உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எதிர்பாராத படுகொலையும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எதிர்பாராத படுகொலையும்! · 303 / 391

ஈழப்போராளிகளுடன் சந்திப்பும்; எதிர்பாராத படுகொலையும்! பா தகச் செயல்களின் பட்டியலில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது கடத்தல்! அதைத் தொழிலாக நடத்தி, கஞ்சா, அபின் மற்றும் தங்கம், வெள்ளி, வைரம் என்றெல்லாம் கடத்தல் செய்து கோடீஸ்வரர் ஆனவர்கள் உண்டு. இன்னமும் இருக்கிறார்கள். கடத்தல் லாரி பிடிபட்டது, கடத்தல்காரர்கள் கைது என்றெல்லாம் செய்திகள் கூட வரலாம். அதற்காக போலீஸ் இலாகாவை அவசரப்பட்டு புகழ்ந்து விட முடியாது.

காரணம், கடத்தல் தொழில் பொதுவாகவே எல்லோருடைய ஒத்துழைப்பும் பெற்று நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. சுய நலமும் சூதும் வாதும் நிறைந்த ஒரு சிலர் போலீஸ் இலாகாவிலே எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் முதலிலேயே பேசி வைத்துக்கொண்டு கடத்தல் முதலாளிகளிடம் பெறவேண்டிய கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு, இருபது லாரிகளில் கடத்தல் பொருள் போகிறதென்றால்; சாஸ்திரத்துக்கு இரண்டு லாரிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து; பிறகு மெல்ல மெல்ல அந்த சூட்டைத் தணித்து விடுவார்கள்.

கடத்தல் லாரிகள் பிடிபட்டன என்ற செய்திக்குப் பிறகு, அது சம்பந்தமான வழக்கு என்ன ஆயிற்று என்பது நாட்டுக்குத் தெரியாமலே மங்கி மறைந்து விடும். தீவிரவாதிகளை விடுவிப்பதற்காகவும்-பொன்னையோ, பொருளையோ கப்பமாகக் கட்டினால்தான் முடியும் என்று விதிக்கின்ற நிபந்தனைகளுக்காகவோ - ஆட்களையே கடத்தி விடும் அநியாயங்களும் நடப்பதுண்டு. அப்படியொரு திடீர்ச் சம்பவம் வி.பி. சிங் அவர்கள் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் நடைபெற்று விட்டது.

மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த முப்தி மகமது சையத் அவர்களின் 20 வயது மகள் டாக்டர் ரூபியா முப்தியை 8-12-89 அன்று காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்தி விட்டனர். டாக்டர் ரூபியா பயணம் செய்த மினி பஸ் ஒன்றை ஸ்ரீநகர் அருகே துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுற்றி வளைத்துக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தல்காரர்களின் கையில் விலை உயர்ந்த ஒரு பொருள் சிக்கியிருந்தால், அதனைத் திரும்பப் பெறக் கையாளுகிற அணுகுமுறைக்கும், பொருளுக்குப் பதிலாக ஒரு மனித உயிரே சிக்கியிருந்தால் அதனைத் திரும்பப் பெறக் கையாள வேண்டிய முறைக்கும் பெரிய வித்தியாசமே இருக்கிறது.

வேலியின் முள்ளில் விழுந்துவிட்ட துணியை எடுப்பதில் காட்டுகிற லாவகம், இதிலும் காட்டப்பட்டாக வேண்டும். அப்படித்தான் நாட்டில் பல கடத்தல் சம்பவங்கள் தொடர்பான அணுகுமுறைகள் கடைப் பிடிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சரின் மகளைக் கடத்திய கும்பலுடன் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மூன்றாம் நபர்கள் மூலமாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பேசினார்கள். அப்படிப் பேசித்தான் ஆக வேண்டும், அதைத்தவிர இதுபோன்ற சூழ்நிலைகளில் வேறு வழி இல்லை.

உதாரணமாக 1994 டிசம்பர் மாதவாக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கோஷ்டியினர் காவல்துறை கண்காணிப்பாளர் சிதம்பரநாதன் உட்பட மூன்று பேரைக் கடத்திச் சென்றபோது; "வீரப்பன் விதித்த நிபந்தனைப்படி வீரப்பனைத் தேடும் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக" அன்றைய அ.தி.மு.க. அரசின் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியிருந்தது. வீரப்ப- னுடைய தூதுவர் துப்பாக்கியுடன் வந்து போகக் கூட அனுமதிக்கப்பட்டது.

இதைப்பற்றியெல்லாம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது; அப்போது தலைமைச் செயலாளராக இருந்த அரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அவர்கள் "நாம் ஒரு அடிப்படை விஷயத்தை, மறந்து விடக் கூடாது. இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். போலீஸ் அதிகாரிகளை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது" என்று விளக்கமளித்தார்.

கடத்தல் சம்பவங்களும், அதையொட்டி கடத்தல்காரர்கள் விதிக்கும் நிபந்தனைகளும் காலம் காலமாக இருந்தே வருகிறது. இதைப்போலவே மத்திய அமைச்சரின் புதல்வி டாக்டர் ரூபியாவைக் கடத்தியவர்களும் நிபந்தனை விதித்தனர். என்ன நிபந்தனை அது? "சி.ஐ.டி. அதிகாரி ஒருவரைக் கொலை செய்ததாக திகார் சிறையிலே தூக்கில் இடப்பட்ட மக்பூர்பட்டின் சகோதரரான குலாம் நபி, ஹமீத் ஷேக் உட்பட ஐந்து கொடிய பயங்கரவாதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அப்போதுதான் ரூபியாவை விட முடியும்." இந்தக் கோரிக்கையைக் கேள்விப்பட்டவுடன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா அவர்கள் நாடு திரும்பினார். தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்தக் கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தியபின்; அவர்கள் நிபந்தனைப்படி அந்த ஐந்து பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டு; அதைத் தொடர்ந்து ரூபியாவும் விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி காஷ்மீர் பகுதியில் பரபரப்பாக நடந்தபோது நான் டெல்லியில் உள்துறை அமைச்சர் முப்தி மகமதுவைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினேன்.

அந்தச் சமயம், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜய ரத்னே அவர்கள் டெல்லி வந்து இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக பிரதமர் வி.பி. சிங் அவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றதின் தொடர்ச்சியாக பிரதமர் அவர்கள் என்னிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதித்தார். ராஜீவ் பிரதமராக இருந்தபோது இலங்கைப் பிரச்சினையில் நானும் அவரும் கலந்து பேசியதையும் அப்போது எடுக்கப்பட்ட முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டதையும் விவரமாக எடுத்துரைத்தேன்.

பின்னர் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் விருப்பப்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் குஜ்ரால் அவர்களுடனும்; கொழும்பு இந்தியத் தூதுவர் மல்கோத்ரா மற்றும் உயர் அதிகாரிகளுடனும் விவாதித்தேன். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில்; நான் சென்னை திரும்பியதும் 15 மற்றும் 16-12-89 ஆகிய நாட்களில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான ஆண்டன் பால சிங்கம், யோகி ஆகியோர் என்னைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக உரையாடினர்.

