நெஞ்சுக்கு நீதி
தெற்கும்-வடக்கும் · 302 / 391
தேர்தல் முடிவுகளில், தெற்கும்-வடக்கும் நா டாளுமன்றத்தின் 9-வது பொதுத்தேர்தலில் களம் புகும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை 26-10-89 அன்று வெளியிட்டேன். தோழமைக் கட்சிகளாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், முஸ்லீம் லீக், தமிழக முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளுடன் முரசொலிமாறன், எம்.பி., வைகோ, எம்.பி., செ.குப்புசாமி ஆகியோரைக் கொண்ட கழகக்குழு தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலே ஈடுபட்டது.
தி.மு. கழகச் சார்பில் போட்டியிட 29 தொகுதிகளும், ஜனதா தளக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு நாகர்கோவில், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதிகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப்பட்டினம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை, திருச்சி, திண்டுக்கல், தென்காசி ஆகிய நான்கு தொகுதிகளும் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் வேலூர் தொகுதியும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, குடியரசுக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி உட்பட 14 கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் இந்திரா காங்கிரஸ் 25 இடங்களிலும், அ.தி.மு.க. 11 இடங்களிலும், முஸ்லீம் லீக் (சமது) 1 தொகுதியிலும், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியிலுமாகப் போட்டியிட்டன.
இதற்கிடையில் சட்டப் பேரவையில் குறுகிய காலத் தொடர் கூட்டம் சில நாட்கள் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையில் வன்னியர் சங்கத்தினரால் நடைபெற்ற இட ஒதுக்கீடு கிளர்ச்சி காரணமாகவும், பின்னர் 1988-ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சியில் ஜனவரி 18-ந் தேதி அன்று நடைபெற்ற வன்னியர் ஆதிதிராவிடர் மோதலின் காரணமாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று நான் முன்னரே அறிவித்தவாறு அதற்கான அரசாணையைப் பிறப்பித்தேன்.
அதன் காரணமாக மொத்தம் 1077 வன்னியர்களும் 422 ஆதிதிராவிடர்களும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து வன்னியர் சங்கச் சார்பில் நடைபெற்ற கிளர்ச்சி என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, குறிப்பாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரி வன்னியர் சங்கத்தின் சார்பில் 17-9-1987 முதல் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதாகும்.
அதற்கு முன்பாக 15-ஆம் தேதியே சென்னை அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவையும் முப்பெரும் விழாவையும் நடத்திடக் கழகத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர். செப்டம்பர் 15ந்தேதியன்று சென்னை திரும்பக் கூடும் என்று நிதி அமைச்சராக இருந்த நாவலர் கூறி, அந்தச் செய்தி ஏடுகளில் வந்த காரணத்தினால், அந்த நாளில் கழக நிகழ்ச்சியை வைத்துக் கொண்டால் சரி வராது என்பதற்காக 16-9-1987 அன்று கழக விழாக்கள் நடைபெறுமென்று அறிவித்ததோடு, அதற்கேற்ப வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் விரைவாக ஊர் திரும்பிட வேண்டுமென்பதற்காக அன்றைய முப்பெரும் விழா நிகழ்ச்சிகளும் அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவும் விரைவாக முடிக்கப்பட்டன.
எனினும் வன்னியர் சங்கத்தினர் காலை 6 மணியிலிருந்து சாலை மறியலைத் தொடங்குவதாக அறிவித்- திருந்த நிலையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முன் கூட்டியே வன்னிய சங்கத்தினரைக் கைது செய்த காரணத்தினால் அவர்கள் நள்ளிரவு 12 மணிக்கே போராட்டத்தைத் தொடங்கி விட்டனர். அதைப் பற்றி காவல்துறை முன்னெச்சரிக்கை செய்யாததாலும், கழக விழாவிற்கு வந்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த கழகத்தினர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் நடந்த சாலை மறியலைத் தாண்டி தங்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்ப முடியாத அளவுக்கு போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது.
