நெஞ்சுக்கு நீதி
பழி போட்டு வளர்த்த பகை · 319 / 391
7. பழி போட்டு வளர்த்த பகை அவசரத்தில் தீர்ப்பு - ஆத்திரத்தில் அநீதி! ஈராக் அதிபர் சதாம் உசேனைத் தவிர்த்து விட்டு, ஈராக் நாட்டு வரலாற்றை எழுத முடியாது; இரண்டும் பின்னிப் பிணைந்திருப்பவை; இரண்டறக் கலந்திருப்பவை. வீரமும், சோகமும், எழுச்சியும், இரங்கலும் ததும்பிடும் அவருடைய வரலாற்றைப் பற்றி இந்த அத்தியாயத்திலேயே எழுதிட முற்படுகின்றேன். உலகத்தில் ஒரு பிரிவினருக்கு சதாம் உசேன் கொடுங்கோலன் - ஆனால் மற்றொரு பிரிவினருக்கு அவர் ஒரு காவிய நாயகன்.
அமெரிக்க வல்லரசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவர்தான் சதாம் உசேன். அண்டை நாடுகளான ஈராக்கும் - குவைத்தும் ஒன்றுக்கொன்று 1991ஆம் ஆண்டு சண்டையிட்டுக் கொண்டபோது - குவைத்துக்கு நண்பர் என்று கூறி, ஈராக்மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அந்தப் போரில் சதாம் உசேனின் போர் வீரர்கள் காட்டிய துணிச்சலை, அதன் தோல்விக்குப் பிறகும் உலகமே பாராட்டியது. போரில் அமெரிக்கா வெற்றி பெற்றபோதும். அதற்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைச் சந்தித்தது.
28.4.1937 அன்று ஈராக் நாட்டின் திக்ரித் நகருக்கு அருகில் உள்ள கிராமம் அல் ஆஜா. அந்த ஊரின் கடைக்கோடியில் இருந்த மண் குடிசையில் வறுமையெல்லாம் திரண்ட உருவமாக அமர்ந்திருந்தாள் சுபா தல்ஃபா. திருமணம் ஆகாதவள். ஆனாலும் நிறைமாத கர்ப்பிணி. பிள்ளையைக் கொடுத்த காதலன் உசேன் அல் மஜீத் காணாமல் போய்விட்டான் - இல்லை இல்லை - ஓடிவிட்டான். கருவினைக் கலைக்க சுபா எடுத்த முயற்சியெல்லாம் பலிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ள அவள் முயன்றும் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு விடுகிறாள்.
தாய்க்கே பிடிக்காத பிள்ளையாய்ப் பிறந்தவன்தான் சதாம் உசேன். பின்னர் வளர்ப்புத் தந்தையின் அடக்குமுறைக் கொடுமைகள். பள்ளிக்கே அனுப்பப்படவில்லை. பிறந்தது முதல் வெறுப்பையே நுகர்ந்த காரணத்தினால்தானோ என்னவோ சதாம் உசேனின் வாழ்க்கை முழுவதுமே வெறுப்பு நிறைந்ததாகவே கழிந்தது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறி தாய் மாமன் கைரல்லா தல்ஃபா என்பவரிடம் சதாம் அடைக்கலம் புகுந்தான். அப்போதுதான் அவனுக்கு சதாம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
சதாம் என்றால் அரபு மொழியில் "எதையும் எதிர்கொள்பவன்" என்று பொருள். கைரல்லா ஒரு ராணுவ அதிகாரி. ஈராக்கில் மன்னர் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி நடந்தபோது கைரல்லா கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தாய்மாமா சிறைப்பட்டதும் சதாம் மீண்டும் தாயிடம் வந்தபோது, அவள் வேறொரு கணவனுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். அந்தக் கணவன் சதாமுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சில நாட்கள் மட்டுமே சதாமினால் அந்தக் கொடுமைகளை அனுபவிக்க முடிந்தது.
