நெஞ்சுக்கு நீதி
சிறந்த நிர்வாகி-திரு.பக்தவத்சலம்! · 344 / 391
கலைஞர் 32. சிறந்த நிர்வாகி-திரு.பக்தவத்சலம்! நான், தந்தை பெரியாரிடம் பகுத்தறிவையும் - பேரறிஞர் அண்ணாவிடம் அரசியல் பண்பாட்டையும் பெரியவர் பக்தவத்சலனாரிடம் நிர்வாகத்திறனையும் கற்றேன். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்தோடு இருந்த தி.மு.கழக ஆட்சியை எப்படியும் கலைக்க வேண்டுமென்று ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு-அதற்காகவே மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. தலைவிபற்றி- "எடுபடுமா ஜெயலலிதா மிரட்டல்?"
என்ற தலைப்பில், "தினமணி" நாளிதழ் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது. 1998 ஆம் ஆண்டு மத்தியில் நிலவிய அரசியல் நிலைமைகளைப் புரிந்து கொள்ள அந்தக் கட்டுரை பயன்படுமென்று கருதுகிறேன். அந்தக் கட்டுரையின் சுருக்கம் வருமாறு:- "மக்களவையில் இடங்களைப் பிடிப்பதற்காக சில கட்சிகள் செய்து கொண்ட கொள்கையற்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக அமர்ந்த பா.ஜ.க.வுக்கு தேனிலவுக் காலமாக சில மாதங்களை ஒதுக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
ஆனால், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வுக்கு அத்தகைய கரிசனம் கிடையாது. ஜெயலலிதா அளித்த பேட்டி, அவரது சந்தேக மன நிலையை வெளிப்படுத்தியது. அ.தி.மு.க.வைப் பிளக்கச் சதி என்ற புகாரின் மூலம், பா.ஜ.க.வை சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார், ஜெயலலிதா. "அவரது கட்சியில் உள்ள ஒரு பகுதி எம்.பி.க்கள் மீது ஜெயலலிதாவுக்குத் துவக்கத்தில் இருந்தே சந்தேகம் உள்ளது. மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் பதவி பெறும் எம்.பி.கள் ஓர் அதிகார மையமாக உருவெடுத்து விடுவார்கள் என்ற ஐயப்பாடும் அவருக்கு இருந்தது.
அதனால் ஆட்சியில் பங்கேற்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்தார். திருநாவுக்கரசு தலைமையை ஏற்று ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் அ.தி.மு.கவிலிருந்து கட்சி தாவியதைப்போல, மற்றொரு பிளவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தனது கட்சி எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை ஜெயலலிதா வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுவது உண்மையாகக்கூட இருக்கலாம். "தி.மு.க. அரசை நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறப் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாத போதிலும், அப்பலத்தைத் தங்களால் பெற்றுத் தர முடியும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
தன் நலத்திற்காக இவர் மட்டும் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதை ராஜதந்திரம் என்று அழைப்பார் போலும், அரசியல் ஒழுக்கமும் இரு வழிப்பாதையாக இருக்க வேண்டுமென்று ஜெயலலிதா கருதவில்லை. "பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க.ஆட்சி கலைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலுக்கு முன்பே உடன்பாடு ஏற்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். "அத்தகைய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை" என்று பா.ஜ.க துணைத்தலைவர் கே.எல்.சர்மா தெளிவுபடக் கூறிவிட்டார்.
"தமிழகத்தில் சீர்கெட்டுக் கிடக்கும் அரசியல் நாகரிகத்தை மேலும் சீரழிக்கக் கூடிய கருத்தை ஜெயலலிதா முன் வைக்கிறார். கருணாநிதியின் பவளவிழா நிகழ்ச்சியில், அவருக்கு இல.கணேசன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. மாற்று முகாமில் இருந்தால் ஒருவர் முகத்தில் மற்றொருவர் விழிப்பதே தவறு என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார். விழாவில் இல.கணேசன் பங்கேற்றதை விமர்சித்து, அவரைப் கலைஞர் பொதுக்கூட்ட மேடைகளில் அ.தி.மு.க.வினர் திட்டித் தீர்த்தனர்.
மத்தியில் பா.ஜ.க.அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அ.தி.மு.க.வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்-என்று இல.கணேசன் கருத்து கூறினார். அதற்காக அவரை "கருணாநிதியின் அடிவருடி, காவடி தூக்குபவர், துதிபாடி, துரோகி, சாமரம் வீசுபவர், கயமைத்தனமானவர், முகவரி இல்லாதவர், ஆளில்லாத கட்சிக்கு அசைக்க முடியாத தலைவர், பவள விழா வாழ்த்துச் சொல்ல கால் கடுக்க நின்ற கணேசனுக்கு கட்சி உணர்வு உண்டா?"
