நெஞ்சுக்கு நீதி
பொன்முடியின் புத்தகம் · 353 / 391
41. பொன்முடியின் புத்தகம் பெரியார் திடலுக்கு நான் போனாலும், போகா விட்டாலும் பெரியார் என் நெஞ்சை விட்டுப் போக மாட்டார். என் எழுபத்து ஐந்தாம் ஆண்டு அகவையையொட்டி பவள விழா என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் விழாக் கொண்டாட முடிவு செய்து, சில மாவட்டங்களில் கொண்டாடி முடித்துள்ள நிலையில், 1.11.1998 அன்று நான் ஒரு அறிக்கை விடுத்தேன். அந்த அறிக்கையில், கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அதுவரை கொண்டாடப்பட்ட இடங்களில் செய்யப்பட்ட தேவையில்லாத ஆடம்பரங்களையும், அலங்காரங்களையும் அந்த விழா மேடைகளிலேயே நான் கண்டித்து, அவற்றை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனாலும், அந்த ஆடம்பர ஏற்பாடுகள் தொடர்ந்த காரணத்தால் அந்த அறிக்கையினை நான் விட நேர்ந்தது. "நூறு கழகக் கொடிகளை வரிசையாகக் காணும்போது எனக்கு ஏற்படுகின்ற எழுச்சியும், மகிழ்ச்சியும், ஆயிரம் அலங்கார விளக்குகளைக் காணும்போது ஏற்படவில்லை- என்று கோவை நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டதை ஏடுகளில் நீங்கள் படித்திருப்பீர்கள்.
பவள விழா நிகழ்ச்சியென்பது அதில் கலந்து கொள்கிற கழக முன்னணியினர் மற்றும் சொற்பொழிவாளர்கள் அனைவரது உரைகளுமே என்னையே சுற்றிச் சுற்றி அமைகிறதேயன்றி, நாட்டு நடப்பு-அரசியல் நிலவரம்-நமது இயக்கக் கொள்கை விளக்கங்கள்-கழக அரசின் சாதனைகள்-அரசு பற்றிய விமர்சனங்களுக்கு ஆதார- கலைஞர் பூர்வமான விளக்கங்கள்-என்பன போன்ற பலவற்றை மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறி விடுவதை நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கண்டு மிகுந்த வேதனைப்படுகிறேன்."
"எனவேதான் நான் திடமாக முடிவெடுத்து இப்போது அறிவிக்கிறேன், இனி என்னை அழைத்து என் பவளவிழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று! பவளவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகளை அமைக்காமல், பொதுக் கூட்டங்களில் என்னைக் கலந்து கொள்ளச் செய்தால்-நானும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னணியினர், மற்றும் சொற்பொழிவாளர்களும் கழகத்தின் அரசியல்-சமுதாய பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய விளக்கங்களை அளிக்க முடியும்-பொது மக்களுக்கும் அவை பயனுடையதாக அமையும்.
என்னைப் பற்றித் தான் தமிழ்ப் பெருமக்களுக்கு அறுபது ஆண்டுகளாகத் தெரியுமே-அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதும், இறுதியாக அந்த நிகழ்ச்சியில் நான் ஏற்புரை ஆற்றிடுவதும் தேவையில்லை- தேவையே இல்லை." பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது அண்ணா என்னைக் கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தாரே - அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது" என்று குமுதம் இதழுக்குப் பேட்டி அளித்தேன் எனவே இனி என்னை மாவட்டங்களில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியென்று அழைத்தால் தான் அவற்றில் கலந்து கொள்வதாக இருக்கிறேன்.
அந்த நிகழ்ச்சிகளே சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பயன்படும் கருத்துப் பூங்காவாக விளங்கிட முடியும் என்பது என் எண்ணம்." இவ்வாறு அந்த அறிக்கையில் நான் கேட்டுக் கொண்டேன். ★ ★ ★ அதே நவம்பர் திங்கள் முதல் வாரத்தில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், ஜெயலலிதா மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதி விசாரணை அமைத்ததை "எதிர்த்து, ஜெயலலிதா போட்டிருந்த வழக்கைத் தள்ளுபடி செய்து "உயர்நீதி மன்ற பெஞ்ச் தீர்ப்பளித்ததைப் பற்றி என் கருத்து என்ன?"
என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஜெயலலிதா மீதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், முன் ஜாமீன் கேட்டு அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றபோதே, நீதிபதி சிவப்பா போன்றவர்கள் அளித்த தீர்ப்பில், அந்த வழக்குகள் ஜெயலலிதாவின் கூற்றுப்படி, வேண்டுமென்றே அரசாங்கம் தொடர்ந்த வழக்குகள் அல்ல என்றும், பூர்வாங்க ஆதாரங்கள் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இருக்கின்றன என்றும் தீர்ப்பளித்து, முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்."
"ஆனால் ஜெயலலிதாவும், அவரைச் சார்ந்தவர்களும் தனி நீதிபதிகள் விசாரணை கூடாது என்றும், இவை வேண்டுமென்றே தொடரப்பட்ட வழக்குகள் என்றும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து-தனி நீதிபதிகள் விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று வைத்த கோரிக்கை தள்ளுபடி செய்யப் பட்டிருக்கின்றது."