சென்னை முப்பெரும் விழா நிகழ்ச்சிக்காக வந்திருந்த மதுரை ஆதினகர்த்தர் அவர்கள் சாலைமறியல் போராட்டத்தின் காரணமாக தனது பயணத்தைத் தொடர முடியாமல் வளவனூர் என்ற கிராமத்தில் தங்க நேரிட்டது. சாலையிலே தங்கள் குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கான கழகத்தினர் குடிநீருக்குக் கூட வழியில்லாமல் காத்திருந்தனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஊரில் இல்லாத நிலையில், நிதி அமைச்சர் நாவலரோடு தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாத நிலையில், தமிழக ஆளுநரைத் தொடர்பு கொண்டு கழகத்தின் சார்பில் நிலைமைகள் விவரிக்கப்பட்டன.
17-ந் தேதியன்று ஒரு நாள் மட்டும் நான்கு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கோலியனூரில் 6 பேரும், பனையபுரத்தில் 2 பேரும், பாப்பனப் பட்டியில் ஒருவரும், சேந்தூரில் ஒருவருமாக 10 பேரும், வன்னியம்பாடி கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைப்புச் சம்பவத்தில் 3 பேருமாக 13 பேர் மாண்டனர். அந்தக் கிளர்ச்சியில் மொத்தம் 25க்கு மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் குடும்பங்களுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் குடும்ப நிதியும்; மாதாந்திர ஓய்வூதியமும் முறைப்படி வழங்கப்பட்டதை ஏற்கனவே வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். நிலைமை கட்டுக்கடங்காமல் போய், கழகத்தினர் ஊர் செல்ல முடியாமல் திண்டிவனம், விழுப்புரம் சாலையில் பல்லாயிரக்கணக்கில் பல மணி நேரம் காத்திருந்த நிலையில் 17ந்தேதி இரவு 9.30 மணி அளவில் காவல்துறை உயர் அதிகாரி ஸ்ரீபால், ஐ.பி.எஸ்., அவர்களோடு தொடர்பு கொண்டு, விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஊர் திரும்ப முடியாமல் நிறுத்தப்பட்டிருந்ததையும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவின்றி சாலைகளில் தவித்துக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறி, காவல்துறையினரை உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி அமைதியை நிலைநாட்டுகிறீர்களா அல்லது நானே அந்த இடத்திற்குச் செல்லட்டுமா என்று கேட்டேன்.
அன்று நள்ளிரவில் என் பயண ஏற்பாடும் தொடங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகுதான் காவல் துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு அங்கே சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கழகத்தினர் ஊர் திரும்புவதற்கான வழிவகையினைக் கண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அ.தி.மு.க. அரசு, முன்கூட்டியே அழைத்துப் பேசியிருந்தால் அந்தப் போராட்டமே நடைபெற்றிருக்காது. அப்போது நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத்தினர் மீதான வழக்குகளைத்தான் 1989-இல் கழக ஆட்சியில் திரும்பப் பெற்றோம்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் போது இறந்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும், அதுவும் கழக அரசு 1989-இல் பதவியேற்ற நாளிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 2-11-1989 அன்று அறிவித்தேன். அதைத் தொடர்ந்து அதே நாளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி கழகத்தின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டேன்.
தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பகுதிகளையும் இதிலே எடுத்துக் கூறியிருந்தோம். தி.மு.க., தேசிய முன்னணியில் அகில இந்திய அளவில் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் நமது அடிப்படைக் கொள்கையான கூட்டாட்சிக் கொள்கையை அது ஒப்புக் கொண்டிருக்கிறது என்றும்; அத்தகைய ஓர் அகில இந்திய அமைப்பின் மூலமே அந்தக் கொள்கையை நாடு தழுவும் அளவில் நிறைவேற்ற முடியும் என்றும் கழகத் தேர்தல் அறிக்கையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
தேர்தல் களத்தில் தேர்தல் நேரத்தில் இந்திரா காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்ட அந்த நேரத்திலும், 3-11-1989 அன்று சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவராக அப்போது விளங்கிய திரு. மூப்பனார் அவர்களின் இல்லத் திருமண நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிற பண்பாடு; பல மாநிலங்களில் இருந்து வருகிறது.
எனினும் நமது தமிழகம் மட்டும், அதில் விதிவிலக்காக இருப்பது, இன்றளவும் நீடிப்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும். 10-11-89 அன்று பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா நகரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. அணிக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போதுதான் இலங்கைப் பிரச்சினையில் தீர்வு காண முதல்வர் கருணாநிதி ஒத்துழைத்ததாகக் கூறி நன்றி தெரிவித்துப் பேசியதுமாகும். என்னைப் பொறுத்தவரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை நவம்பரில் முதல் வாரத்தில் தொடங்கி மூன்று வாரங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன். இடையில் நவம்பர் 11ந்தேதியன்று கழகத்தின் வீரவேங்கை, சுயமரியாதைச் சுடர், தென் ஆர்க்காடு மாவட்டத் தளகர்த்தர், அருமை நண்பர் எம்.ஆர்.
