நெஞ்சுக்கு நீதி
காவியக் கருவூலம் · 320 / 391
8. காவியக் கருவூலம் தமிழ்ப் பகைவர்களின் உள்ளத்தை மாய்க்கின்ற அறிவுக் கருவூலம்தான் கலைஞரின் எழுத்தோவியங்கள்! -பேராசிரியர் 10.6.1996 அன்று, கவிப்பேரரசு தம்பி வைரமுத்து எழுதிய "தண்ணீர்தேசம்" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அந்த நூலின் முதற்படியை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் அளித்த ஒரு லட்சத்து மூன்று ரூபாயை, தம்பி வைரமுத்து என் கையிலே கொடுத்து, அவருடைய சொந்தக் கிராமத்தில் என்னுடைய ஆரூயிர் நண்பர் கவிஞர் கண்ணதாசன் பெயரால் ஒரு நூல் நிலையம் அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
காரைக்குடியில் கண்ணதாசனுக்கு நினைவாலயம் கட்டிய கை என்னுடைய கைதான் என்பது வைரமுத்துவிற்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதன் பிறகு ஆட்சி மாறி, காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தை, சிவகங்கையிலே இருந்தவாறே திறந்து வைத்தது வேறொரு கை என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, தன்னுடைய நூலுக்காக தரப்பட்ட ரூபாயை என்னிடம் கொடுத்து, நூலகம் ஒன்றினை அரசின் சார்பிலே, அவரது சொந்த ஊரிலே அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அவரது விருப்பம் நிறைவேறும் வண்ணம், நானே பின்னர் அந்த ஊருக்குச் சென்று அந்த நூலகத்தையும் திறந்து வைத்தேன். அந்த விழாவில் தம்பி வைரமுத்துவின் குடும்பத்தினர் நான்கு தலைமுறையினர் கலந்து கொண்டு எனக்கு மாலை அணிவித்தனர். முதலில் வைரமுத்துவின் பாட்டனார் துரைசாமித் தேவரும், அடுத்து இரண்டாவது தலை முறையைச் சேர்ந்த வைரமுத்துவின் தந்தை ராமசாமித் தேவரும், மூன்றாவது தலைமுறை சார்பில் வைரமுத்துவும், தொடர்ந்து வைரமுத்துவின் இரண்டு புதல்வர்களும் நான்காவது தலைமுறை சார்பிலும், எனக்கு மாலை அணிவித்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ப.க.பொன்னுசாமி, இயக்குநர் பாரதிராஜா, முன்னாள் துணைவேந்தர் வ.செ.குழந்தைசாமி, எழுத்தாளர் சிவசங்கரி, இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோர் விழாவிலே கலந்து கொண்டனர். மூன்றே மாதங்களில் 8 பதிப்புகளை வெளியிட்டு, தி.மு.கழக அறக்கட்டளைக்கு 37 இலட்சம் ரூபாய் வழங்கிய நூல், எனக்குத் தெரிந்தவரை "தொல்காப்பியப் பூங்கா"தான்! 1996ஆம் ஆண்டு கவிப்பேரரசு எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா பற்றி இந்த அத்தியாயத்தில் நான் எழுதி, இந்தக் கட்டுரை "முரசொலி" யில் வெளிவரும் இதே நாளில், 12 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த விழாவிலே கலந்து கொண்டு நான்காம் தலைமுறை சார்பில் எனக்கு மாலை அணிவித்த, வைரமுத்துவின் அருமைச் செல்வன் டாக்டர் மதன் கார்க்கியின் மணவிழா என்னுடைய தலைமையிலே நடைபெறுகிறது என்பது எவ்வளவு பொருத்தமான செய்தி.
பொதுவாக தம்பி வைரமுத்துவின் இல்லத்து நிகழ்ச்சிகள், அது புத்தகவெளியீட்டு விழாக்களாக இருந்தாலும் சரி - பிறந்தநாள் விழாக்களாக இருந்தாலும் சரி - இல்லத்து மண விழாக்களாக இருந்தாலும் சரி - அதிலே எனக்கு முக்கியமான பங்குண்டு என்பதை நிரூபிக்கும் செயல்களாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் அமைந்துள்ளன. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், புலவர் பெருமக்கள் நூல்களை எழுதுவார்கள் - பாடல்களை இயற்றுவார்கள்- அவற்றை எல்லாம் மன்னர்கள் முன் அரங்கேற்றம் செய்வார்கள்.
அந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இப்போதெல்லாம் புத்தகங்களை எழுதுபவர்கள் அதனை வெளியிடும் விழாவினை ஏற்பாடு செய்து, அதிலே ஒருவர் வெளியிட, வேறு சிலர் பெற்றுக் கொள்ள, அந்தப் புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் பற்றி பலர் விமர்சிக்க, இறுதியாக புத்தகம் எழுதியவர் ஏற்புரையாற்ற என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நான் எழுதிய சில முக்கிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களும், அதுபோல் மற்றவர்கள் எழுதிய புத்தகங்களை நான் வெளியிடும் விழாக்களும் என்று பல உண்டு.
அவற்றில் ஒருசில நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த முயலுகிறேன். 30.4.1975 அன்று நடைபெற்ற "நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தின் வெளியீட்டு விழாவே சுவாரஸ்யமான ஒன்று. இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்திலேயே அதைப் பற்றி விவரமாக எழுதியிருக்கிறேன். 19.5.1983 அன்று, அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, பேராசிரியர் டாக்டர் வ.சுப.மாணிக்கம் தலைமையில், நான் எழுதிய "தென்பாண்டிச் சிங்கம்" நூல், பேராசிரியர் அவர்களால் வெளியிடப்பட்ட, பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உ.
சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். அந்த விழாவில் எனது ஏற்புரையில், "உலகப் புகழ்பெற்ற பரிசுகளைவிடத் தமிழ் வளர - தமிழ்ச் சமுதாயம் வளரப் பாடுபடும் தமிழ்ச் சான்றோர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களே என் நெஞ்சுக்கு நிறைவு தருபவை!" என்று குறிப்பிட்டேன். 17.2.1985 அன்று,நான் எழுதிய "குறளோவியம்" நூல் வெளியீட்டு விழா, பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 26.8.1987 அன்று, நான் எழுதிய "சங்கத் தமிழ்" நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.