என்றெல்லாம் தெரிவித்து, செங்கோட்டையன் மூலம் ஜெயலலிதா அறிக்கை விட்டார். தமிழகத்தில் வேரூன்றிவிட்ட அரசியல் சகிப்பின்மைக்கு மேலும் தூபம் போடுவது நல்லதல்ல. இந்தச் சகிப்பின்மையின் விளைவாகவே வாடகைக்கு ஜெயலலிதா எடுத்த விமானத்தில் ஏறி விட்ட மத்திய அமைச்சர் ஒருவர் கீழே இறக்கப்பட்டார். மற்ற மாநிலங்களிலோ, அகில இந்திய அளவிலோ இது போன்ற நிலைமை இல்லை. வாஜ்பாய் அவர்களும் சோனியா காந்தி அவர்களும்கூட கட்சிக்கு அப்பாற்பட்டு சந்தித்துப் பேசியுள்ளனர் இவ்வாறு தினமணி நாளிதழின் கட்டுரையாளர் தி.சிகாமணி என்பவர் எழுதிய இச்செய்திக் கட்டுரை அப்போது நிலவிய அரசியல் நிலைமைகளை விளக்கிடுவதாக அமைந்தது.
25 இலட்சம் செலவில் கிண்டியில் பெரியவர் பக்தவத்சலனாரின் நினைவிடத்தைக் கலைஞர் திறந்து வைத்தார். ஆனாலும், 21.6.1998 அன்று டெல்லியில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள், " தி.மு.க. அரசு கலைப்பு இல்லை " என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார்.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில்-அதாவது 23 ஆம் தேதியன்று 13 பக்கங்களில் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சராக அப்போதிருந்த பா.ஜ. க.வின் பெருந்தலைவர்களில் ஒருவரான அத்வானி அவர்களை அர்ச்சனை செய்தார். அத்வானி அவர்களுக்கு ஜெயலலிதா சூட்டிய புகழாரங்களில் சிலவற்றை இப்போது நினைவுபடுத்துவது, அந்தக் கட்சியிலே இப்போது உள்ளவர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேசப் பாதுகாப்பில் அக்கறை இல்லாத இப்படிப் பட்ட ஒருவர் உள்துறை அமைச்சராகக் கிடைத்திருக்கிறாரே என்ற வேதனைதான் ஏற்படுகிறது.
பல பிரச்சினைகளை நினைவில் வைத்திருக்கும் பா.ஜ.க. தலைமை குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் நினைவிழந்து (செலக்டிவ் அம்னீஷியா) பாதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது." -இவ்வாறு விமர்சனம் செய்ததோடு திருப்தி அடையாமல், அ.தி.மு.க.வினர் ஊருக்கு ஊர் வாஜ்பாய், அத்வானி கலைஞர் திறந்து வைத்த பக்தவத்சலனாரின் சிலை அருகே சரோஜினி வரதப்பன், ஜெயந்தி நடராஜன் கலைஞர் ஆகியோரின் உருவ பொம்மைகளைக் கொளுத்துகின்ற பணியிலும் ஈடுபட்டனர்.
செய்தியாளர்கள் என்னிடம் அது பற்றிக் கேட்டபோது, "ஜெயலலிதாவின் இலட்சியமே தி.மு.க.அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணம் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்தால், தன் மீதுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும் என்பதுதான். மாநில அரசு தொடுத்த வழக்குகள் மாத்திரமல்ல-மத்திய அரசு மூலமும் சில அன்னியச் செலாவணி வழக்குகள் அவர்மீது இருக்கின்றன. அந்த வழக்குகளும் சரி-மாநில அரசு வழக்குகளும் சரி-தி.மு.க.
அரசு டிஸ்மிஸ் மூலம் தன்னை விட்டு வேகமாக விலகிவிடும் என்று ஜெயலலிதா கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதனால்தான் டிஸ்மிஸ், டிஸ்மிஸ் என்று ஒவ்வொரு நாளும் உச்சரித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு இணங்காதவர்களை எல்லாம் கொடூரமான வார்த்தைகளால் தாக்கி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்று கூறினேன்.
★ ★ ★ நெருக்கடியான அந்த அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க. கூட்டணிக்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 27.6.1998 அன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சிகளில் ஒருவரான ஜெயலலிதா மட்டும் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார். 3.7.1998 தேதிய " தினமணி " நாளேடு, "தமிழகத்துக்குத் தலைகுனிவு" என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில்- பா.ஜ.க.கூட்டணி அரசில் நீடிப்பதா-இல்லையா என்பதை முடிவெடுப்பதில் சர்வ அதிகாரம் படைத்த அ.தி.மு.க.
பொதுச்செயலர் ஜெயலலிதா காட்டும் ஊசலாட்டம்- திருப்பங்கள் நிறைந்த திரைப்படத்தைப் பார்ப்பதுபோல உள்ளது. அவரது மனப்போக்கைத் தோழமைக் கட்சித் தலைவர்களாலேயே அறிந்துகொள்ள முடியவில்லை. ஒளிவு மறைவின்றி இருக்க வேண்டிய கூட்டணி விவகாரங்கள் அனைத்துமே மூடு. மந்திரமாக இருப்பது வருந்தத்தக்கது. தனது கட்சியின் தேர்தல் அறிக்கையையே அலட்சியப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதாவின் நிர்ப்பந்த தந்திரங்கள் அமைந்திருக்கின்றன.
