உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நிகழ்வுகளும் நினைவுகளும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நிகழ்வுகளும் நினைவுகளும்! · 358 / 391

கலைஞர் 46. நிகழ்வுகளும் நினைவுகளும்! ராஜகம்பீரமாக வாழ்ந்த எனது நண்பர் அய்யண்ணன் அம்பலம் அவர்களின் மணி மண்டபத்தை ராஜ கம்பீரம் என்ற கிராமத்தில் திறந்து வைத்தேன். வா ஜ்பாய் அவர்கள், 1998-99 ஆம் ஆண்டுகளில் எந்த அளவிற்குக் கூட்டணிக் கட்சிகளால் அவதிப்பட்டார் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தனது அமைச்சரவையை விரிவுபடுத்தும் முயற்சியில் பலமுறை தோல்வியுற்றார். அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும்-யாருக்கு எந்தத் துறையை ஒதுக்க வேண்டும் என்பதைக்கூட முடிவு செய்ய முடியாத நிலையில் பிரதமராக அவர் இருந்தார்.

1998ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் அமைச்சரவையை விரிவுபடுத்த அவர் முதலில் திட்டமிட்டார். அதற்கான தேதிகூட நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை. அமைச்சர் அவையை விரிவுபடுத்தப் போவதாக பிரதமர் ஒரு போதும் அறிவிக்கவில்லை. பத்திரிகைகளில் தான் அப்படிச் செய்தி வெளிவந்தது என்று அரசுத் தரப்பில் தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள். அதன் பின்னர், 98ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அமைச்சரவை விரிவாக்கம் என்று பா.ஜ.க.

தலைவர்கள் கூறினார்கள். அதுவும் நடைபெறவில்லை. பிரதமர் வாஜ்பாய் அவர்கள் லக்னோ நகருக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த போது, 1999ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் தேதியன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்தியப் பிரதமர்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் கூட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, முன்கூட்டி எப்போதும் அறிவித்ததில்லை.

ஆனால், தன் கட்சியினர்- மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களால், எத்தகைய உறுதியான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருந்த வாஜ்பாய் அவர்கள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து வெளிப்படையாக அறிவித்த நேரத்தில் அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அமைச்சரவையில் இடம் பெறுவோர் குறித்து முடிவெடுக்கும் உரிமை பிரதமருக்குத்தான் உரியது-என்று பா.ஜ.க. வினர் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறியபோதும் உண்மை அதற்கு நேர் மாறாக இருந்தது.

ரயில்வே துறையைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி நிர்ப்பந்தம் செய்தார். ஆனால், அந்த ரயில்வே துறையை விட்டுக் கொடுக்க சமதா கட்சி தயாராக இல்லை. வாழப்பாடி ராமமூர்த்தி யிடம் இருந்த பெட்ரோலியத் துறையை அ.தி.மு.க.விற்குக் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா நிர்ப்பந்தம் செய்தார். செய்தி ஒலிபரப்புத்துறையிலும் தனது கட்சியைச் சேர்ந்தவர்தான் இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துவதாக பா.ஜ.க.வைச சேர்ந்தவர்கள் கூறிவந்தார்கள்.

அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் சேர வேண்டுமென்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் . அவர் பிரதமரைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசினார். அப்போது, "யார் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதை மட்டும் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்தால் போதுமானது- அவர்களை எந்தத் துறைக்கு அமைச்சராக்க வேண்டுமென்பதை முடிவெடுக்கும் எனது அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது" என்று பெர்னாண்டசிடம் பிரதமரே தெரிவித்து விட்டார் என்று அப்போது கூறப்பட்டது.

கலைஞர் இத்தகைய நிலையில்தான் ஜனவரி 15 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று பிரதமர் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், இந்த முறையும் கூட்டணிக்கட்சிகள் தங்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. கூட்டணிக் கட்சிகள், தங்கள் கட்சிக்குள் நிலவும் உள் கட்சி மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, பல பேருக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு வலியுறுத்தியதால், பிரதமர் வாஜ்பாய் நினைப்பதைவிட அதிக எண்ணிக்கையில் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி யெல்லாம் அப்போது அவருக்கு ஏற்பட்டது.