பின்னர் வீட்டை விட்டு விரட்டப்பட்டு வீதிகளிலே வாழத் தொடங்கி விட்டான். ரயில்வே ஸ்டேஷனில் தர்ப்பூசணி பழங்களை விற்றான். சிறையிலிருந்து வெளி வந்த தாய்மாமா கைரல்லா. ஒரு நாள் புகை வண்டியில் வந்து இறங்கியதைக் கண்ட சதாம், ஓடிப் போய் அவரது கையைப் பற்றிக் கொண்டான். ஈரான் அதிபர் அயதுல்லா கோமெனி கைரல்லா பிறகு பாக்தாத் நகரமேயர் ஆனார். அப்போது கைரல்லாவிற்கு எதிராக தலை தூக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை சதாம் உசேன் சுட்டுக் கொன்றார்.
இதுதான் அவர் செய்த முதல் கொலை. அப்போது அவருக்கு வயது 20தான். ஆனால் வழக்கிலிருந்து தப்பி விட்டார். ஈராக் நாட்டில் இருந்த "பாத்" கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மன்னர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1958ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் கசீம் என்பவர் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் பாத் கட்சியினரைக் கொன்று குவித்தார். எனவே அவரைக் கொலை செய்ய பாத் கட்சியினர் திட்டமிட்டனர்.
அதை நிறைவேற்றும் பொறுப்பு சதாம் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொலை முயற்சியில் தோல்வியடைந்து, காலில் காயமடைந்த சதாம், வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். 1959ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஈராக்கில், ராணுவப் புரட்சியின் மூலம் பாத் ஆட்சியைக் கைப்பற்றியபோது, சதாம் ஈராக் திரும்பினார். ஆனால், எட்டு மாதங்களில் பாத் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது, பாத் கட்சியினர் சிறையிலே அடைக்கப்பட்டனர்.
சதாமும் சிறையிலே அடைக்கப்பட்டார். அவர் சிறையிலே இருந்தபோது, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1968இல் சதாம் உசேன் மூளையாகச் செயல்பட மீண்டும் புரட்சி நடந்தது. அதில் மீண்டும் பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அகமது ஹாசன் அல் - பஹர் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஹாசன் மைத்துனர்தான் சதாம். அதனால் 1973ஆம் ஆண்டு துணை அதிபராகப் பதவியேற்றார். பெயருக்குத்தான் துணை அதிபர் - ஆனால் அதிகாரம் அனைத்தும் சதாம் உசேன் கையில் தான்.
ஈரானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஷியா பிரிவு மக்களை நாடு கடத்தினார். நாட்டில் இருந்த எண்ணெய்க் கிணறுகளை தனது நேரடிக் கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்தார். அதிபரான தனது மைத்துனரையே கட்டாயப்படுத்தி, உடல் நலக்குறைவு என்று கூறி பதவி விலகச் செய்துவிட்டு, 1979ஆம் ஆண்டு தானே அதிபராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் வைத்தது தான் சட்டம் என்ற நிலைமை, கட்சிக்குள் தனக்கிருந்த எதிர்ப்பாளர்களையெல்லாம் இவரே கொன்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
1979இல் ஈரானில் அயதுல்லா கோமெனி ஆட்சியைக் கைப்பற்றினார். 1980இல் செப்டம்பர் 22ஆம் தேதி ஈராக் படை ஈரான்மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. ஈரானும் கடுமையாகத் திருப்பித் தாக்குதல் நடத்தியது. இந்தப் போர் எட்டாண்டு காலம் நீடித்தது. எட்டாண்டு காலம் நீடித்த ஈரான் - ஈராக் போர்! சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, 1982ஆம் ஆண்டு துஜைல் என்ற நகரத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரைக் கொல்ல அங்கே முயற்சி நடைபெற்றது.
ஆனால் அந்தச் சதித் திட்டத்திலிருந்து அவர் தப்பி விட்டார். அந்த நகரத்தில் ஷியா முஸ்லீம்கள் அதிகம். அவர்கள்தான் தன்னைக் கொல்ல முயன்றதாக சதாம் உசேன் நினைத்து, தனது சந்தேகத்திற்குரிய 148 ஷியா முஸ்லீம்களை ஒரே நேரத்தில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று புதைத்தார். ஈரானின் தாக்குதலைச் சமாளிக்க ஆயுதங்கள் வழங்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சதாம் உசேன் வேண்டுகோள் விடுத்தார்.
