நெஞ்சுக்கு நீதி
வெளியீட்டு விழா! · 311 / 391
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) திருக்குறள் 'கலைஞர் உரை' வெளியீட்டு விழா! தி ரையுலகம் என்னைப் பாராட்டியதற்கு அடுத்த நாள் 15-4-1996 அன்று நான் எழுதிய திருக்குறள் உரை நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜேஸ்வரி மண்டபத்தில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது. நான் எழுதிய எத்தனையோ புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள் அதற்கு முன்பு நடைபெற்ற போதிலும், திருக்குறள் நூலுக்கு நான் நீண்ட நாட்கள் செலவிட்டு எழுதிய உரை அரங்கேற்றம் செய்யப்பட்ட அந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியை என் உள்ளத்தில் ஏற்படுத்தியது.
அப்போது எனது ஏற்புரையிலே நான் குறிப்பிட்டதைப் போல திருக்குறள் உரை வெளியிடப்பட்ட அந்நாள் என் வாழ்விலோர் திருநாளாக அமைந்தது. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் நூலினை வெளியிட திருமதி ராஜேஸ்வரி அம்மையாரும், நல்லி குப்புசாமி செட்டியாரும் நூலினைப் பெற்றுக் கொண்டார்கள். பீட்டர் அல்போன்ஸ், தமிழ்க்குடிமகன், திருமதி சக்தி பெருமாள், நன்னன், கவியரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், சி. பாலசுப்ரமணியம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக நான் ஏற்புரையாற்றினேன். மூப்பனார் அந்த விழாவிலே பேசும் போது, டாக்டர் மு. வரதராசனார் என்னைப் பற்றி அந்த நூலிலே குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக்காட்டி எப்போதும்போல் சுருக்கமாகப் பேசினார். அவர் எடுத்துக்காட்டிய மு.வரதராசனார் எழுதியிருந்தது; "தமிழகத்தின் பெருமையை சங்ககாலம் கலைஞர் போல மீண்டும் உலகம் போற்றக் கூடிய அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற கனவை நனவாக்க விடாமுயற்சியை மேற்கொண்டுள்ள சிறந்த அறிஞர் கலைஞர்.
தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிக்குப் பின் புலவராகவும், அரசராகவும் வாழ்பவர் கலைஞர் ஒருவர்தான். தமிழறிஞர்களை, புலவர்களை வாழ்விக்கும் புரவலராக இருந்து பாதுகாத்து வருபவர் கலைஞர்" என்ற வரிகளாகும். அந்த விழாவில் மூப்பனார் இந்தியத் தேசப்படம் போன்ற உருவமும், அதன் நடுவே வள்ளுவர் படமும் பொறித்த நினைவுப் பரிசு ஒன்றினை எனக்களித்தார். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் அந்த விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
அந்தச் செய்தியில் "மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே, ஸ்ரீகாஞ்சி காமகோடி பெரியவர்களுக்கு உலகப் பொக்கிஷமான திருக்குறள் மிகவும் விருப்பமான நூல். ஸ்ரீ பெரியவர்கள் அவருடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி உரையாற்றுவது வழக்கம். ஒவ்வொரு பள்ளியிலும் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மிகவும் விரும்பியவர். அதேபோல லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி வைத்து பங்கு கொண்ட எல்லோருக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கிவருகிறார்.
1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி கலைஞர் அவர்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகள், "கலைஞர் கருணாநிதி அவர்கள் திருக்குறளுக்கு வரைந்த குறளோவியம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது" என்று வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
இன்று வெளியிடப்படும் திருக்குறள் கலைஞர் உரை நூல் நமது மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறள் என்று 1330 நாட்கள் ஆய்ந்து, வரைந்து நமக்கு அளித்துள்ள சிறப்புரையாகும். இந்த அற்புதமான உரை அனைவரும் எளிதாக, அதே நேரத்தில் ஆழமாகப் புரிந்து கொள்ளக் கூடிய சிறப்புடன் எழுதப்பட்டுள்ளது திருக்குறளுக்கு அணி செய்வதாகும். கலைஞர் கருணாநிதி அவர்கள் வள்ளுவர் கூறிய நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) "இருள்சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்ற குறள் நெறி ஒப்பவும், "வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோல தூஉம் கோடா தெனின்", "இறை காக்கும் வையகமெலாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்" ஆகிய குறள்களின் வழி நின்று, நீண்ட ஆயுளைப் பெற்று சிறந்த சேவை செய்து வாழ்ந்திட பொன்னாடை போர்த்தி வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்ததோடு தன் பிரதிநிதி மூலம் பொன்னாடை ஒன்றையும் அனுப்பி வைத்து அதனை எனக்குப் போர்த்தச் செய்தார்.
