நெஞ்சுக்கு நீதி
மறைந்த மாமணிகள்! · 326 / 391
14. மறைந்த மாமணிகள்! தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு 16 வயதில் உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை தமிழக அரசின் 1996-97ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 20 ஆம் தேதியன்று டெல்லி சென்றேன். என்னுடன் தலைமைச் செயலாளர் நம்பியார், நிதித்துறை செயலாளர் ராஜாராமன், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர் கெளரி சங்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
அப்போது திட்டக்குழுவின் துணைத்தலைவராக பேராசிரியர் மதுதண்டவதே இருந்தார். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். என்னை அன்புடன் வரவேற்று. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை நல்கியதோடு, 96-97ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற, 3700 கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதலை வழங்கினார். அது அதற்கு முந்தைய ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட 500 கோடி ரூபாய் அதிகமாகும்.
திட்டக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற நான், 21.9.1996 அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக அப்போதிருந்த ஐ.கே.குஜ்ரால் அவர்களைச் சந்தித்து, இலங்கையிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு ஏராளமாக வருவதைப்பற்றி நீண்ட நேரம் பேசினேன். இலங்கையிலிருந்து அப்பாவி மக்களும், ஈழத்தமிழ் அகதிகளும் வந்து குவிவதைத் தவிர்ப்பதற்கு, உகந்த சூழ்நிலையை இலங்கையிலே உருவாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
அப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டேன். என்னுடன் மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் உடன் வந்திருந்தார். தற்போது சிலர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, நானே நேரில்சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் 1996ஆம் ஆண்டிலேயே அப்போதிருந்த பிரதமரைச் சந்தித்து, தமிழக மீனவர்கள் குறித்து குரல்க்கொடுத்திருக்கிறேன் என்பதை அவர்கள் பழைய ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும்.
டெல்லிப் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய நான், "தினத்தந்தி" நாளிதழின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 91ஆவது பிறந்த நாளினையொட்டி, இலக்கியப் பரிசளிப்பு விழா ஒன்றினை சென்னையிலே ஏற்பாடு செய்து, அந்த விழாவில் என்னைக் கலந்துகொள்ள வேண்டுமென்று அவருடைய அன்பு மகன் சிவந்தி ஆதித்தன் என்னை அழைத்ததின் பேரில் 27.9.1996 அன்று, ராணி சீதை மண்டபத்தில் நடைபெற்ற அந்த விழாவிலே கலந்துகொண்டு, பேராசிரியர் கு.அருணாசலக் கவுண்டருக்கு சி.பா.
ஆதித்தனார் தமிழ் மூதறிஞர் விருதையும் எழுத்தாளர் சு.சமுத்திரத்திற்கு 96ஆம் ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசையும் வழங்கி, தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும் வழங்கினேன். அந்த விழாவில் சிவந்தி ஆதித்தன் வரவேற்புரையாற்றிட, அ.மா.சாமி நன்றி கூறினார். அவ்வை நடராசன், பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோரும் அந்த விழாவிலே கலந்துகொண்டனர். அந்த விழாவிலே நான் உரையாற்றும்போது, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் கலைஞர் இலங்கைத்தமிழர் பிரச்சினைபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ராலுடன் நானும், முரசொலி மாறனும் பேசினோம்!
எனும் சொல்' என்ற வள்ளுவர் குறளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் சிவந்தி ஆதித்தன்" என்று கூறியதோடு, "ஆதித்தனார் குடும்பம், தமிழ் கற்றக்குடும்பம் - தமிழைக் கற்பிக்கும் குடும்பம் - ஏழை எளியவர்களும் இனிய தமிழைப் புரிந்து கொள்வதற்குப் பணியாற்றிய குடும்பம் - பணியாற்றிக்கொண்டிருக்கின்ற குடும்பம் - சிவந்தி ஆதித்தனார் அவர்களானாலும், இராமச்சந்திர ஆதித்தன் அவர்களானாலும், அவர்களுடைய வீட்டு மாப்பிள்ளை மறைந்த கே.பி.கந்தசாமி அவர்களானாலும் சரி - ஏடுகள் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழைக் கற்பித்தவர்கள்!
இன்றைக்கும் அவர்கள் அந்த நாளேடுகள் வாயிலாக - கிழமை ஏடுகள் வாயிலாக தமிழைக் கற்பித்துக் கொண்டிருக்றார்கள்." "ஒரு காலத்தில் அவர்களால் பத்திரிகை நடத்த முடியுமா?" என்ற கேள்வி பெரிதாக வளர்ந்து நின்றபோது, எங்களால்தான் மற்றவர்களைவிட அதிக அளவில் விநியோகமாகின்ற பத்திரிகையை நடத்திக் காட்ட முடியும் என்று நடத்திக் காட்டிய குடும்பம் ஆதித்தனார் அவர்களுடைய குடும்பம்" என்று பாராட்டினேன்.