சதாமின் இரக்கமற்ற தாக்குதலைக் கண்டும் காணாமல் அந்த நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கின. ஆனால் இரண்டே ஆண்டுகளில் தாங்கள் செய்தது தவறு என்பதை அந்த நாடுகள் உணர்ந்தன. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி குவைத் நாட்டை சதாம் உசேன் ஆக்கிரமித்தார். அதனால் ஈராக்மீது ஐ.நா.பொருளாதாரத் தடை விதித்தது. 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி ஈராக்மீது அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டுப் படைகள் போர் தொடுத்தன. அமெரிக்கா நாட்டின் நவீன ஆயுதங்கள் குவைத் நாட்டிற்கு உதவியாக இருந்ததால், ஈராக் அந்தப் போரில் தோல்வி அடைந்தது.
அமெரிக்கா குவித்து வைத்துள்ள ஆட்கொல்லி ஆயுதங்கள்! 1995 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் சதாம் உசேன், ஈராக் அதிபராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். குவைத்தை ஆக்கிரமித்ததற்காக, 2002ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி சதாம் உசேன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதை குவைத் நிராகரித்தது. இதற்கிடையே, ஈராக் நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்ட ஐ.நா.
குழுவினரை நாட்டுக்குள் அனுமதிக்க சதாம் உசேன் மறுக்கவே, ஈராக் மீது அமெரிக்கா 2003ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி போர் தொடுத்தது. 10.2.2003 அன்று "அய்யோ; பாவம் அமெரிக்காவிடம் ஆட்கொல்லி ஆயுதம் எதுவுமில்லை!" என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை இதோ:- இராக் நாட்டில் இருக்கின்றதாம் "இம்" என்றவுடன் பேரழிவு ஏற்படுத்தும் எண்ணற்ற ஆயுதங்கள்! இப்படிச் சொல்லி அமெரிக்க நாடு, ஆடு விழுங்கத் துடிக்கும் ஓநாய்போல் "ஆ" வென வாய் பிளந்து நிற்குது காண்!
அய்யோ; பாவம் அமெரிக்காவிடம் ஆட்கொல்லி ஆயுதங்கள் எதுவுமில்லை! இராக்கிடம்தான் பேரழிவுப் போர்க் கருவி! இங்கே "புஷ்" வைத்திருப்பதெல்லாமே; ஜெபமாலை உத்திராட்சம் துளசிமணி! இந்த ஜெகம் வாழ நினைப்பதல்லால் வேறு நினைவில்லை! 'அய்நா சபை அனுமதிக்க இயலாது போர்' என அறுதியிட்டு உறுதியாகச் சொன்னவுடன் ஆவேசம் வந்த பூசாரி 'ஆடு கோழி ரத்தம் ஆத்தாளுக்குப் படைக்க வேண்டும் பக்தா அவற்றை உடனே கொண்டு வா' என்பதுபோல் அமெரிக்க அதிபர் ஆணையிட்டுக் கேட்கின்றார்; எண்ணை தேசத்தின்மீது போர் தொடுக்க மண்ணையாளும் மற்ற நாடுகள் வரவில்லை யென்றால் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கவா?
விண்ணைக் கிழிக்கும் ஏவுகணைகளை என்னை நம்பி நானே விடவா என்று, அன்னை பூமி முழுவதிலும் ஆதிக்கம் தேடும் அமெரிக்க நாடு விடுகின்ற அறைகூவல் அமைதி குலைக்கின்ற அர்த்தமற்ற சவால்! எத்தனை பூவும், பிஞ்சுகளும், எத்தனை மலரும், மொட்டுகளும், எத்தனை காயும், கனிகளும், எத்தனை கொடிகளும், செடிகளும் வாடி வதங்கி மரணக் குழிகளை தேடிப் போவதற்கு வழி வகுக்கும்! வேண்டுமென்று போருக்கு அழைப்பு விடுப்போர். காண்பதற்கு மியலாத கற்கோட்டையில் காவல் பலத்துடன் காத்துக் கொள்வர் தம்முயிரை- நம் உயிரோ நடுத்தெருவில் பந்தாடப்படும்- வேலையின்மை யெனும் நெருப்புத் தகிக்கின்ற வையத்தில் வேலைக்கு ஆள் தேடும் நிலை தோன்ற வேலி சூழ் இவ்வுலகின் நாடுகளில் காலியாகும் மனிதக் கூடுகள் கணக்கில் அடங்கா- வந்த சண்டை கண்டு விலகுவது வீரமல்ல; அதற்காக வலுவில் சண்டைக்குப் பாக்கு வைப்பது விவேகமல்ல!
