உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஆரம்ப வேலைகள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஆரம்ப வேலைகள்! · 306 / 391

ஆட்சிக் கலைப்புக்கான ஆரம்ப வேலைகள்! சி றுபான்மை சமுதாயத்திற்கும் பெரும்பான்மை சமுதாயத்திற்குமிடையே கசப்பு, காழ்ப்பு, கலவரம் உருவாகி மதப்பூசல் பரவிடாமல் தடுப்பதற்காகவும்- சமூக உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் நெருங்க முடியாமல் பிற்படுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தின் பல பிரிவு மக்களைக் கைதூக்கி விடுவதற்கும் பாடுபட்டு; அதனாலேயே ஒரு நாட்டின் பிரதமர் பதவியை இழந்துவிட்ட வி.பி. சிங் அவர்களை அடுத்து, அந்தப் பதவிக்கு வந்த சந்திரசேகர் அவர்கள், தனது அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே; தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஏதாவது ஒரு வகையில்; எப்படியாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து; "நாயை அடித்துக் கொல்வதற்கு அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று காரணம் சொல்" என்ற பழமொழிக்கேற்ப தன்னையறியாமலே தன்னுள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டார் என்றே கூறலாம்.

தேசிய முன்னணியில் இடம் பெற்றிருந்ததும்; அந்த முன்னணியை ஆரம்பித்த "குற்றம்" (?) புரிந்ததும்-தி.மு.க. என்பதால் அந்தக் கழக ஆட்சியின் மீது; வடக்கேயுள்ள சில கட்சிகளுக்கு ஒரு கண்! அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க.வும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை விரைவில் கலைக்க வேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டுதான் சந்திரசேகர் அவர்களை ஆதரித்தது என்ற உண்மையும் அரசியல் உலகு அறிந்த ஒன்றேயாகும்!

அதனால்தான், தன் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சந்திரசேகர் பேசியபோது; "பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். நடவடிக்கை எடுக்கத் தவறினால், மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை தொடரும்" என்று எச்சரித்தார்.

அந்தப் பேச்சுக்குத் தூபம் போடுவது போல நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தமிழகக் கழக அரசின் மீது அடாவடித்தனமான பொய்களை இட்டுக்கட்டிக் கூறினர். "சந்திரசேகர்" என்ற அந்தப் பெயருக்குரியவரை என் இளமைக் காலத்தில் மானசீகமாக மிகவும் நேசித்தவன் நான்! காங்கிரஸ் இயக்கத்தில் புது ரத்தம் பாய்ச்சிடப் புறப்பட்ட இளந்துருக்கியர்களில் சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ராம்தன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

பதவி, பவிசுகளைத் துச்சமாகக் கருதி நேர்மைக்கு மதிப்பளித்து தியாக மணிகளாகத் திகழ்ந்த இளந்துருக்கியர்களில் ஒருவரான சந்திரசேகர், தனக்குக் கிடைத்த பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இப்படிக்கூட நடந்து கொள்வாரா என்று வியப்புற்றேன். இருப்பினும் நடப்பது நடக்கட்டும்; மிசாக் கொடுமையையும், நெருக்கடிகாலக்கொடுமையையும் எதிர்கொண்ட கழகமும், கழக ஆட்சியும் அதற்கு மேல் என்ன கொடுமையைக் காணப் போகிறது; அப்படிக் காண நேரிட்டாலும் அதையும் சந்திக்கத்தானே வேண்டுமென்று திட நெஞ்சத்துடனேயே இருந்தேன்.