★ ★ ★ முத்தமிழ்ப் பேரவையின் 24ஆவது ஆண்டு இசை விழா 1.2.1999 அன்று தொடங்கி,4.2.1999 வரை, சென்னையில் மயிலாப்பூரில், ரசிக ரஞ்சனி சபாவில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழாவில் நான் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினேன். முத்தமிழ்ப் பேரவையின் சிறப்புகளைக் கூற வேண்டுமானால், அந்தப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் - அந்தப் பேரவை தொடங்கப்பட்டது முதல் இந்த ஆண்டுவரை தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

அந்தப் பேரவையைத் தொடங்குவதற்கும், அதிலே விருதுகளை வழங்குவதற்கும் நான் ஒரு காரணம் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் அதன் அமைப்பாளர்கள் என்னை அழைக்கத் தவறியதில்லை- நானும் கலந்து கொள்ளத் தவறியதில்லை. 99ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், அந்த ஆண்டு தொடக்க விழாவிற்கு என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி அவர்கள் தலைமை தாங்கினார். அந்த ஆண்டு விழாவில், தவில் வித்துவான் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியத்திற்கு "ராஜ ரத்னா" விருதும், முனைவர் எம்.நன்னனுக்கு "இயல் செல்வம்" விருதும், திருவாரூர் திருமதி பி.ஆர்.

திலகத்திற்கு "இசைச் செல்வம்" விருதும், நடிகர் விசுவிற்கு "நாடகச் செல்வம்" விருதும், கோட்டூர் என்.வீராசாமிக்கு "நாதஸ்வரச் செல்வம்" முத்தமிழ்ப் பேரவை விழாவில், "எனக்குச் சூட்டப்பட்ட 'சிவாஜி' என்ற பட்டத்தை, நான் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டும்- என்று எனக்குக் கிரீடம் சூட்டினார் கலைஞர்" என்றார் சிவாஜி கணேசன் விருதும், திருக்கோகர்ணம் கே.

செல்லையாவுக்கு "தவில் செல்வம் " விருதும், திருமதி மீனாட்சி சித்தரஞ்சனுக்கு "நாட்டியச் செல்வம்" விருதும், சிக்கல் ஆர்.பாஸ்கரனுக்கு "வயலின் செல்வம்" விருதும் என்னால் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் முனைவர் தமிழ்க்குடி மகன் , சங்கீத கலாநிதி கே.வி.நாராயணசாமி , கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் ஒரு சிறப்பாக, அந்த ஆண்டு விழாவில் நான் எழுதிய "ஒரு தலைக்காதல்" என்ற சங்க இலக்கிய நூல், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

அவர் அந்த விழாவில் என்னைப் பற்றிப் பெருமைப்படுத்திப் பேசியது என்றும் என் நினைவில் நிற்கக்கூடியது. அதன் ஒரு பகுதி மட்டும் இதோ:- "இந்த முத்தமிழ்ப் பேரவை விழாவிற்கு என் அருமைக் கண்மணி அமிர்தம் என்னை அழைத்தபோது, "விழாவிற்கு யார் யார் வருகிறார்கள்?"

என்று விவரம் கேட்டேன். கலைஞர் முத்தமிழ்ப் பேரவை தொடங்குவதற்கும், கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கும் நானே காரணம் -என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நான் அந்த விழாவிலே தவறாமல் கலந்து கொள்கிறேன். இங்கே வந்து அமர்ந்திருக்கும் பெரியவர்கள் பெயர்களை எல்லாம் முதலில் சொல்லிவிட்டு, பிறகு "கலைஞர் அவர்களும் வருகிறார்கள்" என்று சொன்னார், அமிர்தம்.

"நான் கேட்டேன், "அது தான் முத்தமிழே வருகிறதே- என்னை ஏன் அழைக்கிறீர்கள்?" என்று! அதற்கு அவர், "அந்த முத்தமிழோடு சேர்ந்து நீங்களும் வெகு காலமாக இருக்கிறீர்களே-அதனால்தான் நான் உங்களை அழைத்தேன்" என்றார். "புரியவில்லை" என்றேன். "நீங்கள் நாடகத் தமிழாயிற்றே-உங்களை விட்டுவிட்டு நாங்கள் வேறு யாரை அழைப்பது?"