கிருஷ்ணமூர்த்தி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எனக்குக் கிடைத்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தென் ஆர்க்காடு சுற்றுப் பயணத்திலே என்னுடன் கலந்து கொண்டு எனக்கு விடை கொடுத்து தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்த அவரது திடீர் மறைவு என்னைப் பெரிதும் நிலைகுலையச் செய்தது. உடனடியாகக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை எம்.ஆர்.கே.
அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளக் கேட்டுக் கொண்டு என் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தேன். எம்.ஆர்.கே. அவர்களின் மறைவிற்கு அடுத்த வாரமே வட ஆர்க்காடு மாவட்டக் கழகத்தின் செயலாளராக அரும் பணியாற்றிய- அமைதியின் உருவமும் அரிமா நெஞ்சமும் படைத்த பாபு ஜனார்த்தனம் அவர்களையும் இழக்க நேரிட்டது! தொடர் சுற்றுப் பயணத்திற்கிடையே நவம்பர் 14-ந் தேதி பண்டித நேரு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை யொட்டி சென்னைக்குத் திரும்பினேன்.
அரசு சார்பில் எடுக்கப்பட்ட இந்த விழா வள்ளுவர் கோட்டத்தில் ஆளுநர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. அந்நாள் தலைமைச் செயலாளரும் இந்நாள் நான் இதை எழுதும் போது ஒரிசா ஆளுநராக இருப்பவருமான எம்.எம். ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். மராட்டிய மாநில முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், பெரியவர் செங்கல்வராயன், அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், ஆஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழா முடிவில் நான் எழுதிய சங்கத் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
நான் ஏற்கனவே எழுதியிருந்தவாறு; கழகம் இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்றதும், எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர் பலருக்கு நிழலாக இருந்தார் என்பதை நினைவூட்டும் வண்ணம் குடை போன்று வடிவமைத்து உருவாக்கத் திட்டமிட்டு; அவ்வாறே அந்த இடம் எழிலுற அமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா 15-11-1989 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தத் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அ.தி.மு.க.
வழக்கறிஞர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நினைவிடத்தைத் திறக்கக் கூடாதென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம் அவர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தைத் திறக்க தடை கிடையாதென்று, தீர்ப்பு கூறிவிட்டார். அதனடிப்படையில் 15-11-89 அன்று 33 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த 40 ஆண்டு கால நட்பின் சின்னம்தான் இந்த நினைவிடம் என்று அந்த விழாவில் பேசும்போது நான் குறிப்பிட்டேன். மேலும் அந்த விழாவிலே நான் பேசும்போது காந்தியடிகளுடைய கொள்கைகளை அண்ணா அவர்கள் விமர்சித்தவர் என்றாலும், காந்தியடிகளிடம் கொண்ட அன்பையோ மதிப்பையோ என்றைக்கும் அவர் குறைத்துக் கொண்டவரல்ல; அண்ணா அவர்கள் ஆட்சியில் இல்லாத நேரத்தில் வேலூரில் காந்தியடிகளின் சிலையைத் திறந்து வைக்க நகர்மன்றச் சார்பில் அழைத்த போது, அந்தச் சிலையைத் திறக்கக் கூடாது என்று ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்ததை மீறி அண்ணா, காந்தியடிகளின் சிலையைத் திறந்து வைத்த போது, கள்ளமார்க்கெட்காரர்கள், கொள்ளை இலாபக்காரர்கள் எல்லாம், காந்தியின் சிலையைத் திறந்து வைக்கும்போது இந்த அண்ணாதுரை என்ன பாவம் செய்தான் என்று கேட்டதையும், அதே போல தந்தை பெரியார் காந்தியடிகளுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுயமரியாதை இயக்கம் கண்டு, நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து, காந்தியடிகளைக் கடுமையாக விமர்சித்தபோதிலும், காந்தியடிகள் கொல்லப்பட்டவுடன் இந்தத் தேசத்திற்கு "காந்தி நாடு" என்று பெயர் வைக்க வேண்டுமென்று கூறியதையும் நினைவூட்டினேன்.
