நெஞ்சுக்கு நீதி
மதுவிலக்கு மாயை · 316 / 391
4. மதுவிலக்கு மாயை மகாத்மா காந்தியின் பேரனாக இருந்தால்கூட மதுவிலக்குக் கொள்கையில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியாது என்ற பாராட்டைப் பெறுகிற அளவுக்கு சிலர், இன்று தமிழக அரசியல் அரங்கில் உரத்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தத் தொடரில் சிறிது, "மதுவிலக்கு" புராணம் பாடலாம் என்று கருதுகிறேன். "மது வீட்டையும் கெடுக்கும்-நாட்டையும் கெடுக்கும்" என்று பளிச்சிடும் அறிவிப்புகளைப் பார்க்கும்போது, அந்த வாசகத்தில் ஓர் எழுத்துக்கூட தவறு என்று எண்ணுகிறவனல்லன் நான் - ஒருவன் குடிக்கத் தொடங்கி; பிறகு குடியே அவனைக் குடிக்கத் தொடங்கி, பின்னர் அதுவே அவன் வாழ்வை முடிக்கச் செய்த கொடுமைகளை நான் அனுபவரீதியாகவே அறிந்து அழுது புலம்பியிருக்கிறேன் - அப்படி நாசமானவர்கள் நண்பர்களாகவும் - நல்ல உறவினர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள் - மதுப் பழக்கம் எப்படியெல்லாம் மனித உயிர்களைப் பிராண்டி வீழ்த்துகிறது என்பதையும் விழித்துக் கொண்டோர் அதன் பிடியிலிருந்து மீண்டு பிராணனைக் காப்பாற்றிக் கொள்வதையும்கூட கண்டிருக்கிறேன்.
அண்ணாவின் இயக்கத்தில் இணைந்திருந்து பின்னர் இரண்டு இயக்கங்களாகப் பிரிந்து, அவற்றில் ஒன்றான அ.தி.மு.க.வின் தலைவர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், தி.மு.க. தலைவராகிய நானும் மதுவிலக்குக் கொள்கையை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள்தான் - ஆனால் நாட்டு நடப்பும், மனிதர்களின் மனப்போக்கும் எங்கள் உறுதிக்கு உரமாக அமையவில்லையே? அதை விளக்கவும், விமர்சிக்கவும் இந்தக் கட்டுரைத் தொடரில் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த "ஐந்தாம் பாகம்" தொடரை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே; மதுவிலக்குச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று "திடீர் மகாத்மாக்கள்" திடுமெனப் புறப்பட்டுள்ள இந்த நேரத்தில், மூன்று நேரத்தில், மூன்று நாட்களாக தமிழகத்தில் வெளி வரும் அனைத்து ஏடுகளிலும், பரபரப்பான ஒரு செய்தி பற்றி கவனத்தைத் திருப்ப வேண்டி வந்துவிட்டது. விஷச் சாராயத்துக்கு 19 பேர் பலி - 24 பேர் பலி - 50 பேர் பலி- என்று தொடர்ந்து ஒவ்வொரு பத்திரிகையிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தின் எல்லையோரப் பகுதி ஒசூர். அங்கே பின்னமங்கலம் என்ற கிராமத்திலும் - அதற்கு மிக அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கிராமங்களிலும், விஷச்சாராயத்தைக் குடித்தவர்கள் - தமிழ்நாட்டைச் சேர்ந்த 51 பேரும் - கர்நாடகத்தைச் சேர்ந்த 106 பேரும் பலியாகியுள்ளார்கள். 157 பேரைப் பலி கொண்ட இந்த "மது சுனாமி" மையம் கொண்டது கர்நாடக மாநிலத்தில்! மரண ஓலம் தமிழகத்திலும்! சம்பவம் நடந்த பின்னமங்கலம் கிராமத்தில், மருத்துவர்கள் அசோகன் மற்றும் அமரேஷ்வதி ஆகியோர் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து, முடிந்தவரை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) நாகராஜன், ஓசூர் சார் ஆட்சியர் நாகராஜன், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சின்னராஜு தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் மற்றும் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மேலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த முன்னணியினர் அங்கே முகாமிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும், உதவிகளை வழங்கியும் வருகிறார்கள்.
