உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அம்பேத்கர் கண்ட வழி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அம்பேத்கர் கண்ட வழி · 314 / 391

2. அம்பேத்கர் கண்ட வழி "அண்ணல் அம்பேத்கர் அறிவார்ந்த புரட்சிக்காரர்" கு டியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களின் அழைப்பினையேற்று இந்தியாவின் 11ஆவது பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், 16.5.1996 அன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.வின் துணைத்தலைவராக இருந்த சிக்கந்தர் பக்த், சூரஜ்பான், ராம் ஜேத்மலானி, முரளி மனோகர் ஜோஷி, தனஞ்சய் குமார், பிரமோத் மகாஜன், கரியா முண்டா, சுரேஷ் பிரபாகர் பிரபு, சர்தஜ் சிங், ஜஸ்வந்த் சிங் ஆகிய 11 பேர் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவை அமைந்ததும், மத்தியில் பேரவைத் தலைவராக யார் என்ற பிரச்சினையும், அமைச்சரவை அமைக்க அழைக்கப்பெற்ற வாஜ்பாய் அவர்களின் கட்சியின் சார்பில் பேரவைத் தலைவராக வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவர் வெற்றி பெறுவாரா என்ற நிலைமையும் அரசியல் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னணியின் சார்பில், பொது வேட்பாளராக பி.ஏ. சங்மா அவர்களை நிறுத்துவதென்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் செய்தியாளர்கள் லக்னோ விமான நிலையத்தில் சந்தித்து, "உங்கள் அணியின் சார்பில் யாரை சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப் போகிறீர்கள்?" என்று கேட்டபோது, "காங்கிரசும், ஐக்கிய முன்னணியும் இணைந்து, பொது வேட்பாளராக சங்மாவை நிறுத்துமானால், பா.ஜ.க.வும் அவரையே ஆதரிக்க எந்த விதமானத் தயக்கமும் இல்லை. சபாநாயகர் பதவி போன்ற பொறுப்புமிக்க பதவிக்கு அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படிப் பொது வேட்பாளர் ஒருவரை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை ஒரு கட்சியில் பெரும்பான்மை இழுபறியாக இருக்கும் போது, பேசப்படுவது இன்றைய அரசியலில் இயற்கைதானே. இதைப் பற்றி எழுதும்போது, 1991ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தல் நேரத்தில், நடந்தவற்றை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். 1991 தேர்தலில் - பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு - அரசு அமைக்கப் போதுமான பெரும்பான்மை பலம் இல்லை.

1996இல் தனிப் பெரும் கட்சி என்ற அளவில் எவ்வாறு ஆட்சி அமைக்க பா.ஜ.க. அழைக்கப்பட்டதோ, அதைப் போலவே 1991இல் தனிப் பெரும் கட்சி என்ற அளவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அழைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு எவ்வாறு காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.விற்கு அடுத்த பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்ததோ, அதைப்போலவே 1991ஆம் ஆண்டும் பா.ஜ.க.. காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்தது. 1996ஆம் ஆண்டு மக்களவை சபாநாயகராக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் எவ்வாறு பொது வேட்பாளராக சங்மா நிறுத்தப்பட்டாரோ, அதைப்போலவே 1991ஆம் ஆண்டும் பா.ஜ.க.சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து எதிர்க் கட்சிகள் மத்தியிலே இருந்தது.

ஆனால், பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் ஒரு உடன்பாடு செய்து கொண்டு, சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராஜ் பாட்டில் அவர்களும், துணை சபாநாயகர் பதவிக்கு மல்லிகார்ஜுன் என்ற பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1991ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தபோது, துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டுமென்று நிபந்தனை விதித்துப் பெற்ற பா.ஜ.க. 1996ஆம் ஆண்டு தேர்தலில் துணை சபாநாயகர் என்பது பற்றியெல்லாம் பேசாமல், தான் ஆளும் கட்சியாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் வேட்பாளரையே பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவிக்கும் அளவிற்கு நிலைமை உருவாயிற்று.