அந்தச் சந்திப்பு பற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதியான ஒரு நல்ல முடிவு காண்பதற்கு ஜனநாயக ரீதியான வழியைப் பற்றிப் பூர்வாங்கமாகப் பேசியிருப்பதாகவும் மற்ற குழுவினருடனும் விரைவில் பேச இருப்பதாகவும் தெரிவித்தேன். அந்தப் பேச்சுவார்த்தை விபரம் குறித்து பிரதமரிடமும், வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் விளக்கிட 20-12-89 அன்று டெல்லி சென்றிருந்தேன். மற்ற போராளிகளிடமும் பேசுமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

ஜனநாயக முறையில் ஒரு தீர்வு காண வேண்டுமென்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. 1989-ஆம் ஆண்டின் இறுதி நாளன்று தமிழீழத் தலைவர்கள் பலர் குறிப்பாக வழக்கறிஞர் சந்திரஹாசன், க.சச்சிதானந்தன், ஈழவேந்தன், வெ.பேரம்பலம், எஸ்.சிவசுப்ரமணியம், எஸ்.சிவானந்தம், சு.சிவநாயகன், ர.பத்மநாபன், த.அருணாசலம், ஞான கணேசன், பி.ஆனந்தராஜா, நீதுவான் சிவானந்தன் ஆகியோர் என்னை இல்லத்தில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விவாதித்தனர்.

4-1-1990 அன்று மாலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே அவர்கள் என்னை இல்லத்தில் சந்தித்து தமிழ்ப் போராளிகளிடையே அமைதி நிலவுவதற்காக நான் எடுத்து வந்த முயற்சிகளையெல்லாம் பாராட்டினார். இலங்கை அமைச்சருடன் ஆலோசகர் பிராட்மேன் வீராகூன் மற்றும் ராணுவத் துறைச் செயலாளர் செபாலா அட்டிகலா ஆகியோரும் வந்திருந்தனர். 7-1-90 அன்று ஈழத் தமிழ்ப் போராளிகளில் ஒரு குழுவினரான ஈராஸ் பிரிவைச் சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோர் என்னைச் சந்தித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஜனவரி 8ஆம் தேதியன்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மல்கோத்ரா அவர்களும் என்னைச் சந்தித்தார். ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் இலங்கை வட கிழக்கு மாகாண முதல் அமைச்சர், ஈ.பி.ஆர்.எல்.எப். பிரிவைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்னைச் சந்தித்தார். அவருடன் யோகசங்கரி, சந்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அகில உலகப் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கர் என்கிற கே. சங்கர் பிள்ளை 26-12-89 அன்று தனது 87வது வயதில் டெல்லியில் காலமானார்.

பத்திரிகைத் துறையில் கார்ட்டூன்கள் வருவதற்கே காரணமாக இருந்தவர் இவர்தான். ஏராளமான பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தியாவில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகரிப்பதற்கே இவர்தான் முக்கியமான காரணமாகும். இந்தியாவில் கேலிச்சித்திரத் துறைக்கு ஒரு மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தவரே இந்த சங்கர் அவர்கள்தான். ஓய்வு நேரத்தில் கார்ட்டூன்கள் வரைந்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்த இவரை இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர்தான் அழைப்பு விடுத்து அந்தப் பத்திரிகையின் முழுநேர கேலிச் சித்திர ஓவியராக ஆக்கினார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கேலி செய்யும் ஏராளமான கார்ட் டூன்களை வரைந்தார். 1948-ஆம் ஆண்டு இவர் துவக்கிய சங்கர்ஸ் வீக்லி என்ற வார இதழ் முழுக்க முழுக்க கார்ட் டூனிஸ்ட் இதழாகவே விளங்கியது. இவரது கார்ட்டூன்களை பண்டித நேரு அவர்களே பலமுறை பாராட்டியிருக்கிறார். இவரது மறைவு குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து ஏடுகளும் அஞ்சலி செலுத்தி எழுதியிருந்தன.

89-ஆம் ஆண்டின் இறுதியில் விடுதலைப்புலிகளைச் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதைத் தொடர்ந்து 90-ஆம் ஆண்டு பிப்ரவரி 16,17 ஆகிய நாட்களில் மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாலசிங்கம், யோகி ஆகியோர் என்னைச் சந்தித்தனர். அப்போது மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் உடனிருந்தார். 17-2-90 அன்று டெலோ, பிளாட், ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப்., ஆகிய ஈழப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகள் என்னுடைய இல்லத்தில் என்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெலோ இயக்கத்தின் சார்பில் கருணாகரன், ஸ்ரீகந்தா ஆகியோரும், பிளாட் இயக்கத்தின் சார்பில் கனகராஜா, விசு ஆகியோரும், ஈராஸ் இயக்கத்தின் சார்பில் பஷீர், பாலகுமார் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் சோமு, சாந்தன் ஆகியோரும், ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தின் சார்பில் ராஜன், ஜெயகாந்தன் ஆகியோரும் என் இல்லத்திற்கு வந்து 9.45 முதல் 11.45 வரை விவாதித்தார்கள். இதில் ஈராஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் தனியாகவும், மற்ற குழுவினர் தனியாகவும் சந்தித்தார்கள்.

மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, போராளிகளுக்கிடையே மோதுதல் ஏற்படாமல் இருப்பதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறேன். இதுவரை பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுமுகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் என்று கூறினேன். 18-ஆம் தேதியன்றும் அனைத்துப் போராளிக் குழுவினருடனும் தொடர்ந்து பேசினேன்.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்கு வருவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார்கள். ஈழத்தில் ஜனநாயக அடிப்படையில் அமைதியும் பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதே என் நோக்கமும், வி.பி. சிங் அவர்களின் நோக்கமும் ஆகும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். சென்னையில் இந்த அளவிற்கு நான் முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் 19-2-90 அன்று ராமனாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகிலே உள்ள சோதனைச் சாவடியில் மூன்று கார்களை நிறுத்திய போது கார்களில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் காவலர் ஒருவரும், வேறொரு- வரும் மாண்டனர்.

கார்களில் வந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறப்பட்டது. எந்தப் போராளிக் குழுவாக இருந்தாலும் ஆயுதங்களோடு தமிழ்நாட்டிற்குள் யார் வந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஆயுதங்களோடு நுழைவதற்கு வழிவகைகளை யார் செய்து கொடுத்தாலும், அவர்கள் ஒரு சில அதிகாரிகளாக இருந்தாலும் அல்லது அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவதோடு, தமிழ்நாட்டை ஒரு வன்முறைக்களமாக ஆக்குவதற்குத் துளியும் இடம் தர இயலாது என்று என் கருத்தைத் தெரிவித்தேன்.

பிப்ரவரி திங்கள் 22-ந்தேதியன்று மீண்டும் ஈழப் போராளிகளின் இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப்., பிளாட், டெலோ ஆகியவற்றின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர். விடுதலைப் புலிகள் இயக்கம் எங்களிடம் பேசும்போது அவர்கள் ஜனநாயக வழிக்கு வருவதற்கேற்ப வரதராஜ பெருமாள் தலைமையிலே உள்ள வடகிழக்கு மாகாண கவுன்சில் கலைக்கப்பட வேண்டும், அல்லது அவர்களே பதவி விலகி மறு தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்ற கருத்தைக் கூறியதால், அதுபற்றி நான் மற்றக் குழுவினரிடம் பேசினேன்.