விஷச் சாவுகள் குறித்து டி.ஐ.ஜி. செண்பகராமன் விசாரணை நடத்தி, தளி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் உட்பட 12 பேரைக் கூண்டோடு கிருஷ்ணகிரி ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பலியான அனைவரும் கர்நாடக மாநில எல்லையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டுப் பலியானார்கள் என்று தெரிய வந்துள்ளது. பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே உள்ள கல்லுப்பள்ளியிலிருந்து சாராயம் கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இவரது கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார். விஷச் சாராயத்தைக் காய்ச்சி விற்றவர் கர்நாடக ஆனைக்கல்லைச் சேர்ந்த எல்லப்பா என்றும், அவர் தலை மறைவாகி விட்டதாகவும், அவரைக் காவல் துறையினர் தேடி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. 'யார் ஆட்சியிலே இருக்கிறார்கள்' என்ற பாகுபாடு பார்க்காமல், எந்த ஆட்சி பொறுப்பிலே இருந்தாலும் ஒருசில ஆண்டுகள் இடைவெளியில் இது போன்ற விஷச் சாராயம் அருந்தி 30 பேர் இறந்தார்கள் - 40 பேர் இறந்தார்கள் என்ற செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.
உடனே அதனை எடுத்து வைத்துக் கொண்டு மதுவிலக்கைத் தீவிரமாக அமல் நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள். அண்மையிலேகூட நம் தமிழகத்திலே மதுவிலக்கினைக் கொண்டுவர வேண்டுமென்ற குரல் ஒலிப்பதற்குப் பதிலளிக்கும் வகையில், அந்தக் குரலுக்கு எதிரொலியாக மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர்.பாலு 3.3.2008 அன்று விடுத்த அறிக்கையில், மது அருந்தக் கூடாதுதான்! ஆனால், மதுவிலக்கைவிட மனமாற்றத்தை உண்டாக்குவதே சிறந்தது!
"மதுவிலக்குப் பிரச்சினை தமிழகத்திற்கு மாத்திரம் உரியதோ அல்லது வருவாயை மட்டும் பொறுத்ததோ அல்ல. இது அகில இந்தியப் பிரச்சினை. இந்தியாவில் மாநிலங்களிலும் மது விற்பனை செய்யப்படும்போது, தமிழ் நாட்டில் மட்டும் ரத்துச் செய்தால் தமிழகமெங்கும் கள்ளச் சாராயம் பெருகும். இதனால் பல உயிர்களை இழக்க நேரிடும்" என்று கூறியிருந்தார்.
கடந்த காலத்தில் மதுவிலக்கு கடுமையாக அமல் நடத்தப்பட்டபோது - மதுவிலக்குச் சட்டத்தை மீறியதற்காக இலட்சக்கணக்கானவர்கள் சிறை சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்ததை - அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தந்த புள்ளி விவரத்தைச் சுட்டிக்காட்டி இருந்தார், டி.ஆர்.பாலு தனது அறிக்யிைலே! "மதுவிலக்கினை அமல்படுத்தியதால், கள்ளச் சாராய வழக்கில் தமிழகத்தில் இரண்டு இலட்சம் பேர் சிறை புகுந்ததாக அறிவித்து, தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று 'ஆனந்த விகடனி'லே எம்.ஜி.ஆர்.
எழுதிய கட்டுரையை ஆதாரம் காட்டியிருந்தார், தம்பி பாலு. எம்.ஜி.ஆர். தந்த புள்ளி விவரம் என்ன? அவர் அப்படி ஒரு புள்ளி விவரத்தை ஆனந்த விகடனிலே எழுத வேண்டிய அவசியம் என்ன? 28.3.1990 அன்று, தமிழக சட்டப் பேரவையிலேயே ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய கருத்துக்களையெல்லாம் எடுத்து வைத்து நான் உரையாற்றியிருக்கிறேன். அதில் ஒரு பகுதி வருமாறு: "மிக முக்கியமாக அவையிலே பேசப்பட்டது மதுவிலக்குப் பிரச்சினையாகும்.
