நெஞ்சுக்கு நீதி
அன்னை தெரசாவும், · 337 / 391
25. அன்னை தெரசாவும், அன்னக்கிளி டயானாவும்! 21.8.1997 அன்று என்னுடைய அருமைச் செல்வி கனிமொழிக்கும் - தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கோவிந்தசாமி அவர்களின் செல்வன் அரவிந்தனுக்கும் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், சென்னையில், ஆலிவர் சாலையில் இருந்த எனது இல்லத்திலேயே, என் மகளின் விருப்பத்திற்கிணங்க மிகவும் எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. த.மா.கா.தலைவர் மூப்பனார், சட்டப்பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் , மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், கழக முன்னணியினர் மணமக்களை வாழ்த்தினர்.
பிரதமர் குஜ்ரால் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , தனது துணைவியாருடன் நேரில் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மணவிழாவினைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் மற்றொரு விழா. "தினமலர்" நாளேடு நடத்திய விழா. தி.மு.க.வையும், தி.மு.கழக ஆட்சியையும் பொதுவாக எதிர்க்கின்ற ஏடு "தினமலர்" என்று கூற முடியாது.
பொதுவாக எதிர்ப்புச் செய்திகளை அது யாரைப்பற்றி வேண்டுமென்றாலும் இருக்கும் - அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் அக்கறை கொண்ட ஏடு என்று வேண்டுமானால் கூறலாம். ஆட்சிக்கு எதிரான செய்திகள் அதிகமாக அந்த ஏட்டிலே இடம் பெறும். அதனால் அந்த ஏட்டினை நான் படிக்காமல் விட்டு விடுவதில்லை. அன்னை தெரசாவை சந்திக்க டயானா சென்ற போது... குறிப்பாக நான் திருச்சிக்கோ, மதுரைக்கோ, கோவைக்கோ செல்கிறேன் என்றால் - நான் அந்த ஊருக்குச் சென்றதும் "தினமலர்" நாளிதழை எடுத்துப் பார்ப்பேன்.
அதிலே ஒரு பக்கமோ, இரண்டு பக்கமோ எனக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியிலே அரசின் எந்தெந்த திட்டங்களிலே தாமதம் - எதெதில் தவறு - எந்தப் பள்ளியிலே காம்பவுண்ட் சுவர் இல்லை - எந்த மருத்துவ மனையில் குடி தண்ணீர் இல்லை - என்பன போன்ற விவரங்களையெல்லாம் சேகரித்து, நான் அந்தப் பகுதிக்குச் செல்லும்போது என் கண்ணிலே படுகின்ற விதமாகப் பிரசுரம் செய்வார்கள். அதைப் படித்துவிட்டு நான் வருத்தப்பட வேண்டுமென்பதற்காக அதை வெளியிடுகிறார்களோ அல்லது என் கவனத்திற்கு அவை கொண்டு வரப்பட வேண்டுமென்பதற்காக வெளியிடுகிறார்களோ எனக்குத் தெரியாது.
ஆனால் நான் அந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு அதற்காக வருத்தப் படுவதில்லை. அந்தத் தவறுகள் உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதற்காக அந்தப் பத்திரிகைகளைப் படித்த மறு நிமிடமே தொடர்புடைய அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ தொடர்பு கொண்டு, அந்தத் தவறுகள் குறித்து விவரங்களைக் கேட்டு அதனை ஏடுகளில் வெளியிடச் செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகின்றது. மதுரைக்கு நான் ஒரு முறை சென்றிருந்த போது, என் மகன் மு.க.அழகிரி வீட்டிற்குப் போயிருந்தேன்.
அப்போது பத்திரிகைகளைப் பற்றிய பேச்சு வந்தது. கலைஞர் வீட்டிலேயே எளிமையாக என் புதல்வி கனிமொழி அரவிந்தன் திருமணம் நடைபெற்றது. அப்போது அழகிரி, "அப்பா, இதோ இருக்கிற "எதிர்த்த" வீடுதான் தினமலர் ஆசிரியரின் வீடு" என்று சொன்னார். நான் உடனே "எதிர்த்த" என்றால் எதிரிலே இருக்கின்ற வீடு என்ற பொருளிலே சொல்கிறாயா? அல்லது பத்திரிகையிலே நம்மை "எதிர்த்த" என்ற பொருளிலே சொல்கிறாயா?"
என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அந்த அளவிற்குத் தி.மு.கழகத்தை எதிர்க்கும் பத்திரிகைதான் தினமலர். தினமலர் நாளேடு எதிர்த்து செய்தி வெளியிட்டாலும் அதிலே அரசுக்கான அறிவுரை இருப்பதால், அந்தப் பத்திரிகை எதிர்ப்பதை நான் குற்றமாகக் கருதி விடவில்லை. 97ஆம் ஆண்டில் ஒரு முறை தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்னைச் சந்திக்க நேரம் கேட்பதாகச் சொன்னார்கள். வரச் சொன்னேன். வந்தபோது "சங்க காலத் தமிழ் "நாணயங்கள்"" என்று தான் எழுதிய புத்தகத்தை நான் வந்து வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
நான்ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கருதி அழைத்தாரோ என்னவோ? ஆனால் அவரே எதிர்பாராத அளவிற்கு அவர் தேதி கேட்டவுடன் நான் ஒப்புதல் தந்துவிட்டேன். அவ்வாறே அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 1.9.1997 அன்று நடைபெற்றது. அந்த விழாவிலே பேசிய தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்கள், "பழைய நாணயமான பாண்டியனின் சின்னத்திலே புலிச் சின்னம் இருக்கிறது- முதலமைச்சர் கலைஞர் எப்படியாவது மத்திய அரசை வலியுறுத்தி கப்பல் படையின் கொடியில் புலிச் சின்னத்தைப் பொறிக்கச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியதை நான் குறிப்பிட்டு, "நாகசாமி வேண்டுமென்றே என்னை வம்பில் இழுத்துவிட வேண்டுமென்று இந்த வேண்டுகோளை வைத்துள்ளாரா?"