"There was no malafide on the part of the state govenment" (மாநில அரசுக்கு இதிலே எந்த விதமான கெட்ட நோக்கமும் கிடையாது) என்று உயர் நீதிமன்றம் தெளிவாகவே அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது" என்று பதில் அளித்தேன். கலைஞர் இந்தத் தீர்ப்பு பற்றி 5.11.1998 தேதிய "ஸ்டேட்ஸ்மென்" இதழில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளி வந்தது. அந்தக் கட்டுரையின் சில முக்கியப் பகுதிகள் வருமாறு:- "தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய முன்னாள் அமைச்சரவை சகாக்களில் பெரும்பாலோர், மற்றும் சில உயர் ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க மூன்று தனி நீதிபதிகளைத் தமிழக அரசு நியமனம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான், நீதிபதி ஈ.பத்மனாபன் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நவம்பர் 3ஆம் தேதி அளித்த தீர்ப்பு, உயர்நீதித் துறையின் சுதந்திரத்தையும், நேர்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது."
1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மூன்று கூடுதல் செசன்ஸ் நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டதும், 1997 ஏப்ரல் 30ஆம் தேதி மூன்று தனி நீதிபதிகள் நியமிக்கப்பட்டதும் செல்லும் என்றும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜெயலலிதா குற்றம் சாற்றியபடி சட்டப்படியோ, உண்மையாகவோ, தமிழக அரசுக்குத் தீயநோக்கம் எதுவும் இல்லை என்றும் டிவிஷன் பெஞ்ச் கூறியுள்ளது. "தொடக்கத்தில் இருந்தே, "முதலமைச்சர் கருணாநிதியால் அரசியல் பழி தீர்க்கும் நோக்கத்துடன் குற்றச் சாட்டுகள் சாற்றப்பட்டுள்ளன" என்று கூறி வந்த ஜெயலலிதா, அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று-தான் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தயாராகி வருகிறார்."
"உயர்நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பில், "விசாரணையின் மூலம் தவறான தோற்றத்தை உருவாக்கி, தவறான பிரச்சாரம் செய்து, தங்களை அரசியல் ரீதியில் சீர்குலைப்பதற்கான முயற்சி என்று மனுதாரர்கள் செய்யும் வாதம் ஏற்கத்தக்க தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்று கூறியிருப்பதோடு, இது கடந்த காலத் தவறுகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சி என்றும், தாங்கள் சிக்கியிருக்கும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகச் செய்யப்படும் முயற்சியுமாகும்" என்று கூறியுள்ளது."
"பொதுப் பணத்தை பெருமளவில் கையாடியதாகவும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்காகவும், மனுதாரர்கள் குற்றம் சாற்றப்படும் பொழுது உயர் பதவிகளை வகித்து, பொதுப் பணத்தை பாதுகாக்கக் கடமைப் பட்டிருந்தவர்கள் விசாரணையை சந்தித்து, தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்துத் தூய்மையுடன் வெளிவரவேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்."
"இப்போது ஜெயலலிதா செய்து கொண்டிருப்பதெல்லாம் விசாரணையைத் தாமதப்படுத்தி, பா.ஜ.க.அரசிடம் அவர் வலியுறுத்தி வருகின்ற ஒரே ஒரு கோரிக்கையான தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டு, தி.மு.க.அரசு கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் வராத பட்சத்தில், 2001 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குள் தனக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை கலைஞர் கழகத்தை வளர்த்த முன்னோடி - மூத்த தலைவர் - வேலூர் வி.எம்.தேவராஜ் உடலுக்கு மலரஞ்சலி என்ற நிலை ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறார்.
"1991 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் அரசு சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிக மோசமாக லஞ்சமும், ஊழலும் நிரம்பியதாக இருந்தது." ஜெயலலிதா தன்னுடைய புகழ்பெற்ற புது டெல்லி தேனீர் விருந்தை, இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஏ.எஸ்.ஆனந்த் பதவி ஏற்கும் வேளையில் ஏற்பாடு செய்தார். அவருடைய பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழைப் பெறும் முயற்சியில் தோல்வியடைந்த ஜெயலலிதா, தலைமை நீதிபதியை அவருடைய இல்லத்தில் சந்தித்து, அவருக்கு மலர்ச்செண்டு வழங்கினார்.
அந்நிகழ்ச்சியை ஏராளமான புகைப்பட கேமராக்களும், தொலைக்காட்சி கேமராக்களும் படம் பிடித்தன. அதன் நோக்கம், குறிப்பாக உயிர் நீதிமன்றத்தில் உள்ளவர்களுக்கு, தான் புதிய தலைமை நீதிபதிக்கு நெருக்கமானவர் என்ற செய்தியைத் தெரிவிப்பதுதான். மூப்பனார் - பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இருவரும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல... ஆழ்ந்த பக்திமான்கள் - அவர்கள் இருவரும் கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள்.
தாமதமாக அளிக்கப்பட்ட போதிலும், இந்தத் தீர்ப்பு சட்டத்தின் மேன்மையை உயர்த்தியிருப்பதோடு, நீதி பாரபட்சமற்றது என்பதையும் நிரூபித்துள்ளது." என்று "ஸ்டேட்ஸ்மென்" ஏடு கட்டுரை தீட்டியிருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் 3.11.1998 அன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், நீதிபதி வி.என். நரே , நீதிபதி எம்.சீனிவாசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த அப்பீல் மனு 6.11.2008இல் தாக்கல் செய்யப்பட்டது.
தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். "எந்த அடிப்படையிலும் தனி நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு நாங்கள் தடை விதிக்கமாட்டோம். எனவே இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.
★ ★ ★ கலைஞர் "கோயில் கூடாது என்பதல்ல என் கொள்கை - கோயில் கொடியோரின் கூடாரமாக இருக்கக்கூடாது" என்று நான் 'பராசக்தி' படத்தில் வசனம் எழுதினேன் சிவகங்கை மாவட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளராக செம்மையுடன் பணியாற்றி வந்த வே.ரூசோ, 8.11.1998 அன்று இரவு தேவ கோட்டையில் கொடூரமாகக் கொல்லப் பட்டார் என்ற செய்தி, 8ஆம் தேதி நள்ளிரவில் எனக்குக் கிடைத்து, உடனடியாக தம்பி மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு, அந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திடச் செல்லுமாறு பணித்தேன்.
ரூசோ சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும், துணைத் தலைவராகவும் அப்போது பணியாற்றி வந்தார். வயது 39 தான். ரூசோ தேவகோட்டையில், திருப்பத்தூர் சாலையில், புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள அண்ணா சாலையில் வசித்து வந்தார். 8ஆம் தேதியன்று இரவு ரூசோ தனது அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். செந்தில் குமார் என்பவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
கார் ரூசோவின் வீட்டிற்கு அருகே வந்துள்ளது. சாலையின் குறுக்கே மொபட் பைக் ஒன்றை நிறுத்தி, இரண்டு பேர் பழுது பார்ப்பதுபோலப் பாசாங்கு செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். ரூசோவின் கார் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். ஓட்டுநர் காரின் ஹாரனைத் தொடர்ந்து அடித்தும், அந்த இரண்டு நபர்களும் வழி விடுவதாக இல்லை. இதனால் ரூசோ காரில் இருந்து இறங்கி, அந்த நபர்களை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது சாலையின் இரண்டு பகுதிகளிலும் மறைந்திருந்த ஒரு கும்பல், பயங்கர ஆயுதங்களோடு ரூசோவின் மீது பாய்ந்தது.
அதைக் கண்ட ரூசோ தப்பிக்க எண்ணி, ஓடிச் சென்று காருக்குள் நுழைந்துள்ளார். ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டிச் சென்று விடலாமென எண்ணிட, கும்பல் காரை அடித்து நொறுக்கியது. செந்தில்குமார் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியது. செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடினார். அதன் பிறகு அந்தக் கும்பலின் பிடியில் ரூசோ வசமாக மாட்டிக் கொண்டார். கொலைக் கும்பல் ரூசோவை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்று விட்டனர்.
அதன் பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரூசோவை உடனடியாக தேவகோட்டை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். முதல் உதவி சிகிச்சை செய்து, தீவிர சிகிச்சைக்காக ரூசோவை மதுரைக்கு எடுத்துச் சென்றபோது, வழியிலேயே அவர் இறந்து விட்டார். ரூசோவின் உடலுக்கு தலைமைக் கழகத்தில் சார்பில் இளைஞரணிச் செயலாளர் மேயர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், உணவுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரகுமான்கான், மு.க.அழகிரி, தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த சைதை கிட்டு, திருப்பத்தூர் சிவராமன் உள்ளிட்ட ஏராளமானோர் தேவகோட்டைக்கு விரைந்து சென்று, ரூசோவின் உடலுக்கு மலர் மாலைகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ரூசோவின் மறைவுச் செய்தியினைக் கேட்டு, சென்னையிலிருந்து தேவகோட்டைக்கு அவரது குடும்பத்தினர் காரில் புறப்பட்டுச் சென்றார்கள். திருச்சி அருகே அவர்கள் சென்ற கார் விபத்திலே சிக்கியது. அந்த விபத்திலே ரூசோவின் மாமியார் இறந்துவிட்டார். ரூசோவின் மனைவி மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர். ரூசோ மறைவுக்கு நான் எழுதிய இரங்கல் செய்தி- கலைஞர் அண்ணாவின் புதல்வர் கௌதமனின் மகள் சரிதா - சிவகுமார் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன் "கண்ணிலேயே நிற்கிறது அந்த உருவம் என்பார்களே, அது போல கண்ணிலேயே நிற்கும் உருவத்துக்குச் சொந்தக்காரனான அந்தக் கழகக் கண்மணி 'கயவர்களால் வெட்டுண்டு வீழ்ந்து மடிந்தான்' எனும் செய்தி கேட்டு, இரவு முழுதும் நான் தூங்கவில்லை.
