உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கறுப்பு விடியல்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கறுப்பு விடியல் · 305 / 391

வெள்ளை இருட்டில் கறுப்பு விடியல் பு த்தகங்கள் வெளியிடுவது; இன்றையதினம் பல்வேறு பதிப்பகத்தினர் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொலிவு கூட்டிப் பெருமை தேடிக் கொள்கிற ஒன்றாக மாறியிருக்கிறது. பளபளப்பான அட்டை- கண்ணைக் கவரும் அட்டைப்படம்- வழவழப்பான தாள்- விளக்க ஓவியங்கள் - முத்துப்போல் அச்சுக்கோப்பு- இப்படி எல்லா வகையிலும் எழிலார்ந்த புத்தகப் பதிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் திராவிட இயக்கத் துவக்க காலத்தில் கைபட்டால் கிழிந்து விடக்கூடிய நிலையில்தான்; அழகற்ற வடிவத்தில் பெரியாரின் நூலாயினும், அண்ணாவின் நூலாயினும் வெளிவந்து கொண்டிருந்தன.

அந்த நிலையை மாற்றி அமைத்து எங்களாலும் எழில் கூட்டி, புத்தகங்களை வெளியிட முடியும் என அறைகூவல் விடுவது போல திருச்சியில் "திராவிடப் பண்ணை" என்ற ஒரு புத்தகப் பதிப்பகம் தோன்றியது. வெற்று முழக்கமாக இல்லாமல் அண்ணா எழுதிய பல நூல்களையும், இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மற்ற பதிப்பகங்களை வெற்றி கொள்கிற அளவுக்கு வெளியிட்டவர் என் இனிய நண்பர் முத்துகிருஷ்ணன் என்றாலும்; அவரை எல்லோரும் "பண்ணை" என்றே அழைப்போம், அண்ணா உட்பட!

எங்களிடம் உண்மையிலேயே பண்ணைக்காரர்கள் இல்லாத குறையை "பண்ணை" என்று அவரை அழைப்பதின் மூலம் போக்கிக் கொண்டோம் என்றே சொல்லலாம். உலகில் தோன்றிய மாபெரும் இயக்கங்கள் பலவும் இருட் குகைகளில், இருண்ட வீடுகளில், கையெழுத்துப் பிரதிகள் நூற்றுக்கணக்கில் எடுத்து; தம் கருத்துக்களைப் பரப்பியது போலவே; இங்கே திராவிட இயக்கத்தின் நூல்களாயினும், ஏடுகளாயினும் மிக ரகசியமாக அச்சிடப்பட்டு; நூற்றுக் கணக்கானவர் மத்தியிலே விநியோகிக்கப் பெற்று இறுதியாகத்தான் ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்து "திருச்சி திராவிடப் பண்ணைகள்" போன்ற திருப்புமுனைகள் தோன்றின என்பது நமது பிரச்சார வரலாற்றில் முக்கிய கட்டமாகும்.

திருச்சி மாவட்டத்தில் என் உயிருக்குயிரான இரண்டு முத்துகிருஷ்ணன்கள் உண்டு - இன்னொருவர் குளித்தலையில் 1957ல் பொதுத் தேர்தலில் கழக வேட்பாளராக நான் முதன் முதலில் போட்டியிட்ட போது தமிழ்ச்சுடர் இளமுருகு பொற்செல்வியுடன் இணைந்து பாடுபட்டு என் வெற்றிக்காக உழைத்த குளித்தலை முத்துகிருஷ்ணன். அந்த இரண்டு முத்து கிருஷ்ணன்களும் இளமுருகும் இன்றில்லை; ஆனால் என் இதயத்தில் என்றுமிருப்பார்கள். வாழ்க்கை என்பதில் துன்பமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வந்தால்தான் அது வாழ்க்கையாகிறது.

வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டுமென்றால்; துன்பத்தையும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றாக வேண்டும். நெருங்கிய நண்பர்களை இழந்த துயரத்தை மாற்றக்கூடிய அளவுக்கு; என்னைப்போல் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்ச்சிகள் அணி வகுத்திடுவது இயல்பு! அப்படியொரு மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப்பட்டேன். கழக உடன்பிறப்புகள், முன்னோடிகள் இல்லங்களில் நடைபெறுகிற திருமண நிகழ்ச்சிகளில் எப்படி நான் உற்சாகத்துடன் கலந்து கொள்வேனோ அதைப் போன்ற ஒரு இனிய நிகழ்ச்சிக்கு மதுரைக்குச் சென்றேன்.

அதுதான் 31-1-1990 அன்று நடைபெற்ற புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின் திருமண நிகழ்ச்சி. இயக்கப் பணிகள் குவிந்து கிடந்த நிலையிலும், விஜயகாந்த் அழைப்பையேற்று மதுரை சென்று அவரது மணவிழாவுக்குத் தலைமை வகித்து நடத்தினேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த திரு. மூப்பனார் அவர்கள் அந்த மணவிழாவுக்கு முன்னிலை வகித்தார். மணவிழாவில் நான் பேசும் போது; "விஜயகாந்த்துக்கும், காங்கிரஸ்காரரான திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தருக்கும் உள்ள நட்பு ராஜா தேசிங்குக்கும் மகமத்கானுக்கும் உள்ள நட்பினைப் போன்றது" என்று தெரிவித்தேன்.

"திருமணத்திற்கு நான் வரவேண்டுமென்பது விஜயகாந்தின் விருப்பம். அதே நேரத்தில் நண்பர் இப்ராகிம் என்ன கருதுவாரோ என்பதற்காக, பஞ்சாங்கத்தில் கிழக்கே சூலம் என்று போட்டிருக்கையில், கொஞ்சம் வெல்லத்தைச் சாப்பிட்டு விட்டுச் சென்றால் சூலம் ஒன்றும் செய்யாது என்பார்களே அதைப்போல விஜயகாந்த் என்னை அழைக்க விரும்பியது கிழக்கே செல்ல விரும்பியது போன்றதாகும். அவருக்கு ஏற்பட்ட பயம்தான் சூலம், அதற்கு அவர் சாப்பிடும் வெல்லம்தான் இந்த விழாவிலே மூப்பனார் கலந்து கொண்டது" என்று நான் கூறியதை விஜயகாந்த் ஞாபகத்தில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.

90-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 3-ந்தேதியன்று பிரதமர் வி.பி. சிங் தமிழகத்திற்கு வருகை தந்தது குறித்தும், சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டது குறித்தும் இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன். 3-ஆம் தேதியன்று சென்னையிலே பிரதமருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் காலையில் அமைச்சர்கள் வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன் ஹைதராபாத் நகருக்குப் புறப்பட்டுச் சென்று முதலமைச்சர் சென்னா ரெட்டி அவர்களைச் சந்தித்து கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை விரைவில் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக 5ந் தேதி டெல்லி சென்று அன்று நடைபெற்ற திட்டக் குழு கூட்டத்திலே கலந்துகொண்டேன்.

ஹைதராபாத்தில் ஆந்திர முதல்வர் சென்னாரெட்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நானும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் நீண்டகால நண்பர்களாக இருப்பதால் எங்களுக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்தவிதமான சங்கடமும் கிடையாது" என்று தெரிவித்தார்.

7-2-90 அன்று தமிழக அரசு அலுவலர்களின் பல்வேறு சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் எல்லாம் என்னைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அரசு அலுவலர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். அன்றையதினம்தான் தமிழக அரசு அலுவலர்களுக்கு இனி வாரத்தில் ஐந்து நாட்கள்தான் பணி நாட்கள் என்று அறிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு திருச்சி மாநகரில் 9, 10, 11-2-1990 ஆகிய நாட்களில் திருச்சி அண்ணா நகரில், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பந்தலில், து.ப.

அழகமுத்து அரங்கில் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியர் மாநாட்டினைத் திறந்து வைத்தார். முதல்நாள் 9-ந்தேதியன்று பிரமாண்டமான பேரணியும், 10-ஆம் தேதியன்று இளைஞர் அணி சம தர்ம சமுதாய மாநாடும், 11-ஆம் தேதியன்று அரசியல் மாநாடும் நடை பெற்றது. திருச்சி என். செல்வராஜ் வரவேற்புக் குழுத்தலைவராகவும், திருச்சி கே.என்.நேரு, மற்றும் புதுக்கோட்டை பெரியண்ணன் ஆகியோர் மாநாட்டுச் செயலாளர்களாகவும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த மலர்மன்னன் மாநாட்டுப் பொருளாளராகவும், கரூர் கே.வி.ராமசாமி மாநாட்டு நிதிக் குழுத்தலைவராகவும், காட்டூர் மகாலிங்கம் தொண்டர் படைத்தலைவராகவும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பிப்ரவரி 9-ந்தேதியன்று அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகமும், 10-ந்தேதியன்று நான் எழுதிய மணிமகுடம் நாடகமும் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளன்று கழகப் பொதுக் குழு கூட்டமும் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டிலே நிறைவேற்றுவதற்காக ஆராயப்பட்டு இறுதியாக்கப்பட்டன. மாநாட்டு ஊர்வலத்தைப் பற்றி அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு எழுதும் போது, திருச்சி நகரின் வரலாற்றிலேயே அதுவரை கண்டிராத ஊர்வலம் என்றும், அதை ஒரு ஜன சமுத்திரம் என்று வர்ணித்தால் அது சற்றும் மிகையல்ல என்றும் எழுதியிருந்தது.

மாநாட்டின் மொத்த வரவு 42 லட்சம் ரூபாய் என்பதும் அதிலே செலவுபோக மிச்சமானது 23 லட்சம் ரூபாய் என்பதும் நினைவிற் கொள்ளக் கூடிய செய்தியாகும். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நாளன்று தான் தென்ஆப்பிரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காகப் போராடி முப்பதாண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, 27 ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்த நெல்சன் மண்டேலா தனது 71-வது வயதில் விடுதலையானார். அவர் விடுதலையானது குறித்து ஒரு தீர்மானத்தை நானே எழுதி முன்மொழிந்ததோடு அதற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் மாநாட்டில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களை எழுந்து நின்று இரண்டு நிமிடம் கையொலி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

அவ்வாறே எல்லோரும் கையொலி செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் 27 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் (1962 முதல் 1990 வரை) நெல்சன் மண்டேலா விடுதலையானதும் கேப் டவுன் சிட்டி ஹால் எதிரே ஒரு பால்கனியில் இருந்து கொண்டு உரையாற்றினார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் மண்டேலாவைக் காண பல மணி நேரம் அங்கே காத்துக் கிடந்தனர்.

மண்டேலா அன்று பேசும்போது, இனவெறி ஆட்சியுடன் தொடர்பு ஏதும் வைத்துக் கொள்ளாது, அதை ஒதுக்கி வைக்குமாறு சர்வதேச நாடுகளைக் கேட்டுக் கொண்டார். அதிபர் டி.கிளார்க் கண்ணியமானவர், மெஜாரிட்டி கறுப்பர் மக்களின் கோரிக்கைக்கு வேறு எந்த அதிபரும் அந்த அளவுக்குச் செவி சாய்த்ததில்லை என்றார். பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாகத் தன்னை மட்டும் விடுவித்தால் போதாது, நெருக்கடி நிலைப் பிரகடனத்தை விலக்கிக் கொள்ளுதல், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் போன்ற பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

தனது சிறை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகையில் நீண்ட தனிமையான வீணான ஆண்டுகள் என்று வர்ணித்தார். அவர் சிறையிலே இருந்தபோது கறுப்பர்களின் தாயகம் ஒன்றில் ஒதுங்கி வாழ முன்வந்தாலோ, விடுதலைப் போரைக் கைவிடுவதாக உறுதி அளித்தாலோ அவரை விடுதலை செய்யத் தயார் என்று தென்னாப்பிரிக்க அரசு பல முறை கூறியது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அரசு இன ஒதுக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்து தனது இயக்கமான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்க வேண்டுமென்பதை நிரந்தர கோரிக்கையாகத் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க அரசின் அதிபராக எப்.டபிள்யூ.டி.கிளார்க் வந்த பிறகுதான் 2-2-90 அன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்படுகிறது என்றும், மண்டேலா விரைவில் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுவார் என்றும் அறிவித்தார். 18-7-1918இல் பிறந்த நெல்சன் மண்டேலா, படிக்கும் போதே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு தனது பட்டப் படிப்பை தபால் மூலமாகப் படித்தார்.