'விவேகபுரி விஞ்ஞானபுரி' என்று அமெரிக்கா விளம்பரங்கள் செய்தால் மட்டும் போதாது; விவேகமும், விஞ்ஞானமும் ஆக்கப் பணிகள் வேர் விட்டு விழுது விட்டுக் கிளைப்பதற்குத் தான் வேலி, விழுதில், விஷநீர் ஊற்றி வீழ்த்த அல்ல; உலகை விசாரத்தில் ஆழ்த்த அல்ல!
இந்தக் கவிதை மட்டுமல்ல; 7.4.2003 அன்று "முரசொலி"யில் கடிதம் ஒன்றும் "ஈராக் பற்றி எழுதியிருந்தேன். அது வருமாறு:- உடன்பிறப்பே, பேரழிவு ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை ஏராளமாகக் குவித்து வைத்திருக்கிறது ஈராக் - எனவே அந்த ஆயுதங்களை ஈராக் ஒப்படைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது அமெரிக்கா. அதற்கு ஐ.நா. மன்றம் முதலில் தயங்கி; பிறகு தலையசைத்தது - ஐ.நா. செயலர் கோபி அன்னான் அவர்களும் தன் மனதுக்குள் 'இது தேவையா' என்று கேட்டுவிட்டு; அதன் பின்னர், அமெரிக்காவின் சோதனைக்கு ஈராக் இணங்க வேண்டும் என்று கருத்துதிர்த்தார்.
இராணுவத்துறை அதிகாரிகள் என்ன; விஞ்ஞானிகள் என்ன; ஆராய்ச்சியாளர்கள் என்ன; இப்படி பல்வேறு துறையைச் சார்ந்த அமெரிக்கப் பிரமுகர்கள் ஈராக்கிற்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் - சோதனை நடத்தினர். முடிவாக அவர்கள் கூறியது, "எமது சோதனையில் பேரிழப்புப் போர் ஆயுதங்கள் எதுவும் காணப்படவில்லை" என்பதாகும். ஆனால், அந்தச் சோதனையின் முடிவு பற்றிய அறிவிப்புகளை அமெரிக்கா நம்பத் தயாராக இல்லை! எனவே மீண்டும் மீண்டும் அந்தப் பயங்கர ஆயுதங்கள் பற்றியே பேசப்பட்டது.
போதாதற்கு அந்த நேரம் ஈராக்கின் வீர முழக்கங்கள்; அமெரிக்கா மீதும் அந்த நாட்டுடன் இந்தப் போருக்காக இணைந்த நாடுகள் மீதும் வீசப்படும் குண்டுகளாக வெடிக்கத் பேரழிவு ஆயுதங்களை ஈராக் குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தொடுத்த போர் தொடங்கின. "ஒரு நாயைக் கொல்வதாக இருந்தால் கூட, அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று காரணம் கூறு" எனப் பழமொழி இருக்கிறதல்லவா? அந்தப் பழமொழியை அப்படியே பின்பற்றி அமெரிக்கா, ஈராக்கின் வசம் உள்ள பேரழிவுப் போர்க் கருவிகள் குறித்தே தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்து எடுத்து வைத்து வந்தது.
ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி, உயிர்க் கொல்லிக் கருவிகளைப் போரில் பிரயோகித்து ஈராக் போரிடப் போகிறது - அதனாலேதான் ஈராக்கை அழிக்க விரும்புகிறது அமெரிக்கா என்று உலகம் முழுவதும் செய்தி பரப்பப்பட்டது. 'அப்படியொரு திட்டம் தன்னிடமில்லை' யென்று ஈராக் இடைவிடாது சொல்லி வந்தபோதிலும்; ஐ.நா. மன்றத்தின் அபிப்பிராயத்தையும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா; ஈராக் களத்தில் கால் வைத்துவிட்டது.