1971ஆம் ஆண்டு கருணாநிதிதான் இந்த அநியாயத்தைச் செய்தான். அது வரையிலே மது என்றால் என்ன என்று ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்தது" என்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட - இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உட்பட - மற்றும் மதுவிலக்கைத் தீவிரமாக ஆதரிக்கின்ற நண்பர்கள் அனைவரும் உணர்ச்சிப் பூர்வமாக இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
"1971ஆம் ஆண்டிலேதான் மது விலக்கை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கின்ற ஒரு அறிவிப்பை நான் அறிவித்தேன். 71-இல் என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல -கோவையிலே நடைபெற்ற பொதுக்குழுவிலேதான் மதுவிலக்கை ஒத்தி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அரசுக்கு அனுப்பப்பட்டு, அது ஆராயப்பட்டு, பிறகு அந்தத் தீர்மானம் செயல் வடிவம் பெற்றது.
"1971-க்கு முன்பே, 13.9.69 "மாலைமுரசு" பத்திரிகையில் நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையை இந்த அவையிலே உறுப்பினர்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவது நலம் என்று கருதுகின்றேன். அவரின் இந்த அறிக்கை ஆனந்தவிகடன் வார இதழில் வெளியான "நான் ஏன் பிறந்தேன்?"
என்ற தொடர் கட்டுரையில் 62ஆவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. "மதுவிலக்கு குறித்து 13.9.1969இல் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மதுவிலக்குக் கொள்கையில் முதல்வர் கலைஞருக்கு அதிக அக்கறையும் பிடிப்பும் உண்டு! "மதுவிலக்கு அமலில் இருந்தாலும் 'பர்மிட்' உள்ள பணக்காரர்கள் சட்டத்தின் உதவியோடு சாதாரணமாகக் குடிக்கிறார்கள். ஏழைகளும் மதுக்கஷாயம் போன்றவற்றைச் சட்டத்தின் உதவியோடு குடிக்கிறார்கள்.
இவை இரண்டையும் மதுவிலக்குச் சட்டம் தடை செய்ய இயலவில்லை. 'பர்மிட்'டுக்கு மாநில அரசும், மதுக்கஷாயத்துக்கு மத்திய அரசும் தடை போடவில்லை. இருந்தாலும் மதுவிலக்குச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில் சிலருக்கு தண்டனைகூட கிடைக்கின்றது. ஆனால், மதுவிலக்கினால் எந்தத் தீமையும் குறையவில்லை. எந்தத் தீமையைப் போக்க மதுவிலக்கு கொண்டு வரப்பட்டதோ, அது முன்பைவிட இப்போது அதிகமாக உள்ளது. குடிப்பவர்கள் தங்களையும் கெடுத்து, தங்கள் குடும்பங்களையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
மதுவிலக்கைக் கைவிட எம்.ஜி.ஆர் முன்வந்தார். அது அவராக எடுத்த முடிவல்ல. மதுவிலக்கினால் ஏற்பட்ட தோல்வி, அவரை அந்த முடிவுக்குத் துரத்தியது. "மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்தப்பட, 'பர்மிட்'டுகளையும் மதுக்கஷாயத்தையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்கள் மதுவினால் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பெற்று வருகின்றன.
ஆனால், தமிழ்நாடு அந்த நட்டத்தை ஏற்றுக் கொண்டே வருகிறது. ஆனால், யாருமே மது அருந்தாதிருக்கச் செய்ய முடியாத நிலையில் உள்ளது. பணம் இருந்தாலும் இலட்சியம் பூரணமாக நிறைவேறியபாடில்லை. "மேலே கூறப்பட்ட கருத்தும் கொள்கையும் என்னுடையவை மட்டுமல்ல - தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இவைகள் உடன்பாடானவையே ஆகும். அவருக்கு மாறுபாடு இருக்குமானால், எனது அந்த அறிக்கைக்கு மாற்று அறிக்கை விடுத்திருப்பார்.