மூதறிஞர் ராஜாஜி மறைந்த போது தள்ளாத வயதிலே தந்தை பெரியார் கண்ணீர் விட்டு அழுததை எடுத்துக் கூறினேன். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரத்தில் பேரவைக்கு அருகிருந்த ஒரு மண்டபத்திலே அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது, நான் அவரை "சி.எம்."
என்று குறிப்பிட்ட நேரத்தில் அவர் என் வாயைப்பொத்தி, உங்களுக்கு நான் என்றைக்கும் எம்.ஜி.ஆர். தான், அப்படித்தான் நீங்கள் அழைக்க வேண்டுமென்று கூறியதையும் சுட்டிக்காட்டினேன். அவர் உடல்நலம் கெட்டிருந்த நேரத்தில் நான் தொடர்ந்து முரசொலியில் என் இனிய நண்பரே என்றழைத்து "உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்" என்று எழுதிய கடிதங்களையெல்லாம் அந்த நிகழ்ச்சியில் நினைவுபடுத்திப் பேசினேன்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தைத் திறந்து வைக்க அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து அந்த விழாவிலே பி.எச்.பாண்டியன் பேசும்போது, "அரசியலில் என்னதான் நல்லது செய்தாலும் அதைக் கொச்சைப்படுத்துகிற நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது என்றும், ஒரே ஒருவர் மட்டும் இந்த விழாவை எதிர்க்கிறார், அவருடைய பெயரைச் சொல்லக் கூட நான் விரும்பவில்லை, நான் சபாநாயகராக இருந்தவன் என்ற முறையில் சில உண்மைகள் எனக்குத் தெரியும், புரட்சித் தலைவரைப் பதவியிலிருந்து இறக்க மூன்று முறை முயற்சித்தார், அவரே இப்போது இந்த ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார், இப்படி ஒரு பிழைப்பு தேவையா?"
என்றும் பேசியது அன்றைக்கு எல்லா ஏடுகளிலும் இடம் பெற்றது. அன்று மாலையில் தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்திலே நடைபெற்றது. சிறந்த தமிழ்ப் படங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள
் வழங்கும் திட்டம் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டு இடையிலே சில ஆண்டுகள் நடைபெறாமல் நின்றிருந்தது, மீண்டும் தொடரும் என்று 89-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே நான் தெரிவித்ததற்கிணங்க 1988-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாதான் 15-11-1989 அன்று நடைபெற்றது. நீதிபதி திரு. எஸ். மோகன் அவர்கள் தலைமையிலே அமைக்கப்பட்ட குழு அந்தத் திரைப்படங்களையெல்லாம் பார்வையிட்டு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
அந்தப் பரிந்துரைகளை அப்படியே ஏற்று அதற்கான விழா வள்ளுவர் கோட்டத்தின் முகப்பிலே அமைக்கப்பட்ட அலங்காரப் பந்தலில் நடைபெற்றது. குறிப்பாக நான் அந்த ஆண்டுதான் அறிவித்திருந்த எம்.ஜி.ஆர். விருதினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களும் பெற்றனர். ராஜா சாண்டோ விருது இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு) அவர்களுக்கும், கலைவாணர் விருது வி.கே. ராமசாமி, மனோரமா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் விருது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கும், சிறந்த நடிகை விருது சரிதாவிற்கும், சிறப்புப் பரிசுக்கு உரிய சிறந்த நடிகர் விருது கார்த்திக்கிற்கும், சிறப்புப் பரிசுக்குரிய நடிகை விருது கலையரசி ராதிகாவிற்கும் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளைய ராஜா, வி.கே. ராமசாமி, மனோரமா, விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோர் உரையாற்றினர். விழா நிகழ்ச்சிகளையெல்லாம் கலைஞானி கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.
அந்த விழாவிலே உரையாற்றிய ரஜினிகாந்த், "நான் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என்ன காரணம் என்று யோசித்தபோது, நான் மதிக்கின்ற மாமனிதர் எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்த விருது, நான் நேசிக்கிற மிகப் பெரிய மனிதரான முதல்வர் கலைஞர் அவர்களுடைய கையால் பெறுகிறேன். இதற்கெல்லாம் முதல்வர் கலைஞர் அவர்கள் என் மேல் வைத்திருக்கின்ற அன்பு, பாசம் இவைதான் காரணம் என்று கருதுகிறேன்.