ஆட்சி நடத்துவதைவிட இவரைச் சமாளிப்பதில்தான் பா.ஜ.க. தலைவர்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும் தனது ஓர் அம்சத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன், அடாத செயல்கள் அனைத்தையும் கையாளுகிறார். ஜெயலலிதா. மத்திய அரசை நிலைகுலைய வைப்பதே அ.தி.மு.க.வின் கடந்த மூன்று மாத கால சாதனையாக இருக்கிறது. ஜெயலலிதாவின் திரைமறைவு நாடகங்களால் தமிழகத்துக்குத் தலைகுனிவு ஏற்பட்டு விட்டது.
தங்களுக்கு வாக்களித்த பாவத்துக்காகத் தமிழக மக்களை இனி மேலும் கேவலப்படுத்தக் கூடாது" என்று எழுதியிருந்தது. "பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும் என்று அரசியல் நாகரிகத்தை சீரழிக்கக்கூடிய கருத்தை வெளியிட்டார், ஜெயலலிதா 15.7.1998 அன்று "ஸ்டேட்ஸ்மேன்" ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசுடன் ஜெயலலிதா செய்து கொண்டுள்ள தற்காலிக சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து, அவர்மீது உள்ள வருமான வரி மற்றும் இதர வழக்குகளிலிருந்து அவரை விடுவிக்க வாஜ்பாய் அரசு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை - மேற்பார்வையிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி.ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே.கோபாலன் என்பவர் ஏற்றுக்கொண்டார். நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே.ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்திற்கு என்.பி.திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும், அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக கலைஞர் விடுதலையை அடையக்கூடும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
கலைஞரின் பவளவிழா நிகழ்ச்சியில் வாழ்த்து கூறிய இல.கணேசனை, "கருணாநிதியின் அடிவருடி காவடி தூக்குபவர் - சாமரம் வீசுபவர் - துதிபாடி - துரோகி" என்று தூற்றினார், ஜெயலலிதா மற்றொரு சம்பவத்தில், சசிகலாவின் அக்காள் மகனும், இந்திய ரிசர்வ்வங்கி ஊழியருமான பாஸ்கரனின் வங்கி லாக்கரை உடைத்து, வெளி நாட்டு முத்திரையுடன் கூடிய 80 தங்க பிஸ்கெட்டுகளைக் கைப்பற்றிய "அமலாக்க இயக்குநரகம்" டெல்லிக்கு அழைக்கப்பட்டு, தற்காலிகப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்கும்படி கூறப்பட்டுள்ளார்.
"ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்தியதின் மூலம் பா.ஜ.க அரசு தனக்குத் தேவையான ஆதரவைப் பெற்றது. அதற்குப் பதிலாக தமிழ் நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர்" என்று எழுதியிருந்தது.
21.7.1998 தேசிய " எகனாமிக் டைம்ஸ் " நாளேடு எழுதிய கட்டுரை ஒன்றில் "பா.ஜ.க., அ.தி.மு.க., இடையிலான மோதல், ஜெயலலிதா கோரியபடி முக்கிய அதிகாரிகள் மாற்றங்களுக்கு பா.ஜ.க ஒப்புக்கொண்டதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் என்.கே.சிங் மற்றும் அமலாக்கல் இயக்குநரகத் தலைவர் ஆகியோரை நீக்க அ.தி.மு.க. தலைவிக்கும் பிரதமரின் தூதர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது.
வருவாய்த் துறை செயலாளர் நீக்கப்படக் கூடிய நேரம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அந்த உயர்ந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஜெயலலிதா கூறியிருப்பதால், அவரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் தயாராகி விட்டன. இது தவிர, சூழ்நிலையும் சிங்குக்கு எதிராகவே உள்ளது. பா.ஜ.க.வில் செல்வாக்கு படைத்த ஒரு பிரிவினர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்திற்கு என்.கே.சிங்தான் பொறுப்பு என்று சந்தேகிக்கின்றனர்.
ஜெயலலிதாவும் அவரை நீக்க வேண்டுமென்று மிகவும் நெருக்கடி கொடுத்து வருவதால், அரசில் சக்தி வாய்ந்த பிரிவுகள் அவருக்கு எதிராக இணைந்து உள்ளன. தன் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சில அதிகாரிகளை மாற்றுவதற்குத் தான் எடுத்த முயற்சிகள் வெளியானதற்கு என்.கே.சிங்தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதால் அவர்மீது வருத்தமாக இருக்கிறார். என்.கே.சிங்குக்குப் பதிலாக அவருடைய இடத்தில் வாசுதேவனை நியமிக்க பிரதமருடைய ஒப்புதலை ஜெயலலிதா பெற்றுவிட்டார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."
"முக்கிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் நியமனத்திலும், அமலாக்கப்பிரிவு இயக்குநரகத் தலைவர் நியமனத்திலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகள் நிறைவேறவிருக்கின்றன. பேஜ்பரூவாவின் பதவிக் காலம் முடியவிருந்தாலும், ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்தப் பயன்படுமானால் அவரை மாற்றவும் அரசு கவலைப்படாது."
"இதற்கிடையில், முக்கிய நிதி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளின் நியமனத்தில் ஜெயலலிதா தனது செல்வாக்கை பிரயோகித்து வருகிறார் என்றும் அந்த கலைஞர் வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே அரசில் உள்ள தனது பிரதிநிதி ஆர்.ஜனார்த்தனம் மூலம் பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முன்னுரிமைப் பட்டியலின்படி, தன்னுடைய நியமனதாரர் சுப்பிரமணியனை யு.டி.ஐ. யின் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா தீவிரமாக இருக்கிறார்.