என்று கேட்டேன். அவருக்குப் புரியவில்லை. பின்னர் நான் விளக்கமளித்தேன். "நான் மத்திய அரசை அணுகி புலிச் சின்னத்தை பொறிக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டால், உடனே இங்கேயுள்ள சிலர் "பாருங்கள் - விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதால்தான் புலிச் சின்னத்தைக் கேட்கிறார்" என்று அறிக்கை விடுவார்கள்.
"அதற்காகத்தான் அதனைக் கேட்கச் சொல்கிறாரோ" என்று நான் கூறியதும், அந்த மண்டபமே சிரிப்பில் ஆழ்ந்தது என் நினைவிலே இன்றும் உள்ளது. அந்த விழாவிலே கலந்து கொண்டு அந்த நூலைப் பற்றியும், நூல் ஆசிரியர் பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினேன். அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல் நாள் நடைபெற்ற ஒரு விபத்துச் செய்தி அகில உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. ஆம்,31.8.1997 அன்று அதிகாலையில் பாரிஸில் நடந்த ஒரு பயங்கர கார் விபத்தில் உலகப் புகழ் பெற்ற வேல்ஸ் இளவரசி டயானா இறந்தார்.
அப்போது அவருடைய வயது 36 தான். டயானாவுடன் அவரது நண்பர் டோடிபயதும், கார் டிரைவரும் அந்த விபத்தில் பலியானார்கள். புகழ் பெற்ற ஈஃபில் கோபுரத்துக்கு அருகில் உள்ள அல்மா சுரங்கப்பாதையில் இந்த விபத்து நடந்தது. டயானாவும், டோடி பயதும் 30.8.1997 அன்று நள்ளிரவு பாரிசில் உள்ள ரிட்ஸ் ஓட்டலில் விருந்தை முடித்துக் கொண்டு, மெர்சிடஸ் காரில் புறப்பட்டனர். டோடிக்குச் சொந்தமான ஓட்டல் அது. கார் கிளம்பிய சில நிமிடத்துக்குள்ளாகவே பத்திரிகை புகைப்படக்காரர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.
காரின் பின் இருக்கையில் டயானா உட்கார்ந்திருந்தார். புகைப்படக்காரர்கள் பின் தொடர்வதைப் பார்த்ததும், கார் அதிவேகமாகப் பறந்தது. பான்ட் டி லால்மா பாலத்தின் குறுகிய சுரங்கப் பாதைக்குள் கார் நுழைந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். சுரங்கப் கலைஞர் ரஜினிகாந்த் தனது துணைவியாருடன் மணமக்களை வாழ்த்தினார் பாதையின் நடுவில் இருந்த தூணில் படு வேகத்தில் கார் மோதியது. அதே வேகத்தில் சுழன்று வலது பக்கச் சுவரில் மோதிச் சிதறியது.
டோடி பயதும், அவரது கார் டிரைவரும் அதே இடத்தில் இறந்தனர். குருதி வெள்ளத்தில் மிதந்த இளவரசி டயானா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் குழு இரண்டு மணி நேரம் போராடியது. ஆனால் டயானா பிழைக்கவில்லை. டயான காரை விரட்டிய ஏழு புகைப்படக்காரர்களும் கைது செய்யப் பட்டனர். டயனாவின் சடலத்தை லண்டன் கொண்டு வர இளவவசர் சார்லஸ், டயானாவின் இரு சகோதரிகள் ராணுவ விமானம் மூலம் பாரீஸ் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் டயானாவின் சடலம் வைக்கப்பட்டு ராணுவ விமானம் மூலம் லண்டனில் உள்ள நார்தோல்ட் ராணுவ விமான நிலையத்துக்குக் கொண்டு வரப் பட்டது.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அங்கு வந்திருந்தார். டயானா மரணச் செய்தியால் பிரிட்டன் முழுவதும் துயரில் மூழ்கியது. கைகளில் பூங்கொத்து - இரங்கல் வாசகம் எழுதிய அட்டைகளுடன் ஆயிரக்கணக்கானோர் லண்டனில் உள்ள டயானாவின் இல்லமான கென் சிங்டன் அரண்மனை முன் கூடினர். அவரது அகால மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டயானாவை பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் திருமணம் செய்து கொண்ட போது உலகமே அந்தத் தம்பதிகளை அதிசயத்துடன் பார்த்தது.
சாமான்யராக இருந்து இளவரசியான டயானாவை கேமிரா கண்கள் பார்க்கும் போதெல்லாம் சரமாரியாகப் படம் பிடித்துத் தள்ளியிருக்கின்றன. பிரபலமாக இருப்பதால் வரும் பிரச்சினை இவருக்கும் வந்தது. அவர்களது குடும்ப வாழ்க்கை காலப் போக்கில் கசந்து, டயானாவும், சார்லசும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். டயானாவின் அந்தரங்க வாழ்க்கையை வெளியிட்டு காசாக்க முயன்றன சில பிரிட்டிஷ் பத்திரிகைகள். அவரது விருப்பமின்றி அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் பத்திரிகைகளுக்குத் தீனியாகின.
யாருக்கும் கிடைக்காத படம் எடுத்தால், அதன் மூலம் ஏராளமான பணத்தைக் குவிக்கலாமே என்ற சில புகைப்படக்காரர்களின் சுயநல ஆசை டயானாவின் உயிரைக் குடிக்கக் காரணமாயிற்று. அனாதை இல்லங்கள், மருத்துவமனைக்கு நிதி திரட்டித் தருதல் - போன்ற பல்வேறு சேவைகளில் டயானாவிற்கு ஆர்வம் இருந்தது. டயானாவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் புரட்டினால், 1.7.1961 அன்று ஆல்த்ராப் - துரை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர்தான் டயானா பிரான்சஸ் ஸ்பென்சர்.
1980ஆம் ஆண்டு கிண்டர் கார்டன் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்தபோது சார்லசுடன் காதல் மலர்ந்தது. 29.7.1981 அன்று இளவரசர் சார்லஸை மணந்தார். லண்டன் செயின்ட் பால்ஸ் கதிட்ரல் தேவாலயத்தில் நடந்த திருமணத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். டயானாவைவிட சார்லஸ் 12 வயது மூத்தவர். 21.6.1982 அன்று வில்லியம் ஆர்தர் பிலிப்பும், 15.9.1984 அன்று இரண்டாவது மகன் ஹென்றி சார்லஸ் ஆர்பர்ட் டேவிட்டும் பிறந்தார்கள்.
