கத்தின் தர்மாவேசத் தாகத்தைச் சித்தரித்தார், கார்க்கி.

"நீறு பூத்த நெருப்பாகக் கிடக்கும் அவர்களது போராட்ட சக்தி, எப்படி வர்க்க உணர்ச்சி பெற்று - கனிந்து - சிவந்து - வான் முட்ட ஓங்கும் செந்தழற் பிழம்பாக வளர்கிறது என்பதைச் சித்தரித்தார் கார்க்கி. அடிமைத்தனத்தின் நுகத்தடியில் கழுத்தைக் கொடுத்துத் தடிப்பேறிய மக்களின் மனிதத் தன்மை, எப்படி அந்தத் தளையைத் தகர்த்து விடுபட முடியும் - எப்படி விடுபடுகிறது என்ற சூட்சுமத்தை விளக்கினார், கார்க்கி."

- நண்பர் ரகுநாதன் எழுதிய இந்த முன்னுரையில் குறிப்பிட்டதைப்போலவே, என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் கார்க்கி. சோவியத் நாட்டில் கார்க்கி பிறந்த இடத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் பிறந்த சிறிய இல்லம் இன்று மகத்தான தேசீயச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. மாஸ்கோ நகரத்து மாபெரும் பூங்கா, கார்க்கியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இலட்சிய வெறியுடன் போராடி, சிறைக்கோட்டம் பல முறை சென்று, இலக்கியச் சிற்பியாகவும் விளங்கிய அந்த மாமேதைக்கு என்னாலியன்ற நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புவது சிறப்பாக இருக்கு மென்று, 2003ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் எண்ணி, மாக்சிம் கார்க்கியின் மகத்தான படைப்பான "தாய்" எனும் புரட்சிப் புதினத்தைக் "கார்க்கியின் தாய் கார்க்கி பிறந்த கிராமத்து வீடு காவியம்" என்ற தலைப்பில், கவிதை நடைத் தொடராக "குங்குமம்" கிழமை இதழிலே 2003ஆம் ஆண்டு, மார்ச் திங்களில் தொடங்கி எழுதினேன்.

அதைப்பற்றி முரசொலியில் அறிவிப்பினை எழுதியபோது - "எழுத்து வடிவில் பூத்த புரட்சிப் பூ ஒன்று- என் நெஞ்சில் எப்போதும் மணம் வீசும் பூ! மாக்சிம் கார்க்கி எனும் மாபெரும் எழுத்தாளன் - மன்பதைக்குத் தந்திட்ட சிகப்புப்பூ! செம்பூ! அன்னை என்றும், தாய் என்றும் அழைக்கப்படும் அற்புதப் பூ! பல மொழிகளில் மணம் பரப்பும் அப்பூவை - கலை வண்ணமுடன் கவிதை நடையில் வழங்குகின்றேன்" - என்று எழுதியிருந்தேன். அவ்வாறே "தாய்க் காவியம்" தொடர்ந்து எழுதப்பட்டு, புத்தகமாகவும் வெளிவந்தது.

★ ★ ★ சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அரசைப் பற்றியும், அ.தி.மு.க.வின் செயல்பாடுகளைப்பற்றியும் தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு விமர்சனம் செய்தது என்று எழுதி முடிக்கின்றபோது, நீதி மன்றம் தெரிவித்த கருத்துபற்றித் தொடர்ந்து எழுதுவதாகச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். 6-3-2003 அன்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. பி. சுபாஷண் ரெட்டி அவர்கள், "நமது நீதிமன்றங்களுக்குத் தேவையான நிதி மற்றும் ஊழியர்களைத் தமிழக அரசு நியமிக்காவிட்டால், நீதிமன்றங்களை மூடுவோம்" என்றே அ.தி.மு.க.

அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். "இந்நிலை நீடித்தால், தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தக் கோரி, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய நேரிடும்" என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றங்களுக்குக் கூடுதல் ஊழியர்கள் நியமிக்க நிதி கோரி, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனுப்பிய கடிதத்தைத் தமிழக அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி இவ்வாறு கடுங்கோபத்துடன் எச்சரித்தார்.

மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களுக்குக் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் - கீழ்க் கோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் உள்பட பணியாளர்களை நியமிக்க வேண்டும் - என்று 3-4-2002இல் தமிழக அரசுக்குப் பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதினார். "நிதி நெருக் கடியில் இருப்பதால், கூடுதல் நிதியை ஒதுக்க முடியாது - மேலும் 29-11-2001 அன்று பிறப்பித்த அரசாணையின்படி அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே கூடுதல் பணியிடங்களை அனுமதிக்க முடியும்.

அதனால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடியாது" என்று தமிழக அரசு பதிலளித்தது. அதைத் தொடர்ந்து, பதிவாளர் ஜெனரல் அனுப்பிய கடிதத்தை ரிட் மனுவாக எடுத்துக் கொண்டது உயர் நீதிமன்றம். அதன்மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சுபாஷண் ரெட்டி, நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அரசு வழக்கறிஞரிடம், "நாங்கள் எப்படிச் செயல்படுவது என்று கூறுங்கள்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், ஊழியர்களை நியமனம் செய்யத் தடை உள்ளதாகக் கூறுகிறீர்கள். நாங்கள் நீதிமன்றத்தை மூடி விடுகிறோம். மாநில அரசின் நிதி நிலைமை சரி இல்லாததால்தான் நீதிமன்றத்தை மூடுவதாகக் கூறுவோம். மேலும், தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துமாறு அரசியலமைப்புச் சட்ட அதிகார அமைப்புகளான குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்குப் பரிந்துரை செய்வோம்.

அவ்வாறு நீதிமன்றங்களை மூடிவிட்டால், உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் - எங்களுக்கும் ஓய்வு கிடைக்கும். இது போன்றவற்றால் மிகவும் சோர்ந்து விட்டோம். மூடிவிடுவது அனைவருக்கும் .நல்லதுதானே? "அரசு கஜானா என்பது அரசாங்கத்துக்கு மட்டுமே என்று இந்த அரசாங்கம் நினைக்கிறது. அதுதான் பிரச்சினையே. நீதிமன்றங்களுக்கு நிதி ஒதுக்குவதை தர்மம் செய்வதாகக் கருதிவிடக்கூடாது. உங்களுடைய அரசியலமைப்புச் சட்டக் கடமையையே செய்கிறீர்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டாக இங்கு தலைமை நீதிபதியாக உள்ளேன். நான் பார்த்தவரை அரசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த அரசாங்கம் உணரவில்லை. அரசின் ஓர் அங்கமே அரசாங்கம். அரசு கஜானாவுக்கு நீங்கள்தான் அனைத்து வகையிலும் பொறுப்பு என்று நினைக்கிறீர்களா?"

என்றார், நீதிபதி இதைவிட ஓர் அரசுக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சான்றிதழ் தந்ததாக வரலாறே கிடையாது. அ.தி.மு.க. அரசு ஒன்றுக்குத்தான் இப்படிப்பட்ட பாராட்டு தேர்தல் ஆணையத்திடமிருந்தும், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடமிருந்தும் கிடைத்தது என்றால், அது மிகையல்ல. அரசு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்த போதிலும், தனிப்பட்ட முறையில் - அதாவது அரசுக்குச் சொந்தமான "டான்சி" நிலத்தை முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த ஜெயலலிதா வாங்கியது பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றம்வரை நடைபெற்று, அதிலே வழங்கப்பட்ட தீர்ப்புபற்றியெல்லாம் "நெஞ்சுக்கு நீதி"யில் அடுத்து தொடர்ந்து எழுதுகிறேன்.