வாஜ்பாய் அவர்களின் அமைச்சரவை பெரும்பான்மையை மே மாதத்திற்குள்ளாக நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று குடியரசுத் தலைவர் சொல்லியிருந்ததன் அடிப்படையில், 27.5.1996 அன்று நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றினை ஆளுங்கட்சியின் சார்பில், மக்களவையில் முன்மொழிந்து, அதன்மீது விவாதம் நடைபெற்றது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து ஐக்கிய முன்னணியின் சார்பிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், வாஜ்பாய் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டுமென்று பேசினர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சரத்பவார், மீரா குமாரி ஆகியோரும், சிரோண்மணி அகாலிதளம் சார்பில் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும், தி.மு.க.சார்பில் முரசொலி மாறன் அவர்களும், ஜனதா தளம் சார்பில் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், சமதாக் கட்சி சார்பில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களும், பி.எஸ்.பி.சார்பில் கன்ஷிராம் அவர்களும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் அவர்களும், மற்றும் பலரும் பேசினர். கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தில் பேசிய தம்பி மாறனின் உரை அனைவராலும் அப்போது பாராட்டப்பட்டது.

அதன் சுருக்கம் வருமாறு:- "மக்களவைத் தலைவர் அவர்களே! பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராகப் பேச வேண்டியிருப்பதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் வாஜ்பாயை குறைவாக நேசிக்கவில்லை. ஆனால், என்னுடைய மக்களை, என்னுடைய மொழியை, என்னுடைய கலாச்சாரத்தை, சகோதர சகோதரிகளை, சமுதாயத்தை நான் அதிகமாக நேசிக்கிறேன். குடியரசுத் தலைவர் அவர்கள் வாஜ்பாயை பிரதமராக நியமிப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படிக் கேட்டிருந்தால், நிலைமை வேறு வகையாக இருந்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடைபெறவில்லை. நாங்கள் வாஜ்பாய் மீது மீது தனியான மரியாதையும், மதிப்பும் நான் வாஜ்பாயை குறைவாக நேசிக்கவில்லை. எங்கள் தலைவர் கலைஞர் குறிப்பிட்டதைப் போல அவர் ஒரு மாபெரும் மனிதர் - தவறான கட்சியில் இருக்கிறார்! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்பதைவிட, அவர் ராஜினாமா செய்துவிடுவது நல்லது! -முரசொலி மாறன் வைத்துள்ளோம். எங்கள் கட்சியின் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, அவர் ஒரு மாபெரும் மனிதர்.

ஆனால், அவர் தவறான கட்சியில் இருக்கிறார். அவர் உயர்வான நாடாளுமன்றவாதி. அவர் மிகச் சிறந்த பிரதமருக்குரிய தகுதிகள் பெற்றவர். ஆனால், அவரை முன் நிறுத்தியுள்ள கொள்கைகள் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவை. அதனால் நாங்கள் அவற்றிலிருந்து விலகி தீர்மானத்தை எதிர்க்கிறோம்.'

இவ்வாறு தனது உரையைத் தொடங்கி, "குடியரசுத் தலைவர் சொன்னார் என்பதற்காக திறமை வாய்ந்த வாஜ்பாய் போன்றவர்கள் எப்படி அமைச்சரவை அமைத்து, தொடர்ந்து ஆள முடியும் என்று கேட்க விரும்புகிறேன். இது போன்ற நகைச்சுவை நாடகத்திற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைப்போம். வாக்கெடுப்பில் தோற்பதை விட ராஜினாமா செய்து விடுவது அவருக்கு நல்லது" என்று முடித்தார்.

அப்போது அவரது பேச்சு இந்திய அரசியலில் உள்ள மூத்த தலைவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக தம்பி மாறன் பேசும் போது, "அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியிலே ஈடுபடவில்லை" என்று சொல்லியிருந்தார்.

வாஜ்பாய் அவர்கள் தன் பதில் உரையின் போது அதைக் குறிப்பிட்டு, "ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சியிலே பா.ஜ.க.ஈடுபட்டது என்று சொல்லி வந்தார்கள். அவர்களின் கூற்றையெல்லாம் முரசொலி மாறனின் பேச்சு வலுவிழக்கச் செய்தது" என்று கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு எம்.பி.க்களை விலைக்கு வாங்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக சொன்னார்கள். அவர்களின் கூற்றை முரசொலி மாறனின் பேச்சு வலுவிழக்கச் செய்துவிட்டது. -வாஜ்பாய் முரசொலி மாறன் அப்போது பேசியதுபோல்தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாக்கெடுப்பு நடைபெற்று, ஆளுங்கட்சி தோற்கவில்லை. அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்து விட்டார்கள். ஆம், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலே ஆட்சி செய்த பாரதீய ஜனதா சிவசேனா கூட்டணி அரசு 13 நாள் ஆட்சிக்குப் பிறகு பதவி விலகியது.

