உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வேதனை அரசியலும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வேதனை அரசியலும்! · 304 / 391

விபத்துகளும்- வேதனை அரசியலும்! சி லை வைப்பதென்பது உலக முழுதும் உள்ள நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிலையெனினும்; அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சிலை வைப்பது ஒரு பொழுது போக்குத் திருவிழா போலவே ஆகிவிட்டது என்பதில் எனக்கு மிகுந்த வேதனை எப்போதும் உண்டு. வரலாற்றை நினைவூட்டும் சிலைகள், இலக்கியச் சிறப்பை எடுத்துக்காட்டும் சிலைகள், நாட்டுக்கு- சமுதாயத்துக்குப் பாடுபட்ட தியாகச் செம்மல்களின் சிலைகள், இனத்துக்கு, மொழிக்குப் பெருமையளிக்கத்தக்க சிலைகள் போன்றவற்றை முக்கியமான இடங்களில் நிறுவுவது ஏதோ திராவிட இயக்கத்தார் மட்டுமே செய்யக்கூடிய காரியம் என்று எழுதும்போதும் பேசும்போதும் எனக்குத் தோன்றுவதெல்லாம் அந்த நண்பர்கள் பல நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் பீடத்தில் பதிக்கப்பட்டுள்ள அடிக்கற்களில் செதுக்கப்பட்டுள்ள அமைத்தவர்கள் பெயர், வருடம், மாதம், தேதிகளைப் பார்த்திருக்க மாட்டார்களோ என்ற சந்தேகம்தான்.

சிலைகளால் சில நேரங்களில் மதப் பூசல் ஏற்படுவதும் - சில நேரங்களில் சாதிச் சண்டை நடப்பதும் - சிலை வைப்பதைச் சிலர் அரசியலாக்குவதால் அமளிகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாதவைகளாகவே ஆகிவிடுகின்றன. உலகத் தமிழ் இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற நேரத்தில் சென்னைக் கடற்கரையில் புதிதாகப் பத்து தமிழ்ச் சான்றோர், ஆன்றோர் சிலைகள் அமைக்கப்பட்டன. அதைப் பார்த்துப் பாராட்டாதவர் இல்லை எனலாம்.

அவற்றில் ஒன்றுதான் சிலை வைக்கப்பட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா அவர்களின் ஆலோ சனைப்படி அகற்றப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டு, அவ்வாறே உரிய இடத்திலிருந்து அகற்றப்பட்ட "கண்ணகி" சிலையாகும். நான் இந்த அத்தியாயத்தை எழுதும்போது 2001-ஆம் ஆண்டு அந்தக் கலாச்சாரப் போராட்டம் தமிழகத்தில் அறவழியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நினைவு படுத்திக் கொள்கிறேன். அதைக் கலாச்சாரப் போராட்டம் என்று நான் குறிப்பிடுவது ஏதோ கற்பனையல்ல- திராவிடக் கலாச்சாரம்- ஆரியக் கலாச்சாரம் என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல!

இதோ அடால்ப் இட்லர்; ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் தூதுவனாக நின்று பேசுவதைப் பாருங்கள். இட்லர் எழுதிய "மெயின் காம்ப்" என்ற புத்தகம் உலகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு சுய வரலாறு - தமிழில் "எனது போராட்டம்" என்று பொருள் கொள்ளலாம்.

அந்தப் புத்தகத்தில் இட்லர், ஒளிவு மறைவின்றி ஒன்றைச் சொல்வதைக் கூர்ந்து கவனித்தால்; நாம் ஏதோ "கலாச்சாரம்" என்று கதை கட்டுகிறோம் என்று எவரும் கூற முடியாது. "இன்று நாம் காணுகின்ற கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில், திறமை, சிற்பம் இவை அனைத்தும் ஆரியர்களின் சிருஷ்டி சக்தியில் தோன்றியவைகளேயாகும். ஆரியனின் ஒளி பொருந்திய நெற்றியில் இருந்தே எந்தக் காலத்திலும் ஞானம் பிரகாசித்து அந்தகார இருளை அகற்றி வருகிறது.