ஆரம்பப் பள்ளிகளில் ஆட்டுக்குட்டி ஓநாய் கதை படித்திருக்கிறோம். "நான் குடிக்கும் தண்ணீரை ஏன் கலக்கினாய்?" - இது ஓநாய் கேள்வி "வீண் பழி போடுகிறாய்! நீ வாய்க்காலின் மேட்டுப் பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்கிறாய். நான் கீழ்ப் பகுதியிலிருந்து குடிக்கிறேன். எப்படிக் கலக்க முடியும்?"
- இது ஆட்டுக் குட்டி பதில். "எந்தப் பகுதியானால் என்ன? நான் குடிக்கும் நீரை, நீ கலக்குகிறாய்! கலங்கிய நீரையே நான் குடிக்க வேண்டியுள்ளது." "யாரை வேண்டுமானாலும் கேட்போம். அவர்கள் நியாயத்தைச் சொல்லட்டும். வாய்க்காலில் கீழே தண்ணீர் குடிக்கும் நான் மேலே நிற்கும் தாங்கள் குடிக்கும் தண்ணீரைக் கலக்க முடியுமா?"
"அடேய்; அற்பப் பதரே! நான் குடிக்க வேண்டிய தண்ணீரை இன்றைக்கு நீ கலக்காமல் இருக்கலாம்- ஆனால் உன்னுடைய பாட்டனோ பாட்டியோ அந்தப் பகுதியில் தண்ணீரைக் கலக்கி யிருக்கலாம் அல்லவா? அதற்கான தண்டனையை நீ இப்போதே ஏற்பதே முறை." என்று சொல்லிக் கொண்டே ஓநாய், ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, அதை விழுங்கி ஏப்பமிட்டது. இந்தக் கதை இப்போது ஈராக் - அமெரிக்கா நடத்தும் போருக்கும் பொருந்துகிறதல்லவா? ஏறத்தாழ ஈராக்கை ஏப்பம் விட்ட நிலையில்தான் போரின் போக்கு போய்க் கொண்டிருக்கிறது.
"ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அதனால்தான் போர் நடத்துகிறோம்" என்று அமெரிக்கா சொன்னது ஓநாய்க்குக் கிடைத்தது போன்ற ஒரு போலிக் காரணமே தவிர, உண்மைக் காரணமல்ல. உண்மையிலேயே ஈராக்கிடம் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் இருந்தால், அவற்றில் ஒன்றிரண்டையாவது அந்த சதாம் உசேனின் 12 ஆடம்பர அரண்மனைகளில் இதுவும் ஒன்று! நாட்டுப் போர்ப் படையினர் பயன்படுத்தியிருப்பார்கள் அல்லவா? அப்படிப் பயன்படுத்தியதாகவே செய்தி இல்லை - இதிலிருந்தே ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் எதுவும் எப்போதும் இல்லை என்பது தெளிவாகிறது.
அத்தகைய அழிவு ஆயுதம் இருந்திருந்தால் ஈராக் இந்த நிலைமையில் அதைப் பயன்படுத்தியிருக்குமே! அந்த ஆயுதம் இல்லை - ஆகவே பயன்படுத்தவில்லை! அழிவுக்கான எந்த ஆயுதத்தையும் ஈராக் பயன்படுத்தாததிலிருந்து, இது அமெரிக்காவும் சில நாடுகளும் போர் நடத்துவதற்காகப் புனையப்பட்ட பொய் என்றே கருத வேண்டியிருக்கிறது. இக்கடிதம் உன் கைக்கு வந்து சேருவதற்குள்ளாக ஈராக் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகலாம்.