மக்களவையில் பெரும்பான்மையைத் திரட்ட முடியாததால், தாங்கள் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவசியமின்றி, ராஜினாமாவை வாஜ்பாய் மக்களவையில் 28.5.1996 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு மக்களவை சபாநாயகரால் மறு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீது பேசிய வாஜ்பாய் அவர்கள், தனக்கடுத்து ஆட்சிக்கு வரும் அரசு ஐந்தாண்டுகளும் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.

அன்றைய தினம் அவர் பதில் உரையாற்றும்போது, மகாகவி பாரதியாரின் பாடலான "முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள், செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற வரிகளைத் தமிழிலேயே அவையிலே எடுத்துக் காட்டினார். நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த வாஜ்பாய் அவர்களைச் செய்தியாளர்கள் அணுகியபோது, "13 நாட்களாக பறிக்கப்பட்ட சுதந்திரம் மீண்டும் கிடைத்து விட்டது!"

என்றார். மக்களவையில் வாக்கெடுப்புக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது பிரதமர் வாஜ்பாய் ஆவார். 21.5.1996 அன்று சட்டப் பேரவைத் தலைவராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார் அதற்கு முன்பு 1991ஆம் ஆண்டு சந்திரசேகர், குடியரசுத் தலைவரின் உரை மீதான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இப்படித்தான் ராஜினமா செய்தார். பாரதீய ஜனதாவின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்க மறுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களும்கூட - அனுபவக் கனிவும், ஆழ்ந்த புலமையும், நாநயமும் ஒருங்கே இழைந்த வாஜ்பாயின் தலைமை மீது தனிப்பட்ட முறையில் தனி மதிப்பு காட்டக் கூடியவர்கள் என்றாலும், வாஜ்பாய்க்காக பா.ஜ.க.

ஆட்சி நீடிப்பதை விரும்பவில்லை. மக்களவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், மரபையொட்டி தனிப் பெரும் கட்சியான பா.ஜ.க.வுக்கு அரசமைக்கும் வாய்ப்பைக் குடியரசுத் தலைவர் அளித்தார். அது ஒரு விதத்தில் முறையானதாக இருக்கலாம். அதை அவசரப்பட்டு வாஜ்பாய் ஏற்றுக் கொள்ளாமல் இங்கிதமாக மறுத்திருக்கலாம். பா.ஜ.க.விற்கு மக்களவையில் 194 இடங்களே இருந்த நிலையில், அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது தெரிந்திருந்தும், குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று அரசமைத்தது வாஜ்பாய் போட்ட அவசரக் கணக்கு என்றே அப்போது கருதப்பட்டது.

ஆட்சி கவிழ்ந்த 28.5.1996 அன்று இரவே குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களை, ஐக்கிய முன்னணித் தலைவர் தேவகவுடா சந்தித்து, அரசமைக்கும் உரிமையைத் தனக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படி தேவகவுடா அவர்களை ஆட்சி அமைக்கலாம் என்றும், அவருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை 12.6.1996க்குள் நிரூபிக்க வேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் நிபந்தனை விதித்தார். இதற்கிடையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அப்போதிருந்த பி.வி.

நரசிம்மராவ் அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி, அரசமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்பதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து தேவகவுடா அவர்கள் சென்னையிலிருந்த என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, நிலைமைகளை விளக்கினார். டெல்லியில் ஐக்கிய முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தேவகவுடா தலைமையில், 29.5.1996 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முரசொலி மாறன், சந்திரபாபு நாயுடு, மூப்பனார், அர்ஜுன்சிங், இந்திரஜித் குப்தா , ஹர்கிஷன் சிங் சுர்ஜித், மாதவராவ் சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், ஐக்கிய முன்னணி அரசின் சார்பில் குறைந்தபட்ச பொதுவான செயல் திட்டம் ஒன்றினைத் தயாரிப்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு டெல்லியிலிருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கூட்டணி அரசில் தி.மு.க.வும் இடம் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

சட்டப் பேரவை துணைத் தலைவராக பரிதி இளம்வழுதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 29ஆம் தேதி காலையில் சென்னையில் என்னைச் செய்தியாளர்கள் சந்தித்து, "மத்தியில் ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்குமா?" என்று கேட்டபோது, அதைப் பற்றி எந்த முடிவும் அதுவரை எடுக்கவில்லை என்றும், மே 30ஆம் தேதி மாலையில் டெல்லி சென்று தலைவர்களுடனும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்து பேசி முடிவெடுப்பேன் என்றும் கூறினேன்.