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என். .டி.எல்.எப். சார்பில் மொத்தம் உள்ள வட கிழக்கு மாகாண சபை 71 இடங்களில், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நியமித்துக் கொள்வதற்கு நீங்கள் சொல்கிற எண்ணிக்கை அளவு இடங்களைத் தருகிறோம், தேர்தல் என்று வந்தால் மீண்டும் மோதுதல் ஏற்படும், எனவே தேர்தல் வேண்டாம் என்று என்னிடம் கூறினார்கள். அதை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிடம் நான் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இடங்களைப் பேரம்பேசி நியமன உறுப்பினர்கள் என்ற அளவில் பெற்றுக் கொண்டால், பதவிக்காகத்தான் நாங்கள் இயக்கம் நடத்துவதாக எங்கள்மீது பழி வந்து சேரும்.

எனவே ஈழத் தமிழ் மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்க தேர்தல்தான் சிறந்த ஜனநாயக முறை என்று தெரிவித்தார்கள். இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் வெளிப்பட்ட கருத்துக்களை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மூலமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பிரதமரிடமும் தெரிவிக்கச் செய்தேன். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் மேற்கொண்ட முயற்சி பற்றி பத்திரிகையாளர் டி.எஸ். சுப்பிரமணியம் இந்து 3-3-90 இதழில் ஒரு நீண்ட கட்டுரை எழுதும்போது, திரு.

கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை என்றும், டிசம்பரில் முதல்வர் பல்வேறு கோஷ்டிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய போது அவற்றுக்கிடையே காணப்பட்ட அளவுக்குப் பகைமை உணர்வு இல்லை என்றும், பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றது என்றும், தமிழ்ப் போராளி இளைஞர்கள் பெருமளவில் பலியாவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது என்றும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளச் செய்து, அதன் மூலம் பொதுக் கருத்தை உருவாக்குவது என்பதுதான் திரு.கருணாநிதி கடைப்பிடித்த வெட்டவெளிச்சமான ராஜதந்திர அணுகுமுறையென்றும் குறிப்பிட்டிருந்தார். 27-3-90 அன்று விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக முதல்வரிடம் உறுதிமொழி அளித்துள்ளதைப்போல அவர்கள் யாரையும் தாக்க மாட்டோம் என்றும், மற்ற போராளிக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு கொடுப்போம் என்றும், தாங்கள் ஆயுதம் வைத்

திருப்பது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே என்றும், மற்ற போராளிக் குழுக்கள் மீது தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் கூறினார். அதற்குப் பிறகு ஒரு முறை பாலசிங்கம் அவர்கள் தொலைபேசியிலே என்னைத் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டுமென்று கேட்டபோது மத்திய அரசுடன் கலந்து கொண்டு சந்திப்பதாகக் கூறினேன். ஆனால் பிறகு அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் வரவில்லை. 18, 19-6-1990 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் டெல்லி சென்றிருந்த போது, 18-ந்தேதி முதல் நாள் கூட்டம் முடிந்ததும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து மாலை 6.10 முதல் 7 மணி வரை உரையாடினார்.

அப்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனும் உடன் வந்திருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக அன்று விவாதித்த பிறகு மறுநாள் மாலையிலும் தொடர்ந்து அதைப்பற்றி இந்தியாவின் முக்கியத் தலைவர்களையெல்லாம் அவரது இல்லத்திற்கு அழைப்பதாகவும், அந்தக் கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கலாம் என்றும் பிரதமர் கூறினார். அதன்படியே 19-6-90 அன்று மாலையில் பிரதமர் இல்லத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்டிருந்த கூட்டத்திற்கு வந்திருந்த மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு, கேரள முதலமைச்சர் ஈ.கே.

நாயனார், ஒரிசா முதலமைச்சர் பிஜு பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் செகாவத், பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத், அஸ்ஸாம் முதல் அமைச்சர் மகந்தா, அரியானா முதல் அமைச்சர் குப்தா, இமாசலப் பிரதேச முதலமைச்சர் சாந்தகுமார், சிக்கிம் முதல் அமைச்சர் பண்டாரி, புதுவை முதல் அமைச்சர் டி.ராமச்சந்திரன், மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண்நேரு, முப்தி மகமது சையத், முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் அகில இந்தியத் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், இந்திரஜித் குப்தா, பரூக்கி, ஜஸ்வந்த் சிங், சிட்டபாசு, சாமர் முகர்ஜி, டாக்டர் நகேந்திர சக்கரியா ஆகியோரிடம் ஈழப்பிரச்சினை குறித்து கடந்த கால நிலைமைகளையும், தற்போதுள்ள நிலைமைகளையும் நான் விளக்கினேன்.

அந்தக் கூட்டத்திலே இலங்கையில் நடைபெறும் போர் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் வீசப்படும் குண்டு வீச்சுக்களாலும், விஷவாயு வீசுவதாலும் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்தும் அவதிப்படுவது குறித்தும் வேதனை தெரிவிக்கப்பட்டதுடன், காயம்பட்டு வருகிறவர்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டுமென்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தை முடித்து விட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு நான் வருவதற்கும், சென்னையிலிருந்து ஒரு கொடுமையான செய்தி வருவதற்கும் சரியாக இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பத்மநாபா மற்றும் அந்த இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் 14 பேர் கோடம்பாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அனைவரும் கொல்லப்பட்டதாக எனக்கு சென்னையிலிருந்து உள்துறை செயலாளர் மூலம் செய்தி வந்தது. ஒரிசாவில் வைக்கப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்.

இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அன்றுதான் சென்னை திரும்பியதாகவும், அன்றைக்கே அந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் எனக்குக் கூறப்பட்டது. 20-ஆம் தேதி மாலையில் சென்னை திரும்பிய நான் விமான நிலையத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்து நேராக அரசினர் பொது மருத்துவமனைக்குச் சென்று, துப்பாக்கிச் சூட்டில் மறைந்த பத்மநாபா மற்றும் போராளிகளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

வேட்டையாடப்படுகிற ஈழத் தமிழ் இனத்தைக் காப்பாற்றுகின்ற கேடயங்களாகத் தோன்றிக் காத்திடும் கடமையாற்றிக் கொண்டிருந்த போராளிக் குழுக்கள்; அந்தக் கடமையிலே தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் இனத்தைக் காப்பாற்ற முனையாமல்; ஒவ்வொரு குழுவினரும் மற்றொரு குழுவினரைக் குத்திச் சாய்க்கும் கொடுவாளாகத் தம்மை ஆக்கிக்கொண்டு தங்களுக்குள் போரிட்டுச் சாகிற இந்தக் கொடிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டால்தான்; ஈழத் தமிழர்களின் சுதந்திரக் கனவு பலிப்பதற்கு வழியுண்டு எனத் தெரிந்திருந்தும் சகோதர யுத்தம் நின்றபாடில்லை என்பதற்கு பத்மநாபா படுகொலை இன்னொரு எடுத்துக்காட்டாக ஆயிற்று.

என் செய்வது; சின்னஞ்சிறு பிராயத்தில், இறுகக் கட்டப்பட்ட சுள்ளிக்கட்டையை இரண்டாக உடைப்பதென்றால் முடியாது; அதே கட்டிலிருந்து ஒவ்வொரு சுள்ளியாக எடுத்துச் சுலபமாக உடைத்து விடலாம் என்று ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததையும்; நான்கு எருதுகள் ஒன்றாக இருந்த வரையில் சிங்கம் அவற்றின் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் அவை நான்கும் தனித்தனியே பிரிந்தபோது சிங்கம், ஒவ்வொன்றாக அடித்துக் கொன்று போட்டது என்று கதை கேட்டதையும்- நினைவுபடுத்திக் கொள்கிற நெஞ்சம்; அந்தப் போராளிக் குழுக்களில் எப்படியோ அமையாமல் போய், அதுவே அவர்களின் லட்சிய வெற்றிக்குத் தடைக் கல்லாகவும் ஆயிற்று.