நான்கு மாத ஆட்சியின் மீது கவிழ்ந்துள்ள நிச்சயமற்ற தன்மையைப் போக்க ஜெயலலிதாவின் கோரிக்கைகளான சுப்பிரமணியம் நியமனமும், மற்றவர்களின் நியமனமும் சாதகமான பதிலைப் பெற்றுள்ளன. இந்த அதிகாரிகளின் மாற்றங்களுக்கு ஜஸ்வந்த் சிங் உறுதியளித்துள்ளார்."
இவ்வாறு அந்த ஏடு எழுதியிருந்தது. 16.8.1998 அன்று பிரதமர் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி, ஜெயலலிதா ஓர் அறிக்கையினை ஏடுகளுக்குக் கொடுத்தார். அந்த அறிக்கையில், "மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு அதிகாரி பேஜ்பரூவாவை திடீரென்று மத்திய அரசு பணிமாற்றம் செய்திருக்கிறது. இதற்கு நான்தான் காரணம் என்று பரவலாக என்மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவு தொடர வேண்டுமானால், இந்த மாற்றத்தைச் செய்தாக வேண்டும்.
என்று பிரதமரின் தூதுவர்களாக என்னைச் சந்திக்க வந்த பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன் ஆகியோரிடம் நான் நிர்ப்பந்தம் செய்ததாகவும் செய்திகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இது முற்றிலும் பொய்யான- உண்மைக்கு மாறான செய்தி. "பேஜ்பரூவா அப்பதவியிலிருந்து திடீரென்று மாற்றப் பட்டது, அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் ஒப்புதலைப் பெறாமலேயே நடைபெற்றுள்ளது. எனவே, அந்த அதிகாரியை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
(அந்த அதிகாரியை மாற்றுவதற்கு, தான் பரிந்துரை எதையும் செய்யவில்லை என்று இந்த அறிக்கையிலே ஒப்புக்கொண்ட ஜெயலலிதா. அந்த அதிகாரியை அதே இடத்தில் நியமிக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதமே எழுதியதாக தன் அறிக்கையிலே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒரு அதிகாரியை மாற்றப்பட்ட அதே பதவிய
ிலே நியமிக்க வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியது குற்றமா இல்லையா என்பதை வாசகர்களே புரிந்துகொள்வார்களாக) பிரபல பத்திரிகைகள் பலவற்றை வெளியிடும்-பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது பல 'பெரா' வழக்குகள் உள்ளன. பேஜ்பரூவா அந்த வழக்குகளைத் தீவிரப்படுத்தி அடிக்கடி அவர்களைக் கைது செய்யவும் வைத்துள்ளார். அந்தப் பத்திரிகை உரிமையாளர்கள் பேஜ்பரூவாவைப் பதவி மாற்றம் செய்வதற்காகப் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கு பெரிய அளவில் பணம் கொடுத்துள்ளனர்.
இச்சந்தர்ப்பம் அவர்களது எண்ணத்தை ஈடேற்றிக் கொள்வதற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எனவே யாரோ சிலரை திருப்தி செய்வதற்காகப் பிரதமரைச் சுற்றி இருப்பவர்கள், யாரிடமோ கையூட்டுப் பெற்றுக் கொண்டு, இந்நடவடிக்கைகளை எடுத்துவிட்டு என்னைப் பலிகடா ஆக்க முயற்சித்துளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கையை அதே நாளில் மத்திய அரசு மறுத்து, அந்தக் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது- ஆதாரமற்றது என்றெல்லாம் தெரிவித்திருந்தது. பிரதமர் வாஜ்பாய் அவர்களே ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதத்தில், "உங்களுடைய குற்றச்சாட்டை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். உங்கள் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அளித்தால், உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்கள் என்னைக் கண்டு பேஜ்பரூவா மாறுதலையொட்டி பிரதமர் மீதே ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி என் கருத்தைக் கேட்டார்கள். அதற்கு நான் "பிரதமர் மீதே பயங்கரமான ஊழல் கலைஞர் குற்றச்சாட்டை ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதற்குப் பிரதமர் விளக்கம் கொடுத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மேலும் என்ன நடக்கும் என்பதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது மேலும் அதுபற்றி ஒன்றும் சொல்ல முடியாது" என்று கூறினேன்.
இதற்கிடையே பிரதமரின் முதன்மைச் செயலாளர் எழுதிய கடிதத்துக்கு - ஜெயலலிதா தனது கட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு செயலாளரைக் கொண்டு பதில் எழுதச் செய்தார். "பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் மகாஜன் ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதத்தில்-ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டில் மறைமுகமாக தன்னைப் பற்றித்தான் எழுதியிருப்பதாகவும், தன்மீது குற்றச்சாட்டு என்றால் அதனை வெளிப்படையாகத் தெரிவித்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றும், மாறாக கண்ணாமூச்சி ஆடவேண்டாம்-என்றும் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் மூத்த அதிகாரியான பேஜ்பரூவாவை மீண்டும் செயலாக்கப் பிரிவு இயக்குநராக ஜெயலலிதா கேட்டுக்கொண்டவாறே, மத்திய அரசு 9.9.1998 இல் நியமித்தது. அதன் மூலம் 13.8.1998 அன்று பேஜ்பரூவாவை அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை என்ன காரணத்தாலோ அரசு ரத்து செய்தது. ★ ★ ★ மத்தியில் ஆட்சி புரிந்த பா.ஜ.க. விற்கும் அதன் தோழமைக்கட்சியான அ.தி.மு.க.விற்கும் இடையே இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில், சென்னையில், திரு.எம்.ஜி.ஆர்.
