உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மையம் கொள்கிறது புயல்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மையம் கொள்கிறது புயல்! · 307 / 391

மையம் கொள்கிறது புயல்! வா னிலை அறிக்கையில் வங்கக் கடலிலோ அல்லது இந்துமாக் கடலிலோ சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக; காற்றழுத்த மண்டிலம் உருவாகி புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும்; அது மேலும் வலுப்பெற்று கடற்கரையை இத்தனை மணி நேரத்திற்குள் கடக்கலாமென்றும்; அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடுமென்றும் தெரிவிக்கப்படுவது போல, தமிழ் நாட்டில் ஜனநாயக ரீதியில் அமைந்த ஆட்சிக்கு அரசியல் சட்ட 356-வது பிரிவு; புயலாக மாறித் தாக்கும் அபாயம் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்பட்ட செய்தியாக அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாங்களும் சரியாகவே உணர்ந்திருந்தோம்.

காரணம் அதற்கான வேகமான முயற்சியில் ஜெயலலிதா மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்! "இல்லை" என்று டெல்லியின் குரல் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தாலும்; அது "உண்டு" என்பதற்கான உண்மையைத்தான் எதிரொலிப்பதாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படியொரு "எதிர்பார்ப்பு" என் நெஞ்சில் சுமையாக இல்லாமல் அன்னத்தின் தூவி போல மிக லேசாகவே இருந்த காரணத்தால்; என் வழக்கமான பணிகளை நிறுத்தாமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தவாறு மகிழ்ச்சியுடன் இருந்தேன். அந்த நிலையில்தான் 1990 டிசம்பர் 29-ஆம் நாள் இராமநாதபுரம் கீழக்கரையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டேன். விழா மேடையிலே அமர்ந்திருந்த போதே அருகிலிருந்த நண்பர்கள் ஆட்சிக் கலைப்பு குறித்து ஐய வினாக்களை எழுப்பிய வண்ணமிருந்தனர்.

அப்போது மேடையில் அமர்ந்துகொண்டே, இதோ இந்தப் புதுக்கவிதையை எழுதி; என்னுரையின் இறுதியில் அந்தக் கூட்டத்தில் படித்துக் காட்டினேன். "காலை முதல் அரசு அலுவல் புரிந்து களைப்பாற வேண்டி கடற்கரைக்குச் சென்றேன் கனிவுடனே என் தோளைத் தொட்டு கவலையுடன் நண்பன் கேட்டான் கலைப்பார்களோ? என்று! கவலைப்படாதே நண்பா! கலைத்தாலும் மீண்டும் கருவாவோம்! திருவாவோம் என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே நண்பன் கடல் மண்ணைக் கையால் அள்ளி கடலின் அலை மீது போட்டான் நண்பா!

புரிகிறதா? நீள் கடல்தான் நாம் நின் கைமண்ணே கலைப்புச் செய்தி எனச் சொன்னேன்! நெகிழ்ந்து போனான் நண்பன்!" இந்த மாநாட்டிலே கலந்து கொண்டு விட்டு அன்றிரவு மதுரையிலே வந்து நான் தங்கியபோதுதான் அப்போது அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காளிமுத்து, தன் குடும்பத்தினரோடு வந்து என்னைச் சந்தித்து கழகத்திலே தன்னை இணைத்துக் கொண்டார். அப்போதும், அதற்குப் பிறகும் அவர் அ.தி.மு.க.

பற்றியும், அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா பற்றியும் வெளியிட்ட அறிக்கைகள், பேச்சுக்கள் அவற்றையெல்லாம் மீண்டும் ஒருமுறை இப்போது குறிப்பிடா விட்டாலும் அவற்றை நினைத்துப் பார்த்து சிரித்துக்கொள்கிறேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக நடத்திய கழக அரசின் சார்பில் பாவேந்தரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும் என்று நான் அறிவித்ததற்கிணங்க பாவேந்தர் அவர்களின் மகன் திரு.

மன்னர் மன்னன், மகள்கள் திருமதி சரசுவதி, திருமதி வசந்தா ஆகியோரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு இலட்ச ரூபாயும், மறைந்த திருமதி ரமணி அம்மையார் அவர்களின் பிள்ளைகள் அனைவர்க்கும் இரண்டு இலட்ச ரூபாயும் பரிவுத் தொகையாக அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பாவேந்தரின் நூல்களை உரிமை பெற்று பதிப்பித்து வந்த பதிப்பகங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் அளித்து அந்த உரிமைகளை தமிழக அரசு பெற்றது.

பாவேந்தர் நூல்களை நாட்டுடைமை ஆக்கியமைக்காக இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் எனக்கொரு பாராட்டு விழா 31-12-90 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிலே பேசிய முத்தமிழ்க் காவலர் அண்ணன் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகள் வருமாறு:- "தகுதி உடையவர்கள், தகுதி உடையவருக்கு இங்கே பாராட்டு விழா நடத்துகிறார்கள். கலைஞர் அவர்களை, அவருடைய தமிழ்த் தொண்டை, மற்றவர்களை விட ஐம்பதாண்டு காலமாக நான் நன்கறிந்து வருகிறேன்.

சோதனை மிகுந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்து, வேதனைகளைத் தாங்கிக் கொண்டு தமிழுக்கு அவர் செய்த தொண்டு ஏராளம். தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வருதல் வேண்டும் என்று கனவு கண்டவர் பாரதிதாசன். அவருடைய நூல்களை அரசுடைமையாக்கி ஐந்து கோடி தமிழ் மக்களுடைய நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் தமிழிலே இல்லை என்று சொன்ன கவிஞரின் ஏக்கத்தைப் போக்க தெருக்கள் எல்லாம் தமிழ் மணக்கச் செய்துள்ளார்.

நல்ல தமிழ்ப் பெயர்களை ஊர்களுக்குச் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கலைஞர். இந்த நாட்டுக்காக, மொழிக்காக, மக்களுக்காக, இந்தச் சமுதாயத்திற்காக அவர் பணியாற்றி வருகின்ற இந்த நேரத்தில் எழுத்தாளர்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அவர்கள் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவது? எதிர்க் கட்சியாக இருந்து செயல்படுபவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டுமென்று விரும்பினால், கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்த தொண்டுகளை எல்லாம் எண்ணிப் பார்த்து அதைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

அன்பழகனோடு சேர்த்து பத்து பேரை எம்.எல்.ஏ. பதவிகளைப் பறித்துக்கொண்டு சட்டசபையிலிருந்து அப்போது வெளியேற்றினார்கள். அப்போது கலைஞர் பொறுமையாக நடந்துகொண்டவிதம் கண்டு உலகமே வியப்படைந்தது." முத்தமிழ்க் காவலரின் இந்தப் பாராட்டு; என் பணியில் புதிய உற்சாகத்தை வழங்கியது. ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக காங்கிரீட் வீடுகள் கட்டித்தரும் மகத்தான திட்டம் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. 91-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நற்பணிப் பயணம் என்ற பெயரால் 272 கிராமங்களில் கட்டப்பட்டிருந்த 4,635 காங்கிரீட் வீடுகளை ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, அவ்வாறே செங்கற்பட்டு, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன்.

இரண்டு நாட்களில் நான் மேற்கொண்ட நற்பணிப் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அந்த வீடுகளுக்கான உரிமைகளைப் பெற்றார்கள். உத்தரப்பிரதேசம், லட்சுமணபுரியில் பிரதமர் சந்திரசேகர் அளித்த பேட்டியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு "டிக் டேட்" செய்கிறது என்றும், முக்கிய பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கூறுகிற ஆலோசனைகளை தமிழக அரசு கேட்க வேண்டுமென்றும் கூறியிருந்தார். அதுபற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "நியாயமான வேண்டுகோளை உரிய முறையில் கேட்டுத்தான் கழக அரசு மத்திய அரசை அணுகி இருக்கிறதே அல்லாமல், மத்திய அரசுக்கு எதையும் டிக்டேட் செய்யவில்லை.

