உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/திராவிடப் பல்கலைக் கழகம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

திராவிடப் பல்கலைக் கழகம் · 321 / 391

9. திராவிடப் பல்கலைக் கழகம் ஆம் ஆண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சில தவறான செயல்பாடுகளையெல்லாம் உடனடியாகக் களைந்திட வேண்டுமென்ற கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின. அவற்றிலே ஒன்றுதான் - 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா , எங்கும் தனது பெயர் - எதிலும் தனது பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளையெல்லாம் மீறிச் செயல்பட்டார் என்பதாகும்.

உயிரோடு இருப்போர் பெயர்களை எந்தவொரு அரசு நிறுவனத்துக்கும் சூட்டக்கூடாது என்ற அரசு விதிக்கு மாறாக, பல நிறுவனங்களுக்குத் தன் பெயரைத் தானே சூட்டிக் கொண்டார். உதாரணமாக, 89-90ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சியில் இருந்தபோது - திரைப்பட நகர் ஒன்றினை நிறுவிட, சென்னையை அடுத்த தரமணியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு -அப்போது மத்திய அமைச்சராக இருந்த நண்பர் உபேந்திரா அவர்களை வைத்து, அந்தத் திரைப்பட நகருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, திரைப்பட நகர் உருவானதே தன் சாதனையால்தான் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி -அந்தத் திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் .அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்ட போதிலும், அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, அந்தத் திரைப்பட நகருக்கு "ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர்" என்று தன் பெயரையே வைத்துக் கொண்டார்.

1996ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர் என்ற பெயரை "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்று பெயர் சூட்டுவதாக அறிவித்தேன். மேலும். எம்.ஜி.ஆர். திரைப்பட நகரின் புதிய தலைவராக த.மா.கா.வில் முக்கிய பிரமுகராக இருந்தவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் அவர்களை நியமனம் செய்து அறிவித்தேன். அதைப் போலவே, ஜெயலலிதா ஆட்சியில் "ஜெ.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்" என்று பெயர் சூட்டப்பெற்ற போக்குவரத்து நிறுவனத்தை - ராஜீவ் காந்தியின் நினைவு தினமான 21.5.1996 முதல், "ராஜீவ் காந்தி போக்குவரத்துக் கழகம்" என்ற பெயரால் அழைக்கப்படும் என்றும் அறிவித்தேன்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் தமிழகத்தின் காவல்துறை தலைவராக - அதாவது டி.ஜி.பி.யாக அதுவரை இருந்ததில்லை என்ற குறையைப் போக்கிடும் வண்ணம், ஏ.ராஜ் மோகன் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். அதுபோலவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக திரு.கே.ஏ.நம்பியார் நியமிக்கப்பட்டார். அதுவரை அவர் டெல்லியில் பாதுகாப்புத் துறையின் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

அதற்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். உள்துறை செயலாளராகவும், தொழில் வளர்ச்சித்துறை செயலாளராகவும் இருந்தவர். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி 5.6.1996 அன்று கலைவாணர் அரங்கத்தில் இந்திய தேசிய லீகின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் அல்தாப் வரவேற்புரையாற்றினார்.

அந்த விழாவில், நானும் இந்திய தேசிய லீகின் அகில இந்தியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், மூப்பனார், ஆர்.எம்.வீரப்பன், ஆர்.நல்லக்கண்ணு, பேராயர் எஸ்றா சற்குணம், அப்துல் ஜபார் ஆகியோரும் கலந்து கொண்டோம். அந்த விழாவில் நான் உரையாற்றும்போது, "மறைந்த தலைவர்களுக்கு விழா எடுப்பது அவர்களின் பெயர்களை உச்சரிப்பது மாத்திரம் நமது கடமையல்ல; "பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற தலைவர்களின் அடியொற்றி நடந்து அவர்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவோம்" என்று கூறினேன்.

இந்திய தேசிய லீகின் அகில இந்தியத் தலைவர் சுலைமான் சேட் பேசும்போது, "காயிதே மில்லத் கண்ட கனவுகளை எல்லாம் கலைஞர் நிறைவேற்றி வருகிறார்!" என்று கூறினார். 16.6.1996 அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான திருமதி ஜானகி அம்மையாரின் உருவப் படத்தினை நான் திறந்து வைத்தேன். அந்த விழாவில் சகோதரர் ஆர்.எம்.வீரப்பன், ராமசாமி உடையார் , வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி, ஏ.வி.எம்.

சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆருடன் எனக்கு இருந்த பழைய நட்புகளைப் பற்றிய தகவல்களையெல்லாம் அந்த நிகழ்ச்சியிலே எடுத்துக் கூறினேன். என்னுடைய அந்த உரையின் சுருக்கம் வருமாறு:- "இந்தப் படத்தைத் திறப்பதற்கு முதலமைச்சர் என்ற முறையிலே நான் வந்திருப்பதாக உங்களிலே யாராவது கருதக் காயிதே மில்லத்தின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறார், கலைஞர் - சுலைமான் சேட் கூடும். நிகழ்ச்சி நிரலில் அப்படித்தான் என்னுடைய பெயருக்கு முன்னால் அந்தப்பதவியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தாலும், மறைந்த சகோதரி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தாலும், நம்முடைய வீட்டுக் கடமையை ஆற்ற நான் இங்கே வந்திருப்பேன். நீங்கள் இந்த "முன்னாள்" - "இன்னாள்" -என்ற சொற்றொடர்களை எல்லாம் எடுத்து விட்டு, எம்.ஜி.ஆருடைய சகோதரர் - எம்.ஜி.ஆரின் துணைவியாருடைய மறைவை ஒட்டி, அவருடைய திருவுருவப்படத்தை திறந்து வைக்க வந்திருக்கிறார்-அவருடைய பெயர் கருணாநிதி- அவன் ராமாவரம் தோட்டத்திலே மாத்திரம் எம்.ஜி.ஆரை சந்தித்தவனல்லன்- சென்னை ஏழுகிணறு பகுதியில், ஒரு மூலையிலே வெள்ளைச் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட அந்த வீட்டுக்குள் ஒரு குறுகிய இடத்தில், எம்.ஜி.ஆர்.

அவர்களையும், அவர்களுடைய அன்னையையும் சந்தித்து- அந்த பத்தடி, பதினைந்து அடி நீள அகலமுள்ள அறைக்குள் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலே அமர்ந்து- காசிலிங்கத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து - அவர்களுடைய அன்னையார் இட்ட உணவை, ஒரு வேளை அல்ல, இரு உண்டு வேளை அல்ல, பல நேரங்களில் உண்டவன் மகிழ்ந்தவன்."

"அன்று தொடங்கி, பிறகு இந்த ராமாவரம் தோட்டத்திலே எத்தனை நாட்கள் எம்.ஜி.ஆர். அவர்களோடு அமர்ந்து நான் உணவு அருந்தியிருப்பேன் - எனக்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், சகோதரி ஜானகி அம்மையார் எத்தனை நாட்கள் உணவு பரிமாறி இருப்பார்கள்! என்னுடைய வீட்டில் எனது அன்னையார் பரிமாறி நான் சாப்பிடுவதைவிட, அதிகமாக ராமாவரம் தோட்டத்திலே - அதிக அளவு சாப்பிட்டேன் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். என்னிடத்திலே காட்டிய பிடிவாதமும், சகோதரி ஜானகி அம்மையார் என் இலையில் இட்டதை சாப்பிட்டுத்தான் தீர வேண்டும் என்று உறுதி பொங்க என் முன்னால் அவர்கள் நின்று கொண்டு சாப்பிடச் செய்ததும்தான் காரணம்.

இவைகள் எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தாலுங்கூட, எவ்வளவு பெரிய நட்பின் ஆழத்திலே எண்ணிப் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகள் என்பதை நினைக்குந் தோறும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறது." "அதைப்போல என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள், அடிக்கடி என்னுடைய இல்லத்திற்கு வருவதும் - என்னோடு பழகுவதும் இல்லத்திலே உள்ள பிள்ளைகளோடு, என் தாயாரோடு இவர்களோடெல்லாம் பழகுவதும் என்றைக்கும் மறந்து விடக் கூடிய நிகழ்ச்சிகள் அல்ல."

"27 ஆண்டு கால நெருங்கிய நட்புக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவை உண்டாக்கியவர்கள் நல்ல வேளையாக இங்கே வரவில்லை. இந்தப் பிளவு கூடாது என்று என் கரம் பிடித்துக் கண்ணீர் விட்டு, என் கரங்களைக் கண்ணீரால் நனைத்த ஆர்.எம்.வீரப்பன் இங்கே வந்திருக்கிறார். நானும், எம்.ஜி.ஆரும் தொடர்ந்து இந்த இயக்கத்திலே இருந்திட வேண்டும் என்றுதான் இருவரும் விரும்பினோம் - ஆனால் அன்றைக்குச் சதி செய்து சில பேர் எங்களைப் பிரித்தார்கள்."

-இப்படித் தொடங்கிய எனது பேச்சு, அன்றைய தினம் தொடர்ந்து, அவருக்கும் எனக்கும் உள்ள நட்பை, பாசத்தை, அன்பை அகிலத்திற்கு உணர்த்துவதாக அமைந்தது. 96ஆம் ஆண்டு, மே திங்களில் நான் பொறுப்பேற்றுக் கொண்ட போதிலும், எனது அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று வர வேண்டுமென்று வீட்டார் தொடர்ந்து வற்புறுத்தியதின் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நூற்றாண்டு நிறைவு விழாவில், மூப்பனாருடன்...