வரப் போகிற தேர்தலிலே கலைஞர் அவர்களுடைய கட்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டார். நடிகர் திலகம் சிவாஜி பேசும் போது, "எந்தவொரு அரசியல் தலைவரும் தாங்கள் பதவியிலே இருக்கும் பொழுது தங்களோடு எதிர்த்து நின்ற இன்னொரு அரசியல்வாதியின் பெயரிலே பரிசு கொடுத்ததில்லை என்பதுதான் சரித்திரம். ஆனால் அதற்கு மாறாக இன்று கலைஞர் செய்திருக்கிறார் என்பதும் ஒரு சரித்திரம். இந்தச் சரித்திரம் நீண்டுகொண்டே போகட்டும்.
கலைஞர் அவர்களே, நீங்கள் தமிழகக் கலைஞர்களைப் பாராட்டிப் பரிசளித்திருக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கலையுலகம் நன்றாக அறியும். உங்கள் ஆசையை நிறைவேற்றும், நீங்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தும். அருமைக் கலைஞர் அவர்களே, உங்களுடைய ஆட்சி ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து கலையுலகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.
நான் அந்த விழாவில் விருது பெற்றவர்கள் அனைவரையும் பாராட்டி, வாழ்த்தியதோடு, குறைந்த செலவில் தரமான தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக, 12 பிரதிகளுக்குக் குறையாமலும் 30 பிரதிகளுக்கு மேற்படாமலும் தயாரிக்கப்படும் தரமான தமிழ்ப் படங்களுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்க முடிவெடுத்திருக்கின்றது என்ற அறிவிப்பினைச் செய்தேன். அது 1996-க்குப் பிறகு மீண்டும் தி.மு.கழக ஆட்சி ஏற்பட்ட போது 5 லட்சம் ரூபாய் என்று உயர்த்தப் பட்டது.
தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த மூன்று விழாக்களையும் முடித்துக் கொண்டு மீண்டும் என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணத்தை 16-ந் தேதி முதல் தொடங்கி 22-ந் தேதி வரை விடிய விடிய நடத்தினேன். அப்பொழுதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கால நிர்ணயம் கிடையாது. 22-ந் தேதிதான் 221 நாடாளுமன்றத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ராஜீவ் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் உச்சகட்ட கலவரம் ஏற்பட்டு, ஜனதாதள வேட்பாளர் ராஜ்மோகன் காந்தி பயங்கரமாகத் தாக்கப்பட்டார்.
அங்கே தேர்தல் பணியிலே ஈடுபட்டிருந்த உத்தரப்பிரதேச ஜனதாதள தலைவர் சஞ்சய் சிங் காங்கிரசாரால் சுடப்பட்டார். அதைப்போலவே ஆந்திராவிலும் தெலுங்கு தேசத் தொண்டர் ஒருவரை காங்கிரஸ் வேட்பாளர் சுட்டுக் கொன்றார். தேர்தல் அதிகாரியே தேர்தல் கமிஷன் விதிமுறைகள் அமேதி தொகுதியில் மீறப்பட்டதாக அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் தேர்தல் நடைபெற்ற 525 நாடாளுமன்றத் தொகுதிகளில், தேசிய முன்னணி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் ஜனதா தளம் 141, பாரதீய ஜனதா சார்பில் 88, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 12, தெலுங்கு தேசம் 2, காங்கிரஸ் எஸ்.
1, என 276 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இந்திரா காங்கிரஸ் 192, அ.தி.மு.க. 11 மற்றும் தேசிய மாநாடு கட்சி 3, என 206 இடங்களிலும், இதரக் கட்சிகள், சுயேச்சைகள் என 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. தமிழகத்திலே ஒரு இடத்தைத் தவிர எஞ்சிய அனைத்து இடங்களிலும் இந்திரா காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது. தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசத்தை இந்திரா காங்கிரஸ் பெருமளவில் தோற்கடித்தது.