31ஆம் தேதி காலை விமானத்தில் டெல்லி சென்றேன். என்னுடன் தம்பி மாறன், என்.வி.என்.சோமு ஆகியோர் வந்தனர். விமான நிலையத்தில் வரவேற்பினைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்றேன். அங்கே நடைபெற்றக் கூட்டத்தில், அருமை நண்பர் மூப்பனார், அசாம் கணபரிட்சத் தலைவர் மகந்தா, சந்திரபாபு நாயுடு, தம்பி மாறன் ஆகியோர் நீண்ட நேரம் உரையாடினோம். பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த தேவகவுடா அவர்களும் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஐக்கிய முன்னணி அரசின் புதிய அமைச்சரவையில் த.மா.கா.வைச் சேர்ந்த ப.சிதம்பரம் இடம் பெறுவதைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்காது என்றும், ஐக்கிய முன்னணியின் புதிய அமைச்சரவை விஷயத்தில் எந்த விதத்திலும் குறுக்கிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. "அம்பேத்கருக்கு, என் இளம் வயதுக் கனவான ஒரு மணிமண்டபம் அமைந்ததைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!"

31.5.1996 அன்று மாலையில் ஐக்கிய முன்னணியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சந்திரபாபு நாயுடு. "ஐக்கிய முன்னணியின் அமைச்சரவையில் தி.மு.கழகம், த.மா.கா., தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடம் பெறும்" என்று அறிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "தி.மு.க., த.மா.கா., தெலுங்கு தேசம், அசாம் கணபரிட்சத் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பாக இயங்கும் என்றாலும், இந்தக் கூட்டமைப்பு ஐக்கிய முன்னணியின் ஓர் அங்கமாகவே திகழும்" என்றார். இந்த அறிவிப்புக்குப் பின், இரவு 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழக அரசின் தமிழ்நாடு இல்லத்தில் நான், தேவகவுடா, சுர்ஜித்சிங், மூப்பனார், ஜோதிபாசு, சந்திபாபு நாயுடு, மெகந்தா, இந்திரஜித் குப்தா, முரசொலிமாறன், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கூடி நீ

ண்ட நேரம் உரையாடினோம். இதற்கிடையே கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவகவுடா அவர்கள் பிரதமராக ஆனதையொட்டி, கர்நாடக மாநிலத்தில் புதிய ஜனதா தள அமைச்சரவை 31.5.1996 அன்று பதவியேற்றது. முதல் அமைச்சராக அமைச்சராக ஜே.எச்.பட்டேல் அவர்களும், துணை முதல் அமைச்சராக சித்தராமையாவும் பதவியேற்றனர். 1.6.1996 அன்று இந்தியாவின் 12ஆவது பிரதமராக தேவகவுடா பதவியேற்றார். அவருடன் தி.மு.கழகத்தின் சார்பில் தம்பி முரசொலிமாறன் மத்திய தொழில் அமைச்சராகவும், முதன் முதலாக தமிழகத்தின் சார்பில் ஒரு வன்னியரை கேபினட் கேபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய அமைச்சராக, ஆக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தரைவழி போக்குவரத்துத் துறை பொறுப்பில் திண்டிவனம் வெங்கட்ராமன் ஆகியோரும், த.மா.கா.

சார்பில் நிதி அமைச்சராக அருமை நண்பர் ப.சிதம்பரமும், நகர்ப்புற மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சராக மறைந்த எம். அருணாசலம் ஆகியோர் உட்பட 20 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் நானும், வி.பி.சிங், நரசிம்மராவ், சந்திரசேகர், வாஜ்பாய், சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, ஜோதிபாசு, மெகந்தா, லல்லு பிரசாத் யாதவ், பைரோன் சிங் செகாவத் உட்பட பலரும் கலந்து கொண்டோம்.