இப்போதுள்ள மத்திய அரசு, மாநில அரசுக்கு எந்த அறிவுரை கூறி, அதை மாநில அரசு ஏற்கவில்லை என்று பிரதமர் எதையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டவில்லை. சமீபத்தில் இலங்கைப் போராளிகளைப் பொறுத்தவரையில் மாநில அரசும், மத்திய அரசும் கலந்து பேசித்தான், அந்த அடிப்படையில்தான் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையங்களுக்கு காமராஜர், அண்ணா பெயர் வைக்கக்கூட முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிடம் 'ரிக்வஸ்ட்' தான் வைத்தோமே தவிர 'டிக்டேட்' செய்தது கிடையாது.

நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசிடம் மாநில அரசுகள் வலியுறுத்துகிற உரிமைக் குரலை 'டிக்டேட்' பண்ணுவதாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது" என்று கூறினேன். மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் சகாயும், நானும் முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களும் 17-12-90 அன்றையதினம் கலந்து கொண்ட ஜி.கே. ரெட்டி தேசிய நினைவு விருது வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றபோது, மத்திய அமைச்சரையும் வைத்துக் கொண்டு சஞ்சீவ ரெட்டி பேசும்போது, "நம்நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது.

காஷ்மீர் போய் விட்டது, பஞ்சாப் போய் விட்டது, அஸ்ஸாம் போய்க் கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில்கூட நூற்றுக்கணக்கில் சாவு ஏற்பட்டு அதுவும் வட மாநிலங்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் உண்மையல்ல. இங்கே எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அமைதியைத் தமிழ்நாட்டில்தான் பார்க்க முடிகிறது.

வீணாக சட்டம் கெட்டுவிட்டது, அமைதி கெட்டு விட்டது என்று பொய்யாகப் பிரச்சாரம் செய்வது நாட்டு நலனுக்கு நல்லதல்ல" என்று கூறினார். டிசம்பர் 25-ந்தேதியன்று சென்னைக்கு சங்கராச்சாரியாரைச் சந்திப்பதற்காக வந்த பிரதமர் சந்திரசேகர் அவர்களை ஆளுநர் பர்னாலா, நான், பேரவைத் தலைவர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றோம். விமானநிலையத்திற்கு ஜெயலலிதாவும் அவரது கட்சி முன்னணியினரும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் வந்திருந்து பிரதமரை வரவேற்றனர்.

காஞ்சிபுரத்தில் பிரதமரிடம் செய்தியாளர்கள், தமிழக அரசு ஜனவரி மாதத்திற்குள் கலைக்கப்பட்டு விடுமென்று ஒரே வதந்தியாக இருக்கிறதே என்று கேட்டபோது, "யார் இந்த வதந்தியைக் கிளப்பினார்களோ எனக்குத் தெரியாது. நான் பொதுவாக எச்சரிக்கை செய்வதில்லை. எங்கேயாவது நாட்டில் குழப்பமோ, சட்டம் ஒழுங்கோ பாதிக்கப்பட்டால் மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். வேறு ஒன்றும் இல்லை" என்று கூறினார்.

அன்று மாலையில் பிரதமர் சந்திரசேகருக்கு ஜெயலலிதா வீட்டில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. பிரதமரை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா அங்கேயுள்ள செய்தியாளர்களிடம், மத்தியில் சந்திரசேகர் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாகவும், தமிழக சட்டம், ஒழுங்கு நிலைமை மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறியிருப்பதாகவும், ஏற்கனவே பல முறை தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தியதைப் போலவே இந்த முறையும் வற்புறுத்தியதாகவும் கூறினார்.

அதற்கடுத்தநாள் சென்னையில் ராஜ்பவனில் தங்கியிருந்த குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களை ஜெயலலிதாவும் அவருடைய கட்சியினரும் சென்று சந்தித்தார்கள். அவரிடமும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, இலங்கைப் போராளிகளைக் கைது செய்வதாக முதல்வர் கூறுவது வெறும் கண்துடைப்பு என்றெல்லாம் என்மீதும் அரசின் மீதும் புகார்களைக் கூறினார். அதற்கு மறுநாள் 27-ந் தேதியன்று ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா அவர்களைச் சந்தித்து தமிழக அரசைப் பற்றிப் புகார் கூறினார்.

29-ந்தேதி டெல்லி சென்று ஜெயலலிதா காலையிலே ராஜீவ்காந்தி அவர்களையும் இரவு 7 மணி அளவில் பிரதமர் சந்திரசேகர் அவர்களையும் சந்தித்து கழக அரசின் மீது புகார் மனுவைக் கொடுத்தார். மறுநாள் மாலையில் ஜெயலலிதா குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்தப் புகார் மனுக்களில் விடுதலைப் புலிகளின் செயல்களுக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இதே ஜெயலலிதாதான் இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கழக அரசு, விடுதலைப் புலிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று குறை கூறி நிறைய உதவி செய்ய வேண்டுமென்பதாக ஆங்கில ஏடுகளுக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்!

என் செய்வது; நாடகமே உலகம்! அதனால் இப்படி அரசியலிலும் இரட்டை வேடம் தாங்கினார் அவர்! ஜெயலலிதா அடுத்தடுத்து பிரதமரையும், குடியரசுத் தலைவரையும், ஆளுநரையும் சந்தித்து புகார் மனு கொடுத்ததும், பிரதமர்; ஜெயலலிதா வீட்டிற்கே சென்று தேனீர் விருந்தில் கலந்து கொண்டதும், செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, ஆட்சிக் கலைப்பு இப்போது இல்லை என்பது போல சாதுர்யமாக பிரதமர் சந்திரசேகர் தெரிவித்ததையெல்லாம் நம்பாமல் மக்களிடையே ஆட்சிக் கலைப்பு நடைபெற்று விடுமோ என்ற சந்தேகம் பரவலாகத் தோன்றியது.

பத்திரிகைகளும் அவ்வாறு செய்திகளை வெளியிடத் தொடங்கியிருந்தன. புயல், கரையைக் கடக்கும் தேதிதான் தெரியாமல் இருந்தது. 3-1-91 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய தலையங்கத்தில் "தனது கடமைகளை ஒரு மாநில அரசு சரிவர நிறைவேற்ற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டால் 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தலாம் என அரசியல் சட்டத்திலே கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு நிலைமை இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிரட்டல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவதோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதோ ஒரு அரசை நீக்க சரியான காரணங்களாக இருக்க முடியாது. எனவே ஒரு மாநில அரசுக்கு இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் போக்கிலிருந்து மத்திய அரசிலே இருப்பவர்கள் தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் இருவிதமான பொருள்கள் தரும் விதத்தில் அறிக்கைகள் தருவதை பிரதமர் கைவிட வேண்டும்" என்று எழுதியது.

8-1-91 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதிய தலையங்கத்தில் "தமிழக அரசு இலங்கைத் தீவிரவாதிகளுக்கு எதிராக மனப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்- கின்றது. இந்த உண்மையைத் தவிர 1200 தீவிரவாதிகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கெடுபிடி அதிகமாக்கப் பட்டிருக்கிறது. முடக்கி வைக்கப்பட்டிருக்கிற தீவிரவாதிகள் பலரை மத்திய அரசைக் கலந்து கொண்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைகள் கருணாநிதியை விமர்சனம் செய்வோரைத் திருப்திப்படுத்துவதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் நாட்டு நலனைப் பாதுகாப்பதை விட வெறும் அரசியல் பண்ணுவதில் அதிக அக்கறை காட்டுவதாக இருக்கிறார்கள்" என்று எழுதியது. இந்து ஏடு வெளியிட்ட செய்தியில், "தமிழ்நாடு அரசுக்கும், அசாம் மாநில அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் தொடர்புகள் உண்டு என்று கூறப்படுவது காற்றிலே உருவாக்கப்படும் வெறும் கற்பனையே தவிர வேறல்ல.

மத்தியிலே உள்ள ஆளும் கட்சிக்கும், அதிலும் குறிப்பாக பின் இருக்கையிலே இருந்து ஆளும் கட்சியை இயக்கி வரும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாகவே இந்தப் பரவலான யூகங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சந்தேகங்களாகும்" என்று குறிப்பிட்டது.

10-1-91 தேதிய 'ஸ்டேட்ஸ்மென்' எழுதும்போது, "தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டுமென்று கூப்பாடு போட்டு தொண்டை வறண்டு போன அ.தி.மு.க.-காங்கிரஸ் குள்ள நரிகள் புதிதாக உல்பா, உல்பா என்று அலறத் தொடங்கியிருக்கின்றன. இந்த அலறலாவது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழி கோலிவிடாதா என்பது அவர்களின் நப்பாசை. இந்த அலறலுக்குச் செவி சாய்ப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் பிரதமர் சந்திரசேகர்.