★ ★ ★ ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனையாக, 2003ஆம் ஆண்டு, மார்ச் திங்கள், 15-3-2003 அன்று, தமிழக அரசின் மின்வாரியம் செய்த பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வுகளை அறிவித்தது. வீடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைப் பொறுத்தவரை 50 யூனிட்டுகள் வரை 85 காசுகள் என்றிருந்ததை 110 காசுகள் என்றும் 51 முதல் 100 யூனிட்டுகள்வரை 100 காசுகள் என்றிருந்ததை 130 காசுகள் என்றும் - 101 முதல் 200 யூனிட்டுகள்வரை 200 காசுகள் என்பதை 260 காசுகள் என்றும் - 201 முதல் 600 யூனிட்டுகள் வரை 300 காசுகள் என்றிருந்ததை 350 காசுகள் என்றும் - 601 முதல் 1000 யூனிட்டுகள் வரை 400 காசுகள் என்பதை 475 காசுகள் என்றும் - 1001 யூனிட்டுகளுக்குமேல் 450 காசுகள் என்பதை 475 காசுகள் என்றும் - மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

குடிசை வீடுகளுக்கு அதுவரை மின் கட்டணம் கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில், மீட்டர் பொருத்தப்பட்ட குடிசைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் வீதமும் - மீட்டர் பொருத்தப்படாத குடிசைகளுக்கு மாதக் கட்டணமாக பத்து ரூபாய் மின் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதைப்போலவே கல்வி நிலையங்கள், தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் மின் கட்டணங்கள் அதிகம் உயர்த்தப்பட்டதோடு, விவசாயத்திற்கு தி.மு.க.

ஆட்சியில் இலவச மின்சாரம் என்றிருந்ததையும் ரத்து செய்தார்கள். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கு, விவசாய சங்கங்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தன. மின் கட்டண உயர்வைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கழக விவசாய அணிச்செயலாளர் என்ற முறையில் கே.பி.இராமலிங்கமும் கண்டன அறிக்கைகளை விடுத்தனர். ஏனைய எதிர்க்கட்சிகள் சார்பில் சோ.பாலகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ்.

இளங்கோவன், டாக்டர் ராமதாஸ், என்.வரதராசன், ஆர். நல்ல கண்ணு, டாக்டர் கிருஷ்ணசாமி, எல்.கணேசன் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள். இலவச மின்சாரம் ரத்தானதைக் கண்டித்து, தமிழகத்தில் மூன்று கட்டங்களாகப் போராட்டம் நடத்துவதென்றும் - அதாவது முதலில் கண்டனப் பொதுக்கூட்டம் - அடுத்துப் பேரணி - அதற்கடுத்து முற்றுகைப் போராட்டம் - என்ற முறையில் நடத்துவதென்றும் அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

21-3-2003 அன்று பேரவையில் நமது பேராசிரியர் அவர்கள் இதுபற்றிக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. அதற்கடுத்த நாளான 22ஆம் தேதியன்று, திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நான், மின்கட்டண உயர்வுகளைப்பற்றி விரிவாகப் பேசியதோடு, "விவசாயிகள் கொதித்தெழுந்தால் - ஏர் பிடித்தவன் போர் முனைக்கு வந்தால் - அ.தி.மு.க.

ஆட்சிதாங்காது" என்றும் - "ஆட்சியினர் உடனே திருந்த வேண்டும் - இல்லாவிடில் தமிழ் மக்களே திருத்துவார்கள்!" என்றும் பேசினேன். இலவச மின்சாரத்தை ரத்து செய்த தமிழக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகர்களில் 23-4-2003 அன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறே 23ஆம் தேதி அன்று தமிழகத்தில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

★ ★ ★ அ.தி.மு.க. ஆட்சியில் 2003ஆம் ஆண்டு பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அவர்களின் முக்கியமான கோரிக்கை, தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது - என்பதுதான். 23-4-2003 முதல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக மாணவர்களுடன் அரசுத் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். 25-4-2003 அன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தின் போதே, மாணவர்கள் மருத்துவமனை முன்பாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவைத் தொடங்கி, பொதுமக்களுக்கு சிகிச்சையும் அளித்தார்கள். ரத்த தானம் செய்தார்கள். ஏப்ரல் 29 முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தனர்.

போராட்டத்தை அடக்கும் நோக்கத்துடன் அரசு, கல்லூரி விடுதியை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. அதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, நீதிபதி விடுதியை மூட இடைக்காலத் தடை விதித்ததோடு, "மாணவர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" - என்றார். மாணவர்களும் போராட்டத்தைக் கைவிட்டுக் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.