குத்துச் சண்டையில் வல்லவரான மண்டேலா சிறு வயதிலேயே ஒரு தங்கச் சுரங்கத்தின் பாதுகாவலராகவும், வக்கீல் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்தார். தனது 26-வது வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இளைஞர் பிரிவை மண்டேலா தோற்றுவித்தார். 48-இல் அதன் செயலாளராகவும், 50-இல் அதன் தலைவராகவும், 52-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் தொண்டர்படைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் ஜோகன்ஸ்பர்க் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

இந்தத் தொழிலைத் தொடங்கிய முதல் கறுப்பர் இவர்தான். 53-இல் மண்டேலாவிற்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்ததோடு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து விலக வேண்டுமென்றும் வலியுறுத்தியது. 1958-இல் முதல் மனைவி எவுலைனை விவாகரத்து செய்து விட்டு, வின்னி நாம்சாமோ என்ற பொதுநல பெண் ஊழியரை மண்டேலா மணந்தார். அரசு துரோக வழக்கு நடந்து கொண்டிருந்தபோதுதான் மண்டேலாவிற்கு வின்னியுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் முடிந்தபோது அதைப்பற்றி வின்னி கூறும்போது, "அவரை மணந்து கொண்டபோதே எனக்குத் தெரியும், எனது மக்களின் போராட்டத்தை, அவர்களின் விடுதலையை மணந்து கொள்கிறேன்" என்றார்.

60-இல் மார்ச் 21-இல் போராட்டத்தில் ஈடுபட்ட 69 கறுப்பர்கள் போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வன்முறையில் குதித்தது. மண்டேலா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் தோல்வியடைந்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவை 1961-ஆம் ஆண்டு உருவாக்கி அதன் தளபதியாக அவர் இருந்தார். ஆப்பிரிக்க நாடு முழுவதும் சுற்றி தேசிய காங்கிரசின் நோக்கங்களை விளக்கினார்.

11-1-62 அன்று எத்தியோப்பியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட மாநாட்டில் திடீரென மண்டேலா தோன்றினார். 1962-ஆம் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்கா திரும்பியதும் கைது செய்யப்பட்டு, சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், வேலை நிறுத்தம் மூலம் சட்டத்தை மீறும்படி தொழிலாளர்களைத் தூண்டியதாகவும் வழக்குப் போடப்பட்டது. இதில் ஐந்தாண்டு காலம் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலே இருந்தபோது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் அலுவலகம் சோதனையிடப்பட்டு பல தஸ்தாவேஜ்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மண்டேலா மற்றும் 8 பேர் மீது சதித்திட்ட வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 20-4-64 அன்று மண்டேலா "ஜனநாயகத் தத்துவத்தைக் காப்பாற்றிட உயிர் விடவும் தயார்" என்ற அறிக்கையை வெளியிட்டார். 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் மண்டேலா தனது தாயாரையும், அதைத் தொடர்ந்து மகனைக் கார் விபத்திலும் இழக்க நேரிட்ட போதும், அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை.

அவர் சிறையில் இருந்த போதே அவருடைய மனைவி 16-5-1977 அன்று ஆப்பிரிக்க இனவெறி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். 1980-இல் மண்டேலா விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற முழக்கம் உலக அளவில் எழுந்தது. 1984இல் வின்னி மண்டேலாவிற்குக் கணவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு நிறைந்த ரோபன் தீவுச் சிறையில் மண்டேலா இருந்தபோது அவருக்கு மிகவும் மோசமான உணவு தரப்பட்டது. பத்திரிகைகளையோ புத்தகங்களையோ படிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை.

கடினமான வேலைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். கல் உடைப்பது, கடற்பாசிகளைச் சேகரிப்பது ஆகியவை இதில் அடங்கும். ஆயினும் இவற்றை விடக் கொடுமையானது, தன் மனைவி வின்னிக்கு இழைக்கப்படும் இன்னல்கள்தான் என்று அடிக்கடி அவர் எழுதி வந்தார். மனைவியைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்ட பிறகு கூட மாதத்திற்கு 40 நிமிட நேரமே சந்திக்க முடியும், கடிதம் எழுதினால் கூட 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

1984-ஆம் ஆண்டு மே மாதம்தான் மண்டேலாவும் அவரது மனைவியும் தழுவிக் கொள்ள சிறையில் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது. 18-7-1988 அன்று அவருடைய பிறந்த நாள். அவர் பிறந்த நாளன்று மனைவியுடன் கழிக்க ஆறு மணி நேரம் அவருக்கு அனுமதி தரப்பட்டது. மண்டேலாவைக் காணச் செல்லும்போது எப்படியிருக்கும் என்பதை வின்னி, "அவரைப் பார்க்கப் போவதென்றால் குதூகலமாக இருக்கும். வெட்டுண்ட பனிக்கட்டி போல் எ

ட்டிக்குதித்து மனம் சில்லிட்டுத் துள்ளும். பார்த்து விட்டுத் திரும்பி வரும் போது வேதனை கலந்து வெறுமை வேலியாக நீளும். மறு முறை பார்க்கும் நாளை நினைத்து நினைத்து ஏங்குகிறேன். துன்பத்தில் நனைந்து, நனைந்து சோகம் சொட்டச் சொட்ட நிற்கிறேன். ஒரே ஒரு நம்பிக்கை! என்றாவது ஒரு நாள் அவர் வரத்தான் போகிறார். இரவு கரையத்தான் போகிறது. பொழுது புலரத் தான் போகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று உணர்ச்சி பீறிடக் குறிப்பிட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளிவந்த ஓராண்டிற்குப் பிறகு 1991-இல் மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக ஆனார். 1992-ஆம் ஆண்டு வின்னி மண்டேலா மீது கடத்தல் மற்றும் ஒரு தாக்குதல் நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்தார் என்பதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டபிறகு, மண்டேலா தனது மனைவியை விவாகரத்து செய்து விடுகிறார். 1993-இல் இவருக்கும் இவரை விடுதலை செய்த அந்நாட்டின் தலைவர் கிளார்க்கிற்கும் நோபல் பரிசு இணைந்து அளிக்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகன்ஸ்பர்க் நகரில் 350 ஆண்டுகளாகப் பறந்து கொண்டிருந்த வெள்ளை இன ஆதிக்கத்தாரின் கொடி இறக்கப்பட்டு; புதிய கொடி ஏற்றப்பட்டது. வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கறுப்பு இன மக்களுக்குள்ளேயே மூட்டி விடப்பட்ட கலக உணர்வுகளும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, பெரும்பாலான கறுப்பு இன மக்களின் அரசு ஒன்றைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

ஆப்பிரிக்காவின் சரித்திரத்திலே முதன்முதலாக அனைத்து இன மக்களும் வாக்களிக்கும் உரிமையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சுமார் 12 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினரும், தென்னாப்பிரிக்க கறுப்பு இன மக்களுடன் சேர்ந்து வாக்களித்தார்கள். மொத்தம் 400 இடங்களில் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் 252 இடங்களைப் பெற்றது. அந்தத் தேர்தலில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலையைப் பற்றி நான் "வெள்ளை இருட்டில் கறுப்பு விடியல்" என்று அப்போது குறிப்பிட்டேன். அதற்குப் பிறகும் அவருடைய வாழ்க்கைப் பாதை மகிழ்ச்சியாக இல்லை. ஏழையெளிய மக்கள் அனைவருக்கும் தங்குவதற்கு வீடு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். டிசம்பர் 97-இல் தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து விலகியதோடு, 99-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது தேசிய காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு நாட்டின் அதிபர் பதவியிலிருந்து அவரே விலகிக் கொண்டார்.

வின்னியை விவாகரத்து செய்ததற்குப் பிறகு மொசாம்பிக் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபருடைய மனைவியை மண்டேலா திருமணம் செய்து கொண்டு, தற்போது உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலைவர்களைச் சந்திப்பதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக உள்ளார். 30-4-1994 அன்று முரசொலியில் நான் எழுதிய கடிதத்தில் தென்னாப்பிரிக்க விடுதலை குறித்து எழுதும் போது, "ஆதிக்கபுரியாக இருந்த சேற்றுக் குட்டையில்; அன்றலர்ந்த செந்தாமரையாக ஜனநாயகம் மணம் பரப்பி நிற்கிறது- நம் மனம் மகிழ்கிறது - தகுதியும் திறமையும் அதிகார பலமும் இருந்தால்; அவற்றைத் திரட்டி உருட்டி அங்குசமாக்கி, யானையை அடக்கி ஆளலாம் என்பதுபோல தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மை கறுப்பு இன மக்களை ஆட்டிப்படைத்த அங்குசம் தூக்கி எறியப்பட்டுவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்தியச் சரித்திரத்தில் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மத்தியிலே பொறுப்பேற்று மூன்று மாதங்கள்கூட முழுமையடையவில்லை. மார்ச் 16-ந் தேதியன்று துணைப் பிரதமர் தேவிலால் அவர்கள் திடீரெனத் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றும், அதனைத் திரும்பப் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. பதவி விலகலுக்கான காரணத்தை அவர் நேரடியாகக் கூறாவிட்டாலும், தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் குறிப்பாக அவரது மகன் அரியானா முதல்வர் சௌதாலாவிற்கும் எதிராக அஜீத்சிங் உள்ளிட்ட மூத்த ஜனதா தளத் தலைவர்கள் மேற்கொண்டுள்ள அவதூறுப் பிரச்சாரம்தான் காரணம் என்று கூறப்பட்டது.

தகவல் எனக்குக் கிடைத்ததும் பிரதமரிடமிருக்கும், துணைப் பிரதமரிடமிருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தேவிலால் தனது விலகலுக்கான காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு எழுதி பிரதமருக்கு அனுப்பியிருப்பதாகக் கூறினார். 18-ஆம் தேதி காலையிலும் நான் தேவிலால் அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிதிநிலை அறிக்கை பேரவையில் விவாதத்தில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என்றும், மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்ற விட்டுக் கொடுத்துப் போகவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.