அவர்களின் நினைவிடத்தை புதுப்பிக்கச் செய்து, எம்.ஜி.ஆரின் மார்பளவுச் சிலை ஒன்றையும் நிறுவி, கழக ஆட்சியில் அதனை நான் திறந்து வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எம்.ஜி.ஆரின் விசுவாசிகளைக் கவருவதற்காகத்தான் நான் சிலை திறந்து வைத்தேன் என்று வார இதழ் ஒன்று எழுதியது. அதற்கு அப்போதே நான் பதில் அளித்தேன். "1989 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் நண்பர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எனக்கொரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் தொடக்க விழா நிகழ்ச்சி - எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவை உங்கள் அரசு முன்நின்று நடத்த வேண்டுமென்று அதிலே குறிப்பிட்டிருந்தார். எந்த விதமான தயக்கமும் இல்லாமல் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவை, அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களை அழைத்து பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்திலே நான் நடத்தினேனே, அது எம்.ஜி.ஆரின் விசுவாசிகளைக் கவருவதற்காகத் தான் செய்யப்பட்டதா?"
என்றும்- கலைஞர் "அறந்தாங்கி நகரில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவி, அதனை நான் திறந்து வைக்க வேண்டுமென்று அ.தி.மு.கவின் மற்றொரு அணியின் பொதுச்செயலாளராக இருந்த திருநாவுக்கரசர் என்னைக் கேட்டுக்கொண்ட போது, நான் அதனையேற்று அந்த விழாவிலே கலந்து கொண்டதும், எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் கவருவதற்காகத்தானா?"
என்றும் கேட்டு, நான் ' முரசொலி' யில் எழுதினேன். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று, நான் நான்காவது முறையாகப் பொறுப்பேற்ற போது- ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பன் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மற்றும் திரைப்பட உலகத்தினர் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் தமிழக அரசின் திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மறுத்து, தனது பெயரையே "ஜெயலலிதா பிலிம் சிட்டி" என்று வைத்துக்கொண்டதை, அறிக்கைகள் மூலம் எடுத்துக்கூறி, அந்தத் திரைப்படநகருக்கு எம்.ஜி.ஆர்.
பெயரை சூட்ட வேண்டும் என்று கோரியதை ஏற்றுக்கொண்டு. உடனடியாக " எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் " என்று பெயர் வைத்ததையும் அந்த வாரப்பத்திரிகையாளர் வசதியாக மறந்துவிட்டார். இப்போது நான் குறிப்பிட்ட எந்த நிகழ்வும் தேர்தல் நேரத்தில் நடைபெற்றதல்ல; எம்.ஜி.ஆர். ரசிகர்களை நான் வயப்படுத்திக் கொள்வதற்காக நடைபெற்றதும் அல்ல. அது மாத்திரமல்ல எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பிலே எம்.ஜி.ஆர். சிலையை அப்போது நான் வைத்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
நாத்திகம் ராமசாமி அவர்கள் என்னைச் சந்தித்து, "கிண்டி காந்தி மண்டபத்தில் காந்தி அடிகளின் மார்பளவுச் சிலை அதன் முகப்பிலே வைக்கப்பட்டுள்ளது- கிண்டி ராஜாஜி நினைவு மண்டபத்தில் ராஜாஜியின் மார்பளவுச் சிலையை வைத்துள்ளீர்கள் - அதைப்போல காமராஜர் நினைவு மண்டப முகப்பிலும் காமராஜர் சிலையை வைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போது. "காந்தியடிகள் மார்பளவுச் சிலை காந்திமண்டபம் முகப்பில் இருப்பதுபோல - ராஜாஜி நினைவு மண்டபத்தில் ராஜாஜியின் மார்பளவுச் சிலை இருப்பதுபோல -காமராஜரின் நினைவு மண்டப முகப்பிலும் அவரது மார்பளவுச் சிலை வைக்கப்படும். அதைப்போலவே அண்ணா சதுக்கத்து முகப்பிலும், எம்.ஜி.ஆர். சதுக்கத்து முகப்பிலும் அண்ணா சிலையும், எம்.ஜி.ஆர் . சிலையும் முறையே வைக்கப்படும்" என்று கூறி, அந்தச்செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது.
அறிவித்தவாறே. 1997 அக்டோபர் 2ஆம் தேதியன்று, காமராஜர் நினைவு மண்டபத்தில் அவரது மார்பளவுச் சிலையை நான் திறந்து வைத்தேன். இந்த மூன்று சிலைகளும் அவரவர்களது நினைவிடங்களின் முகப்பில் அவர்களது நினைவு நாளன்று திறந்து வைக்கப்படும் என்று அறிவித்தது, நாடாளுமன்றத் தேர்தல் வருமென்று அறிவிக்கப்பட்ட காலத்திலே அல்ல என்பதையும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நான் அறிவித்தவை என்பதையும் அப்போதே நான் அந்த வார இதழ் ஆசிரியருக்கு பதிலாகத் தெரிவித்தேன்.