கலாச்சாரப் படைப்பாளிகள்- கலாச்சாரப் பாதுகாவலர்கள்- கலாச்சாரத்தை அழிப்போர் என மூன்று வகையாகப் பிரித்தால் அந்த மானிட வர்க்கத்தில் ஆரியர்கள்தான் முதல் வகை இடத்தை வகிப்பார்கள். கலாச்சார மாளிகைக்கு அடித்தளம் அமைத்து சுவர்களையும் உருவாக்கியவர்கள் ஆரியர்கள்தான்."

இது இட்லரால் எழுதப்பட்ட "மெயின் காம்ப்" நூலில் கோடிட்டுக் காட்டப்படக்கூடிய ஆரிய கலாச்சாரப் பெருமை. அந்தக் கலாச்சாரம் மீண்டும் ஒரு படையெடுப்பை இப்போது திராவிடக் கலாச்சாரத்தின் மீது தொடங்கியுள்ளது என்பதற்குச் சான்றுதான்; கண்ணகி சிலையை அகற்றியுள்ள செயல் என்பது என் வாதம். அண்ணா முதல்வராக இருந்த போதும், பின்னர் நான் அந்தப் பொறுப்பை 1969-ல், 1971-ல், 1989-ல், 1996-ல் என நான்கு முறை ஏற்று நடத்தியபோதும், சிலைகள் அமைப்பதையோ, சிலைகள் இருப்பதையோ நான் பிரச்சினையாக ஆக்கியதில்லை.

குறிப்பாக அண்ணா இருந்தபோது சைதையைச் சேர்ந்த பவளவண்ணன் என்ற கலையார்வமிக்க நண்பர் - கழக ஆர்வலர் - அன்றைய ஜெமினி ஸ்டுடியோ முன்பு என் சிலை அமைத்திட பீடம் ஒன்று கட்டி முடித்துவிட்டார். வெளி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் சென்றிருந்த நான், சென்னை வந்ததும் செய்தி அறிந்து, உடனடியாக அந்த பீடத்தை இடித்தெறியக் கூறிவிட்டு; எனக்குச் சிலை வேண்டாம் என்று அறிக்கையும் விடுத்து, சிலையைத் திறப்பதாக இருந்த அண்ணா அவர்களிடம் என் சிலை வேண்டாமென்பதற்கான விளக்கத்தையும் அளித்தேன்.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் அவர்கள் பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு விழாவில்; அண்ணா சாலையில் எனக்குச் சிலை வைப்பதாக அறிவித்தார். நான் அதை அந்த விழாவிலேயே மறுத்துச் சொன்னேன். ஆனால் பெரியார் என் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், சிலை வைத்திட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அன்னை மணியம்மையாருக்கும், வீரமணி அவர்களுக்கும் ஆணை பிறப்பித்தார். சிலை முழுமையாகத் தயாராகி அமைப்பதற்குள் பெரியார் மறைந்து விடவே; மணியம்மையாரும், வீரமணியும் குன்றக்குடி அடிகளார் அவர்களை வைத்து அண்ணா சாலையில் என் சிலையைத் திறந்து வைக்கச் செய்தார்கள்.

அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் நான் வெளியூர் சென்று விட்டேன். பின்னர் 1987-ல் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த நாளில்; அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலால் அந்தச் சிலை உடைக்கப்பட்டு விட்டது. பிறகு அதனை வைத்திட நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. இந்தச் சிலைகள் விவகாரத்தில் என் சிலைக்கு மறுப்புத் தெரிவித்திருப்பேனேயல்லாமல்; அ.தி.மு.க. கட்சியினரைப் போல சிலை வைப்பதில் என் ஆட்சியில் என்றைக்கும் விவகாரம் செய்ததில்லை நான்!