அந்த விழாவில் நான் உரையாற்றும்போது, என்னுடைய மனதில் இருந்த ஒரு உறுத்தலையும் வெளியிட்டது என் நினைவிலே உள்ளது. ஆதித்தனார் சிலை திறப்புவிழா நடைபெற்றபோது, ஆதித்தனாருடைய வாழ்க்கை வரலாறு டெல்லியில் திட்டக்குழுத் துணைத்தலைவர் மதுதண்டவதே அவர்களுடன்... வெளியிடப்பட்டது. அதிலே அண்ணா முதலமைச்சராக இருந்தபோது ஆதித்தனார் பேரவைத்தலைவராக இருந்தவர் என்று மட்டுமே எழுதப் பட்டிருந்தது. ஆனால் அதற்குப்பிறகு முதலமைச்சர் பொறுப்பை நான் ஏற்றவுடன், பேரவைத்தலைவராக இருந்த ஆதித்தனாரை, என்னுடைய அமைச்சரவையிலே கூட்டுறவு வேளாண்மைத்துறை அமைச்சராக இடம்பெறச்செய்து, அவரும் சிறப்பாக அந்தப்பணியினை ஆற்றினார்.
ஆனால் அந்தத்தகவல் ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறச்செய்யாமல் மறைக்கப்பட்டதை வெளிப்படையாக எடுத்துக்காட்டினேன். தமிழகச் சட்டப்பேரவையில் ஒருநாள், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த கோவை வி.கே. லெட்சுமணன் அவர்கள், தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரக போராட்டத்தில் அண்ணல் காந்தி அடிகளுக்கு உறுதுணையாக இருந்த தமிழ் வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மைக்கு ஜோகன்ஸ் பர்க் நகரில் இருந்த நினைவுச் சின்னத்தை ஆப்பிரிக்க அரசு நீக்கிவிட்டது என்றும் - அதை மீண்டும் நிறுவ ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராகி, அரசுப் பொறுப்பினை ஏற்றிருக்கும் நெல்சன் மண்டேலா அவர்களை மைய அரசின் மூலமாக தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.
உடனடியாக தமிழக அரசின் சார்பாக நான் மத்திய அரசின் வெளி உறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ராலுக்குக் கடிதம் ஒன்று எழுதினேன். மத்திய அரசும் உடனடியாக அது பற்றி தென் ஆப்பிரிக்காவில் இருந்த இந்திய தூதுவர் கலைஞர் கோபாலகிருஷ்ண காந்தியை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டது. விடுதலை வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை நினைவுச்சின்னம் அகற்றப்படவில்லை என்றும், இந்தியத் தூதுவரான கோபாலகிருஷ்ண காந்தியும், வள்ளியம்மாவினுடைய மருமகனான கோபால் (முதலியார்) அவர்களும் வள்ளி அம்மாளின் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டதாகவும், அதற்குரிய கல்வெட்டுக் குறிப்புடன் நினைவுச்சின்னம் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவித்ததோடு, அதற்கான புகைப்படங்களையும் மத்திய அரசுக்கு அனுப்பினார்கள்.
அந்த விவரங்களை எல்லாம் மத்திய அமைச்சர் குஜ்ரால் அவர்கள் கடிதத்தின் மூலமாக எனக்கு தெரிவித்திருந்தார். 1997இல்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது என்றபோதிலும், 1971ஆம் ஆண்டிலேயே அண்ணல் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தியாகிகள் கோட்டமான தில்லையாடியை வள்ளியம்மை நகராக உருவாக்க கழக அரசு முன்வந்தது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், செம்பனார்கோவில் அருகிலே உள்ள சிற்றூர்தான் தில்லையாடி. அண்ணல் காந்திஅடிகளுடன் தென்னாப்பிரிக்க நாட்டில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களான வள்ளியம்மை, நாராயண சாமி, நாகப்பன் ஆகியோர் பிறந்த மண்தான் தில்லையாடி.
அந்த ஊரில் காந்தியடிகள் நூற்றாண்டு விழாவினை யொட்டி, 1969ஆம் ஆண்டில் அமைக்கத் தொடங்கிய நினைவுச் சின்னங்களாக வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப் பள்ளி, நாராயண சாமி மாணவர் இல்லம், நாகப்பன் நகர் முதலியவற்றை அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் அவர்கள் தலைமையில் 13.8.1971 அன்று நான் திறந்துவைத்தேன். வள்ளியம்மை தனது 16ஆவது வயதில் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் காந்தியுடன் பணி புரிந்து - சிறைச்சாலைக்குச் சென்று - சிறைச் சாலையிலே கடுமையான நோய்வாய்ப்பட்டு - சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றபிறகும் மரணப்படுக்கையில் அந்த 16 வயது இளமங்கை கடைசி மூச்சு இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில் - காந்தியடிகள் வள்ளி அம்மையைப் பார்த்து, "என்னால் அல்லவா, உனக்கு இந்தக் கஷ்டம்?"