இமைகளை மூடினால், கண்ணீர்த் துளிகள்தான் முட்டிக்கொண்டு வெளிவந்தன. "சிவகங்கை மாவட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளர்-சமுதாய ஒப்பந்தம் தீட்டிய சிந்தனையாளர் ரூசோவின் பெயரைக் கொண்டவன்-அந்த ரூசோவைத்தான் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றிருக்கின்றனர், வெறியர்கள்! இளைஞர்களின் அன்பைப் பெற்று-மக்களின் நம்பிக்கையைப் பெற்று-கழகத் தலைமையின் கனிவான ஆதரவைப் பெற்று-மாவட்டத்து முன்னணியினரின் பாசத்துக்குரிய பண்பாளனாக வளர்ந்து கொண்டிருந்த அந்த அடலேறு, மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட மிருகங்கள் சிலரது கொலை வெறிக்கு ஆளாகியிருப்பது என் நெஞ்சைப் பிளக்கிறது.
அந்த வாலிப வேங்கையை வட்டமிட்டுக் கொண்டே வாஞ்சையுடன் இந்த இயக்கம் வெற்றி நடைபோடுவதற்கு நாளும் உழைத்துக் கொண்டிருந்த இளைஞர் அணித் தம்பிமார்களுக்கும், கழக முன்னோடிகளுக்கும், குடும்பத்தினருக்கும், ரூசோவின் இழப்பு எனக்கே பேரிழப்பு என்பதைத் தெரிவித்து, ஆழ்ந்த இரங்கலைக் கூறுகிறேன்."
பொன்முடி எழுதிய "திராவிடர் இயக்கமும் கறுப்பர் இயக்கமும்" என்ற நூலை பேராசிரியர் முன்னிலையில் நான் வெளியிட, முரசொலி மாறன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இளைஞர் ரூசோ மறைந்த செய்தியைத் தொடர்ந்து, துக்கம் துணையோடு வரும் என்பதைப்போல மறுநாளே-வேலூர் மாவட்டத்தில் கழகம் வளர்த்த முன்னோடியும்,
மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எம்.தேவராஜ் இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தது. சில நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மறைவெய்தினார். வேலூர் மாவட்டத்தில் அனைத்துக் கழகத் தோழர்களாலும் "அப்பா" என்று தான் அன்பொழுக அழைக்கப்படுவார் அவர்.
விலைவாசிப் போராட்டத்தின் போது, அண்ணாவுடன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்தவர் என்ற பெருமையும் வேலூர் தேவராஜ் அவர்களுக்கு உண்டு. 25 ஆண்டுகள் வேலூர் நகர் மன்ற உறுப்பினராகவும் - ஆறு ஆண்டுகள் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், ஆறு ஆண்டுகள் வேலூர் நகர்மன்றத் தலைவராகவும், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர். அவர் மறைந்த செய்தி அறிந்ததும், நான் உடனடியாக வேலூர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
என்னுடன் ஆர்க்காடு வீராசாமி, கலைஞர் துரைமுருகன், பொன்முடி, ரகுமான்கான், கு.பிச்சாண்டி ஆகியோர் வந்தனர். அவரது மறைவு குறித்து நான் தெரிவித்த இரங்கல் செய்தியில்- "தேவ்! தேவ்! என்று அறிஞர் அண்ணா அவர்களாலும், கழக உடன்பிறப்புக்களாலும், வேலூர் பெருமக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்ட வி.எம்.தேவராஜ் மறைந்து விட்டார். மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, சி.வி.எம். அண்ணாமலை எனும் மூத்த தலைவர்களின் வரிசையில் நின்று கழகம் வளர்த்தவர் வி.எம்.
தேவராஜ்! வேலூர் வட்டாரத்துப் பிரச்சினையென்றாலோ, நிகழ்ச்சி என்றாலோ, "சாரதியையும், தேவராஜையும் கேளுங்கள்" என்று அண்ணா அவர்கள் அந்த இருவரையும் தனது தளகர்த்தர்களாக அடையாளம் காட்டிய அந்த நாள் முதல், நான் வி.எம்.தேவராஜை அறிவேன்."
"அந்தப் படை முகத்துப் பெருவீரன் பங்கேற்காத அறப் போர்க்களம் எதுவுமில்லை. நெருக்கடி கால "மிசா"க் கொடுமையேற்று, ஓராண்டு காலம் சிறையில் அடைபட்டிருந்த அந்தச் சிங்கம், தன்னோடு அடைபட்டிருந்த நூற்றுக்கணக்கான கழகக் கண்மணிகளை எப்படி அரவணைத்துக் கொண்டு, அடக்குமுறை நெருப்பைத் தாண்டினார் என்ற நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்று, எத்தனையோ முறை நெஞ்சு நெகிழ்ந்து போயிருக்கிறேன். வேலூர் நகராட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், கழகப் பாசறையின் பாதுகாப்பு அரணாகவும் அவர் திகழ்ந்ததும்-அவர் பொறுப்பில் இருந்தபோது அந்த வட்டாரத்து மக்களுக்கு நல்லவை பல நிகழ்ந்ததும்-அவரது வரலாற்றுக் குறிப்பில் வைர வரிகளாகும்.
அந்த வேலூர் வேங்கை விடைபெற்றுக் கொண்டதை எண்ணி, விழி நீர் பெருக்காதார் அந்த வட்டாரத்தில் யாருமில்லை. அந்தப் பெருமகனை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும் கழக உடன் பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தேன்.