இவ்வாறு திருக்குறளையும், தமிழையும் போற்றி எனக்கு வாழ்த்து அனுப்பிய காஞ்சி ஜெயேந்திரர் தான் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கும், தமிழில் மந்திரமொலித்து குடமுழுக்கு செய்வதற்கும் விரோதியாக விளங்குகிறார் என்பதும், அதன் காரணமாகத் தமிழ் மக்களின் கசப்பைத் தேடிக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் அந்த விழாவில் ஆற்றிய உரையிருக்கிறதே, அது தேன் மழை!
பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜாஜி அவர்கள் கம்பனடிப்பொடி சா.கணேசன் அவர்களிடத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்தப் பிள்ளையாண்டான் கையில் இருக்கிறது என்று என்னைச் சுட்டிக் காட்டிக் கூறியதாகத் தெரிவித்து, மேலும் பேசுகையில் "என்னுடைய கொள்கை வேறு, கலைஞருடைய கொள்கை வேறு. ஆனால் என் அன்புக்கும், மரியாதைக்கும் என்றைக்குமே குறைவு வந்ததில்லை. கோல்ட் ஸ்மித் என்ற ஆங்கிலப் பேரறிஞனைப் பற்றி ஜான்சன் என்ற திறனாய்வாளன் எழுதும்போது, "அவன் தொடாத துறையே இல்லை, தொட்டதைப் பொன்னாக்காமல் விட்டதும் இல்லை" என்று எழுதினான்.
அதைப்போல தமிழ்நாட்டில் ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால் அது கலைஞர் கருணாநிதிதான்! அவர் தொடாத துறையே இல்லை, தொட்டதைப் பொன்னாக்காமல் விட்டதும் இல்லை. வாழ்கின்ற காலங்களில் விருப்பு வெறுப்புக்கள் எல்லாம் இருக்கும். ஒரு ஐம்பது வருடம் கழித்து தமிழ்நாட்டின் கலைஞர் வரலாறு எழுதப்படும் போது தமிழ்நாட்டில் ஒரு பத்து இருபது பேர்தான் அறிவாளிகள் எனத் தேர்வார்கள். அதிலே ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதி இருப்பார்.
நூறு வருடம் கழித்து தமிழ் வரலாற்றைப் படிக்கிறவன், இப்படி ஒரு ஆள் நம்ம ஆள் இருந்தாரா என்று நினைக்கக் கூடிய அளவுக்குப் பேராற்றல் பொருந்திய பெருமகனார் தான் இப்பொழுது குறளுக்கு இங்கே உரையெழுதியிருக்கிறார்" என்றெல்லாம் அடுக்கடுக்காக அவர் ஆற்றிய உரை இப்போதும் என் நெஞ்சத்தில் ஆழப் பதிந்துள்ளது. நான் அந்த நூலின் முன்னுரையில் "இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவது" என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதைப்பற்றி அ.ச.ஞா.குறிப்பிட்டபோது, "இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவது என்றால் இமயமலையை முதலில் நினைக்கிறோம், அடுத்து பொன்னாடை. இமய மலைக்கு என தனிச் சிறப்பு ஒன்று உண்டு. ஆல்ப்ஸ் மலை போன்றவற்றிற்கு அந்தச் சிறப்பு கிடையாது. இமயமலை மட்டும் காலையில் ஒரு காட்சி, மதியம் ஒரு காட்சி, மாலையில் ஒரு காட்சி தரும். அந்த அற்புதமான ஒரு உருவகத்தைச் செய்தாரே அது கலைஞருக்குத் தான் முடியும். பொன்னாடை போர்த்துவது என்றால் பொன்னாடை என்றால் நான் இருக்கிற கோணத்தில் இருந்து பார்த்தால் அது ஒருவிதமாக ஒளி தரும்.