தி.மு.க. என்ற ஒரு சமுதாய முற்போக்கு இயக்கத்திற்கு எதிராக "அந்த இளந்துருக்கியர் தலைவர்" மாறிவிட்டாரே என்பதற்காகக்கூட அல்ல- இளம் வயதில் துடிப்பும் துள்ளலுமாக இருந்து, தியாக முத்திரைகள் பதிக்க வேண்டுமென்று ஆர்வங்கொண்டிருந்து பொது வாழ்வின் பொற்பதக்கமாக ஒளி விடுகிறவர்கள்; காலப்போக்கில் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவது போல் இவரும் மாறிவிட்டாரே என்று வருந்தினேன்! வேதனைப்பட்டேன்! எனது ஆருயிர் இளவல் என்று என்னால் அன்பு பொங்கிட அழைக்கப்பட்ட தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் 1990 நவம்பர் 18 அன்று டெல்லி சென்றபோது பிரதமர் சந்திரசேகரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் இருந்தவர் என்ற முறையில் சந்திரசேகர் போன்றவர்களிடம் நெருங்கிப் பழகி நட்புணர்வுடன் பேசும் வாய்ப்பு பெற்ற அவரிடம் பிரதமர் சந்திரசேகர் மனம் திறந்து உரையாடியிருக்கிறார். "தமிழ் நாட்டில் முறைப்படி அமைந்துள்ள கழக அரசைக் கலைக்க வேண்டுமென தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் செய்யும் விஷமப் பிரச்சாரத்திற்குச் செவி சாய்க்க வேண்டாம்" என்று பிரதமரிடம் நாஞ்சிலார் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 26-11-90 அன்று செய்தியாளர்கள், பிரதமர் சந்திரசேகரைச் சந்தித்து - "தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கழக அரசைக் கலைக்கப் போகிறீர்களா?" என்று கேட்டதற்கு "அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது" என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருக்கலாகாது என்பது "இளந்துருக்கி"யராக இருந்தபோது இதயத்தில் பதிந்திருந்தது எனினும்; பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கடி வந்தபோது அது நீர் மேல் எழுத்தாகிவிட்டதற்கு யார் என்ன செய்ய முடியும்? பிரதமர் சந்திரசேகருக்கு ஜெயலலிதா மூலம் தரப்பட்ட நெருக்கடி, நாளுக்கு நாள் அவரை இறுக்கிக் கொண்டே இருந்தது என்பதை அவரது முகத்தைப் பார்த்தே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இரண்டொரு முறை நான் டெல்லி சென்று பிரதமர் என்ற முறையில் மரியாதை சந்திப்பு நடைபெற்ற போதும், தமிழ்நாட்டுத் தேவைகளுக்காகக் கோரிக்கை வைத்த சந்தர்ப்பத்திலும்; எப்போதும் கலகலப்பாகப் பேசுகிற அவரது இயற்கை சுபாவத்தையும் நட்புணர்வையும் காண இயலவில்லை. ஏதோ வெளியிட முடியாத ஒன்று அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருப்பதை அவரது முகம் கண்ணாடி போல் காட்டிற்று. இலங்கைத் தமிழ்ப் போராளிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதற்கோ அல்லது அவர்கள் ஈடுபடும் வன்முறைச் செயல்களுக்கோ, தமிழகத்தைக் களமாக்கிக் கொள்ள முடியாது என வெளிப்படையாகவே அறிவித்து, அந்த அறிவிப்பை அரசு சார்பில் நடைமுறைப்படுத்தி வந்ததின் தொடர்ச்சியாக நவம்பர் 30ஆம் நாள் திருச்சி தில்லைநகரில் மறைந்திருந்த விடுதலைப் புலிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

தமிழகத்தில் எப்படி தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்றதோ; அதைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய முன்னணியில் இடம் பெற்ற அஸ்ஸாம் கண பரிஷத் கட்சி நடத்திய ஆட்சியினை 356-வது பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசினர் அஸ்ஸாம் மாநில ஆளுநரிடமிருந்து அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் 28-11-90 அன்று கலைத்தார்கள். இந்தியாவில் ஜனநாயகம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த நிலையில் பிரிட்டிஷ் பிரதமராக 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மார்கரெட் தாட்சர் நவம்பர் இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

