நெஞ்சுக்கு நீதி
மண்மீட்ட போராளிகளை மறக்க · 356 / 391
கலைஞர் 44. மண்மீட்ட போராளிகளை மறக்க முடியுமா? மதுரையில் தியாகி விசுவநாததாஸ் நினைவகம், நூலகம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றின் திறப்பு விழாவிலே கலந்து கொள்வதற்காக நான் 27.12.1998 அன்று மதுரைக்குச் சென்றேன். என்னுடன் ஆர்க்காடு வீராசாமி வந்தார். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையத்தில் சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர் பழனிவேல்ராசன், அமைச்சர்கள் துரைமுருகன், தா.கிருட்டிணன், ரகுமான்கான், முல்லைவேந்தன், ஐ.பெரியசாமி.
சமயநல்லூர் செல்வராசு, மற்றும் மு.க.அழகிரி, பொன்.முத்துராமலிங்கம், தென்னவன், காவேரி மணியம், அக்னிராஜ் எம்.பி., சுப.தங்கவேலன். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வேலுச்சாமி, செ.ராமச்சந்திரன், ஆசையன், தங்கம்தென்னரசு, சொ.பால்ராஜ், காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி, கம்பம் செல்வேந்திரன், மிசா பாண்டியன், பி.எம்.மன்னன், பட்டுராசன், துரை.எழில்விழியன், கரு.தியாகராசன், போடி முத்துமனோகரன், வி.கே.குருசாமி, ஏ.ஆர்.சந்திரன், வெ.முனியாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு என்னை வரவேற்றனர்.
மதுரை மாநகர மக்கள்-குறிப்பாக மருத்துவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் சமுதாயத்தின் சார்பில் நடத்தும் மாநாடாகக் கருதிக் கொண்டு, அங்கே திரண்டிருந்தனர். அவர்களுடைய சங்கத்தின் மஞ்சள் கொடிகளை அவர்கள் கையில் ஏந்தியவாறு நின்றிருந்த அந்தக் காட்சி இன்னமும் கூட என் கண்ணெதிரே நிற்கின்றது. 20 முறைக்குமேல் சிறைப்பட்ட வீரத்தியாகி விசுவநாததாஸ் தனது கலை உணர்வினை, சுதந்திர வேட்கையை உருவாக்கப் பயன்படுத்தினார் விமான நிலையத்திலிருந்து நேராக திருமங்கலம் சென்று தியாகி விசுவ நாததாஸ் நினைவகத்தைத் திறந்து வைத்தேன்.
வீரத்தியாகி விசுவநாததாஸ் சுதந்திரத்திற்காகத் தன்னுடைய உயிரையே கொடுத்தவர். தன்னுடைய கலை உணர்வை-கலை ஆர்வத்தை- சுதந்திரக் கனலை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தியவர். உத்தமர் காந்தி அடிகளிடத்தில் பாராட்டுப் பெற்றவர். வெள்ளைக்கார அரசாங்கத்தால் பலமுறை சிறைப்பட்டவர். ஏறத்தாழ இருபது முறைக்கு மேல் சிறைப்பட்டவர். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் அன்று தங்களுடைய வேலையை நிறுத்தி விட்டு - கடைகளை மூடிவிட்டு-அந்த விழாவிற்காகவே வந்திருந்தார்கள்.
புரட்சிவீரன் பூலித்தேவனின் வீரத்தை- தியாகத்தை - சுதந்திரக் கனவைப் பாராட்டிப் பேசினேன், நான் பல முறை சொல்லியிருக்கிறவாறு, முடிதிருத்தும் நிலையங்கள் தான் திராவிட இயக்கத்தின் தொட்டில்களாக அந்தக் காலத்தில் இருந்தன. ஏனென்றால், நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனுடைய முடிகளை மாத்திரமல்ல- நாட்டிலே ஆளுகின்றவர்களுடைய "முடியையும் திருத்த வேண்டியது அவசியமாகும். அதற்கு நாற்றங்காலாக- தொட்டிலாக இருந்த இடம், எங்களைப் பொறுத்தவரை-திராவிட இயக்கத்தைப் பொறுத் தவரை- அறிஞர் அண்ணாவின் குறிக்கோள்களைப் கலைஞர் பொறுத்தவரை- எங்களுடைய செயல் பாடுகளைப் பொறுத்தவரை அத்தகைய தொட்டிலாக அமைந்திருந்த இடம் மருத்துவர்களின் கடைகளே.
இப்படிப் பாழ்பட்டுக் கிடந்த விசுவநாததாஸ் இல்லத்தை... நான் ஆரூரில் படித்துக் கொண்டிருந்தபோது- தெற்கு வீதியில் புகழ் பெற்ற ஏ.என்.ரத்தினம் அண்ட் கோ என்ற ஒரு பெரிய வியாபார ஸ்தலம் உண்டு. அதற்குப் பக்கத்தில் ஒரு மூலையில் ஒரு முடி திருத்தகம் உண்டு. அந்த முடி திருத்தகத்தின் அதிபர் சிங்கப்பூர் சென்று வந்தவர். அப்போதெல்லாம் சிங்கப்பூர் சென்றவர்களை "சிங்கப்பூர் சவராளி" என்பார்கள். அவருடைய இயற்பெயர் ராமச்சந்திரன் .