விழாவில் நானும் ஏனைய சான்றோர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டோம். அந்த விழாவில் பேராசிரியர் அவர்கள், "தமிழினம் தன்னை உணர்ந்த தினமாக, மாறினார், பின்னர் வீழ்ச்சியே இல்லை - வீழ்ச்சியற்ற மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கும் சிறந்த உருவிலே கலைஞரின் "சங்கத் தமிழ் விளங்குகிறது" என்று பாராட்டியதும், "குடத்துக்குள் விளக்காக இருக்கும் நம்முடைய மொழி உணர்வும், இன உணர்வும் தமிழ்ப் பேரறிஞர்கள் - சான்றோர்கள் - வெளியிடும் கருத்துக்களின் அடிப்படையில் கோபுரத்தின்மேல் ஒளிவிடும் சுடர் விளக்காக மாற வேண்டும்!"
என்று ஏற்புரையில் நான் குறிப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது. 1988ஆம் ஆண்டு, டிசம்பர் திங்களில் அனைத்துக் கட்சிகளும் பொதுத் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் 17.2.1988 அன்று, நான் எழுதிய "பொன்னர் - சங்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் நூலினை வெளியிட, டாக்டர் நன்னன் அவர்கள் தலைமையில் - முதல் பிரதியை டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கவியரசருக்கு கவிப்பேரரசு அளித்த காணிக்கை! என்னிடம், தன் சொந்த செலவில் கண்ணதாசன் பெயரால், தன் ஊரில் ஒரு நூலகம் அமையுங்கள் என்றார், வைரமுத்து! உலகப் புகழ்பெற்ற பரிசுகளை விட, தமிழ்ச் சான்றோரின் வாழ்த்துக்களே என் நெஞ்சுக்கு நிறைவு தரும்! அந்த விழாவில், "வணங்கிப் போற்றுகின்ற அண்ணன்மார்களின் வீரவரலாறு எதிர்காலத் தமிழகத்திற்கு - தமிழர்களுக்கு - தமிழ் இனத்திற்குப் பயன்படும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பொன்னர் - சங்கர் உருவானது!...
தன் குழந்தையை இழந்தாவது, மற்ற குழந்தைகளைக் காப்பாற்றத் துணிந்த இக்கதைப் பாத்திரமான ராக்கியண்ணனின் விட்டுக் கொடுக்கும் பரந்த மனப்பான்மை நம் அனைவருக்கும் தேவை!" என்று நான் குறிப்பிட்டதை மறக்க இயலாது. நான் எழுதிய "பாயும் புலி பண்டாரக வன்னியன்" நூல் வெளியீட்டு விழா, 20.5.1991 அன்று கலைவாணர் அரங்கில் முன்னாள் தலைமை நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதல் பிரதியை முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைக் குழுத் தலைவர் ஜெ.ஏ.அம்பா சங்கர் பெற்றுக் கொண்டார்.
நான் எழுதிய "கலைஞரின் கவிதைகள்" என்ற நூலின் நான்காம் பதிப்பு வெளியீட்டு விழா சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 24.3.1995 அன்று டாக்டர் நன்னன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில், "எழுத்துத் தணிக்கை - நாடகத்திற்குத் தடை - என்று என் வாழ்க்கையிலும் எத்தனையோ சோதனைகள், வேதனைகள் - அந்த வேதனைகள்தான் என் கைக்கு வேல்களாயின!"
- என்று நான் ஏற்புரையில் பேசியது குறிப்பிடத்தக்கது. 15.4.1996 அன்று, நான் பல நாட்கள் ஆய்வு செய்து எழுதிய "திருக்குறள் உரைநூல்" வெளியீட்டு விழா சென்னை குடத்துக்குள் விளக்காக இருக்கும் எமது மொழி உணர்வும், கோபுரத்தின் மேல் ஒளிவிடும் சுடர்விளக்காக மாற வேண்டும்! ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில், பேராசிரியர் அ.ச.ஞான சம்பந்தனார் நூலினை வெளியிட, திருமதி ராஜேஸ்வரி அம்மையாரும், நல்லி குப்புசாமி செட்டியாரும், நூலினைப் பெற்றுக் கொண்டார்கள்.
மக்கள் தலைவர் மூப்பனார், பீட்டர் அல்போன்ஸ், தமிழ்க் குடிமகன், திருமதி சக்தி பெருமாள், முனைவர் நன்னன், கவியரசு வைரமுத்து ஆகியோர் என்னைப் பாராட்டி பேசினர். அந்த விழாவிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி வாழ்த்துச் செய்தி ஒன்றை அவராகவே எழுதி அனுப்பியிருந்தார். "திருக்குறளின் மூலம் அடியாக நான் - இரண்டாவது அடியாக மூப்பனார் - நாங்கள் இருவரும் இப்படி ஈரடியாக இருக்கிற காரணத்தால்தான், இந்த விழாவிலே அவர் கலந்து கொண்டார்!"
- என்று நான் ஏற்புரையிலே குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. 8.10.1997 அன்று சென்னை ராஜா முத்தையா மன்றத்தில் - "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகத்தின் (முதல் பதிப்பு) இரண்டாம் பாகத்தின் (மூன்றாம் பதிப்பு) முதல் பாகத்தின் (ஐந்தாம் பதிப்பு) நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இனமானப் பேராசிரியர் அவர்கள் தலைமையேற்று அந்த நூல்களை வெளியிட, திரு.டி. செங்கல்வராயன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேராசிரியர் அவர்கள் தலைமை உரையில், "எதிர்காலத்தில் இந்த நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர் கலைஞர்!" என்றார், அண்ணா! வருங்காலச் சமுதாயத்தை - அரசியலைத் தெளிவாகப் படம் பிடித்துள்ள தன் குழந்தையை இழந்தாலும், மற்றக் குழந்தைகளைக் காப்பாற்றத் துணியும் "பொன்னர் - சங்கர்" பாத்திரமான ராக்கியண்ணனின் பரந்த மனப்பான்மை நம் அனைவருக்கும் தேவை! "நெஞ்சுக்கு நீதி" திராவிட இயக்கக் கொள்கைகளைப் பாதுகாக்கும் கேடயமாகும்!"