எதிர்த்தாற் போல் இருக்கிற நீங்கள் பார்த்தால் ஒருவிதமாக ஒளி தரும். இது பொன்னாடையின் சிறப்பு. ஆதலால்தான் கலைஞர் இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவது போல என்று குறிப்பிட்டுள்ளார்" என்று விளக்கினார். அதைப்போலவே முதல் அதிகாரத்திற்கு நான் கடவுள் வாழ்த்து என்று குறிப்பிடாமல் "வழிபாடு" என்று தலைப்பு தந்திருந்தது பற்றி விரிவாக விமர்சித்ததோடு, திருவள்ளுவரே திரும்ப வந்து அந்த அதிகாரத்திற்குப் பெயர்சூட்டச் சொன்னால் அவர் கடவுள் வாழ்த்து என்று வைக்க மாட்டார், வழிபாடு என்றுதான் பெயர் வைப்பார் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இறுதியாகத் தன் உரையை முடிக்கும்போது, "கலைஞரின் இந்த உரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக் கொள்ளவில்லை, அந்தப் பிரச்சினைக்கே இடமில்லை. அறிவினால் வைக்கப்படுகின்ற விருந்து. அந்த விருந்தைப் போற்றி மகிழ்ந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
இவ்வாறு அந்த விழாவிலே என்னைப் பாராட்டிய ஞானசம்பந்தனார் அவர்கள் அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை ஒருமுறை பாராட்டியிருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938ஆம் ஆண்டு நடைபெற்றதே, அந்தத் தொண்டை மண்டலப் பள்ளியின் மன்றத்தில் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் தலைமையில் "கலை, கலைக்காகவா? மக்களுக்காகவா?"
என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. நான் "கலை மக்களுக்காக" என்ற தலைப்பில் வாதிட்டேன். ஞான சம்பந்தனார் "கலை கலைக்காக" என்று வாதிட்டார். அப்போது என் கருத்திலே அவருக்கு மாறுபாடு இருந்தாலும், நான் வாதிடும்போது சொன்ன ஒரு உவமையை அப்போது என்னிடத்திலே வெகுவாகப் புகழ்ந்தார். "கலை, கலைக்காக என்று சொல்ல இயலாது. விளக்கு எப்படி விளக்குக்காக இல்லையோ, அதைப்போல கலை, கலைக்காக அல்ல, மக்களுக்காகத்தான்" என்று கூறிய உவமையைப் பாராட்டியவராகும்.
அவர் என்னுடைய உரையை நல்லுரை என்று பாராட்டியதை, திருக்குறளுக்குக் கருணாநிதி எழுதிய உரை சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில், பேராசிரியர் தலைமையில் முதுபெரும் புலவர் ஞான சம்பந்தனார் அங்கீகாரத்தோடு அரங்கேறியது என்ற ஒரு வரலாற்று ஏட்டினை கலைஞர் என்னுடைய வாழ்க்கைப் புத்தகத்திலே இணைத்ததாகவே அன்றும் கருதினேன். இன்றும் கருதுகிறேன். விழாவில் வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நன்னன் அந்த நூலுக்குப் பதிப்புரையும் எழுதியிருந்தார்.
அதைப் பதிப்புரை என்பதைவிட நான் எழுதிய அந்த உரையினைப் பற்றி ஒரு ஆய்வுரை தீட்டியிருந்தார் என்றுதான் கூற வேண்டும். 16 பக்கங்களைக் கொண்டது அந்தப் பதிப்புரை. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் விழாவிலும் சுருக்கமாகப் பேசியிருந்தார். சுமார் 20 திருக்குறளை எடுத்துக் கொண்டு அதற்கு நான் எழுதிய உரையையும் குறிப்பிட்டு, ஒவ்வொன்றின் மீதும் ஒரு ஆய்வு நடத்தியிருந்தார் புலவர் நன்னன். முழுமையாக அந்த உரையினைப் படித்தால் திரும்பத் திரும்ப அதையே படிக்க வேண்டுமென்ற எண்ணம்தான் மேலோங்கும்.
எனினும் அந்த உரையிலிருந்து சில வரிகளை இந்த வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறச் செய்ய விரும்புகிறேன். "குறளுக்கு முதலில் தோன்றிய பத்து உரைகளோடு இன்று வரை எத்தனையோ உரைகள் வந்துள்ளன. அவற்றுள் இக்காலத் தேவையைச் சரியாக ஈடு செய்ய வல்லதாய் எழுந்ததே கலைஞர் உரை. வள்ளுவரின் பெண் வழிச்சேறல் எனும் அதிகாரத்தைத் தன் உரையின் வாயிலாக, பழைய உரையாசிரியர்களால் பெண்மைக்கு ஏற்பட்டிருந்த பழியை நீக்கியுள்ளார்.