★ ★ ★ "குமுதம்" வார இதழ் சார்பில், நவம்பர் 98இல் என்னைச் சந்தித்து, நீண்ட பேட்டி ஒன்று வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். அந்தப் பேட்டியில் சில கேள்விகள் நெஞ்சில் என்றும் நிற்கக் கூடியவை. அவர்களில் முதல் கேள்வியே "50 ஆண்டுகால தி.மு.க.சரித்திரத்தில் உங்களின் நினைவை விட்டு அகலாத முக்கிய நிகழ்ச்சி ஒன்றைக் கூறுங்கள்" என்பதுதான்! அந்தக் கேள்விக்கு விடையாக "எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு. ஒரு நிகழ்ச்சியைப் பற்றி மட்டுமே கேள்வி இருப்பதால்-பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் மொழிப் போராட்டத்தின் போது நான் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், பல்வேறு தடைகளுக்கிடையே அறிஞர் அண்ணா அவர்கள் வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சி என் நினைவைவிட்டு அகலாத முக்கிய நிகழ்ச்சியாகும்.
"தலைவனின் கண்ணீரைப் பரிசாகப் பெறுகிற அளவுக்கு சாவு ஏற்படின், அந்தச் சாவை யாசித்தாவது பெற வேண்டும்" என்ற கருத்தமைந்த "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து" எனும் திருக்குறளை நான் மேடைகளில் அடிக்கடி கூறியிருக்கிறேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு-நான் உயிரோடு இருக்கும்போதே, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கிட்டியது.சுமார் 25 கொட்டடிகள் உள்ள அந்தச் சிறைப் பிரிவில் எல்லாக் கொட்டடிகளும் காலியாக இருந்திட, நான் ஒருவன் மட்டும் தனியாக அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அண்ணா அவர்கள் என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் உகுத்தாரே, அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது" என்று கூறினேன்.
மற்றொரு முக்கியக் கேள்வி- "உங்களுடன் சேர்ந்து தி.மு.க.வுக்கு உழைத்த சகாக்களில் கட்சியை விட்டு நீங்கியவர்களில் யாருடைய பிரிவு உ உங்களை மிகவும் பாதித்தது?" என்பதாகும். கலைஞர் அதற்கு, "யாருடைய பிரிவையும் நான் தாங்கிக் கொண்டதில்லை. எத்தனை இருந்தாலும் அவர்களுடன் பழகிய பொற்காலத்தை எண்ணி இப்போதும் வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டுமானால், அப்படி மிகவும் என் இதயத்தைப் பாதித்த பிரிவு எம்.ஜி.ஆர்., நாவலர், வை.கோ.
ஆகியோரின் பிரிவு என்று எடுத்துக்கொள்ளலாம்" என்று பதிலளித்தேன். வேறு சில கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் வருமாறு:- குமுதம்:- முதல்வர் பதவி என்பது சுமையா? சுகமா? நான்:-முதல்வர் பதவி என்பது "சூழ்நிலையின் கைதி" என்று அண்ணா கூறியதைத்தான் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்கிறேன்.
குமுதம்:- எப்போதும் ஏன் ஆர்க்காட்டார் உங்களின் நிழல் போலவே இருக்கிறார்? நான்:- நான் குள்ளமானவன். சூரியனுக்கு முன்னால் என் நிழல் உயரமாகத்தான் தெரியும். குமுதம் :- தாயிற் சிறந்தொரு கோயில் இல்லை என்ற வாக்குக்கு ஏற்ப நெறிமுறைகளை அமைத்துச் செயல்படும் உங்களை ஒரு "ஆத்திகர்" என்று சொல்ல முன்வந்தால் அதை ஏற்பீர்களா?
நான்:- "கோயில் கூடாது என்பதல்ல என் கொள்கை-கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதே என் கொள்கை" என்று சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே "பராசக்தி" படத்தில் வசனம் எழுதியவனாயிற்றே நான்! ஒரு மனிதன் மனிதனுக்குரிய இலக்கணங்களுடன் வாழ்க்கை நடத்துவானேயானால், அவனை ஆத்திகன் என்றழைத்தாலும், நாத்திகன் என்று அழைத்தாலும் இரண்டும் சரியே என்பது என் கருத்து. ஒருவன் தன்னை ஆத்திகன் என்று சொல்லிக்கொண்டு பக்தர்களையும்- ஒருவன் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டு பகுத்தறிவாளர்களையும்-ஏமாற்றுவதுதான் பெரும் குற்றம்.
குமுதம்:- திருக்குவளை பற்றி சில வரிகள் சொல்லுங்களேன்? நான்:-காஞ்சிக்கும், ஈரோடுக்கும் பயணிக்குமளவுக்கு கருணாநிதிக்கு உயிரோட்டம் தந்த கருப்பை. குமுதம்:- சமீபத்தில் ரசித்த கவிதை? நான்:- "உன் இலட்சிய வெறி கிளப்பும் தீப்பொறி... மூங்கில் காட்டில் விழாமல் பார்த்துக் கொள்.... ............................. முதுகுக்குப் பின்னால் கண் வளர்த்து வை; சூழ்ச்சிகள் அறி; சகுனிகள் எத்தனை பேர்? "கணக்கெடு!"