★ ★ ★ 10-5-2003 அன்று அரசு டாக்டர்கள் முக்கிய அறுவை சிகிச்சைகள் தவிர, அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணித்தனர். அதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாயினர். போராட்டத்தில் ஈடுபடும் அரசு டாக்டர்கள்மீது "எஸ்மா சட்டம் பாயும்" என்று அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், டாக்டர்கள் அதற்காகப் பயப்படவில்லை. மருத்துவ மாணவர்களுடன் இணைந்து அவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திவிட்டார்கள். அதன் அடுத்த கட்டமாக 14-5-2003 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். அதனால் அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை. "அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ஆஸ்பத்திரிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை" என்று அ.தி.மு.க.

அமைச்சர் அறிவித்தார். அரசு தொடர்ந்து கௌரவப் பிரச்சினை பார்த்துக் கொண்டு, பிடிவாதமாக மிரட்டிக் கொண்டிருந்த காரணத்தால், 12-5-2003 அன்று விபத்தில் காயமடைந்த இளைய ராஜா என்ற ஒருவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாத காரணத்தினால், அவர் இறக்க நேரிட்டது. அதைப்போலவே, சென்னையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் நித்யா என்ற சிறுமி, முறையான டாக்டர்களின் சிகிச்சை இல்லாத காரணத்தினால் இறக்க நேரிட்டது.

சேலம் மருத்துவமனையில் விமலா என்ற பெண்மணி அவசர சிகிச்சைக்காக வந்தபோது, டாக்டர்கள் இல்லாததால் உயிரிழக்க நேரிட்டது. திருச்சியில் கர்ப்பவதி மேகலா என்பவரும் அவரது பிறந்த குழந்தையும் முறையான டாக்டர்கள் சிகிச்சை இல்லாத காரணத்தினால் இறக்க நேரிட்டது. டாக்டர்கள் ஒருநாள் அடையாள

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தால், மருத்துவமனைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் எல்லாம் செய்யப்படாமல் தடுக்கப்பட்ட நிலையில், அரசு டாக்டர்களின் சங்கப் பிரதிநிதிகள் நான்கைந்து பேரை அரசு அவசர அவசரமாக மாறுதல் செய்து, ஆணை பிறப்பித்தது. இது அவர்களின் போராட்டத்தைத் தூண்டிவிடுவது போலாயிற்று. அ.தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கால், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 15-5-2003 அன்றும் உண்ணாவிரதம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16-5-2003 அன்று மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் போது, கோரிக்கைகள் எதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று அரசு மறுத்துவிட்டக் காரணத்தால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து, பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்தனர். அரசு 5000 மருத்துவக் கல்லூரி மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. இவர்களில் 1200 பேர் இறுதித் தேர்வு எழுதுவோராகும்.

★ ★ ★ மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்கெல்லாம் ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலோடு மருத்துவ மாணவர்கள் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்போது அண்ணா அவர்களே மாணவர்களைச் சந்தித்துப் பேச, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றார். பேசிக் கொண்டிருந்தபோது, களைப்புற்ற அண்ணா அவர்கள் சிறிது தண்ணீர் கேட்டார்.

ஒரு மாணவர் குவளையில் தண்ணீர் கொண்டு வந்தபோது, இன்னொரு மாணவர் அதைத் தட்டி விட்டுக் கீழே கொட்டிவிட்டார். அதற்காக முதல் அமைச்சர் அண்ணா வெகுண்டெழவில்லை. அதைக் கண்டு கொள்ளாமலே பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடத்தினார். அந்த அணுகு முறைக்கும் இன்றுள்ள ஆட்சியாளர்களின் தவறான அணுகு முறைக்கும் எத்தனையோ காத தூரம்?"

என்று ஒப்பிட்டுக் காட்டினேன். ★ ★ ★ அது மாத்திரமல்ல - மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வைத்துள்ள இதே கோரிக்கைகளை முன்வைத்து, தி.மு.கழக ஆட்சி நடைபெற்றபோது, 2000ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சிகளின் அறிவுரைப் படி, மாணவர்களை அழைத்துப் பேசி, "தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்க அனு மதிக்கமாட்டோம் என்பதுதான் கழக அரசின் கொள்கை" என்று கூறி, ஒரே நாளில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, மாணவர்களும் நன்றி கூறிச் சென்றார்கள்.