15.6.1992 அன்று கமீலா பார்க்கர் என்ற பெண்ணுடன் சார்லசுக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறி, டயான தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று ஏடுகளில் செய்தி வெளிவந்தது. 25.8.1992 அன்று டயானாவும், அவரது காதலரும் ரகசியமாகப் பேசிய தொலை பேசி உரையாடலை "சன்" பத்திரிகை வெளியிட்டது. 9.12.1992 அன்று பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நாடாளுமன்றத்தில், அரச தம்பதியர் கலைஞர் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய "சங்க காலத் தமிழ் நாணயங்கள்" என்ற நூலை வெளியிட்டேன்.
பிரிந்து வாழ்வார்கள் என்றும், ஆனால் விவாகரத்து இல்லை என்றும் அறிவித்தார். 12.1.1994 அன்று சார்லஸ் - கமீலா ஆகியோரின் காதல் ரசம் சொட்டும் தொலைபேசி உரையாடல்களை "சன்" பத்திரிகை வெளியிட்டது. 29.6.1994 அன்று சார்லஸ் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில், மண உறவு முறிந்த பின்பு வேறொரு பெண்ணுடன் தான் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டார். டயானாவிற்கும் அவரது குதிரையேற்றப் பயிற்சியாளர் ஹெவிட்ஸ்க்கும் ஐந்தாண்டுகளாகத் தொடர்பு உள்ளது என்று அன்ன பாய்டர்லாக் என்பவர் "இளவரசியின் காதல்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
20.11.1995 அன்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் டயானா ஹெவிட்சுடன் உறவு இருந்ததாக ஒப்புக் கொண்டார். பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் சார்லசுக்கு , டயானாவை விவாகரத்து செய்யும்படிக் கடிதம் எழுதினார். டயானா விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டார். 28.8.1996 அன்று முறையாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்குப்பின் சரியாக ஓராண்டு காலம் மட்டுமே வாழ்ந்து 31.8.1997 அன்று பாரீசில் கார் விபத்தில் சிக்கி டயானா மறைந்தார்.
6.9.1997 அன்று டயானாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதற்கு முன்பு அவரது உடல் லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வெஸ்ட் மினிஸ்டர் கல்லறையில் டயானாவின் இறுதிச் சடங்கை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் என்று இளவரசர் சார்லசை காதலித்து மணந்தார், டயானா எதிர்பார்த்ததற்கு மாறாக 60 லட்சத்திற்கும் மேல் பெருகிவிட்ட காரணத்தால், வருகின்ற கூட்டத்தை ஒரு கிலோ தூரத்திற்குள் கட்டுப்படுத்த இயலாதென அறிந்து, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுவதற்குப் பதிலாக, டயானாவின் கிங்ஸ்டன் அரண்மனையிலிருந்து ஊர்வலம் புறப்பட முடிவு செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் அவர்கள் மரபுகளை மீறி தொலைக்காட்சியில் தோன்றி டயானா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார். இறுதி ஊர்வலத்தில் டயானாவின் இரு மகன்களான வில்லியம், ஹாரி இருவரும் நடந்தே வந்தனர். அவர்களுடன் இளவரசர் சார்லஸ், இளவரசர் பிலிப் , டயனாவின் சகோதரர் ஸ்பென்சர் பிரபு ஆகியோரும் நடந்து வந்தனர். டயானாவின் சவப்பெட்டி மீது அவருடைய இரண்டு மகன்களும், அவருடைய சகோதரரும் வைத்த மூன்று மலர் வளையங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன.
அந்த மலர் வளையத்தில் "மம்மி" என்று எழுதப்பட்ட ஒரு அட்டை வைக்கப்பட்டது. உலகிலேயே மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரிய டயனாவின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புகழ் பெற்ற பாடகர் எல்ட்டன் ஜான் இரங்கல் கீதம் பாடினார். அப்போது இரண்டு மகன்களும் துக்கம் தாளாமல் கலைஞர் பிரமிப்பூட் டிய திருமண ஆடை அழுதனர். அவர்களுக்கு ஸ்பென்சர் பிரபு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவரது உடல் காரில் வைக்கப் பட்டு, டயானாவின் ஸ்பென்சர் குடும்பத்துக்குச் சொந்தமான அல்தார்ப் பார்க் அமைந்துள்ள தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப் பட்டடது. இந்த அளவிற்கு சீரோடும், சிறப்போடும் வாழ்ந்து இளம் வயதிலே டயானா மறைந்த நான்கு நாட்களுக்குள் இந்தியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அன்னை தெரசாவின் மரணமும் நேர்ந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் சற்று நினைவுகூர்வது இத்தொடருக்குப் பெருமை சேர்க்கும்.
5.9.1997 அன்று இரவு தூய்மை, தொண்டு இவற்றின் உறைவிடமாக வாழ்ந்தவரும், வெளிநாட்டில் பிறந்தவராக இருந்த போதிலும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு கல்கத்தா நகரைத் தேர்ந்தெடுத்து, அங்கே நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, சுமார் 50 ஆண்டு காலம் சமூகத் தொண்டாற்றிய அன்னை தெரசா நெஞ்சு வலி காரணமாக இயற்கை எய்தினார். அவரது சமூக சேவையினைப் பாராட்டி, அவருக்கு உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசு 1979ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
97ஆம் ஆண்டில் அவர் மறைந்ததைப் பற்றி இந்தத் தொடரில் எழுதும்போது வருங்கால இளைஞர் சமுதாயம் அந்த அம்மையாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவரைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அன்னை மேரி தெரசா யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜி என்ற நகரில், 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். 27ஆம் தேதி என்றும் ஒரு சிலரால் கூறப்படுகிறது. இவரது தந்தை நிக்கோலாஸ் போஜாக் ஸ்யியு.