இந்தக் கவிதையை மிகவும் ரசித்து அதில் ஒன்றிப் போனேன். இதை எழுதியவர் யார் தெரியுமா? பெயர் கபிலன்! கபிலன் யார் தெரியுமா? கவிஞர் வைரமுத்துவின் மகன்! குமுதம் :- ஜெ. மீண்டும் நடித்தால் நீங்கள் வசனம் எழுதத்தயாரா? நான்:- "மீண்டும் நடித்தால்" என்ற கேள்விக்கே இடமில்லை. இப்போதும் அரசியலில் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார். கதை, வசனம், இசை, பாடல், இயக்கம், தயாரிப்பு, முக்கியமாக "விநியோகம்" எல்லாமே அவராக இருக்கும்போது என் போன்ற பழைய எழுத்தாளர்கள் எதற்காக?
குமுதம்:- இராவணனை எப்படி திராவிடர் என்கிறீர்கள்? அவன் நான்கு வேதங்களையும் கற்ற பிராமணன் என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கூறுகிறார்களே? கலைஞர் நான்:- "இராமாயணம் திராவிடர்க்கும், ஆரியர்க்கும் நடந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று பண்டித நேரு அவர்கள் எழுதியிருக்கிறார்.
பி.டி.சீனிவாச அய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். இப்போது உங்களின் கேள்விப்படி, அவர் திராவிடனா - அல்லவா என்ற ஆராய்ச்சி பிறகு இருக்கட்டும்- "அவன் நான்கு வேதங்களையும் கற்று பிராமணன் என்று ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் கூறுகிறார்கள்" என்கிறீர்கள்-அப்படியானால் நான்கு வேதங்களையும் கற்ற பிராமணன், அசுரனாக-அரக்கனாக-வேதமோதும் வேள்விகளை அழித்தவனாகச் சித்தரிக்கப்படுவது எப்படி-என்ற கேள்விக்கு என்ன பதில் கூற முடியும்?
குமுதம்:- சமஸ்கிருத அர்ச்சனைக்கு எதிராக பக்தர்கள் யாருமே பிரச்சினை கிளப்பாத போது, அரசியல்வாதிகள்-அதுவும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்தப் பிரச்சினையை ஊதி விடுவது ஏன்? இதைவிட, இந்துக் கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டு, அறநிலையத் துறைக்கு வரவேண்டிய பெரிய வருமானத்தைத் தடுத்து வருவது பற்றி ஏன் யாரும் பேசவில்லை?
நான்:- தமிழில் அர்ச்சனை வேண்டுமெனத் தடந்தோள் கட்டிப் போர்க் குரல் எழுப்பி வருகிற தமிழறிஞர்களில் பெரும்பாலோர் பக்தர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. பகுத்தறிவாளர்கள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யாதவர்களாக இருக்கலாம். அது அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கை-ஆனால், தாய் மொழி தமிழுக்கு ஆலயங்களில் மதிப்பும், மரியாதையும் வேண்டும் என்பது உரிமைக்குரல்! இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
அர்ச்சனை விவகாரத்தை அரசியல்வாதிகள் கிளப்புவதாகக் கூறுகிறீர்கள். திரு.மூப்பனார் அவர்களும், திரு.பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும் அரசியல்- வாதிகள் மட்டுமல்ல; ஆழ்ந்த பக்திமான்கள்-அவர்கள் தமிழ் அர்ச்சனைக்காகக் குரல் கொடுப்பதை மறந்து விட்டீர்களா? அற நிலையத்துறை அமைச்சராக அரும்பணியாற்றிய மறைந்த கே.பி.கே. அவர்களும் ஒரு ஆன்மீகவாதிதான். அவர் காலத்திலேயே தமிழ் அர்ச்சனைக்கான குரல் வலுவடைந்ததை அனைவரும் அறிவர்.
இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கழக அரசு கண்டுபிடித்து, இந்த இரண்டாண்டுகளில் மட்டும் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரை (மனை-கடை-நிலம் உட்பட) மீண்டும் ஆலயங்களுக்கு உரிமையாக்கியுள்ளது. மேலும்- இந்த மீட்புப் பணி தொடர்கிறது. உதாரணமாக, சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் 313 கிரவுண்டு-கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆலய நிலம் மீட்கப்பட்டுள்ளது.
குமுதம்:- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும், தங்களுக்கும் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியாரின் கொள்கைகளுக்கு சம்பந்தமில்லாமல், கி.வீரமணி, ஜெயலலிதா அணியிலே இருக்கிறார் என்று சிலரின் கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லையா? தாங்கள் பெரியார் திடலுக்கு அஞ்சலி செலுத்தப் போனால், புதிய திருப்பம் ஏற்படலாம் அல்லவா?
நான்:- வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார். பெரியார் திடலுக்கு நான் போகாவிட்டாலும், பெரியார் என் நெஞ்சத்தை விட்டுப் போகமாட்டார். ★ ★ ★ பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயர்த்தியும்-தம்பி டாக்டர் சி.என்.ஏ.பரிமளத்தின் இளவல் சி.என்.ஏ. கௌதமனின் மகளுமான சரிதா-எம்.சிவகுமார் கலைஞர் ஆகியோரின் மணவிழாவினை 27.11.1998 அன்று நான் தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். அந்த மணவிழாவிலே பேசிய கோவை செழியன் , மணவிழா அழைப்பிதழில் தி.மு.கழகத்தின் உள்ள எல்லோருடைய பெயர்களும் போடப்பட்டுள்ளன.