என்றார். "ஓகோ நான் நாடகக்காரனோ -ஆரம்பத்திலிருந்து கலைஞரோடு இருப்பவனே என்ற ஞாபகம் அப்போது வந்தது. சில நேரங்களில் சில பேர் சில விஷயத்தை ஞாபகப்படுத்திய பிறகுதான் நமக்கே ஞாபகம் வருகிறது. கலைஞர் அவர்களுடைய இந்த மாபெரும் கலைப் பொக்கிஷத்தை வெளிக்கொண்டு வருகிற இந்த விழாவிலே அருமைத் தம்பி வைரமுத்து "ஒரு தலைக்காதல்" நூலினை வெளியிட, என்னைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். நான் அப்போதே சொன்னேன். ஒரு தலைக்காதல் என்று புத்தகத்தை எழுதிவிட்டு, பெயர் வைக்கும்போது கலைஞருக்கு என் ஞாபகம் வந்து விட்டதோ, அதனால்தான் அப்படிப் பெயர் வைத்தாரோ-என்று.

நான் அவர்மீது வைத்திருப்பது ஒரு தலைக்காதல்-தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்படியொரு மாபெரும் விழாவினை ஏற்படுத்தி, பெரிய மேதைகளை-அருமைப் பெருமக்களை எல்லாம் இங்கு அழைத்து, அதற்கு என்னைத் தலைமை தாங்க வைத்திருக்கிறார் அருமைக் கண்மணி அமிர்தம் என்றால், என்னைவிடப் பெருமைப்படுகிறவர்கள் யார் இருக்க முடியும்? நான் பேசுவது அத்தனையும் வார்த்தைக்கு வார்த்தை சத்தியம். உண்மை. "55 ஆண்டுகளுக்கு முன்பாக எனக்கு நினைவு வருகிறது.

சிவாஜி என்ற பட்டத்தை அய்யா அவர்களை வைத்துக் கொடுத்து என்னைப் பெருமைப்படுத்தியதும் கலைஞர் அவர்களின் வீடுதான். வாழ்நாள் முழுவதும் அந்தப் பட்டத்தை நீ சுமந்து கொண்டிரு- என்ற வகையில் இன்றைக்கு எனக்குக் கிரிடம் சூட்டி அதை நிலைக்கச் செய்ததும் கலைஞர் வீடுதான். நான் மிகவும் நன்றிக் கடன்பட்டிருப்பவன். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்பதை நான் படித்தவன்.

அதை சில நேரம் வெளியிலே காட்டாமல் இருக்கலாம். காட்டாமல் இருப்பதும் உங்களுக்காகத்தான். ஒரு நண்பன் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, அந்த நண்பன் அடைகிற புகழை- மரியாதையை இவைகளையெல்லாம் பார்த்து இன்னொரு நண்பன் எந்த இடத்தில் கீழே இருந்தாலும், பெருமைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய, அந்த நண்பனின் பக்கத்தில் சென்று அமர வேண்டும் என நினைப்பதைப் போல முட்டாள்தனம் வேறு கிடையாது என்பதை உணர்ந்தவன் நான்.

அதனால் பல நேரங்களில் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு பயந்து ஒன்றுமில்லை." கலைஞர் "இங்கே பேசிய சாரதா நம்பி ஆருரன், கலைஞர் வசனத்தை ஒப்புவிப்பதற்கு வேறு ஆள் இல்லை என்று சொன்னார். அது ஒப்புவிப்பதல்ல. சிவாஜியை எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்று கலைஞருக்குத் தெரியும். எந்த இடத்தில் அடித்தால், எந்த உணர்ச்சியை வெளியில் கொண்டு வர முடியும் என்பதும் தெரியும். அவர் அடித்தார்-என்னிடம் உணர்ச்சி வந்தது.

அவ்வளவுதான். சிவாஜி என்ற இந்த வெறியனுக்குக் கலைஞர் என்ற மேதை பேச வேண்டும் என்ற வெறி இருக்கிறது. ஆகவே பேச்சைக் குறைத்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு கலைஞரிடம் ஒரு சின்ன வேண்டுகோள். பாஞ்சாலங்குறிச்சியில் அரசாங்கம் பெரிய மாளிகை கட்டி, கட்டபொம்மனுடைய விழாவை நடத்தி வருகிறது. அவன் தூக்குப் போடப்பட்ட கயத்தாறு என்ற இடத்தில், கலைஞர் அவர்களுடைய காலத்தில் ஒரு பெரிய சிறப்பான விழா- அரசாங்கம் நடத்தும் விழாவாக நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த எனது வேண்டுகோள் கலைஞரின் புகழ் மகுடத்தில் ஓர் அழகான பச்சை வைரத்தினைப் பதித்தது போலாகும்" என்றார். நடிகர் திலகத்தின் இந்தக் கோரிக்கை குறித்து நான் விழாவிலே பேசும்போது சொன்னேன். "நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு வேண்டுகோளை இங்கே வைத்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாற்றில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று கூறினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டுகின்ற வகையில், அந்த விழா சிவாஜியினுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க, அரசின் சார்பில் நடத்தப்படும் என்ற உறுதியை இங்கே அறிவிக்கின்றேன்.