குறிப்பாக எம்.ஜி.ஆர். சிலையை ஆர்.எம்.வி. அவர்களின் எம்.ஜி.ஆர். கழகமோ, திருநாவுக்கரசு அவர்களின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வோ அமைப்பதற்கு ஜெயலலிதா ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டு அந்த எம்.ஜி.ஆர். சிலைகள்கூட கடத்தப்பட்ட கதைகள் எல்லாம் உண்டு. ஆனால் 1990-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. சார்பில் நண்பர் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் 9-1-1990 அன்று எழுதிய கடிதத்தில், சென்னையில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.

சிலை அமைத்திட அண்ணா சாலையில் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு அதில் ஒரு இடத்தை ஒதுக்கி அனுமதி தருமாறு கேட்டிருந்தார். அதனை உடனடியாக ஏற்று அவர் கோரிய இரண்டு இடங்களில் ஒன்றில் எம்.ஜி.ஆர். சிலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினேன். அந்தச் சிலையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் ராஜீவ் காந்தி அவர்கள் திறந்து வைத்தார் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது அல்ல; இதில் எல்லாம் நான் அரசியல் கண்ணோட்டம் கொண்டிருந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2000-ஆம் ஆண்டில் கூட செல்வி ஜெயலலிதா தி.மு.க. ஆட்சிக்கு சிலை விவகாரத்தில் ஓர் அறை கூவல் விடுத்ததுண்டு. அதாவது திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். சிலை அமைத்து அதனை ஜெயலலிதா திறந்து வைக்க அனுமதி கேட்டுக் கடிதம் அனுப்பினார்கள். அக் கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆவன செய்திட அனுப்பப்பட்டது. அனுமதி தருவதற்குச்சிறிது தாமதமானதும்; "சிலையைத் தாங்கள் கேட்ட இடத்திலேயே வைத்திட போராட்டம் நடத்துவோம்" என்று ஜெயலலிதா அவசரப் பட்டு அறிக்கை விடுத்தார்.

நான் உடனே, மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு, அவர்கள் கேட்ட இடத்தை அனுமதிக்குமாறு கூறி; அவ்வாறே வழங்கி, அங்கே எம்.ஜி.ஆர். சிலையும் அமைக்கப்பட்டது. இந்தப் பெருந்தன்மையை செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு; எப்போதாவது எதிர்க்கட்சிகளிடம் காட்டியதுண்டா என்பதை நடுநிலையாளர்கள் இன்றில்லா விடினும் என்றாவது சிந்திக்கத் தவற மாட்டார்கள் என்றே நம்புகிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு மறுநாள் திருவள்ளுவர் திருநாள் என்று தி.மு.க.

ஆட்சியில் அறிவிக்கப்பட்டவாறு அந்த நாளில் வள்ளுவர் விருதும் மற்றும் தமிழ்ச் சான்றோர் விருதுகளும் வழங்கப்பட்டதையொட்டி 15-1-1990 அன்று திருவள்ளுவர் திருநாளில் பெரும் புலவர் வ.சுப. மாணிக்கம் அவர்களும், கோபி பேராசிரியர் ஆனந்தன் அவர்களும் விருது பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கிடையே பெரும் புலவர் வ.சுப. மாணிக்கம் தமிழர்கள் அதிர்ச்சியடையக் கூடிய நிலையில் திடீரென மாரடைப்பால் மறைந்தார்.

அவரது குடும்பத்தார் விழாவுக்கு வந்திருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த விழாவில் சிறந்த நூலாசிரியர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சியும் இணைந்து நடைபெற்றது. அதன்படி என்னுடைய அன்புச் சகோதரர், நான் "அரங்கு" என்று பாசத்தோடு அழைக்கும் என் பள்ளித் தோழர்- என் ஊர்க்காரர், என் உணர்வோடு கலந்தவர் இராம.