ஐக்கிய முன்னணி அரசு சார்பாக குறைந்தபட்ச பொதுவான கொள்கைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அதனை பிரதமர் தேவகவுடா அவர்கள் 5.6.1996 அன்று வெளியிட்டார். அந்தத் திட்டம் பற்றி நான் கருத்துக் கூறும்போது, மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க - அதிக ஆதாரங்களை மாநிலங்களுக்குத் தருவது; மத்திய மாநில உறவு பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் காலத்திற்கேற்றவாறு மாறுதல்கள் செய்வது போன்றவைகள் வரவேற்கத்தக்கவை என்று கூறினேன்.

மத்தியில் இந்த அளவிற்கு அரசியல் மாற்றங்கள் நடைபெற்ற நேரத்தில் தமிழகத்திலே என்ன நடைபெற்றது? 21.5.1996 அன்று தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், பேரவைத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, அண்ணா அறிவாலயத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பேரவைத் தலைவர் பதவிக்கு கழகத்தின் சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களையும், பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு பரிதி இளம்வழுதியையும் நான் முன்மொழிய, அனைவரும் ஒருமனதாக வழி மொழிந்தனர்.

அரசு கொறடாவாக புதுக்கோட்டை பெரியண்ணன் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப் போலவே, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அவர்கள் அலுவலகத்திலே நடைபெற்று, சட்டமன்றக் கட்சித் தலைவராக முதுகுளத்தூர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்களும், துணைத் தலைவராக வி.கே. லெட்சுமணன் அவர்களும், கொறடாவாக ஆர். சொக்கர் அவர்களும், துணைக் கொறடாவாக வேலூர் சி. ஞானசேகரன் அவர்களும், பொருளாளராக ஏ.எஸ்.

பொன்னம்மாள் அவர்களும், செயலாளராக பி. ரெங்கநாதன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். நான் நான்காம் முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றதும், மூன்று முறை முதலமைச்சராக இருந்தபோது - நான் தொடர்ந்து வாழ்ந்துவரும் கோபாலபுரம் இல்லத்திலேதான் அப்போதும் வசித்து வந்தேன் என்ற போதிலும், 1996ஆம் ஆண்டு அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும், அரசு அதிகாரிகளும் இடப் பற்றாக்குறையை மனதிலே கொண்டு, அரசு இல்லத்திற்கு என் வீட்டை மாற்றிக் கொள்ளலாமா என்று யோசித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குறிப்பாக கோபாலபுரத்தில் நான் இருப்பதால், அந்தத் தெருவிலும், பகுதியிலும் உள்ள பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இடையூறாக இருந்ததை மனதிலே கொண்டுதான், எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய அரசு வீட்டினை நான் சென்று பார்க்க ஒப்புக் கொண்டேன். தம்பி துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில், தனக்குள்ள நிர்வாக வசதிகள், வாய்ப்புகளைப் பயன்படுத்தி நான் குடும்பத்துடன் வாழ்வதற்கென்று அழகும் அலங்காரமும் மிகுந்த வசீகரமான வசந்த மாளிகை யொன்றையே நிர்மாணித்து, "அண்ணே!

நீங்கள் இந்த வீட்டுக்கு வந்து விட்டால், காலையிலும் மாலையிலும் நடைப் பயிற்சிக்குக் கூடக் கடற்கரையென்று செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதோ வீட்டைச் சுற்றி பூங்கா அமைந்த பாதையிலேயே நீங்கள் அந்தப் பயிற்சியைப் பெறலாம். கார்கள் நிற்பதற்கும் ஏராளமான இடம் இருக்கிறது. நீங்கள் விரும்பினால், ஒரு நீச்சல் குளம் கூட ஏற்பாடு செய்யலாம்."

என்றெல்லாம் மளமளவென்று ஆரம்பித்து, "மாளிகை" போல் விளங்கும் இந்த வீட்டை விட்டு விடாதீர்கள்" என்று விடாப்பிடியாகப் பொழிந்து தள்ளினார். "வா! வா என்னோடு! இந்த வீட்டை எதற்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லுகிறேன் வா" - என்று அவர் தோளில் கை வைத்தவாறு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டேன் -கார் சாலைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கும்போது, என் சிந்தனை அந்தப் பெரிய எழில் மாளிகையை எதற்குப் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்பதாகவே இருந்தது.