அல்லது மேலும் சில நாட்களாகலாம். முடிவாக சதாம் உசேன் சங்கிலியில் பிணைக்கப்படலாம்- அல்லது ஆவி போக்கப்படலாம்- அதற்காக அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஈராக் மக்களின் எதிர்கால வாழ்வு எந்த அளவு அஸ்தமித்த
ு விட்டிருக்கிறது என்பதையும் - எத்தனை குடும்பங்கள் கணவனையோ - தந்தையையோ - தமையனையோ - தனயனையோ - தாய் தமைக்கைகளையோ - குழந்தைகளையோ இழந்து விட்டு குமுறிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நெஞ்சில் விழுந்துள்ள அந்தத் துன்பச் சுமையைத் தாங்கும் வலிமை ஒரு சிறிதுமில்லை என்பதுதான் உண்மை. "போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்" என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள், என் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
'அமைதியான வளம் நிறைந்த புதிய ஈராக்கை அந்த மக்களுக்கு அமைத்துத் தருவோம்' என்று அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் அறிவித்துள்ளன. நாளை வரப்போகிற அமைதிக்காக, வளத்திற்காக இன்றுள்ள அமைதியை அழித்து வளத்தை வீழ்த்த வேண்டுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிற கதை போலன்றோ ஆயிற்று! இதற்குப் பின்னர் ஈராக்கில் கடுமையாகப் போர் நடைபெற்றது. போரின் முடிவாக, 2003 ஏப்ரல் 9ஆம் தேதி ஈராக் நாடு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது.
உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக சதாம் உசேன் தப்பித்து ஓடினார். எட்டு மாதங்கள் எங்கிருக்கிறார் அவர் என்றே தெரியவில்லை. ஈராக்கைக் கூட்டுப்படைகள் ஆக்கிரமித்தபின், சதாம் உசேன் மற்றும் அவரது மகன்கள் ஒளிந்துள்ள இடங்களைத் தேடி அழிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஜூலையில் சதாமின் இரண்டு மகன்களும் கொல்லப்பட்டபோதே, சதாமும் பிடிபட்டு விடுவார் என்று கருதப்பட்டது. எனினும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சதாம் உசேன் மூன்று திருமணங்கள் செய்தவர். அவருக்கு ஆறு பிள்ளைகள். அதிபராக இருந்தபோது, சதாம் உசேனுக்கு 12 ஆடம்பர அரண்மனைகள் இருந்தன. அவர் எப்போது எங்கு தங்கியிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. சதாம் உசேன் புத்தகப் பிரியர். தொலைக்காட்சி பார்ப்பதிலும் அலாதிப் பிரியம் கொண்டவர். அவர் அதிகமாகப் பார்ப்பது அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் பி.பி.சி. ஸ்கை ஆகிய தொலைக்காட்சிகளைத்தான்.
14.12.2003 அன்று அமெரிக்க அரசின் சார்பில் "லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்! நாங்கள் அவரைப் பிடித்துவிட்டோம். அந்த சர்வாதிகாரி இப்போது ஒரு கைதி!" என்று பத்திரிகையாளர்களிடையே திரையில் ஒரு காட்சி ஒளிபரப்பப்பட்டு - சிக்குப் பிடித்த தலை -கறுப்பும் வெள்ளையுமான தாடி - புருவத்திலே ரத்தக் காயத்தோடு அந்த உருவத்தைக் காட்டியபோது, இருபது ஆண்டுகளுக்குமேல் ஈராக்கைக் கட்டியாண்ட அதிபர் சதாம் உசேன்தானா அவர் என்பதை பத்திரிகையாளர்களே நம்ப மறுத்தனர்.
'எட்டு மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த அவர் எப்படி பிடிபட்டார்' என்பதே உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. படையினரிடம் பிடிபட்ட சதாமின் ஆட்கள், சதாமின் உறவினர்கள், சதாமுக்கு எதிராகப் போராடிய குர்த் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சதாம் உசேனின் இரண்டு மகன்கள் மூலமாக சதாமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சி பலன் கொடுத்தது. திக்ரித் நகரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை வீட்டருகே இருந்த சுரங்க வீட்டிற்குள் இறங்கிய படையினர், அழுக்கடைந்த தோற்றத்துடன் இருந்த அந்த மனிதரை நோக்கி துப்பாக்கி முனையை நீட்டிட - "நான் சதாம் உசேன் - ஈராக் குடியரசின் அதிபர்" என்று கம்பீரமாகக் குரல் ஒலித்தது.