தங்கப்பல் கட்டியிருப்பார். சிலபேர் பல் இல்லாத காரணத்தால் தங்கத்தின் பல் வைத்துக் கட்டிக் கொள்வது உண்டு-பல் இருப்பவர்களேகூட, தங்கத்தால் பல்லின்மீது தங்கத்தகடு கட்டிக் கொள்வதும் உண்டு. இதில் அந்தக் கடையின் முதலாளி ராமச்சந்திரன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். நான் சிறுவனாக இருந்தபோது, அவருடைய கடைக்கு முடிதிருத்திக் கொள்வதற்காக மாத்திரமல்ல- இவ்விதம் அழகுறச் சீர்செய்தேன் அவரோடு உரையாடு வதற்காகவும் செல்வேன்.
அந்தக் கடையிலே தான் அந்தக் காலத்திலே யாரும் படிக்கப் பயப்படுகின்ற பச்சை அட்டை " குடியரசு " பத்திரிகை கிடைக்கும். " பகுத்தறிவு " பத்திரிகை படிக்கக் கிடைக்கும். ராமச்சந்திரன் என்னைத் " தம்பி, தம்பி " என்று அன்பொழுக அழைப்பார்.
குடியரசு பகுத்தறிவு போன்ற பத்திரிகைகளை வாங்கி, அவர்-தான் படிப்பதோடு மட்டுமின்றி, தன் கடைக்கு வருபவர்களிடம் அந்த இதழ்களைக் கொடுத்துப் படிக்கவும் செய்வார். கடைக்கு வருவோர் முடியை மாத்திரம் திருத்திக் கொண்டு போகமாட்டார்கள். - தங்கள் மூளையையும் திருத்திக்கொண்டு போகிற அளவிற்கு அவர்களைப் பக்குவப் படுத்தக்கூடிய திறமையாளர், இராமச்சந்திரன். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும் அவ்வப்போது அவரை நினைவு கூர்வது என் வழக்கம்.
இப்படி ஒவ்வொரு மருத்துவருடைய கடையிலும், அன்றைக்குப் படித்தால் ஆபத்து என்றெல்லாம் இருந்த சூழ்நிலையில் குடியரசு, பகுத்தறிவு, திராவிட நாடு பத்திரிகைகளைப் படிக்க முடியுமென்ற நிலை இருந்தது. நூல் நிலையங்களில் அந்த ஏடுகளுக்கு அப்போது அனுமதி கிடையாது. அந்தக் காலத்தில் எங்களைப் போன்றவர்களுக்கு இத்தகைய ஏடுகளைப் படிக்க வாய்ப்பு தரும் நூல் நிலையங்களாக மருத்துவர்களின் கடைகள்தான் விளங்கின. அத்தகைய மருத்துவ சமுதாயத்திலே பிறந்து தியாகத் திருவிளக்காக-இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்ட மாபெரும் கலைஞராக வாழ்ந்தவர்தான் தியாகி விசுவநாததாஸ்.
அந்தத் தியாகியின் நினைவாக ஒரு நினைவில்லத்தை உருவாக்க வேண்டும் - அதுவும் அவர் வாழ்ந்த இடத்தையே நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏன் எனக்கு ஏற்பட்டது என்றால் நான் அநேகமாக எல்லாப் பத்திரிகைகளையும் படிக்கும் பழக்கம் உள்ளவன்- அது நாளேடாக இருந்தாலும் சரி, வார ஏடாக இருந்தாலும் சரி, எல்லா ஏடுகளையும் படிக்கக் கூடியவன்-சில ஏடுகள் வேண்டுமென்றே எதிர்த்து எழுதுகிற ஏடுகளாக இருக்கும்-என்னைப் பற்றியும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற கழகத்தைப் பற்றியும், அல்லது என் தலைமையிலான ஆட்சியைப் பற்றியும் வேண்டுமென்றே கலைஞர் வெறுப்போடு எழுதக் கூடிய ஏடுகளும் உண்டு- அத்தகைய ஏடுகளை நான் படிக்க வேண்டாமெனக் கருதி, என் உதவியாளர்கள்கூட என் பார்வைக்கு வைக்கத் தயங்குவார்கள்.
இப்படி சிதிலமாகிக் கிடந்த பூலித்தேவன் மாளிகையை இருந்தாலும் நான், 'அவர்கள் என்னதான் சொல்கிறார்கள்- எழுதுகிறார்கள்' என்று பார்ப்பதற்காகவே அந்த ஏடுகளையும் கொண்டு வரச் சொல்லி, அவைகளைத் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையதால்- ஒருநாள் " குமுதம் " பத்திரிகையில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றினைப் படித்தபோது, அதிலே அவர் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருப்பதைக் காண நேரிட்டது.