பேரில், ஜுன் திங்களில்தான் எனக்கு அந்த வாய்ப்பும் நேரமும் கிடைத்தது. 18.6.1996 அன்று விடியற்காலை புகைவண்டியில் திருவாரூர் சென்றடைந்தேன். என்னுடன் எப்போதும் போல் ஆர்க்காடு வீராசாமி, கே.என்.நேரு, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, இயக்குநர் அமிர்தம் ஆகியோர் வந்தார்கள். அதிகாலை வேளையிலே கூட என்னால் புகை வண்டியிலிருந்து இறங்க முடியாத அளவிற்கு கூட்டம். காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிக அளவிற்குச் செய்திருந்த டி.ஐ.ஜி.யை நான், என்னருகே அழைத்து, உடனடியாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்க வேண்டுமென்றும், என் பின்னால் ஐந்து கார்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் தெரிவித்தேன்.

காலையில் நான் தங்கியிருந்த இடத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்தேன். அதன்பின் காட்டூரில் உள்ள என் அன்னையின் நினைவிடத்திற்குக் குடும்பத்தினருடன் சென்று, அங்கே மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன். என்னுடன் தயாளு, சகோதரிகள் பெரிய நாயகம், சண்முகசுந்தரம் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தார்கள். மாலை 5 மணி அளவில், திருவாரூரிலிருந்து திருக்குவளைக்குக் கார் மூலம் புறப்பட்டேன். அது எத்தனையோ முறை இளம் வயது முதல் நான் சென்று வந்த பாதைதான்.

ஆனால், அன்றைய தினம் மக்கள் கடலுக்குள் புகுந்துதான் திருக்குவளை நோக்கி நான் செல்ல ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஜானகி அம்மையாரின் உருவப்படத் திறப்பு விழாவில்... வேண்டியிருந்தது. எனது வரவேற்புரை நிகழ்ச்சியைக் காண பெரு மழையும் வந்துவிட்டது. அந்த மழையைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த மக்கள் கூட்டம் என்னை வரவேற்றது. கொட்டும் மழையிலும் அந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நான் பேசும்போது, "ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்ற ஒரு குழந்தை தாயின் மடிக்கு வந்ததும் எப்படி தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்குமோ - விளையாட்டை, பேச்சை நிறுத்திவிட்டு தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்குமோ - அதைப் போலத்தான் நான் உங்களை யெல்லாம் கண்டு பேசினாலும், சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்டாலும், சட்ட மன்றத்தில் உரையாற்றினாலும், டெல்லிக்குச் சென்று அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தாயின் மடிக்கு வந்த நேரத்தில் பேச முடியாது தவிக்கின்ற அந்தக் குழந்தையைப் போல உங்கள் முன்னால் இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

18.6.1996 அன்று திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நிர்வாக வசதிக்காக சில மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று கூறியிருந்தேன். அதன்படி, 22.6.1996 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாவட்டங்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதோடு, சில மாவட்டங்களுக்குப் புதிய பெயர்களும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு செங்கை அண்ணா மாவட்டம் என்றும் - திருவள்ளூர் மாவட்டத்திற்கு செங்கை எம்.ஜி.ஆர்.

மாவட்டம் என்றும்- திண்டுக்கல் மாவட்டத்திற்கு மன்னர் திருமலை மாவட்டம் என்றும் - தேனி மாவட்டத்திற்கு வீரன் அழகுமுத்து மாவட்டம் என்றும் - நாமக்கல் மாவட்டத்திற்கு ராஜாஜி மாவட்டம் என்றும்- திருவாரூர் மாவட்டத்திற்கு ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றும் - நாகை மாவட்டத்திற்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்றும் பெயர் சூட்டப் பட்டன. ஆனால், 1998ஆம் ஆண்டில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன், கழக அரசால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 22.10.1998 மற்றும் 26.10.1998 ஆகிய இரு தினங்களிலும் கூட்டப் பட்டது.

அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக மேற்கொள்ளப்பட்ட முடிவினையொட்டி. மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்கள் பெயர்கள் திரும்பப் பெறப்பட்டு, அந்தத் தலைவர்களின் பெயர்களில், பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் தொடங்கப் பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆவணங்கள் தயாரித்த போது, தாக்கப்பட்ட வழக்கறிஞர் சண்முக சுந்தரம்! அ.தி.மு.க. ஆட்சியில் கழகத்தினர் மீது போடப்பட்ட வழக்குகளில் கழகத்தினருக்கு ஆதரவாக வாதாடியதற்காகவும், டான்சி நில வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர ஆவணங்கள் தயாரித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்ட போது, நான் நேரில் சென்று பார்த்தேன். இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், மூக்கிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நரம்புகள் அறுந்து இரத்தம் ஆறாகக் கொட்டி அந்தத் தாழ்வாரத்தில் பெருக்கெடுத்தது. அவரது இடது கையில் சுண்டுவிரல் துண்டிக்கப் பட்டுக் கீழே விழுந்தது. அருகில் இருந்த வழக்கறிஞர்கள் மோகன் , குமாஸ்தா பாஸ்கர் ஆகியோர் வன்முறைக் கும்பலைப் பிடிக்க முனைந்தபோது, பாஸ்கருக்கும் தலையிலே பலத்த வெட்டு விழுந்தது.