காரணம், அ

வரது நிலைமை அப்படி. தி.மு.கழக அரசைக் கலைத்தால், அவரது மனச்சாட்சி உறுத்தும். கலைக்காவிட்டால் மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து வரும் அ.தி.மு.க. வும் இ. காங்கிரசும் அவரை உறுத்தும்" என்று குறிப்பிட்டது. 6-1-91 அன்று கழகத்தின் பொதுக்குழு கூடி அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரின் திட்டமிட்ட சதியை, தீய பிரச்சாரத்தை முறியடிக்க தேசிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகளின் சார்பாக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சார இயக்கத்தை நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாட்டில் உல்பா முகாம்கள் இருப்பதாக பிரதமர் சந்திரசேகர் 10-1-91 அன்று நாடாளுமன்ற மக்கள் அவையில் கூறினார். மறுநாள் மாநிலங்களவையில் முரசொலி மாறன் பேசும்போது, தமிழ்நாட்டில் உல்பா முகாம்கள் இருப்பதாகக் கூறும் பிரதமர் அதை நிரூபிக்கத் தயாரா என்று அறை கூவல் விடுத்துக் கேட்டார். மேலும் மத்திய அரசு கொடுத்த தகவல்கள் தமிழக முதல்வர் மூலமாக யாழ்ப்பாணத்திலுள்ள எல்.டி.டி.இ. தலைமையகத்துக்கு அனுப்பி வருவதாக சந்திரசேகர் சொன்ன குற்றச்சாட்டு பற்றிக் குறிப்பிட்டு, இதற்கு முன்னால் எந்தவொரு பிரதமரும் ஒரு முதல் அமைச்சர் மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டைச் சொன்னதில்லை என்றார் முரசொலி மாறன்.

தமிழ்நாடு முதல்வரின் தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் மாறன் அப்போது கேட்டார். பிரதமர் சந்திரசேகர் அன்றையதினம் மாநிலங்களவையில் "எந்தவொரு மாநிலத்திலும் அரசியல் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்திக் குடியரசுத் தலைவரின் ஆட்சியைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை" என்று உறுதியளித்தார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று பிரதமர் சந்திரசேகர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தி.மு. கழக அரசு கவிழ்க்கப்பட்டால் சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து தேசிய முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிகள் நடத்தும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி கூறினார்.

ஆட்சிக் கவிழ்ப்பு பிரச்சாரத்தை முறியடிக்க மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதற்காக சென்னை தம்புச் செட்டித் தெருவில் ஜனவரி 21ஆம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முரசொலி மாறன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நானும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், ஏ. நல்லசிவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. மாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

ஜனவரி 23-ந்தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையிலே அ.தி.மு.க. வினரால் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் தாக்கப்பட்ட வேதனையான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அ.தி.மு.க.விலிருந்து விலகி வந்த திருநாவுக்கரசு அணியை அவையிலே எந்தப் பெயரில் அழைப்பது என்பது குறித்து பேரவைத் தலைவர் தனது தீர்ப்பை அளித்தவுடன், அந்தத் தீர்ப்பின் மீது அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.ராதா குறுக்கிட்டுப் பேச முனைந்தார்.

அப்போது பேரவைத் தலைவர் எழுந்து "அ.தி.மு.க. வினரால் கொடுக்கப் பட்ட கோரிக்கையை ஏற்று கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி அந்த மூன்று பேருக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் எந்தக்கட்சியையும் சாராதவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்தெல்லாம் ஒரு கணவன் தன்னுடைய மனைவி துரோகம் செய்கிறாள் என்று கருதி, வீட்டை விட்டுத் துரத்தி, அதுவும் போதாமல் நீதிமன்றம் சென்று விவாகரத்தும் வாங்கிய பிறகு, கணவன் எதற்காக மனைவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்" என்றார்.

உடனே எஸ்.ஆர்.ராதா எழுந்து, கணவனுக்கு மனைவி துரோகம் செய்துவிட்டாள் என்ற அருமையான கருத்தை அவைத் தலைவர் குறிப்பிட்டார் என்றார். உடனே நான் குறுக்கிட்டு, அவைத் தலைவர் மிகுந்த எச்சரிக்கையோடு அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். துரோகம் செய்தாள் என்று "கருதி" என்று தான் குறிப்பிட்டாரே தவிர, துரோகம் செய்ததாகக் கூறவில்லை.

சந்தேகப்படுகிற கணவன்கள் சிலர் எங்கும் இருக்கலாம் என்றேன். தொடர்ந்து பி.எச். பாண்டியன் எழுந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஏதோ கூறுவதற்கு முயற்சித்தவுடன், எஸ்.ஆர். ராதா குறுக்கிட்டு, "அண்ணாவைத் தெரியாதவர்கள், பெரியாரைத் தெரியாதவர்களை எல்லாம் இங்கே பேச அனுமதிக்கிறீர்களே" என்றார்.

அதற்கு பி.எச். பாண்டியன், "ஜெயலலிதாவிற்கு பெரியாரைத் தெரியுமா? அண்ணாவைத் தெரியுமா? நான் தமிழன், எனக்கு எல்லோரையும் தெரியும், பெரியாரையும் தெரியும்" என்றார். பேரவைத் தலைவர் திரு. தமிழ்க்குடிமகன் இரு சாராரையும் அமைதிப்படுத்திவிட்டு தனது தீர்ப்பின் மீது யாருக்கும் பேச அனுமதி கிடையாதென்றார். உடனே அ.தி.மு.க.வினர் எழுந்து சபாநாயகர் ஒழிக என்று முழக்கமிட்டனர். பேரவைத் தலைவரின் இருக்கை அருகே வந்து அவருடைய துண்டைப் பிடித்து இழுத்தனர்.

கையைப் பிடித்து இழுத்துத் தாக்கினர். உடனே பேரவைப் பாதுகாவலர்கள் அங்கே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களையெல்லாம் பேரவைத் தலைவரின் ஆணையின் பேரில் வெளியேற்றினார்கள். அ.தி.மு.க.வினரின் இந்த அநாகரீகச் செயலை, இந்திரா காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. காந்தி மறைந்த நாளில் ஜனநாயகத்துக்குக் கல்லறை! இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். ஆரம்பமே; அடேடே, இப்படிக்கூட நடக்குமா என்று நினைத்திடத் தோன்றும்.

இந்திய நாட்டில் மத்தியில் உள்ள அரசு என்பது, மாநில அரசுகளைத் தன்னுடைய அடிமைகளாகக் கருதாமல், தோளொடு தோள் சேர்ந்து துணை நிற்கும் தோழனாகக் கருத வேண்டும் என்பதுதான் மாநில சுயாட்சியின் அடிப்படைத் தத்துவம். ஆனால் மத்திய அரசின் "லகானை"ப் பிடிக்கும் பிரதமர்களின் தனிப்பட்ட குணநலன்களைப் பொருத்துத்தான் அந்த நிலை அமையும் என்பதற்கு ஏற்கனவே சில எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் ராஜீவ் காந்தியும், பிரதமர் வி.பி.

சிங்கும் தமிழ்நாடு அரசைக் கலந்து ஆலோசித்தனர் தோழமை உணர்வுடன்! இருவரின் அணுகுமுறை அப்படியே ஒத்திராவிடினும்; இடைக்காலப் பிரதமராக வந்த சந்திரசேகர்கூட அந்த முறையைப் பின்பற்றி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்மாநில அரசைக் கலந்து பேசி முடிவெடுக்க விரும்புகிறார் என நான் கேள்விப்பட்ட மாத்திரத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதுபற்றிய விபரத்தை இதோ கூறிவிடுகிறேன். ஆப்பிள் பழத்தையும் கத்தியையும் காட்டி "நண்பா!