என்று கேட்ட நேரத்தில் - "இன்னும் இதுபோன்ற பல கஷ்டங்களை நாட்டுக்காக, நியாயத்துக்காக, அனுபவிக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினாராம். தொடர்ந்து காந்தி அடிகள், "மீண்டும் ஒருமுறை சிறை செல்ல உனக்குத் துணிவு இருக்கிறதா?" என்று கேட்டபோது, ஒரு முறை அல்ல பல முறை சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்" என்று கூறிவிட்டு, 16 வயது நிரம்பிய வள்ளியம்மை தனது இறுதி மூச்சை விட்டார் என்று காந்தி அடிகளே எழுதிக்காட்டியிருக்கிறார்.
இந்த வள்ளியம்மை நகரை 1969-70ல் உருவாக்கியது மாத்திரம் அல்லாமல், 1997-ஆம் ஆண்டு அந்த வள்ளியம்மை நகர் தமிழக அரசின் சார்பில் 5.91 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டதும் தி.மு. கழக ஆட்சியிலேதான். 96ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் கடலூர் நகரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நான் உரையாற்றுகிறபோது பின்வருமாறு குறிப்பிட்டேன். "நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருக்கிறேன் என்றால், அது எனக்குக்கிடைத்த பதவிப்பெருமை அல்ல.
உங்களுக்குப் பணியாற்ற எனக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு - அவ்வளவுதான். உங்களுக்கு வேலை செய்ய எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பம். அப்படி கருதிக்கொண்டுதான் நான் இருக்கிறேன். அப்படி சந்தர்ப்பம் அங்கே இல்லாமல் போய்விட்டால், நான் நினைத்தபடி ஆட்சி நடக்காவிட்டால், என்னுடைய உடன் பிறப்புக்களோ - அல்லது அதிகாரிகளோ அல்லது நமது கழகத்தில் உள்ளவர்களோ என்னோடு ஒத்துழைக்க மறுத்துவிட்டால் கலைஞர் மத்திய திட்டக்குழுக் கூட்டத்தில் மாநிலத் திட்டங்கள்பற்றி விவாதம்.
துண்டை உதறித் தோளிலே போட்டுக்கொண்டு மறுநாளே அந்த இடத்தைக் காலிசெய்து விட்டு போய்விடக்கூடியவன்தான் கருணாநிதி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இதிலே நான் கண்டிப்பாக இருப்பேன்" என்று குறிப்பிட்டேன். - இந்த என் அறிவிப்பு தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்துவந்த படித்த மக்களிடையே அப்போதே பெரிதும் வரவேற்கப்பட்டது. எனது இந்தப் பேச்சினைத் தொடர்ந்து 3.10.1996 தேசிய தேசிய "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளேடு.
தி.மு.கழக அரசு பதவிப்பொறுப்புக்கு வந்த 150ஆவது நாளினை முன்னிட்டு, தனது இதழில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியிட்டது. அதன் சுருக்கத்தை மட்டும் கூறுகிறேன். "பொதுத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அரசு கடந்த 150 நாட்களில், தனது பொது நிர்வாக செயல்பாட்டாலும், லஞ்ச ஊழலை எதிர்த்து செயல்படவேண்டும் என்கிற முடிவோடு உள்ளதாலும், வாக்காளர்களை ஏமாற்றம் அடையச் செய்யவில்லை.
லஞ்சத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட தமிஷன் - வருவாய்த்துறை கமிஷன் - போலீஸ் நிர்வாகத்தை மாற்றிச் சீராக அமைத்தது - உள்ளாட்சி மன்றம் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தியது - கிருஷ்ணா நதித் திட்டத்தைக் கொண்டு வந்தது - லஞ்ச ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது ஆகிய - நடவடிக்கைகளின் காரணமாக இந்த அரசு மீது மக்கள் ஏடுகள் மூலமாகத் தமிழ்ப்பணி புரிந்துவரும் "தினத்தந்தி" சிவந்தி ஆதித்தன் நல்லெண்ணம் கொண்டுள்ளார்கள்.
முதலமைச்சர் கலைஞர் இந்த வயதிலும் அரசு நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்பதற்காக தனது குடும் பத்திற்காக சிறிது நேரமே ஒதுக்கி, அதிக நேரத்தை அரசுப்பணிகளுக்கு ஒதுக்குகிறார்." "1996 மே மாதம் 13ஆம் தேதி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு. இதுவரை ஏறத்தாழ 8 ஆயிரம் கோப்புகளைப் பார்த்துக் கையெழுத்திட்டுள்ளார் என்று அவருடன் நெருக்கமாக உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோப்புகளைப் பார்த்தல் - அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய விருந்தாளிகள் ஆகியோருடன் விவாதித்தல் - பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுதல் - ஆகியவற்றிற்காக ஒவ்வொரு நாளும் அதிக அளவில் நேரத்தை முதல்வர் ஒதுக்குகிறார்."
"சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் நாட்களைத்தவிர - பொது விடுமுறை, வார விடுமுறை நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும் முதல்வர் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். தலைமைச் செயலகத்தில் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, காலை 9.30 மணி அளவில் முதல்வர் அவர்கள் அங்கு வந்து விடுகிறார். மதியம் வெகுநேரம் தலைமைச் செயலகத்தில் இருந்துவிட்டுப் பின்னர் பகல் உணவுக்காகவும் சிறிதுநேர ஓய்வுக்காகவும் வீட்டிற்குச் செல்கிறார்.
அதன் பிறகும் முதல்வர் அரசு வேலைகளில் கவனம் செலுத்துகிறார். வீட்டிலிருந்து கொண்டோ அல்லது மீண்டும் மாலையில் தலைமைச் செயலகம் சென்றோ இரவு 8 மணிவரை அலுவலகப்பணிகளில் ஈடுபடுகிறார். மிகவும் எளிமையான நடவடிக்கைகளுக்கும், தேவையற்ற வீண் செலவினத்தைத் தவிர்ப்பதிலும், அரசுத்துறைகளில் உள்ள அதிகாரிகளுக்குத் தாமே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க கலைஞர் வேண்டுமென்பதில் முதலமைச்சர் தீவிரமாக இருக்கிறார். மதுரை, தஞ்சை, சேலம் பெங்களூர் போன்ற வெகுதொலைவில் இருக்கும் இடங்களுக்கும் கூட அவர் விமானத்தில் செல்வதைத் தவிர்த்து ரயிலிலேயே சென்று வருகிறார்."
"சென்னையிலிருந்து 40 கி.மீ. தூரமே உள்ள எண்ணூருக்குக்கூட அரசு ஹெலிகாப்டரில் சென்றவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது செயல்பாட்டுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு வரும் இந்த முதல்வர் அவர்கள் அரசின் விமானத்தையும் ஹெலிகாப்டரையும் இதுவரை ஒரு முறைகூடப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடத்தக்கது."
"ரயில் மூலம் அவர் பயணம் செய்யும்போதுகூட தம்முடன் முக்கிய கோப்புகளை எடுத்துச்செல்கிறார். ரயிலிலேயே துறை செயலாளர்களுடன் அந்தக் கோப்புகள் குறித்து விவாதிக்கிறார். கோப்புகள் மீதான பணி முடிவடைந்தவுடன், அந்த அதிகாரிகள் அடுத்த ரயில்வே நிலையத்தில் கோப்புகளுடன் இறங்கி சென்னைக்குத் திரும்பிவந்து விடுகின்றனர்."
"தி.மு.க. அரசின் செயல்பாட்டில் பொதுமக்கள் ஏமாற்றம் அடையவில்லை" என்று பத்திரிகையாளரான சோ. ராமசாமியும் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா ஆட்சிக்காலத்தைவிட கருணாநிதியின் ஆட்சிக்காலம் திருப்தியாகவே உள்ளது" என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்."
அகில இந்திய மாதர் சங்கத்தின் துணைச் செயலாளர் யு.வாசுகி குறிப்பிடுகையில், "பெண்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து - அதற்காகப் பல்வேறு திட்டங்களைத் தனது நிதிநிலை அறிக்கையில் இந்த அரசு அறிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 1996 ஆம் ஆண்டு இவ்வாறு எழுதியது. நீலம் - கழக வரலாற்றில் மறக்கமுடியாத - மறைக்க முடியாத பெயர். கழக அலுவலகத்தை தன் வீடாகக்கருதி வாழ்ந்தவர் - கழகத
்தின் அமைப்புச்செயலாளர் என்ற பெயருக்குப் பொருத்தமாக விளங்கியவர் - பேரறிஞர் அண்ணா அவர்களிடத்திலும், என்னிடமும் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர் நீல நாராயணன் என்ற பெயர் கொண்ட நீலம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள கிளைக்கழகங்கள் முதல் தலைமைக்கழகம் வரையிலே உள்ள விவரங்களைத் துல்லியமாகத் தன் மனதிலே வைத்திருப்பார். சில மாதங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்த நீலநாராயணன் 7.10.1996 அன்று இரவு இயற்கை எய்தினார்.
மறைந்தபோது அவருடைய வயது 74. கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் அவர். சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இரண்டு முறை பணியாற்றியவர். கழகம் அறிவித்த அத்தனைப் போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றதோடு, மிசா கைதியாகவும் ஓராண்டு காலம் சிறையிலே இருந்தவர். அவரது தியாகத்தைப்போற்றும் வகையில், நான் அவருக்கு பெரியார் விருதினை அளித்திருக்கிறேன். இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர் அவர்.