இவர் ஒரு கட்டிட ஒப்பந்தக்காரர். தாய் ஆக்னெஸ் கோன்ஸ்ஹா போஜாக் ஸ்யியு. இனிய குணம் படைத்தவர். எளிய பண்புகளுக்கு இருப்பிடமானவர். ஒரு தமையனும் - ஒரு அக்காவும் அவருக்கு உண்டு. அன்னை தெரசா தன் தாயின்மீது மிகவும் அன்பு கொண்டவர். "எங்கள் அன்னை பிறரை அன்பு செய்வது எப்படி
என்று எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்" என்று அன்னை தெரசா அவர்களே தன் தாயைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். தெரசா குழந்தையாய் இருந்தபோது அவரது பெயர் ஆஞேஸ் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது. ஆஞேஸ் என்றும் அன்னை தெரசா சிறு வயதிலே அழைக்கப்பட்டார். தெரசா 7 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை மரணத்தைத் தழுவினார். அவருடன் இணைந்து வியாபாரம் செய்த நண்பர், நிறுவனத்தின் சொத்துக்களையெல்லாம் அபகரித்துக் கொண்டதால், விதவைத் தாயும், மூன்று குழந்தைகளும் நிராதரவான நிலையிலே இருந்தனர்.
தலைவனால் நிமிர்ந்து நின்ற வீடு, தலைவியின் ஆளுகையின்கீழ் வந்தது. குடும்பத்திற்கு வந்த துன்பம் சிறுமி ஆஞேசைப் பெரிதும் பாதித்தது. சிறு வயதிலேயே ஆஞேஸ் ஒரு புத்தகப் புழு. கல்வியில் படு சுட்டி. சிறு பிள்ளைகளைக் கூட்டி, அவர்களுக்கு மறை அறிவைச் சொல்லித் தருவதில் அலாதி பிரியம் கொண்டவர். இளம் வயதிலேயே எவருக்கும் உதவி செய்ய மறுக்காதவர். கலைஞர் தனது பதல்வர்கள் ஆர்தர் பிலிப் - ஆல்ஃபர்ட் டேவிட் இருவருடன் டயானா அவருக்கு 18 வயதாகும் போது, வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றும், ஏழைகளுக்காகத் தன் பணியை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்தார்.
ஆஞேஸ் வங்காளத்தில் உள்ள லொரேட்டோவுக்கு விண்ணப்பம் செய்தார். அயர்லாந்தில் உள்ள ராத்பர்மான் என்ற இடத்தில் இருக்கும் ஆதீனத்திற்கும் விண்ணப்பம் செய்தார். 'வங்காளத்திற்கு வரலாம்' என்று உடனடியாக பதில் கிடைத்தது. 26.9.1928 அன்று தாயாரோடும், சகோதரி யோடும் ஸ்கோப்ஜியை விட்டு சாக்ரெப் போக புகைவண்டியில் ஏறினார்கள். உறவினர்களும், நண்பர்களும் திரண்டிருந்து வழியனுப்பி வைத்தனர். சாக்ரெப்பில் சில நாட்கள் தங்கிவிட்டு - அங்கிருந்து புறப்பட்டபோது, தாயாரும், சகோதரியும் பிரியாவிடை கொடுத்தனர்.
ஆஞேஸின் இதயம் வலித்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. சாக்ரெப் புகை வண்டி நிலையத்தில் அவரது தாயார் விடை பெற்ற போது, இருவருக்குமே அதுதான் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் இறுதிப் பார்வை என்று தெரியாது. அன்னை தெரசா இடையில் டப்ளினில் ராதர்பர்மான் என்ற இடத்தில் இருந்த லொரேட்டோவில் விருப்ப நிலையில் இரண்டு மாதங்களைக் கழித்துவிட்டு, 1928ஆம் ஆண்டு நவம்பரில் கப்பல் வழியாக இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
ஏழு வாரப் பயணத்திற்குப் பின் பம்பாயில் இறங்கி, அங்கிருந்து புகைவண்டி மூலமாக கல்கத்தாவில் சில நாட்கள் தங்கிவிட்டு - 16.1.1929 அன்று டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டோ பயிற்சியகத்திற்கு அனுப்பப்பட்டார். கல்கத்தாவிற்கு வடக்கே 400 மைல் தூரத்தில் உள்ள கஞ்சன் ஜங்கா என்ற இடத்தில் தான் அன்னை தெரசா துறவற வாழ்வைப் பற்றிய பாடங்களையும், பயிற்சியையும் பெறும் சீடரானார். 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம், சகோதரி ஆஞேஸ் தன் பெயரை மாற்றி தெரசா மார்டின் என்ற பிரான்ஸ் நாட்டுச் சகோதரியின் பெயரையே தன் பெயராக்கிக் கொண்டார்.
அந்தத் தெரசா மார்டின் அயல்நாடுகளில் மறைபணி புரியும் தொண்டர்களுக்காகப் பாடுபட்டவர். 24 வயதிலேயே காச நோய்க்குப் பலியானவர். இருவருக்கும் பெயரில் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக ஆஞேஸ், 'வங்காள தெரசா' என்று அழைக்கப்பட்டார்.
கல்கத்தாவின் புறநகர் பகுதியான என்தல்லியில் உள்ள மரியன்னை பள்ளியில் ஆசிரியர் பணி புரிய அன்னை தெரசா அனுப்பப்பட்டார். அங்கே 17 ஆண்டுகள் பணியாற்றினார். அவரிடம் படித்த மாணவிகள், "அன்னை தெரசாவின் வகுப்புகள் அலுப்பும், சோர்வும் தராது - எப்போதும் உயிர்த்துடிப்புடனும், ஆர்வமுடனும் இருக்கும்" என்று தெரிவித்தனர்.
அன்னை தெரசா பாட்னாவில் மருத்துவமனை ஒன்றில் தொண்டாற்றிக் கொண்டிருந்த போது, பெற்ற மருத்துவ அறிவும், அனுபவமும் நீங்கலாக பொழுது போக்கு நேரங்களில் அவருடன் பணிபுரிந்த சகோதரிகளுடன் தன் புதிய திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி, அவர்களின் கருத்துக்களைக் கேட்டார். சகோதரிகளுடன் அவர் நடத்திய அந்தக் கருத்துப் பரிமாற்றம், அன்னை தெரசா துவக்கத்தில் கொண்டிருந்த சில கருத்துக்களை விட்டுக் கொடுக்க வழி வகுத்தது.