சதாம் பிடிபட்ட செய்தியை உடனடியாக அமெரிக்கா வெளியிடவில்லை. அவரைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட பல பேர் இருக்கலாம் என்றும், எனவே இவர் உண்மையானவர்தானா என்பதை அறிந்திட டி.என்.ஏ. சோதனை நடத்தினர். சதாம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதில் முக்கியமானது. துஜைல் நகரத்தில் 148 ஷியா முஸ்லீம்களைக் கொலை செய்தார் என்பதாகும். இந்தப் படுகொலை தொடர்பாக சதாம் உசேன், துணை அதிபராக இருந்த தாகா யாசின் ரமதான், சதாமின் ஒன்றுவிட்ட தலைவருமான பர்சான் இப்ராகிம், இராக்கில் முன்பு இருந்த புரட்சிக் கோர்ட்டின் தலைவர் அவாத் ஹமீத் அல் - பந்தர் உள்ளிட்ட எட்டு பேர்மீது பாக்தாத் நகரில் உள்ள நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி ராப் அப்துல் ரகுமான் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட தனி நீதி மன்ற பெஞ்ச் சதாம் உசேன் மீதான வழக்கை பத்து மாதங்கள் விசாரித்து - இறுதியாக 5.11.2006 அன்று அந்த வழக்கில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறப்பட்டது. பதுங்குக் குழியிலிருந்து கைது செய்யப்பட்ட சதாம் உசேன் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நீதிமன்றத்தில் அவரை எழுந்து நிற்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், சதாம் அதைக் கேட்காமல் உட்கார்ந்தே இருந்தார். எனவே இரண்டு நீதிமன்ற அலுவலர்கள் அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். 'மரண தண்டனை' என்று நீதிபதிகள் கூறியதும், "இறைவன் மிகப் பெரியவன்! ஈராக் தேசமும் மக்களும் நீடுழி வாழ்க! எதிரிகளுக்கு மரணம் நிகழட்டும்!"
என்று உரத்த குரல் எழுப்பினார். தனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்த்து, அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "எனக்கு மரண தண்டனை விதிப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. பயம் ஏதும் இல்லாமல் மரணத்தை நான் சந்திப்பேன். கவுரவத்தோடும், பயம் இல்லாமலும் நான் எனது நாட்டுக்காகவும், அரபு நாடுகளுக்காகவும் மரணத்தைத் தழுவுவேன். ஆனால் ஒரு நாள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகள் தோல்வியடைந்து புறமுதுகிட்டு ஓடும்.
வியட்நாமில் தோல்வி அடைந்தது போல ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் தோல்வி அடையும். இன்னும் சில நாட்களில் ஈராக்கில் ரத்த ஆறு ஓடும். வியட்நாமில் அமெரிக்கப் படைக்கு ஏற்பட்ட தோல்வியை, ஈராக்கில் ஏற்படவிருக்கும் தோல்வி சிறியதாக்கிவிடும். ஏதோ பிக்னிக் போவது போல வந்த அமெரிக்கர்கள் இப்போது அதிக சேதம் அடைந்து தவிக்கிறார்கள். ஈராக்கின் வரலாற்றை வைத்துச் சொல்கிறேன். ஈராக் மக்கள் என்றுமே தங்கள் மீதான ஆக்கிரமிப்பை ஏற்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிடிபட்டது உண்மையான சதாம் உசேனா? அமெரிக்கா நடத்திய டி.என்.ஏ. சோதனை! அமெரிக்க அதிபர் புஷ் "ஈராக் மக்களுக்கு நல்ல நாள்" என்று கூறினார். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து கூறும் போது, "இந்த வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் மற்றும் மரண தண்டனைகள், வெற்றி பெற்றவர் வைத்ததே சட்டம் என்பது போலத் தோன்றக்கூடாது. நம்பத் தகுந்த சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஈராக் மக்கள் மற்றும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும்.
ஈராக் பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஈராக் மக்களின் துன்பங்களை அதிகரித்து விடாது என்று நம்புகிறோம்" என்று கூறினார். தீர்ப்பை எதிர்த்து சதாம் உசேனும் மற்றும் மூவரும் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். அதனை ஒன்பது நீதிபதிகள் கொண்ட மேல் கோர்ட் பெஞ்ச் விசாரித்து, 26.12.2006 அன்று சதாம் உசேனுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து, 30 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பு கூறப்பட்டது.