பிரதமரிடமும் தொலைபேசியில் பேசினேன். அதற்கு வி.பி.சிங் தான் தேவிலால் அவர்களுக்கு அன்றைய தினம் பதில் எழுதவிருப்பதாகத் தெரிவித்தார். அதன்படியே பிரதமர் வி.பி.சிங் எழுதிய பதில் கடிதத்தில், ஜனதா தளத்தை உருவாக்கிய முக்கியமானவர்களில் தேவிலால் அவர்களும் ஒருவர் என்றும், அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற அவர் ஆற்றிய பணியும் மகத்தானது என்றும், கடமையாற்றுவதிலிருந்து விலகிச் சென்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், அவரது பதவி விலகல் கடிதத்தைத் தாம் ஏற்கப் போவதில்லை என்றும், பதவி விலகலை வலியுறுத்தக் கூடாதென்றும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் அந்தக் கடிதத்துடன் சென்று தேவிலால் அவர்களைச் சந்தித்துச் சமாதானப்படுத்தினர். அதன் விளைவாக 18-3-90 அன்று தேவிலால் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை வலியுறுத்தவில்லை என்றும், தான் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து நேரில் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எப்படியோ எழுந்த பிரச்சினை மூன்று நாட்களில் தீர்ந்தது என்றாலும், உருவான நல்ல சூழல், குறைப்பிரசவமாகவே முடிந்தது என்பதுதான் உண்மை!

அமைப்பு ரீதியாக உருவாகாத அரசியல் கட்சிகள்! அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் நீண்டகால வரலாறுகளைக் கொண்ட அமைப்பு ரீதியாக இயங்கிடும் கட்சிகள் அல்ல என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து மக்கள் மத்தியில் இடம்பெற்ற அகில இந்தியக் கட்சி காங்கிரஸ் என்றால்; அமைப்பு ரீதியாக வளர்ந்த அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்; காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோதே அல்லது சுதந்திரப்போரில் ஈடுபட்டிருந்த போதே கம்யூனிஸ்டுகளாக, சோஷலிஸ்டுகளாக இருந்து ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி என்றும்- சோஷலிஸ்டு கட்சி என்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் கொடி உயர்த்தி, சில மாநிலங்களில் ஆட்சி மன்றங்களிலும் இடம் பெற்றவர்கள்.

சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்காக, உரிமைகளுக்கு வாதாடுவதற்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் - சுதந்திரப் போராட்டத்தில் இணைந்திருந்தவர்களால் ஜனசங்கமும்; அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பாரதிய ஜனதாவும் தோன்றிய நிலையில்; பெரிதும் அமைப்பு ரீதியாக இயங்கக்கூடிய வாய்ப்பும், ஆட்சி மன்றங்களில் இடம் பெறக்கூடிய வாய்ப்பும்- ஏன்; மத்திய ஆட்சியிலேயே அமரக் கூடிய வாய்ப்பும் பெற்றதாக அக்கட்சி வளர்ந்துள்ளது. "அகில இந்திய" என்ற அடைமொழியுடன் உருவான மற்ற கட்சிகளில் சில; மாநிலக் கட்சிகளாக மட்டுமே இன்றளவும் இயங்குகின்றன.

உதாரணம் "அகில இந்திய அ.தி.மு.க." என்பது ஒரு மாநிலக் கட்சிக்குப் பெயராக இருப்பதுதான்! தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம் போன்ற மாநிலக் கட்சிகள், அகில இந்தியக் கட்சிகளுடன் அணி சேர்ந்து இந்திய அரசியல் விவகாரங்களில் பங்கு கொள்கின்றன. சில அகில இந்தியக் கட்சிகள் எனப் பெயர் கொண்டவை, மக்களிடத்தில் தொடர்ந்து நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளாமல்; அவர்களது பிரச்சினைகளைத் தொலைவிலிருந்து மட்டுமே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, பொதுத் தேர்தல் அறிவிப்பு வருகிற நேரத்தில் மட்டுமே அரசியல் அரங்கத்தில் காட்சி கொடுப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளன.

அணி அமைக்கவோ, ஆட்சி அமைக்கவோ பற்றாக்குறையாக இருக்கும் ஓரிரு இடங்களை நிறைவு செய்கிற வாய்ப்புகளை மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு அந்த நேரத்துக்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிற கட்சிகளால்; நிலையான அமைப்பு முறையோ கொள்கை உறுதியோ கடைப்பிடிக்க முடிவதில்லை. இந்த அடித்தள பலமற்ற காரணத்தால் எப்போதும் குழப்பங்களும், மன வேறுபாடுகளும் மலிந்து உறுதியற்றதும் நிலையற்றதுமான அரசியல் அணிகளையே சமீப காலமாகச் சந்திக்க வேண்டியுள்ளது.

இவற்றின் அடித்தளத்தைப் பலப்படுத்தி அமைப்பு ரீதியாக இயங்க வேண்டுமென்ற எண்ணம் திரு. வி.பி. சிங்கிற்கும் என் போன்றோர்க்கும் உண்டு எனினும்; அது நினைத்த வண்ணம் நிறைவேறவில்லை. அதன் விளைவுகளில் ஒன்றாகத்தான் தேசிய முன்னணியிலும்; ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே சிக்கல் தோன்றியது! கடந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்தது போல அரியானா மாநிலத்தில் சௌதாலாவை மையமாகக் கொண்டு கிளம்பிய சச்சரவு; முற்றுப்புள்ளியை 'கமா'வாக மாற்றிக் கொண்டு தொடரத் தொடங்கியது.

புகைந்து கொண்டேயிருந்த எரிமலை, திடீரென வெடித்ததுபோல அரியானாவில் ஏற்பட்ட அரசியல் அமளி, பல கிளைகளாக வெடித்து; துணைப் பிரதமர் தேவிலால் அவர்கள், 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி' ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர்கள் பலரைப் பற்றி, கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்குமாறு பிரதமர் வி.பி. சிங் கேட்டுங்கூட, தேவிலால் எதுவும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருக்கவே, வேறு வழியில்லாமல் ஆகஸ்ட் 1-ந் தேதியன்று அவரை அமைச்சரவையிலிருந்து விலக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

உடனடியாக டெல்லிக்குச் செல்ல வேண்டுமென்று என்.டி. ராமராவ் என்னிடம் தொலைபேசியில் கூறியதோடு, மறுநாள் காலையில் ஐதராபாத் வழியாகச் செல்லும் விமானத்தில் வருமாறும், அவர் ஐதராபாத்தில் அந்த விமானத்தில் என்னுடன் சேர்ந்து டெல்லிக்கு வருவதாகவும், விமானத்திலேயே பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டு செல்லலாம் என்றும் கூறினார். நானும் அவரும் அவ்வாறே 2-ந்தேதி காலையில் டெல்லி சென்றடைந்தோம். பிரதமர் எங்களோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறார் என்று வந்த தகவலின் பேரில் உடனடியாக பிரதமர் இல்லத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டோம்.

அந்தப் பேச்சு வார்த்தைகளின் போது முரசொலி மாறன், எஸ்.ஆர். பொம்மை, அஜீத்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், உன்னிகிருஷ்ணன், உபேந்திரா, தினேஷ் கோஸ்வாமி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பேச்சு வார்த்தை 12 மணி வரை நீடித்தும் முடிவு ஒன்றும் காணப்படவில்லை. பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பிவந்த நான், என்.டி.ஆர்., மகந்தா, உன்னிகிருஷ்ணன், தினேஷ் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து விவாதித்து இறுதியாக ஒரு கூட்டறிக்கை விடுவதென்று முடிவெடுத்தோம்.

அதில், அமைச்சரவை அமைப்பது பிரதமருடைய தனி சிறப்புரிமை. அது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. தான் எடுத்த நடவடிக்கை பற்றி பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார். கவலை தரத்தக்க பெரும் பின்விளைவுகளை உருவாக்கும் பிரச்சினைகள் பலவற்றை தேசம் எதிர்நோக்கியுள்ளது. தேசிய முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். இந்நிலையில் தேசிய முன்னணி அரசின் தலைவரான பிரதமர் வி.பி.சிங் தனது பணிகளை நிறைவேற்ற அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

2-8-90 அன்று காலையில் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் இல்லத்தில் தேசிய முன்னணியின் தலைமைக் குழு கூட்டம் 9.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது. தொடர்ந்து தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வி.பி. சிங் அவர்கள் மீது நம்பிக்கை தெரிவித்து அஜீத் சிங் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. வி.பி.சிங் மீது நம்பிக்கை இல்லை என்று யாரும் கூறாத நேரத்தில் அந்தத் தீர்மானமே அவசியமில்லை என்று தேவிலால் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.

கூட்டத்திற்குப்பின் வி.பி. சிங் தேவிலால் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றார். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். தேவிலால் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அந்தப் பதவியில் புதிதாக எவரையும் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நேரத்தில்தான் ஜப்பான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்று, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தது.

மொத்தம் 512 இடங்கள் கொண்ட ஜப்பான் மக்களவையில் 275 இடங்களில் லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் கடந்த தேர்தலில் 295 இடங்களைப் பெற்றிருந்ததற்கு மாறாக 275 இடங்களில்தான் அது வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சிக் காலத்தில் இந்தக் கட்சி மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில் இந்த அளவிற்குப் பெற்ற வெற்றியே பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் எதிர்க் கட்சியான "ஜப்பான் சோஷலிஸ்ட்" கடந்த தேர்தலில் 83 இடங்களை மட்டும் பெற்றிருந்ததற்கு மாறாக இந்தத் தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்றது.

90-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தமிழகத்திலிருந்து மாநிலங்கள் அவைக்கு ஆறு பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் ஐந்து பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கழக வேட்பாளர்களாக வைகோ, தா.கிருஷ்ணன், முகமது சகி, மிசா. கணேசன், நாமக்கல் வீரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அ.தி.மு.க சார்பில் நண்பர் செ.மாதவன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்ததால் வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதே ஆண்டு மே திங்களில் 11-ந்தேதியன்று மதியம் சாப்பிடுவதற்காக அமர்ந்தேன். கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் அருமை உடன்பிறப்பு செ.கந்தப்பன் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், மரணத்துடன் போராடுகிறார் என்றும் தொலைபேசியில் செய்தி வந்தது. கையை உதறிவிட்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன். அதற்குள் அந்தக் கழகத் தளபதியின் உயிர் பறந்து விட்டது! அதே பொதுமருத்துவ- மனையில் அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் இலவச இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கான தொடக்க விழா ந

டைபெற்றது. அந்த விழாவில் நான் கலந்து கொண்டபோது எனக்கு எதிரே முன்வரிசையில் கந்தப்பன் அமர்ந்து பேச்சுக்களையும், நிகழ்ச்சிகளையும் கையொலி செய்து பாராட்டிக் கொண்டிருந்தார். அப்போதே நான் விழா முடிந்ததும் அவரிடம் சென்று ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிச் சிரித்தவாறு என்னை வழியனுப்பி வைத்தார். 1962-இல் திருச்செங்கோடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் கந்தப்பன் தான் நிற்க வேண்டும், அதற்கு நீதான் அவரைத் தயார்படுத்த வேண்டுமென்று அண்ணா எனக்கு ஆணையிட்டார்.

கந்தப்பனைக் கடற்கரை மணலில் மூன்று நாட்கள் உட்கார வைத்து அவரைத் தேர்தலில் நிற்பதற்காகச் சம்மதிக்க வைக்க நான் எடுத்த முயற்சி வெற்றி பெற்றது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கந்தப்பன் கழக வேட்பாளராக ஆனார். ஆனால் அவர் நிற்பதற்காக அத்துணை முயற்சி எடுத்த நானும், எனக்கு ஆணையிட்ட அண்ணாவும், மற்றும் நமது பேராசிரியர் போன்ற கழகத் தலைவர்களும் அந்த நேரத்தில் விலைவாசி உயர்வு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருந்தோம்.