என்று குறிப்பிட்டதையும் - "நெஞ்சுக்கு நீதி"யை வாழ்த்தியதை ஊட்டச்சத்தாக ஏற்றுக் கொண்டு வாழ்வேன் - உழைப்பேன்!" என்று ஏற்புரையில் நான் சொல்லியதையும் மறக்க முடியுமா? நான் எழுதிய "மீசை முளைத்த வயதில்..." என்ற நூலின் வெளியீட்டு விழா 2.6.2002 அன்று, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. ஏற்புரை வழங்கிய நான், "திராவிட முன்னேற்றக் கழகம் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது! யாரோ ஓரிருவர் அடக்குமுறைக்கு அஞ்சலாம் - அதற்காக கழகப் பாசறையே கோழைகளின் பாசறை என்று கருதுபவன் பைத்தியக்காரன்!
சோதனைகளையும் - வேதனைகளையும் வென்றெடுக்கும் ஆற்றலும் - திறமையும் - வலிவும் கழகத்திற்கு உண்டு!" என்று குறிப்பிட்டேன். நான் எழுதிய பெரிய நூல்களுள் அதிகப் பதிப்புகள் குறைந்த காலத்தில் விற்றுத் தீர்ந்தது என்றால், அது "தொல்காப்பியப் பூங்கா" நூல் தான். நான் அதனை எழுதத் தொடங்கியது. 1.9.2002 அன்று கோவாவில். நூலை நிறைவு செய்தது 3.10.2002 ஆமாம், 33 நாட்களில் நான் எழுதிக் குவித்ததுதான் 532 பக்கங்களைக் கொண்ட அந்தக் காப்பிய நூல்.
அந்நூல் இரண்டே மாதங்களில் புத்தகமாகி - முதல் பதிப்பு வெளியீட்டு விழா 11.1.2003 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பொதுச் செயலாளர் பேராசிரியர், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் தமிழண்ணல், பெண்ணின் பெருமை - நாட்டுப் பற்று - இன உணர்வு தமிழ்ப் பண்பாடு அத்தனையும் தெவிட்டாத தேன் தமிழில் அமைந்ததுதான் "பாயும் புலி பண்டாரக வன்னியன்" முனைவர் சாலமன் பாப்பையா, முனைவர் நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், பெருங்கவிஞர் வாலி, முனைவர் அவ்வை நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட 3000 புத்தகங்களும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்தன. "தொல்காப்பியத்தைப் பற்றி 100 நூல்களாவது எனது நூலகத்தில் உள்ளன. அவ்வளவையும் படித்து - ஆய்ந்து - தெளிந்து - அதற்குப் பிறகுதான் அதில் உள்ள கடுமையான சொற்களை எளிமையாக்கி - எழிலார்ந்த நடையிலே 'தொல்காப்பியப் பூங்கா' வை உருவாக்கினேன்!"
என்று அந்த அந்த விழாவில் என் அனுபவத்தை விளக்கினேன். "தமிழ்ப் பகைவர்களின் உள்ளத்தை மாய்க்கின்ற அறிவுக் கருவூலம்தான் இந்தத் தொல்காப்பியப் பூங்கா!" என்று பேராசிரியர் கூறிய புகழுரை என் நெஞ்சை விட்டு அகலவே அகலாது! உடனடியாக இரண்டாம் பதிப்பு தயாரிக்கப்பட்டு, அடுத்த மாதமே, அதன் வெளியீட்டு விழா மதுரையில் 23.2.2003 அன்று நடைபெற்றது. மு.க.அழகிரி முயற்சி எடுத்து நடைபெற்ற அந்த விழாவில், அச்சிட்ட புத்தகங்கள் அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட, அடுத்து அச்சிட்டு வழங்குமாறு கேட்டு, பலர் பணத்தை முன்னதாகவே கொடுத்து பதிவு செய்து கொள்ள, பிறகு 3ஆம் பதிப்பை அவசர அவசரமாக ஒரே வாரத்தில் அச்சிட்டு, மதுரையில் பதிவு செய்து கொண்டவர்களுக்கெல்லாம் மு.க.அழகிரி மூலமாக நூல் வழங்கப்பட்டது.
என் வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகள்- சோதனைகள் அந்த வேதனைகள் தான் என் கைகளுக்கு வேல்களாயின! "எவ்வளவு கவலை - துன்பங்கள் - தொல்லைகள் வந்தாலும் - எழுத்திலே சுவை குறையாத அந்தச் சூழ்நிலை எனக்கு எப்போதும் உண்டு! அது ஒன்றுதான் நான் பெற்ற அழியாத செல்வம்! அதை யாராலும் பறிக்க முடியாது! அது இருக்கும்வரை எனக்குத் தோல்வி இல்லை- துன்பமும் இல்லை!... நான் ஒரு படைக்குத் தலைவனாக இருந்தாலும், "தொல்காப்பியப் பூங்கா" போன்ற படைப்புகள் அந்தப் படைக்குரிய போர்க் கருவிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன்!"
என்று நான் அந்த விழாவில் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. நான்காம் பதிப்பு திருச்சி மாநகரில் கே.என். நேரு அவர்களின் முயற்சியால், 22.3.2003 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அங்கும் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வாங்க வந்தவர்களுக்குப் போதாமல், ஐந்தாம் பதிப்பு, ஆறாம் பதிப்பு என்று புத்தகங்களைப் பிறகு அச்சிட்டு, திருச்சி விழாவிலே பதிவு செய்து கொண்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி விழாவின் இறுதியிலே நான் பேசியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.
"தோல்வி என்னைத் தொட்டதுண்டு - நான் தோல்வியைத் தொட்டதில்லை - அதன் காரணமாகத்தான் தமிழைக் காப்பாற்றப் போராட வேண்டிய - வாதாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது! ஆன்றோர் - சான்றோர் வழங்கும் உற்சாக உரைகளால் ஊக்கம் பெற்று, தமிழுக்கு - தமிழர்களுக்கு தமிழர்களுக்கு - தமிழ் நாட்டிற்கு என்றென்றும் தொடர்ந்து உழைப்பேன்!"