அந்த விழாவில் அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்வார்கள். அவர்களில் ஒருவராக நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்." என்று நான் இவ்வாறு கூறியபோது, சிவாஜியே எழுந்து நின்று நீண்ட நேரம் கை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த விழாவிலே "ஒரு தலைக்காதல்" நூலை வெளியிட்டு உரையாற்றிய தம்பி கவிப்பேரரசு வைரமுத்து, அந்தப் புதினத்தைப் பற்றி மிக அழகாக அங்கே உரையாற்றியதோடு, இறுதியில் முடிக்கும்போது, "தமிழ் மொழியின் கடைசி எழுத்து இருக்கும் வரையில், தமிழனின் கடைசி சுவாசம் இருக்கும் வரையில், கலைஞருடைய புகழும், தமிழும் நின்று நிலைக்கும்" என்று கூறினார்.

முத்தமிழ்ப் பேரவையின் விழாவினைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். 99ஆம் ஆண்டு,பிப்ரவரி திங்களில்-முதல் 13 நாட்களில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே எந்த அளவிற்கு அப்போதெல்லாம் நான் உழைத்தேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பிப்ரவரி முதல் நாளிலேயே சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில், 10 புதிய மேம்பாலங்களைக் கட்டுகின்ற பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

அந்தப் பத்து மேம்பாலங்களும் தொடக்க விழாவோடு நின்று விடாமல், அப்போது மேயராக இருந்த தம்பி ஸ்டாலின் முயற்சியால், ஒரு பாலத்தைத் தவிர மற்ற ஒன்பது பாலங்களும் தி.மு.கழக ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டன. 116 கோடி ரூபாயில் அந்தப் பத்து பாலங்களும் கட்டத் திட்டமிட்டு, அதுவரை இல்லாத வகையில் மதிப்பிடப்பட்ட தொகையிலே மீதப்படுகின்ற அளவிற்கு அந்தப் பாலங்கள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்டன. அந்த விழாவிலே நான் எழுதிய 'ஒரு தலைக்காதல்' என்ற சங்க இலக்கிய நூலினை, கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, சிவாஜி பெற்றுக் கொண்டார்.

மேம்பாலங்களைப் பொறுத்தவரை தி.மு. கழக அரசுக்கும், பாலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1969 ஆம் ஆண்டு, நான் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலம் முதல், நான் எப்போதெல்லாம் முதலமைச்சராகப் பொறுப்பிலே இருந்திருக்கிறேனோ, அப்போதெல்லாம் தான் தமிழகத்திலே உள்ள முக்கிய பாலங்கள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. "முத்தமிழ்ப் பேரவை விழாவிலே முத்தமிழாகிய கலைஞரே வரும் போது, என்னை ஏன் அழைக்கிறீர்கள்?"...என்று கேட்டார் சிவாஜி.

அந்த வரிசையில், 1973 ஆம் ஆண்டு அண்ணாமேம்பாலம் சென்னையில் முதன் முதலாகப் பெரிய அளவில் எழுப்பப்பட்டது. அண்ணா மேம் பாலத்தைப் போலவே மயிலாடுதுறையில் வாழ்ந்து மொழிக்காக உயிர் விட்ட மாணவன் சாரங்கபாணியின் பெயரால் அந்த நகரத்திலே ஒரு பெரிய மேம்பாலம் எழுப்பப்பட்டு, அதனை நான்தான் திறந்து வைத்தேன். கோவையிலே உள்ள மேம்பாலம்-நெல்லையிலே உள்ள ஈரடுக்குப் பாலம் ஆகியவையும் தி.மு.கழக ஆட்சியிலே கட்டப்பட்டவைதான்.

நெல்லை பாலத்திற்கு திருக்குறள் பாலம்-திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டியதே நான்தான். இன்னும் சொல்லப் போனால், நான் முதன் முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குளித்தலைத் தொகுதியிலே நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குளித்தலை-முசிறி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் நீண்ட பாலம் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேறிய ஒன்றாகும். திருமானூர் பாலம் பெரியவர் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப் பட்டது.