பிழைப்பாரா, மாட்டாரா என்ற நிலையில்தான் அப்போதிருந்தார். மருத்துவமனையிலே ஒரு மணி நேரத்திற்குமேல் நான் அமர்ந்திருந்து, சண்முக சுந்தரம் அவர்களின் துணைவியாருக்கும், குடும்பத்தினரும் ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன். அதன் பின்னர், 1996ஆம் ஆண்டில் நான் பதவிப் பொறுப்பேற்றதும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக -பப்ளிக் பிராசிக்கியூட்டராக - சண்முகசுந்தரம் அவர்களை நியமிப்பதா - அல்லது கழகத்திற்காக பல ஆண்டு காலம் பாடுபட்டவரும், மிசா சிறையிலே ஓராண்டு காலம் இருந்தவருமான வழக்கறிஞர் ஏ.ஏ.ஜின்னாவை நியமிப்பதா என்பதிலே ஒரு குழப்பம் ஏற்பட்டபோது, ஜின்னாவே முன்வந்து சண்முகசுந்தரம் அவர்களை நியமிக்கும்படி கூறியதன் பேரில், அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

அதைப் போலவே அட்வகேட் ஜெனரலாக வழக்கறிஞர் கே.வி.வேங்கடபதி நியமிக்கப்பட்டார். ஜின்னா அந்தக் காலத்தில் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்ததைக் கழகம் மறந்துவிடவில்லை என்பதற்கு அடையாளம்தான், அண்மையில் அவரே கேட்காத நிலையில், அவரைத் தேடிப் பிடித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கழகம் அளித்தது. 23.6.1996 அன்று, பிரதமர் தேவகவுடா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், நானும் மூப்பனாரும், தம்பி முரசொலி மாறனும், சந்திரபாபு நாயுடுவும், மற்ற ஐக்கிய முன்னணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டோம்.

எம்.ஜி.ஆர். இல்லத்தில் நானும், என் இல்லத்தில் அவரும் உணவருந்திய நாட்கள் ஏராளம் மத்திய அரசிலும், தமிழக ஆட்சியிலும், அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இலங்கை அரசுக்கு ஒரு திகைப்பை உண்டாக்கியது. அதன் விளைவாக இலங்க

ையின் வெளிநாட்டமைச்சர் கதிர் காமர் டெல்லிக்கு வந்து, பிரதமர் தேவகவுடா அவர்களையும், அப்போது இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால் அவர்களையும், மத்திய தொழில் அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறனையும் சந்தித்துப் பேசினார். பின்னர் டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லி பேச்சு வார்த்தைகளில் தனக்குத் திருப்தி ஏற்பட்டுள்ளது என்றும், "இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது" என்று உறுதிமொழி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய கூட்டணி அரசில் அப்போதும் இடம் பெற்றிருந்த தி.மு.க. சார்பில் என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது. "இலங்கைப் போராளிகள் வேறு - இலங்கைத் தமிழர்கள் வேறு - இலங்கைத் தமிழர்கள் - குறிப்பாக ஈழத் தமிழர்கள் அமைதியாகவும், அவர்களுக்கு உரிய உரிமைகளோடும் வாழ வேண்டுமென்பதில் தி.மு.க.வுக்கும், அதன் தலைவனாகிய எனக்கும் எவ்விதக் கருத்து மாறுபாடும் இல்லை. அதிலும் குறிப்பாக அப்பாவித் தமிழர்கள் - ஈழத்தில் கொல்லப்படுவதும் - வாழ முடியாத சூழ்நிலையில் அவதிப்படுவதும் - நீண்ட காலமாகவே கவலையை அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆகும்.

அதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று கூறினேன். அந்த நிலைதான் இன்றளவும் நீடித்துக் கொண்டு வருகிறது. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் பிளவு ஏற்படக் கூடாது என்று என் கரம் பிடித்து கண்ணீர் விட்டார், ஆர்.எம்.வீரப்பன்! விடுதலைப் புலிகள் பற்றி ஏடுகளில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, 28.6.1996 அன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஐ.ஜி. (புலனாய்வு) டி.ஐ.ஜி.

(க்யூ பிரிவு) ஆகிய அதிகாரிகளை அழைத்துப் பேசினேன். விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப் (சட்டம் - ஒழுங்கு) பொறுப்பில் இருந்த காளிமுத்துவை அனுப்பி வைத்தேன். தொடர்ந்து கடற்படை, கடலோரக் காவல்படை, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோரையும் அழைத்துப் பேசினேன். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் எல்.டி.டி.ஈ.யினரின் ஊடுருவலோ, கடத்தலோ தலை காட்டக் கூடாது.

அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறிச் செயல்படுவோர் போராளிகள் ஆனாலும், அவர்களுக்கு உதவி செய்கிற தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!"