இவ்விதம் மாற்றிப் புதுப்பித்தேன் அதற்கு முன்பேகூட, " ஆனந்த விகடன் " வார இதழில், வீரன் சுந்தரலிங்கத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். வீரபாண்டிய கட்டபொம்மனுடைய தளபதிகளில் ஒருவர்தான் வீரன் சுந்தரலிங்கம் . கழக அரசு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர்களுக்கெல்லாம் வீடுகள் கட்டிக் கொடுத்து-வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. ஆனால் கட்ட பொம்மனின் தளபதியாக இருந்த சுந்தரலிங்கத்தின் வாரிசுதாரர்கள்- வழித் தோன்றல்கள் வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று விகடன் கட்டுரையில் படித்ததும், உடனடியாக நான் அந்த வாரிசுதாரர்களுக்கு அரசின் சார்பில் கடிதம் எழுதச் செய்து, அவர்களை வரவழைத்துப் பேசச் செய்து, சுந்தரலிங்கம் பெயரால் கட்டபொம்மன் கோட்டைக்குப் பக்கத்திலேயே " வீரன் சுந்தரலிங்கனார் நகர் " என்ற ஒன்றை அமைத்து, அங்கே 200 வீடுகளைக் கொண்டு ஒரு நகரத்தையே நிர்மாணிக்கச் செய்து, அங்கே அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, சுந்தரலிங்கத்தினுடைய வழித்தோன்றல்களைக் குடி அமர்த்தச் செய்தேன்.
அதைப்போல இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் எழுதிய கட்டுரையைப் படித்தவுடன், அதற்கடுத்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, சென்னை கோட்டை கொத்தளத்திலே தேசியக் கொடியை ஏற்றி வைத்து நான் உரையாற்றியபோது. வீரத்தியாகி விசுவநாததாசுக்கு அவர் வாழ்ந்த இடத்திலேயே- அந்த வீட்டிலேயே நினைவகம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அறிவித்ததோடு மாத்திரமல்லாமல், நான் மாவட்ட ஆட்சித் தலைவருடன் தொடர்பு கொண்டு பேசிய போதெல்லாம் இது குறித்து நினைவூட்டி, விரைவுப் படுத்திடவே, அவரும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
விசுவநாததாஸ் அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பற்றி விசாரிக்க முற்பட்டபோது அந்த இல்லத்தின் பேரில் கடன் வாங்கப்பட்டு அந்த இல்லமே கடனில் மூழ்கிய காரணத்தால்-ஒருவர் அந்த இல்லத்தை ஏலத்தில் 2000 ரூபாய் அளவிற்கு எடுத்து, தன் வசப்படுத்தி வைத்திருந்தார். அரசாங்கம் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, கடைசியில் 11 இலட்சம் ரூபாய் அந்த இல்லத்திற்காகத் தந்து, அதனை வாங்கி, மேலும் 50 லட்ச ரூபாய் அரசின் சார்பில் செலவழித்து, விசுவநாததாஸ் அவர்களின் நினைவில்லம் கட்டப்பட்டு, அதனைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் நானே கலந்து கொண்டேன்.
நினைவில்லத்தைத் திறந்து வைத்தது மாத்திரமல்ல-தியாகி விசுவநாததாஸ் அவர்களின் வாரிசுகளையும் கழக அரசு கைவிட்டு விடவில்லை. விசுவநாததாஸ் அவர்களின் முதலாவது மகன், தியாகி சுப்பிரமணியதாஸ் காலமாகி விட்டார். அவரது துணைவியார் திருமதி கண்ணம்மாளுக்கு கலைஞர் நெல்லை மாவட்டம், பாண்டியபுரத்தில் நான் திறந்து வைத்த சமத்துவபுரம் மத்திய அரசின் தொடர் ஓய்வூதியமாக 3000 ரூபாய் கிடைத்துக் கொண்டு வந்தது. அவர்களுக்கு மாநில அரசு ஓய்வூதியமாக 500 ரூபாயும், மருத்துவப் படியாக 15 ரூபாயும் தொடர்ந்து கிடைக்கக் கழக அரசு ஆணையிட்டது.
விசுவநாததாஸ் அவர்களின் மகள் திருமதி பிச்சம்மாள். அவருக்கு மாநில அரசு தொடர் ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாயும், மருத்துவப் படியாக மாதம் 15 ரூபாயும் அளிக்கவும்-விசுவநாததாஸ் அவர்களின் மகன் காசிநாதனின் மகள் திருமதி பாப்பாத்தி அம்மாள் என்பவருக்கு மாநில அரசு தொடர் ஓய்வூதியமாக 1500 ரூபாயும், மருத்துவப்படியாக 15 ரூபாயும் அளிக்கவும்-அடுத்து அவரது மகள் தங்கத்தாய் என்பவருக்கும் மாநில அரசு தொடர் ஓய்வூதியமாக 1500 ரூபாயும், மருத்துவப்படியாக 15ரூபாய் அளிக்கவும்-அடுத்து அவருடைய மகன் முத்தையாதாஸ் அவர்களுக்கு மாநில அரசின் தொடர் ஓய்வூதியமாக 1500 ரூபாயும், மருத்துவப்படியாக 15 ரூபாயும் அளிக்கவும் ஆணைகளைப் பிறப்பிக்கச் செய்தேன்.