ஆனால், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி எண்ணற்ற பாலங்கள் கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலே கட்டப்பட்டன. ★ ★ ★ தலைமைக் கழகத்தின் சொற்பொழிவாளர்களை எல்லாம். அப்போது கழகக் கொள்கைப் பரப்புச்செயலாளராக இருந்த தம்பி விஜய டி. ராஜேந்தர் 2.2.1999 அன்று அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து-என்னையும்,

பொதுச் செயலாளரையும் வைத்து கலந்துரையாடல் கூட்டம் ஒன்றினை நடத்தினார். தலைமைக் கழகப் பேச்சாளர்கள் எந்த அளவிற்குக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து மேடைகளிலே பேச வேண்டும் என்பதைப் பற்றி நானும், பொதுச் செயலாளரும் பல கருத்துக்களை அந்தக் கூட்டத்திலே எடுத்துக் கூறினோம். ★ ★ ★ அதற்கடுத்த நாள் 3.2.1999 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் என்பதையொட்டி, தமிழகம் முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன.

சென்னையிலே நானும் , வேலூரில் பேராசிரியரும் , காஞ்சிபுரத்தில் பொருளாளரும் , திருவள்ளூரில் நாஞ்சிலாரும் செங்கற்பட்டில் தம்பி மு.க.ஸ்டாலினும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு மதவெறி-தீண்டாமை-வன்முறை பற்றி உரையாற்றினோம். "நீங்கள் நாடகத் தமிழ் ஆயிற்றே - அதனால் தான் உங்களை அழைக்கிறேன்" என்றார் அமிர்தம்.

அதே 3ஆம் தேதியன்று மாலையில், சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில், கோகலே மண்டபத்தில் நடைபெற்ற விழாவிலே கலந்து கொண்டு, " மனித நேயம் " என்ற தலைப்பிலே நீண்டதோர் உரையாற்றினேன். முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் பு.ரா. கோகுலகிருஷ்ணன் , அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் எம்.ஏ. எம்.ராமசாமி ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். ★ ★ ★ இத்தனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விட்டு, 4 ஆம் தேதியன்று கலைஞர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 ஆம் தேதியன்று புகைவண்டியில் புறப்பட்டேன்.

வாஜ்பாய் அவர்கள் அவரது கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவால் பெரிதும் அவதிப்பட்டார். மதுரையில்-குறிப்பாக 4ஆம் தேதியன்று அய்யணன் அம்பலம் அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழா . அந்த விழா மதுரை ஒத்தக்கடை பகுதியில் " ராஜ கம்பீரம் " என்ற இடத்திலே நடைபெற்றது. "ராஜ கம்பீரமாக வாழ்ந்த அய்யணன் அம்பலத்திற்கு, ராஜ கம்பீரத்தில் விழா எடுப்பது மிகவும் பொருத்தம்" என்று அங்கே நான் என் உரையைத் தொடங்கினேன்.

"அய்யணன் அம்பலம் அவர்களின் உருவத் தோற்றமே அனைவரையும் கவரக்கூடிய ஒன்றாகும். இப்படிச் சொல்கிற காரணத்தால், மணிமகுடம் தரித்து, மார்பகத்திலே பதக்கம், கைகளில் கட்டாரியோ, போர்வாளோ வைத்துக் கொண்டு தோற்றம் அளிப்பார் என்று கருதத் தேவையில்லை. மிகவும் எளிமையான கதர்ச் சட்டை அணிந்து-எளிமைக்கு இதைவிட வேறு ஒரு எல்லை கிடையாது என்ற அளவில், பெருந்தலைவர் காமராஜரை நினைவூட்டத் தக்க வகையில், உலவியவர்தான் அய்யணன் அம்பலம்."

"நான் பிறந்த 1924ஆம் ஆண்டிலே பிறந்தவர்தான் அய்யணன் அம்பலம். ஆனால், அவர் என்னை முந்திக் கொண்டு மறைந்து விட்டார். அவரது மறைவு அந்தச் சமுதாய மக்களுக்கு மாத்திரமல்ல - அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சிக்கு மாத்திரமல்ல - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பு. தனிப்பட்ட முறையிலே எனக்குத் தாங்க முடியாத இழப்பு. காரணம், எந்த நிலையிலும் முகம் கோணாமல், இன்முகத்தோடு என்னை ஒவ்வொரு முறையும் அணுகுவார்.