ஆகவே கலைஞர் அவர்களின் கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒன்றுதான். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும்." "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல - இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையைவிட, அந்தக் கொள்கை, மக்களுக்குத் தேவையானது என்ற லட்சியப் பிடிப்பைவிட, தி.மு.கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு மதுவிலக்குப் பிரச்சினை தமிழகத்துக்கு மட்டும் உரியதோ - அல்லது வருவாயைப் பொறுத்தோ அல்ல.
அது அகில இந்தியப் பிரச்சினை. அதிக அக்கறையும் அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்!" - என்று என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அன்றைக்குச் சொன்னார். அந்த நீண்ட தொடரில் அப்போதே, புள்ளி விவரங்களைக் கொடுத்து, 1971க்குப் பிறகுதான் மக்களே குடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு தலைமுறைக்கே கள் என்றால் என்ன வென்று தெரியாது என்றெல்லாம் சொல்லப்பட்ட வாதங்கள் பொடிப்- பொடியாக நொறுங்க, எம்.ஜி.ஆர்.
அவர்கள் ஆனந்த விகடன் பத்திரிகையிலே எழுதிய புள்ளி விவரங்களையும் இங்கே குறிப்பிடுகிறேன். மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கையை எம்.ஜி.ஆர். எழுதியிருக்கின்றார். கண்டு பிடிக்காத குற்றங்கள் வேறு. பதிவு செய்யப்படாத குற்றங்கள் வேறு. கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை: 1961இல் 1,12,889 குற்றங்கள் (அதாவது நான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வராததற்கு முன்பே மதுவிலக்கு அமலில் இருந்தபோது, 61ஆம் ஆண்டு 1,12,889 பேர் குற்றங்களிலே சிக்கியிருக்கின்றார்கள்.
சிக்காதவர்கள் வேறு). இதில் தண்டனை வழங்கப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 91,955. ஆண்டு பதிவு செய்த குற்றங்கள் தண்டனை தரப்பட்டவை 1,29,977 1,10,701 1,23,006 1,12,760 1,37,714 1,19,302 1,65,052 1,45,056 1,89,548 1,72,528 1,90,713 1,71,541 2,53,607 2,23,276 3,06,555 2,55,997 3,72,472 3,37,966 இப்படியொரு கணக்கை அன்றைக்கே நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த விகடன் பத்திரிகையிலே எழுதியிருக்கிறார்.
எனவே "71க்குப் பிறகுதான் ஒரு தலைமுறைக்கே "மது" என்றால் என்னவென்று தெரியும். அதற்கு முன்பெல்லாம் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சோமா, சுரா என்ற பானங்களின் பெயர்கள்தான்! கள்ளையும், சாராயத்தையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது கருணாநிதிதான்" என்று சொன்ன வாதத்தை நொறுக்குகின்ற வகையிலேதான் எம்.ஜி.ஆர்.
அவர்கள் இந்தப் புள்ளி விவரத்தை அன்றைக்கே ஆனந்த விகடன் பத்திரிகையில் தந்திருக்கிறார். 1971-ஆம் ஆண்டிலேதான் சட்டம் வருகின்றது. 69ஆம் ஆண்டிலேயே அதைப்பற்றி எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார் என்றால், இது கலைஞருக்கும் உடன் பாடான விஷயம்தான் என்று எம்.ஜி.ஆரே எழுதியிருக்கிறார் என்றால் - அது ஆழமாகவும் அக்கறையுடனும் அறிவுப் பூர்வமாகவும் விவாதிக்கப்பட்ட விஷயம் என்று தெளிவாகிறதல்லவா? 1971லே தி.மு.கழக ஆட்சியிலே சிறிது காலம் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டு, கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, 1977லே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். ஒரு சில ஆண்டுகள் மது விலக்கை அமல்படுத்தப்படாத பாடுபட்டார். மதுவிலக்கைக் கடுமையாக நடைமுறைப்படுத்த அவரது ஆட்சியில் மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தத்திற்கு மேல் திருத்தம் கொண்டு வரப்பட்டது! மதுவிலக்கு சட்டத்தின்கீழ் ஒருமுறை பிடிபட்டால் 3 வருடம் சிறைத்தண்டனை - இரண்டாவது முறையாக அதே குற்றத்தை செய்தால் 7 வருட சிறைத் தண்டனை - மூன்றாவது முறை குற்றம் செய்து பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் - என்றெல்லாம் மிக மிக மிகக் கடுமையாகச் சட்டமன்றத்திலேயே பேசினார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தினை விடக் கடுமையாக மதுவிலக்கை அமல் செய்ய தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்தார் எம்.ஜி.ஆர். என்ன நடந்தது? மதுவிலக்கு அமலில் படுதோல்வியை ஏற்றுக் கொண்டு, சாராயக்கடை ஏலம் என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர். "குடித்தவனைத் திருத்துவது என்பது தண்ணீருக்குள் மறைந்திருப்பவனை விளக்கு கொண்டு தேடுவது மாதிரி- எனவே, இது முடியாத காரியம்" என்கிறார் வள்ளுவர்!