விசுவநாததாசின் மகனான முத்தையா தாசுக்கு திருவல்லிப்புத்தூர் வட்டம், பாட்டக்குளம், கல்லிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் ஒரு வீடும் ஒதுக்கப்பட்டது. விசுவநாததாசின் பேரன் குணசேகரனுக்கு சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது. விசுவநாததாசின் பேத்தி நிர்மலாதேவி யின் கணவரான கே.கணேசனுக்கு ரெடிமேடு ஆடைகள் தயாரிக்க ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
விசுவநாததாசின் பேரன் குணசேகரனுக்கும், பேரன்களின் மனைவியரான திருமதி கிருஷ்ணவேணி, திருமதி. உமாராணி ஆகியோருக்கும் பேத்திகள் சரஸ்வதி, பாக்கிய லட்சுமி, பஞ்சவர்ணம், நிர்மலாதேவி ஆகியோருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் அரசினால் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்த வந்த விசுவநாததாசின் மகள் திருமதி பிச்சம்மாளின் பேத்தி திருமதி அமலம் புஷ்பத்திற்கு 3500 ரூபாய் செலவிலே ஒரு தையல் இயந்திரம் அரசின் சார்பில் வழங்கப்பட்டது.
அதைப் போலவே, விசுவநாததாசின் மற்றொரு மகள் திருமதி தங்கத்தாயின் பேத்தி திருமதி எலிசபெத் ராணிக்கும் ஒரு தையல் இயந்திரம் அரசின் சார்பில் அந்த விழாவிலே வழங்கப்பட்டது. தியாகி விசுவநாததாசின் நினைவில்லத் திறப்பு விழாவிலே கலந்து கொண்ட இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பேசும்போது- "இந்தியத் திருநாட்டிலே எத்தனையோ மாநிலங்கள் இருந்த போதிலும்கூட, தமிழ் மண்ணிலே விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களையெல்லாம் நெஞ்சத்திலே வைத்து, இந்தியாவிலே எந்த முதலமைச்சரும் செய்யாத பெருமையினை தியாகிகளுக்குச் செய்த முதலமைச்சர் கலைஞர் அவர்களை நாம் பெரிதும் எந்த நேரத்திலும் நெஞ்சு நிறைய வாழ்த்துகின்றோம்.
இந்தியா முழுவதும் சுற்றி வந்த அனுபவத்திலே சொல்கிறேன்-வேறு எந்த மாநிலத்திலும் தியாகிகளுக்கு இந்த அளவுக்கு சிறப்புக்களைச் செய்யவே இல்லை. இப்படிப்பட்ட மிகப்பெரிய பணியைச் செய்து கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நாம் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. விசுவநாகதாஸ் போன்றவர்களுக்கெல்லாம் நினைவுச் சின்னம் எழுப்பி, இந்த நாட்டிலே தியாகிகளையெல்லாம் மதிக்கின்ற நீங்கள், தியாகிகளின் நெஞ்சம் இருப்பதுவரை மட்டுமல்ல- தியாகிகளுடைய நினைவு இந்த நாட்டிலே இருக்கும்வரை-உங்களுடைய நினைவும் இருக்கும் என்று பெருமையோடு கலைஞர் சொல்லிக் கொள்கிறேன்.
உங்களுக்குக் கோடி நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்றார். விசுவநாததாஸ் அவர்கள் எந்த அளவிற்கு பல ஏகாதிபத்தியங்களால் வெறுக்கப்பட்டவர் - அல்லது எத்தனை ஏகாதிபத்தியங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் என்பதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமேயானால்- பண்டித நேரு அவர்கள், இந்திரா காந்தி அம்மையாரோடு ஒருமுறை இலங்கைக்குச் சென்றார். அவர்கள் சென்ற அதே கப்பலில் விசுவநாத தாசும் அவருடைய குழுவினரோடு கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக இலங்கை சென்றார்.
தலைமன்னாரில் போய் கப்பல் நின்றதும், நேரு அவர்களையும், இந்திரா காந்தி அவர்களையும் இலங்கையிலே இறங்க, அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் விசுவநாததாசையும், அவரது குழுவினரையும் அங்கே இறங்கக் கூடாது என்று திரும்ப இந்தியாவுக்கே அனுப்பி வைத்தது. அதற்குக் காரணம், அவர்கள் அங்கே வந்து கலை நிகழ்ச்சி நடத்தினால் பெரிய புரட்சி ஏற்படும் என்ற காரணமாக அவர்களை அந்த நாட்டு அரசு திரும்ப அனுப்பி வைத்தது.
இத்தகைய புகழுக்குச் சொந்தக்காரரான தியாகி விசுவநாததாசின் நினைவில்லத்தை உருவாக்க தி.மு.கழக அரசு பாடுபட்டது. அண்மையிவே கூட அந்த இல்லம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, ஒரு ஏட்டிலே வெளி வந்ததும், நானே மதுரை மாவட்ட ஆட்சியருக்குப் போன் செய்து விசாரித்தேன். அவர் அந்தச் செய்தியை மறுத்ததோடு, செய்தியாளர்களை எல்லாம் அந்த இல்லத்திற்கே அழைத்துச் சென்று, உண்மையில் அந்த இல்லம் எவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நேரிலே காட்டினார்.