பணபலம், படைபலம், அதிகார பலம், அந்தஸ்து பலம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமாரமங்கலம் ஜமீன்தார் சுப்பராயன் கவர்னராக நியமிக்கப்பட்ட காரணத்தால் நடைபெற்ற அந்த இடைத்தேர்தலில் செங்கோடக் கவுண்டர் என்ற சீமானை எதிர்த்து கந்தப்பன் டெபாசிட் வாங்குவாரா என்று மாற்றார் முகாமிலிருந்து கேலியும் கிண்டலும்! எனினும் அந்தக் கடுமையான போட்டியில் கந்தப்பன் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற செய்தி சிறையிலே இருந்த எங்களுக்கு நள்ளிரவில் கழக அமைப்புச் செயலாளர் திரு.

என்.வி. நடராசன் அனுப்பிய தந்தியின் மூலம் தெரிந்தது. அந்தச் செய்தி கேட்டு அன்றைக்கு மகிழ்ச்சியடைந்த நாங்கள், அந்த கந்தப்பன் மறந்துவிட்ட இந்தச் செய்தி கேட்டுப் புலம்பினோம். ஆழ்ந்த அரசியல் ஞானம், அப்பழுக்கற்ற கொள்கை உறுதி, கழகம் காப்பதில் கடமை உணர்வு, கழக அலுவலகத்திற்கு அன்றாடம் வருகை தந்து பணியாற்றிடும் பாங்கு, தேர்தல் சுற்றுப்பயணம் நான் செல்லும் போதெல்லாம் என்னுடன் வந்து உதவிடும் தன்மை, என்னை அண்ணே என்று அழைக்கும்போது காட்டும் வற்றாத பாசம்- இவையெல்லாம் கந்தப்பனுக்குள்ள அடையாளங்களாகும்.

பெரும் இழப்பு! தர்மபுரி மாவட்டத்தில் கழக ஆட்சியிலே அமைந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கந்தப்பன் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்று பெயர் சூட்டினேன். ஆனால் பிறகு 1991-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வினர் "பெருந்தன்மையோடு" (?) அந்த நண்பருடைய பெயரை எடுத்து விட்டார்கள். என்னுடைய 67-வது பிறந்த நாள் விழா வழக்கம் போல கழகத் தோழர்களினால் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த ஆண்டு அதில் ஒரு சிறப்பாக யாரும் எதிர்பாராத விதமாக மத்திய நிதி அமைச்சர் மது தண்டவதே அவர்கள் வேறொரு விழாவிற்காகச் சென்னைக்கு வந்தவர், நேராகக் கலைவாணர் அரங்கத்திற்கே அவராகவே வந்துவிட்டார்.

விழாவில் அவர் உரையாற்றும்போது; "கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தை உங்களில் பலரும் இளைஞர்களும் மறந்திருக்கலாம். 1975-ஆம் ஆண்டு நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. எங்களில் பலர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டோம். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் சிறையில் அடைக்கப்- பட்டுக் கிடந்தார். நாடெங்கும் பாலைவனமாக இருந்த நேரத்தில் மனதுக்கு இதம் தருகின்ற பசும் சோலையாகக் கலைஞருடைய ஆட்சி காணப்பட்டது.

நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எதிர்ப்பைக் கைவிட்டு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கோரினார்கள். அப்பொழுது கலைஞர் ஒருவர்தான், நெருக்கடி நிலையை ரத்து செய்துவிட்டு தேசத் தலைவர்களை விடுதலை செய்தால்தான் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைத் தர முடியுமென்று துணிச்சலோடு சொன்னார். நெருக்கடி நிலையை எதிர்த்த அன்றைய முதலமைச்சர் கலைஞர் ஆட்சி அதிகாரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை.

1977-ஆம் ஆண்டு ஜனதா ஆட்சி அமைந்தபோது அந்த ஆட்சியை அமைப்பதற்கு அடித்தளமாக இருந்த நிலம்தான் தமிழ்நாடு. கலைஞர் தி.மு. கழகத்தின் தலைவர் மட்டுமல்ல, முதலமைச்சர் மட்டுமல்ல, அவர் தேசிய முன்னணியின் தலைவர். அவர் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டது என்றைக்கும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெறத்தக்கதாகும். கழக அரசினால் அரசு அலுவலர்களுக்கான முக்கியமான கோரிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது அரசுப் பணியாளர்கள் ஒரு இடத்தில் பணிபுரியும்போது மூன்றாண்டு காலப் பணி முடிவதற்குள்ளாக அவர்களை அந்த இடத்திலிருந்து மாற்றக் கூடாது என்றும், அதே நேரத்தில் அரசுப் பணியாளர்கள் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியவும் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு விதி விலக்கு யாருக்காவது தர வேண்டுமேயானால், அரசாங்கத்தின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் முன் உத்தரவைப் பெற்றாக வேண்டும். அரசு அலுவலர்கள் மத்தியில் இந்த ஆணை பெரும் வரவேற்பை அந்தக் காலத்தில் பெற்றது. 22-6-1990 அன்று ஈரான் நாட்டில் பயங்கர பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கிராமங்கள், நகரங்கள் அழிந்தன. தெருக்களில் பிணங்கள் குவியல் குவியல்களாகக் கிடக்கின்றன என்று செய்திகள் வந்தன.

மொத்தத்தில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்பட்டது. உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை ஈரான் மக்கள் தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. "அக்ரகாரத்து அதிசய மனிதர்" என்று அண்ணா அவர்களால் புகழ்ந்து எழுதப்பட்ட 'வ.ரா.'

அவர்களின் நூற்றாண்டு விழா 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி கழக அரசினால் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே ஜூன் திங்களில் வ.ரா. அவர்களின் துணைவியார் திருமதி புவனேஸ்வரி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு மற்றொரு சிறிய பகுதியில் தான் வசித்து வருவதாகவும், தனது கணவர் 1930-இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் ஓராண்டு காலம் இருந்தவர் என்றும், அதற்காக எந்தவிதமான மானியமோ, ஓய்வூதியமோ பெறவில்லை என்றும், திருச்சியிலிருந்து அவரை அலிபுரம், பெல்லாரி சிறைகளுக்கு மாற்றினார்கள் என்றும், அதுபற்றிய விவரம் அவர் கைப்பட எழுதிய "ரிக்கார்டு" தன்னிடம் உள்ளதாகவும், தான் தியாகி பென்ஷனுக்காக மட்டும் இதனை எழுதவில்லை என்றும், எந்த உதவி செய்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனேயே ஆசிரியர் திரு.சாவி அவர்களிடம் சொல்லி அவரை அழைத்து வரச் செய்து ஜூலை திங்கள் முதலே புவனேஸ்வரி அம்மையாருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கிட ஆணை பிறப்பித்தேன். மேலும் அரசின் சார்பில் ஆகஸ்ட் 17-ந்தேதியன்று "வ.ரா."

அவர்களின் நூற்றாண்டு விழா கலைவாணர் அரங்கிலே சிறப்பாக நடைபெற்றது. கல்வி அமைச்சர் பேராசிரியர் விழாவிற்குத் தலைமை வகித்தார். நானும் அமைச்சர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் விழாவிலே கலந்து கொண்டு "வ.ரா." அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தோம். "வ.ரா."

அவர்களின் குடும்பத்தினரும் அந்த விழாவிலே பங்கேற்றனர். அரசின் சார்பில் அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவரும், வாழ்நாள் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே பணியாற்றியவரும், இந்திய அரசில் பல்வேறு பொறுப்புக்களில் இருந்து உழைத்தவரும் பாபுஜி என்று அன்பொழுக அனைவராலும் அழைக்கப்பட்டவரும், என்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்ட வருமான பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா 28-6-1990 அன்று சென்னையில் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

என்னுடைய தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் பாபுஜி அவர்களின் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், பாபுஜியின் அன்பு மகள் மீரா குமார் அவர்களும் அந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அந்த விழாவிலே நான் உரையாற்றும்போது, நெருக்கடிநிலை நேரத்தில் சில சிக்கல்களுக்கு நான் ஆளான நேரத்தில் அவர் கிண்டி ராஜ்பவனத்தில் தங்கியிருந்தபோது நேரில் சென்று அவரைச் சந்தித்ததைப் பற்றியும், அப்போது அவரிடம் உங்களுடைய அறிவுரை என்ன என்று நான் கேட்டபோது "Karunanidhi, Keep the Gun powder dry" என்று அவர் கூறியதை, அதாவது துப்பாக்கி மருந்தைப் பாதுகாத்து வை என்று தெரிவித்ததையெல்லாம் நினைவுகூர்ந்து பேசினேன்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றினையெல்லாம் தொகுத்துச் சொன்னேன். சென்னை ஓட்டல்கள் சங்கப் பொன்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று என்னிடம் வலியுறுத்தி 30-6-90 அன்று கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்தேன். விழா ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ் கொடுக்க வந்த அந்தச் சங்கத்தின் முன்னோடிகள் சிலர் என்னிடம் விடை பெற்றுச் செல்வதற்கு முன் தயங்கித் தயங்கி நின்றார்கள்.

என்ன என்று கேட்டேன். சொல்வதற்கு மிகுந்த கூச்சப் பட்டுக் கொண்டு, விற்பனை வரி செலுத்துவதில் அவர்களுக்குள்ள சிரமத்தை எடுத்துக் கூறினார்கள். அதிகாரிகளிடம் கலந்து கொண்டு விழாவிலே தெரிவிப்பதாகக் கூறினேன். தாங்கள் இந்தச் சலுகையைப் பெறுவதற்காக ஓட்டல் அதிபர்களிடம் கணிசமான ஒரு தொகையை வசூலித்து வைத்திருப்பதாகவும், 50 லட்சம் ரூபாய் அளவிற்குத் தேறும் என்றும், அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்கள்.

எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை; விழாவிற்கு நான் வருவதாக இல்லை, நீங்கள் வெளியே போகலாம் என்று சீறினேன். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டதாகவும், சலுகை தராவிட்டால் கூடப் பரவாயில்லை, விழாவிற்கு அவசியம் வர வேண்டுமென்றும் வேண்டினார்கள். அப்படியானால் வசூலித்த தொகையை அவரவர்களிடம் விழாவிற்கு முன்பாகவே கொடுத்துவிட வேண்டுமென்றேன். அது இயலாத காரியம், ஒழுங்காகப் போய்ச் சேராது, இடையிலே உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள் என்றார்கள்.

பிறகு, வசூலித்த தொகையை என்ன செய்வதென்று யோசித்து, இறுதியாக அந்தத் தொகையை விழா நிகழ்ச்சியின் போதே முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு என்று கூறிக் கொடுத்து விடுங்கள் எனக் கூறினேன். பின்னர் அவர்கள் விழாவிலேயே அந்தத் தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார்கள். நானும் அதிகாரிகளோடு கலந்துபேசி அவர்கள் வைத்த கோரிக்கையைப் பரிசீலித்து உணவு விடுதிகளில் 5 சதவிகிதம் விற்பனை வரி என்பதற்கான வரம்பு 15 இலட்சம் ரூபாய் என்பதை 18 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தேன்.

3-7-90 அன்று ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியாவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் மெக்காவிலிருந்து மெதினா செல்லும் வழியில் உள்ள சிறிய மலைக்குகை வழியாகச் சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1400 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தார்கள். 12-7-90 அன்று யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தமிழகச் சட்டப் பேரவை அ.தி.மு.க.

கட்சியின் துணைத் தலைவராக இருந்த எஸ். திருநாவுக்கரசு, அந்தக் கட்சியின் கொறடாவாக இருந்த கே.கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குழந்தை வேலு, நடிகர் ராமராஜன், இளைஞர் அணித் தலைவராக இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், நெல்லை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன உள்ளிட்ட பலரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1-ந்தேதியன்று திருநாவுக்கரசு அவர்கள் நடத்திய பொதுக்குழுவில் ஜெயலலிதாவை அ.தி.மு.க.

விலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார். அயோத்தியா காண்டமும் அத்வானி இரத யாத்திரையும்! தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய காலந்தொட்டு; இதனை ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பாக இயங்குவதற்கான வழிவகைகள், அதற்கான சட்ட திட்டங்கள், கொள்கை கோட்பாடுகள் வகுக்கப்பெற்று இந்நாள் வரையில் அந்த நெறிமுறைக்கு ஊசி முனை அளவு கூட ஊனம் ஏற்படாத நிலையே இருந்து வருகிறது.

ஆனால் தன்னுடைய செல்வாக்கு, புகழ், கலையுலகக் கவர்ச்சி இவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு, அதன் காரணமாக வெற்றி பல பெற்ற அருமை நண்பர் எம்.ஜி. ஆர். அவர்கள்; அவர் உருவாக்கிய கட்சிக்கு அமைப்பு முறைபற்றியோ- ஜனநாயக முறை பற்றியோ - எந்தக் கவலையும் கொள்ளாமல் அனைத்துமே அவர் கருத்துப்படி நியமன முறை என்ற அளவில் கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் இடமளித்த காரணத்தால் அடி மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் அமைப்பு ரீதியான அடிப்படையில் அந்தக் கட்சி வளரவில்லை.

அதன் வளர்ச்சியும் வெற்றிகளும் எம்.ஜி. ஆர். அவர்களைப் பொறுத்தே இருந்தது. எனவே அவரது மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் ஜானகி அம்மையார் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் என்ற அளவில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒருவருக்கொருவர் வாரி- யிறைத்த வசைபுராணங்கள், கொலைக் குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 1989 தேர்தலில் வீரமணி அவர்களாலும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களாலும் பல தொகுதிகளில் ஆதரிக்கப்பட்ட போதுகூட ஜானகி அணி பெருந் தோல்வியடைந்து வீழ்ச்சியுற்றதால் ஜெயலலிதாவின் கை ஓங்கிற்று.

ஆனால் அந்தக் கட்சிக்குள்ளும் புயல் கிளம்பி, திருநாவுக்கரசு தரப்பினரை விலக்கி விட்டதாக ஜெயலலிதாவும் - ஜெயலலிதா தரப்பினரை விலக்கி விட்டதாக திருநாவுக்கரசும் அறிவித்து; அவர்களுடைய கட்சி அலுவலகத்திலேயே 12-8-1990 அன்று இரு குழுவினரும் மோதிக்கொண்டு பலர் காயமடைந்து; இரு தரப்பிலும் 43 பேர் கைதாகிப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் ஜானகி அவர்கள் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து கொண்டு, கட்சித் தேர்தல் சின்னம், தலைமை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை ஜெயலலிதா அணிக்கு விட்டுக் கொடுத்தார்.

அதன்பிறகு ஜானகி அம்மையாரை ஜெயலலிதா ஏறெடுத்தும் பார்க்கவில்லை! இதற்கிடையே அவர்களுக்குள் மோதுதல் ஏற்பட தி.மு.க. ஆட்சிதான் காரணம் என்று கூறி, ஜெயலலிதா அவரது வீட்டு வாசலிலேயே 13-8-90 அன்று சாகும் வரையில் உண்ணாவிரதம் என அறிவித்து அவ்வாறே தொடங்கினார். அதற்குப் போட்டியாக திருநாவுக்கர

சு அவர்களும் உண்ணாவிரதம் தொடங்கினார். அந்தக் கலவரத்தின்போது ஜெயலலிதா எழுதிய சில கடிதங்களை திருநாவுக்கரசு, பத்திரிகைகளில் வெளியிட்டார். கட்சி அலுவலகப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என்று ராஜீவ் காந்தி அறிவுரை சொன்னதாகக் கூறி மறுநாள் 14-8-90 அன்று ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்த நிகழ்வுகளுக்கு முன்பு 29-7-90 அன்று சேலம் சீரகாபாடியில் உள்ள கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அவர் பெயரால் கட்டப்பட்டிருந்த மணி மண்டபத்தினையும் வாரியார் சிலையையும் நான் திறந்து வைத்தேன்.

விழாவில் கிருபானந்த வாரியாரும் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, "இந்த நாட்டிலே திருக்குறள் படித்தால் ஒழுக்கம் இருக்கும். இந்த உலகத்தில் பெருமை கலை உணர்வினால் வருகிறது. அதற்கு உதாரணம் கலைஞர். அவர் தன் வாழ்நாளில் கலைக்காகவே வாழ்ந்து, கலைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரை வாழ்த்துவதெல்லாம் கலையை வாழ்த்துவதாகும். அவருடைய கலை உள்ளத்தை உலகம் பாராட்டுகிறது. அவருடைய உள்ளம் கலை நிறைந்த உள்ளம்.

அவர் வந்து இந்தச் சிலையைத் திறந்து வைத்து இந்தக் கல்லூரியையும் பார்வையிட்டிருக்கிறார். அவர் பார்வை பட்டாலே எதுவும் ஒரு படி உயரும். கலைஞர் அவர்கள் நீண்டகாலம் இருந்து இந்தத் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் நல்ல உடல்நலத்தோடு பல்லாண்டு பல்லாண்டு இருந்து தொண்டு செய்வார். உங்கள் எல்லோருடைய சார்பாக நெஞ்சார நினைத்து, வாயார வாழ்த்தி, தமிழ்க்கடல் கலைஞர் அவர்களுக்குக் கலைச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சூட்டுகிறேன்" என்று உளமாறப் பாராட்டினார்.

நான் அந்த விழாவிலே உரையாற்றும்போது, "வாரியார் அன்று தொட்டு இன்று வரையில் எந்தவொரு கொள்கையிலே, அது எனக்கு முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கையாக இருக்கலாம், ஆனால் அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையில் பிடிவாதமாக உறுதியாக இருந்து கனிவாக மற்றவர்களுடைய உள்ளத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிய வைக்க வேண்டும் என்கின்ற ஆழ்ந்த அக்கறை படைத்தவர். அவர் சொல்கின்ற கருத்துக்கள் அனைத்தும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் அவர் அதை எப்படிச் சொல்கிறார் என்பதற்காக அதைக் கேட்கும் அவா உடையவனாக இருந்திருக்கிறேன்.

அவர் தமிழுக்காக ஆற்றியிருக்கின்ற தொண்டுகளை நாம் மறந்திட இயலாது. அந்தத் தமிழ்த் தொண்டின் சின்னமாகத்தான் இங்கே இந்தக் கல்லூரி எழுந்து நிற்கின்றது. ஆட்சியிலே இருப்பது என்பது முள் கிரீடம் சூட்டிக்கொண்டு உலவுவதைப் போலத்தான்! ஆனாலுங்கூட கிருபானந்த வாரியார் போன்ற பெரியவர்களின் வாழ்த்து, பாராட்டு, அவர்களுடைய உள்ளத்திலிருந்து பொழிகின்ற கருணை, அன்பு ஆகியவைகளால் எங்களுக்கு ஏற்படுகின்ற காயங்களை நாங்கள் ஆற்றிக் கொள்கிறோம்" என்று தெரிவித்தேன்.

90-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் உலக அரசியல் போக்கையே மாற்றும் சம்பவம் நடைபெற்றது. பெட்ரோல் ஏற்றுமதி மூலம் வளம் கொழித்த குவைத் நாடு அன்று தன்னுடைய பக்கத்து நாடான ஈராக்கினால் ஆக்கிரமிக்கப்பட்டது. குவைத்தின் அமீர் ஜாபர் அல் அஹ்மத் அல்சபா அவர்கள் சவுதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். ஈராக் அதிபர் சதாம் உசேனை குவைத் நாட்டை விட்டு வெளியேறும்படி உலக நாடுகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தது மட்டுமல்லாமல், குவைத்தை ஈராக்கின் 19-வது மாநிலமாக அறிவித்தார்.

ஆகஸ்ட் 6-ந் தேதி ஐ.நா.பாதுகாப்புக் குழு ஈராக் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஈராக் மற்றும் குவைத்தில் தயாராகும் எண்ணெய் ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. மேலை நாட்டு வங்கிகளில் ஈராக், குவைத் நாடுகளின் முதலீடுகள் முடக்கி வைக்கப்பட்டன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்கள் சதாம் உசேனைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஐ.நா.வின் பொருளாதாரத் தடையைச் செயல்படுத்த அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படை ஒன்று சவுதி அரேபியாவிற்கு அந்த நாட்டின் வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டது.

உலக நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா உட்பட அனைத்தும் சதாம் உசேனுக்கெதிராக ஒன்றுபட்டபோது எகிப்து, சிரியா, ஜோர்டான் நாட்டு மக்களால் அரபு மக்களின் காவலனாக சதாம் உசேன் புகழப்பட்டார். ஈராக்கிற்குத் தேவையான பணத் தேவையைச் சந்திக்க குவைத்தின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவது ஒன்றே வழி என்பது சதாம் உசேனின் கணிப்பு. அரபு நாடுகளுக்குத் தலைமை தாங்கும் ஆசை ஈராக்கிற்கு நீண்ட காலம் உண்டு. 1991 ஜனவரி 15க்குள் ஈராக், குவைத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் பன்னாட்டுப் படைகளின் ராணுவ நடவடிக்கை மூலம் ஈராக்கை வெளியேற்ற ஐ.நா.

பாதுகாப்புச் சபை அனுமதி அளித்தது. குவைத் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இந்தியர்களை வெளியேற்றி இந்தியாவுக்கு அழைத்துவர ஐம்பது கோடி ரூபாய் செலவானது. ஏர் இந்தியா விமானம் ஆகஸ்ட் 14 முதல் அக்டோபர் 11 வரை 461 விமானப் பயணம் மூலம் 1,16,084 பேரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குப் பத்தாயிரம் டன் உணவுப் பொருளை அனுப்ப அனுமதிக்கப்பட்ட முதல் நாடும் இந்தியாதான்.

ஜனவரி 17ந்தேதி காலை பன்னாட்டுப் படையினர் ஈராக்கின் முக்கிய ராணுவ நிலையங்களைத் தாக்கி அழித்தனர். 18-ஆம் தேதியன்று ஈராக்கின் ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டை நோக்கி வீசப்பட்டன. இஸ்ரேல் தொடர்ந்து தாக்கப்பட்டதால் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. 22-ந்தேதி குவைத் எண்ணெய்க் கிணறுகள் தகர்க்கப்பட்டன. 25-ந்தேதி குவைத் தீவு அமெரிக்கப் படையால் கைப்பற்றப்பட்டது. 27-ந்தேதி ஈராக்கின் போர் விமானங்களை ஈரான் முடக்கியது.

7-2-91 அன்று அமெரிக்க வீரர்கள் குவைத் கடற்கரையில் இறங்கி தாக்குதல் தொடுத்தனர். தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத ஈராக், தோல்வியைத் தழுவி, குவைத் நாட்டினை விடுவித்தது. இவ்வாறு நீடித்த இந்தப் போர் 91-ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி வரை நீடித்தது. இந்தப் போரில் தீப் பிடித்து எரிந்த எண்ணெய்க் கிணறுகள் அணைவதற்கு வெகு காலம் பிடித்தது. 6-8-90 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைத் திடீரென்று அதிபர் இஸ்ஹாக்கான் கலைத்து 20 மாத காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் திருமதி பேநசீர் புட்டோவின் தலைமையிலான அமைச்சரவையைப் பதவி இழக்கச் செய்ததோடு, நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி நடக்குமென்றும், அதுவரை இடைக்காலப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் முஸ்தபா ஜதோயை நியமிப்பதாகவும் அறிவித்தார்.