தன்னுடைய கலைஞர் சபையைச் சேர்ந்த சகோதரிகள் ஏழைகளைப் போல வெறும் சோற்றில் உப்பு மட்டும் போட்டுச் சாப்பிட வேண்டும் என்ற கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும், மற்றவரைத் தாக்கும் நோய்களைக் குணப்படுத்தும் பணியிலே ஈடுபடும் சகோதரிகள். அந்த நோய்க்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமென்றால், அவர்கள் நல்ல சத்தான உணவுப் பொருட்களைத்தான் சாப்பிட வேண்டுமென்றும், உணவு எளிமையாக இருந்தாலும், அது சத்துள்ளதாக இருக்க வேண்டுமென்றும், மேலும் சகோதரிகளுக்குப் போதுமான ஓய்வும் தேவை- வாரத்திற்கு ஒரு நாள் பணியிலிருந்து முழு ஓய்வு கட்டாயம் தேவை - ஆண்டிற்கொரு முறை சகோதரிகள் பணித்தளம் மாற்றம் செய்யப்படுவது விரும்பத்தக்கது என்றும், தெருக்களில் பணிபுரியும் எந்தச் சகோதரியும் தன்னுடைய உடல் நலத்தில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டுமென்றும், ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் மூன்று புடவைகள் தேவைப்படும் என்றும், ஒன்று அணிவதற்கு - மற்றொன்று துவைத்துப் போட - இன்னொரு அவசரத் தேவைகளுக்கும், விசேஷ வைபவங்களுக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துடன் டயானா பங்கு குருவாகப் பணியாற்றிய அருட் தந்தை ஜீலியன் ஹென்றி அவர்கள் சேரிப் பணியைத் தொடங்கிய போது, அந்தக் குழுவில் பணியாற்றிய அன்னை தெரசாவிற்கும் முதல் சேரிப் பணி தொடங்கியது. அருட் தந்தை வான் எக்கம் அவர்கள், அன்னைக்குத் தொடக்கம் முதல் ஞான குருவாக விளங்கினார். 1948ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னாவிற்கு வந்த தந்தை வான் எக் செம் அவர்களைச் சந்தித்த அன்னை தெரசா, தான் மீண்டும் கல்கத்தாவிற்குத் திரும்ப வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.
ஒப்புதல் கிடைத்து - நான்கு மாத இடைவெளிக்குப் பின் கல்கத்தா திரும்பிய அன்னை தெரசா புனித சூசையப்பர் இல்லம் என்ற புனிதமான இடத்தில் தங்கினார். டிசம்பர் 20ஆம் நாள் அன்னை முதல் முறையாக மோத்திஜில் குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்குள்ள பிள்ளைகளின் பெற்றோரைத்தான் அன்னை தெரசா முதல் நாள் சந்தித்தார். அங்கே ஒரு பள்ளி வரப்போகிறது என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் பள்ளியை நடத்திட கட்டிடமோ கூரை வீடோ கூட அங்கே கிடைக்கவில்லை.
அதனால் அன்னை சோர்வடைந்து விடவில்லை. சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான சிலேட்டுகளை வாங்கக்கூட அன்னையின் கையில் காசு கிடையாது. அன்னை இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கே அவரது வருகைக்காக ஐந்து பிள்ளைகள் காத்திருப்பதைக் கண்டார். பெரு மகிழ்ச்சி அடைந்தார். அங்கே மரத்தடி நிழல் மட்டுமே திறந்த இடமாக இருந்தது. அந்தத் தரையிலேயே கோடு கிழித்து, அங்கே தன் பணியினைத் தொடங்கி விட்டார், அன்னை தெரசா.
தான் செய்த பணிகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து புத்தக வடிவில் அன்னை தெரசா வைத்திருந்தார். ஒரு நாள் காலையில் அன்னை தெரசா சியல்தாவில் உள்ள பங்கு குருவைப் பார்க்கப் போயிருந்தார். அன்னை செய்து வரும் பணிகளைப் பற்றிக் கேட்டறிந்த அவர் அதற்காக மகிழ்ச்சி அடைந்தபோதிலும், உதவி செய்யவோ. உற்சாகம் அளிக்கவோ முன் வரவில்லை. பிறகு பார்க் சர்க்கஸ் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த பங்கு குருவை அன்னை சந்தித்தார்.
முன் சொல்லப்பட்டவருக்கு முற்றிலும் மாறாக இவர் அன்னையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததோடு, கலைஞர் அவரை ஊக்குவிக்கும் வகையில் 100 ரூபாய் பணம் கொடுத்தார். அந்தப் பணம் கைக்குக் கிடைத்ததும், அன்னை நேரத்தை வீணாக்காமல், பள்ளிக்கான ஓர் இடத்தைக் கண்டு பிடித்தார். இரண்டு அறைகள் -அறை ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வாடகை. ஒரு அறையில் பள்ளிக்கூடம் - மற்றொரு அறையில் மருந்தகம். மாணவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது.
அவர்கள் சுத்தமாக இல்லை. பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு முன் அன்னை தெரசா அந்த மாணவர்களையெல்லாம் நன்கு தேய்த்துக் குளிக்கச் செய்தார். சமூக சேவை மனம் உடையவர்கள் மூலம் விரைவிலேயே புத்தகங்களும், பலகைகளும் வந்து சேர்ந்தன. மக்களும் சில பல பொருட்களைக் கொடுத்து உதவினர். பணமும் கொடுத்தனர். அன்னையின் உதவிக்காக மூன்று ஆசிரியைகள் வந்தனர். அதற்குள் மாணவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே மகளிருக்காக தையல் வகுப்புகளையும் தொடங்கினார்.
தான் தொடங்கிய பள்ளிக்கு "நிர்மல் இந்தே" என்று பெயரிட்டார் அன்னை தெரசா. டயனாவின் உயிரைக் குடித்த - விபத்தில் சிக்கிய கார் அன்னை தெரசா தனது இரண்டாவது பள்ளியை திவ்ஜாலா பகுதியிலே ஆரம்பித்தார். வீடு வீடாகச் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்படிக் கெஞ்சியதாகவும், மாதம் நான்கு ரூபாய் வாடகைக்கு இடம் கிடைத்ததாகவும், அந்தப் பள்ளியையே மருந்தகமாகவும் பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரசா எழுதி வைத்துள்ளார்.