ஆனால் தங்களுடைய பெயர்களையும், ஆர்.எம்.வீ. போன்றவர்களின் பெயர்களையும் போடவில்லையே என்று தம்பி பரிமளத்தைப் பார்த்துக் கேட்டார்-குறைபட்டுக் கொண்டார். அவரைத் திருப்தி செய்கின்ற அளவிற்கு- "பெயர் போட்டாலும் போடாவிட்டாலும், நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் அழைப்பிதழில் பெயர் போடப்பட வில்லை" என்று நான் சிரித்துக் கொண்டே சமாதானம் செய்தேன்.
இதனைக் கூறிய நான், "இதிலும்கூட நாம் அண்ணா அவர்களைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினேன். எல்லோரும் கவனித்தபோது, தம்பி பரிமளத்திற்காக மயிலாடுதுறையில், சரோஜாவைப் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கு அண்ணா அவர்களும் சென்றிருந்தார்கள். அதே நாளில்தான் திருவண்ணாமலைத் தொகுதி இடைத் தேர்தல். தி.மு.கழகத்தின் சார்பாக வேட்பாளராக நின்ற அருமை நண்பர் ப.உ.சண்முகம் வெற்றி பெற்ற செய்தி வந்து கொண்டிருந்தது.
நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு அதே நாளில் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் மறைந்த முதலாண்டு நினைவாக- அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்தேன். செல்லுகிற வழியிலேயே மயிலாடு துறையை நெருங்கிய நிலையிலே-ப.உ.சண்முகம் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியோடு நான் மயிலாடுதுறைக்குள்ளே நுழைந்த நேரத்தில், ஐம்பது அல்லது அறுபது பேர் கையிலே தட்டுக்களை ஏந்திக்கொண்டு சரோஜா இல்லத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.
என்னவென்று விசாரித்தேன். "பரிமளத்திற்காக நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அண்ணா அவர்கள் வந்திருக்கிறார்" என்று சொன்னவுடன், நிச்சயதார்த்தத்திற்காக அழைப்பு வராவிட்டாலும்கூட, அண்ணா இல்லத்து நிச்சயதார்த்தம் என்ற காரணத்தால் நான் சரோஜா இல்லத்திற்குச் சென்றேன்.
அங்கே அண்ணா அவர்களைச் சந்தித்தேன். "நீ எப்போது வந்தாய்? இங்கு ஏன் வந்தாய்?" என்று அண்ணா கேட்டார். "இன்றைக்கு மயிலாடுதுறையில் ராமாமிர்தம் அம்மையார் முதலாண்டு நினைவுநாள் படத்திறப்பு நிகழ்ச்சி-அதற்காக அழைத்தார்கள்-வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு- திருவண்ணாமலையிலே தி.மு.க.வெற்றி பெற்ற செய்தியையும் சொன்னேன்.
பிறகு நிச்சயதார்த்தம் முடிந்து படத்திறப்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டேன். அண்ணா அவர்கள் "நானும் வருகிறேன்" என்றார். "என்ன அண்ணா, உங்கள் பெயர் போடவில்லையே-விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு இன்று நீங்கள் வருவது தெரியாத காரணத்தால், என்னுடைய பெயரை மாத்திரம் தான் போட்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன்.
"பரவாயில்லை-நானும் வருகிறேன்" என்று சொல்லி, அண்ணாவினுடைய பெயர் போடாத ஒரு நிகழ்ச்சிக்கு - என் பெயர் மாத்திரமே போடப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு-அண்ணா அவர்களும் வந்து கலந்து கொண்டார்கள் என்றால், அவர்தான் அண்ணா என்று அந்த மணவிழாவிலே நான் எடுத்துக் கூறி, கோவை செழியனை யும் அந்த விழாவிற்கு வந்திருந்த ஹண்டே போன்றவர்களையும் சமாதானம் செய்தேன்.
27.11.1998 அன்று காலையில் மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட நான்-அதற்கடுத்த நாள், 28.11.1998 அன்று மாலையில், அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராகவும் உள்ள தம்பி டாக்டர் க.பொன்முடி எழுதிய "திராவிடர் இயக்கமும், கறுப்பர் இயக்கமும்" என்ற ஆங்கில நூலினை அப்போது கல்வி அமைச்சராக இருந்த கலைஞர் பேராசிரியர் முன்னிலையில் வெளியிட்டேன். நூலின் முதல் பிரதியை தம்பி முரசொலி மாறன் ,எம்.பி., பெற்றுக் கொண்டார்.
அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், முனைவர் தமிழ்க் குடிமகன், சைதை கா.கிட்டு
எம்.எல்.ஏ., தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி ஆகியோர் அந்த விழாவிலே கலந்து கொண்டனர். அந்த நூல் வெளியீட்டு விழாவிற்குக் கலைவாணர் அரங்கமே நிரம்பி வழிந்தது. அதைப்பற்றி நான் அந்த விழாவிலே பேசும் போதே குறிப்பிட்டேன். "எந்தவொரு நூல் வெளியீட்டு விழாவிற்கும் இல்லாத அளவிற்கு அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது-இதற்குக் காரணம், இந்த விழாவிலே நாங்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காக அல்ல.