அடுத்தடுத்து போராளிக் குழுக்களின் தலைவர்கள், போராளிகளுக்குத் தொடக்க காலத்தில் ஆதரவளித்த நாடாளுமன்ற பொறுப்புகள் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்த முதுபெரும் தமிழர்கள், வழக்கறிஞர்கள், "நாங்கள் புதைக்கப்படவில்லை; ஈழத் தமிழர் விடுதலைக்காக விதைக்கப்படுகிறோம்" என்று முரசு கொட்டிப்போர் முனையில் உயிர் தரக் கிளம்பிய வீர இளைஞர்கள்; இவர்கள் எல்லாம் சகோதர யுத்தத்தில் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிற செயல்களை அவ்வப்போது வேதனையுடன் எடுத்துக்காட்டி, "வேண்டாம் இந்த விபரீதம்!"

என்று எச்சரித்து வந்த எனக்கு என்னுடன் நெருங்கிப் பழகிய போராளிக் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான பத்மநாபா கொலையுண்டது என்னை மெத்தவும் சோர்வடையவே செய்து விட்டது. தமிழர்களிடம் விரிவடைந்த இதுபோன்ற ஒற்றுமையின்மையை இலங்கை ராணுவம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, 1990-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அப்பாவித் தமிழர்களை வேட்டையாடுகிறது என்ற செய்தி, மீண்டும் அன்றாட நிகழ்ச்சிகளாக வெளி வரத் தொடங்கியது.

என் செய்வது; பக்கத்திலே மிக அருகிலே ஒரு தீவில் தமிழினப் படுகொலை தொடர்வதைத் தமிழகம் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்க முடியுமா? தானாடாவிடினும் தன் தசையாடும் என்பதற்கேற்ப 12-7-1990 அன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 20-7-1990 அன்று ஈழத் தமிழர்களுக்காக ஒரு நாள் முழு அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு; அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு தந்து ஈழத் தமிழகத்தில் அமைதி ஏற்பட வேண்டுமென்ற தமது ஆழமான உணர்வை வெளிப்படுத்தினர்.

அன்று சொன்னதும்; இன்று சொல்வதும்! இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு, வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் நாடாளுமன்ற கழகக்குழுத் தலைவருமான முரசொலிமாறன் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, தா.கிருட்டிணன், மிசா கணேசன், ஜெ.எஸ். ராசு, முகமது சகி, ஜி. வெங்கட்ராமன், நாமக்கல் வீரப்பன் ஆகியோர் 23-8-90 அன்று பிரதமரைச் சந்தித்து மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே எந்தவித கருத்து மாறுபாடும் கிடையாது என்றும், இலங்கைப் போராளிகளுக்கு தமிழகத்தில் தளம் அமைக்க அனுமதி கிடையாதென்றும், தமிழக முதல் அமைச்சர் இதைத் தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உயிர்ப் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களைப் பாதுகாக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தட்பவெப்பங்களுக்கேற்ப மனிதனாகட்டும் மற்றும் உயிரினங்களாகட்டும் தங்களின் இருப்பிடங்களை மாற்றிக் கொள்வது இயல்பு. இதில் மனிதனல்லாத ஏனைய உயிரினங்- களுக்கு அந்த இருப்பிட மாற்றம் இயற்கையாகவே அமைந்துவிடும். மனிதன் அத்தகைய மாற்றத்தை அவனே சிரமப்பட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் அரசியல் ரீதியான தட்பவெப்பங்கள் மாறும் போது ஓர் அதிபுத்திசாலியான அரசியல்வாதி, மனிதரல்லாத ஏனைய உயிரினங்களைவிட, மிக விரைவாகத் தன் இருப்பிடத்தை மட்டுமல்ல, இதயத்தையே கூட மாற்றிக் கொள்ளும் விசித்திரத்தைக் காண முடியும்.

இந்த அத்தியாயத்தை நான் எழுதும்போது, அதாவது 2001 முடிந்து 2002ஆம் ஆண்டு தொடங்கியுள்ள கால கட்டத்தில் செல்வி ஜெயலலிதாவும் அவரது ஆதரவு ஏடுகளான சில ஏடுகளும் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளை தி.மு.கழகமும் அதன் தலைவரான நானும்தான் ஊக்கப்படுத்துகிறோம்-வன்முறைக்குத் தூண்டி விடுகிறோம்- அவர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மேற்கொண்ட நிலை என்ன?

பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதைவிட, எழுந்துள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி எதிர்வரிசையில் உள்ள தனக்குப் பிடிக்காதவர்களை எப்படிக் குறை கூறுவது என்பதற்கே தனது மொத்த ராஜதந்திரத்தையும்- தனக்கு அரிய வாய்ப்பாகக் கிடைத்த பிரச்சார சாதனங்களையும் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் பத்மநாபா படுகொலை சென்னையில் நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளில் ஒரு சிலர்தான் அந்தக் கொலைக்குக் காரணம் என்று அவர்களைத் தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈழப் போராளிகளுக்குத் தமிழ் மக்கள் அளித்து வந்த பேராதரவில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக ஒரு தொய்வு ஏற்பட்டு விடுகிறது. கோடம்பாக்கத்தில் அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்க முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து முதற் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கிட ஆணை பிறப்பித்தேன். அந்தக் கொடூரமான நிகழ்ச்சி தமிழ் மக்கள் நெஞ்சை விட்டு மறையாத சூழலிலேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4-10-1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்து, அது வெளி வருகிறது.

"சிங்கள ராணுவமும், காவல் துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ் நாட்டில் புகார் கூறும் அளவுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது.

இது ஒரு அதி தீரமான செயல். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அனைத்து சக்தி மற்றும் கவனம் முழுவதும் முதலமைச்சரின் நாற்காலியைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதியின் மனோபாவம் இவ்வாறிருந்தால் இதற்கு மாறாக வேறு விதமாக செயல்படுவதை வி.பி. சிங்கிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. இலங்கைத் தமிழர்களின் கதி பற்றி வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் வழங்க வேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காண வேண்டும்.

அல்லது விடுதலைப் புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்க வேண்டும்." செய்தியாளர்:- விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது. ஆனால் நீங்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே? ஜெயலலிதா:- நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும், பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால் நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கா விடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்க வேண்டும். கேள்வி:- எம்.ஜி.ஆர்.செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்யவில்லையா? ஜெயலலிதா:- அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை. 8-10-1990 தேதியிட்ட "இந்து" இதழிலே ஜெயலலிதா விடுதலைப் புலிகளைப் பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு:- "இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும் மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்து விடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்."

இப்படிச் சொன்னவர்தான் நான் விடுதலைப் புலிகளையும், வன்முறைச் செயல்களையும் தமிழ் நாட்டில் ஊக்கப் படுத்துகிறவன் என்று இன்று வரையில் குற்றம் சாட்டி வருகிறார். அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததின் தொடர்ச்சியாக பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சர்கள் மூன்று மாதங்களில் அங்கே மாநில சட்டமன்றங்களின் தேர்தல்கள் நடக்கவிருப்பதையொட்டி, மாற்றப்பட்டார்கள்.