என்று கூறினேன். 96ஆம் ஆண்டு கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியால் சீர்குலைக்கப்பட்டு விட்ட நிர்வாகத்தை சீர்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டது. ஒவ்வொரு துறையிலும் முந்தைய அரசால் நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு, நேர்மையான மக்களுக்கு நலம் பயக்கக் கூடிய நடவடிக்கைகளைக் கழக அரசு மேற்கொண்டது. அதன் ஒரு கட்டமாக, அ.தி.மு.க.

ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பரம்பரை அல்லாத அறங்காவலர்- களின் பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வர குடியரகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் அவசரச் சட்டம் பிறப்பித்தார். அந்த அவசரச் சட்டத்தின் மூலம், அ.தி.மு.க. அரசால் நியமனம் செய்யப் பட்ட பரம்பரை அல்லாத அறங்காவலர்களின் பதவிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் 1995ஆம் ஆண்டு கொடியங்குளம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

அப்போது நடைபெற்ற அடக்குமுறைக் கொடுமைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை 96ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், "கொடியங்குளம் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கழக அரசு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது" என்ற தகவலைத் தெரிவித்ததும், "மனுமீது எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை" என்று நீதிபதி அறிவித்தார்.

1990ஆண்டு ஆண்டு, தமிழகத்தில் விடுதலைப் புலிகள் என்ற காரணத்தைக் காட்டி, தி.மு.கழக ஆட்சியைக் கலைத்தது பற்றி நாடே அறியும். அந்த அனுபவம் காரணமாக, 96ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், ஒரு சில பத்திரிகைகள் வேண்டுமென்றே, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடத்தல் மற்றும் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதாகச் செய்திகளை வெளியிட்டார்கள். அந்தச் செய்தியின் அடிப்படையில் எதிர்க் கட்சித் தலைவர்கள் அறிக்கை மீது அறிக்கை விடத் தொடங்கினார்கள்.

எனவே 28.6.1996 அன்று, இந்தச் செய்திகளையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறையின் முக்கிய அதிகாரிகளையெல்லாம் அழைத்து ஆலோசனை நடத்தினேன். அதைப்பற்றி பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது, "இது மாதிரி கடத்தல்களோ - ஊடுருவல்களோ - தீவிரவாதிகளின் நடமாட்டமோ - தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் தலை காட்டக் கூடாது" என்றும், அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், மீறிச் செயல்படுவோர் தமிழீழ விடுதலைப் போராளிகளானாலும், அல்லது அவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் தமிழ் நாட்டில் உள்ளவர்களானாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றும் கூறினேன்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பற்றி கூட்டம் நடைபெற்ற அதே நாளில். மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் நடைபெற்றது. 14 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதைப் பற்றி செய்தியாளர் ஒருவர் என்னிடம், "மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இரண்டு மாநில அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதே - தி.மு.க.விற்குக் கொடுக்கப்படவில்லையே?"

என்று என்னைக் கேட்டபோது, "தி.மு.க.கழத்திற்கும் இரண்டு மாநில அமைச்சர் பதவிகள் தருவதாக பிரதமர் தேவ கவுடா கூறியிருக்கிறார். அது பற்றிப் பேச என்னை டெல்லிக்கு வருமாறு தொலைபேசியிலே அழைத்தார். எனக்குத் தமிழகத்திலே வேலை இருப்பதால், முரசொலி மாறனிடம் கலந்து பேசுமாறு சொல்லியிருக்கிறேன். மாநில அமைச்சர்கள் கழகத்தின் சார்பில் யார், யார் என்பதை பொதுச் செயலாளர் பேராசிரியரைக் கலந்து கொண்டு கூறுவதாக இருக்கிறேன்" என்று பதில் கூறினேன்.

மத்திய அமைச்சரவையில் தி.மு.கழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் என்.வி.என். சோமு ஆகியோர் 5.7.1997 அன்று இடம் பெற்று, பதவிப் பொறுப்பேற்றனர். டி.ஆர். பாலுவுக்கு பெட்ரோலியம் துறையும், என்.வி.என். சோமுவுக்கு பாதுகாப்புத் துறையும் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தவர்களையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சார்பில் நான்கு பேரும், த.மா.கா. சார்பில் 4 பேருமாக, காட்டூரில் அன்னை அஞ்சுகத்தம்மையாரின் நினைவிடத்தில், சகோதரிகளுடன் அஞ்சலி!

8 பேர் தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றனர். தமிழகத்தின் சார்பில் மிகப் பெருமளவுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்தது அதுவே முதல் முறையாகும் என்பது வரலாறு. நான் பதவியேற்ற ஒரு மாத காலத்தில், காலை டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தேன். வழியில் "தினமணி" நாளிதழைப் பார்த்தேன். அதிலே முதல் பக்கத்தில் ஒரு செய்தி. மதுரையிலே உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதாகவும், அதற்கான அழைப்பிதழில் என்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

விமான நிலையம் செல்லும் வழியிலே, தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அது போன்ற செயல்களை இனி யாரும் தொடரக் கூடாது என்றும் கண்டிப்பாகக் கூறினேன். அந்தக் கோவில் நிர்வாக அதிகாரியாக அப்போதிருந்த தேனய்யா என்பவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். நான் அவ்வாறு எடுத்த நடவடிக்கை பற்றி, "முதல் அமைச்சரைக் குளிர்விக்கத் துடிப்பவர்களுக்கு அது ஒரு நல்ல படிப்பினை!"