எனது பேச்சை எந்த அளவிற்கு மதிக்கக்கூடியவர் என்பதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், கழகத்திலே ஒருவருக்கு ஒரு பதவிதான் இருக்க வேண்டுமென்று நான் ஒருமுறை தெரிவித்தேன். சென்னை மாவட்டக் கழகச்செயலாளராகவும். சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்த நீலநாராயணன், தனது கட்சிப்பதவியை இழக்க விரும்பாமல், மேலவை உறுப்பினர் பதவியைத் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்தார். அவரது மறைவு குறித்து நான் அப்போது எழுதிய இரங்கல் செய்தியில் - "உறுதியின் வடிவமாக - உழைப்பின் உருவமாக கொள்கைக் குன்றமாக - எளிமையின் சிகரமாக - ஆற்றலின் கலைஞர் இருப்பிடமாக - நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்து "நீலம்" என்று நெஞ்சினிக்க நம்மால் அழைக்கப்பட்ட தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் நீலநாராயணன், நீடுதுயில் கொண்டுவிட்டார் எனும் செய்தி எம் இதயத்தைச் செந்தீயாகச் சுட்டெரிக்கிறது.
இன்றைய சென்னைத் தலைநகரம், கழகத்தின் இரும்புக்கோட்டையாக எழுந்து நிற்பதற்கு எறும்பாகப் பணியாற்றி, எஃகுத் தூணாக நின்றது அந்தக் குள்ள உருவம்தான் என்பதை எண்ணும்போது கண்கள் குளமாகின்றன. கழகத்திற்குச் சோதனைகள், வேதனைகள் வந்தபோதெல்லாம் தலைதாழாச் சிங்கமாக நின்றவர் களம் பல கண்டவர்- பலமுறை காராக்கிரகத்தில் அடைபட்டவர் - பெரியாரின் தொண்டர் - அண்ணாவின் தம்பி - எங்கள் தோளுக்குத் துணை நின்ற தோழர் - அவரது பிரிவு கழகக் குடும்பத்திற்கு மாபெரும் இழப்பு.
"அலுவலகப் பணி எதுவாயினும் கூப்பிடு நீலத்தை" எனக்கூவி அழைத்துக்கொண்டிருந்தேனே, இனி எப்படிக் கூப்பிடுவேன் என ஏங்கித் தவிக்கிறேன். நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொண்டு, அந்த நல்லவர் பெயரை மனத்தில் தாங்கி நம் பயணம் தொடர்வோம்" - என்று குறிப்பிட்டிருந்தேன். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரச்சுற்றுப் பயணத்தில் இருந்த நான் 9.10.1996 அன்று காலையில் சென்னை திரும்பியதும் - புகைவண்டி நிலையத்திலிருந்தே நேராக நீலநாராயணன் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
8.1.1997 அன்று நீல நாராயணன் அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி சென்னையில், ராணி அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மேயராக இருந்த தம்பி மு.க.ஸ்டாலின் அனைவரையம் வரவேற்க - உறுதியின் வடிவம் - உழைப்பின் உருவம்- கொள்கைக் குன்றம்- எளிமையின் சிகரம் - நட்பின் இலக்கணம் - இவர்தான் நீலநாராயணன் அமைச்சர்கள் பேராசிரியர், நாஞ்சிலார், வீரபாண்டி ஆறுமுகம், துரை முருகன், கோ.சி.மணி ஆகியோர் உரையாற்றினர்.
'துக்கம் எப்போதும் துணையோடு வரும்' என்பார்கள். அதற்கொப்ப நீலநாராயணன் மறைந்த திங்களுக்கெல்லாம், புதுக்கோட்டை மாவட்டக் கழகச்செயலாளரும், அரசு கொறடாவுமான அ. பெரியண்ணன், உடல் நலக் குறைவுற்று சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். பல நாட்கள் சிகிச்சை அளிக்கப் பெற்றும் பலனின்றி, 15.11.1996 அன்று இயற்கை எய்தினார். கழகம் சோதனைகளைச் சந்தித்தபோதும், துரோகத்தால் தாக்குண்டபோதும், கழகத்தைவிட்டு நீங்காமல் உடனிருந்து அயராப் பணி ஆற்றிய இரும்பு மனிதர் பெரியண்ணன்.
"கழகத்தால் உனக்கு என்ன பயன் என்று கருதாதே நம்மால் கழகத்துக்கு என்ன பயன் என்று கருதி பணியாற்று" என்ற மொழிக்கேற்ப - பதவி சுகத்தைப் பெரிதாகக் கருதாது இயக்கப்பணி ஆற்றிய பண்பாளர் பெரியண்ணன். 1974ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவான காலத்திலிருந்து, அந்த மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து, தொடர்ந்து பணியாற்றி மாவட்டக் கழகத்தோழர்களையெல்லாம் அன்பால் அரவணைத்து, அனைவரிடமும் இன்முகம் காட்டி, இயக்கம் வளர்த்த ஏந்தல் பெரியண்ணன்.