பேநசீர் புட்டோவின் ஆட்சியில் ஊழலும் அரசியல் செயல்திறமையின்மையும் பெருகிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி பிரதமராகப் பதவியேற்ற பேநசீர் புட்டோ முஸ்லீம் நாடு ஒன்றின் முதல் பெண் பிரதமராவார். 11 ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை மலரச் செய்தவர் என்றும் அவர் புகழப்பட்டார். ஆனால் அவர்மீதிருந்த நல்ல எண்ணம் படிப்படியாகக் குறைந்தது.

அவரது ஆட்சியில் பல ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டன. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதே புகார்கள் கூறப்பட்டன. ராணுவத்துடனும் பேநசீர் புட்டோ அரசு சுமுகமான உறவு கொண்டிருக்கவில்லை. தொடர்ந்து மொத்தமுள்ள நான்கு மாகாண சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டன. அக்டோபர் திங்களில் நடைபெற்ற தேர்தலில் பேநசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெரும் தோல்வி கண்டது. வாக்குப் பதிவுக்கு முன்பு அவருடைய கூட்டங்களுக்குத் திரண்ட மக்கள் எண்ணிக்கையையும் ஆதரவையும் கண்டு பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் பேநசீரே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக 207 முஸ்லீம் தொகுதிகளில் பேநசீரின் கட்சிக்கு 45 இடங்களே கிடைத்தன.

ராணுவத்தின் ஆதரவுள்ள இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணி 105 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி அவர்களுக்கு தெலுங்கு திரைப்படத் தொழில் துறையின் சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 12-9-1990 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் கலந்துகொண்டு சென்னா ரெட்டி அவர்களைப் பாராட்டி வாழ்த்தினேன்.

அந்த விழாவிலே சென்னா ரெட்டி பேசும் போது, "இந்தியாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலைஞரைப் போலச் செயல்பட்டால் நாடு நன்றாக இருக்கும், தேசிய ஒருமைப்பாடு வளரும்" என்று குறிப்பிட்டார். 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் கழகம் ஆண்டு தோறும் கொண்டாடும் முப்பெரும் விழாவிற்குப் பதிலாக பெரியார்-அண்ணா-கழகம் பிறந்த முப்பெரும் விழா, அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா, தென்னகத்தின் விடிவெள்ளி திராவிட இயக்க வைரவிழா, சமூக நீதிக்கு வழி கண்ட மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகிய விழாக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பேரணி, இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், பொதுக் கூட்டம் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அண்ணா அவர்களின் நினைவிடம் அருகில் 25 லட்சம் ரூபாய் செலவில் அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவும் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிற்கு வந்த அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையாருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றேன். விழாவுக்கான பேரணிப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அவர்களும், தேசிய முன்னணித் தலைவர்களும், சில மாநில முதலமைச்சர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த விழாவிற்கு அடுத்த வாரம் கழக அரசின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் 22-9-1990 அன்று சென்னையிலே நடைபெற்றது. டெல்லியில் முதல் அமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு குழுக் கூட்டங்களை டெல்லியிலேயே எப்போதும் நடத்துவதற்குப் பதிலாக மாநிலத் தலைநகரங்களிலும் நடத்த வேண்டுமென்ற ஒரு கருத்தை நான் வெளியிட்டேன். அந்தக் கருத்தை பிரதமர் வி.பி. சிங் உடனடியாக ஏற்றுக் கொண்டு சென்னையில் நடத்துகிறீர்களா என்று கேட்டார்.

நானும் ஒப்புக்கொண்டேன். அதற்கேற்ப தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லிக்கு வெளியே இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது அதுவே முதல் முறையாகும். பிரதமர் தலைமையில் மாநில முதல் அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப் பட்டிருந்தன.

22-9-90 அன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் சரியாக 10.30 மணிக்கு தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் தொடங்கியது. முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராஜீவ்காந்தி அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் என்.டி. ராமராவ், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, பஞ்சாப் கவர்னர் வீரேந்திர சிங், உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், கேரள முதல்வர் நாயனார், ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக், பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், அரியானா முதல்வர் உக்கம் சிங், மகாராஷ்டிர முதல்வர் சரத்பவார், புதுவை முதல்வர் டி.

ராமச்சந்திரன், சிக்கிம் முதல்வர், மிஜோரம் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், அகாலிதளத்தைச் சேர்ந்த சுர்ஜித் சிங் அரோரா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் வந்திருந்தனர். அன்று காலை 8 மணி அளவில் மாநாடு நடக்குமிடத்திற்கு அருகில் ஒரு வெடிகுண்டு காவல் துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டு, பரபரப்பானதும், பதற்றம் நிறைந்ததுமான செய்தியாகி; உடனடியாக அந்த வெடிகுண்டு செயலற்றதாக்கப்பட்டது.

மாநாட்டில் நான் வரவேற்புரை ஆற்றினேன். அப்போது, "நமது அரசு மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான பற்று கொண்டுள்ளதாகும். பல சமயத்தினரும், பல இனத்தவரும், பல மொழியினரும் கொண்டது நம்முடைய நாடு. இத்தகைய ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினரின் உணர்வுகளையும் நலன்களையும் பெரும்பான்மையினர் மதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருவர் என்ற உறுதியை, நம்பிக்கையை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சிறுபான்மையினருக்கு அச்ச உணர்வு ஏற்படாதபடி பார்த்துக் கொள்வதில் பெரும்பான்மையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவர்களது உணர்வுகளைப் புண்படுத்தக் கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினேன். மாநாடு காலையிலே மூன்றரை மணி நேரமும், மாலையிலே ஐந்தரை மணி நேரமும் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் வி.பி. சிங் தமிழக அரசின் ஏற்பாடுகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்ததோடு, மாநாட்டிலே ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்து மிகவும் விளக்கமாகப் பேசப்பட்டதென்றும், ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்து ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாசகம் வருமாறு:- "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்த பிரச்சினையை அனைவரும் ஒத்துக் கொள்ளுமாறு பேசி முடிவெடுக்கப்படும். இது சம்பந்தமாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து ஒப்புக் கொள்ளத்தக்க வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இது சம்பந்தமான வழக்கை விரைவில் முடித்து வைக்குமாறு நீதிமன்றத்தை அரசு கேட்டுக் கொள்ளும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைவரும் மதிக்கத்தக்க வகையில் அரசு செயல்படும்." மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதல் அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள், சில மாநில ஆளுநர்கள் உரையாற்றினர். ராஜீவ் காந்தி ராம ஜென்ம பூமி கிளர்ச்சி குறித்து மட்டும் சில நிமிடங்கள் பேசினார். இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தேசிய வாதத்தை வளர்க்கும் நோக்குடன் ரத யாத்திரை மேற்கொள்ளப் போவதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.

அத்வானி அவர்கள் அறிவித்து, 25-9-90 அன்று அயோத்தியை நோக்கி, பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலை விலான ரதயாத்திரையை குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதபுரத்திலிருந்து தொடங்கினார். தீனதயாள் உபாத்தியாய பிறந்த தினமான 25ந்தேதி இந்த ரத யாத்திரை தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மத்திய அரசு சோமநாதர் கோயிலைக் கட்ட சர்தார் பட்டேல் உடனடி நடவடிக்கை எடுத்ததைப்போல ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி பிரச்சினையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

இந்தியாவில் மேற்குக்கரைப் பகுதியில் உள்ள இந்தக

் கோவிலை கஜினி முகமது 17 முறை இடித்துத் தரைமட்ட மாக்கினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் 1951-ஆம் ஆண்டு சோமநாதர் கோவிலில் ஜோதிர்லிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தினமும் 300 கி.மீ. பயணம் என்ற முறையில் கணக்கிட்டு அக்டோபர் 29-ந்தேதி அயோத்தி சென்றடைவதென்றும், அக்டோபர் 30-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியைத் தொடங்குவதென்றும் திட்டமிடப்பட்டது.

மற்ற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ கோஷம் எழுப்ப வேண்டாமென்று அத்வானி வேண்டுகோள் விடுத்தார். தேசிய ஒற்றுமை, கலாச்சாரப் பாரம்பரியம், மத அமைதி ஆகியவற்றைப் பலப்படுத்துவதே ரத யாத்திரையின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் கூறும்போது, ராமர் கோயில் கட்டுவதை நான் ஒரு போதும் எதிர்க்கவில்லை.

மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் கோயில் கட்டும் திட்டத்தைத்தான் எதிர்க்கிறேன். மதப் பிரச்சினை ஒன்றை அரசியல் ஆக்குவதை நான் விரும்பவில்லை என்றார். அக்டோபர் 5-ந்தேதியன்று மாநிலங்களவையிலேயே ஆளுங்கட்சி உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி நடத்தி வரும் ரத யாத்திரை நாட்டின் பல்வேறு இடங்களில் வகுப்புக் கலவரத்துக்குத் தூண்டுகோலாக அமைகிறது; அதன் எதிரொலியாக நாட்டின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

எனவே பா.ஜ.க. தனது ரத யாத்திரையை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினர். பா.ஜ.க. சார்பில் அதற்குப் பதிலளித்த சிக்கந்தர்பக்த், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது வகுப்புக் கலவரத்துக்கு வழி வகுக்காது என்றார். ராம ஜென்ம பூமி பிரச்சினையில் பிரச்சினைக்குள்ளான இடத்தில் உள்ள அமைப்புகள் அனைத்தையும் எந்த வகையிலும் பாதுகாப்பது என்ற அரசின் முடிவிற்கு தேசிய முன்னணியின் ஆட்சி மன்றக் குழு 12-10-90 அன்று கூடி ஆதரவு தெரிவித்தது.

மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முஸ்லீம் தலைவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. இதற்கிடையே அத்வானி அவர்கள், ரத யாத்திரையைத் தடுத்தால் இதுவரை இந்திய வரலாறு கண்டிராதபடி மிகப் பெரிய அளவில் சத்தியாக் கிரகப் போராட்டம் நடைபெறும் என்றார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்காவிட்டாலோ, ரத யாத்திரையைத் தடுத்தாலோ தேசிய முன்னணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறப் போவதாக பா.ஜ.க.

வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் 17-10-90 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றிரவே ஜனதா தளத்தின் அரசியல் விவகாரக் குழு கூடி மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றுக் கொண்டால் ஏற்படக் கூடிய விளைவுகளைச் சந்திக்க தேசிய முன்னணி அரசு தயாராக இருப்பதாக அறிவித்தது. இதற்கிடையில் பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் அத்வானியைச் சந்தித்து தங்கள் மாநில வழியாக ரத யாத்திரை மேற்கொள்ள வேண்டாமென்றும், மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றநிலை இருப்பதால் அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்றும் கேட்டுக் கொண்டதற்கு அத்வானி ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

மத்திய அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 18-10-90 அன்று நடைபெற்றது. பா.ஜ.க.வும், இந்திரா காங்கிரசும் அந்தக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து விட்டன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 89ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி பிறப்பித்த கட்டளைப்படி நடப்போம் என்று கையெழுத்திட்டு உறுதி கூறிய விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் அதன்படி நடக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இரத யாத்திரையைக் கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அத்வானியை நேரில் சந்தித்துக் கேட்டுக் கொண்டதையும் அத்வானி ஏற்க மறுத்து விட்டார். 19-10-90 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம ஜென்ம பூமி இடத்தை அரசு ஆர்ஜிதம் செய்வதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். உள்ளே வரும்போது பெரும் கலவரம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநிலத்திற்குள் ரத யாத்திரை அமைதியாக நுழைந்தது. மத்திய அரசின் சார்பில் ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி பிரச்சினை தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதி மன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவது என்றும், பிரச்சினைக்குரிய இடத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வது என்றும், அந்தப் பகுதியை ஒட்டியுள்ள வேறு இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக சமிதியிடம் ஒப்படைப்பது என்றும் மூன்று அம்சத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.