பகுத்தறிவாளராகிய கலைஞர் ஊழ் என்னும் அதிகாரத்திற்குத் தெளிவானதொரு விளக்கத்தைத் தந்திருப்பதோடு அந்தக் கருத்து பற்றிய மாந்தரின் குழப்பம், அதனால் ஏற்படும் அச்சம், கவலை, கையறுநிலை ஆகிய அனைத்துக்கும் தீர்வும் காட்டியுள்ளார். கலைஞர் ஒரு பாவலருமாவார். ஆதலின் அவர்தம் உரைநடையிலும் பாநலம் காணப்படுவது இயல்பேயாகும். அதற்கு இந்த உரையிலே ஏராளமான சான்றுகள் உண்டு. கலைஞர் வள்ளுவர் கோட்டம் அமைத்ததும் குறளோவியம் தீட்டியதும் போல் இக்குறள் உரை வகுத்ததும் குறள்நெறி பரப்பும் பணியில் குறிப்பிடத்தக்க விழுமிய பணியாக அமைந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பரிமேலழகர் முதலிய பழைய உரைகாரர்களும், திரு.வி.க., புரட்சிக்கவிஞர், மு.வ. போன்ற புத்துரைகாரர்களுமாகிய உரையாசிரியர் பற்பலருள் கலைஞர் தம் பணியால் தனித்துச் சிறக்கிறார். தொல்காப்பியரின் 'அகர முதல னகர இறுவாய்' என்னும் கூற்றுக்கிணங்கத் திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கி 'ன' கரத்தில் முடிவதைப் போன்றே கலைஞருரையும் 'அ'கரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடியும் நலம் அறிந்து மகிழத்தக்கது.
இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப் பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக்காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. கலைஞர் உரையின் தேவை குறித்தும் கருத்து வேறுபாடு எழ இடம் இல்லை. திருக்குறள் கலைஞர் உரை மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பாக வெளிவருகிறது."
திருக்குறள் உரைநூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய பொதுச் செயலாளர்தான் அந்த நூலுக்கு அணிந்துரையும் வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையைப் பேராசிரியர் அன்பழகனார் ஒரு கவிதையாகவே யாத்திருந்தார். அந்தக் கவிதை முழுவதும் இந்த நூலிலே இடம் பெற வேண்டிய ஒன்றாகும். எனினும் அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி மட்டும் வருமாறு :- திருக்குறள் வகுத்திட்ட வாழ்க்கை நெறியொன்றே திருவிடத்தின் பண்பாட்டு ஊற்றுக்கண் ஆகலின் திருமறை உரைபொருள் எவரும் எளிதுணர கலைஞர் திருக்குறள் கருத்துரை வரையலானார் கலைஞர் குறட்பா மொழிந்திடும் பொருளொன்றே எனினும் குறள்பொருள் தெளிவார் உணர்திறன் வேறாகலின் குறட்பா சொற்றொடர் புணர்வகை யாலன்றிக் குறள்நெறி உளத்தூன்ற உரைதந்தார் கலைஞர் தெளிந்த சிந்தையன், தேர்ந்த புலமையன், நுண்மாண் நுழைபுலம் வாய்த்த மதியினன், ஆழ்ந்த கருத்தினன், அசைவிலா உறுதியன், வெல்லுஞ் சொல்வலான், சோர்வு மிலான், கொண்ட கொள்கையே கோட்பாடாய் ஏற்றவன் எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியன்.
பகுத்தறிவுத் திறலோன், பண்பினை மறவோன் பொங்குநடையினில் 'சங்கத்தமிழ்ச்' சாறளித்தோன் பளிங்குப் பாவையெனக் 'குறளோவியம்' படைத்தோன் தெளிதமிழின் நடைபலவும் வல்லவனாம் கலைஞர் "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாகட்டும்" எனத் துணிந்து தமிழே தனது உயிர்மூச் செனவும் தமிழர் வாழ்வே தன்வாழ்வென வுங்கொண்டு இனநலம் மொழிநலம் காக்கும் தொண்டே தன்பிறவிக் கடனென்று ஏற்ற செம்மல்! தன்மானத் தந்தை பெரியாரின் உணர்வு காக்கும் மைந்தன்!
இனமான ஏந்தல் அண்ணாவின் இதயம் நாடிய இளவல்! இனமாந்தர்தம் இழிவு துடைத்திட முனைவோருக்கோ தோழன்! இலட்சியப் பணியினில் கலைஞர் என் பெருமைக்குற்ற நண்பர்! தொண்டால், தியாகத்தால், திறமையால், பெற்ற தகுதியால், தமிழினத்தின் தலைவரான கலைஞர் தமிழர் வாழ்வை மயக்கிடு 'மாயை' அகன்றிட உய்வு நெறியாம் குறளறம் விளங்கிடத் தன்மதிநுட்பத் திறன்காட்டும் உரைதந்தார் இன்று அதனதிநுட்பம் காட்டலும் எளிதன்றே எமக்கு! தேனிறால் திருக்குறள் எனிலோ அதன் பிழிவே இவ்வுரை என்பேன்.