பலன் கருதாது இயக்கப் பணியாற்றிய பெரியண்ணன் அவர்களின் சேவையைப் போற்றி 17.9.1995 அன்று தலைமைக் கழகத்தின் அண்ணா விருதை அவருக்கு நான் வழங்கினேன். புதுக்கோட்டை தொகுதியிலிருந்து 1989ஆம் ஆண்டு, 96ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கலைஞர் மக்கள் பணியாற்றியவர் பெரியண்ணன். 96ஆம் ஆண்டு அவரைச் சட்டமன்றத்தில் அரசு கொறடாவாக ஆக்கி மகிழ்ந்தேன். அவர் மறைவுச்செய்தி கேட்டதும், நானும், பேராசிரியரும் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினோம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள மேலக்கோட்டை கிராமம்தான் பெரியண்ணனின் சொந்த ஊர். அந்தக்கிராமத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினராகி, பின்னர் தலைவரானார். இந்தியாவிலேயே 109 ஊராட்சி மன்றங்களை உருவாக்கிய மிகப்பெரிய ஒன்றியமான திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். 1976ஆம் ஆண்டு மத்திய அரசால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்டபோது, மிசா சட்டத்தில் அவரைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறையிலே அடைக்கப்பட்டார்.
இவரைக் காண இவரது தாயார் திருச்சி சிறைச்சாலைக்கு வந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார். பெரியண்ணன் மறைந்ததையொட்டி, அப்போது நான் எழுதிய இரங்கல் செய்தியில், "அந்தோ, புதுக்கோட்டை பெரியண்ணன் மறைந்தார்! இது செய்தி அல்ல! என் இதயத்தில் மட்டுமல்ல எல்லோரின் - கழக உடன்பிறப்புக்கள் இதயத்திலும் மூண்டுவிட்ட செந்தீ! இளமை முதல் நெருப்பாற்றில் நீந்தி பெரியாரின் கொள்கைகளை - அண்ணாவின் கோட்பாடுகளைக் காத்து, வளர்த்து, வலுவூட்டிய புதுக்கோட்டை மாவட்டத்தின் புலிப்போத்து அவர்.
உடல் நலிவுற்ற நிலையிலும், புதுக்கோட்டை நகரில் தோழமைக் கட்சியின் வெற்றிக்காக அவர் பம்பரமெனச்சுழன்று பணியாற்றியதை அண்மையில்தான் நேரிலேகண்டு, ஓய்வெடுத்துக்கொள்ளுமாறு உடன்பிறப்பு என்ற முறையில் உரிமையுடன் ஆணையிட்டேன். ஆனால் அதற்குள் இப்படியொரு முழு ஓய்வை எடுத்துக்கொண்டு நம்மை எல்லாம் சோக வெள்ளத்தில் மூழ்கடிப்பார் என்று நான் கனவிலும் கருதவில்லை. பெரியண்ணனின் குடும்பம் தனது தலைவனை இழந்து விட்டது.
அவரால் வீறுகொண்ட கழகக் - காளையர் தமது ஒப்பற்ற தளகர்த்தனை இழந்து விட்டார்கள். நானோ என் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல தம்பியை இழந்து தவிக்கிறேன். ஆறுதல் பெறுவோம். அவர் கட்டிக் காத்த கொள்கை உறுதி, அவர் உருவில் என்றும் நம்முடன் இருக்கும்" - என்று குறிப்பிட்டிருந்தேன். பெரியண்ணன் மாவட்டக் கழகச்செயலாளராக இருந்து கழகம் வளர்த்த புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்றைய மாவட்டக் கழகச்செயலாளராக, பெரியண்ணன் அவர்களின் அன்பு மகன் பெரியண்ணன் அரசு தந்தை வழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தந்தை - தந்தைக்குப் பின் தனயன் - தனயனுக்குப் பிறகு பேரன் - என்று நம்முடைய கழகம் தொடர்ந்து பரம்பரை, பரம்பரையாக தொண்டாற்றி வருகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும். இதற்கிடையிலே - பொதுத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் கடுமையான வேலை - தேர்தல் பிரச்சாரத்திற்கான அலைச்சல் - டெல்லியிலே ஆட்சி மன்றங்கள் - புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் தொடர்ந்து பணிகள் - இவை காரணமாக 96ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் என்னுடைய உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
கடுமையான வைரஸ் சுரம். மருத்துவர்கள் கே.வி.திருவேங்கடம், பி.ராமமூர்த்தி, டாண்டி மருதநாயகம், வி.சொக்கலிங்கம், கோபால் ஆகிய மருத்துவர்கள் பார்த்துவிட்டு, சில நாட்கள் ஓய்வெடுப்பது மிகவும் முக்கியம் என்று கூறியதோடு, ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேண்டுமென்று கூறினார்கள். ஆளுநர் சென்னா ரெட்டி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித்தலைவர் மூப்பனார், மராட்டிய மாநில முன்னாள் ஆளுநர் சி.சுப்பிரமணியம், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினராக இருந்த சொக்கர் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார், பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர், ஆர்.எம்.வீரப்பன், ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் நேரில் வீட்டிற்கு வந்து உடல்நலம் விசாரித்துச் சென்றனர்.