அரங்கண்ணல், எழுத்தாளர் சங்கத் தலைவர் வாசவன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், திலகவதி, யோகநாதன், கவிஞர் நீலமணி, துரைமாவிறையன், மனசை ப.கீரன் ஆகியோர் பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர்கள். அந்த விழாவில் வள்ளுவர் கோட்டம் உள்ள சாலைக்கு வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டியும் அறிவிப்பு செய்தேன். 17-1-90 அன்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கே.பி. உன்னி கிருஷ்ணன் அவர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருந்த நீண்டகாலத் தொடர்புகளையெல்லாம் நினைவூட்டியதோடு தேசியம், ஒருமைப்பாடு ஆகியவற்றில் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படத்தக்க விதத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயரில் வடபுலத்தில் நினைவுச் சின்னங்களை அமைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சரை அந்த விழாவில் நான் கேட்டுக் கொண்டேன்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் மத்தியிலும், பெரும்பான்மையான மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு அமைய முடியாத சூழ்நிலையில் மாநிலங்களில் கவர்னர்களாகப் பணியாற்றியவர்கள் தாங்களாகவே பதவி விலகல் கடிதங்களை அனுப்பி வைக்கும்படி குடியரசுத் தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அந்த வகையில் அரியானா ஆளுநராக இருந்த எச்.ஏ. பராரி, ஆந்திர ஆளுநர் குமுத் பென் ஜோஷி, கர்நாடக ஆளுநர் பி.வெங்கட சுப்பையா ஆகியோர் 16-1-90 அன்று தங்கள் பதவி விலகல் கடிதங்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் உட்பட பல மாநிலங்களின் ஆளுநர்களும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அனுப்பி வைத்தனர். இதில் முதற் கட்டமாக காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த கே.வி. கிருஷ்ணா ராவின் பதவி விலகலைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு, ஜக்மோகன் அவர்களை கவர்னராக நியமித்தார். 1-2-90 அன்று மேலும் 16 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர் அறிவித்தார். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் மராட்டிய மாநில ஆளுநராகவும், கிருஷ்ணகாந்த் அவர்கள் ஆந்திர மாநில ஆளுநராகவும், திருமதி சந்திரவதி புதுவை மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்தப் பட்டியலில் தமிழக ஆளுநரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழக ஆளுநராகக் குடியரசுத் தலைவரால் 22-5-90 அன்று நியமிக்கப்பட்டார். ஆளுநர் அலெக்ஸாண்டர் அவர்கள் கழக அரசு பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே இருந்த ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்றபோதிலும் அவர் கழக அரசிடம் நடந்து கொண்ட பண்பைப் பாராட்டி, அவர் இங்கிருந்து செல்வதற்கு முன்பாகத் தேநீர் விருந்து ஒன்றினை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தேன்.

அவரையும், அவரது துணைவியாரையும் அழைத்து தேநீர் விருந்து அளித்ததோடு, திருவாரூர் தேர் போன்று செய்யப்பட்ட அரியதொரு பரிசினை அவருக்கு வழங்கினேன். அந்தப் பிரிவு உபசார விழாவில் நான் பேசியது இன்னமும் என் நினைவிலே இருக்கிறது. "இந்த நாளை எந்த நாள் என்று வர்ணிப்பது? வர்ணித்துப் பழக்கப்பட்ட எனக்கே சிரமத்தைத் தருகிறது. வானத்திலிருந்து மழைத்துளிகளும் விழுந்து கொண்டிருக்கும். சூரிய வெளிச்சமும் இருந்து கொண்டிருக்கும்.

அதனை ஊமை வெயில் என்பார்கள். மழையினால் குளிர்ச்சி ஏற்படாது. அதே நேரத்தில் அதற்கு மாறாக ஒரு புழுக்கம் இருக்கும். நாம் சோலையிலே அமர்ந்து விருந்துண்ட நேரத்தில்கூட புழுக்கம் இருந்தது. அந்தப் புறப் புழுக்கத்தைவிட நம்முடைய அகத்திலே ஏற்பட்ட புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் புறப் புழுக்கத்தை நம்மால் தாங்கிக்கொள்ள இயலவில்லை" என்று என் பேச்சைத் தொடங்கி, அலெக்சாண்டர் அவர்களின் தனிச் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டினேன்.