சிலைபற்றி எழுதுகின்ற இந்த நேரத்தில் என் நினைவிலே உள்ள வேறு இரண்டு சிலைகளைப் பற்றியும் நான் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதிலே ஒன்று- 1976க்கு முன்பு கழக ஆட்சியில் நான் முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்தபோது- கோவை மாநகரில் அண்ணாவின் வெண்கலச் சிலை ஒன்றை முக்கியமான ஓர் இடத்தில் திறந்து வைத்தேன். அந்தச் சிலை ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், நள்ளிரவில் லாரி ஒன்று மோதி உடைந்து விட்டது.
(ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நள்ளிரவில் லாரிகள் சிலைகள் மீது மோதி இடித்ததற்கு வேறு சில சான்றுகளும் உண்டு) கோவையில் சிலையிருந்த இடத்திலே வேறோரு சிலை வைக்க கழகத்தினர் முயற்சி மேற்கொண்டு அரசிடம் அனுமதி கோரினர். சிலையும் தயாராகி விட்டது. பலமாதங்கள் ஆனபோதிலும், ஜெயலலிதா அரசு அந்தச் சிலையை வைக்க அனுமதி கொடுக்கவில்லை. அதன் பின்னர் அந்தச் சிலையை வைப்பதற்காக கோவை மாநகரில் என்னுடைய தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், ஜெயலலிதா அரசு இறங்கி வந்து கலைஞர் -அப்போதும்கூட அந்த இடத்திலே சிலையை வைக்கக் கூடாது- வேறொரு இடத்திலே தான் வைக்கவேண்டுமென்று நிபந்தனை விதித்து, அதனையும் தி.மு.கழகம் ஏற்றுக் கொண்டு, வேறொரு இடத்தில் அந்தச் சிலையை நான் திறந்து வைத்தேன்.
இது ஒரு சிலைக் கதை. மற்றொரு சிலை-திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை வைப்பதற்காக மாவட்ட அரசு அதிகாரிகளிடம், அ.தி.மு.க. வினர் அணுகி, மூன்று இடங்களைக் குறிப்பிட்டுக் கேட்டுக்கொண்டனர். மூன்று இடங்களுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள். எனவே அந்த இடங்களைத் தர மறுத்து கோப்பு என் கையெழுத்துக்காக வந்தது. நான் அந்தக் கோப்பிலே கூறப்பட்டிருந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், "அந்த மூன்று இடங்களில் எந்தவொரு இடத்தில் போக்குவரத்து சற்று குறைவாக இருக்கின்றதோ, அந்த இடத்திலே சிலையினை வைக்க அனுமதி கொடுக்கலாம்" என்று நானே ஆணை பிறப்பித்தேன்.
நெல்லை மாநகரில், மிக முக்கியமான பகுதியில் போக்குவரத்து போலீசாருக்காக வைக்கப்பட்டிருந்த குடையை இடித்து அகற்றி விட்டு, அந்த இடத்திலே எம்.ஜி.ஆர். சிலை வைக்க அனுமதி கொடுத்தேன் என்பது வரலாறு. சிலை வைக்க அனுமதி கொடுத்ததில் தி.மு.க. அரசு நடந்து கொண்ட முறைக்கும், அ.தி.மு.க. அரசு நடந்து கொண்ட முறைக்கும் கோவையும், நெல்லையும் சரியான சான்றுகள் அன்றோ? சிலையைப் பற்றி, அதுவும் எம்.ஜி.ஆர். சிலையைப் பற்றி எழுதுகின்ற நேரத்தில், இதே 1998ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், எம்.ஜி.ஆர்.
கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில், த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையினை நான் திறந்து வைத்தேன். அந்த விழாவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, என்.கே.கே.பெரியசாமி, பொங்கலூர் பழனிசாமி, ஆர்.நல்லகண்ணு, அந்தியூர் செல்வராஜ், ஜி.பி.வெங்கிடு எம்.எல்.ஏ., வி.பி.சண்முகசுந்தரம், அப்துல் லத்தீப், என்.ஆர்.திருவேங்கடம், கள்ளிப்பட்டி மணி, ஏ.சி.சண்முகம், ஜெகதீசன், ஏ.எஸ்.தேவேந்திரன், சந்திரசேகரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட நட்பு குறித்து பல செய்திகளைப் பேசினேன். எம்.ஜி.ஆருக்கு பல விருதுகள் உண்டு என்ற போதிலும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் . என்பது நீண்ட காலமாக தமிழகத்திலே பரவிய பெயர். அந்தப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை நான்தான் அவருக்கு திருச்சியிலே வழங்கினேன் என்ற மகிழ்ச்சியும் எனக்குண்டு. எம்.ஜி.ஆர்.நடித்த மலைக்கள்ளன் திரைப்படத்திற்கு நான் உரையாடல் எழுதியபோது-திருச்சியிலே மறைந்த எம்.எஸ்.மணி நடத்திய " ஓவியன் " என்ற நாடகத்திற்குத் தன்மீதுள்ள வழக்குகள் வாபஸாக, தி.மு.க.