பாட்னாவிலிருந்து அன்னை திரும்பியதிலிருந்து மடம் திறப்பதற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கிடைத்த இடங்கள் எல்லாம் தவிர்த்துக் கொண்டே போயின. இறுதியாக பார்க் சர்க்கஸ் தெருவில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார். அந்த இடம் நகரத்திற்கு வெகு தூரத்தில் இருந்த போதிலும், வசதியாக இருந்ததால், அங்கேயே மடத்தைத் திறந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அந்த இடத்தின் உரிமையாளர் தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டார்.
அதைப் பற்றி மனம் நொந்து அன்னை தெரசா எழுதிய குறிப்பு வருமாறு:- "பார்க் சர்க்கஸ் தெருவில் உள்ள வீட்டின் முதலாளியைப் பார்க்கப் போனேன். ஆனால் அந்த மனிதர் வரவே இல்ல. ஒருவேளை அந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நான் அவருக்கு முன் கூட்டியே வெளிப்படுத்தியதாலோ என்னவோ, அவர் வரவில்லை. நாம் ஆண்டவன் இயேசு , தன் சிலுவையின் வறுமையால் என்னையும் மூடி மறைக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
எவ்விதப் பற்றும் இல்லாதவராக என்னை உருவாக்க விரும்புகிறார். ஆனால் இன்று நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டேன். வீடு தேடி நான் சுற்றி அலைந்தபோது, என் கால்களும், கைகளும் வலி எடுக்கத் தொடங்கின. வீடும், உணவும் தேடி அலையும் ஏழைகளின் உடலும், உள்ளமும் எவ்வளவு வலித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்."
என்று எழுதியுள்ள அன்னை, இதற்காகத் தான் கண் கலங்காமலும், ஒரு துளி கண்ணீர் வெளிவராமலும் பார்த்துக் கொண்டதாகவும் எழுதியுள்ளார். 19.3.1949 அன்னை தெரசாவை நாடி, புனித மரியன்னைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி சுபாஷிணி வந்தார். அன்னையின் கமலத் திருவடியை ஆராதித்தார். இதோ அவர்களிடையே நடைபெற்ற உரையாடல்: "இனிய மகளே! மகிழ்ச்சியோடு இருக்கிறாயா?"
"அம்மா! உங்களோடு இணைந்து பணியாற்றுவதுதான் மகிழ்ச்சி திருநாள்." "அதற்குப் போதிய நெஞ்சுரம் வேண்டுமே!" கலைஞர் "உங்கள் ஆசி, எனக்கு அதை வழங்கும்" "பணக்கார, டாம்பீக உடையில் இருக்கிறாயே?" "செல்வச் சீமாட்டியாகிய நீங்கள், எளிய உடைக்கு வரவில்லையா?"
"சுபாஷிணி..." "அம்மா! நான் சுபாஷிணியாக வரவில்லை. இனி உங்கள் திருத்தொண்டில் உங்கள் திருப்பெயரை ஏற்றவளாக வாழ விரும்புகிறேன்." மகிழ்ந்த அன்னை, "ஆக்னெஸ்" என்ற பெயரை உச்சரிக்கிறார். அந்த நொடியிலிருந்து சுபாஷிணி, அருட்சகோதரி "ஆக்னெஸ்" ஆனார். இவரைத் தொடர்ந்து மாக்டலினா கோம்ஸ், ஜெட்ரூட் செல்வி டோரத்தி, மார்கரெட் மேரி ஆகிய ஐவருடன் தொடங்கி, பின்னர் அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. அன்னை தெரசாவின் தொண்டுள்ளத்திற்கு சில சான்றுகள்.
கீழே -படியுங்கள். ★ தொழுநோயாளிகளின் இல்லத்திலே ஒரு நாள் - முற்றிய நிலையில் உள்ள ஒரு தொழு நோயாளியின் அருகே அன்னை சென்றிட, "என்னைத் தொடாதிங்க சிஸ்டர்-உங்களால் என்னருகே வர முடிகிறது?" என்றார். என் புண்கள் எனக்கே நாறுகின்றன -என்னாலேயே பொறுக்க முடியவில்லை! எப்படி உங்களால் என்னருகே வர முடிகிறது?"
என்றார். ★ அன்னை தெரசா பொய் சொல்ல வில்லை. "ஆம், நாறத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக நான் நெருங்காது இருக்கலாமா? வலி பொறுக்காது துடிக்கின்றீர்களே, அதைப் பார்த்துக் கொண்டு நான் விலகி இருக்க முடியுமா? உன் வலியைவிட, உன் துர்நாற்றம் எனக்குப் பெரிதல்ல" என்றெல்லாம் ஆறுதல் கூறி, அன்பினைப் பொழிந்து, அவனைத் தொட்டுத் தூக்கி, புண்களைத் துடைத்து மருந்திட்டு, முகம் சுளிக்காது உணவூட்டி விட்டுத் திரும்பினார்.
★ டெல்லி விமான நிலையத்தில் ஒரு நாள் - ஆளுநரின் செயலாளர் நாகின் சௌலா வேறு பணியாக அங்கே சென்றவர். ரோமில் இருந்து வரும் விமானத்தில் அன்னை வருவதை அறிந்து, காத்திருந்தார். ரோம் விமானம் மாலை 7.30 மணிக்கு வந்ததும், ஆளுநரின் செயலாளர் விரைந்து சென்று வணக்கம் கூறினார். அவரிடம் அன்னை உடனடியாக 8 மணிக்குப் புறப்படும் கல்கத்தா விமானத்திற்கு விரைந்திட வேண்டுமென்று கூற, சௌலா "என்ன அவசரம்?"
என்று கேட்டபோது, "என் பையில் சில மருந்துகள் உள்ளன - அங்கே ஒரு குழந்தை உயிருக்கு மன்றாடிக்கொண்டுள்ளது - எனவே விரைந்து செல்ல வேண்டும்" என்று கூற, சௌலா அவ்வாறே விமானத்தில் அன்னையை ஏற்றி அனுப்புகிறார். விமானம் கல்கத்தாவில் இறங்கியதும், மருந்துகளை எடுத்துக் கொண்டு நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்று மருந்துகளைக் கொடுக்க, அதனை அந்தக் குழந்தைக்குக் கொடுக்க, செத்துக் கொண்டிருந்த குழந்தை உயிர் பிழைத்தது.