கழக அரசு எந்த அளவிற்குத் தியாகிகளை மறவாமல் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றல்லவா? விசுவநாததாஸ் அவர்களின் நினைவில்லத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நான், அன்றைய தினம் மதுரையில் கிறித்துவ சமுதாயத்தின் சார்பில் நடத்தப்பட்ட மதுரை மறை மாநில வைர
விழா - சமுதாய நல்லிணக்க விழாவிலும் கலந்து கொண்டேன். மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி, அருள்மேம்ஸ் , மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சாலிஹூ, எஸ்றா சற்குணம், மதுரை மேயர் பெ.குழந்தைவேலு , சட்டப் பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் , குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை மாவட்டப் பேராயர் எஸ்.எஸ்.செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். "நாட்டு விடுதலைக்குத் தியாகம் செய்தவர்களுக்கு நினைவில்லங்கள் அமைத்துவரும் கலைஞருக்கு கோடி நன்றி" என்றார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அதற்கடுத்த நாள் நெல்லை மாவட்டம் சென்று, அழகிய பாண்டியபுரம் கிராமத்தில் கட்டப்பட்டிருந்த சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து நெற்கட்டும் செவலில் வீரன் பூலித்தேவன் மாளிகை திறப்பு விழாவிலே கலந்து கொண்டேன். "நேர்மையில் வீரம் நிமிர்ந்து காட்டும் நெற் கட்டும் செவல் கோட்டையன்றோ?" என்று புகழ்ந்து பாடப் படுகின்ற பூலித்தேவனுடைய கோட்டையைப் புதுப்பித்து, பூலித்தேவனுடைய சிலையைத் திறந்து வைத்து, பூலித்தேவனுடைய வீரத்தைப் பாராட்டி- தியாகத்தைப் பாராட்டி-சுதந்திரக் கனலைப் பாராட்டி- உரையாற்றினேன். ★ ★ ★ தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு, அதே டிசம்பர் திங்களில் நடை பெற்று, சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
த.மா.கா. தலைவர் அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் செய்தியாளர்களுக்குத் தீர்மானங்களை விளக்கினார். அதிலே முக்கிய தீர்மானமாக- கலைஞர் "ஜெயலலிதாவின் ஊழல் விவகாரம் உலகம் முழுவதும் அறிந்த ஒன்று - தொட்டில் குழந்தை திட்டம் முதல், சுடுகாட்டுக் கொட்டகைத் திட்டம் வரை ஊழல் செய்திருக்கிறார்" என்றார், மூப்பனார்.
"உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும், ஜெயலலிதா மற்றும் அவரது அமைச் சரவையில் இருந்த அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளில், வழக்குத் தொடர போதிய சாட்சியம் இருக்கிறது என்று சொல்லியுள்ளன. அதன் பிறகும்கூட பிரதமர் அலுவலகம் இந்த வழக்குகளைப் பழி வாங்கும் செயல் என்று அறிவித்திருக்கிறது. பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. அரசு எதற்கும் தயாராக இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது."
"1991 இலிருந்து 1996 வரை தமிழகத்தை ஆண்டு வந்த ஜெயலலிதா அரசின் ஊழல், உலகம் முழுவதும் அறிந்த ஒன்று தொட்டில் குழந்தைகள் திட்டத்திலிருந்து சுடுகாட்டுக் கொட்டகை வரை அரசின் அத்தனை திட்டங்களிலும் ஊழல் செய்த ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் மீதும் பல வழக்குகள் தொடங்கப்பட்டு, தற்போது தனி நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுகின்றன."
"ஜெயலலிதா மீதுள்ள வழக்குகளை விசாரித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை மாற்றினார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம். ஜெயலலிதா மீதுள்ள வழக்குகளை நடத்தி வந்த வழக்கறிஞர்களை மத்திய சட்ட அமைச்சர் தம்பிதுரை மாற்றினார். அதன் பின்னர் நீதிபதிகளையே மாற்றும் முயற்சி நடந்து, இப்போது பிரதமரின் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையில், நீதிமன்றங்களையே மாற்றும் முயற்சியை மேற்கொண்டிருப்பது நேர்மையான நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரையும் நெஞ்சம் பதற வைத்துள்ளது" என்ற தீர்மானத்தை மூப்பனார் அவர்களே செய்தியாளர்களிடம் விளக்கியதோடு, மத்திய அரசுக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
த.மா.கா.மாத்திரமல்லாமல். 21.12.1998 அன்று திருச்சியிலே கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், "ஜெயலலிதாவைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் நல்லகண்ணு அவர்களும் மத்திய அரசின் செயல்பாட்டிற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்தார். கட்சிகள் எல்லாம் இந்த அளவிற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நேரத்தில், ஏடுகளும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக, 22.12.1998 தேதிய " இந்துஸ்தான் டைம்ஸ் " நாளேட்டில் அதன் செய்தியாளர் ஜி.சி.சேகர் பின்வருமாறு எழுதியிருந்தார்:- "தன்னுடைய புனிதத் தன்மையிலிருந்து பா.ஜ.க.வலுக் கட்டாயமாக விலகிச் செல்லக்கூடிய வகையில் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே ஊழலுக்கு எதிராக செயல்படுவதை விட ஊழல் குற்றங்களுக்கு ஆளானவர்களோடு இணைந்து செயல்படக் கூடிய நிலையை பா.ஜ.க.தேர்வு செய்துள்ளது. வழக்குகளைத் தாமதப்படுத்த-அதற்கேற்ப நீதிமன்றத்தில் வாஜ்பாய் அரசு கலைஞர் "கூட்டணிக் கட்சிகளால் பா.ஜ.க. அரசுக்கு தலை குனிவு ஏற்படுகிறது" என்று அ.தி.மு.க.