என்று குறிப்பிட்டேன். 20.4.2003 அன்று வேலூர் நகரத்தில் "தொல்காப்பியப் பூங்கா" வின் 7ஆவது பதிப்பினை தம்பி துரைமுருகன், காந்தி, முகமது சகி ஆகியோரின் முயற்சியினால் நடைபெற்ற விழாவில் வெளியிட்டேன். திருமண மண்டபம் ஒன்றில், காலை 10 மணியளவில் அமர்ந்த நான், 12.30 மணிவரை வரிசையாக வந்தவர்களுக்கெல்லாம் புத்தகங்களை வழங்கிக் கொண்டே இருந்தேன். 26.4.2003 அன்று, கோவை மாநகரில், மாவட்டக் கழகச் செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக, "தொல்காப்பியப் பூங்கா" எட்டாம் பதிப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடைவிடாமல் வரிசையாக வந்தவர்களுக்கு நூல்களை வழங்கிக் கொண்டே இருந்தேன்
. பதிப்பாளர் கொண்டு வந்த அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன. ஆனால் வரிசையில் நின்றவர்கள் வந்து கொண்டே இருந்தனர். "தொல்காப்பியப் பூங்கா" இந்த அளவிற்குத் தமிழகத்தில் விற்ற பெருமை மட்டுமல்ல; அதற்கு மற்றுமோர் பெருமையும் உண்டு. கழகத்தின் உடன்பிறப்புகள் நலிந்த நிலையில் உள்ளோருக்கு அவர்களின் பிள்ளைகளின் மேல்நிலைக் திருக்குறளின் முதல் அடியாக நான் - இரண்டாவது அடியாக மூப்பனார் - நாங்கள் இருவரும் ஈரடியாக வாழ்கிறோம்!
"நெஞ்சுக்கு நீதி"யைப் பற்றி அறிஞர் பெருமக்கள் வாழ்த்தியவைகளை ஊட்டச் சத்தாக ஏற்றுக் கொண்டு நான் வாழ்வேன்- உழைப்பேன்! கல்விக்காகவும், உடல் நலிவுற்ற - வசதியற்ற கழகத் தொண்டர்களின் மருத்துவச் செலவிற்காகவும் உதவி செய்திட - திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, அதன் சார்பில் நிதி உதவி அளிக்கப்படும் என்று நான் அறிவித்து, அதற்காக மதுரையில் "தொல்காப்பியப் பூங்கா" இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழாவின் போது வசூலான தொகையில் பத்து இலட்சம் ரூபாயை அறக்கட்டளைக்கு வழங்கினேன்.
பிறகு, திருச்சியில் நடைபெற்ற நான்காம் பதிப்பு வெளியீட்டு விழாவின்போது வசூலான தொகையில் ஒன்பது இலட்ச ரூபாயை தி.மு.கழக அறக்கட்டளைக்கு வழங்கினேன். வேலூரில் 7ஆம் பதிப்பு வெளியீட்டு விழாவிலே வசூலான தொகையில் மூன்று இலட்ச ரூபாய் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற 8ஆம் பதிப்பு வெளியீட்டு விழாவிலே வசூலான தொகையில் பதினைந்து இலட்சம் ரூபாய் தி.மு.கழக அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒரு நூலின் விற்பனையிலிருந்து மட்டும் 37 இலட்சம் ரூபாய் தி.மு.கழக அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில், ஒரு நூல் வெளியிட்ட மூன்றே மாதங்களில் எட்டு பதிப்புகள் வெளியிடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப்பட்ட நிதியிலிருந்து, கழகத்தின் அறக்கட்டளைக்கு 37 இலட்சம் ரூபாய் வழங்கும் அளவிற்குப் புத்தகங்கள் விற்றன என்ற சரித்திரம், வேறு எந்த நூலுக்கும் தமிழகத்திலே இருந்ததாகக் கேள்விப்பட வில்லை.
இதுவரை 13 பதிப்புகள் "தொல்காப்பியப் பூங்கா" நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல நேரங்களில், தமிழினம் பெற வேண்டியதை இழந்துள்ளது, அதை உணர்ந்து, துரோகம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், துரோகம் மொத்த சமுதாயத்தையே வீழ்த்திவிடும்! 11.7.2004 அன்று பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், நான் எழுதிய "கவிதை மழை" நூலும், "தாய்" காவியம் நூலும் வெளியீட்டு விழா நடை பெற்றது.
"கவிதை மழை" நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "தாய்" காவியம் நூலை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, மத்திய அமைச்சர் ஆ.இராசா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 2.6.2005 அன்று பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நான் எழுதிய "வான்புகழ் கொண்ட வள்ளுவம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் வெளியிட, வா.செ.குழந்தைசாமி அவர்கள் நூலினை ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வை.கோ. முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். துரைமுருகன் வரவேற்புரையாற்ற, கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார். கனிமொழி நூல் அறிமுக உரையாற்றினார். இறுதியாக நான், எனது ஏற்புரையிலே "திருவள்ளுவர் - அண்ணா என்ற இரண்டு சொற்கள் என் ஊனோடும், குருதியோடும், உயிர் மூச்சோடும் கலந்து விட்ட சொற்கள்!"
என்று குறிப்பிட்டதை நினைவு கூர்கிறேன். 20.8.2005 அன்று, கலைஞர் அரங்கத்தில் நீதியரசர் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், நான் தமிழில் எழுதி ஏற்கனவே வெளியிடப் பட்ட "தாய்" காவியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மக்களவைத் தலைவர் திரு.சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.
2.6.2006 அன்று, நான் எழுதிய "சிந்தனையும் செயலும்" மற்றும் "காலப்பேழையும் கவிதைச் சாவியும்" ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. "சிந்தனையும் செயலும்" என்ற நூலினை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட, காவியக் கவிஞர் வாலி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "காலப்பேழையும் கவிதைச் சாவியும்" நூலினை தோழர் தா.பாண்டியன் வெளியிட, முதல் நூலினை முனைவர் அவ்வை நடராசன் பெற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சர் ஆ.இராசா, கோ.க. மணி, தமிழருவி மணியன், டி.கே. ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கனிமொழி வரவேற்புரையாற்றினார். நான் ஏற்புரை ஆற்றினேன். எனது ஏற்புரையிலே, "துரோகத்தால் பல நேரங்களில் தமிழினம் பெற வேண்டியதை இழந்துள்ளது - அதை உணர்ந்து துரோகம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - ஏனெனில் துரோகம் மொத்த சமுதாயத்தையே வீழ்த்திவிடும்!"