தேவர் திருமகனுக்குப் பிறகு, மூக்கையா தேவர் என்னிடம் எந்த அளவிற்கு நெருங்கிப் பழகுவாரோ, அதைப்போலவே அய்யணன் அம்பலம் அவர்களும் என்னிடம் நெருங்கிப் பழகியவர்." "ஆளுங்கட்சியாக தி.மு.க.இல்லாத நிலையிலும், தி.மு.க.வின் உற்றத் தோழமைக் கட்சிகளில் ஒன்றாக அகில இந்திய பார்வர்டு பிளாக் விளங்கியதற்கு அய்யணன் அம்பலம் அவர்கள் நீங்காத் துணையாக இருந்தவர்."

"அவரின் அன்புக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் - எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், அய்யணன் அம்பலம் அவர்களை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். அப்போது நான் முதல்வராகவும் இல்லை - அந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அய்யணன் அம்பலம் பேசும்போது தன்னையறியாமல், "முதலமைச்சர் கலைஞர் அவர்களே" என்று அழைத்து, அதன் பிறகும் அதனைத் திருத்திக் கொள்ளாமல், தன் உரையைத் தொடர்ந்தார்.

அந்த அளவிற்கு மறந்தும் என் பெயரை மறக்காத பெருமகன் அவர்" - என்று அவரது நினைவால் கட்டப்பட்ட அந்த மணிமண்டபத்தினை நான் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துக் கூறினேன். அய்யணன் அம்பலம் அவர்களின் மணிமண்டபத் திறப்புவிழாவிற்கு முன்னதாக, தேனி மாவட்டத்தில் கவிப்பேரரசு தம்பி வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகப்பட்டியில் அவரது முயற்சியால் அரசின் சார்பில் எழுப்பப்பட்ட கவிஞர் கண்ணதாசன் நூலகத்தை பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.

பழனிவேல்ராஜன் அவர்கள் தலைமையில், ஐ.பெரியசாமி , வைரமுத்து ஆகியோர் முன்னிலையில் நான் திறந்து வைத்தேன். வடுகப்பட்டியில் அன்றைய தினம் நடைபெற்ற விழா ஒரு நூலகத்தின் திறப்பு விழா என்பதைப் போல நடைபெறவில்லை. நான் அந்த விழாவிலே குறிப்பிட்டதைப்போல, கவிஞர் வைரமுத்து அவர்களை வரவேற்பாளராகக் கொண்ட கவிஞர்களின் மாநில மாநாடு போல நடைபெற்றது. கலைஞர் சென்னையிலே வைரமுத்து எழுதிய " தண்ணீர் தேசம் " என்ற நூல் வெளியீட்டு விழாவில், மன்றத்தில் கூடியிருந்த பலரும் அந்த நூலை விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள்.

அப்படி விலை கொடுத்த பெற்றுக் கொண்டபோது, சேர்ந்த தொகை ஒரு இலட்சத்தைத் தாண்டியது. அந்த நிகழ்ச்சியிலே வைரமுத்து பேசும்போது, " தண்ணீர் தேசம் " நூல் விற்பனையிலே ஒரு இலட்சரூபாய்க்கு மேல் கிடைத்துள்ளது. அந்தத் தொகையை என்னுடைய சொந்த ஊரிலே, கண்ணதாசன் பெயரால் நூல் நிலையம் அமைக்கப் பயன்படுத்துவேன். நூலகக் கட்டிடம் ஒன்றைக் கட்டித்தர கலைஞர் ஆவன செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அந்த விழாவிலேயே "கவிஞரின் விருப்பம் நிறைவேற்றப்படும்" என்று நான் அளித்த உறுதிமொழியின் சாட்சியாகத்தான், அந்தக் கட்டிடம் எழுந்து, திறப்பு விழா நடைபெற்றது. அந்தக் கட்டிடத்தின் மதிப்பு 13 லட்சம் ரூபாய். என் ஆரூயிர் நண்பர் கவியரசு கண்ணதாசன் பெயரில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சொந்தக் கிராமத்தில் எழுந்த நூலகத்தினை நான் திறந்து வைத்ததில் மிகுந்த பெருமை யடைந்தேன். ★ ★ ★ அன்று காலையில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான தம்பி பொன்.முத்துராமலிங்கம் இல்ல மணவிழாவிலே கலந்து கொண்டேன்.