ஆனால் அதைப்பற்றி 11-12-89 அன்று தலையங்கம் எழுதிய தினமணி, "நாட்டை 21ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வந்த ராஜீவ் காந்தி அவர்கள் இப்போது 17வது நூற்றாண்டு மனப்பான்மை உள்ளவர்களை நம்பி அவர்களை மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தியிருப்பது அவருடைய பரிதாபகரமான நிலையைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டது.

இந்திய அரசியலி

ல் இந்த மாற்றம் ஏற்பட்ட போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலை குறித்து சற்று கவனிக்கலாம். 1989ஆம் ஆண்டில் குறிப்பாக ஆகஸ்ட் திங்களிலிருந்தே டிசம்பர் திங்கள் முடிவதற்குள் சூறாவளிக் காற்றில் உதிர்ந்த இலைகள் அடித்துச் செல்லப்படுவது போல கிழக்கு ஐரோப்பாவில் அப்போது வீசிய ஜனநாயகப் புயலில் நாற்பதாண்டுகளாக அங்கே நிலைபெற்றிருந்த பல கம்யூனிஸ்ட் அரசுகள் கவிழ்ந்தன. போலந்து, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் வரிசையில் ருமேனியாவிலும் புரட்சி ஏற்பட்டது.

டிமிஸோயாரா என்பது ருமேனியாவில் உள்ள ஒரு முக்கிய நகரம். ருமேனியாவின் சர்வாதிகாரி நிக்கோலே சௌசெஸ்கு, அங்கே வாழும் சிறுபான்மை ஹங்கேரியர்களை அடியோடு அழிக்கத் திட்டமிட்டு அவர்களையெல்லாம் படுகொலை செய்து வந்ததை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் ரெவரெண்ட் டோக்ஸ் என்பவர். எனவே அவரைச் சிறைபிடிக்க அவரிருந்த தேவாலயத்தை நோக்கி 17-12-89 அன்று சௌசெஸ்குவின் பாதுகாப்புப்படை விரைந்தது. ஆனால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் அவரைக் கைது செய்ய அனுமதிக்காமல் தேவாலயத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

இதனால் எரிச்சல் அடைந்த செளசெஸ்குவின் மனைவி எலினா அந்த அப்பாவிப் பொதுமக்களையெல்லாம் சுட்டு வீழ்த்துமாறு உத்தரவிட்டார். உடனே இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட டாங்கிகள் பொதுமக்கள் மீது குண்டுகளைப் பொழிந்த வண்ணம் முன்னேற ஆரம்பித்தது. அதன் விளைவாக 20 ஆயிரம் பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். புல்டோஸர்களின் உதவியுடன் பெரிய குழிகளை வெட்டி இறந்த உடல்களைப் புதைத்தனர். மறுநாள் 18ந்தேதியன்று, சுட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 30 இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் அந்தத் தேவாலயத்திற்கு வந்தபோது, அவர்கள் மீது பாதுகாப்புப்படை துப்பாக்கியால் சுட அதில் 15 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

12 பேர் படுகாயமடைந்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன் கம்யூனிஸ்ட் அரசுகள் திடீரெனத் தோன்றியதற்கும், 89- ஆம் ஆண்டுவாக்கில் அவை வீழ்ச்சியுற்றதற்கும் சோவியத் ரஷ்யாதான் காரணம் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் வெடித்த புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி கைப்பற்றியிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்த ரஷ்யாவின் செஞ்சேனை அங்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டது. தொடர்ந்து ரஷ்யபடை பலத்தின் ஆதரவினால்தான் அந்த ஆட்சிகள் நீடித்தன. 1956இல் ஹங்கேரியிலும், 1968இல் செக்கோஸ்லோவேக் கியாவிலும் மக்கள் புரட்சி எழுந்த போது கூட சோவியத் படைகள்தான் அவற்றை முறியடித்தன. கிழக்கு ஐரோப்பாவில் ஜனநாயகப் புயல் வீசும்போது ருமேனியா மட்டும் அதிலிருந்து எப்படித் தப்ப முடியும்?

மக்களின் சுதந்திர வேட்கைக்கு அணை போட முடியாது என்பதை செளசெஸ்கு உணரவில்லை. அவரும் அவருடைய குடும்பத்தினரும் நாட்டில் எதேச்சாதிகாரம் நடத்தினார்கள். கட்சிப் பதவிகளிலும், அரசுப் பதவிகளிலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். 1965ஆம் ஆண்டு மார்ச் 22ந்தேதி ருமேனியாவின் ஆட்சிப் பொறுப்பை சௌசெஸ்கு ஏற்றதும், அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தனது உறவினர்களையெல்லாம் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தினார்.

இவரது மனைவி எலினா ருமேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர். மேலும் அவர் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். சௌசெஸ்குவின் சகோதரர் இலியி ராணுவ ஜெனரலாகவும், துணைப் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தார். மற்றொரு சகோதரரான நிக்கோலே அந்துருத் என்பவர் துணை உள்துறை அமைச்சர். மேலும் போலீஸ் ஜெனரல் பதவியையும் இவர் வகித்தார். ருமேனியாவின் பொருளாதாரத்திற்குத் திட்டமிடும் பொறுப்பை வகித்த அதிகாரி சௌசெஸ்குவின் மற்றொரு சகோதரர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ஆசிரியரும் அவரது சகோதரர்தான். சௌசெஸ்குவின் மைத்துனர் வாசிலி பார்பு லெஸ்கு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக நியமிக்கப் பட்டிருந்தார். எலினாவின் சகோதரர் பெட் ரெஸ்கு தொழிற் சங்கத் தலைவராக இருந்தார். சௌசெஸ்குவின் மகன் நிகு டிரான்ஸில்வானியாவின் தென் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி செயலர். மருமகள் பொலியனா பயனீர் நேஷனல் கவுன்ஸிலின் தலைவி. சௌசெஸ்குவின் மற்றொரு மகன் வாலென்டின் அணு ஆராய்ச்சியாளர்களில் முதலிடம் தரப்பட்டார்.

மகள் ஜோயா எலினா கணித நிலையத்திற்குப் பொறுப்பாளர். 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னனான நெப்போலியன் ஸ்பெயினிலிருந்து ரஷ்யா வரை, தான் கைப்பற்றிய இடங்களை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் எனக் கனவு கண்டான். கம்யூனிஸத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் காரல் மார்க்ஸ் ஐரோப்பாவில் தொழிலாளர் புரட்சி ஏற்படக்கூடும் என்று முன்கூட்டியே கணித்தார். மார்க்ஸின் வாரிசு என்று கருதப்படும் கோர்பசேவ், ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனியான கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

அதாவது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் புதிய அரசுகளை அமைத்து பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து ரஷ்யாவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருப்பது என்பது குறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அதன் விளைவாகத்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எழுச்சி ஏற்பட்டதாக அப்போதைய ஏடுகள் எல்லாம் எழுதின. இந்த நிலையில் 89ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் அதிபர் சௌசெஸ்குவின் ஆட்சி கவிழ்ந்தது.

அதிபரும் அவரது துணைவியாரும் நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டனர். இதன் மூலம் கிழக்கு ஐரோப்பாவில் தீவிர கம்யூனிஸ்ட் ஆட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. கிறிஸ்துமஸ் தினமான 25-12-89 அன்று ருமேனியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் செளசெஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் மீது பயங்கர குற்றச்சாட்டுகள் குறித்து ரகசிய விசாரணை நடந்த பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ருமேனியா வானொலி அறிவித்தது.