அ.தி.மு.க. அரசும் அதே முறையைப் பின்பற்ற வேண்டுமென்று நான் வலியுறுத்தினேன். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைப் போலவேதான் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போராட்டமும் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றது. அதை அ.தி.மு.க. அரசு எவ்வாறு கையாண்டது என்பதைப் பற்றியும், நீதிமன்றங்கள் வரை அந்தப் பிரச்சினை சென்றது பற்றியும் அடுத்த பாகத்தில் விரிவாக எழுதுகிறேன். ★ ★ ★ கழக அமைப்புகளுக்கான பன்னிரண்டாவது தேர்தல் தமிழகம் எங்கும் நடைபெற்று, அண்ணா அறிவாலயத்தில் புதிய பொதுக் குழு 2-6-2003 அன்று கூடியது.

12வது தேர்தலில் பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், மாவட்டமென தமிழகமெங்கும் உள்ள 65 ஆயிரம் கிளை அமைப்புகளிலும் பணியாற்றுவதற்கான கிளைக் கழகத் தேர்தல் முடிவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்களாக 30 பேர் தேர்வு பெற்றனர். மாவட்டக் கழக நிர்வாகிகளாக 180 பேரும் - ஒன்றியக் கழகச் செயலாளர்களாக 393 பேரும் - நகரக் கழகச் செயலாளர்களாகவும், பகுதிக் கழகச் செயலாளர்களாகவும் 159 பேரும் - தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக 129 பேரும் - பொதுக் குழு உறுப்பினர்களாக 298 பேரும் - ஆக மொத்தம் 1,186 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தத் தேர்தலின் இறுதிக் கட்டமாக கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் - பதவிகளுக்குமான தேர்தல் 2-6-2003 அன்று பொதுக் குழுவிலே நடைபெற்றது. தேர்தலுக்கு ஆணையராக இருந்து தேர்தலை நடத்தித் தருமாறு கழகத்தின் முன்னணித் தலைவரும், மூத்த மாவட்டச் செயலாளருமான கோ.சி. மணி அவர்களைத் தலைமைக் கழகத்தின் சார்பில் எஸ்.ஏ.எம். உசேன் முன்மொழிந்தார். தலைமை நிலையச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழி மொழிந்தார்.

கோ.சி. மணி ஆணையராகப் பொறுப்பேற்று, தேர்தலை நடத்தினார். கழகத் தலைவராக நானும், பொதுச் செயலாளராக பேராசிரியரும், பொருளாளராக ஆர்க்காடு வீராசாமியும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தளபதி மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ., எஸ்.பி. சற்குணபாண்டியன், பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏ. ஆகியோர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் தம்பி முரசொலி மாறன் உள்ளிட்ட 13 பேர் உயர் மட்டச் செயல் திட்டக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தலைமைக் கழகத்தின் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினர்களாக ஏ.ஆர்.வி.காசிநாதன், குழந்தை தமிழரசன், பெ.வீ. கல்யாணசுந்தரம், பி.என். சுப்பிரமணியம் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக தம்பி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதால், அன்றைய தினம் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், "அடுத்த தலைமை அவர் தான் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதா?"

என்று கேட்டபோது - "அவரை மாத்திரமல்ல - அவரைப் போன்ற இளைஞர்கள் அனைவரையுமே அடையாளம் காட்டுகிறோம்" என்று நான் சொன்னேன். அதற்குள் பொதுச் செயலாளர் குறுக்கிட்டு, "இந்தக் கேள்விக்கு நான் பதில் கூறுகிறேன். கலைஞரின் வாரிசு என்பதற்காக இந்த நியமனம் அல்ல. தி.மு. கழகம் வாழையடி வாழையாக, ஆல மரத்தின் விழுதாக வளர்கிற போது, ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் வாரிசுகள் உருவாவார்கள். கலைஞருக்கு மட்டுமல்ல. பெரியாருக்கு வாரிசாக அண்ணா உருவானார் - அண்ணாவிற்கு வாரிசாக கலைஞர் உருவானார்.