★ அன்னை தெரசாவைச் சந்திக்க ஒரு முறை அமெரிக்க செனட்டர் ராபர்ட் கென்னடி வந்தார். எங்கும் பரபரப்பு. அங்குமிங்கும் ஓடி அன்னை எங்கே இருக்கிறார் என்று தேடுகிறார்கள். அவர்களையெல்லாம் அமைதிப்படுத்திவிட்டு, அன்னையின் வருகைக்காகக் காத்திருக்காமல், ராபர்ட் கென்னடி அவர்களே அன்னையைத் தேடி உள்ளே செல்கிறார். அங்கே அவர் கண்டது என்ன தெரியுமா? தொழு நோயாளிகளின் கலைஞர் பிரிவிலே அந்த நோயாளிகளின் துணிகளை அன்னை தெரசா துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
தொழுநோயாளிகளின் துணிகளை அலசியபடியே திரும்பிய அன்னை, எதிரிலே அமெரிக்காவின் புகழ் மகன் புன்னகை பூக்க நின்றது கண்டு திகைக்கிறார். அன்னையைப் பார்த்ததும், ஆர்வ மிகுதியால் கை குலுக்குவதற்காக ராபர்ட் கென்னடி தன் கையை நீட்டினார். அன்னையோ தன் கையைத் தாங்கியபடியே நீட்டி, "என் கைகள் அழுக்காக உள்ளன" என்றார்.
அப்போது கென்னடி, "கருணைத் தாயே! சேவையால் அழுக்கடைந்துள்ள தாங்கள் கைகளில் புனிதத்தைக் காணுகிறேன். தொடத் துடிக்கிறேன் - சும்மா நீட்டுங்கள் - தாங்கள் புனிதக் கரங்களைத் தொடுவதே ஒரு பேறு - அதை எனது பேறாக - பெரும் பேறாகக் கருதுகிறேன்" என்றாராம்.
★ அனாதைச் சிறுவர், பெரியோர் பசி போக்கிட, கல்கத்தா வீதிகளிலே அன்னை தெரசா கையேந்தினார். "அனாதைகளின் துயர் துடைக்க ஏதேனும் போடுங்கள் - ஏதாவது கொடுங்கள்" எனஅறு ஒரு பணக்கார நகை வியாபாரியின் வீட்டின் முன்னால் நின்று இறைஞ்சினார். கஞ்சனான அந்த வியாபாரி "போ, போ" என்று விரட்டினார்.
"அனாதைகள் துயர் தீர ஏதாவது தாருங்கள்" என்று அ
ன்னை மீண்டும் வேண்டவே, ஆத்திரம் அடைந்த அந்த வியாபாரி, வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே அன்னையின் கைகளிலே உமிழ்ந்தான். அதைக் கண்டு சிறிதும் பதற்றமடையாமல், "இதனை வழங்கியதற்கு நன்றி - ஏற்றுக் கொள்கிறேன். இது எனக்கு - ஆனால் அந்த அனாதைகளுக்கு ஏதாவது நிதி கொடுங்கள்" என்றாராம்.
வியாபாரி தன் தவறுக்கு வருந்தி, நாணி, உள்ளே சென்று காசோலைப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்து - "உங்களுக்கு விருப்பமான தொகையை எழுதி எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினானாம். ★ வீதியோர அனாதை ஒருவர் முதியோர் இல்லத்தில் நோயாளியாகச் சேர்ந்தார். ஒரு நாள் அவருக்குப் புத்தாடை தந்து அணிந்து கொள்ளச் சொன்னபோது, அந்த முதியவர், அன்னையின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அப்போது அன்னை, "என்னய்யா, என்ன வேண்டும்?"
என்று கேட்க, "என் வாழ்நாள் விளிம்புவரை பகைமையையும், வெறுப்பையும் கண்டேனே அல்லாமல், பாசத்தைப் பார்த்ததே இல்லை. இங்கு வந்த பின்பே அன்பில் திளைக்கிறேன் - பாசத்தில் நனைகிறேன்" என்று கூறி அழுதாராம். நாட்கள் நகர்ந்து. அவர் பிழைக்க முடியாத நிலை அடைந்தார். விலை உயர்ந்த மருந்து வரவழைக்கப்பட்டு, அவருக்குத் தரப்பட்டது. பக்கத்திலே இருந்த டாக்டர்கள் "அம்மா, இவர் இன்னும் சில மணித் துளிகளில் மறையப் போவது உறுதி - அது தெரிந்தும் இவ்வளவு விலை உயர்ந்த மருந்தினை வீணாக்க வேண்டுமா?"
என்று கேட்டார்களாம். அதற்கு அன்னை, "நீங்கள் நினைப்பது சரி- இவர் வாழ்நாள் முழுவதும் அன்பு என்றால் என்ன என்றே அறியாதவர். உண்மை அன்பினை உணராமலேயே இவர் சாக வேண்டுமா? முதலில் அவர் அன்பினை அனுபவிக்கட்டும் - அதனை அனுபவித்த பிறகு இறக்கட்டும் என்று தான் இந்த விலை உயர்ந்த மருந்தை அளித்தேன்" என்றாராம்.
★ கல்கத்தாவில் சர்க்கரை கிடைக்காத காலம். பெரும் தட்டுப்பாடு. அப்போது மூன்று வயது சிறுவன் ஒருவன், தன் தாயிடம் "அம்மா! பாலிலே சர்க்கரை போட வேண்டாம். அந்தச் சர்க்கரை மொத்தத்தையும் இதுவரை சர்க்கரை என்றாலே என்ன என்று அறியாத ஏழைக் குழந்தைகளுக்கு அளிப்போம், அன்னை தெரசா மூலமாக" என்று சொல்லிக் கொடுத்தானாம்.
"நான் பெற்ற கொடைகளிலேயே இது தான் பெரும் கொடை" என்று அன்னை தெரசா அதனை ஏற்றுக் கொண்டாராம். கலைஞர் ★ மற்றொரு சிறுவனோ, தான் இனி காப்பியே அருந்தப் போவதில்லை என்றும், அதற்கான காசைச் சேர்த்து அன்னை தெரசாவிடம் அளிக்கப் போவதாகக் கூறித் தந்தானாம். ★ கல்கத்தா பிச்சைக்காரர் ஒருவரோ, தான் பிச்சையெடுத்து சேர்த்த காசுகளை அப்படியே அன்னை தெரசாவிடம் பிறருக்கு உதவுவதற்காகக் கொடுத்தாராம். ★ ஓர் இந்து திருமணத் தம்பதியர், மணம் புரிந்து கொண்ட போது, மண விருந்தை நிறுத்திவிட்டு, அந்தத் தொகையை அப்படியே அன்னை தெரசாவிடம் அளித்தனராம்.