என்றும்- "விழித்துக் கொண்டிருக்கும் முதல்வரிடம் நெருங்கும் தைரியம் இனி எவருக்கும் அவ்வளவு சுலபத்தில் வர முடியாது!" என்றும் - அதற்கெல்லாம் காரணம், அதற்கு முன்பிருந்த ஜெயலலிதாவை கன்னிமேரி அம்மையின் சாயலோடும், அம்மன் கோலத்தில் கையில் சூலத்துடன் சுவரொட்டிகள் ஒட்டியதுதான்!"

- என்றும் நாளேடு ஒன்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து பொதுவாகவே அப்போது அரசின் சார்பிலேயே ஓர் அறிக்கையையும் வெளியிட்டேன். அந்த அறிக்கையில்- "அரசு விழாக்கள், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மிகாமல் நடத்தப்பட வேண்டும். அழைப்பிதழ்களை ஆடம்பரமாக அச்சிடக் கூடாது. அவற்றில், விழா குறித்த சித்திரங்களுக்கும், புகைப்படங்களுக்கும் முதலிடம் தர வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களுக்கு அழைப்பிதழ்களை செய்தித் துறை இயக்குநருடைய அனுமதி பெற்று, தமிழரசு அச்சகத்தில் அச்சிட்டுக் கொள்ள வேண்டும்.

மற்ற விழாக்களுக்கு அரசு கூறியுள்ள அறிவுரைகளின்படி எளிமையான முறையில் அழைப்பிதழ்களை அச்சிட்டுக் கொள்ளலாம். ஆடம்பரச் சுவரொட்டிகள் - வண்ண விளக்கு அலங்காரம் - கட்அவுட்கள் - சுவர் விளம்பரங்கள் போன்றவை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். விழா மேடையைச் சிக்கனமாகவும் - எளிமையாகவும் அமைக்க வேண்டும். தர்பார் நாற்காலிகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவைப் தேவைப்படும்போது நிழல் தருவதற்கு "ஷாமியானா" போன்ற ஏற்பாடுகளை எளிமையான முறையில் செய்து கொள்ளலாம்.

மலர் அலங்காரம் செய்வது - முக்கியப் பிரமுகர்களும் விருந்தினர்களும் வரும்போது, மலர் தூவி வரவேற்பது - போன்றவற்றை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. அரசு விழாக்களில் நிறையப் பேர் மேடையில் ஏறி மாலை அணிவிப்பது, சால்வை போர்த்துவது போன்றவற்றைச் செய்து அந்த விழாவின் தன்மையைப் போக்குவதைத் தவிர்க்க வேண்டும். விழாவிற்கும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற டி.ஆர்.பாலுவும், என்.வி.என்.சோமுவும் நிகழ்ச்சிக்குமான வேறுபாடுகளை முழுவதுமாகக் கடைபிடிக்க வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகளை விழாக் களைப் போல் நடத்தக் கூடாது. மனுநீதித் திட்டம் - ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் - விழிப்புணர்வு முகாம் - போன்றவற்றை விழாக்களைப்போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். அலங்கார வளைவுகள் - தோரணங்கள், மின் விளக்குகள் - இடம்பெறக் கூடாது. வளைவுகள் அமைப்பது என்ற பெயரில் சாலைகளில் குழிகளைத் தோண்டி சேதப்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. தனி நபர்களிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் விழாவிற்காக எந்தவொரு அன்பளிப்போ, அல்லது பிற வகையில் உதவிகளோ பெறக்கூடாது.

அது வேறு வகையில் அந்த நபர்களுக்கு சலுகைகள் செய்வதற்கு வழிவகுத்து விடும் என்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். விழாக்களுக்கு செய்தித் தாள்களில் பெரிய விளம்பரங்கள் தருவது கூடாது" என்று சொல்லப்பட்டிருந்தது. திராவிடப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவிட ஆந்திர அரசு திட்டமிட்டு, மத்திய அரசிடம் அதற்கான ஒப்புதலைப் பெற்றது. கல்வி மேம்பாடு - திராவிட மக்களுடைய கலைப் பண்பாடு - இலக்கியம் - அவர்களுடைய சமூக உணர்வு - ஆகியவற்றை வெளி உலகத்திற்குப் பறைசாற்றும் மையமாக அந்தப் பல்கலைக் கழகம் திகழும் என்றும், மத்திய அரசின் நிதி உதவி, மற்றும் தென் மாநில அரசுகளின் நிதி உதவி ஆகியவற்றுடன் இந்தப்பல்கலைக் கழகம் செயல்படும் என்றும் கூறப்பட்டது.