அதேசமயம் அவரது அரசின் அமைச்சர்களான நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மதுவிலக்கை அமல் நடத்துவதில் ஏற்படும் சங்கடங்களையும் - எவ்வளவுக் கெவ்வளவு தீவிரமாக அமல் நடத்த முயற்சிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு குடிப்பவர்கள் - கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் - மது விலக்கை முழுமையாக அமல் நடத்த முடியுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகி வருகிறது என்றும் பேச ஆரம் பித்தார்கள்.
அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் - 1981இல் எம்.ஜி.ஆரும் பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததன் எ
திரொலியாக மதுவிலக்கைக் கைவிட முன் வந்தார்! அது அவராக எடுத்த முடிவு என்பதை விட - மதுவிலக்கின் தோல்வி அவரை அந்த முடிவுக்குத் துரத்தியது என்பதே சரியாக இருக்கும்! அ.தி.மு.க. ஆட்சியிலே ஒரு அவசரச் சட்டமல்ல - இந்த மதுவிலக்குக் கொள்கையிலே ஐந்து அவசரச் சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். 23.5.1981 அன்று ஒரு அவசரச் சட்டம், தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாவது திருத்த) அவசரச் சட்டம், 1981 என்பது அதற்குப் பெயர்!
அதையடுத்து 20.7.1981 அன்று மீண்டும் ஒரு அவசரச் சட்டம். தமிழ்நாடு மதுவிலக்கு (மூன்றாவது திருத்த) அவசரச் சட்டம். இந்த இரண்டு அவசரச் சட்டங்களும் பின்னர் சேர்ந்து ஒரே சட்டமாக கொண்டு வரப்பட்டது. பின்னர், 1.12.1982இல் மீண்டும் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அது தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாவது திருத்த) அவசரச் சட்டம் 1982 என்பதாகும். இது மாநிலங்களுக்கிடையே மதுவகைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் - அதன் மூலமாக ஏற்படும் ஆயத்தீர்வை, மற்றும் விற்பனை வரி இழப்பைத் தடுத்து நிறுத்தவும் - இதற்கான சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கும் - நீதி மன்றங்கள் இதுகுறித்து தடை ஆணை வழங்குவதற்கான அதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் வழிவகை செய்தது.
அடுத்து 27.5.1983 அன்று ஒரு அவசரச் சட்டம் - தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாவது திருத்த) அவசரச் சட்டம். பிறகு 8.10.1985இல் ஒரு அவசரச் சட்டம் - இப்படி ஐந்தாறு அவசரச் சட்டங்கள் அவர்களுடைய ஆட்சியிலே பிறப்பிக்கப்பட்டன. 21.3.1981இல் அ.தி.மு.க. அரசின் சார்பாக நிதிநிலை அறிக்கை நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் படிக்கப்பட்டது. அதிலே அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால் - "மதுவிலக்குக் கொள்கையை செம்மையாகச் செயற்படுத்த வேண்டும் என்பதில் இந்த அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உறுதியாகவே இருந்து வந்ததையும், என்றாலும் கூட சட்ட விரோதமாகக் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டும், கள்ளத்தனமாகக் குடிக்கப்பட்டு வந்ததையும், அனுமதியின்றிக் கள்ளச் சாராயம் காய்ச்சுவதையும், குடிப்பதையும், கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப் பட்டதையும் மன்ற உறுப்பினர்கள் அறிவார்கள்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஏழை எளிய குடும்பங்கள் பல இன்னல்களுக்கு உள்ளானதைக்கண்டு, நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அனுமதிச்சீட்டு பெற்று மதுவகைகள் அருந்தும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மதுவிலக்கு கொள்கையில் இந்த அரசு "மது வீட்டையும் கெடுக்கும் - நாட்டையும் கெடுக்கும்" என்று பளிச்சிடும் அறிவிப்புகளில் ஓர் எழுத்துகூட தவறென்று எண்ணுகிறவன் நானல்லன்!
அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதோடு மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வதாக இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது. மதுவிலக்குச் சட்டத்தை திருத்துவதன் மூலம், சமூக விரோதிகள் சிலரின் கைக்குச் செல்லுகின்ற பணத்தை அரசுக்குக் கிடைக்க வழிவகை செய்ய முடியும் என்று இந்த அரசு கருதுகிறது" இதனையொட்டிதான் மதுவிலக்கை தளர்த்தி, சட்டம் கொண்டு வரப்பட்டது. விவாதங்கள் நடைபெற்றன.
30.3.1981இல் நாவலர் நெடுஞ்செழியன் விவாதத்திற்குப் பதில் அளிக்கும்போது கூறிய வாசகம்: "மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவதிலே தோல்வி ஏற்பட்டது என்பதுதான் எங்களுடைய எண்ணம். அந்த எண்ணம் ஈடேறவில்லை. யார் யாரோ முயன்றும் அந்த எண்ணம் ஈடேறவில்லை. புத்தர் முயன்று பார்த்தார், முடியவில்லை. மகாவீரர் முயன்று பார்த்தார், முடியவில்லை. நாயன்மார்கள், ஆழ்வார்கள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. பட்டினத்தடிகள் - இராமலிங்க அடிகள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை.
மகாத்மா காந்தி அடிகளும் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை. வள்ளுவர் கூட முயன்று பார்த்தார், முடியவில்லை. "களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று" - என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது 'குடித்தவனைத் திருத்துவது என்பது எப்படியிருக்கும் என்றால், தண்ணீருக்குள் மறைந்திருப்பவனை விளக்கு கொண்டு தேடுவது மாதிரி' என்று சொல்கிறார்.
எனவே இது முடியாத காரியம் என்று அவரே சொல்லிவிட்டார்." என்று நாவலர் நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு பதிலளிக்கும்போது குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்துதான் அ.தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆருடைய தலைமையில் மதுவிலக்கு சம்பந்தமாக சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த அறிவிப்புகளை யொட்டி, 1.5.1981இல் சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் கூட திறக்கப்பட்டன. 1981- வரை தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை.
1981-க்குப் பின்பு இந்த மதுபானங்களைத் தயாரிக்கின்ற உரிமையை நான்கு தனி நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை நிறுவனத்திற்கும் அரசு அளித்தது. ஐ.எம்.எப்.எஸ்., கள் சாராயம் ஆகிய மதுபானங்களின் விற்பனை 1.5.1981 முதல் தொடங்கியது. ஆனால், குடிப்பவர்கள் 'பெர்மிட்' ஒன்று பெற வேண்டுமென்று விதிமுறைகளில் கூறப்பட்டது. இருப்பினும் இந்த 'பெர்மிட்' இறுதிவரை சரியாகச் செயல்படவில்லை என்பதை உறுப்பினர்கள் நன்கறிவார்கள்.
கள்ளுக்கடையில் ஏலம் முறையில் அனுமதிக்கப்பட்டன. சாராய உற்பத்தி 10 தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்டன. சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம் 15 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப்பட்டன. தனி நபர்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தனி நபர்கள் மொத்த வியாபாரிகளாக விநியோகம் செய்யும் இந்தத் திட்டத்தின்கீழ் ஆரம்பத்தில் சில்லறைக் கடைகள் ஏலம் மற்றும் டெண்டர் முறையில் விடப்பட்டன. இவ்வாறு 1983 ஜூலை 27க்கு முன்பு சில்லறை வியாபாரம் ஏலம் மற்றும் டெண்டர் முறையில் விடப்பட்டு வந்தது.