என்று குறிப்பிட்டேன். 1957ஆம் ஆண்டு, நான் தமிழகச் சட்ட மன்றத்திற்குச் சென்றது முதல், ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட முடிவு செய்து, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொன்விழாவின்போது "கலைஞரின் சட்டமன்ற உரைகள்" என்ற தலைப்பில் 6 பாகங்கள் நாடாளுமன்ற அவைத் தலைவர் மேதகு சோம்நாத் சாட்டர்ஜி அவர்களால் வெளியிடப்பட்டது. எஞ்சிய 6 பாகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படத் தயாராக என்னுடைய தேதிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கிற - இருந்த சிறந்த பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவர், "இதயம் பேசுகிறது" இதழின் ஆசிரியர் மணியன். அதற்கு முன்பு "ஆனந்த விகடன்" இதழில் நீண்ட நாட்களாகப் பணியாற்றியவர். அடிக்கடி பயணக் கட்டுரைகள் எழுதி, பின்னர் அதனை நூலாக வெளியிடுவார். 1989ஆம் ஆண்டு அமெரிக்கா பற்றி மணியன் எழுதிய "பயணக் கட்டுரை" நூலினை எழுத்தாளர் திரு.வாசவன் தலைமையிலே நான் வெளியிட்டு உரையாற்றினேன். 9.3.1991 அன்று, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 4 நூல்களும், அவரது துணைவியார் பொன்மணி வைரமுத்து எழுதிய ஒரு நூலும் வெளியிடப்பட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.
ஐந்து நூல்களையும் நான் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினேன். 5.2.1993 அன்று கே. சுப்பு அவர்கள் "நக்கீரன்" வார இதழில் தொடர்ந்து எழுதிய "இங்கே ஒரு இட்லர்" தொடர் கட்டுரைகளின் இரண்டாவது பாகம் வெளியிடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நான் தலைமையேற்று நூலினை வெளியிட, பத்திரிகையாளர் சாவி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "சர்வாதிகார இட்லர் ஆட்சிதான் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - இந்த ஆட்சியைப் போக்கிட வேண்டுமானால், மக்கள் உள்ளத்திலே ஜனநாயகப் புரட்சியை உருவாக்க வேண்டும்!"
என்று நான் அந்த விழாவிலே குறிப்பிட்டேன். (அப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற்று வந்தது) 23.2.1993 அன்று, கவிஞர் வேழவேந்தன் எழுதிய "ஏக்கங்களின் தாக்கங்கள்." "தூறலும், சாரலும்" என்ற இரண்டு கவிதைத் தொகுதிகளின் வெளியீட்டு விழா டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையிலே நடைபெற்றது. இரண்டு நூல்களையும் நான் வெளியிட்டு உரையாற்றினேன். கழகத் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய நாஞ்சிலார் அவர்கள், அவ்வப்போது எழுதிய கதைகளை எல்லாம் தொகுத்து, அதனை நூலாக வெளியிடும் விழா 23.4.1993 அன்று சென்னை ராஜேஸ்வரி மண்டபத்தில் விஜயா தாயன்பன் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நூலினை நான் வெளியிட, "தினகரன்" நிறுவனர் கே.பி. கந்தசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். 2.9.1993 அன்று கவிஞர் இளவேனில் அவர்கள் எழுதிய "ஆத்மா என்றொரு தெருப் பாடகன்" எனும் நூலினை அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நான் தலைமையேற்று வெளியிட, முதல் பிரதியை பகுத்தறிவாளர் நா. அருணாசலம் பெற்றுக் கொண்டார். "பேச முடியாதவர்களின் பெருமூச்சு ஒரு பிரளயத்துக்கு முன்னறிவிப்பாகிறது! சமத்துவ - சமதர்ம - சமுதாயப் புரட்சிக்கு சத்தியமான உள்ளமும் செயல்பாடும் தேவை!"
என்று அந்த நிகழ்ச்சியிலே நான் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. "தி யோகா ஆப் தி யோகி" நூலை வெளியிடுகிறார், கலைஞர் 28.6.1995 அன்று திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன், அவர்கள் எழுதிய "இது 20ஆம் நூற்றாண்டின் கதை" என்ற நூலை நான் வெளியிட, மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். 26.7.1995 அன்று, கவியரசு நா.காமராசன் எழுதிய "காட்டுக் குறத்தி" "கறுப்பு மலர்கள்" ஆகிய நூல்களை நான் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினேன்.
26.7.1996 அன்று எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய "ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்" "எனது கவிதைகளின் கதைகள்" ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் நூல்களை நான் நான் வெளியிட, அம்மையார் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அவர்கள் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். "இந்த நூல்களை இயற்றியவர் சமுத்திரம். சமுத்திர நீர் உப்புக் கரிக்கும் - ஆனால், சூரியனின் ஒளிபட்டால், அது நீராவியாகி மழையாகப் பொழியும் - அந்த மழை நீர் தூய தண்ணீராக இருக்கும் - உப்புக் கரிக்காது - ஆகவே சூரியனின் ஒளிபட்டால் உப்பு நீர் நல்ல நீராகிறது!"
என்று நான் பேசியது, பெரும் கைதட்டலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 28.7.1996 அன்று திருமதி ஏ.வி.எம். ராஜேஸ்வரி அம்மையார் எழுதிய "ஏ.வி.எம்.என் கணவர்" என்ற நூலினை நான் வெளியிட்டேன். 3.1.1997 அன்று "ராணி" வார இதழின் ஆசிரியர், அ.மா.சாமி அவர்கள் எழுதிய "தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்" என்ற நூலினை பேராயர் ம.ஆரோக்கிய சாமி அவர்கள் தலைமையில், நான் வெளியிட்டு உரையாற்றினேன். அப்போது, "நான் சிலுவை அணியாத கிறித்துவன் -லுங்கி அணியாத முஸ்லீம் - திருநீறு அணியாத சைவன் - இதைத்தான் திருமூலர் 'ஒன்றே குலம் - ஒருவனே தேவன்' என்று குறிப்பிட்டார்" என்று பேசியது நினைவுக்கு வருகிறது.
10.3.1997 அன்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் எழுதிய "ஞாபக நதிக் கரையில்" என்ற நூலினை மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையில் சென்னையில் நான் வெளியிட்டேன். அப்போது பாரதி ராஜாவை வாழ்த்திய நான், "தேனிக்கு அருகே உள்ள அல்லி நகரிலே பிறந்தவர், பாரதி ராஜா - நான் திருக்குவளையிலே பிறந்தவன் - அல்லியும் மலர்தான் - குவளையும் மலர்தான் - அல்லி மலரை குவளை மலர் வாழ்த்துகிறது!"
என்று பேசியது சிரிப்பலைகளைப் பெற்றது. 25.5.1997 அன்று அண்ணா இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில், டாக்டர் பரிமளம் தொகுத்த பேரறிஞர் அண்ணாவின் "தன் வரலாறு" நூலினை நான் வெளியிட, இராம. அரங்கண்ணல் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "கண்ணீர்த் துளிகள்" என்று பெரியார் நம்மை ஆத்திரமாக அவமதித்தபோதுகூட - அதையும் நற்சான்றாக எடுத்துக் கொண்டு - "கண்ணீர்த் துளிகளே!