பற்றிக் குறை கூறினார், அத்வானி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. அந்த நாடகத்தின் கதையை அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் அதில் நடிக்கப் போகிறவர்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரலும், மத்திய சட்ட அமைச்சரும், ஏன் பிரதமரின் அலுவலக அதிகாரிகளும் கூட, அதன் முதல் கட்டமாகத்தான் மத்திய அரசு- அல்லது அ.தி.மு.க. அமைச்சர் தம்பிதுரை தலைமையிலான மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் கடுமையாக செயல் பட்ட விதமாகும்.
"சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்ததை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவசர அவசரமாக ஆந்திரப் பிரதேசத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, அவர் அங்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்."
"இந்த முழு நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளவற்றைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், "ஜெயலலிதாவைப் பாதுகாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது" என்று சரியாகவே விமர்சித்துள்ளார். அரசியலில் பழி வாங்கவே ஜெயலலிதா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமரின் அலுவலகம் விநோதமாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தவொரு கருத்தின் மூலமே, அரசியல் காரணங்களுக்காகத்தான் உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக மத்திய அரசு விளையாடுகிறது என்பதை வாஜ்பாய் நிரூபித்துவிட்டார்."
-என்று அந்த ஏடு குறிப்பிட்டது. ★ ★ ★ "இந்தியன் எக்ஸ்பிரஸ் " நாளேடும், " இந்து " நாளேடும் இதே பாணியில் "குற்றவாளி விருப்பப்படி நீதிபதி நியமனமா?" என்ற தலைப்பில் மத்திய அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டித்து நீண்ட கட்டுரை தீட்டியிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக " துக்ளக் " நாளேடு, 30.12.1998 தேதிய இதழில் எழுதிய தலையங்கத்தில் சில பகுதிகள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவையாகும். "ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றங்களை விசாரிக்க, விசேஷ நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் உண்டு-மாநில அரசுக்கும் உண்டு.
மத்திய அரசு இந்த உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று கூறியதோடு மட்டும் நிறுத்தியிருந்தால், சட்டத்தின் தெளிவின்மையால் அவர்கள் வைத்த தவறான வாதம் இது என்று கூறிவிடலாம். ஆனால், மத்திய அரசோ தனது உரிமையை வலியுறுத்தியதோடு நிறுத்தாமல், "ஒருவரைப் பழி வாங்குவதையும், இம்சை செய்வதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று கூறியிருக்கிறது.
இதனால்தான் மத்திய அரசின் நோக்கம் பற்றிய சந்தேகமே வருகிறது." "அவர்களுடைய தவறான வாதத்திற்கு, சட்டத்தின் தெளிவின்மை மட்டும் காரணமல்ல-ஊழலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவறான நோக்கமும் கூட இதற்கு ஒரு காரணமோ என்ற சந்தேகம் வருகிறது. பழி வாங்குதல்-இம்சை என்று மத்திய அரசு எதைச் சொல்கிறது? ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர்கள் மீது வழக்கு நடத்துவதே பழி வாங்குதலா? பழி வாங்குதல்-இம்சை என்று கூறியதன் மூலம், மத்திய அரசு தனது நோக்கத்தை முழுமையாகத் தெளிவுபடுத்திவிட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊழல் பாதுகாப்புச் சட்டமாக மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்." - இப்படி "துக்ளக்" எழுதியது. கலைஞர் இவ்வாறு பல நாளேடுகளும், அரசியல் கட்சிகளும் கூறியதற்குப் பிறகும், மத்திய அரசு இதில் தலையிட்டு, 5.2.1999 அன்று தனி நீதிமன்ற வழக்குகளை வேறு நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளைத் தனி நீதிமன்றங்களில் இருந்து வேறு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு மாற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும்-ஜெயலலிதாவை ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாக்கவே மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது என்றும்- இது சட்ட விரோதமானது என்றும்-ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என்று கூறிய பாரதீய ஜனதா அரசு ஊழலுக்குத் துணை போய்விட்டது என்றும்-அரசியல் சட்டத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி ஊழல்களை மறைக்க உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டது என்றும்-எதிர்க்கட்சிகள் எல்லாம் தங்கள் கண்டனத்தை மத்திய அரசுக்குத் தெரிவித்தன.
குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா அவர்களும், ஜனதாதளத்தின் மூத்த தலைவராக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் அவர்களும் ஆர்.நல்லக்கண்ணு அவர்களும், ஆர்.எம்.வீரப்பன் அவர்ளும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து அறிக்கைகளை விடுத்தனர். பார் அசோசியேஷன் தலைவர் பி.என்.லேகி, மூத்த வழக்கறிஞர்கள்- அபிஷேக் மனு சிங்வி, பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் எல்லாம் "மத்திய அரசின் நடவடிக்கை ஜெயலலிதாவைப் பாதுகாப்பதற்காகவே எடுக்கப்பட்டது- மத்திய அரசின் அறிக்கை தனி நீதிபதியின் வரம்பை ஒரு போதும் கட்டுப்படுத்தாது" என்றும் கருத்து தெரிவித்தனர்.