இளமைப் பருவத்தில் இலட்சிய வெறியுடன், திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு, ஆரூருக்கு அருகில் உள்ள கிராமங்கள் - அதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள ஊர்கள் - பின்னர் நகர்கள் என்று - பொதுத் தொண்டாற்றிடச் சென்றாலும் திருமண விழாக்களில் தலைமை வகித்திடவோ; வாழ்த்துரை கூறிடவோ சென்றாலும் - அந்த இடம் பெரும்பாலும் ஆதி திராவிடக் காலனிகளாகத் தானிருக்குமென்று குறிப்பிட்டிருக்கிறேனல்லவா? அதனால் என் நெஞ்சில் பதிந்த பெரியார், அண்ணா, பாரதிதாசன், அழகிரிசாமி என்ற புரட்சியாளர்களின் சித்திரங்களுடன், அண்ணல் அம்பேத்கர் திருஉருவும் அழியாத ஓவியமாகவே இருந்தது.

அதனால்தான் நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வடசென்னையில் திருமதி சத்தியவாணி முத்து அம்மையார் தொகுதியில் அம்பேத்கர் அரசு கல்லூரியொன்றை அமைத்திட்டேன். அதனைப் பின்பற்றி, தொடர்ச்சியாக அம்பேத்கர் பெயரால் சட்டக் கல்லூரிகள் - மாவட்டக் கழகப் பொறுப்புகளிலும் மாநிலக் கழக நிர்வாகப் பொறுப்புகளிலும் ஆதிதிராவிட உடன்பிறப்புக்களுக்கு உரிய இடம் - என் மகன் அழகிரிக்கு காந்தியைத் திருமணம் செய்து வைத்த வகையிலும், என் பேத்தி கலைச்செல்வியை ஒரு ஆதிதிராவிடருக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்த வகையிலும், அந்தச் சமூகத்தின் சம்பந்தி என்ற பெருமையும் பெற்றவன் நான் - தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது நாளேடு ஒன்றில் ஒரு செய்தி - மராட்டிய மாநிலத்தில் "மரத்வாடா" பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டச் சொல்லி அந்த மாநில அரசோடு போராட்டம் நடப்பதாக - அதைப் பார்த்தவுடன் அக்கோரிக்கையை வலியுறுத்தி மராட்டிய கவர்னருக்கு ஒரு லட்சம் தந்திகள் தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க.

சார்பில் கொடுக்கப்பட்டு; அதன் விளைவாக மராட்டிய கவர்னர் திரு.அலெக்சாண்டர், கோரிக்கை ஏற்கப்பட்டதாக எனக்குப் பதில் தகவலே அனுப்பினார் என்றால் - "ஒரே இரத்தம்" என்ற திரைப்படத்தின் மூலம் அம்பேத்கரின் இளமைத் துடிப்பையும் இலட்சியத் தாகத்தையும் நாட்டுக்கு விளக்க முற்பட்டேன் என்றால் - எனக்கு அந்த அறிவார்ந்த புரட்சிக்காரர் மீது எத்துணை பற்றும் பாசமும் இருக்கும்? இந்தக் கடந்த கால நினைவுகளும், நிகழ்வுகளும் ஒன்று திரண்டு; எனக்காக அரசின் சார்பில் துரைமுருகன் அமைத்த அந்த மாளிகைக்குள் "அம்பேத்கர் பல்கலைக் கழக அலுவலக"த்தை ஆரம்பித்தால் என்ன?

அந்தக் கேள்வி; என் தலைமையிலான அரசின் ஆணையாயிற்று - இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயரால் உருவான முதல் சட்டப் பல்கலைக் கழகம் அது! அவர் பெயரால் பெரிய மணிமண்டபம் ஒன்றும் 4 கோடி ரூபாய் செலவில் சென்னையில் கட்டிய அந்தப் பெரும் தொண்டினையும் நானே ஆற்றிப் பேறு பெற்றேன். அவரை அறிஞர்களில் ஒருவர் என்றோ - தலைவர்களில் ஒருவர் என்றோ - பொதுவாகக் குறிப்பிட முடியாதே! அறிஞர்க்கெல்லாம் அறிஞர் - தாழ்ந்து போ என்று தள்ளிவிடப்பட்ட மக்களின் தன்மானம் காக்க வந்த தலைவர்க்குத் தலைவர் - அவர் கொண்ட கருத்தும் - அண்ணாவும் பெரியாரும் பதித்த கருத்தும் - "சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடியிலே சாயாதே."