1996ஆம் ஆண்டு தி.மு.கழக அரசு பொறுப்பேற்ற பின்பு, ஆந்திர முதலமைச்சராக இருந்த திரு.சந்திரபாபு நாயுடு தமிழக அரசு இந்தப் பல்கலைக் கழகத்திற்கு நிதி உதவிட வேண்டுமென்று எழுதிய கடிதத்தை உடனடியாக நான் ஏற்றுக் கொண்டு, முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைத்தேன். அப்போது தொடங்கப்பட்ட அந்த திராவிடப் பல்கலைக் கழகம் இன்றளவும் திறம்பட செயலாற்றி வருகிறது. 3.7.1996 அன்று ஒரு மணவிழாவிலே கலந்து கொண்டேன்.

திராவிட இயக்கத்தின் வைரத் தூண்களில் ஒருவராகவும், என்னுடைய அன்புக்குரிய நண்பர்களில் ஒருவராகவும், இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவராகப் பணியாற்றியவருமான சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் இல்லத்தில் அவருடைய பேரன் எழிலரசனின் மணவிழாதான் அது. அந்த மண விழாவில் என்னோடு இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நாஞ்சிலார், தம்பி துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவரது இல்ல மணவிழாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இங்கே நான் குறிப்பிடும் போது, அவரைப்பற்றி இந்தத் தொடரில் குறிப்பிட வேண்டியது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

ஆந்திர அரசால் நிறுவப்பட்ட திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு, தமிழக அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உதவினேன்! காஞ்சிபுரம் சென்றாலும், அல்லது அண்ணா சென்னைக்கு வந்தாலும், கழகம் சம்பந்தமான எந்தவொரு செயலானாலும், எந்தவொரு திட்டம் ஆனாலும், விவகாரமானாலும் அதிகம் குறிப்பாக எந்தவொரு செங்கல்பட்டு மாவட்டத்தை அல்லது அதைச் சார்ந்த தென்னார்க்காடு வடார்க்காடு மாவட்டங்களைப் பின்னிப் பிணைந்துள்ள செய்திகளாக இருக்குமானால், "அண்ணாமலையிடம் அதைப் பற்றிக் கலந்து கொள்ளுங்கள்" - "அண்ணாமலையை வரச் சொல்லுங்கள்" என்று அண்ணா அவர்கள் அடிக்கடிச் சொன்னதைக் கேட்டு பழகியவர்கள் நாங்கள்.

அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய நன்மை தீமைகள் - செயல்பாடுகள் - அதில் அண்ணா அவர்களுடைய வழிகாட்டுதல் - அந்த வழிகாட்டுதலையொட்டி எங்களுக்கு எல்லாம் அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருந்துணையாக விளங்கியவர் சி.வி.எம். என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சி.வி.எம்.அண்ணாமலை அவர்கள். மாறன் எதைச் செய்தாலும், அது என் உள்ளத்திற்கும், உடலுக்கும் நலமே பயக்கும்! 1949ஆம் ஆண்டு, அண்ணா அவர்கள் தி.மு.கழகத்தை உருவாக்கி, அதன் மூலம் மாநில மாநாட்டினை சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் 1952ஆம் ஆண்டு நடத்தியது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

அப்போது அங்கே மாநில மாநாட்டினை நம்மால் நடத்த முடிந்தது. இப்போது நமது மாவட்ட மாநாட்டினைக்கூட அங்கே நடத்த இடம் போதாது. அப்போது அந்த மாநாட்டை நடத்துவதற்கு செலவுக்குப் பணம் திரட்ட வேண்டிய பெரும் சங்கடம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், எங்களுக்கும் ஏற்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் அண்ணா அவர்கள் சென்னையிலே தோழர்களோடு அமர்ந்து மாநாட்டுப் பந்தல் வேலைகளை அவரே கவனித்துக் கொண்டிருப்பார். சி.வி.எம்.

அண்ணாமலை அவர்கள் என்னை அழைத்துக

் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டங்களுக்குத் தேதி தந்து, ஒவ்வொரு கூட்டத்திலும் இருநாறு ரூபாய் மாநாட்டு நிதியாக அன்றைக்கு வாங்கித் தருவார். ஒரு நாளைக்கு ஏழு கூட்டம். எட்டு கூட்டம் இருக்கும். கூட்ட முடிவில் மொத்தமாக கிடைப்பது ஆயிரத்து அறுநூறு அல்லது ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்ற அளவில் நிதி திரளும். விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணிக்குத்தான் இரவு சாப்பாடு போடுவார். நானும்,சி.வி.எம்.

அவர்களும் அந்தக் கூட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு, ஆயிரம்ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் பணத்தோடு நேராக எஸ்.ஐ.ஏ.ஏ.திடலுக்குத் தான் வருவோம். அங்கே குவிக்கப்பட்டிருந்த மணலிலே அண்ணா அமர்ந்திருப்பார். தோழர்கள் சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள். ஈ.வி.கே.சம்பத், நாவலர், பேராசிரியர், நாஞ்சிலார் என்று அவர்கள் எல்லாம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அண்ணாவிடம் பெருமையோடு பணத்தைக் கொடுப்போம். அண்ணா பணத்தை வாங்கிக் கொண்டு, "எங்கே சாப்பிட்டாய்?"