நாட்டின் கண்மணிகளே!" என்று அழைத்து நமது இயக்கத்தை உருவாக்கியவர் அண்ணா!" என்று பேரறிஞர் அண்ணாவை நான் குறிப்பிட்டது என் நெஞ்சில் நிழலாடுகிறது. 6.6.1997 அன்று, பழம்பெரும் பத்திரிகையாளர், எழுத்தாளர் எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய அருமை நண்பர் சாவி அவர்கள் எழுதிய "நவகாளி யாத்திரை" "என்னுரை", "வாஷிங்டனில் திருமணம்" ஆகிய நூல்களை நான் வெளியிட்டு சாவி அவர்களைப் பாராட்டிப் பேசினேன். "வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் - வேதனைகள் - சோதனைகள் - சூறாவளிகள்- போன்ற சோகக் கட்டங்கள் வருகிற போதெல்லாம், சமமாகக் கருதுகிற ஒரு நிலை தோழமைக்கு இடையிலே ஏற்பட்டால், அதுதான் உண்மையான தோழமை - உண்மையான நட்பு!
அப்படி ஒரு உண்மையான நண்பர்தான் சாவி!" என்ற எனது பாராட்டுரை சாவியை நெகிழச் செய்தது. அதே சாவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "சாவி -85" என்ற ஒரு நூலாக ராணி மைந்தன் தொகுத்து, அதன் வெளியீட்டு விழாவினையும், பிறந்த நாள் விழாவினையும் இணைத்து நடத்த ஏற்பாடு செய்து, 20.1.2001 அன்று அந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டேன். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு சாவி அவர்களை வாழ்த்தக் காத்திருந்தபோது, சாவி அவர்கள் தனது வரவேற்புரையில் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார்.
தான் "தினமணி கதிர்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததாகவும், அப்போது தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டதால், எனக்கு ஆதரவான நிலை எடுத்ததாகவும், அதனால் அந்தப் பத்திரிகையின் உரிமையாளருக்கும், எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, தான் விடுமுறையில் அமெரிக்கா சென்றதாகவும், அந்த நேரம் பார்த்து அந்தப் பத்திரிகை, சாவிக்கு வயதாகி விட்டதாகக் கூறி, வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் - அதனைக் கேள்விப்பட்ட நான் "குங்குமம்" வார இதழை புதிதாகத் தொடங்கி, சாவி அவர்களை ஆசிரியராக ஆக்கினேன் என்பதையும் உருக்கத்தோடு எடுத்துக் கூறினார். நான் அவ்வப்போது 'சாரல்'களாக வீசிய மழைத்துளிகள், 'கவிதை மழை'யாக உங்கள் கரங்களில்!
மழையில் நனையுங்கள்! வெப்பம் தணிந்தால் மனம் மகிழுங்கள்! அதாவது "அர்ச்சுனன் வில் வித்தையில் மிகச் சூரனாக இருக்கிறான். துரோணாச்சாரியார் தான் அர்ச்சுனனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கிறார். அர்ச்சுனன் சிறந்த வீரனாக இருப்பதில் துரோணாச்சாரியாருக்கு மிகவும் பெருமை. அதே நேரத்தில் கர்ணன், அர்ச்சுனன் செய்யும் வித்தைகளையெல்லாம் செய்து காட்டுகிறான். அது துரோணாச்சாரியாருக்குப் பிடிக்கவில்லை. அர்ச்சுனனுக்கு சமமாக அவனை ஆக்கக்கூடாது - எப்படியாவது கர்ணனை மட்டம் தட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு.
துரோணர் கர்ணனைப் பார்த்து, "நீ யார்? உன்னுடைய அப்பா, அம்மா பெயர் என்ன? நீ பெரிய சூரனா?" என்றெல்லாம் கேட்டு, மட்டம் தட்டுகிறார். கர்ணன் தலை குனிந்து வெட்கத்தோடு அவஸ்தைப்படுகிறான். அங்கே துரியோதனன் இருக்கிறார். அவர் கர்ணனைப் பார்த்து, "அவர்கள் கிடக்கிறார்கள், நீ பெரிய சூரன்! உன்னை நான் அங்க தேசத்திற்கு ராஜாவாக ஆக்குகிறேன்! நீ என்னுடன் வா!"
என்று கூறி அழைத்துச் சென்று, அவனுக்கு முடி சூட்டி ராஜாவாக ஆக்கினார். அந்த மாதிரி எனக்காக "குங்குமம்" தேசத்தை உருவாக்கி, அதற்கு என்னை ராஜாவாக ஆக்கியவர் கலைஞர். குங்குமம் என்ற புதிய பத்திரிகையைத் தொடங்கி, அதற்கு என்னை ஆசிரியராக ஆக்கி, என்னை கர்ணனுக்குச் சமமாக ஆக்கியவர் கலைஞர்! இதைச் சொல்லத்தான் நான் விரும்பினேன். இதற்குமேல் பேச முடியவில்லை. இதயம் வலிக்கிறது. நிறுத்திக் கொள்கிறேன்!"
என்று கூறி, உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு, அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. விழாவிலும் நீண்ட நேரம் அனைவரும் பேச இயலாமல், நான் மட்டும் "எனது பாசமிக்க தோழர் - அருமை நண்பர் - எழுத்துலகிலே பல எழுத்தாளர்களை உருவாக்கிய பிதாமகன் சாவி வாழ்க!"
என்று ஒரு சில நிமிடங்கள் அவரை வாழ்த்திட, நிகழ்ச்சிகள் முடிவுற்றன. அதற்குப் பிறகு சாவி நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கவில்லை. 13.7.1997 அன்று கவிஞர் வைரமுத்து எழுதிய "தமிழுக்கு நிறம் உண்டு" என்ற கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்
கினேன். அப்போது நான், "பாரதிதாசன் - அண்ணா சொன்னதுபோல், நானும் வைரமுத்துவுக்குச் சொல்கிறேன் . "ஏடா தம்பி! எடுடா பேனா! உன் பேனாவிற்கு என்றும் வெற்றியே கிடைக்கும்!" என்று வாழ்த்தினேன். 9.11.2001 திரைப்படங்களில் புகழ்க் கொடி நாட்டி, சின்னத்திரையிலும் தனி முத்திரை பதித்த நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் சுயசரிதை நூலான " வாழ்க்கைப் - படகு" வெளியீட்டு விழா ஒரு குடும்ப விழாவாக, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கின்ற அளவிற்கு தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.