தித்திக்கும் தேன்சுவையே யன்றி மருத்துவப் பயனும் இவ்வுரைச் சிறப்பாம்! பயில்தற்கும் தெளிதற்கும் எளிதாகும் இவ்வேடு துயில்நீங்கி எழும் தமிழர்க்கோர் கைவிளக்கு! நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இளைய தலைமுறையினர் தமக்கோ வாழ்வினில் இருளகற்றி வழிகாட்டும் திருவிளக்கு! விழாவின் இறுதிக் கட்டமாக என்னை ஏற்புரை என்ற பெயரில் நன்றியுரையாற்ற நவின்றார்கள். எனது ஏற்புரையில், திருக்குறளின் மீதும், திருவள்ளுவரின் மீதும் இளமைக் காலம் தொட்டு இருந்த பற்று, பாசம் காரணமாக நான் ஆற்றிய பணிகளையெல்லாம் பட்டியலிட்டேன்.
354 குறள் பாக்களுக்குக் குறளோவியம் தீட்டியது குறித்தும், சட்டப் பேரவையிலே திருவள்ளுவர் படத்தினை வைக்க வேண்டுமென்று பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது கோரிக்கை வைத
்து அது நிறைவேறியது பற்றியும், பேருந்துகளில் திருக்குறளை எழுதச் செய்து திருவள்ளுவர் படத்தை வைக்கச் செய்தது குறித்தும், அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் திருவள்ளுவர் படத்தினை வைக்க ஏற்பாடு செய்தது குறித்தும், திருவள்ளுவர் படத்தினை வரைந்த வேணு கோபால் சர்மா குடும்பத்திற்கு நிதி வழங்கியது பற்றியும், வள்ளுவர் கோட்டம் எழுப்பியது குறித்தும், அதன் திறப்பு விழாவிற்கு நான் அழைக்கப்படாதது பற்றியும், அதற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியபோது அதே வள்ளுவர் கோட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது பற்றியும் வரிசைப் படுத்தினேன். ஆம், இந்தப் பட்டியலிலே குமரிமுனையிலே உள்ள திருவள்ளுவர் சிலை இடம் பெறவில்லை.
காரணம், இந்த உரை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலிலே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. என்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் திருக்குறளும், திருவள்ளுவரும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றவர்களோ அதைப் போலவே அந்தத் திருக்குறளுக்கு நான் எழுதிய உரை வெளியீட்டு விழாவும் அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. இதற்கு முன்பு 7-4-96 தேதிய ஆனந்த விகடன் ஏடு தனது தலையங்கத்தில், "ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால கலைஞர் ஆட்சியை என்னவென்று வர்ணிப்பது?
தன் விருப்பம் போல் தர்பார் நடத்திய சர்வாதிகார ஆட்சி என்பதா? லஞ்சம் தலைவிரித்தாடவிட்ட ஊழல் ஆட்சி என்பதா? ஏழைகளுக்கான நலத்திட்டங்களிலும் சுரண்டி கொள்ளை யடித்த சுரண்டல் ஆட்சி என்பதா? உரிமைகளுக்குக் குரல் கொடுத்தவர்கள் மீது தொண்டர்களை ஏவிய பயங்கரவாத ஆட்சி என்பதா? உண்மையில் இப்படிப்பட்ட அத்தனை பெயர்களும் இந்த ஆட்சிக்குப் பொருத்தம். சட்டங்களையே செல்லாக் காசாக்கிய ஆட்சி ஆயிற்றே! இந்த அழகில் அகில இந்திய காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டிருக்கிறது.
இது ஒன்று போதுமே, காங்கிரஸ் தலைமை தமிழனுக்கு இழைக்கும் நயவஞ்சகத் துரோகம்! இந்த உடன்பாட்டுக்காகவே மானம், ரோஷம் உள்ள தமிழன் இந்தக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்று தீர்மானிக்கவேண்டும். அப்படிக் கொதித்தெழும் மக்கள் உணர்வுக்கு எதிர்க்கட்சியினர் உதவி புரிய வேண்டும். எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்துபோகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று எழுதியது.
ஆனந்தவிகடனின் அழுத்தந்திருத்தமான இந்தத் தலையங்கம் எழுதப்பட்ட நாளான 7-4-1996 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் நானும், கழக முன்னணியினரும், தோழமைக் கட்சியின் தலைவர்களும் பிரச்சாரத்திலே ஈடுபடத் தொடங்கினோம். ஆளுங்கட்சியின் அணி; பணத்தை பணம் என்று பார்க்காமல் வாரி இறைத்தது.