பிரிட்டனில் அப்போது ஆளுங்கட்சியாகப் பொறுப்பிலே இருந்தது கன்சர்வேடிவ் கட்சியாகும். அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கு 90-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் போட்டியேற்பட்டபோது, தாட்சருக்கு 204 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைக்கேல் ஹைசல் டைனுக்கு 152 வாக்குகளும் கிடைத்தன. ஆயினும் அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி தாட்சர் அவரை எதிர்த்தவரை விட 15 சதவிகிதம் வாக்குகள் அதிகம் பெற முடியாததால் இரண்டாவது வாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதாவது இரண்டாவது வாக்குப்பதிவு நடத்தப்படாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், தாட்சர் ஹைசல் டைனை 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் தாட்சர் 22-ந்தேதி காலையில் பிரிட்டிஷ் அரசியைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். கட்சியின் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்த 24மணி நேரத்திற்குள் அவர் இந்த முடிவினை அறிவித்தார்.

போட்டியிட வாய்ப்பிருந்தும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். மார்கரெட் தாட்சர் தனது பதவிக் காலத்தில் தொழில், வாணிபம் போன்ற துறைகள் அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்கக் கூடாது என்ற கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்தி, பல முக்கியமான பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு மாற்றி விட்டார். தொழில் துறையில் நிர்வாகத் திறன், உற்பத்தி, லாபம் முதலியவை பெருக வேண்டுமென்றால் அத்துறை அரசின் பிடியில் இருக்கக் கூடாது என்பது அவருடைய கொள்கையாகும்.

பிரதமர் தாட்சர் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். அர்ஜெண்டினா நாட்டின்மீது போர் தொடுத்து ஃபால்க்லந்து தீவுகளில் பிரிட்டிஷ் ஆட்சியை மீண்டும் அவரது ஆட்சிக் காலத்தில் நிலை நிறுத்தினார். வட அயர்லாந்தில் பயங்கரவாதத்தை உறுதியுடன் சமாளித்து வந்தார். ஈராக் அதிபர் சதாம் உசேன் குவைத் நாட்டை ஆக்கிரமித்தபோது அமெரிக்காவிற்குத் துணையாகப் படைகளை அனுப்ப முன்வந்த முதல் நாடு தாட்சரின் பிரிட்டன்தான். இவ்வளவு உறுதியும், நிர்வாகத் திறமையும் தாட்சருக்கு இருந்தும், பிரிட்டிஷ் மக்களுக்கு இவரிடம் அதிருப்தி ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு.

ஒவ்வொரு குடிமகனும் செலுத்த வேண்டிய தலைவரி என்ற புதிய வரியை தாட்சர் அரசு விதித்ததை பிரிட்டிஷ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்புடன் பிரிட்டன் தன்னை முற்றிலும் இணைத்துக் கொள்வதை தாட்சர் தீவிரமாக எதிர்த்தார். இதையும் பிரிட்டிஷ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஆனால் வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபிறகு அந்த நாட்டு மக்கள் சமாதான காலத்தில் தங்களுக்கு வேறு குணங்களைப் படைத்த தலைவர் வேண்டுமென்று கருதியதால் சர்ச்சில் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பை இழக்க வேண்டிவந்தது. அதைப் போலவே ஐரோப்பாவுடன் இணைந்து செயல்படத்தக்க ஒரு பிரதமர் தங்களுக்குத் தேவை என்று அந்த நாட்டு மக்கள் கருதினார்கள்! அந்தக் கருத்து கன்சர்வேடிவ் கட்சியில் எதிரொலித்தது. எனவே தாட்சர் பதவி விலகலைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுத் தேர்தல் அந்தக் கட்சியிலே நடைபெற்றபோது, ஜான் மேஜர் 183 வாக்குகளையும், ஹைஸல்டைன் 131 வாக்குகளையும், டக்ளஸ் 56 வாக்குகளையும் பெற்றனர்.