அவரை ஒரு ஆளுநராக மாத்திரம் நான் பார்த்ததில்லை, என்னுடைய மூத்த சகோதரராகவே கருதினேன் என்று குறிப்பிட்டபோது அவரே கலங்கிவிட்டார். "சரித்திர கால அலெக்சாண்டர் நாடுகளைக் கவர்ந்தார், இந்த அலெக்சாண்டரோ நம்முடைய இதயங்களையெல்லாம் கவர்ந்தார்" என்று கூறி உரையை நிறைவு செய்தேன்.

அலெக்சாண்டர் நன்றி தெரிவித்து ஆற்றிய உரையில், "எனக்கு மரியாதை தெரிவிப்பதற்காக ஒரு பெரிய நிகழ்ச்சியை இங்கே ஏற்பாடு செய்துள்ள முதல்வர் அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலமைச்சராகக் கலைஞர் அவர்களைப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்புவரை அவருக்கும் எனக்கும் எந்தவித பரிச்சயமும் கிடையாது. ஆனால் நிச்சயமாக அவர் ஒரு பெரிய செல்வாக்கு மிக்க கட்சியின் தலைவர் என்பதை நான் அறிவேன்.

அவருக்கு என்னைப் பற்றிய தவறான எண்ணங்கள்- இந்தக் கவர்னர் பல ஆண்டுக் காலம் இந்திரா காந்தியிடமும், ராஜீவ் காந்தியிடமும் பணி புரிந்தவன் என்பதால் சற்று எச்சரிக்கையோடு கவனிக்கப்பட வேண்டியவர் என்றுகூட எண்ணியிருக்கலாம். இதுபற்றி நான் விளக்கம் அளிப்பதற்கு முன்பாக அவர் ஒரு தலைசிறந்த, பண்பட்ட நிர்வாகி என்பதால் அவரே என்னைப்பற்றிப் புரிந்து கொள்ளட்டும் என்று இருந்தேன். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு நானும் அவரும் பழகினோம்.

நான் அவரிடமிருந்து தொடர்ச்சியாக நிபந்தனையற்ற ஆதரவு, ஒத்துழைப்பு, உதவி ஆகியவைகளைப் பெற முடிந்தது. எந்த நேரத்திலும், எந்த விஷயத்திலும் எங்களிடை யே ஒரு முழுமையான நேர்மையான உறவே நிலவி வந்தது" என்று கூறினார். விழா நடத்தியதோடு விட்டு விடாமல் அவரை வழியனுப்பி வைப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்றோம். நானும் அமைச்சர்களும் வண்டி புறப்படுகிறவரை காத்திருந்தோம். புகை வண்டி 12 நிமிடம் தாமதமாகச் செல்லும் என்று தெரிந்து அலெக்சாண்டர் புகைவண்டியி லிருந்து இறங்கி நான் நிற்கும் இடத்திற்கே வந்து "இந்த 12 நிமிடங்களையும் உங்களோடு கழிக்கலாம் என்று வந்தேன்" என்று கூறியபோது நானும் அவரும் உணர்ச்சிவயப்பட்டு விட்டோம்.

ஆளுநருடன் ஒரு முதலமைச்சரின் உறவு எப்படி இருந்தது என்பதை விளக்குவதற்காகத்தான் இதனைக் குறிப்பிட்டேன். இவரது உறவு இப்படியிருந்ததென்றால், இவருடைய இடத்திற்கு வந்த ஆளுநர் பர்னால

ா அவர்களும் இவருக்கு எந்தவிதத்திலும் மாறுபட்டவர் அல்ல என்பதைப் பின்னர் நிரூபித்துக் காட்டினார். 24-5-90 அன்று பர்னாலா அவர்கள் ராஜாஜி மண்டபத்தில் தமிழக ஆளுநராகப் பதவியேற்றார். இந்திய தேர்தல் அதிகாரி ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி அவர்கள் ஜனவரி 18-ந்தேதி வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அடுத்த கட்டமாக அருணாசலப் பிரதேசம், பீகார், குஜராத், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பிப்ரவரி 27-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தார்.