இந்தப் பழத்தை இரு துண்டுகளாக நறுக்கி உனக்கு ஒரு துண்டு - எனக்கு ஒரு துண்டு" என நண்பனாக நடிப்பவன் சொல்லும்போது; அதை நம்புகிறவன் நாவில் அவனை அறியாமல் உமிழ்நீர் ஊறிவிடுமல்லவா! அதனால் ஆமோதித்துத் தலையசைத்தவாறு அவன் தோளில் கை போடுவான்; அப்போது அந்த நண்பன் ஆப்பிளை நறுக்காமல் அந்தக் கத்தியால்- தோளில் கை போட்டவனின் தொண்டைக் குழியில் குத்திச் சாய்த்து விடுவான்! அதுபோல டெல்லியிலிருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சுக்லா அவர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு; அவர் இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த கொழும்பு செல்வதாகவும், அதற்கு முன்பு என்னிடம் கலந்து பேசிட வேண்டுமென்றும், அதற்காக 28ந்தேதி (ஜனவரி 1991) சென்னை வருவதாகவும் தெரிவித்தார்.

எனக்கு அதே தேதியில் மதுரையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தபடியால் சென்னை சந்திப்பை 29ந்தேதி வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் சுக்லா அவர்கள்; 28ந்தேதி மதுரைக்கே வந்து என்னைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு மதுரைக்குக் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார். மதுரையில் என்னுடனும் முரசொலி மாறனுடனும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசினார். அவருடன் வெளியுறவுத்துறைச் செயலாளர் துபேயும் வந்திருந்தார்.

எங்களுடன் பேசியது திருப்தியாக இருந்ததாகவும், இலங்கைப் பயணத்துக்கு மிகவும் பயன்படுமளவில் இருந்ததாகவும் திரு.சுக்லா, மதுரைச் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு, கொழும்புக்குப் பயணமானார். அவர் சென்ற பின்னர், செய்தியாளர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு "என்ன சார்; சென்ட்ரல் கவர்ன்மெண்ட், உங்களிடம் ரொம்ப கார்டியலாக இருக்கிறதே! ஈழப் பிரச்சினைக்கே உங்களிடம் யோசனை கேட்டுவிட்டு கொழும்புக்குப் போகிறார்களே!

அதனால் எங்களுக்கு நம்பிக்கையிருக்கு சார்! ஆட்சியைக் கலைக்கிறது என்பதெல்லாம் சும்மா வதந்தி சார்!" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அருமை நண்பன், ஆப்பிள் பழத்துடனும் கத்தியுடனும் வந்திருக்கிறான் என்பது எனக்கும் தெரியாது, செய்தியாளர்களுக்கும் தெரியாது! அதைப் போலவே அடுத்த நாள் 29ந்தேதி டெல்லியிலிருந்து தமிழக ஆளுநர் திரு. பர்னாலா அவர்களுக்கு அழைப்பு வந்து, அவர் ஜனவரி 30ந் தேதி டெல்லி போய்ச் சேர்ந்தார்.

அன்று பகல் முழுவதும் பர்னாலா அவர்களிடம் கழக அரசுக்கு எதிரான முறையில் அறிக்கை தரும்படி வலியுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதாகவும், ஆனால் அவர் உண்மைக்கு மாறாக அறிக்கை தர முடியாது என்று மறுத்து வருவதாகவும் டெல்லியிலிருந்து எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் அவர்கள், டெல்லி தமிழ்நாடு மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து அறிக்கை தர வற்புறுத்தினார்.

அதற்கும் ஆளுநர் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு "ரா" மற்றும் "ஐ.பி." ஆகிய அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் சென்று ஆளுநரைச் சந்தித்துப் பேசினார்கள். பயனில்லை, அந்தப் பஞ்சாப் சிங்கம் மறுத்து விட்டது. இதற்கிடையே மத்திய அரசு இப்படியொரு முடிவினை எடுத்து விடுமோ என்று ஐயுற்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்து, ஜனநாயக விரோதமாக நடவடிக்கை எடுக்காதீர்கள் எனக் கேட்டுக் கொண்டதையும் நிராகரித்து விட்டு, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கழக ஆட்சியைக் கலைத்து ஆணை பிறப்பித்தார்.

தமிழகச் சட்டப் பேரவையும் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு அதிகரிக்க கழக அரசு அனுமதித்து விட்டதாகக் காரணம் கூறி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழகச் சட்டமன்றத்திலே மொத்தம் 234 இடங்களில் தி.மு.கழகம் 142 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும் அத்தகைய பெரும்பான்மை அரசைக் கலைத்தார்கள். பிப்ரவரி 2-ந் தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் அவசர அவசரமாக ஜனவரி 30-ந்தேதி இரவு ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்திய நாட்டின் தந்தை உத்தமர் காந்தியடிகளை கோட்சே எனும் கொடியவன் சுட்டுக் கொன்ற நாள் ஜனவரி 30தான்! அதே நாளில் இந்தியாவின் ஜனநாயகத்தை காங்கிரசின் தலைவர்களும், அ.தி.மு.க.வினரும் பிரதமர் சந்திரசேகரும், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனும் சேர்ந்து கூட்டுச் சதி நடத்தி கொன்று குவித்தார்கள். இதற்கான அறிவிப்பு வந்த நேரத்தில் அதே மாலை வேளையில் பெரியார் திடலில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் உரையாற்றிக் கொண்டிருந்தேன்.

கலைப்புச் செய்தி வரப்போகிறது என்று தெரிந்தே அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்து விட்டுத்தான் உரையாற்றினேன். இந்தச் செய்தி கிடைத்ததும் தமிழகமே கொந்தளித்தது. மக்கள் வீட்டை விட்டுக் கிளம்பி தெருவிலேதான் நின்றார்கள். போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. கடைகள் மற்றும் தொழிலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. அண்ணா அறிவாலயத்திற்குள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம்போல் மக்கள் கூடிவிட்டனர்.

வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து தொலைபேசியின் மூலம் எங்களைத் தொடர்பு கொண்டு ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்தார்கள். இந்தியா முழுவதும் பிப்ரவரி 6ந் தேதி முழு அடைப்பு நடத்துவதென்று டெல்லியில் கூடிய தேசிய முன்னணி இடதுசாரிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. ஆளுநர் பரிந்துரை இல்லாமலேயே இந்த ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டதை அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் கண்டித்தார்கள். தமிழகத்தில் பிப்ரவரி 3-ந் தேதியன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

என்னிடம் செய்தியாளர்கள் உடனடியாகக் கருத்து கேட்டபோது; "ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றத் தவறியுள்ள சந்திரசேகர் அவர்கள் என்னுடைய தலைமையில் இருந்த ஆட்சியைக் கலைத்ததின் மூலம் தன்னுடைய ஆட்சியைத் தற்காலிகமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு நாங்கள் அவருக்குப் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு வகையில் திருப்திதான்" எனப் பதில் அளித்தேன். மேற்குவங்க முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்கள் தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பை முறைகேடாக நடத்திய குடியரசுத் தலைவர் ஆர்.

வெங்கட்ராமன் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும், வன்முறை, கலவரம் ஏற்பட்டுள்ள மாநிலங்களை விட்டுவிட்டு அமைதி தவழ்ந்த தமிழக ஆட்சியைக் கலைத்தது, கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். திருச்சி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரும், உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரும் இந்தச் செய்தி கிடைத்ததும் தீக்குளித்து மாண்டனர். உதகமண்டலத்திற்கு அருகில் வேலுச்சாமி என்பவர் டிராக்டர் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓர் ஆட்சியைக் கலைக்க அரசியல் சட்டத்தில் ஆளுநருடைய அறிக்கை அல்லது வேறு விதத்தில் (Report of the Governor or otherwise) என்று இருக்கிறது. ஆளுநர் அறிக்கை கொடுக்க மறுத்த காரணத்தினால் "வேறு விதத்தில்" என்பதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தார்கள். ஆளுநர் இல்லாவிட்டால் கூட 'வேறு விதத்தில்' என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆளுநர் டெல்லிக்கே வரவழைக்கப்பட்டு அவர் அங்கே இருக்கின்ற நேரத்தில் அவருடைய அறிக்கையைப் பெற முடியாமல் "வேறு விதத்தில்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் கலைப்பதற்குப் போதுமான காரணங்கள் இல்லை என்பதுதானே உண்மை!