அரசை டிஸ்மிஸ் செய்ய மிரட்டினார் ஜெயலலிதா கலைஞர் தலைமையேற்பதற்காக நானும், முன்னிலை வகிப்பதற்காக எம்.ஜி.ஆரும் பட்சிராஜா ஸ்டுடியோவின் காரை இரவல் வாங்கிக் கொண்டு திருச்சிக்குச் சென்றோம். அந்த நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாங்கள் இருவரும் பேசினோம். நான் பேசும் போது, "எம்.ஜி.ஆர். போட்டிருப்பது தான் கதர்ச்சட்டை-உள்ளேயிருப்பது கருப்புச் சட்டை" என்று குறிப்பிட்டு விட்டு-அந்த விழாவில்தான் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை அவருக்கு நான் வழங்கி, அது முதல் எம்.ஜி.ஆரின் பெயரோடு அது நீடித்து நிலைத்தது.
★ ★ ★ முன்னாள் முதல்வர், பெரியவர் எம். பக்தவத்சலம் அவர்களுக்கு, 1997-98 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "அரசின் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும்" என்று அறிவித்திருந்தேன். அந்த உறுதிமொழிக்கேற்ப ரூ.25 லட்சம் செலவில் சென்னை, காந்தி மண்டப வளாகத்தில் பக்தவத்சலம் நினைவிடம் அமைப்பதற்கு 6.5.1997 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, சென்னை கிண்டி, காந்திமண்டப வளாகத்தில் உள்ள பெரியவர் எம்.பக்தவத்சலத்திற்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
13.3.1998 அன்று காலையில் அந்த நினைவுச் சின்னத்தை நான் திறந்து வைத்தேன். மேலும், அந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலையையும் திறந்து வைத்தேன். பக்தவத்சலம் அவர்களின் செல்வி சரோஜினி வரதப்பன் வரவேற்றுப் பேசினார். அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சராக அப்போதிருந்த திருமதி ஜெயந்தி நடராசன் , தமிழக அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, முல்லைவேந்தன், ஆலடி அருணா, ரகுமான்கான், கு.பிச்சாண்டி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், அந்தியூர் செல்வராஜ், சமயநல்லூர் செல்வராஜ், சுரேஷ்ராஜன் ஆகியோரும், செ.குப்புசாமி எம்.பி., வி.பி.துரைசாமி எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் எம்.பி., ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கலைஞர் திறந்து வைத்த காந்தியார் சிலை பெரியவர் பக்தவத்சலம் அவர்களின் செல்வி சரோஜினி வரதப்பன் தனது வரவேற்புரையில், "இன்று நாம் எல்லோரும் பத்து ஆண்டுகளாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரிய காரியத்தை நமது முதல் அமைச்சர் அவர்கள், அவருடைய காலத்தில் அதைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை- எப்படி நன்றி சொல்வது என்று. மிக அற்புதமாக அழகிய இந்த மண்டபத்தை மிக நல்ல எண்ணத்துடன் இங்கு உருவாக்கி உள்ளே அவர்களின் உருவச் சிலையையும் வைத்திருக்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் எத்தனையோ பெரிய சாதனைகளில் இதையும் ஒரு பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். முதலமைச்சர் அவர்கள் முதலில் இங்கு பேசுவதாக இல்லை. "நீங்கள் ஒரு சில வார்த்தைகள் சொன்னால் தான் எங்களுக்கு எல்லாம் திருப்தியாக இருக்கும்" என நான் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, இங்கே பேச அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது, "அம்மையார் சரோஜினி வரதப்பன் அவர்கள் இந்தச் செயலை நான் செய்து முடித்தமைக்காக நன்றி கூறினார்கள். அவர்கள் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நன்றி கூறியது மாத்திரமல்ல-நன்றி கூறி எனக்கு மடலும் வரைந்திருக்கிறார். இங்கே திறப்புவிழா நிகழ்ச்சி நான் நடத்தியபோதும், என் பக்கத்திலே நின்றுகொண்டு "நன்றி- நன்றி" என்று அவர்களும், கலைஞர் காமராஜர் சிலையினையும் கலைஞர் திறந்து வைத்தார் நம்முடைய ஜெயந்தி நடராஜன் அவர்களும் குறிப்பிட்
டார்கள். இது நான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று. அதைத்தான் ஆற்றியிருக்கிறேனே அல்லாமல், கடமையை ஆற்றிவிட்டு நன்றியை எதிர்பார்ப்பது தவறு என்பதை என்னுடைய அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே ஆற்றிய கடமைக்காக அவர்கள் கூறியிருக்கின்ற நன்றியானது, இன்னும் பல கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதற்கான ஊக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன். பெரியவர் பக்தவத்சலம் அவர்கள்-அவரை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்-நான் அப்படி அழைத்த காரணத்தினாலேயே பெரியவர் பக்தவத்சலம் என்பது நிலைத்த ஒன்றாக இன்றைக்கு ஆகிவிட்டது.