பிறகு 'டாஸ்மாக்' எடுத்துக் கொண்டது. மதுவிலக்கு பற்றி மக்கள் மன்றமெனும் மத்திய நாடாளுமன்றத்திலே விவாதம் 30.7.1980 அன்று நடைபெற்றபோது, அன்றைய செல்வாக்கு மிக்க பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களைப் பார்த்து, ரத்தன்சிங் என்ற ஓர் உறுப்பினர், "இந்த அரசு மதுவிலக்கை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பது தெளிவாக்கப்படவில்லை. மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரை இதுவரை குழப்பமான ஒரு நிலையே நீடித்து வந்திருக்கின்றது.
பம்பாய் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரி வெளியிட்டுள்ள விளம்பரத்தின் மத்தியிலே பிரதம அமைச்சரின் படம் இடம் பெற்றுள்ளது. இது மக்களை மேலும் குடிக்க அழைப்பதைப் அழைப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. அரசு தனது மதுவிலக்குக் கொள்கையைத் தெளிவாக்குமா?"
என்று கேட்டபோது, பாராளுமன்றத்தில் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அளித்த பதிலில், "மக்கள் மது அருந்தக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. இதுவரை பின்பற்றப்பட்டுவரும் மதுவிலக்குக் கொள்கை இந்த விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா? மதுவிலக்கைவிட மனமாற்றத்தை உண்டாக்குவது சிறந்தது. இதுவரை மதுவிலக்குக் கொள்கை எந்த இடத்திலும் வெற்றி பெற பெரும் முயற்சிகள் மேற்கொண்டும், குஜராத் மாநிலத்திலே கூட மதுவிலக்கு வெற்றி பெறவில்லை என்பதைச் சொல்ல நான் வருந்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்திரா காந்தி அம்மையார் அப்போது மட்டுமல்ல; 1976ஆம் ஆண்டிலேயே குமாரி மணிபென் என்ற அம்மையார் மதுவிலக்கு சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்டபோது, "குமாரி மணிபென் பொது மக்கள் குடிப்பதைப் பற்றிப் பேசினார். உங்களுக்கெல்லாம் தெரியும் - நாங்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மது விலக்குக் கொள்கையிலே மாதிரி மாநிலம் எனப் பேசப்படும் குஜராத்தில் என்ன நிலைமை?
சட்டமன்ற தேர்தலின்போது "டேங்கரில்" கொண்டு வந்து சாராயம் விநியோகம் செய்யப்பட்டதென எனக்குச் சொன்னார்கள். சூரத்தில் சமீபத்தில் கள்ளச் சாராயம் அருந்திப் பலர் மரணமடைந்ததைச் செய்தித் தாள்களிலே படித்தோம்" என்று பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கூறியதையும், இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
1989இல் "ப்ரோப் இண்டியா" என்ற ஆங்கில இதழில், மிஸ்ரா என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை அப்போதே நான் பேரவையில் படித்துக் காட்டினேன். அது, "போர்பந்தரில் - மகாத்மா காந்தியின் சொந்த ஊரில் - ஒரு கள்ளச் சாராய வியாபாரி, தரைக்கு அடியில் பெட்ரோலை சேமிப்பது போல - பெரியகுளம் கட்டி, அதில் 50 ஆயிரம் லிட்டர் சாராயத்தை தேக்கி வைத்திருக்கிறார். பெட்ரோல் பங்குகள் போலவே - இவரது கடையில் ஒரு கைப்பம்பு இருக்கிறது.
கைப்பம்பை அடித்தால் - பாதாளத்திலிருந்து பாய்ந்து வருகிறது சாராயம். எங்கோ தொலைதூரத்தில் டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி தனது சமாதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது பிறந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே, 4 ரூபாய் தந்தால் கள்ளச் சாராயம் ஒரு முழு கிளாஸ் அளவுக்குக் கிடைக்கிறது என்பதை காந்தி அறிய நேர்ந்தால் சமாதியின் அடியிலேயே நெளிவார்" என்பதாகும்.