என்று வடலூர் வள்ளலார் போல மக்களை எச்சரித்த கருத்துக்கள் அல்லவா? "பாதிக்குதே பசியென்றுரைத்து வீதியிலே புரளுகின்ற பாழும் பரதேசிக்கு - உங்கள் சாதி சாதித்த நீதி என்ன?" "வேதியர்க்கு வெண்பட்டும் வெண் பொங்கலும், அளித்த சாதி; அவர்கள் வைத்த மீதியை யாவது நாதியற்றோர்க்கு அளிக்க நினைத்ததா? பேதியும் பீதியும் நம் சேரிக்கு விடுத்தது சாதியல்லவா?"

போதி மரத்து புத்தன் புலம்பியதும் ஆதிமகனாம் வள்ளுவன் அலறியதும் சாதி ஒழிய வேண்டு மென்றுதானே!" என்று 1940களிலேயே உருக்கமிகு உரையாடல் எழுதி 'நாடகம் தயாரித்தவன் நான்! ஆம், அந்த நான்தான்; வீழ்த்தப்பட்ட மக்களை விடிவை நோக்கி எழுப்பி விட்ட வீராதி வீர விவேகப் பெட்டகம் அம்பேத்கர் வழியில் பயணிக்கச் செய்திட விரும்பி; அவர் பெயரால் பல கல்லூரிகளை - சிலைகளை பல்கலைக் கழகங்களை - மணி மண்டபங்களை உருவாக்கிட எடுத்துக் கொண்ட சபதம்தான் - பெரியார் பெயரால் அமைந்து வரும் சமத்துவ புரங்கள் என்றால், அதனை மறுக்க இயலுமோ?

மறக்கத்தான் முடியுமோ? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிப்புக்கு ஒரே வழி சொல்லியிருக்கிறார். "சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி கலப்புத் திருமணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரத்தக் கலப்பின் மூலம்தான் உற்றார் உறவினர் என்ற உணர்வு ஏற்படும். இந்த உறவு, இந்த உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை உணர்வு ஒருவருக்கொருவர் அன்னியராக நினைப்பது மறையவே மறையாது.

சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்புத் திருமணமே. வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது" என்று எழுதியிருக்கிறார். அதனை நெஞ்சில் பதிய வைத்துத்தான், என்னுடைய குடும்பத்திலேயே பல கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். அம்பேத்கர் சொல்லுகிறார் - ""here is no doubt, in my opinion, that unless you change your social order, you can achieve little by way of progress. you cannot mobilize anything of the foundations of Caste.

You cannot build up a Nation, you cannot build up a Morality. Anything that you will build on the foundations of caste, will crack and will never be a whole." அதாவது, உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல், நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து, நீங்கள் எதை உருவாக்கினாலும், அது உடைந்து சிதறி உருப்படாமல் போய்விடும்.

அதனால்தான் நான் எப்போதெல்லாம் ஆட்சியிலே இருக்கிறேனோ அப்போதெல்லாம் அம்பேத்கர் பெயரில் ஏதாவது செய்து வருகிறேன். அம்பேத்கர் பெயரால் சட்டப் பல்கலைக் கழகம் கண்டு, 20-9-1997 அன்று, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அவர்களை அழைத்து வந்து, அதனைத் தொடங்கி வைத்தேன். அதிலே கூட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்கான சட்ட முன் வடிவு தமிழகச் சட்டப் பேரவையிலே, நிறைவேற்றப்பட்டு, ஏறக்குறைய ஓராண்டு ஆகியும், அதற்காக மத்திய அரசின் அனுமதி கிடைக்காமல் இருந்த நிலையில், அதைப்பற்றி நான் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்துதான் அன்றைய மத்திய அரசின் அனுமதியே கிடைத்தது.

இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்கும்போது, என் நெஞ்சில் எழுந்த நினைவலைகளைத் தொகுத்துக் கூறுவதுகூட "நெஞ்சுக்கு நீதி" யின் இந்த அத்தியாயத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஐந்தாவது முறையாக, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டாண்டு காலத்தில்தான், பல ஆண்டு காலமான பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால், உயிருக்கு ஆபத்து- தலை போய்விடும் என்று பயந்து - நடுங்கி - பெற்ற பதவிகளை ராஜினாமா செய்து விட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற கிராமங்கள் கீரிப்பட்டி, பாப்பாப் பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் ஆகிய ஊர்களில் பதவிக்குப் போட்டியிடாமலே - போட்டியிட்டு வெற்றி பெற்றால், அந்தப் பதவியை அவர்களே ராஜினாமா செய்தும், சாதி வெறிக்கு அஞ்சி செயல்பட்ட ஊர் மக்கள் இந்த ஆண்டில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் தான் நெஞ்சு நிமிர்த்திப் போட்டியிட்டு, வெற்றி பெற்று, பெற்ற பதவியைத் துறக்காமல் இருந்தார்கள் என்பதும், உத்தபுரம் என்ற ஊரில் 20 ஆண்டு காலமாக மேல் வகுப்பினரையும், ஆதி திராவிட வகுப்பினரையும் பிரித்து வைத்துக் கட்டப் பட்டிருந்த நீண்ட நெடிய சுவர் கழக அரசினால் இடிக்கப்பட்டு, இடதுசாரிகளின் ஆதரவோடு, இழிவு துடைக்கப்பட்டது என்பதையும் குறிப்பிடுவது, சாதி ஆதிக்கத்தின் வலிய கரங்கள் எப்படியெல்லாம் விளையாடின என்பதற்கும் - இன்னும் கூட விபரீதமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன என்பதற்கும் சான்றுகளாகும்.

நெஞ்சுக்கு நீதி - என்றும் நெகிழ்வூட்டும் 'சரிதச் சேதி' -கவிவேந்தர் கா.வேழ வேந்தன் "நெஞ்சுக்கு நீதி" தீட்டும் நேரிலாத் தலைவா! தங்கள் கொஞ்சிடும் எழுத்து வண்ணக் கோலத்தை என்ன சொல்வேன்? தஞ்சையின் கரும்பை விஞ்சும் தனிச்சுவை இனிப்பைத் தேக்கி, எஞ்ஞான்றும் நின்று பேசும் ஈடிலாப் 'புதையல்' அன்றோ? சேரரின் தீரம், ஈரம் செப்பிடும் 'பதிற்றுப் பத்து' !நேருவின் 'கடித நூலோ' நிலவர லாறே கூறும்! யாரிங்கே தங்களைப்போல் எழிற்சுவை யழகைக் கூட்டிச் சீரிய நயத்தைச் சேர்த்தே செதுக்கினார் 'சரித' மெல்லாம்?

நடந்திட்ட கால் சுவட்டை நளினமாய் விளக்கு கின்றீர்! உடன்வந்தோர் தம்மை எல்லாம் ஒருபோதும் மறந்தி டாமல் விடுபடா தெழுது கின்றீர்; விம்மிடும் எங்கள் மார்பும்! அடடா! உம் நினைவின் ஆற்றல் யார்பெற்றார் இந்த மண்மேல்? வாழ்க்கையில் போராட் டங்கள் வரும் போகும்; அறிவோம்; ஆனால் வாழ்க்கையே போராட் டத்தின் வன்களம் ஆக்கிக் கொண்டீர்! ஆழ்கடல் முத்தும் கூட அணியாகி முடங்கும் காதில்; தாழ்விலா முத்தின் முத்தே!

தங்களின் ஒளியா மயங்கும்? பிரதமர் அல்லர் தாங்கள்; பிரதமர் தம்மை யெல்லாம் நிரல்நிர லாக ஆக்கி நெடும் வரலாற்றில் நின்றீர்! வரங்கேட்டுத் தில்லி ஓடும் வாடிக்கை மாற்றி, அன்னோர் கரத்திற்கே கரங் கொடுக்கும் காதையைப் படைத்திட் டீர்கள்! தன் வரலாறா ஈது? தாயகம் தாண்டி வந்த பொன்வர லாறே அன்றோ? புகழ்பூத்த தங்கள் பேனா இன்றிங்கே குனிந்து தீட்டும் இணையிலா இப்ப டைப்பே என்றென்றும் நிமிர்ந்தே தங்கள் எழில்மாட்சி முழங்கும்; ஆணை!

வேழவேந்தன்