"பக்தவத்சலம் அவர்களுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக எத்தனையோ கருத்து மாறுபாடுகள் உண்டு. கருத்து மாறுபாடுகள்-அரசியல் வேறுபாடுகள் போன்றவைகள் எல்லாம் என்றைக்கும் நிலையாக இருந்து, மனிதர்களுக்கு மனிதர் காட்ட வேண்டிய மரியாதைக்கு இடையூறாகவோ- அல்லது குறுக்கீடாகவோ இருக்கக்கூடாது என்பதிலே நான் அழுத்தமான நம்பிக்கை கொண்டவன். அதனால்தான் எத்தனை மனமாச்சரியங்கள் கருத்து வேறுபாடுகள் ஒரு காலத்தில் இருந்தாலும்கூட அவர்களால் நாட்டிற்கு விளைந்த நன்மைகள், சமுதாயத்திற்கு விளைந்த நன்மைகள், ஆட்சிக்கு ஏற்பட்ட நன்மைகள் ஆகியவைகளை மறந்துவிட இயலாது.
ஆர்.எம்.வீரப்பன் தலைமையில், மூப்பனார் முன்னிலையில் கலைஞர் திறந்து வைத்த எம்.ஜி.ஆர்.சிலை "1962 ஆம் ஆண்டு நான் தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்க் கட்சியின் துணைத் தலைவனாக இருந்தபோது, முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்களை, "நான் பிறந்த திருக்குவளையிலே என் தாயார் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதி அமைத்திருக்கிறேன் அதனைத் திறந்து வைக்க வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.
அவர் உடனடியாக ஒத்துக் கொண்டார். விழாவிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது, தஞ்சை மாவட்டத்திலே உள்ள காங்கிரஸ் நண்பர்கள், "எப்படி எதிர்க்கட்சிக்காரன் கருணாநிதியின் நிகழ்ச்சிக்கு நீங்கள் வரலாம்?" என்று அவரை கடிந்து கொண்டு கண்டனக் கடிதங்கள் அனுப்பினார்கள். நேரிலேயே அவரைச் சந்தித்து சில பேர் வரக்கூடாதென்று தடுத்தார்கள். அவர்களிடம் பக்கவத்சலம் அவர்கள், "எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கருணாநிதி அழைத்ததால் மாத்திரமல்ல, அவருடைய பிறந்த ஊர் என்பதாலும், அதைப் பார்ப்பதற்காக நான் வருகிறேன்" என்று பதிலளித்து விட்டு, அதற்காக கட்சிக்காரர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டியதையும் பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சியிலே வந்து கலந்து கொண்டார்கள்.
அவருடைய அந்தப் பாங்கு, அரசியல் பகை கலைஞர் உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமான உணர்ச்சி-மனித நேய உணர்ச்சி அனைவரிடமும் இருக்க வேண்டுமென்பதை எடுத்துக்காட்டுகின்ற ஒன்றாகும்" என்று நான் குறிப்பிட்டேன். மற்றொரு நிகழ்ச்சி, மொழிப் போராட்டத்தின்போது, பாளையங்கோட்டை தனிமைச் சிறைச் சாலையிலே பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் நான் அடைக்கப்பட்டேன். சிறையிலிருந்து வெளியே வந்ததும், பக்தவத்சலம் அவர்கள் எனக்குத் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து, அவருடைய இல்லத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்தார்.
அவர் முதலமைச்சர் - நான் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர், இருந்தாலும் முதலமைச்சர் என்னை அவருடைய அலுவலகத்திற்குக் கூட அல்ல - அவருடைய இல்லத்திற்கே தொலைபேசி வாயிலாக அழைத்தார். நானும் "அவர் தானே நாம் சிறையிலே இருக்கக் காரணம்" என்றும் எண்ணிடவில்லை.
"அவருடைய இல்லத்திற்கு நாம் செல்வதா?" என்று கருதிடவில்லை. நேராக அவரது அழைப்பையேற்று அவரது இல்லம் சென்றேன். அப்போது "உங்களை ஏன் சிறையிலே அடைத்தேன் தெரியுமா?" என்று நீண்ட விளக்கங்களையெல்லாம் என்னிடம் கூறினார். அப்போது நான் அவரிடம், "நான் சிறைபட்டது பற்றி பரவாயில்லை - வேறு சிலர் பாதுகாப்புக் கைதிகளாக சிறையிலே இருக்கிறார்கள்-அவர்களை விடுவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன்.
உடனடியாக அந்தப் பட்டியலை என்னிடம் கேட்டுப் பெற்று, அவர்களையெல்லாம் விடுதலை செய்தார். இவ்வாறு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்த பக்தவத்சலம் அவர்களுடைய நினைவுச் சின்னம் ஒன்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அமைய வேண்டுமென்ற எண்ணத்தோடு நடைபெற்ற காரியம்தான் அது என்பதையெல்லாம் நினைவூட்டியதோடு, என் பேச்சை முடிக்கும் போது, "என்னைப் பொறுத்தவரையிலே நான் தந்தை பெரியார் இடத்திலே பகுத்தறிவைக் கற்றுக் கொண்டேன்- பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொண்டேன்- பக்தவத்சலம் அவர்களிடம் நிர்வாகத் திறனைக் கற்றுக் கொண்டேன்" என்று குறிப்பிட்டேன்.