யாருமே 50 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. ஜான் மேஜர் இரண்டு வாக்குகள் குறைவாகப் பெற்றார். எனினும் மற்ற இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி ஜான் மேஜரை ஆதரிப்பதாகக் கூறியதால், மூன்றாவது சுற்று வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டு, ஜான் மேஜர் பிரிட்டிஷ் பிரதமரானார். நவம்பர் திங்கள் கடைசி நாளன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கொண்ட கூட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 7-ந் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்ய வரும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், பல கூட்ட நிகழ்ச்சி- களை இந்தக் கட்சிகளின் சார்பில் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமர் சந்திரசேகரை, முதல்வர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக டிசம்பர் 2-ந் தேதி டெல்லி சென்று இறங்கியதும் ராமனாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ராமனாதபுரம் நகர் மன்றத் தலைவருமான எம்.எஸ்.கே.

ராஜேந்திரன் தனது 41-வது வயதிலே மாரடைப்பு காரணமாகத் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரது சகோதரரும், அந்தப் பகுதியிலே கழகத்தை வளர்த்த மாவீரருமான எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் அவர்களும் இதே இளம் வயதில்தான் மாண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. டிசம்பர் 3-ந்தேதி காலையில் பிரதமர் சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தேன். பிரதமரும் நானும் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேசினோம். 1983-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளையும், 89-இல் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகளையும் பிரதமரிடம் விளக்கினேன்.

தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினோம். பிறகு 11 மணி அளவில் அடுத்த நாள் பிறந்தநாள் காணவிருந்த குடியரசுத் தலைவர் ஆர்.வி. அவர்களையும் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். துணைப் பிரதமர் தேவிலால் அவர்களையும் சந்தித்தேன். பின்னர் டெல்லி 'தமிழ்நாடு' இல்லத்தில் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து; தி.மு.க. அரசு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க. கூறுவது பற்றி விளக்கம் கேட்டார்கள்.

"1983 முதல் 1987 வரை போராளிகளின் பல்வேறு குழுக்களுக்கு தமிழ்நாட்டில் 31 பயிற்சி முகாம்கள் இருந்தது உண்மை. அவை இப்போது இல்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிற அ.தி.மு.க.வினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். 13-10-90 நாளிட்ட அதி.மு.க. அதிகாரபூர்வமான ஏட்டில் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் - "இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது, போரிடும் விடுதலைப் புலிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வேண்டும்.

கருணாநிதி மௌனம் சாதிப்பது ஏன்?" - என்று கேள்வி எழுப்பியுள்ளார். "அது மட்டுமல்ல, அ.தி.மு.க. அரசு 1987-இல் எல்.டி.டி.ஈ.யைச் சேர்ந்தவர்களுக்கு 30-4-87 அன்று ஒரே நாளில் 3 கோடி ரூபாய் கொடுத்து அதற்கான ரசீதும் பெறப்பட்டுள்ளது. பரமகுரு சாமி என்பவர் கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்துள்ளார். அதே நாளில் எல்.டி.டி.ஈ.யைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு 1 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட 4 கோடி ரூபாய் முழுவதும் ஆயுதங்கள் வாங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விடுதலைப் புலிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்தோம். ஆனால் அவர்களில் 9 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கான ஆலோசனைக் குழு விடுதலை செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் ஆகிய குழுக்களைச் சேர்ந்த 18 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்தோம்."

இப்படி இலங்கைப் போராளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையெல்லாம் விளக்கமாகக் கூறினேன். 4-ந்தேதி காலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் மற்றும் உள்துறை செயலாளர்கள் என்னைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் விரிவாகப் பேசினர். இதற்குப்பின் அவர் செய்தியாளரிடம் கூறும்போது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமான நிலையில் இல்லை. எனவே நான் உடனடியாகத் தமிழகம் செல்லும் திட்டம் இல்லை" என்றார்.

தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக வி.பி.சிங் அவர்களும், எஸ்.ஆர். பொம்மை அவர்களும் டிசம்பர் 7-ந் தேதி இரவு சென்னை வந்தார்கள். விமான நிலையத்திலும் வருகிற வழியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்து செய்தியாளர்களை வி.பி.சிங் சந்தித்தார். அப்போது வி.பி.சிங் கூறியதாவது:- "தேசிய முன்னணிக்கு கருணாநிதி அவர்கள் உறுதியான ஆதரவு அளித்து வருகிறார்.