"ஓ! எவ்வளவு அற்புதமான செய்தி. கிறிஸ்துவின் எதிரி, கிறிஸ்துமஸ் தினத்தன்று மடிந்தார்" என்று அந்தச் செய்தியாளர் அறிவித்தார். ருமேனிய கலவரத்தில் 80 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 3 லட்சம் பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் ஹங்கேரி நாட்டு வானொலி அறிவித்த போதிலும், சௌசெஸ்குவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த விக்டர் சியோபனு அவ்வளவு பேர் இருக்காதென்று மறுத்தார். ருமேனியாவில் அயன் இலியஸ்கு தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இடைக்கால அரசு தனது புத்தாண்டு அறிவிப்பாக அந்த நாட்டிலே தூக்குத் தண்டனையை அடியோடு ரத்து செய்தது. சர்வாதிகாரி செளசெஸ்குவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைதான் கடைசி என்றும் அறிவிக்கப்பட்டது. ருமேனியாவில் ஒரு சர்வாதிகாரி; தனது முடிவைச் சந்தித்த அதே கால கட்டத்தில் மற்றொரு சர்வாதிகாரிக்கு ஏற்பட்ட முடிவு குறித்தும் பார்க்கலாம். மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு பனாமா. அந்த நாட்டின் அதிபராக அந்தக் காலகட்டத்தில் இருந்தவர் அதிபர் ஜெனரல் நொரீகா.

அந்த நாட்டில் 89ஆம் ஆண்டு மே திங்களில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்ற போது வெற்றி பெற்ற க்வில்லெர்மோ எந்தராவை அதிபர் பதவி ஏற்க முடியாமல், ராணுவத்தின் உதவியுடன் நொரீகா சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தார். மேலும் நொரீகா போதைப் பொருள்களைக் கடத்துவதிலும், அவற்றை அமெரிக்காவில் பெருமளவில் விற்பதிலும் ஈடுபட்டு அதன் காரணமாக அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவாகியிருந்தன.

20-12-89 அன்று அமெரிக்க அதிரடிப்படை பனாமாவிற்குள் நுழைந்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (இன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் தந்தை) சர்வாதிகாரி நொரீகாவைப் பதவி நீக்கம் செய்து விட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எந்தரா புதிய அதிபராகப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார். ஜெனரல் நொரீகா தலைமறைவாகி விட்டார். 22ந்தேதியன்று நொரீகாவின் அதிரடிப்படை ஓட்டலில் தங்கியிருந்த 64 அமெரிக்கர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டபோதிலும் மறுநாளே அமெரிக்காவின் அதிரடிப்படை.

திரும்பவும் அவர்களை விடுவித்தது. நொரீகா பனாமா நகரிலுள்ள வாடிகன் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு தஞ்சம் தந்தனர். அவருக்குத் தஞ்சம் தரக் கூடாதென்று அமெரிக்கா கூறிய போதிலும் வாடிகன் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காக் கண்டத்திலே உள்ள நாடுகளும் ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஐ. நா. சபையே அமெரிக்காவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தது. பனாமா நாட்டில் அமெரிக்கா தொடுத்த இந்தப் போரின் காரணமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்று செய்திகள் அப்போது வெளிவந்தன. வாடிகன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த நொரீகாவைக் கைது செய்ய அமெரிக்க துருப்புக்கள் தூதுவரகத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு வெடி முழக்கங்களைச் செய்து மிரட்டிக் கொண்டிருந்தன. நொரீகா வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்டது.

பனாமா மக்கள் பெரும் பேரணி ஒன்றை நடத்தி வாடிகன் தூதுவரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். நொரீகாவை அன்னாசிப்பழத் தலைவர் என வர்ணித்து முழக்கம் எழுப்பினர். அமெரிக்கத் துருப்புகள் மட்டும் இடை புகுந்து தடுத்திராவிட்டால் அந்த மக்கள் வெள்ளம் வாடிகன் தூதுவரகத்தில் நுழைந்து நொரீகாவை நொறுக்கி எறிந்திருக்கும். நொரீகா மீது அவ்வளவு வெறுப்பு! 1988லும் 1987லும் நொரீகாவை எதிர்த்து நடந்த இருபெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் 15 ஆயிரம் பனாமா மக்களைக் கொன்று குவித்து மக்கள் எழுச்சியை ஒடுக்கி விட்டார் நொரீகா.

இந்த ஆத்திரம் அவர்களுக்கு! பனாமாவின் புதிய அரசின் துணைத் தலைவர், வாடிகன் தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் நொரீகாவைத் தங்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதிலே அவர் ஆலோசனையாகக் கூறும்போது, அவர்கள் கொள்கைப்படி நொரீகாவை அவர்களாகவே ஒப்படைக்க வேண்டாமென்றும், நொரீகாவை மட்டும் அங்கே விட்டுவிட்டு அங்கேயுள்ள அலுவலர்களை வெளியே வந்து விடும்படியும், அமெரிக்கப்படை உள்ளே நுழைந்து அவர்களாகக் கைது செய்து கொண்டு போகட்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு 11 நாட்கள் அங்கிருந்த நொரீகா பிறகு தன் மனைவிக்குப் போன் செய்து ராணுவ உடையைக் கொண்டு வரச் செய்து, அதனை அணிந்து கொண்டு வாடிகன் தூதுவரோடு சென்று அமெரிக்க ராணுவத்திடம் தாமாகச் சரணடைந்தார். 4-1-1990 அன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது ஜெனரல் நொரீகா கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார் என்று அறிவித்தார். அவர் மீது போதைப் பொருள் கடத்தி விற்றது குறித்த வழக்கு முறையாக நடைபெறுமென்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

சரண் அடைந்த சர்வாதிகாரி நொரீகா மியாமி நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு கைதி எண். 41586 என்ற குறிப்புடன் மியாமி சிறையிலே அடைக்கப்பட்டார். தலைமைக் கவிதை; தணல் கவிதையானது! -5-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு நிறைவேற்றிய தீர்மானம் பற்றி எட்டாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். 26-5-90 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஜெயில் சிங் கூறும்போது "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், கொடுத்து வைத்தவர்கள்.

ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும், நல்ல நிர்வாகத் திறமைக்கும், பிரச்சினைகளை அணுகுவதற்குமுரிய ஒரு மகத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தலைவர் காலத்திலே வாழ்கின்றார்கள். அந்த அருந்தலைவருடைய பெயர்தான் கலைஞர் கருணாநிதி! கருணை எங்கே இருக்க முடியும்? யாரிடத்தில் அருள் இருக்கிறதோ, யாரிடத்தில் மனிதாபிமானம் இருக்கிறதோ அவர்களிடம் தான் கருணை குடி கொண்டிருக்கும். இங்கேயிருப்பது சாதாரண கடல் அல்ல.