ஆட்சிக் கலைப்பை எதிர்த்து அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட மகளிரைக் காவல் துறையினர் தாக்கிய போது அதைத் தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அங்கே சென்று காவல் துறையினரைக் கேட்டதற்காக, அவரையும் கழுத்திலே குத்தி அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த நேரத்தில் காவல் துறையினர் சுற்றி நின்று கொண்டு அவரை லத்தியால் அடித்தனர். அவருடைய முதுகிலே பாளம் பாளமாக அந்த லத்தி காயங்கள் ஏற்பட்டு ராயப்

பேட்டை மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். டெல்லியிலிருந்து திரும்பிய ஆளுநர் பர்னாலா அவர்களைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது அறிக்கை எதுவும் கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்று மறுத்ததோடு, அறிக்கை இல்லாவிட்டால் "வேறு வகையில்" என்று இருக்கின்ற பிரிவைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்று கூறினார்.

1-2-91 தேதிய இந்து இதழில் வந்த தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:- "தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியல் சட்ட செயல்பாட்டின் வரலாற்றிலேயே ஈடு இணையற்ற அட்டூழியமாகும். இந்த மாநிலம் அமைதியாக இருக்கும் இந்தத் தருணத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலையான ஆட்சியை நடத்தி வரும் நேரத்தில், அரசியல் சட்டப் பிரிவுகளின்படி நிர்வாகத்தை நடத்தி வர முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்த அமைச்சரவையைக் கலைத்திருப்பது கடுமையான நெருக்கடிகளையும், அசாதாரணமான நிலைமைகளையும் சமாளிப்பதற்காக மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூச்சநாச்சமின்றி துஷ்பிரயோகம் செய்திருப்பதாகும்.

ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்தும் இந்த இழிவான செயலில் அ.தி.மு.க. மற்றும் இ.காங்கிரசுக்கு சந்திரசேகரின் அரசு கைக்கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. தி.மு. கழக அரசைக் கழுவில் ஏற்றுவதற்கு எல்.டி.டி.இ. தொடர்பு ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டபோதிலும் எல்.டி.டி.இ. உறவு என்பது இதற்கு முன்னால் இ.காங்கிரசும், அ.தி.மு.க.வும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஏற்பட்டதேயாகும்."

அதே 1-ஆம் தேதிய தினமணி இதழ் தலையங்கத்தில், "பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு இந்த அடாத செயலைச் செய்யத் துணிந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். சந்திரசேகர் தாம் சார்ந்திருந்த கட்சியை உடைத்துவிட்டு எதிர்க்கட்சியான இந்திரா காங்கிரசிடம் சரணடைந்து, பிரதமர் பதவியை எட்டிப் பிடித்தபோது பேசப்பட்ட பேரங்களில் தமிழகத்தில் தி.மு.க. அரசைக் கலைத்து விடுவதும் ஒன்றாகும்.

அந்தப் பேரம் இப்பொழுது செயல்படுத்தப் பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது. 1-2-91 அன்று நான் விடுத்த நீண்ட அறிக்கையில்; நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்குப் பிராயச்சித்தம் தேடிட குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் தனது பதவியை விட்டு விலக வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஆளுநரிடம் அறிக்கை பெறாமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து சந்திரசேகரின் கைப்பாவையாக குடியரசுத் தலைவர் செயல்பட்டிருக்கிறார் என்றும் செய்தியாளர்களிடம் விளக்கினேன்.

செய்தியாளர்கள் "சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத்தான் முக்கியமான காரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சுட்டிக் காட்டியபோது; "ஜனவரி மாதம் 11-ஆம் தேதி பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தின் இரண்டாவது பாராவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியதுதான்.

அதில் இந்தியாவிலே சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ள மாநிலங்கள் என்று பிரதமரின் கடிதத்திலே குறிப்பிட்டிருப்பது பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களைத்தான். அந்தக் கடிதத்திலே தமிழ்நாட்டைப் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. அதேபோல குடியரசுத் தலைவர் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு நாளன்று விடுத்த செய்தியிலும் பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம் மாநிலங்களில்தான் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறாரே தவிர தமிழ் நாட்டைப் பற்றி அந்த உரையிலே எதுவும் சொல்லவில்லை.

26-ந் தேதியிலிருந்து 30-ஆம் தேதிக்குள் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டிலே அப்படி என்ன கெட்டு விட்டது?" என்று ஒரு கேள்வியையே செய்தியாளர்களின் கேள்விக்கு நான் பதிலாகத் தந்தேன். தொடர்ந்து செய்தியாளர்கள் 1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கலைக்கச் சொல்லி நீங்கள் கேட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, "நாங்கள் அப்படிக் கேட்கவில்லை. 1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஒன்பது பத்து மாநில அரசுகளை ஒட்டுமொத்தமாகக் கலைத்தார்கள்.

அதே முறையில் இந்திரா காந்தி அம்மையாரும் 1980-ல் ஒன்பது மாநிலங்களை ஒட்டுமொத்தமாகக் கலைத்தார்கள். அந்த ஒன்பதில் ஒரு மாநிலமாக தமிழ்நாட்டையும் கலைத்தார்கள். நாங்கள் எந்தவிதமான நெருக்கடியும் எம்.ஜி.ஆர். அரசைக் கலைக்க வேண்டுமென்று கொடுக்கவில்லை; தி.மு. கழகம் எந்தத் தீர்மானமும் அவ்வாறு நிறைவேற்றவில்லை" என்று கூறினேன்.

2-2-91 அன்று டெல்லியில் தேசிய முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்புக் குழு கூடி தி.மு. கழக அரசைக் கலைத்ததை எதிர்த்து, பிப்ரவரி 6-ந்தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 3-2-91 அன்று பனகல் பூங்காவில் என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வி.பி. சிங், என்.டி.ராமராவ், நம்பூதிரிபாத், முரசொலி மாறன், உபேந்திரா, ப.

மாணிக்கம், நல்லசிவன், இரா.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 6ந் தேதி பொது வேலை நிறுத்தத்தையொட்டி 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழகம் எங்கும் கைது செய்யப்பட்டனர். தமிழக கழக அரசு கலைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஆந்திரா, கோவா, புதுவை மற்றும் பல மாநிலங்களில் 6ந்தேதியன்று முழு அடைப்பு பெரு வெற்றி பெற்றது. பிரதமர் சந்திரசேகர் இல்லத்திற்கு முன்பு தேசிய முன்னணித் தலைவர்கள், மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கழக அரசை டிஸ்மிஸ் செய்ததைக் கண்டித்து பிப்ரவரி 5-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அந்த இடத்திலேயே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் உரையாற்றினர். பெங்களூரில் ஆளுநர் மாளிகைக்கு முன்னால் திரு. ராம கிருஷ்ண ஹெக்டே அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி 5000 பேர் கைதாகினர். இதற்கிடையே பிப்ரவரி 5ந்தேதியன்று டெல்லி சென்று ஜெயலலிதா பிரதமர் சந்திரசேகரைச் சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க.

168 இடங்களிலும், இ.காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும் போட்டியிடுவதென்று உடன்பாடு ஏற்பட்டது. பிப்ரவரி 10-ஆம் தேதி பீகார் சட்டமன்றத்தில் அந்த மாநில ஆளுநர் முகமது யூனுஸ் உரையாற்றும்போது, "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டிருப்பது ஜனநாயக நெறிகள் துச்சமாக மதிக்கப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாகும்" என்று கூறியதோடு, "தமிழக சட்டப் பேரவையில் தி.மு.

கழக அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதிலும், ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்யாத போதிலும் ஆட்சி கலைக்கப்பட்டது" என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இதன் விளைவாக பீகார் மாநில ஆளுநர் பதவியிலிருந்து முகமது யூனுஸ் சலீம் உடனடியாக நீக்கப் படுவதாகக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 13-2-91 அன்று அறிவித்தார். அவருக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்படும் வரை உத்தரப் பிரதேச ஆளுநர் பி.சத்ய நாராயண ரெட்டி கூடுதலாகப் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசைக் கலைப்பதற்கு பரிந்துரை தருமாறு தமிழக ஆளுநர் பர்னாலா அவர்களை வலியுறுத்தியபோது கடைசி வரை அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை தமிழகத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டபோது, ஆளுநர் பர்னாலா அவர்களே தானாக முன்வந்து 13ஆம் தேதியன்று தனது பதவியிலிருந்து விலகினார். அதைப்பற்றி நான் செய்தியாளர்களிடம் "தமிழக ஆளுநர் பர்னாலா பதவி விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்குமேயானால் ஜனநாயகத்திற்கு விழுந்த இரண்டாவது பலத்த அடி என்றே அதைச் சொல்ல வேண்டும்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் தமிழக கவர்னரை மாற்றுவதாக இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இப்போது அவர் வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்பட்டார் என்றும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் பர்னாலா பதவி விலகி விட்டார் என்றும் செய்தி கிடைத்திருக்கிறது. ஆளுநர் பதவியே தேவையில்லை என்பது எங்களுடைய வாதம். அப்படி அந்தப் பதவிப் பொறுப்பிற்கு வருகின்றவர்கள் நேர்மையாகவும் இருக்கக் கூடாது என்பது சந்திரசேகரின் மைனாரிட்டி அரசின் வாதமாக இருக்கிறது என்பதை எண்ணி நான் மிகுந்த கவலைப்படுகிறேன்" என்று கூறினேன்.

குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் பர்னாலா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அவருக்குப் பதிலாக பீஷ்ம நாராயண் சிங் அவர்களைத் தமிழக ஆளுநராக நியமித்தார். மும்பை நகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. குர்ரி சாலையிலுள்ள மகாராஷ்டிரா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்ற அந்தக் கூட்டத்தில் ஜனதா தளம், காம்கார் அகாதிக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் கலந்து கொண்ட காம்கார் அகாதிக் கட்சியின் தலைவரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான தத்தா சாமந்த் கூறும்போது, "தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டில் தி.மு. கழக அரசைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் சந்திரசேகர். ஜெயப்பிரகாஷின் சீடரும், சோஷலிஸ்டுமான ஒருவர் இப்படி நடந்து கொண்டது வெட்கித் தலைகுனிய வைப்பதாக இருக்கிறது. அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டுறவை நிலைப்படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்த நெருக்குதலே இந்த ஜனநாயகப் படுகொலைக்குக் காரணம்.

தமிழகத்தில் இலங்கைப் போராளிகள் பெருக யார் காரணம்? எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், அவர் தந்த ஆதரவு காரணமாகவே தமிழகத்தில் போராளிக் குழுக்கள் பெருகின" என்றார். கழக அரசு கலைக்கப்பட்ட செய்தி கேட்டதும், கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் 'குங்குமம்' இதழில் ஒரு கவிதை வாயிலாகத் தனது குமுறலை வெளிப்படுத்தி யிருந்தார். "அடியே அனார்கலி! உனக்குப் பிறகு இந்த நாட்டில் உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம் தானடி!"

இதைப் படித்ததும் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "ஆட்சி கலைத்ததால் லாபம்தான்" என்றேன். "என்ன சொல்றீங்க" என்றார். "ஒரு அருமையான கவிதை கிடைத்ததல்லவா" - எனது இந்தப் பதிலைக் கேட்டதும் அவரிடமிருந்து பதில் இல்லை. எனது பதிலே அவரைக் கண்கலங்க வைத்து விட்டது. மௌனமாகிவிட்டார். கலைக்கும் சர்க்கார்; நிலைக்கும் சர்க்காரா? பத்மநாபா என்ற இ.பி.ஆர்.எல்.எப். தலைவரையும், அவருடன் 13 விடுதலைப் போராளிகளையும் எல்.டி.டி.ஈ.

எனப்படும் விடுதலைப் புலிகளில் சிலர் சென்னையில் படுகொலை செய்தபிறகும்கூட சில மாதங்கள் கழித்து விடுதலைப் புலிகள் இப்போது புகார் கூறும் அளவுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்கு தமிழக தி.மு.க. அரசும், தமிழ் மக்களும் ஆதரவளித்திட வேண்டுமென்றும் அவர்கள் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைத்திட இந்திய அரசுகூட பங்களா தேஷில் எடுத்தது போன்ற ராணுவ நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர்.

செய்துள்ள உதவிகளைப் பார்க்கும்போது கருணாநிதி எதுவும் உதவி செய்ததற்கான அறிகுறியே காணப்படவில்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து பத்திரிகைகளில் முறையே 4-10-1990 தேதியிலும், 8-10-1990 தேதியிலும் கழக அரசைக் குறை சொல்லி விடுதலைப் புலிகளை ஆதரித்து சிறப்பு தனிப்பேட்டி அளித்த ஜெயலலிதா முன்னுக்குப்பின் முரணாக தி.மு.க. ஆட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் தேச விரோதமாக நடக்கிறது என்றும் விடுத்த அறிக்கைகளையும் ஒரு வகையில் சாக்காக வைத்துக் கொண்டு பிரதமர் சந்திரசேகர் அவர்கள்; தனது மனச்சாட்சிக்கு விரோதமாக, தமிழகத்தில் கழக ஆட்சியைக் கலைத்து விட்டார்.

நாடு முழுதும் அவரது செயலையும், குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வி. அவர்களின் ஜனநாயக விரோத மனப்பான்மையையும் கண்டித்துக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி தலைமைக் குழுவின் கூட்டத்தில் கண்டனத் தீர்மானமொன்றும் நிறை வேற்றப்பட்டது. அக்கூட்டத்தில் நானும், என்.டி. இராமராவ், வி.பி.சிங், அஜீத் சிங், பஸ்வான், பொம்மை, மகந்தா, சரத் சந்திர சின்ஹா, குஜ்ரால், ஜெயபால் ரெட்டி, ஹெக்டே, உன்னிகிருஷ்ணன், பேராசிரியர் அன்பழகனார், உபேந்திரா, முரசொலி மாறன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

சந்திரசேகரின் ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்தபோது என் நினைவுக்கு வந்த பழைய நிகழ்ச்சியொன்று நிழலாடியது. ஆச்சார்ய நரேந்திர தேவா சோஷலிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவர். இந்தியாவில் மலர்ந்த சோஷலிச இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்பட்டவர் இவர். ஜெயப்பிரகாஷ் நாராயண், அசோக்மேத்தா போன்ற தலைவர்களுக்கே வழிகாட்டியாகவும், ஞானாசிரியராகவும் திகழ்ந்தவர். சந்திரசேகரும் ஆச்சாரிய நரேந்திர தேவாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டு சோஷலிஸ்ட் இயக்கத்திலே நுழைந்தவர்.

நரேந்திர தேவாவைத் தனது குரு என்றுதான் சந்திரசேகர் சொல்லிக் கொண்டிருப்பார். இந்த சோஷலிஸ்ட் தலைவர் நரேந்திரதேவா அவர்கள் உடல்நலம் குன்றி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை டி.பி. சானடோரியத்தில் காசநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் ஈரோடு நகரில் உள்ள ஒரு பயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் மறைந்து பல ஆண்டுகளாகின்றன. 1989ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டபோது, சென்னைக்கு வந்த சந்திரசேகர் - அப்போது அவர் பிரதமர் அல்ல - என்னைச் சந்தித்தார்.

ஆச்சார்ய நரேந்திர தேவா தங்கியிருந்த பயணியர் விடுதியை நினைவுச் சின்னமாக ஆக்க வேண்டு- மென்று என்னிடம் தெரிவித்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டு ஆச்சார்ய நரேந்திர தேவா தங்கியிருந்த விடுதியை அவர் பெயரால் நினைவில்லமாக ஆக்கி உடனே ஆணை பிறப்பித்தேன். அந்த ஆச்சார்யாவின் சீடர் செய்த காரியம் தான் இந்த ஜனநாயகப் படுகொலை! ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து கழகத்தின் சார்பில் ஒரு நீண்ட விளக்க அறிக்கை பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் கழக ஆட்சியிலே பல்வேறு குழுக்களைச் சேர்ந்த ஈழப் போராளிகள் கைது செய்யப்பட்டது பற்றியும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பற்றியும், ராமனாதபுரம் மாவட்டம், தர்காவலசை கிராமத்தில் ஒரு போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்ததைக் கழக அரசு கண்டுபிடித்துக் கைப்பற்றியது பற்றியும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. கழக அரசு கலைக்கப்பட்ட ஒருசில நாட்களுக்குள்ளாகவே சந்திரசேகரும், ராஜீவ்காந்தியும் குடியரசுத் தலைவரை அடிக்கடி தனித்தனியாகச் சந்தித்து ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறத் தொடங்கினர்.

பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி டெல்லியில் இளைஞர் அமைப்பு

ஒன்று நடத்திய ரத்ததான முகாமில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், கடந்த எட்டு மாத காலமாக மத்திய அரசாங்கம் இயங்கவே இல்லை என்றார். பிரதமர் சந்திரசேகர் விமானம் மூலம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணங்களைப் பார்த்தால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக நம்பவே முடியாது என்று அந்த விழாவில் கேலி செய்தார். இந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற ஏடுகளில் 20-2-91 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் அனைத்து அலுவல்களும் இந்தியில்தான் நடைபெற வேண்டுமென்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது.

அதைப்பற்றிய செய்தியை வெளியிடும் போது, தமிழகத்திற்குள் இந்தி நுழைந்து விடக்கூடாது என்று முழு மூச்சாக எதிர்த்து வந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட மூன்று வார காலத்திற்குள்ளாகவே தமிழகத்திற்குள் இந்தி நுழைந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தச் செய்தி வந்தவுடனே 22-ஆம் தேதி சென்னையில் என் தலைமையில் பெரியார் சிலையிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டு, இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆண்டுதோறும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகின்ற வழக்கத்தின்படி 21-2-91 அன்று ஆர். வெங்கட்ராமன் வந்தபோது, தேசிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகள் தமிழ்நாட்டில் தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன.

அகாலி தளமும் அந்தப் புறக்கணிப்பில் தன்னை இணைத்துக் கொண்டது. பா.ஜ.க. அந்த ஆண்டு முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாததைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணித்தது. ராஜீவ் காந்தி அவர்களின் வீட்டிற்கு எதிரே உளவு வேலை பார்த்ததாக அரியானாவைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்ச் 4ந்தேதியன்று கடும் விவாதம் நடைபெற்றது. அதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அந்த விவாதத்திலே கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முரசொலிமாறன் "பிரதமர் சந்திரசேகர் காங்கிரசுக்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். ராஜீவ்காந்தி வீட்டுமுன் அரியானா போலீஸ்காரர்கள் உலவினார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சி அரியானா அரசை டிஸ்மிஸ் செய் என்று சொன்னால் பிரதமர் உடனடியாக அரியானா அரசை டிஸ்மிஸ் செய்துவிடக் கூடும். இந்திய மக்கள் தற்போது என்ன பேசிக் கொள்கிறார்கள்?

காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் சந்திரசேகரைப் பார்த்து, "நீங்கள் உடனடியாக உங்கள் தாடியை எடுத்துவிட வேண்டுமென்றால், சந்திரசேகர் உடனே அதைச் செய்து விடுவார்" என்று பேசிக்கொள்கிறார்கள். பிரதமர் அவர்களே, உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. நீங்கள் பிரதமராக இருந்துவிட்டீர்கள். வரலாற்றில் உம்மைப் பற்றி ஒரு சின்ன அடிக் குறிப்புதான் இருக்குமே தவிர, ஒரு வரிகூட வராது. நான் சந்திரசேகரைக் கேட்டுக் கொள்கிறேன்.

Please Get Out! எவ்வளவு நாள் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?" என்று கூறிய போது, அவைத் தலைவர் 'கெட் அவுட்' என்று சொல்வது சரியல்ல என்றார். தொடர்ந்து மாறன் பேசும்போது, "நாடாளுமன்ற மொழியிலே நான் கூறியதற்குப் பொருள், நீங்கள் பதவி விலகுங்கள் என்பதுதான். ஏனென்றால் அவருடைய மனச்சாட்சிக்குப் பிடிக்காத விஷயங்களை எல்லாம் செய்யச் சொல்கிறார்கள். எனவே அவர் பதவி விலகி மக்களைச் சந்திப்பதுதான் நல்லது" என்றார்.

சந்திரசேகரின் அடுத்த "ஜன நாயக"ப் பலியாக புதுவையில் தி.மு.கழக ஆட்சியைக் கவிழ்த்து எப்படியாவது காங்கிரஸ் ஆட்சியை அமைத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு டி.ராமச்சந்திரன் தலைமையில் இருந்த அமைச்சரவையை ஏற்கனவே கலைத்துவிட்டு, சட்டப் பேரவையை மட்டும் கலைக்காமல் வைத்திருந்தவர்கள், தங்களால் ஆட்சி அமைக்க இயலாது என்று உறுதியாகத் தெரிந்ததும் பேரவையையும் மார்ச் திங்கள் முதல் வாரத்தில் கலைத்து விட்டார்கள். "கலைக்கும் சர்க்கார்; நிலைக்கும் சர்க்காரா?"

என்ற தலைப்பில் 6-3-91 அன்று முரசொலியில்; உடன்பிறப்புக் கடிதத்தில் மாநில சர்க்கார்களையெல்லாம் சந்திரசேகரின் மத்திய சர்க்கார் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருக்கின்றதே, அந்த மத்திய சர்க்கார் மட்டும் நிலைக்கும் சர்க்காரா என்று கேட்டு எழுதியிருந்தேன். அதற்கு அன்று மாலையே எனக்கு விடை கிடைத்தது. சந்திரசேகரின் அரசு மொத்தம் 117 நாட்களே பதவியிலே இருந்தது. ராஜீவ் காந்தி வீட்டு வாசலில் ஒற்றர்கள் உளவு பார்த்தார்கள் என்று காரணம் கூறப்பட்டு திடீர் திருப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலிருந்தும் இந்திரா காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். சபையை நடத்திட தேவையான கோரம் இல்லாததால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாகக் கூடி தொடர்ந்து மக்களவையைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனை இந்திரா காங்கிரசின் மூத்த தலைவர் நரசிம்மராவ் சந்தித்தார். அன்று நாடாளுமன்ற மக்கள் அவையில் இடைக்கால வரவு செலவுக்கான அனுமதி கோரும் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்.

இதற்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு இருந்தால் தான் தீர்மானம் வெற்றி பெற முடியும். ஆனால் இந்திரா காங்கிரஸ் சபைக்கு வர மறுத்துவிட்ட காரணத்தால் தீர்மானம் தோற்றுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தர முன்வந்தனர். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை அவையிலே கொண்டு வரும் போது அதைத் தோற்கடித்து விடவும் வியூகம் வகுத்தனர்.

ராஜீவ் காந்தி அவசர அவசரமாக இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் மக்கள் அவை கூடியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டு விவாதம் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் பிரதமர் சந்திரசேகர் விவாதத்தில் குறுக்கிட்டு தான் பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகத் திடீரென அறிவித்துவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.

பிறகு சந்திரசேகர் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனைச் சந்தித்திட குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததோடு பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிய ஏற்பாடு செய்கிறவரை சந்திரசேகரைப் பிரதமர் பதவியில் நீடிக்குமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

சந்திரசேகர் மக்கள் அவையில் தனது பதவி விலகலை அறிவித்த சில மணித் துளிகளில் இந்திரா காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று 40 நிமிடங்கள் அவருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். சந்திரசேகர் பதவி விலகல் செய்தி கிடைத்ததும் நான் விடுத்த அறிக்கையில் "தன்னுடைய ஆட்சியைத் தற்காலிகமாகக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்னுடைய தலைமையிலிருந்த கழக ஆட்சியை சந்திரசேகர் கலைத்துவிட்டார் என்று ஜனவரி 30-ந்தேதி தெரிவித்தேன்.

'தற்காலிகமாக' என்று நான் குறிப்பிட்டபோது ஒரு ஆறு ஏழு மாதகாலமாவது ஓடும் என்றுதான் கருதினேன். ஆனால் கழக ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு பாவம் முப்பத்தி நான்கே நாட்கள்தான் அந்தப் 'பதவிப் பிராப்தம்' அவருக்கு இருந்திருக்கிறது. இந்த முப்பத்தி நான்கு நாள் பதவி நீடிப்புக்காக மூன்றாண்டு காலம் நீடித்திருக்க வேண்டிய கழக ஆட்சியையும், அஸ்ஸாம், புதுவை ஆட்சிகளையும் கலைத்த சந்திரசேக- ருக்கு சரியான முடிவுதான் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் நடமாடுவதாகக்கூறி கழக ஆட்சியை சந்திரசேகர் கலைத்தார். ராஜீவ் காந்தி வீட்டுக்கு எதிரே ஒற்றர்கள் நடமாடுவதாகக் காரணம் காட்டி சந்திரசேகர் ஆட்சியைக் கவிழ்த்து விட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

குடியரசுத் தலைவர் உரை படிக்கப்பட்டு அந்த உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் இந்திய நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நாதியற்றுக் கிடக்க வேண்டிய நிலைமை அப்போதுதான் ஏற்பட்டது. அதைப் போலவே இடைக்கால பட்ஜெட் நிறைவேறினால்தான் அரசின் நிர்வாகமே நடைபெற இயலும் என்ற நிலையிலே சந்திரசேகர் பதவி விலகினார். 11-3-91 அன்று எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு மக்களவையில் நிதிநிலை மசோதா எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேறியது.

இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை எப்படியாவது பிரதமராகக் கொண்டு வருவதற்கான பெருமுயற்சி டெல்லியிலே நடைபெற்றது. சந்திரசேகர் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டு, பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று கடிதம் கொடுத்து, ஒரு வாரத்திற்கு மேலாகியும் குடியரசுத் தலைவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலத்தை நீடித்தது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குடியரசுத் தலைவராக திரு. சஞ்சீவ ரெட்டி அவர்கள் இருந்தபோது, சரண்சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு கடிதம் கொடுத்தபோது, அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததையும், வெங்கட்ராமன் ஒரு வாரத்திற்கு மேலானபிறகும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும் ஒப்பிட்டு நினைத்தபோது, பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இப்படியொரு நிலையா என்று தான் எண்ணத் தோன்றியது. ஆனால் குடியரசுத் தலைவர் நினைத்தவாறு எதுவும் செய்ய இயலாததால், சந்திரசேகர் 6ந்தேதியன்று கொடுத்த கடிதத்தில் செய்திருந்த பரிந்துரையையேற்று, 13-3-1991 அன்று ஒன்பதாவது மக்கள் அவை கலைக்கப்பட்டது.

ஒன்பதாவது மக்கள் அவை ஐந்தாண்டு காலத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 466 நாட்களுடன் முடிந்து விட்டது. இதற்கிடையே மார்ச் 8ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய முன்னணியின் தலைமைக் குழு கூட்டத்திற்கு நான் செல்ல இயலாத நிலையில் அதைப்பற்றி வி.பி. சிங் அவர்களுக்குத் தந்தி மூலம் தகவல் தெரிவித்தபோது, குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் முன் வரவழைத்து கண்டனம் செய்வது (இம்பீச்மென்ட்) பற்றியும் தலைமைக்குழு பரிசீலிக்கலாம் என்று தெரிவித்திருந்தேன்.

உடனே குடியரசுத் தலைவர் உயர்ந்த இடத்தில் இருப்பவராயிற்றே, அவரை கருணாநிதி இப்படி கண்டிக்கலாமா என்று மாற்று முகாமினர் அறிக்கை விடுத்தனர். அதற்கு நான் விளக்கம் அளிக்கும்போது, 1982ஆம் ஆண்டு ஜெயில்சிங் குடியரசுத் தலைவராக ஆனபோது துக்ளக் இதழில் இரண்டு கழுதைகளின் படத்தைப்போட்டு, அடுத்த குடியரசுத் தலைவர் நாம்தான் என்று கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்ததே- அது குடியரசுத் தலைவர் பதவியின் கௌரவத்தை உயர்த்தும் செயலா?

அப்போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் கூறவில்லை. தேசிய முன்னணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத் தொடக்க விழா மார்ச் 18-ஆம் தேதியன்று பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் (பாடலிபுத்திரம்) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள 17-ஆம் தேதி மாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோவும் வந்தார். பாட்னா காந்தி மைதானத்தில் 5 லட்சம் பேர் திரண்ட அந்தக் கூட்டத்தில் நானும், வி.பி.சிங்கும், என்.டி.ஆரும், பொம்மையும் மற்றும் தேசிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டோம்.

நான் அந்தக் கூட்டத்தில் என்னுடைய உரையை இவ்வாறு தொடங்கினேன். "எனது உரையைத் துவங்கும் முன் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். என் பெயர் கருணாநிதி! நான் ஒரு தேச விரோதி! நான் வெளிநாடுகளுக்குத் தகவல்களைத் தந்தேன். எனவே இந்த நாட்டில் நான் ஒரு அபாயகரமான பேர் வழி! இந்தப் பட்டங்களையெல்லாம் லோக மான்ய பால கங்காதர திலகர், மற்றும் பல தியாகிகளுடன் பல ஆண்டுகளை அந்தமான் சிறையில் கழித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், மிகச் சிறந்த தேசபக்தர்கள் எனக்குச் சூட்டியவை என்று நினைக்கிறீர்களா?

அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்! அவர்கள் என்னை தேச விரோதி என்று அழைக்கிறார்கள். பொது மக்கள் பிரச்சினைக்காக - மொழிப் பிரச்சினைக்காக இருபதுக்கு மேற்பட்ட முறை நான் சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் திரைப்படங்களிலும், வீடியோ படங்களிலும் மட்டுமே சிறைச்சாலையைப் பார்த்தவர்கள் என்னை தேச விரோதி என்கிறார்கள். இதில் பரிதாபம், சந்திரசேகரும் இதற்குத் தலையாட்டியதுதான்."

இப்படித் தொடங்கிய என் பேச்சு நீண்டது! நான் பேசிய போது அந்த மக்கள் வெள்ளம் கையொலி செய்து வரவேற்று அன்பைப் பொழிந்தது. நான் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்ததும் மேடையிலே இருந்த தலைவர்கள் எல்லாம் என்னை நெருங்கி கைகளைக் குலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள். வி.பி.சிங் என் கைகளைப் பிடித்துக் கொண்டு "இதற்காகத்தான் உங்களை நான் அடிக்கடி வடபுலத்திற்கு அழைக்கிறேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உங்கள்மீது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்கள் அல்லவா?"

என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயண் முழுப்புரட்சிக்கு அறைகூவல் விடுத்துப் பேசியது அந்த மைதானத்தில்தான் என்றும், அதற்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டம் அப்போதுதான் கூடியதாகவும் லல்லு பிரசாத் குறிப்பிட்டார். அதற்கடுத்தநாள் பாட்னாவிலிருந்து வெளிவந்த அனைத்து ஏடுகளும் அந்தக் கூட்டத்தில் தலைசிறந்த உரை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் உரைதான் என்று கட்டம் கட்டி வெளியிட்டிருந்தன.

19-3-1991 தேதிய டைம்ஸ் ஆப் இந்தியா - STEALING SHOW : The man to steal the show today was the ousted DMK Chief Minister of Tamil Nadu, Mr. M. Karunanidhi, who despite communicating with an interpreter, held the attention of the audience and received a standing ovation at the end of his speech - என்று தனது செய்தியைத் தொடங்கி என்னுடைய முழுப் பேச்சையும் வெளியிட்டிருந்தது. அதே நாளிட்ட இந்து இதழ், ஆங்கிலத்தில் பேசினாலும் கூட அந்தக் கூட்டத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டுவிட்டவர் கருணாநிதி தான் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ், "அந்தப் பெருங்கூட்டத்தின் கதாநாயகனாக வி.பி.சிங் திகழ்ந்தார் என்றால், தி.மு.க.

தலைவர் திரு. கருணாநிதியோ அந்தக் கூட்டத்தையே கவர்ந்து விட்டார். அந்தக் கூட்டத்தினர் மிகுந்த உற்சாகத்தோட

ு அவரது பேச்சை ஆவலுடன் கேட்டனர். அவர் பேசிய ஆங்கில மொழி அந்த மக்களுக்குத் தெரியாது என்றா- லும் திரு.ராஜ்மோகன் காந்தி அவர் பேச்சை இந்தியில் அற்புதமாக மொழி பெயர்த்தார்" என்றும் குறிப்பிட்டிருந்தன. அந்தப் பயணம் குறித்து முரசொலியில் "கங்கைக்கரையில் காவிரித் தென்றல்! வடபுலம் வியக்க; வந்தவர் மலைக்க, பாடலிபுத்திரம் வென்ற கலைஞர்" என்ற தலைப்பிலே ஒரு பயணக் கட்டுரையை வைகோ எழுதியிருந்தார்.