பொன்.முத்துராமலிங்கத்தின் அன்பு மகன் சேதுராமலிங்கத்திற்கும் , இந்தியக் கடற்படை லெப்டினென்ட் கமாண்டர் வீ.வீராசாமி அவர்களின் மகள் மலர்க்கொடிக்கும் மணவிழாவினை நடத்தி வைத்தேன். பொன்.முத்துராமலிங்கம் மதுரை மாவட்டத்திற்கு மாத்திரமல்ல-தமிழகத்திலே உள்ள தி.மு.கழகத்தின் உடன்பிறப்புக்கள் அத்தனை பேரும் அறிந்த ஒரு தளகர்த்தர். ஸ்டாலின் மேயராக இருந்த போது, சென்னை மாநகரில் 116 கோடி ரூபாயில். 10 புதிய மேம்பாலங்கள் கட்டும் நிகழ்ச்சியை நான் தொடங்கி வைத்தேன்.

இடையில் சில நாட்கள் அவர் கழகத்திலே இல்லை. அதுகூட அண்ணா சொல்வாரே- "நான்தான் அந்தக் கட்சி எப்படி இருக்கிறது-என்று பார்த்து வருவதற்காக துப்பறிபவராக அவரை அனுப்பி வைத்தேன்"-என்று - அதைப் போலத்தான் நானும் அனுப்பிவைத்தேன்- என்று பொன்.முத்து ராமலிங்கத்தைப் பற்றியும் அந்த மண விழாவில் குறிப்பிட்டேன். அந்த மண விழாவிலே பேசிய தம்பி டி.ஆர்.பாலு , பொன்.முத்துராமலிங்கம் வேறு கட்சிக்குச் சென்று விட்டுத் திரும்ப வந்த உடனேயே, அவருக்குக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் பதவியை நான் அளித்ததைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அதைப்பற்றி நான் என் பேச்சிலே குறிப்பிடும்போது- "நம்முடைய கையிலே ஐந்து விரல்கள் இருக்கின்றன என்றால், அந்த ஒவ்வொரு விரலும் ஒவ்வொன்றுக்குப் பயன்படுகிறது. நாம் காது குடைய வேண்டுமென்றால், கட்டை விரலைப் பயன்படுத்திக் காது குடைவதில்லை. ஏனென்றால், காது சுண்டு விரல் நுழைகின்ற அளவிற்குத்தான் இருக்கும். எனவே சுண்டு விரலை அதற்குப் பயன்படுத்துகிறோம். கணையாழி அணிய ஒரு விரல்- ஆட்காட்டி விரல்-சுட்டு விரல்-வில்லை நாணேற்ற வேண்டு மென்றால் கட்டை விரல், என்று பயன்படுத்துகிறோம்.

கட்டை விரல் இல்லாமல் நாணேற்ற முடியாது. அதனால் தான் துரோணாச்சாரியார் ஏகலைவனுடைய கட்டை விரலையே காணிக்கையாகக் கேட்டார். கட்டை விரலுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் உண்டு. அதைப் போல என்னுடைய கையில் கலைஞர் இருக்கிற கட்டை விரல்தான், பொன் முத்துராமலிங்கம் என்ற முறையிலேதான் அந்த விரலுக்குத் தர வேண்டிய கடமையை நான் தந்திருக்கிறேன்" என்று கூறினேன்.

★ ★ ★ தேனி மாவட்டம் வடுகப்பட்டியில், நான் திறந்து வைத்த கவிஞர் கண்ணதாசன் நூலகக் கட்டிடம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம் அன்றைய தினம் மதுரையிலே அந்த ஒரு திருமணம் மாத்திரமல்ல-மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அக்னிராஜ் இல்ல மணவிழாவிலும் கலந்து கொண்டேன். அக்னிராஜ் அவர்களின் மகன் செந்தில் ராஜனுக்கும் , மேலூர் கன்னையா அவர்களின் மகள் சுசித்ரா விற்கும் நடைபெற்ற மணவிழாவிற்கும் தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

தம்பி அக்னிராஜ் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டுமென்று அண்ணா அவர்கள் ஆணையிட்டபோது, மதுரை மாநகரிலே அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள முன் வந்தவர்களில் ஒருவர். மிசாவிலே பல கொடுமைகளை அனுபவித்தவர். இளமைக்காலம் முதல் கழகத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். பெரியாருக்குச் சீடராக- அண்ணாவிற்குத் தம்பியாக -எங்களுக்கெல்லாம் தோழனாகப் பணியாற்றிய- பணியாற்றுகின்ற தம்பிதான் அக்னிராஜ்.