கருணைக் கடலே தலைவராக இருக்கிறார். கருணாநிதி அவர்கள் இன்றைக்கு கருணைக் கடலாகக் காட்சி அளிக்கின்றார். இந்தப் பெருந்தலைவரிடத்தில் நான் இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன். கலைஞர் கருணாநிதியின் ஆட்சிதான் டெல்லியிலே நடக்கின்றது. தேசிய முன்னணியின் ஒரு அங்கம் கலைஞர் கருணாநிதி. தயவுசெய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அதை சட்டமாக ஏற்படுத்து- வதற்கு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அதைக் குறிப்பிட்டு நான் என்னுடைய உரையிலே கூறும்போது, டெல்லி செல்லும் போதெல்லாம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைப் பற்றி நினைவூட்டிக் கொண்டிருப்பதாகவும், அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜெயில்சிங் அவர்களின் அன்புக் கட்டளையையேற்று அவரோடு இணைந்து விரைவில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நிறைவேறப் பாடுபடுவேன் என்றும் தெரிவித்தேன். அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு அடையாளமாக 30-ஆம் தேதி நடைபெற்ற தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரை உட்பட தேர்தல் அறிக்கையிலே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியே தீரும் என்று அறிவித்தார்.

5-2-90 அன்று நான் டெல்லி சென்றிருந்தபோது துணைப் பிரதமராக இருந்த தேவிலால் அவர்களைச் சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக் குழுவிற்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதற்குப் பாராட்டு தெரிவித்ததோடு, சீக்கிரம் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி அகில இந்திய அளவில் யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயிப்பது கஷ்டமாக இருக்கக்கூடும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதற்காக வைத்திருக்கும் பட்டியலை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தேன்.

அவரும் அது நல்ல கருத்து; ஏற்றுக்கொள்ளலாம் என்றார். தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, 1926-ஆம் ஆண் டிலேயே இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தது திராவிட இயக்கம்தான் என்றும், அந்த இயக்கம் நடத்திய போராட்டத்த

ின் காரணமாகத்தான் நேரு அவர்கள் அரசியல் சட்டத்திலே 1952-ஆம் ஆண்டு திருத்தம் செய்ய முன்வந்தார்கள் என்றும், எனவே, இடஒதுக்கீட்டு முறையின் முன்னோடிகள் திராவிட இயக்கத்தினர்தான் என்றும், எனவே, இந்தப் பிரச்சினையில் தேவிலால் அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் எழுமேயானால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் விளக்கம் கேட்டால் அதற்கு உதவிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன். இதில் மேலும் ஒன்றை நினைவு படுத்தவேண்டும்.

12-6-1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அவர்கள் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், பத்தாண்டு காலமாக மண்டல் கமிஷன் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பற்றியும், தேசிய முன்னணி அரசு அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும், எனவே மாநில அரசுகள் அந்த அறிக்கை மீதான தங்கள் கருத்துக்களை அந்த மாதத்திற்குள் தெரிவிப்பது அவசியம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்திற்குக் கழக அரசின் சார்பில் அந்த மாத இறுதியிலேயே பதில் எழுதப்பட்டது. அதைப் பற்றிக் கூட பிரதமர் அவர்கள் பேசும் போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டிக் கூறியிருந்தார். 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் வி.பி.

சிங் வெளியிட்டார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் முதல் கட்டமாக, மாநிலப் பட்டியல்களிலும், மண்டல் கமிஷன் அறிக்கையிலும் பொதுவாகக் கூறப்பட்ட வகுப்புகள் அடிப்படையாக வைக்கப்படும் என்றும், தங்களது நீண்டகால அனுபவங்களின் அடிப்படை- யில் மாநிலங்கள் தயாரித்து வைத்துள்ள சமுதாய ரீதியிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை அடிப்படையாக ஏற்கக் காரணம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் சிரமமின்றி அதே நேரத்தில் விரைவாக அமல்படுத்துவதற்காகத்தான் என்றும் பிரதமர் கூறினார்.

இதனை வரவேற்று நான் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் பத்தாண்டு காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை பிற்படுத்தப்பட்ட மக்கள் நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் நடத்திய பிறகும், நிறைவேற்றுவதற்குத் தயக்கம் காட்டிய இ. காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கட்டி, வி.பி. சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் வி.பி.

சிங் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதும், மகிழ்ச்சிக்குரியதுமாகும். அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு, நிறைவேற்றப்பட்ட கழக அரசின் தீர்மானத்திற்கும், நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏகோபித்த கோரிக்கைக்கும் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும் இது. பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் மத்திய அரசையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் பாராட்டி வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டேன்.

இது தவிர பிரதமர் அவர்களுக்கும் தனியாகப் பாராட்டி நீண்டதோர் தந்தி ஒன்றினை அனுப்பிவைத்தேன். மண்டல் கமிஷன் என்று அமைக்கப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக- சரியாகச் சொல்ல வேண்டுமேயானால் 1973-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போதே, "மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது.

அந்த இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முன்வந்து அதற்காவன செய்ய வேண்டுமென்று இந்த மாநாட்டின் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று வலியுறுத்தினேன். அந்தக் கருத்துத்தான் 7-8-1990 அன்று- அதாவது 17 ஆண்டு களுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது. இது குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்ற போது பிரதமர் வி.பி. சிங், "டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோர் கண்ட கனவை நனவாக்க அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைதான் மண்டல் கமிஷன் பரிந்துரை மீது எடுக்கப்பட்ட முடிவாகும்" என்றார்.

"இந்த நாட்டில் சமூக நீதிக்குப் போராடிய மாபெரும் தலைவர் பெரியார் இராமசாமியினுடைய எண்ணங்களை நனவாக்குகின்ற மண்டல் கமிஷனுடைய அறிக்கை" என்றார் பிரதமர். மண்டல் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றியமைக்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளும் தீர்மானம் 20-8-1990 அன்று சட்டப்பேரவையில் கழக அரசின் சார்பில் நிறை வேற்றப்பட்டது. நான் முன் மொழிந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தே உரையாற்றினர்.

தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாநிலங்களில் ஆங்காங்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாணவர்களைத் தூண்டிவிட்டுக் கிளர்ச்சியில் ஈடுபடச் செய்தனர். பீகாரில் தொடங்கப்பட்ட இந்தக் கிளர்ச்சி வட மாநிலங்களில் பரவியது. கிளர்ச்சிக்காரர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை இந்திரா காங்கிரசும் அதன் மாணவர் பிரிவும்தான் தூண்டி விடுகின்றன என்று பீகார் முதல்வர் லல்லு பிரசாத் தெரிவித்தார்.

கிளர்ச்சி டெல்லியிலும், குஜராத்திலும், ராஜஸ்தானிலும், உத்தரப் பிரதேசத்திலும், ஆந்திராவிலும், ஒரிசாவிலும் ஆங்காங்கு பரவியது. "அநீதியான கிளர்ச்சி" என்ற தலைப்பில் 18-8-1990 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் "மண்டல் கமிஷன் பற்றிய முன்னறிவிப்பை பிரதமர் வி.பி. சிங் வெளியிட்டது முதல் கடந்த பத்து நாட்களாக வட மாநிலங்களில் உயர் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் புதிய இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இத்தகைய கிளர்ச்சிகளில் வழக்கமாக நடப்பது போல ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், பஸ்கள், தபால்பெட்டிகள், அரசு அலுவலகங்கள், வாகனங்கள் முதலியன தீக்கிரையாக்கப்பட்டும் வருகின்றன. இதுவரை பீகாரில் மூவர் உயிரிழந்துள்ளனர். நம்நாட்டின் பெரு நகர்களிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மத்திய அரசு காலம் தாழ்த்தி வழங்கியுள்ள இடஒதுக்கீட்டின் சலுகையை எதிர்த்து எழுதி வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று எழுதியது.