ஜனதா தளத்திற்கு ஆந்திராவில் 2 இடங்களும், கர்நாடகத்தில் ஒரு இடமும் மட்டுமே கிடைத்தது. மொத்தத்தில் வட இந்தியாவில் காங்கிரஸ் பலத்த தோல்வியைத் தழுவி, தென்னிந்தியாவில் நல்ல வெற்றியை ஈட்டியது. பெரும்பான்மையான மத்திய அமைச்சர்கள்- இந்திரா காங்கிரசைச் சேர்ந்தவர்கள்- பூடாசிங் உட்பட பலர் தோல்வியடைந்தனர். வி.பி.சிங் பதேபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இரண்டு அணிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காத நிலை.
எந்தக் கட்சி அமைச்சரவை அமைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 28-11-89 அன்று நடைபெற்ற தேசிய முன்னணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்குச் சென்றேன். டெல்லியில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள் தமிழகம் போன்ற தென் மாவட்டங்களின் தோல்விக்குக் காரணம் கேட்டபோது, காங்கிரசால்தான் மத்தியில் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற முழு நம்பிக்கை தென் மாநில மக்களுக்கு இருந்திருக்கிறது என்று கூறினேன்.
தேர்தலில் வெற்றி தோல்விகளை, ஒரு கட்சியின் ஒரு கொள்கை கோட்பாடு, அதன் தொலைநோக்குத் திட்டங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டு மக்கள் வாக்களிப்பது என்றில்லாமல்- தேர்தல் நேரத்து சூடான பிரச்சினைகளில் மட்டுமே தங்கள் மனதைப் பறிகொடுத்து வாக்களிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளதை தமிழக அரசியலை நெருங்கி உணர்ந்தவர்கள் நினைவிற் கொண்டேயுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அகில இந்திய அளவில் தேசிய முன்னணி தோன்றினாலும் கூட மத்தியில் காங்கிரசல்லாத ஓர் ஆட்சி இரண்டாவது முறையும் வருவதை குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள், சிறப்பாக தென்னகத்து மக்கள் விரும்பவில்லை.
1977-ல் பெரும் வெற்றி பெற்று மொரார்ஜி தலைமையில் மத்தியில் அமைந்த காங்கிரசல்லாத அரசு மக்களின் கேலிக்குள்ளாகிற திட்டங்களை அறிவித்தும், புதுவையைத் தமிழகத்துடன் இணைப்பது போன்ற மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் அறிவிப்புகளைச் செய்தும், ஆட்சியின் முக்கிய தலைவர்களே ஒற்றுமையின்றிச் செயல்பட்டும் சிதறிய நெல்லிக்காய் மூட்டை ஆயினர் என்பதைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தால், தமிழ்நாட்டு மக்கள், மத்தியில் மீண்டும் காங்கிரசே வரட்டுமென்று 1989-லும் முடிவு செய்துவிட்டனர். அந்தக் காற்றுத்தான் தென்னக மாநிலங்களில் வீசியது.
ஆனால் வட பகுதி மாநிலங்களில் வி.பி. சிங் போன்ற தலைவர்கள், தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் பெற்றிருந்த செல்வாக்கு காரணமாக; அந்தத் தனித்தனி செல்வாக்குகள் ஒன்றாக இணைந்து தேசிய முன்னணி ஓரளவு அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தது என்பதே உண்மையாகும். பிணக்கு தீர்ந்து பிரதமரானார் வி. பி. சிங் ஆட்சி அமைப்பதற்குரிய அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாத காரணத்தாலும் கூட்டணி அரசு அமைக்கிற விதமாக ஒத்துழைக்க வேறு கட்சிகள் காங்கிரசுடன் நெருங்கி வராமையினாலும் ராஜீவ் காந்தி அவர்கள், தனது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டு, இந்தியப் பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு, அவரது கட்சியினரால் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய முன்னணித் தலைவர்கள் கூட்டத்தில் மத்தியில் தேசிய முன்னணி அமைச்சரவை அமைப்பதென்றும், குடியரசுத் தலைவரைச் சந்தித்து அமைச்சரவை அமைக்கத் தங்களை அழைக்குமாறு கேட்டுக் கொள்வதென்றும் முடிவெடுக்கப் பட்டது. அரசு அமைத்திட தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்தன. அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தருவதாக முடிவெடுத்து அத்வானி அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை தேசிய முன்னணிக்கு அனுப்பி வைத்தது.