கலைஞர் 9.11.1996 அன்று சென்னை அண்ணா நகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த இந்தியப் பிரதமர் தேவகவுடா அவர்கள் என் இல்லத்திற்கு வந்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜெய்பால் ரெட்டி அவர்களும் வந்திருந்தார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களும், மேற்கு வங்க ஆளுநராக இருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.கே. குஜ்ரால் அவர்களும், ஆந்திர மாநில முதல் அமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் கேட்டறிந்தனர்.
உடல் நிலை சற்றுத் தேறி அலுவலகத்திற்கு செல்வதற்குத் தயாரானபோது - தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களின் பேத்தியின் திருமணம் ஐதராபாத் நகரில் நடைபெறுவதாகவும், அதற்கு நான் அவசியம் வரவேண்டுமென்றும் வலியுறுத்தியதன் பேரில், 27.11.1996 அன்று காலையில் ஐதராபாத் சென்று மணவிழாவில் கலந்துகொண்டேன். ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் விமான நிலையத்திற்கே வருகை தந்து என்னை வரவேற்றார்.
மணவிழாவில் மணமக்களை வாழ்த்தி, திருமணப் பரிசினை அளித்துவிட்டு சென்னை திரும்பினேன். பலன் கருதாது இயக்கப் பணியாற்றிய இரும்பு மனிதர் பெரியண்ணன்! நான் மணவிழாவிற்குச் சென்றபோது மனமகிழ்ச்சியோடு என்னை வரவேற்று மகிழ்ந்த சென்னா ரெட்டி அவர்கள் அதற்குப் பிறகு சில கிழமைகள்கூட உயிரோடு இல்லை. 2.12.1996 அன்று காலை 7 மணி அளவில் ஐதராபாத் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். நவம்பர் திங்கள் இறுதியில்தான் சென்னா ரெட்டி அவர்களின் பேத்தியின் மணவிழா நடைபெற்றது.
டிசம்பர் திங்கள் 5ஆம் தேதியன்று சென்னா ரெட்டியின் பேரனுக்கு மணவிழா நடைபெறுவதாக இருந்ததால் அவர் ஐதராபாத்திலேயே தங்கியிருந்தார். அப்போது 1.12.1996 அன்று இரவு ஒருமணி அளவில் அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் பெரு முயற்சி எடுத்தும் அவரைக் குணப்படுத்த இயலவில்லை. 2ஆம் தேதி மாலையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவரது மறைவையொட்டி ஒருவார காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டன. சென்னா ரெட்டி அவர்கள் மறைந்தபோது அவரது வயது 78. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டு, ஐதராபாத் மாநில சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆனார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத் திட்டம், பஞ்சாயத்து ராஜ், தொழில் மற்றும் நிதியமைச்சரானார்.
1967ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். 1974ஆம் ஆண்டிலிருந்து 1977வரை உத்தரப்பிரதேசம், கலைஞர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். 1978ஆம் ஆண்டு ஆந்திர மாநில முதல் அமைச்சராக ஆனார். 1990ஆம் ஆண்டும் ஆந்திர மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்தார். 1992ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும், 1993ஆம் ஆண்டு மே மாதம் தமிழக ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.
அவர் தமிழகத்தின் ஆளுநராக 93ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், அப்போது தமிழகத்திலே ஆட்சிப்பொறுப்பிலே இருந்தவர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். மரியாதைக்காகக்கூட முதலமைச்சர் ஆளுநரைச் சந்திக்காமல் இருந்தது அந்தக் காலம்தான். அவர் பயணம் மேற்கொண்ட போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களால் கார் வழி மறிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மன வருத்ததிலிருந்து மீண்டு, என்மீது நீங்கா அன்பு கொண்டு, பாசத்துடன் பழகி வந்தார்.
96ஆம் ஆண்டு நவம்பர் திங்களில், நான் சில நாட்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, என்னுடைய வீட்டிற்கு வந்து எனது நலம் குறித்து மிகுந்த கவலையோடு விசாரித்து விட்டுச் சென்றார். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த கிருஷ்ணகாந்த் அவர்களையே தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கும்படி குடியரசு தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா 2.12.1996 அன்று உத்தரவிட்டார். சென்னாரெட்டி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஐதராபாத் புறப்படத் தயாராக இருந்த நிலையில், தமிழக புதிய ஆளுநராக பொறுப்பேற்க ஆந்திர மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் அவர்கள் வருகை தந்ததன் காரணமாக எனது ஐதராபாத் பயணம் ரத்து செய்யப்பட்டது.