குறிப்பாக நாட்டு ஒற்றுமை, மதச்சார்பின்மை, சமூகநீதி போன்ற கொள்கைகளில் அவர்

அழுத்தமான பற்று வைத்துள்ளார். யார் யார் எந்தக் கொள்கைகளைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்த போது கருணாநிதி அவர்கள் மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் பக்கம்தான் தாம் இருப்பதாக மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறார். எவையெவைகளுக்காக தேசிய முன்னணி போராடி வருகிறதோ- போராடி வருவது மாத்திரமல்ல, எவையெவைகளுக்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோமோ அவற்றின் பக்கம்தான் கருணாநிதி நின்றார்" என்று கூறிய வி.பி.சிங், சட்டம் ஒழுங்கு தமிழகத்திலே கெட்டுவிட்டதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கருணாநிதி ஆட்சியிலிருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை அகற்ற எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களே பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன். தமிழக அரசைக் கலைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரதமர் உறுதி அளித்ததாக நான் கேள்விப்பட்டேன். பிரதமர் தனது உறுதிமொழியைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்" என்றார்.

டிசம்பர் 8-ந்தேதி காலையில் 9 மணி அளவில் சென்னையிலிருந்து எங்கள் சுற்றுப் பயணம் தொடங்கியது. திருச்சியைச் சென்றடைய இரவு 10 மணி ஆகியது. தாம்பரம், செங்கற்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் என்று வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் மக்கள் கடலைத் தாண்டித்தான் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 11.30 மணிக்கு விழுப்புரத்திற்கு வரவேண்டிய நாங்கள் 3.30 மணிக்குத்தான் வந்தோம். இந்தச் சுற்றுப் பயணத்தில் எஸ்.ஆர்.பொம்மை, முரசொலி மாறன், துரைமுருகன், வைகோ ஆகியோர் உடன்வந்தனர்.

கழகத் தோழர்கள் ஒவ்வொரு ஊரிலும் மிகப் பிரமாண்டமான முறையில் கூட்டங்களை ஏற்பாடு செய்து வி.பி.சிங் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். அதைப்பற்றி வி.பி.சிங் குறிப்பிடும்போது; "கலைஞர் தன்னுடைய ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் என்னோடு சேர்ந்து எனக்குத் துணையாக இருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது இங்கே இருக்கிற கலைஞர் அவர்கள்தான்.

பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சியைச் சேர்ந்த முதல்வர்களே என்னை விட்டு ஓடிய நேரத்திலும் கூட உறுதியோடு எனக்கு உறுதுணையாக இருப்பவர் கலைஞர்" என்று கூறினார். முதல் நாள் இரவு 10 மணிக்கென்று அறிவிக்கப்பட்ட மதுரை கூட்டத்திற்கு விடியற்காலை 4.30 மணிக்குத்தான் சென்றடைந்தோம். 9-ந்தேதியன்று காலை 10 மணிக்கு மதுரையிலிருந்து எங்கள் சுற்றுப்பயணம் தொடங்கியது. விருதுநகர், கோவில்பட்டி, கங்கை கொண்டான், கயத்தாறு, திருநெல்வேலி, நாகர்கோவில் வரை பல நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றினோம்.

தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று காங்கிரசார் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அந்தக் காங்கிரஸ் கட்சி அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த ஆந்திராவிலே என்ன நிலை என்றால்; அங்கே ஏற்பட்ட மூன்றுநாள் கலவரத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். ஐதராபாத் நகரமே ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கண்டதும் சுடுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரைக் கண்டித்து அமைச்சர் பதவி விலகினார்.