அதைப்போல ஒரு இயக்கத்தின் வளர்ச்சியில் ஸ்டாலின் எல்லோரும் மதிக்கின்ற - வரவேற்கின்ற இடத்தைப் பெற்றிருக்கிறார். கலைஞருக்கு அடுத்தபடியாக மக்களிடம் தொடர்பு கொண்ட ஒருவராக இருப்பதால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ தனிப்பட்ட முறையிலோ, உறவு அடிப்படையிலோ செய்யப்பட்டதல்ல. வாரிசு என்ற அடிப்படையல்ல. கலைஞரின் வாரிசு என்று யார் வேண்டுமென்றாலும் கருதிக் கொள்ளலாம் - துரைமுருகன் கலைஞருக்கு நான் வாரிசு என்று சொல்லலாம் - டி.ஆர்.

பாலு சொல்லலாம் கலைஞருக்கு மகனாக ஸ்டாலின் பிறந்தது அவரது குற்றமல்ல" என்று பதிலளித்தார். பேராசிரியர் அவர்கள் அப்போது அறிவித்தவாறும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஸ்டாலின் ஆற்றிய பணிகளின் காரணமாகவும்தான் அவர் துணைப் பொதுச் செயலாளர் என்ற நிலையிலிருந்து பொருளாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். அதைப் பற்றிய விவரங்கள் "நெஞ்சுக்கு நீதி"யின் ஏழாவது பாகத்தில் விரிவாக வெளிவரும். ★ ★ ★ 13-6-2003 தேதிய "தி டெலகிராப்" ஆங்கில நாளேட்டிற்காக அதன் செய்தியாளர் எம்.ஆர்.

வெங்கடேஷ் என்னிடம் ஒரு நீண்ட பேட்டியைக் கேட்டு வெளியிட்டிருந்தார். அவருடைய முதல் கேள்வியே, "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா?" என்பதுதான். அதற்கு, "எங்கே கதவு திறந்திருக்கிறது என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அதேபோல எங்கள் கதவைத் தட்டுகிறவர்களையும் அலட்சியப்படுத்தத் தயாராக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது நாட்டு நிலை என்ன - எப்படி இருக்கும் என்ற அடிப்படையிலேதான் தி.மு.க.

தன் முடிவுகளை எடுக்கும்" என்று கூறினேன். "கொள்கை ரீதியாக இன்றைய அரசியல் சூழலில் மொழிப் பிரச்சினை வலுவிழந்து விட்டது என்று கருதுகிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு - "மொழிப் பிரச்சினை வலுவிழந்து விட்டதுபோலத் தோன்றலாம். ஆனால் அது என்றைக்கும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தது. மொழிப் பிரச்சினை எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்தது" என்று பதிலளித்தேன்.

"மத்திய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் கொள்கை பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று தி.மு.க. பொதுக்குழு வாயிலாகக் கேட்டிருக்கிறீர்கள். இது பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து தள்ளிப் போகிறீர்கள் என்று தோன்றுகிறதே?"

என்று டெலகிராப் பத்திரிகை சார்பில் கேட்ட கேள்விக்கு - "நாங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தால்தான் தள்ளிப் போவதுபற்றிப் பிரச்சினை. நாங்கள் இருப்பது அந்தக் கட்சியில் அல்ல - தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அந்த அணியில் பாரதிய ஜனதாவும் ஒரு கட்சி - அவ்வளவுதான்" என்று பதில் அளித்தேன்.

காங்கிரஸ் கட்சியோடு தி.மு.கழகத்திற்கு உறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்னிடம் தனிப்பட்ட முறையிலே அன்பு கொண்டவர்கள் சிலர் உண்டு. அதில் ஒருவர்தான் ஏ.கோபண்ணா. அருமையான எழுத்தாளர். அவர் எழுதிய நூல்தான் "காமராஜ் ஒரு சகாப்தம்."