இந்த மூன்று அம்சத் திட்டத்தை நான் வரவேற்று, அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். மண்டலும்; அயோத்தியும் கவிழ்த்த மத்திய ஆட்சி மதப் பற்றே இல்லையென்று தம்மைப் பற்றிக் கூறிக் கொண்டு அந்த முடிவில் வாயளவில் இல்லாது செயலிலும் உறுதியாக இருப்போர், மிகக் குறைந்த சதவிகிதத்தினரே இருக்கக் கூடும். ஆனால்; இருக்கின்ற மதங்களுக்கிடையே போட்டி, புகைச்சல், வேறுபாட்டுணர்வுகள் இல்லாமல்; ஒருவேளை அந்த உணர்வுகள் இருப்பினும் அவற்றைப் போக்கிக் கொண்டு, மதங்களுக்கிடையே நல்லிணக்கம் காண்பதே சாத்தியமான பணியாகும்.

அதனால்தான் நான் அண்மைக்காலமாக "மதச் சார்பற்ற" என்ற வாசகம்; "மதச் சார்பற்ற அரசு" என்பதற்கு மட்டுமே பொருந்தும் என்றும் - கட்சிகளின் கூட்டணியில் எப்படியும் மதச் சார்புடையவர்களிருப்பதால் அத்தகைய அணியை "மதச் சார்பற்ற அணி" எனச் சொல்லாமல் "மத நல்லிணக்க அணி" என்று கூறுவதே பொருந்தும் என்று விளக்கி வருகிறேன்.

தனது ஆட்சியின்கீழ் இருக்கிற நாட்டில் அல்லது அந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் மதங்களிடையே ஏற்றத் தாழ்வு பார்க்காமல், எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து, அவற்றிடையே எழும் பிரச்சினைகள் நல்லதாயினும் கெட்டதாயினும் அரசைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற நிலையையே கடைப்பிடிக்க வேண்டும். அரசு, மதச் சார்பற்ற அரசு! அரசியலில் உருவாகும் அணிகள், மத நல்லிணக்க அணிகள்! இந்தியப் பிரதமராக வீற்றிருந்த வி.பி.

சிங் அவர்களைப் பொறுத்தவரையில்; மத நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும்; அதே சமயம் மதச் சார்பற்ற நிலையை நிர்வாகத்தில் கடைப்பிடிப்பதிலும் தேசிய முன்னணி அரசு, உறுதியாக இருக்கிறது என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் மெய்ப்பித்துக் காட்டினார் என்பதே என் மனத்திற்கு மிகுந்த ஆறுதல் அளித்த விஷயமாகும். அத்வானி அவர்களின் இரத யாத்திரையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் விவாதித்திருந்தோம் எனினும்; நிலைமையின் வெம்மை கருதி உடனடியாக பிரதமர் அவர்கள் 22-10-90 அன்று முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டிக் கலந்து பேசினார்.

பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டிருக்கும்போதே; பீகார் மாநிலத்தில் இரத யாத்திரையில் வந்து கொண்டிருந்த அத்வானி அவர்கள் சமஸ்தி பூர் எனுமிடத்தில் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. அச்செய்தி வந்தவுடன் பாரதிய ஜனதா கட்சியினர் கூடிப் பேசி முடிவெடுத்து, தேசிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். 86 உறுப்பினர்களைக் கொண்ட அக்கட்சியின் ஆதரவு இல்லாத நிலையில் வி.பி.

சிங் அமைச்சரவை பெரும்பான்மை இழந்தது. ஆயினும் தான் பதவி விலகப்போவதில்லை என்றும், பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை மக்களவை கூடும்போது நிரூபிக்கப்போவதாகவும் குடியரசுத் தலைவரிடம் வி.பி. சிங் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியை அழைத்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அத்வானி கைதுக்கு நாட்டின் பல பகுதிகளிலே எதிர்ப்பு ஏற்பட்டு, வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.

குஜராத்தில் கலவரங்கள் அதிகமாகி நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர். வி.பி. சிங்குக்குப் பதிலாக இன்னொரு தலைவரை நாடாளுமன்ற ஜனதாதளம் தேர்ந்தெடுத்தால் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பா.ஜ.க. அறிவித்தது. வி.பி.சிங் பிரதமரான நாளிலிருந்தே அவரைக் கடுமையாக விமர்சித்து வந்த சந்திரசேகரின் ஆதரவாளர்கள் வி.பி.சிங்குக்குப் பதிலாக வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறினர்.

சந்திரசேகரும் சூசகமாக கட்சி கேட்டுக் கொண்டால் பிரதமர் பதவி ஏற்கத் தயார் என்றார். செய்தியாளர்கள் இது குறித்து என்னுடைய கருத்தைக் கேட்டபோது, "இதிகாச காலத்து ராமனுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை யாரும் மறுக்க முடியாது. மறுக்கவில்லை. அதற்காக வரலாற்றுக் காலத்து பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்பதை நாட்டின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் அக்கறையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள இயலாது.

பாபர் மசூதியை அகற்றி விட்டு அங்கே ராமர் ஆலயம் அமைப்பேன் என்று சபதம் செய்து அதற்காக ஒரு ரத யாத்திரை என்றால் மதச் சார்பற்ற அரசு அதனை எத்தனை நாளைக்கு அனுமதிக்க முடியும்? ராம ஜன்ம பூமி- பாபர் மசூதி பிரச்சினையிலிருந்து நாட்டைக் காக்க ஆட்சியையும் இழக்கத் தயாராக உள்ளேன் என்று பிரதமர் வி.பி. சிங் உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கதும், வரவேற்கத் தக்கதுமாகும்" என்று கூறினேன்.

ராம ஜன்ம பூமியை அரசு ஏற்கும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசினால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு திரும்பப் பெறப்பட்டது. தேசிய முன்னணி அரசின் பெரும்பான்மை பலத்தை நவம்பர் 7ஆம் தேதி மக்களவையில் நிரூபிக்க வி.பி.சிங் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதித்து, வி.பி.சிங் அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தார். அத்வானி கைதானதைத் தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் "பந்த்" 24ந்தேதியன்று நடத்தப்பட்டபோது பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 25க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவுக்கு வி.பி.சிங்தான் தலைவர் என்றும், அதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தேவிலால் அறிவித்தார். நெருக்கடி காரணமாக ஜனதா தளம் பிளவுபடாது என்றார் சந்திரசேகர். அரசு கவிழ்வதற்கான எந்தக் காரியத்தையும் தான் செய்யப்போவதில்லை என்றும், ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் வி.பி. சிங் அரசு தப்ப முடியுமென்றும் அவர் கூறினார். "மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடத்துவது என்பதையோ, அல்லது மறு தேர்தல் நடத்துவதா என்பதையோ நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பத்து ஆண்டுக் காலமாக இ.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்செய்ய முன்வந்ததும் வி.பி.சிங்கை எதிர்ப்பதற்கு ஒரு காரணம்" என்று செய்தியாளர்களிடம் நான் தெரிவித்தேன். இதன் தொடர் விளைவாக குஜராத் மாநிலத்தில் ஜனதாதள தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ.க. அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களையெல்லாம் முதல் அமைச்சர் சிமன்பாய் படேல் கேட்டுப்பெற்றார்.

மேலும் நவம்பர் 1ந்தேதியன்று தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை சட்டமன்றத்திலே நிரூபித்துக் காட்டுவதாக ஆளுநரிடமும் தெரிவித்தார். அதைப் போலவே ராஜஸ்தானில் பா.ஜ.க. தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனதா தள அமைச்சர்கள் பத்து பேரும் முதல்வர் ஷெகாவத் அவர்களிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்தனர். அயோத்திக்குச் சென்று 30-10-90 அன்று கரசேவையை தொடங்குவதாக அறிவித்திருந்த பா.ஜ.க.

தலைவர் திரு. வாஜ்பய் அவர்கள் அயோத்தி செல்லும் வழியில் லக்னோ விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜன்ம பூமி - பாபர் மசூதி வளாகத்துக்குள் 30ஆம் தேதியன்று போலீசாரின் தடைகளைத் தகர்த்து உள்ளே புகுந்த கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்துச் சேதப்படுத்தினர். கரசேவகர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மசூதியின் கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரிலும் கரசேவகர்கள் கடப்பாரைகளால் தாக்கினர்.

இதனால் அந்தச் சுவரில் ஆங்காங்கே பெரும் துவாரங்கள் ஏற்பட்டன. இதன்பிறகு மசூதியின் விமானப் பகுதிகளில் காவிக் கொடிகளை ஏற்றிவிட்டு கரசேவகர்கள் அந்தப் பகுதியிலிருந்து தப்பி விட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும் கரசேவகர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக 14 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி கரசேவகர்களால் எந்தவிதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை, கரசேவை நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் முப்தி மகமது சையத் அவர்கள் தெரிவித்தார்கள்.

வி.பி. சிங்கைத் தவிர வேறு யாராவது தலைவர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேசிய முன்னணி அரசுக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு தருமென்றும், அதிலும் தேவிலால் ஆட்சிக்கு வந்தால் போபர்ஸ் பீரங்கி பேர விவகாரம் குப்பைக் கூடைக்குள் போடப்படும் என்றும் பரவலாக அப்போது பேசப்பட்டது. சந்திரசேகர் அவர்களோ இந்திரா காங்கிரஸ் ஆதரவைப் பெறுவதில் தவறில்லை என்றார். மத்திய அமைச்சர்களான அருண்நேரு, ஆரிப் மகமதுகான் மற்றும் ஒரு காலத்தில் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவராகத் திகழ்ந்த ராஜ்மங்கள் பாண்டே ஆகியோர் உள்ளிட்ட ஜனமோர்ச்சாவின் ஆறு நிறுவன உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வி.பி.- சிங்கிற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நவம்பர் 2ந்தேதியன்று ராம ஜன்ம பூமியில் நுழைய சுமார் 5000 பேர் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 4-11-90 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தேவிலால் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க 5ந்தேதியன்று வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகாவிட்டால், ஜனதாதளத்தின் சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென்று தெரிவித்தார்.

மேலும் இவர் கூறும்போது, இடைத்தேர்தல் வேண்டியதில்லை என்ற கருத்தை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே இந்திரா காங்கிரஸ் ஆதரவை தேசிய முன்னணி புறக்கணிக்காது என்றார். இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திரசேகரும் கலந்து கொண்டு தேவிலால் அவர்களின் கருத்துக்களை ஆதரித்தார். பதவியில் நீடிப்பதற்காக தேசிய முன்னணி அரசு இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வி.பி.சிங் அறிவித்தார்.