பிறகு முதலமைச்சராக இருந்த சென்னாரெட்டி அவர்களும் ராஜீவ்காந்தி கண்டிப்பாகக் கூறியதின் பேரில் பதவி விலகினார். புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க அந்தக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்கூடி ஜனார்த்தன ரெட்டி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப் போலவே உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு அதன் காரணமாக 50 பேர் உயிரிழந்தனர். 11-12-90 அன்று நடைபெற்ற ஒரே நாள் கலவரத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.

திபேத் நாட்டின் சமயத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் 90-ஆம் ஆண்டு டிசம்பரில் (13-12-1990) தமிழகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு பாரதிய வித்யா பவனில் சென்னை நிர்வாகக் கவுன்சில் சார்பில் கீழ்ப்பாக்கத் தில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே நான் கலந்துகொண்டு அவருக்கு தமிழக அரசின் சார்பில் நினைவுப் பரிசினை வழங்கினேன்.

விழாவிற்கு நீதிபதி எம்.எம். இஸ்மாயில் தலைமை வகித்தார். தலாய்லாமா அவர்கள் விவசாயக் குடும்பத்திலே பிறந்தவர். இளம் பருவத்திலேயே அந்த மதத்தின் மரபின்படி- அந்த நாட்டின் மரபின்படி பதவிப் பொறுப்பையேற்று பதவியேற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரம் செலுத்துகின்ற வாய்ப்பைப் பெற்றபோது மூண்டெழுந்த அமளியின் காரணமாக அவர் இந்தியாவிற்கு வர நேர்ந்தது. 1989-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட பெரும் தொகையைத் தொழு நோயாளிகளின் நல்வாழ்விற்காக அவர் வழங்கிவிட்டார்.

கழக ஆட்சியின்போது தொழு நோயாளி- களுக்காக ஒரு மறுவாழ்வுத் திட்டத்தையே அறிமுகப்படுத்திய என்னை; அவர் தொழுநோயாளிகளுக்காகச் செய்த இந்தப் பேருதவி பெரிதும் கவர்ந்தது. தலாய்லாமா கலந்துகொண்ட அந்த விழாவில் நான் பேசும் போது, "சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்தார் என்பது வரலாறு. ஆனால் நாளடைவில் அவர் இந்திய மக்களின் நெஞ்சம் புகுந்தார் என்பதுதான் உண்மை நிலை" என்றுதான் தொடங்கினேன்.

வங்காள தேசத்தின் அதிபராக எர்ஷாத் ஒன்பதாண்டு காலமாக நீடித்து வந்த நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்துப் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த போராட்டம் 90-ஆம் ஆண்டு இறுதியில் தீவிரம் அடைந்தது. இந்தப் போராட்டத்தை அடக்க எர்ஷாத் நாடு முழுவதும் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அப்படியிருந்தும் எதிர்ப்பு அலை ஓயவில்லை. 22 எதிர்க்கட்சிகள் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதற்கு மேலும் எர்ஷாத் சமாளிக்க முடியாமல் தேர்தல் நடத்துவதற்குத் தயாரென்றும், தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பு அதிபர் பதவியை விட்டு தான் விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், எர்ஷாத் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென்று வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளில் முக்கியமானவை வங்காள தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஜிபுர் ரகிமானின் மகள் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரகுமானின் மனைவி கலீதா ஜியாவின் தலைமையிலான வங்காள தேசியக் கட்சி ஆகியவை ஆகும்.

எர்ஷாத்தின் வீட்டைச்சுற்றி ராணுவப் பாதுகாப்பு போடப்- பட்டது. வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அவர் செய்த முயற்சியும் தடுக்கப்பட்டது. 1982-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய எர்ஷாத் 90-ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பினை இழந்தார். வங்காள தேசத்தின் இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்க புதிய ஜனாதிபதியாக நீதிபதி சகாபுதீன் இருப்பாரென்று வங்காள தேச எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்தது.

ஊழல் புகார் காரணமாக எர்ஷாத்தும், அவர் மனைவியும், எட்டு வயது மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள்.