தேசிய முன்னணித் தலைவர்களையும் ஆதரவு தருவதாக உறுதியளித்த தலைவர்களையும் நானும், என்.டி. இராமராவ் அவர்களும், முரசொலி மாறனும், உபேந்திராவும் சென்று தனித்தனியே சந்தித்துப் பேசி, பிரதமர் பொறுப்புக்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்பது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். 30-11-89 அன்று நாங்கள் மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்களையும், அடுத்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் அவர்களையும் சந்தித்து உரையாடினோம்.
மத்தியில் தேசிய முன்னணி அரசு அமைந்திட முயற்சி மேற்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதை 1-12-89 தேதியிட்ட "தினமணி" ஏடு முதல் பக்கச் செய்தியாக; "பிரதமர் தேர்வு- கருணாநிதி சமரச முயற்சி - இந்தியப் பிரதமர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட வேண்டுமென்பது தொடர்பாக டெல்லியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன்தொடர்பாக சந்திர சேகர், வி.பி. சிங், தேவிலால் ஆகியோருடன் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார்" என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த 1-12-1989 அன்றையதினம் மாலையில் டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மது தண்டவதே அவர்கள் தலைமையில் தேசிய முன்னணியின் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தேசிய முன்னணியின் தலைவர்களும் இந்தியாவுக்கு யார் பிரதமர் என்பதைத் தீர்மானிப்பதற்காகக் கூடியிருந்தனர். பிரதமர் யார் என்பதில் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் தேவிலால் போன்றவர்களுக்குமிடையே சிறு பிணக்கு இருந்ததைத் தீர்த்து வைக்க நானும் ராமராவும் எடுத்த முயற்சிகளுக்கு அந்த நாளில்தான் நல்ல முடிவை எதிர்பார்த்தோம்.
அந்த நாள் இந்திய வரலாற்றில் மட்டுமல்ல; உலக வரலாற்றில் கூட ஒரு பெரும் பிணக்கைத் தீர்த்த நாள்தான்! போப் இரண்டாம் ஜான் பாலும், ரஷ்ய அதிபர் கோர்பசேவும் ரோம் நகரில் சந்தித்துப் பேசி; வாடிகனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே எழுபது ஆண்டுகளாக இருந்த பிணக்கு தீர்க்கப்பட்டதும் இந்த நாளில்தான்! தேசிய முன்னணியில் இருந்த பிணக்குகளை நன்குணர்ந்த வி.பி. சிங் அவர்கள் அந்தக் கூட்டத்தில் எழுந்து தலைமைப் பதவிக்கு - அதாவது பிரதமர் பதவிக்கு தேவிலால் அவர்களின் பெயரை முன் மொழிந்தார்.
அதை மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் வழி மொழிந்தார். வி.பி. சிங்தான் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தோர்க்குப் பெரும் ஏமாற்றம் - அந்த ஏமாற்றம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. காரணம்; உடனடியாக தேவிலால் அவர்கள் எழுந்து; "நான் இந்தக் குடும்பத்தில் மூத்த அண்ணனாக இருக்கவே விரும்புகிறேன். எனவே இந்தப் பொறுப்புக்கு வி.பி. சிங்கின் பெயரை முன் மொழிகிறேன்" என்றார்.
அதனை ஜனதாதளக் கட்சி பொதுச் செயலாளர் அஜித்சிங் வழி மொழிந்தார். வி.பி. சிங் அவர்களைப் பாராட்டி வாழ்த்திப் பேசும் கட்டம் வந்தது. அவரை வாழ்த்தி நான் மட்டும் பேசினால் போதுமென்று அனைவரும் வலியுறுத்தவே; நானும் அதனையேற்று- "சிலர் எதிர்பார்த்தது போல சிக்கலோ பிணக்குகளோ ஏதுமின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி.சிங் அவர்களை வாழ்த்துகிறேன். தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில்தான் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்; அது தேசிய முன்னணிக்குக் கிடைத்த வெற்றியெனக் கூறி மகிழ்ந்தோம். தேசிய முன்னணிக்கு தெற்கே ஆதரவில்லை எனச் சிலர் கூறுகிறார்கள். நானும், ராமராவும், ஹெக்டேயும், நாயனாரும் தென்னகப் பிரதிநிதிகளாகத்தான் இங்கேயிருந்து வாழ்த்துகிறோம். நாட்டு நலனுக்காக நாம் ஒன்று சேர்ந்தோம். தொடர்ந்து நாட்டுக்காகச் செயல்படுவோம்" என்று சுருக்கமாகவே வாழ்த்தினேன்.