என்று கேட்பார். "உத்திர மேரூரில் அண்ணா!" என்று சொல்வேன். "என்ன சாப்பாடு?" என்று கேட்டுவிட்டு, நான் பதில் கூறுவதற்குள் அண்ணாவே, "அண்ணாமலைக்கு வேண்டியதையெல்லாம் உன் பெயரைச் சொல்லி தயாரித்து வைக்கச் சொல்லியிருப்பாரே?" என்று வேடிக்கையாகச் சொல்வார். இரவு இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் கோழி வறுவல், கோழிக் குழம்பு, ஆட்டுக் கால், என்று இன்னோரன்ன அசைவ பதார்த்தங்களோடு எனக்காக என்று, உணவு வகைகளைக் கூட்டம் நடைபெறுகின்ற ஊர்களிலே உள்ள கழகத் தோழர்களிடம் கூறித் தயாரிக்கச் சொல்லி, என்னை அருகே உட்கார வைத்துவிட்டு, அவர் நன்றாகச் சாப்பிடுவார்.

நான் பக்கத்தில் அவர் ரசித்துச் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். தந்தை பெரியார் அவர்கள்கூட நிறைய சாப்பிடுவார். அளவுக்கு மீறிக்கூடச் சாப்பிடுவார். தள்ளாத வயதிலும்கூட, "செரிக்காது சாப்பிடாதீர்கள்" என்று டாக்டரே சொன்னாலுங்கூட, ஆட்டுக்கறி சாப்பிடுவார்.

கோழிக்கறி, மீன் எல்லாம் சாப்பிடுவார். ராஜாஜி எதுவும் சாப்பிட மாட்டார். ஒரு அல்வா துண்டுதான் எடுத்துக் கொள்வார். ஆனால், பெரியாரும் 95ஆண்டு காலம் வாழ்ந்தார். எதுவும் சாப்பிடாமல் குறைவாகச் சாப்பிட்ட ராஜாஜியும் ஏறத்தாழ அந்த வயது வரையிலேதான் வாழ்ந்தார். அதைப் போலவே குறைவாகச் சாப்பிட்ட நான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிகமாகச் சாப்பிட்ட சி.வி.எம். விரைவிலே நம்மை விட்டு மறைந்து விட்டார்.

தம்பி முரசொலி மாறன்கூட அசைவ உணவுகளை - குறிப்பாக மீன் வகைகளை மிகவும் ரசித்துச் சாப்பிடுவார். ஒரு முறை - சில ஆண்டுகளுக்கு முன்பு - நான், மாறன் ஆகியோர் மாமல்லபுரம் சென்றிருந்தோம். அங்கே அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மீன் வைத்தார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு வயிற்றில் ஒரு பெரிய கோளாறு ஏற்பட்டு, அறுவை சிகிச்சையைத்தான் செய்து கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.

ஆனால், டாக்டர் சுரேந்தர் மட்டும், "உணவுக் கட்டுப்பாடாகச் சாப்பிட வேண்டும் - அதாவது காரமே கூடாது - புளி கூடாது - அசைவம் கூடாது - வெறும் ரசம் சாதம் மட்டுமே சாப்பிடலாம்!" என்றெல்லாம் கூறியபோது, நான், "அறுவை சிகிச்சை தேவையில்லை - உணவிலே கட்டுப்பாடாக' இருக்கிறேன்" என்று கூறினேன்.

அவ்வாறுதான் கடந்த ஐந்தாண்டு காலமாக சாப்பிட்டும் வருகிறேன். ஒரு காலத்தில் மதியம் கோழி குழம்பு, இரவு விரால் மீன் குழம்பு என்றுதான் அன்றாடம் என் சாப்பாடு இருக்கும். ஆனால், தற்போது வெறும் ரசம்தான், ஒரு சில நாட்களில் உப்புச் சப்பில்லாத சாம்பார் - தயிர் சாதம் என்று அளவிலேதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் மாமல்லபுரத்தில் நானும், மாறனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்கு மீன் பரிமாற வந்தார்கள்.

அப்போது நான், "எனக்கு வேண்டாம், தம்பிக்கு மட்டும் வையுங்கள்" என்று கூறினேன். நான் மீன் சாப்பிடாமல் இருப்பதை மாறனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "ஏன் மாமா? மீன் வைத்துக் கொள் - ஒன்றும் செய்து விடாது" என்று என்னை வலியுறுத்தி, அதனைப் பரிமாறச் செய்து சாப்பிடச் செய்தான்.

அவனது அன்பின் காரணமாகவோ என்னவோ, அன்று நான் மீன் சாப்பிட்ட போதிலும், என் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லை. மாறன் எதைச் செய்தாலும், எனது உள்ளத்திற்கும், உடலுக்கும் நலம் பயக்குமா என்று தெரிந்துதான் செய்வான் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.