அவரைப் போலவே கருத்தாழமிக்கப் பேச்சுக்களின் மூலம் காங்கிரஸ் கட்சியிலே என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் ஒருவர்தான் நண்பர் பீட்டர் அல்போன்ஸ். அவர் எழுதிய நூல்தான் "நெஞ்சில் விளைந்த நெல்மணிகள்" அந்த இரண்டு நூல்களையும் நான்தான் வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியதன் பேரில், 28-10-2003 அன்று காமராஜர் அரங்கில் நடைபெற்ற விழாவிலே நான் கலந்து கொண்டு, அந்த நூல்களை வெளியிட்டு உரையாற்றினேன். அந்த விழாவிற்கு சோ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நண்பர் கே.எஸ். அழகிரி வரவேற்புரையாற்றினார். நூல்களை அறிமுகம் செய்து, கீழானூர் ராஜேந்திரன், தாம்பரம் நாராயணன் ஆகியோர் பேசினர். இரண்டு நூல்களையும் நான் வெளியிட, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களும் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல்களின் சிறப்பியல்புகளை விளக்கி இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தா.பாண்டியன், கவிக்கோ அப்துல் ரகுமான், ஆர்.நல்லகண்ணு, என்.வரதராசன் ஆகியோர் உரையாற்றினர்.

நூலாசிரியர்கள் ஏ. கோபண்ணா அவர்களும், பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் ஏற்புரையாற்றினர். இறுதியாக, அந்த நூல்களில் எழுதப்பட்டுள்ள பல முக்கியமான அம்சங்களை எல்லாம் நான் தொகுத்துக் கூறினேன். நிகழ்ச்சிகளை ஜெ.சி.டி. பிரபாகரன் தொகுத்து வழங்கினார். பொன். கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்த நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.

காரணம், 2004ஆம் ஆண்டு வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுமோ - பா.ஜ.க.வுடன் பல கருத்து மாறுபாடுகளுடன் இடம் பெற்றிருந்த தி.மு.க., அவர்களைவிட்டு விலகி, காங்கிரஸ் பக்கம் வரக்கூடுமோ - என்றெல்லாம் ஆரூடங்கள் பத்திரிகை- களில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் காலக் கட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் பங்கேற்கும் அந்த விழாவிற்கு என்னை அழைத்ததுபற்றி எதிர் பார்ப்புடன் அந்த நிகழ்ச்சியிலே நான் என்ன பேசப் போகிறேன் என்றெல்லாம் கேள்விக் குறியோடு காத்திருந்தார்கள்.

அந்த மேடையிலே நான் என் பேச்சை இப்படித் தொடங்கினேன்- இது பொது விழா என்ற காரணத்தால் எனக்கு முன்னால் பேசியவர்கள் விளித்ததைப்போல தேசியத் தோழர்களே என்றோ - திராவிட இயக்கத் தோழர்களே என்றோ - தனித்தனியாக விளிக்க விரும்பாமல்தான், உயிரினும் மேலான இனிய உடன்பிறப்புக்களே என்று எல்லோரையும் எனது உடன்பிறப்புக்களாகவே கருதி - உங்களை விளித்திருக்கிறேன். இந்த நாளில் என்னுடைய உரையில் ஏதோ ஒரு செய்தியை நிரம்ப எதிர்பார்ப்பதாகப் பேசியவர்கள் அனைவருமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நேரடியாக நம்முடைய நண்பர் சிதம்பரம் அவர்கள் அப்படிச் சொல்லாவிட்டாலும், "நம்பிக்கையோடு இங்கே கூடியிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்கள். யாருடைய நம்பிக்கையையும் கெடுப்பவன் அல்ல நான் - கெடுத்தவனும் அல்ல நான்..." என்றேன். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு இதுவே விளக்கம் போலாகி விட்டது. நீண்ட நேரம் கைதட்டல் ஓயவில்லை. வெளியிட்ட இரண்டு புத்தகங்களையும் பற்றி, "படித்துப் பின்பற்ற வேண்டிய புத்தகம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப்பற்றி கோபண்ணா அவர்கள் எழுதிய புத்தகம்.

எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டிய பல செய்திகளைச் சொல்கின்ற புத்தகம் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் புத்தகம்" என்று குறிப்பிட்டேன். அந்தப் புத்தக விழாவில் நான் கலந்து கொண்டதும், ஆற்றிய உரையும் கழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஆம் - 2004ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கொண்டிருந்த உறவினைத் துண்டித்துக் கொள்ள முன்வந்தது.

காரணம், பா.ஜ.க. மத்திய அரசிலே பொறுப்பேற்றிருந்த நிலையில், தான் ஒப்புக் கொண்ட குறைந்த பட்சத் திட்டங்களிலிருந்து திசை மாறி நடந்து கொண்ட காரணத்தால், அந்தக் கூட்டணியில் தி.மு. கழகம் தொடர்ந்து நீடிக்க இயலவில்லை. பா.ஜ.க.விற்கும், தி.மு.க. விற்கும் இடையே ஏராளமான கொள்கை வேறுபாடுகள் இருந்த போதிலும், குறைந்த பட்சத் திட்டங்களிலிருந்து அந்தக் கட்சி விலகிச் செல்லாது என்ற நம்பிக்கையோடு கூட்டணியிலே நீடித்த கழகம் 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு, அந்த அணியிலே தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அதைப் பற்றிய விவரங்களையும், அந்த அணியிலிருந்து தி.மு.க. விலகி வேறு நிலை எடுத்ததைப்பற்றியும் "நெஞ்சுக்கு நீதி"யின் ஏழாவது பாகத்தில் விரிவாக எழுதுவேன். தற்போது, "நெஞ்சுக்கு நீதி"யின் ஆறாவது பாகத்தினை இந்த முப்பது அத்தியாயங்களோடு முடித்துக் கொண்டு, சற்று வெளிவிட்டு, ஏழாவது பாகத்தினைத் தொடரலாம் என்று எண்ணுகின்றேன். காரணம், என்னுடைய சுய சரிதை என்று ஆரம்பித்து, இது முழுக்க முழுக்க நமது இயக்கத்தின் வரலாறாகவே - இன்னும் சொல்லப்போனால் தமிழக வரலாற்றின் ஒரு பகுதியாகவே நான் இதனை எழுதி வருகிறேன்.

தமிழக வரலாற்றோடும், நமது இயக்க வரலாற்றோடும் ஒன்றிப் பிணைந்ததுதானே என்னுடைய வாழ்க்கை! எனவே, அவற்றிலிருந்து பிரித்து என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலவில்லை. எனவே ஆறாவது பாகத்தினை இந்த முப்பதாவது அத்தியாயத்தோடு முடித்துக் கொண்டு, சிறிது இடைவெளி விட்டு "நெஞ்சுக்கு நீதி" தொடரின் ஏழாவது பாகத்தினை தொடங்கி எழுதுகிறேன் - இயற்கையின் துணையை நம்பி! ஆறாம் பாகம் முற்றிற்று கலைஞரின் பிற நூல்கள் 1.

நெஞ்சுக்கு நீதி பாகம் 1 2. நெஞ்சுக்கு நீதி பாகம் 2 3. நெஞ்சுக்கு நீதி பாகம் 3 4. நெஞ்சுக்கு நீதி பாகம் 4 5. நெஞ்சுக்கு நீதி பாகம் 5 6. நெஞ்சுக்கு நீதி பாகம் 6 7. திருக்குறள் கலைஞர் உரை 8. சங்கத் தமிழ் 9. இளைய சமுதாயம் எழுகவே 10. பொங்கி வரும் புதுவெள்ளம் 11. கையில் அள்ளிய கடல் 12. வழிமேல் விழி வைத்து 13.தென்பாண்டிச் சிங்கம் 14. மீசை முளைத்த வயதில் 15. 16 கதையினிலே (சிறுகதைத் தொகுப்பு) 16. மலரும் நினைவுகள் 17.

ஒரு தலைக்க

ாதல் 18. மொழிப்போரில் ஒரு களம் 19. நெருக்கடி நெருப்பாறு 20. கல்லக்குடி களம் 21. பாயும்புலி பண்டாரக வன்னியன் 22. வான்புகழ் கொண்ட வள்ளுவம்