"நெஞ்சுக்கு நீதி" தொடரில் கடந்த 22ஆம் அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததைப் போலவே; அமைப்பு ரீதியான அடித்தளம் அமைக்காமல் அந்தந்த வட்டாரத்தில் தங்களுக்கெனப் பரவியுள்ள செல்வாக்கையும், பெரும்பான்மை சமூகத்தினரின் பக்க பலத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு இயங்கிய அரசியல் கட்சிகளிடையே திடமான- தெளிவான- கொள்கை கோட்பாடுகளுடனான. உறுதியோ ஒற்றுமையோ நீடி

த்திருப்பது என்பது முயற் கொம்பே என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின. அதனால்தான் பெரும் பதவிகளில் அமர்ந்தோர்கூட, தமது விருப்பம் போல் நிறத்தை மாற்றிக் கொள்கிற நிலைமைக்கு ஆளாயினர். இவர்களுக்கிடையே திரு. வி.பி. சிங் தனித்து நின்றது பாராட்டத்தக்க அனுபவமாக என் போன்றார்க்கு இருந்தது. இதற்கிடையே நவம்பர் 4ந்தேதியன்று பீகாரில் காவலில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. தலைவர் அத்வானி விடுதலை செய்யப்பட்டார்.

டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க.நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும், 7ந்தேதியன்று நடைபெறவுள்ள மக்கள் அவைக் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு வசதியாக அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு பாட்னா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 5-11-90 அன்று ஜனதா தளம் இரண்டாக உடைந்தது. சந்திரசேகர் தரப்பில் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களும், வி.பி.சிங் தரப்பில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஜனதா தளம் உடைந்த காரணத்தினால் வி.பி. சிங் அரசு வீழ்வது உறுதியாயிற்று. சந்திரசேகர் இந்திரா காங்கிரஸ் துணையோடு மாற்று அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். தேவிலால் வீட்டில் நடந்த கூட்டத்தில் ஜனதா தளத்தின் அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி, சந்திரசேகரை வி.பி.சிங்கிற்குப் பதிலாக ஜனதா தள தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். வி.பி.சிங்கை ஜனதா தளக் கட்சியிலிருந்தே நீக்கி விட்டதாக தேவிலால் அறிவித்தார்.

இந்த முடிவினை இ.காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் வி.என்.காட்கில் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வி.பி. சிங் ஆதரவாளர்கள் அவர் மீது நம்பிக்கை தெரிவித்ததோடு, தேவையான முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரமளித்தனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி சந்திரசேகர் ஜனதா தள நாடாளுமன்றக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு ஆதரவளித்தவர்களில் அஜீத் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் நேரு, ஐ.கே.

குஜ்ரால், முப்தி மகமது சையத், சரத்யாதவ், வி.சி.சுக்லா ஆகியோர் முக்கியமானவர்களாகும். சந்திரசேகர் இ.காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து ஒரு மணி நேரம் பேசி இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்தனர். ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்று சட்ட விரோதமாகச் செயல்படும் குழுவினரை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கக் கூடாதென்றார் வி.பி. சிங். நவம்பர் 7ந்தேதி நாடாளுமன்றத்தில் மக்களவையில் வி.பி.

சிங் அவர்கள் தனது அமைச்சரவையின் மீது கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 142 வாக்குகளும், எதிர்ப்பாக 346 வாக்குகளும் கிடைத்தன. இந்திரா காங்கிரஸ் கட்சி சந்திரசேகருக்கு ஆதரவு அளித்ததையொட்டி, காங்கிரசின் தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வும் அந்தத் தீர்மானத்தின் போது வி.பி.சிங் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பாக வாக்களித்தது. அயோத்தி கரசேவைக்கும், மண்டல் கமிஷனுக்கு எதிரான கிளர்ச்சிக்கும் அ.தி.மு.க.வின் மறைமுக ஆதரவு உண்டு என்பதை வி.பி.

சிங்கிற்கு எதிராக வாக்களித்து நிரூபித்துக் கொண்டது அந்தக் கட்சி! மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நம்பிக்கைத் தீர்மானம் மீதான விவாதம் சுமார் 11 மணி நேரம் நடந்து இரவு 10-25 மணிக்குத்தான் வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. உடனே அத்வானி எழுந்து வி.பி.சிங்கிடம் சென்று கைகுலுக்கினார். சந்திரசேகரும் வி.பி.சிங்கின் கரங்களைக் குலுக்கினார்.

அவைத்தலைவர் அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைச்சரவையின் கூட்டத்தை வி.பி.சிங் நடத்தி, தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அரசின் முழுத் தோல்விக்கு வி.பி. சிங்தான் பொறுப்பு என்று ராஜீவ்காந்தி அவர்களும், நாட்டை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றவர் வி.பி.சிங் என்று தேவிலால் அவர்களும், இந்திரா காங்கிரஸ் ஆதரவை ஏற்பதில் தவறில்லை என்று சந்திரசேகர் அவர்களும், ஜனதா தளத்தை உடைத்துக்- கொண்டு சென்ற ஒரு கூட்டத்திற்கு ஆட்சி அதிகாரத்தை அளிக்க முன்வரும் செயல் ஆரோக்கியமற்ற முன்னுதாரணத்தையும் மரபையும் உண்டாக்குமென்று வி.பி.

சிங் அவர்களும், அத்வானி அவர்கள் கைது செய்யப்பட்டதால்தான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றுக் கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோமநாத் சாட்டர்ஜி அவர்களும் கருத்து தெரிவித்தார்கள். ஆட்சிக் கலைப்பு பற்றி என்னிடம் கருத்து கேட்டதற்கு, வி.பி.சிங் ஆகஸ்ட் 7ந்தேதி மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்றப் போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கான விலையை நவம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் கொடுத்து விட்டார்.

எலியாக உயிர் வாழ்வதைவிட புலியாகச் சாவதே பெருமை என்று எண்ணுகிறவன் நான். எனவே அவரது கொள்கை உறுதியைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தேன். 1979இல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது பிரதமர் மொரார்ஜி தேசாய் துணைப்பிரதமராக இருந்த சரண்சிங்கைப் பதவி நீக்கினார். அதன் விளைவு, சரண்சிங்கினால் மொரார்ஜி அரசு கவிழ்க்கப்பட்டது. துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர்களை வி.பி. சிங் நீக்கினார்.

ஜனதா தளத்தில் பிளவு ஏற்பட்டு வி.பி. சிங்கின் ஆட்சி கவிழ்க்கப் பட்டது. நவம்பர் 1ந்தேதி குஜராத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதாதள அரசு இந்திரா காங்கிரஸ் ஆதரவோடு வெற்றி பெற்றது. நவம்பர் 8ந்தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷெகாவத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஜனதா தளக் கட்சியிலிருந்து விலகி தனி அமைப்பாக இருந்தவர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றது.

வி.பி. சிங் பதவி விலகலை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி, பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, இடதுசாரி முன்னணி தலைவர் சோமநாத் சாட்டர்ஜி ஆகியோரை அழைத்துப் பேசியபோது அவர்கள் யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. சந்திரசேகர் ஆட்சி அமைத்தால் அதற்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என்று ராஜீவ் காந்தி தெரிவித்ததின் பேரிலும், புதிய அரசு அமைக்க தான் தயார் என்றும் 280 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாக சந்திரசேகர் கூறியதின் பேரிலும், குடியரசுத் தலைவர் புதிய அரசை அமைக்கும்படி ஜனதா தள (சோஷலிஸ்ட்) தலைவர் சந்திரசேகரை அழைத்தார்.

அவரது ஆட்சிக்கு உள்ள பெரும்பான்மையை நவம்பர் 20ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ நிரூபிக்க வேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 10-11-90 அன்று காலையில் இந்தியாவின் எட்டாவது பிரதமராக சந்திரசேகர் பதவியேற்றார். அவருடன் துணைப் பிரதமராக தேவிலால் பதவி ஏற்றுக் கொண்டார். வேறு யாரும் அன்றைய தினம் பதவியேற்கவில்லை. பதவியேற்பு நிகழ்ச்சி பத்து நிமிடங்களில் முடிந்தது. மத்திய அரசில் பொறுப்பில் இருந்த ஜனதா தளம் உடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலே இருந்த ஜனதா தளமும் இரு கூறாகப் பிரிந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து ஐந்து அமைச்சர்கள் பதவி விலகினர். சந்திரசேகர் தலைமையிலான ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் முலாயம் சிங் யாதவ் அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். அயோத்தியில் ராம ஜன்ம பூமி கோவிலைக் கட்டுவதற்கான இரண்டாவது கட்ட கரசேவை டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப்படும் என்றும், அது சத்தியாக்கிரகப் போராட்டமாக நடக்கும் என்றும் விசுவ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் அசோக் சிங்கால் 12-11-90 அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய பிரதமர் சந்திரசேகரிடம் செய்தியாளர் மும்பையில் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் பற்றிக் கேள்வி கேட்டபோது, அதைப் பற்றி விசாரணை செய்ய வேண்டியது ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் வேலைதானே தவிர, அது ஒரு பிரதமர் செய்ய வேண்டிய காரியம் இல்லை என்று கூறினார். அவரது ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒன்றே சான்றாக அப்போது அமைந்தது. நவம்பர் 16ந்தேதியன்று நாடாளுமன்ற மக்களவை கூடியபோது சந்திரசேகரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 204 வாக்குகளும் கிடைத்தன.

15 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க.வும் அந்தத் தீர்மானத்தின்போது சந்திர சேகருக்கு ஆதரவாக வாக்களித்தது. நவம்பர் 21-ந்தேதியன்று 32 அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணமாகக் கலவரம் ஏற்பட்டது. டிசம்பர் 6-ந் தேதி முதல் ராமர் கோவில் கட்டும் வேலை தொடர்ந்து நடைபெறும் என்றும் முந்தைய தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி இந்திரா காங்கிரசுடன் சந்திரசேகர் கூட்டு சேர்ந்திருப்பது சந்தர்ப்ப வாதக் கூட்டணி என்றும் அது ஒருபோதும் நிலைக்காது என்றும் அத்வானி தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவதும் அதில் அரசு சம்பந்தப்பட்ட பல முடிவுகள் எடுக்கப்படுவதும் வாடிக்கைதான். அதிலும் குறிப்பாகக் கழக ஆட்சியில் அமைச்சரவைக் கூட்டம் அடிக்கடி நடைபெறும். 27-10-1990 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாகும். அதுதான் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 13 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிக்கக் கூடிய பம்ப்செட்டுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டமாகும்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் தரப்படாத இந்தச் சலுகை கழக ஆட்சியிலேதான் தரப்பட்டது. இந்தச் சலுகையை அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி நிறுத்துவதாக அறிவித்தபோது தி.மு.கழகம் அதற்கெதிராகப் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன்; அந்த முடிவை அ.தி.மு.க. ஆட்சியினர் மாற்றிக் கொண்டனர். பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த முதல் மாணவருக்கு- அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்பட்டப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுதும்போது அவருக்குக் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் வழங்க கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து ஒரு சிலர் சென்னை உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கினை நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா, கே.எஸ். பக்தவத்சலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து- அரசின் ஆணை சரியானதுதான் என்று நீதிபதி பக்தவத்சலம் அவர்களும், அரசின் ஆணை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று நீதிபதி மிஸ்ரா அவர்களும் தீர்ப்பு கூறியதால், இந்த வழக்கு மற்றொரு நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி எஸ்.நயினார் சுந்தரம் இந்த வழக்கை விசாரித்து அரசின் ஆணை அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது என்று கூறியதின் பேரில் பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகளின் நல்வாழ்விற்காகக் கழக அரசு எடுத்த நடவடிக்கை பலனில்லாமல் போய்விட்டது.