2ஆம் தேதியன்று இரவு 10.30 மணி அளவில்தான் ஆளுநர் கிருஷ்ணகாந்த் சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த திரு.கே.ஏ.சாமி அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 3ஆம் தேதி காலையில் புறப்பட்ட முதல் விமானத்தில் நானும், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆலடி அருணா ஆகியோரும் ஐதாராபாத் சென்று அந்தப் பெருமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம்.
பிரதமர் தேவகவுடா அவர்கள் ஐதராபாத்துக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். 11.12.1996 அன்று தமிழக அரசின் சார்பில் டாக்டர் சென்னா ரெட்டி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அதிலே நான் கலந்துக்கொண்டு, அவரது திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்தேன். அந்த விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கம் அன்றைய தினம் கூட்டத்தினரால் நிரம்பி வழிந்தது. சென்னா ரெட்டி தமிழகத்திலே எந்த அளவிற்கு மக்கள் மனதிலே இடம் பெற்றார் என்பதற்கு உதாரணமாக அந்தக் கூட்டம் கூடியிருந்தது.
அந்த விழாவிலே பேசிய அனைவரும் சென்னா ரெட்டி அவர்களின் பொறுமையைப் பற்றியே புகழ்ந்து பேசினார்கள். அவருடைய பொறுமைக்கு எடுத்துக்காட்டாக, நான் அன்று பேசியபோது ஒரு கதையை எடுத்துக் கூறியது நினைவிலே உள்ளது. நபிகள் நாயகம் சாதாரணமாக எளிய மனிதராக
- அவர் பெரிய மேதை என்றாலும் - பெருமகனார் என்றாலும்கூட - கலைஞர் எனது இல்லத்திற்கு வருகை தந்து, பிரதமர் தேவகவுடா உடல் நலம் விசாரித்தார் எளிய வாழ்க்கையில் பற்றும் பாசமும் கொண்டவர் என்ற காரணத்தால் ஒரு குறிப்பிட்ட தெருவிலே அன்றாடம் நடந்து செல்லும்போது - அவர்மீது வெறுப்புற்ற ஒரு மங்கை, மாடியிலே இருந்து அவர் தலையிலே குப்பையைக் கொட்டுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் இந்தக் காரியம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
நபிகள் நாயகம் அதை உதறிவிட்டு தன்னுடைய பாதையிலே நடந்து செல்வார். ஒருநாள் அப்படி வரும்போது குறிப்பிட்ட அந்த வீட்டு மாடியிலே இருந்து குப்பை கொட்டப்படவில்லை. நபிகள் நாயகத்திற்கு ஒரே ஆச்சரியம். திகைத்துப்போய், அங்கே உள்ளவர்களிடம் "நாள்தோறும் ஓர் அம்மையார் என் தலைமீது குப்பையைக் கொட்டுவார்களே, அவர்கள் என்ன ஆவார்கள்?"
என்று கேட்க - "அவருக்கு உடல் நலம் இல்லை, படுக்கையில் இருக்கிறார்" என்று அவர்கள் சொன்னதும் - நபிகள் நாயகம் உடனடியாக மாடிப்படியிலே ஏறிச்சென்று. அந்த அம்மையாரிடம் உடல்நலம் விசாரித்து, அவரது நலிவு தீர மருந்தும் கொடுத்தார் - என்று நபிகள் நாயகத்தின் ஐதராபாத்தில், ஆளுநர் சென்னாரெட்டியின் இல்ல மணவிழாவில்... பொறுமைக்குச் சான்றாகக் கூறப்படுகிறது. சென்னா ரெட்டி அவர்கள் நபிகள் நாயகம் அல்ல என்றாலும் கூட, அவருடைய வழியைப் பின்பற்றி, அவர்மீது கொட்டப்பட்ட குப்பைகளை எல்லாம் உதறிவிட்டுவிட்டு, ஆளுநராகப் பணியாற்றினார் என்று கூறினேன்.
மறைந்த சென்னாரெட்டியின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி அவர்களை தி.மு. கழகம் அந்த அளவிற்கு பெருமைப்படுத்தியபோது - ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லை என்று சொன்னவர்கள் இப்படியெல்லாம் செய்யலாமா - ஆளுநரைப் பாராட்டலாமா என்றெல்லாம் தமிழகத்திலே பேசப்பட்டது. அதற்கும் நான் அந்தக் கூட்டத்திலே பதிலளிக்கும் போது, "கவர்னர் பதவி தேவையா இல்லையா என்ற வினாவுக்கு தேவையில்லை என்பதுதான் தி.மு.
கழகத்தின் கொள்கை. இருந்தாலும்கூட, அந்தப் பதவிப் பொறுப்பிலே ஒருவர் இருக்கின்றவரை அவரை மதிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா கற்றுத் தந்த பாடம். அந்தப் பாடத்தின் வழிதான் நாங்கள் நடைபோடுகிறோம்!" என்று கூறினேன்.