அவருடைய குடும்பத்திற்கும் எனக்கும் உள்ள நெருங்கிய தொடர்பின் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து, என்னை வலியுறுத்தி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்று, அந்த நூலினை வெளியிடச் செய்தார்கள். "ஒரு ஆணின் சாதனைகளுக்குப்பின் ஒரு பெண் தூணாக இருப்பாள் என்பார்கள். ஆனால், ஜெமினி கணேசனின் பின்னால் அம்மா - சின்னம்மா - அத்தை - மனைவி - மகள்கள் என்று எத்தனையோ தூண்கள் " என்று நான் பாராட்டியது என் நினைவுக்கு வருகிறது.
1.3.2003 அன்று, அண்ணா அறிவாலயத்தில், கவிச் செல்வர் மறைந்த சிங்கார சடையப்பன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு நான் பேசும்போது, "உவமைகள் கூறுவதில் பாரதிதாசனுக்கு நிகரானவர் சிங்காரச் சடையப்பன் - தந்தை பெரியாரின் கருத்துக்கள் - அறிஞர் அண்ணாவின் அறிவுரைகள் அழிந்திட என்றும் சம்மதிக்க மாட்டேன்!"
என்று குறிப்பிட்டேன். 5.10.2003 அன்று கலைஞர் அரங்கில், கவிஞர் இளையபாரதி எழுதிய "பட்டினப் பாலை" உள்ளிட்ட ஏழு நூல்களை வெளியிட்ட நான், "இளையபாரதியை திராவிட இயக்க கவிஞனாக - கலைஞனாக - இலக்கியவாதியாக இந்த விழாவில் பிரகடனப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...! இன்று அவரது 7 நூல்களை வெளியிடுகிறேன் - எதிர்காலத்தில் 700 நூல்களாக - 7000 நூல்களாக வெளியிடக்கூடிய ஆற்றலும் - வசதியும் - வாய்ப்பும் இளையபாரதி பெறுவார் என்று நம்புகிறேன்!"
என்று வாழ்த்தினேன். 5.4.2004 அன்று வீரபாண்டியன் தொகுத்த "ஆகட்டும் பார்க்கலாம்" என்ற காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள் நூலினை காமராஜர் அரங்கத்தில் நான் வெளியிட்டேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான தம்பி. ஜி.கே.வாசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அப்போது, "அறிஞர் அண்ணா அவர்கள் தன் திராவிட நாடு இதழில் "குணாளா - குலக் கொழுந்தே! என்று காமராஜரைப் பாராட்டி ஒரு கட்டுரையே எழுதியிருந்தார்!"
என்பதை நினைவுபடுத்தினேன். 16.8.2004 அன்று கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதிய "கண்ணீர்ப் பூக்கள்" கவிதை நூலின் வெள்ளி விழாப் பதிப்பு - "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" எனும் புதிய கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, "தமிழகத்தில் புதுக் கவிதைகள் உலா வருவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களில் ஒருவர் மு.மேத்தா!"
என்று பாராட்டி, நூலினை வெளியிட்டேன், முதல் பிரதியை இசைஞானி இளையராஜா அவர்களும், மலேசியாவைச் சேர்ந்த ஆதி.குமணனும் பெற்றுக் கொண்டனர். 4.1.2005 அன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய "கொஞ்சம் தேநீர், நிறைய வானம்" என்ற கவிதை நூலும், "ஒரு கிராமத்துப் பறவையும்; சில கடல்களும்" எனும் பயண இலக்கியம் மற்றும் நாற்பத்து நான்கு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளுடன் "வைரமுத்து இலக்கியத் தடம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு நான் தலைமையேற்று நூல்களை வெளியிட்டேன். அப்போது, "கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியங்கள் உலக எழுத்துத் தரத்திற்குச் சமமாக உலவிக் கொண்டிருக்கின்றன. நான் அவரது திறமையை - கற்பனை வளத்தை - கவிதைச் செறிவை - துளித் துளியாகத் துய்த்தவன் அங்குலம் அங்குலமாக சுவைத்தவன்!»
என்று பாராட்டினேன். வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தியபோது, "நோயுற்ற நிலையிலும், எனக்காகவும் தமிழுக்காகவும் வலிதாங்கி வந்திருக்கும் தமிழகத்தின் சுமைதாங்கி கலைஞர் அவர்களுக்கு நனைந்த கண்களுடன் நன்றி கூறுகிறேன்!" என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டதை மறக்க முடியுமா? 25.2.2005 அன்று சென்னையில் கிருஷ்ணமாச்சார்யா யோகா மந்திர் சார்பில் நடைபெற்ற - தேசிகாச்சார் அவர்கள் எழுதிய "தி யோகா ஆப் தி யோகி" என்னும் நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டு நூலை வெளியிட்டதோடு, "எந்த நிலையை எடுத்தாலும், அந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தியானத்தின் சிறப்பு" என்று யோகா பற்றிய எனது கருத்துக்களை எல்லாம் தெரிவித்தேன்.
1.7.2005 அன்று வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதிய 12 கவிதை நூல்களையும் 6.5.2007 அன்று 10 நூல்களையும் நான் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினேன். 3.9.2005 அன்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. எழுதிய " சிறையில் விரிந்த மடல்கள் " நூல்கள், அந்தக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆங்கில நூலை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட, முதல் பிரதியை ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பெற்றுக் கொண்டார்.
தமிழ்ப் பதிப்பை நான் வெளியிட, டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி பெற்றுக் கொண்டார். 29.12.2005 அன்று, முனைவர் உ.சீனிவாச ராகவன் எழுதிய "புத்தரெனும் பேரொளி" என்ற நூலினை நான் வெளியிட்டேன். பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான "Struggle for Freedom of Languages in India" -" மொழிப்போராட்ட வரலாறு " என்ற நூலினை 23.1.2006 அன்று ராணி சீதை மன்றத்தில், முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியம் தலைமையேற்றிட, நான் வெளியிட்டேன்.