ஆகஸ்ட் 24-ந் தேதியன்று டெல்லியில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க முயற்சித்தபோது போலீஸ் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர். தொடர்ந்து 27-ந்தேதி டெல்லியில் பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. டெல்லியிலும், ஒரிசாவிலும் இட ஒதுக்கீடு கிளர்ச்சியில் வன்முறையில் ஈடுபட்ட ஏழு பேர் மாண்டனர். பீகாரிலும் 9 பேர் மாண்டனர். இமாசலப் பிரதேசத்தில் 3 பேர் மாண்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் பலியானார்கள். அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் செப்டம்பர் 3-ந்தேதி டெல்லியில் நடைபெற்று அந்தக் கூட்டத்தில் அரசு நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இடஒதுக்கீட்டைக் கண்டித்து டெல்லியில் தேசபந்து குப்தா கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தீக்குளிக்க முயன்றனர். இவர்களில் ஒருவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு இடைக் காலத் தடை விதிக்கக்கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இடைக்காலத்தடை விதிக்கமுடியாது என்று 21-9-90-இல் தீர்ப்பு கூறப்பட்டது. "மண்டல் கமிஷனை எதிர்ப்பவர்களுடன் பேரம் பேசி அவர்களுக்குச் சலுகை காட்டுவதைவிட உரிமை பறிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட இன மக்களின் நலனைக் காப்பதற்காக உறுதியாக நின்று பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று வி.பி.

சிங் 26-9-90 அன்று தெரிவித்தார். தீக்குளிக்க விரும்பவில்லை என்று சொன்ன மாணவர்கள் மீது மற்றவர்கள் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. டெல்லியில் 7-வது வகுப்பு படித்து வந்த பிரவீண் கெளர் என்ற மாணவி, தான் தீக்குளிக்க விரும்பவில்லை என்று கூறியபிறகும், வேறு சில மாணவர்கள், அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்ததாக அந்த மாணவி மரண வாக்குமூலத்தில் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களிலும் மத்திய அரசு தொடர்புடைய நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற உரிமை வழங்கப் படுவதை எதிர்த்து நடத்தப்பட்ட நாடு தழுவிய உயர் வகுப்பார் கிளர்ச்சி கண்டு கொதித்துப் போன நான் அதேநேரம் செப்டம்பர் திங்களில் சென்னை கலைவாணர் அரங்கில் என் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் தலைமைக் கவிதையாக நான் பாடியது தணல் கவிதையாகவே ஆயிற்று.

மண்டல் குழு பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா! மனிதாபிமானி வி.பி. சிங்கிற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கும் திருவிழா! எனத் தொடங்கி; அறிவார் கல்வியில் அரசுப் பணிகளில் பதுக்கிய இடமெல்லாம் தம்மதே என்று வதக்கியே பிறரது வாழ்வினைப் பறித்த ஓர் பிரிவு மக்களிடம் போர் புரியத் தயங்கியதால் செதுக்கிய சிலைகளாய்ச் செயலற்றுக் கிடந்தோம் அன்று! நடக்கும் இருளை நகர்த்தும் பகல் போல் நாளும் வந்தது கோளும் தொலைந்தது!

ஒதுக்கியே தீர்வது ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என; எதிர்நீச்சல் போட்டு எழுந்து நின்றது; திராவிட இயக்கம்! தென்னக மயக்கம் தீர்க்க முனைந்தது! தேடக்கிடைக்காத தெள்ளமுதாய் தேமதுரக் கீத இசையாய் தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொரு தெவிட்டாத சுவை விருந்தாய் திக்கற்ற மக்களுக்கு திசை காட்டும் நிலவொளியாய் வாய்த்திட்ட நற்பேறு வாராது வந்த மாமணி வகுப்புவாரி விகிதாசாரம் - பிற்பட்டோர் வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம்!

வந்ததைத் தொலைப்போமோ? வஞ்சக வலைதனில் வீழ்வோமோ? வெந்ததைத் தின்று- வாயில் வந்ததை உளறும் மனிதர் தகுதி, திறமை என எழுதிப் பேசி; நயமாக நஞ்சைக் கலக்கின்றார், நாட்டு மக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார். "அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ?"

எனப் பாவேந்தன் கேட்டதைத்தான் நானும் கேட்கின்றேன்! ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் அவன், உயர்ஜாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள்ளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன? களிமண்ணா? சுண்ணாம்பா? கங்கையைப் போல் வடமொழியில் கவிதை தந்த வால்மீகி, வியாசனெல்லாம் பிரமதேவன் கால் பெற்ற பிள்ளைகளே! வள்ளுவன் யார்? கம்பன் யார்? இளங்கோவடிகள், ஒட்டக்கூத்தன் இவரெல்லாம் யார்?

யார்? பிரமன் தலையில் பிறந்ததில்லை இவர்கள்! ஆனாலும் தமிழ் மொழியின் இமயங்கள்! நாற்பத்து மூன்று ஆண்டுகளாய் நாம் பெற்ற சுதந்திரத்தில் தகுதிக்கும் திறமைக்கும் தரப்பட்ட வாய்ப்புகளால் கிழித்ததென்ன? தைத்ததென்ன? கிழித்துத் தைத்ததுதான் என்ன? என்ன? என்ன? எதற்காகத் திறமை அது தேவையா என்று - நாம் என்றுமே கேட்டதில்லை! ஆனால் ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை! அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றதென்ன நியாயம்?

தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன் தகுதி அவனுக்கேது எனச் சீறி - அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை தன்மான உணர்வுக்குச் சவாலன்றோ? கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக - இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும் - சுடுகாட்டில் அவர் கட்டை வேகும்! "என்ன இது; என்றைக்குமில்லாத வெப்பம் தலைமைக் கவிதையிலே?"

எனக் கேட்கத் தோன்றுகிறதா? பிறகென்ன? முதலுக்கே மோசம் வந்த பின்னர் முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ? ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனை கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டி விட எத்தனிக்கும் உலுத்தர்களைக் கண்டால் ஓடஓட விரட்டத்தான் வேண்டும்! ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்; ஆனது ஆகட்டுமே - இந்த ஆட்சிதான் போகட்டுமே! மகுடமின்றி வாழமுடியா மனிதர்களா நாம்? சிசுவாகப் பிறக்கும்போதே - சிம்மாசனத்துடனா பிறந்தோம்; சீதை வில்லுடன் பிறந்தது போல்?

கொற்றக் குடையா? கொள்கையா? எது வேண்டும் எனில்; கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பார் என்போம்! ஆட்சி; வரும்! போகும்! நிலையல்ல! அய்யா அண்ணா வகுத்த கொள்கை; போகாது! வாழும் நிலையாக! எனவே ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம் இனமானம் என்றுமே காப்போம் என்ற தலைமைக் கவிதையின் இந்தப் பகுதிகளைக் கேட்டு; "என்ன இது ஆட்சியில் இருந்து கொண்டு, இவ்வளவு ஆத்திரமாக ஒரு கவிதை?"

என்றனர். "ஆமாம்; அதைத்தான் கவிதையிலேயே சுட்டிக் காட்டியிருக்கிறேனே; ஆட்சி; வரும்; போகும்! அது பற்றிக் கவலை இல்லை" என்று பதில் அளித்தேன்.