27-2-90 அன்று நடைபெற்ற புதுவை மாநிலத் தேர்தலில் தி.மு. கழகம் 9 இடங்களிலும், அதன் தோழமைக் கட்சிகளான ஜனதா தளம் 4 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடத்திலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், அ.தி.மு.க. 13 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவரும் கழகக் கூட்டணியை ஆதரிப்பதாகத் தெரிவித்து விட்டார்.1-3-90 அன்று சென்னை அண்ணா அறிவாலயம் கழக அலுவலகத்தில் நடைபெற்ற புதுவை மாநில சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் டி.

ராமச்சந்திரன் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ப.மாணிக்கம், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் எச்.வி. ஹண்டே ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்திப் பேசினர். புதுவை மாநிலத்தின் தி.மு.கழக முதல்வராக டி.ராமச்சந்திரன் பதவியேற்ற விழாவில் நானும் சென்று கலந்து கொண்டேன். அமைச்சரவையில் ஆர்.வி. ஜானகிராமன், வி.பெத்த பெருமாள், என்.

மணிமாறன், பி.ராஜவேலு, ஆர்.கமலக் கண்ணன் ஆகியோர் இடம்பெற்றனர். சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து இந்திரா காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநிலம் ஒன்றைத் தவிர மற்ற மாநிலங்களில் படுதோல்வி அடைந்ததைப் புரிந்து கொள்ளலாம். குஜராத் மாநிலத்தில் ஜனதா தளமும், பா.ஜ.க.வும் சேர்ந்து சிமன்பாய்படேல் அவர்கள் தலைமையில் கூட்டணி அரசு அமைத்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. அமைச்சரவை பைரோன்சிங் ஷெகாவத் தலைமையில் ஆட்சி அமைத்தது.

ஒரிசா மாநிலத்தில் ஜனதாதள ஆட்சி என்னுடைய நண்பர் பிஜு பட்நாயக் அவர்கள் தலைமையில் அமைந்தது. இமாசலப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் சாந்தகுமார் தலைமையிலே கூட்டணி ஆட்சி அமைந்தது. மராட்டியத்தில் இ.காங்கிரஸ் ஆட்சி சரத்பவார் தலைமையிலே அமைந்தது. அவருடைய சொந்தச் செல்வாக்கினால்தான் அந்த மாநிலத்தில் மட்டும் அந்தக் கட்சியால் வெற்றிபெற முடிந்தது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவை சுந்தர்லால் பத்வா தலைமையில் அமைந்தது.

பீகார் மாநிலத்தில் ஜனதா தளம் பா.ஜ.க. ஆதரவுடன் லல்லு பிரசாத்யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்தத் தோல்வியை மறைக்க ஜெயலலிதா முன்கூட்டியே கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன தெரியுமோ? லாரியைக் கொண்டு அவருடைய காரின் மீது மோதி அவரைக் கொலை செய்ய முயன்றதாக ஒரு பழியைத் தூக்கிப் போட்டார். 24-2-90 அன்று விடியற்காலை சுமார் 4.30 மணி அளவில் மீனம்பாக்கம் அருகில் திரிசூலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று தாம்பரம் பக்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் கார் மீது மோதி அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக அவரால் கூறப்பட்டது.

புலன் விசாரணை செய்த போலீசார் இது தற்செயலாக நடைபெற்ற விபத்து என்றும், லாரி டிரைவர் மீது முறையாக நீதிமன்றத்தின் முன்னால் வழக்குத் தொடுக்கப்பட்டு, டிரைவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. ஜெயலலிதா இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயத்திற்காகக் கூறுவது அதுதான் முதல் தடவையா என்றால் கிடையாது. எம்.ஜி. ஆர். மறைந்த பிறகு மட்டும் ஜெயலலிதா தன் மீது பல கொலை முயற்சிகள் நடைபெற்றதாகக் கூறியிருக்கிறார்.