அவரது இல்லமண விழாவிலேயும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு, அக்னிராஜ் அவர்களின் தொண்டினைப் பாராட்டினேன். உடல் தளர்ந்துள்ள அந்த நிலையிலும், முக்கிய நாட்களில் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்ததுப் பெறத் தவறவே மாட்டார். தேனி மாவட்டத்தில், இராசிங்கபுரம் என்ற இடத்திலும், ஓடைப்பட்டி என்ற இடத்திலும் கட்டப் பட்டிருந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்களை 5ஆம் தேதி காலையில் பேரவைத் தலைவர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் தலைமையில் நான் திறந்து வைத்தேன்.

நான் கலந்து கொண்ட உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாடு. கலைஞர் அன்று மாலையில், திருநெல்வேலி சென்று எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு,எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையினைத் திறந்து வைத்தேன். ★ ★ ★ நெல்லை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, 6ஆம் தேதி சென்னை திரும்பி, தலைமைச் செயலகத்தில் செயின்ட் கோபைன் தொழில் நிறுவனத் தலைவரையும், அவரது குழுவினரையும் சந்தித்து, தொழில் தொடங்குவது பற்றிய உரையாடலில் கலந்து கொண்டேன்.

அதற்கடுத்து பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில், சென்னை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணையம் கருத்தரங்கு மாநாட்டு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டேன். மீண்டும் 9ஆம் தேதியன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, 10 ஆம் தேதி காலையில் நாமக்கல் நகரிலே நடைபெற்ற என் 1999 - பிப்ரவரி திங்களில்...நான் நடத்தி வைத்த திருமணங்கள் மைத்துனர் கோவில்திருமாகாளம் கோ.தெட்சிணாமூர்த்தி அவர்களின் இல்லத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி, அந்த மணவிழாவினை நடத்தி வைத்தேன்.

அன்று மாலை மணியளவில் மேட்டுப்பட்டி, குன்னமலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைக்கும் விழாக்களில் கலந்து கொண்டேன். அதனை முடித்துக் கொண்டு, நாமக்கல் நகரம் சென்று, அங்கே பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை திறப்பு விழாவிலே கலந்து கொண்டேன். ★ ★ ★ 10ஆம் தேதி இரவு 11 மணிவரை நாமக்கல் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுவிட்டு, மறுநாள் காலையில் காரிலே புறப்பட்டு பிற்பகலில் தஞ்சை நகரத்தைச் சென்றடைந்து, சென்னையில் நான் திறந்து வைத்த மியாட் மருத்துவமனை கலைஞர் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற தென்னகப் பண்பாட்டு மையத்தின் கட்டிடக் கால்கோள் விழாவில் கலந்து கொண்டேன்.

தொடர்ச்சியாக 5.30 மணியளவில் "ஜித்து" இல்ல மணவிழாவிலே கலந்து கொண்டேன். அதனை முடித்துக்கொண்டு, புகைவண்டி மூலமாக 12 ஆம் தேதி காலையில் சென்னையை அடைந்து, வடசென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இல்ல மணவிழாவிற்குத் தலைமையேற்று மணவிழாவினை நடத்தி வைத்தேன். அன்று பிற்பகலில் சென்னையில் எம்.ஐ.ஓ.டி. மருத்துவமனை திறப்பு விழாவிலே கலந்து கொண்டு அதனைத் திறந்து வைத்தேன். ★ ★ ★ தலைமைச் செயலகத்தில் 13.2.1999 அன்று, நிதி நிலைக்குழு கூட்டத்தில் அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் முழுநாளும் கலந்து கொண்டேன்.

அதற்கடுத்த நாள், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களின் பேத்தியும், டாக்டர் சொக்கலிங்கத்தின் மகளுமாகிய பிரியாவின் மணவிழாவில் கலந்து கொண்டேன். தொடர்ந்து கயல் தினகரன் மகன் திருமண விழாவிலே கலந்து கொண்டு, மணவிழாவினை நடத்தி வைத்தேன். அன்று மாலையில் வண்டலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியிலும், அதற்கடுத்த நாள் அமைச்சரவைக் கூட்டத்திலும் என்று இப்படியே தொடர்ந்து என்னுடைய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் இருந்தன.

எந்த அளவிற்கு ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நான் அப்போது பணியாற்றினேன் என்பதற்கு உதாரணமாகத்தான் இந்தப் பதினைந்து நாள் நிகழ்ச்சிகளை இங்கே தொகுத்துள்ளேன். இப்படியெல்லாம் உழைத்த என்னைத்தான், இப்போது சிலர் " ஓய்வெடுத்துக்கொள் " என்று அன்போடு (?)

வேண்டுகோள் விடுத்துப் பார்க்கிறார்கள்.