"என்னைத் தொடாதீங்க சிஸ்டர்!" என்று தடுத்த தொழுநோயாளிக்கும் சிகிச்சை அளித்தார் தெரசா. ★ சுப்ரோட்டா மித்ரா என்ற ஒரு வங்க இளைஞன். அன்னை இல்லத்தின் முன் ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்தான். அனைவரையும் பார்த்து முடித்த பிறகு, அன்னை அவனை அழைத்து, "என்ன வேண்டும்?"
என்று கேட்டார். பதற்றத்தோடு அந்த இளைஞன், அன்னையே! இங்கு நான் வந்தது இதுவே முதல் முறை. நேற்று என் முதல் ஊதியம் பெற்றேன். அதை ஏழைகளுக்கு அளித்திட விழைகிறேன். இதோ அந்தப் பணம்" என்று கூறி அன்னை தெரசாவிடம் அதனை அளித்தானாம். அன்னை தெரசா மறைவால் இலட்சக்கணக்கான இந்தியர்கள் அநாதைகளாகி விட்டனர்" என்றார் குஜ்ரால் அன்னை தெரசா அவர்கள் மறைந்தபோது அவருடைய வயது 87.
டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடி, அன்னை தெரசாவுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடத்த முடிவு செய்தது. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தெரசாவின் உடல் மிஷினரி ஆப் சாரிட்டியின் தலைமை அலுவலகமான அன்னை இல்லத்தின் முதல் மாடியில் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது.
6.9.1997 அன்று காலையில் தமிழக அமைச்சரவையும் எனது தலைமையிலே கூடி, தெரசாவின் மறைவிற்காக ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்தது. 7.9.1997 அன்று காலையில் பிரதமர் குஜ்ரால் அவர்கள் கல்கத்தா சென்று, அன்னை தெரசாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். "லட்சக்கணக்கான ஏழைகளின் அன்னையாக விளங்கிய தெரசா அவர்கள், அந்த ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதில் தன் வாழ்நாளைக் கழித்துள்ளார் - அவரது மறைவால் லட்சக்கணக்கான இந்தியர்கள் அனாதைகளாகி விட்டார்கள்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு - புதுவை கிறித்தவ ஐக்கியப் பேரவையின் சார்பில், அன்னை தெரசா அவர்களின் திருவுருவப் படத்- கலைஞர் திறப்பு நிகழ்ச்சி 10.9.1997 அன்று சென்னை மயிலை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், மதுரை பேராயராக இருந்த எம்.ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு, அன்னை தெரசா அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தேன். அன்னை தெரசா மறைந்ததையொட்டி, சென்னைத் தொலைக் காட்சியிலும், வானொலியிலும் என்னிடம் இரங்கல் உரை கேட்டபோது நான் கூறியது- "பருந்துகளும், கழுகுகளும் வட்டமிடும் இந்த உலகத்தில் - சமூக சேவை எனும் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த 'அன்னப்பட்சி' மறைந்துவிட்டது" என்று குறிப்பிட்டேன்.
அன்னம் ஒரு பறவையையும் குறிக்கும், அன்னம் அன்னை தெரசாவையும குறிக்கும், அன்னம் அவர்கள் ஏழையெளிய மக்களுக்கு அளித்த உணவைக் குறிக்கும். 1962ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த அந்தக் காலத்தில், சிறந்த சமூக சேவகிக்கான "பத்மஸ்ரீ" விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்டது கூட பெரிதல்ல - அந்த விருதை வாங்கச் சென்ற அன்னை தெரசா அவர்களைப் பற்றி பண்டித நேரு அவர்கள், "குடியரசுத் தலைவருடைய கையிலே இருந்து அன்னை தெரசா அவர்கள் விருதினை வாங்கிச் சென்ற காட்சி - கொடிய நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையை தன் இரு கைகளாலும் பரிவோடு ஏந்தி எடுத்துச் செல்வது போன்ற ஒரு காட்சியை நினைவுறுத்தியது" என்று குறிப்பிட்டாராம்.
மேற்கு வங்க முதலமைச்சராக பி.சி.ராய் பண்டித நேரு அவர்களையே பெயர் சொல்லி அழைக்கக் கூடிய அளவிற்கு அவரிடம் பழகியவர். அவருடைய 80ஆவது பிறந்த நாளில் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போதும், "இந்த என் பிறந்த நாளில் - இந்த முதிய வயதில் முதன் முதலாக யாரைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடினேனோ- அந்த என் அருமைத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் நினைவுகூட எனக்கு வரவில்லை.
என் உயிருக்குயிரான உற்ற தோழர் ஜவகர்லால் நேரு அவர்களின் எண்ணமும் என் நெஞ்சில் எழவில்லை. ஏன் - எனக்கு நெருக்கமான என் உற்றார், உறவினர் எவரைப் பற்றிய சிந்தனையுமே எனக்கு வரவில்லை. ஆனால் எனது அலுவலகத்துக்குச் செல்லும் அந்த மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது ஒரே ஒரு எளிய உருவம் மட்டுமே என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது. திக்கற்ற ஏழைகளையும், நோயாளிகளையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக தம் வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைக்கிறாரே அந்த தெரசா- அவரது மெலிந்த வடிவமே என் இதயம், மூளை "பருந்துகளும் கழுகுகளும் வட்டமிடும் இந்த உலகில் சமூகசேவை எனும் தடாகத்தில் நீந்திய அன்னப்பட்சி மறைந்து விட்டது!"
கலைஞர் எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டது" என்று தெரிவித்தாராம். அன்னை தெரசா பற்றி எழுதுவதென்றால் இன்னும் நீண்டு கொண்டே போகும். எனவே அவரது சரித்திரத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு, அடுத்த வாரம் என் சரித்திரத்தைத் தொடருகிறேன்.