இந்த அளவிற்கு மக்கள் திரண்டிருக்கக் காரணம்-இந்த நூலின் பெயரில் "திராவிடர் இயக்கம்" என்ற சொற்றொடர் இடம் பெற்றிருப்பதுதான்" என்று கூறினேன். அந்த விழாவிலே பேசிய தம்பி துரைமுருகன் - "தம்பிமார்கள் இத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டு வெற்றி பெற்றால், தலைவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நாங்கள் செய்யாத காரியத்தை பொன்முடி இன்றைக்குச் செய்திருக்கிறார்-இனி மேலாவது நாங்கள் செய்வோம்" என்று குறிப்பிட்டார்.
அதுபற்றி நான் பேசும்போது- "இன்று நேற்றல்ல, ஐந்தாறு ஆண்டு காலமாக துரைமுருகன் என்னிடம் ஒரு தொகுப்பு நூல் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் 'எங்கே, இதுவரையில் எழுதியதைக் கொண்டு வா, பார்க்கலாம்" என்று கேட்கவில்லை.
கேட்டால் வருத்தப்படுவார் என்பதற்காக நான் கேட்கவில்லை. அவ்வளவு விடாமுயற்சி அவரிடத்திலே" என்று கூறினேன். துரைமுருகனைப் பற்றி மட்டும் நான் அங்கே குறிப்பிடவில்லை. தம்பி முரசொலி மாறனை ப் பற்றியும் குறிப்பிட்டு - "தம்பி முரசொலி மாறன் 'ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்' எழுதிய அந்தக் காலத்திலும் சரி-பிறகு மாநில சுயாட்சி என்கிற ஒரு பெரிய புத்தகத்தை எழுதி வெளியிட்ட அந்த நேரத்திலும் சரி - திராவிட இயக்க வரலாறு என்ற புத்தகத்தின் முதல் பகுதியைத்தான் எழுதி முடித்திருக்கிறாய்-மற்ற பகுதிகளையும் எழுது-எழுதிய நூல்களையும் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்துக் கொடு-என்று நான் கேட்கும்போதெல்லாம், தன்னுடைய சோம்பேறித்தனத்தைத்தான் எனக்கு விடையாகத் தருகிறார்" என்று பேசினேன்.
அந்த விழாவிலே நான் தொடர்ந்து பேசும்போது அண்ணா அவர்கள் பேச்சிலிருந்து பல குறிப்புகளை எடுத்துச் சொல்லி-திராவிட இயக்கத்தின் சரித்திரங்களையெல்லாம் எடுத்து விளக்கி-கறுப்பு இனத்தவர்களையும், திராவிடர் இயக்கத்தவர்களையும் ஒப்பிட்டுக் காட்டி-மற்றும் பிராமணர். பிராமணீயம், தமிழ் அர்ச்சனை போன்றவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் உரையாற்றினேன். தம்பி பொன்முடியின் அந்த முயற்சி பற்றி நீண்ட நேரம் அந்த விழாவிலே பாராட்டினேன் என்ற போதிலும், அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது என்பதற்காக, என் பேச்சின் இறுதியில் அவருக்கு அப்போது நான் ஒரு குட்டு வைத்தேன்.
இதோ அது:- "தம்பி பொன்முடி இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொண்டு-இளைஞர் அணியிலே பணியாற்றி- ஆசிரியராகப் பணியாற்றி-டாக்டர் பட்டம் பெற்று-உங்கள் எல்லோராலும் புகழப் படுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால், அதற்காக நீங்கள் மகிழ்வதைப்போல ஆயிரம் மடங்கு அதிகமாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் தம்பிக்குக் கிடைக்கின்ற பாராட்டெல்லாம் எனக்குக் கிடைக்கின்ற பாராட்டாகவே எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஆனால் அழகான முகத்திற்குக் கூட ஒரு சிறிய கறுப்புப் பொட்டு வைக்கவேண்டும். திருஷ்டி பரிகாரம் என்பார்கள். அதையும் சொல்லி என் பேச்சை முடிக்க விரும்புகிறேன். பக்கம் கலைஞர் 208 இல் பொன்முடி திராவிட இயக்கங்களின் பத்திரிகைகளைப் பற்றி எழுதுகிறார்- "The circulation of kudi Arasu increased from 6000 in 1942 to 7000 in 1945. The circulation of Dravida Nadu published by Anna increased further more from 2000 in 1942 to 12000 in 1945.
Apart from these News Papers, Several Weeklies like Dravida Nadu, Dravidan, Tamil ulagam, Manram, Puduvazhvu - Published by Anna, N.V.Natarajan, T.M.Parthasarathi, V.R.Nedunchezhian and Perasiriyar K.Anbazhagan respectively mobilised educated youths of the Non - Brahmin Community."
- என்று எழுதியிருக்கிறார். இதிலே "முரசொலி"யை மட்டும் காணோமே-ஏம்பா?" இதே பாணியிலேதான் நான் இன்றைக்கும் என் தம்பிகள் நல்லவைகளைச் செய்யும்போது பாராட்டியும், தவறு செய்யும்போது அதனைக் கிண்டலாக எடுத்துக்காட்டியும் வருகின்றேன்.