அப்போது, "மொழிதான் ஒரு நாட்டின் உயிர் - நாட்டைக் காப்பாற்றக் கூடிய அரண்- எனவே இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று என்ற நல்ல செய்தி தியாகத்திற்குக் கிடைத்த வெற்றியாக அமையும்!" என்று நான் பேசினேன். பேராசிரியர் மு.நாகநாதன் எழுதிய "இந்தியப் பொருளாதாரம் - இருளில் ஒளி" என்ற நூல் வெளியீட்டு விழா, 10.3.2006 அன்று ராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் நான் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு உரையாற்றும் போது, "ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் என்ன தான் ஏற்றமிருந்தாலும் - குன்றுபோல் செல்வம் குவிந்திருந்தாலும் - சுய மரியாதை இல்லாத நாட்டிலே குடிமக்களாக இருப்பதிலே சிறப்பில்லை.
இந்தச் சிந்தனையிலே வல்லவர்களில் ஒருவர் நமது நாகநாதன். அவர் எழுதிய இந்த நூலை வெளியிடுவதில் நான் பெருமைப் படுகிறேன்!" என்று குறிப்பிட்டேன். 17.4.2006 அன்று மத்திய இணை அமைச்சர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் தலைமையில், திரு.ஏ.கோபண்ணா அவர்கள் எழுதிய "அராஜக ஆட்சியை அகற்றுவோம்" என்ற தேர்தல் பிரச்சார நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, "கோபண்ணா எழுதியது நூல் அல்ல - வாள்!"
என்று சொல்லி, நூலினை வெளியிட்டேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.எம்.கிருஷ்ணசாமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 16.12.2006 அன்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "கருவாச்சி காவியம்" நூலினை நான் வெளியிட உச்சநீதிமன்ற நீதியரசர், ஏ.ஆர்.லெட்சுமணன் , முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 5.1.2007 அன்று இலண்டன் பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர் உத்ரா நடராஜன் தொகுத்த ஆங்கில நூலான Plain Speaking: A Sudra's Story" வெளியீட்டு விழா, சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு நான் தலைமையேற்க, மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யர் நூலினை வெளியிட்டார். 28.2.2007 அன்று காவியக் கவிஞர் வாலி இயற்றிய "கலைஞர் காவியம்" எனும் நூல் வெளியீட்டு விழா எனது முன்னிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நான், "கலைஞரைப் பற்றிப் பாட நான் பிறவி எடுத்திருக்கிறேன்!"
என்று வாலி சொன்னது பெரிய வார்த்தை - "இந்த வாலி பாடுவதற்கேற்ப நான் பிறவி எடுத்திருக்கிறேன்!" என்று குறிப்பிட்டேன். 2.3.2007 அன்று, நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கவிதை நூலான "Singing Sparrow" என்ற நூலினை நான் வெளியிட்ட போது, "இந்த ஆங்கிலச் சொற்றொடருக்குப் பாடுகின்ற பைங்கிளி என்று பொருள்! சிட்டுக்குருவி பாடாது- ஆனால் நீதியரசர் மோகன் வீட்டுச் சிட்டுக்குருவியை, அவரது கவிதை நயத்தால் பாட வைத்திருப்பார் போலும்!"
என்று குறிப்பிட்டேன். 24.3.2007 அன்று, ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகளை நான் வெளியிட, தா. பாண்டியன், என். வரதராசன் ஆகியோர் முதல் படிகளைப் பெற்றுக் கொண்டனர். 28.4.2007 அன்று, "ஆனந்த விகடன்" குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூல்களை நான் வெளியிட, முதல் பிரதியை பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக் கொண்டார்.
நூல்களை நான் வெளியிட்டது மாத்திரமல்ல; விகடன் பெருமுயற்சி எடுத்து அந்த தகவல் களஞ்சியத்தை உருவாக்கியதைப் பாராட்டி பேசியதோடு, அரசு நூலகங்களில் வைப்பதற்காக 4500 நூல்கள் வாங்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தேன். அந்த நூலினை வெளியிட ஆனந்த விகடன் குழுமத்தின் சார்பில் எஸ்.எஸ்.வானின் பேரன் சீனிவாசன் என்னைச் சந்தித்து அழைத்த போது, குடியரசுத் தலைவர் அவர்களைக் கொண்டு அதனை வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்குமென்று நான் கூறினேன்.
ஆனால், அவர்கள் குடியரசுத் தலைவரை அணுக வழி தெரியாமல் இருந்த போது, நானே குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதி, அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஆனால், குடியரசுத் தலைவர், "வெளியூர் செல்லவிருப்பதால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது" என்று கூறிவிட்டார்.
அதன் பின்னர் ஆனந்த விகடன் குழுமத்தின், குடியரசுத் தலைவர் வராவிட்டால் பரவாயில்லை என்றும், நான் வந்து அதனை வெளியிட்டால் போதும் என்று கூறியதன் பேரில், அந்த விழாவிலே கலந்து கொண்டு ஆனந்த விகடனைப் பெரிதும் பாராட்டி உரையாற்றினேன். 4.8.2007 அன்று கவிவேந்தர் வேழவேந்தன் எழுதிய "அனல் மூச்சு" எனும் கவிதைத் தொகுதி நூலினை நான் வெளியிட்டு பாராட்டுரை வழங்கினேன். என் வாழ்க்கைப் பாதையில் நூல் வெளியீட்டு விழாக்களும், அவற்றில் நான் ஆற்றிய உரைகளும், தனிப் புத்தகமாகவே வெளியிடக் கூடியவைகளாகும் என்பதைப் பெருமித உணர்வுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
எழுதுவதும், படிப்பதும் ஒரு மனிதனின் அறிவுக்கு ஊற்றுப் பெருக்காக அமையுமல்லவா! நான் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாக்கள் - மற்ற எழுத்தாளர்கள், சான்றோர்கள் எழுதி நான் வெளியிட்ட நூல்களின் விழாக்கள் ஆகியவை பற்றி என் நினைவில் இருந்தவரையில் ஞாபகப்படுத்தி இருக்கிறேன். ஒரு சில விடுபட்டுக்கூடப் போயிருக்கலாம். நூல்களைப் பற்றி நான் எழுதும் இந்த நேரத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
இடைவிடாது படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா, அவரது வாழ்வின் முடிவை அறிந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அதே நேரத்திலே கூட, அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட்டுத்தான் அறுவை சிகிச்சை அறைக்குப் புறப்பட்டார் என்பது நேரில் கண்ட காட்சியாகும். அதுவும் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்றாகும்.