8.2.1999 தேதிய " டைம்ஸ் ஆப் இந்தியா " - " டெக்கான் கிரானிக்கல் " - " பயனீர் "- "பிசினஸ் ஸ்டாண்டர்டு" "தி இந்துஸ்தான் டைம்ஸ்" போன்ற புகழ் பெற்ற ஆங்கில ஏடுகள் எல்லாம் ஜெயலலிதா மீதான வழக்குகளை மாற்றம் செய்திருப்பது "அரசியல் உள் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை" என்று பக்கம் பக்கமாகக் கண்டித்து எழுதின.
"வெட்கம் - வேதனை" என்ற தலைப்பில் ஜெயலலிதா - மற்றும் சகாக்கள் மீது 46 ஊழல் வழக்குகள் உள்ளன." - என்று எழுதியது 'தினமணி' "தினமணி " நாளேடு 9.2.1999 அன்று "வெட்கம்- வேதனை" என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றையே எழுதியிருந்தது. அதில், "ஒருவருடைய நிழல் அவருடன் கூடவே தொடர்வது போல, அவர் செய்த தீவினைகளும் அவரை விடாமல் தொடரும் என்பது குறள். குறள் நெறியை மெய்ப்பிப்பது போல, ஜெயலலிதா ஆட்சியில் தாண்டவமாடிய ஊழல்கள், அவருடைய ஆட்சியைக் கவிழ்த்தது மட்டுமன்றி, பதவியிழந்த பிறகும் ஜெயலலிதாவை விடாமல் தொடர்ந்து பல்வேறு வழக்குகளின் உருவத்தில் சூழ்ந்து கொண்டன.
அவருக்கு எதிராகவும், அவருடைய அமைச்சர்களுக்கு எதிராகவுமான 46 ஊழல் வழக்குகள் 3 சிறப்பு நீதிமன்றங்களில் இருந்து வருகின்றன. வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இத்தகைய விசாரணை நடக்கிறது." "சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படுவதன் நோக்கம் என்ன? ஊழல் வழக்குகள் சாதாரண நடைமுறையில் - பொதுவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால், அவற்றில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படும்.
ஏன்-ஆண்டுக்கணக்கில் இழுபறியாகக் கூடும். 3 சிறப்பு நீதி மன்றங்களும் வேகமாகவும் முறையாகவும் செயல்படத் தொடங்கின. இவ்வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளிவரக்கூடிய "ஆபத்தைக்" கண்டு கொண்ட ஜெயலலிதா, விசாரணையைத் தாமதப்படுத்தவும், முடக்கவும் பல தந்திரங்களைக் கையாண்டு பார்த்தார். சிறப்பு நீதிபதிகள் அசைந்து கொடுக்கவில்லை. அந்த நீதிபதிகளை மாநில அரசு நியமித்ததே செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ஏமாற்றமடைந்தார்."
"சிறப்பு நீதிபதிகள் நியமனம் சட்டப்படி முறையானதே- செல்லத்தக்கதே" என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. கலைஞர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா செய்துகொண்ட மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட்டு, சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் வழக்குகளை பல்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அவசர ஆணையை வெளியிட்டு இருப்பது மத்தியப் பணியாளர் அமைச்சகம். இந்த அமைச்சகம் பிரதமர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோரின் பொறுப்பில் உள்ளது. "சிறப்பு நீதிபதிகள் நியமனம் செல்லக் கூடியதே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தீர்ப்பே, உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்படாத வரையில், நடைமுறையில் இருக்கக்கூடியது. அப்படியிருக்க, மத்திய அரசு இப்படித் தடாலடியாக நடந்து கொண்டிருப்பது முறையாகாது.
இது நீதிமன்றத்தையே அவமதிப்பதாக எண்ணுவதற்கு இடம் அளிக்கிறது. தூய்மையான பொது வாழ்வு கொண்ட வாஜ்பேயியின் அரசு இப்படி நடந்து கொண்டிருப்பது அல்லது நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பது வேதனைக் குறியது மட்டுமல்ல-வெட்கக்கேடானதும் கூட" என்று குறிப்பிட்டிருந்தது.
★ ★ ★ மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து, 14.2.1999 அன்று தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் அறிவித்து, அவ்வாறே கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் 9.2.1999 அன்று தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் இணைந்து, மாநிலம் எங்கும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் நகல்களை ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கல் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விசாரணையைத் தொடர்ந்து நடத்தக் கூடாது என்று கோரினார்கள்.
இதைத் தனி நீதிமன்றம் ஏற்க மறுத்து, அவர்களது கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது. அந்த நிலையில் ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துகர் ஆகியோரின் முன்பு 15.2.1999 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் நாரிமன், சாந்திபூஷன் ஆகியோரும், ஜெயலலிதா தரப்பில் கே.கே.வேணுகோபால் அவர்களும் வாதாடினார்கள்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள் மத்திய அரசின் வழக்கறிஞர்களைப் பார்த்து- "ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை மாற்றவது என்பது முழுவதும் நீதித்துறையின் பணி, மத்திய அரசு நிர்வாகம் எப்படி இதில் தலையிட்டு வழக்குகளைப் பிரித்து 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது? நீதித்துறையின் தனிப்பட்ட உரிமையை மத்திய அரசு எப்படிப் பயன்படுத்த முடியும்?"