9-4-88 தேதியிட்ட 'மக்கள் குரல்' ஏட்டில் ஒரு செய்தி! அதற்குத் தலைப்பே, இன்னொரு "கொலை முயற்சி - திருச்சிக்கு அருகில் நள்ளிரவில் சம்பவம்! ஜெயலலிதா கார் மீது பஸ் மோதல், டிரைவர் கைது!". இந்தச் செய்தியினை ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியபோது அந்தச் செய்தியாளர், அது விபத்துதானே என்கிறார். அதற்கு ஜெயலலிதா, ஆமாம், ஆனால் தனியாருக்குச் சொந்தமான ஒரு ஆம்னி பஸ் அது. அந்தப் பேருந்தின் உரிமையாளர், தனது அரசியல் விரோதி, ஆர்.எம்.

வீரப்பனின் நெருங்கிய நண்பர் என்று பதிலளித்தார். 10-4-1988 தேதியிட்ட மாலை முரசு இதழில் "திருச்சியில் மூப்பனார் நடத்திய கூட்டத்தை விட எனக்கு அதிகமான அளவு கூட்டம் கூடியதால் பொறாமை கொண்ட மூப்பனார் திட்டமிட்டு போலீசாரைத் தூண்டிவிட்டு எங்கள் தொண்டர்களைத் தடியால் காயப்படுத்தியிருக்கிறார் என்று ஜெயலலிதா சொன்னார்" என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

16-5-1988 தேதியிட்ட மாலை முரசு இதழில் எம்.ஜி.ஆர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா அவரைப் பார்க்கச் சென்றதாகவும், அப்போது ஜானகி அம்மையார் இவரைத் தாக்கும்படி ஜேப்பியாரையும், அடியாட்களையும் ஏவி விட்டதாகவும், திராவகத்தை வீசி இவரைக் கொலை செய்ய ஜானகி அம்மையார் சொன்னதாகவும் ஒரு கொலைக் குற்றச்சாட்டை ஜெயலலிதா சொல்லி அது வெளி வந்திருந்தது. பிரபல ஆங்கில வார இதழ், இல்லஸ்ட்ரேடட் வீக்லி, மே 1, 1988 தேதிய இதழுக்கு ஜெயலலிதாவே ஒரு பேட்டியளித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படுகொலை செய்யப்பட்டார் என்று ஜெயலலிதா சொன்னதை அந்த இதழின் அட்டைப் படத்திலேயே வெளியிட்டு, ஜெயலலிதாவின் பேட்டி அந்தப் பத்திரிகையிலே வந்தது. அதில் பத்திரிகையாளர், எம்.ஜி.ஆர். விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகச் சொல்கிறீர்களே, என்று கேள்வியைத் தொடங்கியதுதான் தாமதம், உடனே ஜெயலலிதா, "ஆமாம், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு அல்ல. உண்மையானது. ஆதாரம் இருப்பதால்தான் விசாரணை வைக்கப்பட வேண்டுமென்று கேட்கிறோம்.

எம்.ஜி.ஆரின் மரணம் பற்றி ஆராய கவர்னர் அரசு விசாரணைக் கமிஷன் நியமிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த கவர்னர் விசாரணைக் கமிஷன் நியமிக்கத் தவறுவாரேயானால், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரணைக் கமிஷன் நியமிப்போம்" என்று பதிலளித்தார்.

மீனம்பாக்கம் லாரி விபத்து சம்பவம் குறித்து சட்ட மன்றத்திலும் அ.தி.மு.க.வினர் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்து அதற்காக வேறு மாநில நீதிபதியைக் கொண்டு அல்லது உச்சநீதி மன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். யாரை வேண்டு மென்றாலும் வைத்து விசாரணை வைக்கத் தயாராக இருப்பதாக நான் அவையிலேயே பதில் அளித்தேன். ஆனால் அதற்குப் பிறகும் அவர்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தார்கள்.

25-3-1990 தேதிய இந்து இதழ் "ஒரு சாதாரண சாலை விபத்தை கொலை முயற்சியெனக்கூறி அதைப் பெரிதுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த எதிர்க் கட்சிகளின் திட்டங்களைத் தன்னுடைய சாதுர்யத்தால் முதல்வர் கருணாநிதி முறியடித்துள்ளார்" என்று எழுதியது.