ஆனால், முப்பது நாட்கள் காத்திருக்கக்கூட பொறுமையில்லை. 30.12.2006 அன்று காலையில் சதாம் உசேனை அவர் தங்கியிருந்த அறையிலிருந்து தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றனர். தாடியுடன் காணப்பட்ட அவர் கோட்டு சூட்டு அணிந்திருந்தார். தூக்கு மேடைக்குச் சென்றதும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பற்றிய அறிக்கை படித்துக் காட்டப்பட்டது. அது முடிந்ததும், சதாம் உசேனின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது.
தூக்குக் கயிறை மாட்டும் முன், அவரது கழுத்தைச் சுற்றி அவசரத்தில் தீர்ப்பு- ஆத்திரத்தில் அநீதி பட்டை போன்ற கறுப்புத் துணி ஒன்றைப் போட்டு முகத்தை மூடமுயன்றனர். ஆனால், அவர் தன்னை அவ்வாறு மூடக் கூடாது என்றும், முகத்தை மூடாமலேயே தூக்கில் போடுமாறும் கூறி, பின்னர் அதிகாரிகள் சைகை செய்ததும், தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குக் கயிற்றில் தொங்கிய சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அப்போது ஈராக்கில் நேரம் காலை 6 மணி - இந்திய நேரம் காலை 8.30 மணி.
மரண தண்டனை மனித வாழ்நாளின் சில பக்கங்களைக் கிழித்து விடுகிறது. சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு ஷியா முஸ்லீம்கள் மகிழ்ச்சி தெரிவித்த போதிலும், சன்னி முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கார் குண்டு வெடிப்புகள் நடந்தன. 50க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்தது. சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து நான் 30.12.2006 அன்று எழுதியது.
"மரண தண்டனை மனித வாழ்நாளின் சில பக்கங்களைக் கிழித்து விடுகிறது. பிழை மலிந்த அப்பக்கங்களுக்குப் பதிலாக திருத்தப்பட்ட புதிய பதிப்பு வெளிவர முடியாமலேயே செய்து விடுகிறது. இது, சாதாரண மனிதருக்கு மட்டுமல்ல; சர்வாதிகாரிகளுக்கும் பொருந்தக்கூடிய வாசகம்தான்- சதாம் உசேனுக்கும்கூட! ஈராக் கொடியை இறக்கி விட்டு அமெரிக்கக் கொடியை ஏற்றும் அமெரிக்க ராணுவம் என்று கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே (7.11.2006) "முரசொலி"யில் எழுதினேன்.
மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கைவிடப்பட வேண்டிய அந்த மரண தண்டனை - சதாம் உசேனை மாவீரனாக்கிவிட்டது. அவர் ஆட்சியில் மலைபோல மனித உடல்கள் குவிக்கப்பட்டதே என்பர்; கலிங்கத்துப் போரிலே கணக்கற்ற உயிர்களைப் போக்கிய பிறகுதானே அசோகர் பௌத்தரானதாக வரலாறு? அந்த அசோகச் சின்னம் தானே இந்தியாவின் கீர்த்தியைப் பாடிக் கொண்டிருக்கிறது? போரில் தோற்ற போரஸ் மன்னனிடம் அலெக்ஸாண்டர் நடந்து கொண்ட முறையை; சதாம் உசேன் பிரச்சினையில் அமெரிக்கா பின்பற்றியிருக்கலாம்.
வெறி குணத்தைக் காட்டி வெகு மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. "அவசரத்தில் தீர்ப்பு - ஆத்திரத்தில் அநீதி!" "எது வந்தாலும் வரட்டும் - அந்நியருக்கு அடி பணியோம்" என்ற சுதந்திர தாகத்துடன் போரிட்ட ஈராக் நாட்டைப் பற்றியும் - அந்த நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அதிபர் சதாம் உசேன் தண்டனையுடன் முடிந்தும் முடியாத அந்த வரலாற்றை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மீண்டும் 96ஆம் ஆண்டிற்கு அடுத்த அத்தியாயத்தில் வருகிறேன்.