என்றெல்லாம் வினாக்களைத் தொடுத்தார். மத்திய அரசின் ஆணைக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் அந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி "ரிட்" மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். தனி நீதிமன்ற வழக்கை மாற்றிய மத்திய அரசின் அறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில், 18.02.1999 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவி
னை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதன் மீதுள்ள விசாரணையை 8.3.1999க்கு ஒத்தி வைத்தனர். "ஊழல் தடுப்புச் சட்டத்தை, அ.தி.மு.க.விற்காக 'ஊழல் பாதுகாப்புச் சட்டம்' என மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம்" என்றது 'துக்ளக்' இந்த நிலையில் மத்திய உள் துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி அவர்கள் 14.2.1999 அன்று ஒரு கூட்டத்தில் கலைஞர் பேசும் போது, "கூட்டணிக் கட்சிகளால் பா.ஜ.க.
அரசுக்குத் தலைக் குனிவு ஏற்படுகின்றது-கூட்டணிக் கட்சிகளின் மிரட்டலால் திறமையாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது" என்று குறிப்பிட்டார். அப்போது மத்திய செய்தி - ஒலி பரப்புத்துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "பீகாரைப் போன்று தமிழக அரசையும் கலைக்க வேண்டுமென்று ஜெயலலிதா கோரியுள்ளதை தான் ஆமோதிக்கவில்லை-சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தமிழகத்தை பீகார் நிலைமையோடு ஒப்பிட முடியாது" என்று தெரிவித்தார்.
பீகார் அரசு கலைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் தீர்மானம் வரும்போது, காங்கிரஸ் கட்சி அந்தத் தீர்மானத்தை எதிர்க்கும் என்றும், ஆட்சிக் கலைப்புக்கு ஆதரவு தராது என்றும் அறிவிக்கப்பட்டது. "காங்கிரஸ் கட்சியின் அந்த முடிவு பாராட்டுக்குரியது- இந்திய அரசியல் வரலாற்றில் அது நல்ல திருப்புமுனையாகும்" என்று செய்தியாளர்கள் கேட்டபோது நான் கருத்துக் கூறினேன்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26.2.1999 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, வாழப்பாடி ராமமூர்த்தி யிடம் இருந்த பெட்ரோலியத் துறையை அ.தி.மு.க. வுக்கு ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். அதே 26 ஆம் தேதியன்றுதான் மக்களவையில் பீகார் தீர்மானம் வாக்கெடுப்புக்காக வர இருந்தது. இதற்கிடையே தெலுங்கு தேசக் கட்சியின் ஆதரவை வாஜ்பாய் அவர்களும், பிரமோத் மகாஜன் அவர்களும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.
பீகாரில் ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதள அரசை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்று தெலுங்கு தேசம் நிபந்தனை வைத்து, அதனைப் பிரதமர் அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பேரில் மக்களவையில் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெலுங்கு தேசம் ஒப்புக் "குற்றவாளி விருப்பப்படி நீதிபதி நியமனமா?"என்று கேட்டது 'இந்து நாளேடு' கொண்டது.
அதன் காரணமாக 26ஆம் தேதி மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது, தீர்மானத்திற்கு ஆதரவாக 279 வாக்குகளும், எதிர்ப்பாக 250 வாக்குகளும் கிடைத்தன. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மையான இடங்கள் இருந்ததால், அங்கே அந்தத்தீர்மானம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பா.ஜ.க.அரசு அந்தத் தீர்மானத்தை மாநிலங்கள் அவைக்கே கொண்டு வராமல் இருந்ததால், வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாத நிலைமை மாநிலங்களவையில் இருந்தது.
அந்த நிலையில் கடைசி முயற்சியாக மாநிலங்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும்பொருட்டு, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைப் பிரதமர் வாஜ்பாய் தனது இல்லத்திற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தையில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி , மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மன்மோகன்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். வாஜ்பாய் அவர்களின் கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்துவிட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கலைஞர் அதன் பின்னர் அமைச்சரவை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடி எடுத்த முடிவினை மக்களவையில் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.பீகார் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அத்வானி அவையிலே அறிவித்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். மத்திய அரசின் அந்த முடிவு குறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டனர்.
"பல ஆண்டுகாலமாக அரசியல் சட்டத்திலே உள்ள எந்த 356வது பிரிவை எதிர்த்து தி.மு.க.குரல் கொடுத்து வருகிறதோ- அந்தப் பிரிவு ஜனநாயகத்தின் முன்னால் முடங்கிப்போய் விட்டது என்பதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்றத்தில் பீகார் கலைப்பு மசோதாவை ஆதரிப்பதில்லை என்று இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தபோதே, நான் அதை இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டேன். இப்போதும் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் திருமதி சோனியா காந்தியும் முதலில் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து 356 இன் மூக்கை அறுத்ததற்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினேன்.
உடனே செய்தியாளர், "பீகாரிலேயே அரசு கவிழ்ப்பு நடக்க முடியாத நிலையில், தமிழ் நாட்டிலும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று சில பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே-அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டனர். "கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வழியாகச் சென்றால், உள்ளேயிருந்து எத்தனையோ குரல்கள் கேட்கும். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது செல்பவர்கள் குற்றமே தவிர, உள்ளேயிருந்து குரல் கொடுப்பவர்களின் குற்றமல்ல" என்று நான் பதிலளித்தேன்.