பிரதமர் பொறுப்புக்கான நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் செய்தியாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியிலேயே தேசிய முன்னணி தொடக்க விழாவை சென்னையில் நடத்தி; அந்த முன்னணியின் ஆட்சி அமைகிற அளவுக்குப் பாடுபட்ட கருணாநிதி, என்.டி. ராமராவ், மற்ற தலைவர்கள் தனது நன்றிக்குரியவர்கள் என்று வி.பி. சிங் கூறினார். குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை ஜனாதிபதி மாளிகையில் நாங்களனைவரும் சந்தித்து; மறு நாள் 2-12-89 அன்று வி.பி.
சிங் பதவியேற்பது என்று உறுதி செய்தோம். அவ்வாறே அன்றையதினம் வி.பி. சிங் சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றார். துணைப் பிரதமராக தேவிலால் பதவியேற்றார். பிரதமர் பதவியேற்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் காங்கிரசிலே இருந்தவர். பெரிய இடங்களில் அமர்ந்திருப்போர் பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்வதையும், லஞ்சப்பணத்தை ரகசிய கணக்குகளில் குவிப்பதையும் எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறியவர் வி.பி.
சிங். எனவே, அக்கட்சியிலிருந்து வெளியேறிய நாளில் இருந்தே ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் முடிவு கட்டுவதே என் லட்சியம்; அத்தகைய லட்சியத்துடன் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவேன் என்று அவர் சூளுரைத்தார். 1950களில் ஆச்சார்ய வினோபா பாவே பூதான இயக்கம் நடத்திய போது வி.பி. சிங் தனது நிலங்களை வினோபாவிடம் தானமாகத் தந்தார். வினோபா மனம் நெகிழ்ந்து உங்களுக்கென்று கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு பாக்கியைத் தந்தால் போதும் என்று ஒரு பகுதி நிலத்தை வி.பி.
சிங்கிடமே திருப்பித் தந்தார். வினோபா திருப்பித் தந்த நிலத்தையும் வி.பி. சிங் தனது சொந்தத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டார். உத்தரப் பிரதேசத்து மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி, படிப்படியாக அரசியலில் அவர் உயர்ந்து கொண்டே போய் உத்திரப் பிரதேச முதல்வரானார். அப்போது உத்தரப் பிரதேசத்தில் கொ
ள்ளைக்காரர்களின் வன்முறை தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. கொள்ளைக் கூட்டத்தை அடியோடு ஒழிப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் வி.பி. சிங். வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது குடும்பமே கொள்ளையர்களின் வன்முறைக்கு இலக்கானது. வி.பி. சிங்கின் சகோதரர் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்களை என்னால் அடக்க முடியவில்லை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்து பதவியைத் துறந்தார்.
ஆனால் அவர் இந்திய மக்கள் அனைவரது உள்ளத்திலும் இடம்பெற்று 2-12-1989 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றார். 4-12-1989 அன்று சென்னையில் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூடியது. செயற்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே டெல்லியிலிருந்து அவசரச் செய்தி ஒன்று வந்தது. அது நாங்கள் மகிழத்தக்க செய்தியாக இருந்தது. அதாவது கழக அரசு 1989-இல் அமைந்த நாளிலிருந்து தமிழகத்தில் உணவு நிலை மோசமாக இருந்ததை எடுத்துக்கூறி மத்திய தொகுப்பிலிருந்து தரப்படும் அரிசியின் அளவைக் கூட்டித் தரவேண்டுமென்று இந்திரா காங்கிரஸ் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.
மாதந்தோறும் வழங்கப்படும் 40 ஆயிரம் டன் அரிசியின் அளவை அதிகப்படுத்தித் தர வேண்டுமென்று சட்டப்பேரவை உறுப்பினர் பி.எச். பாண்டியன் உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்தார். அதன்பிறகே வெறும் 10 ஆயிரம் டன் அரிசி மட்டும் கூடுதலாக அதுவும் ஒரேயொரு மாதத்திற்குத்தான் வழங்க முடியும் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து விட்டது. இந்தத் தகவலையும், தமிழகத்தின் அரிசிப் பற்றாக்குறையையும் 3-12-89 அன்று தமிழகம் வந்திருந்த புதிய துணைப் பிரதமர் தேவிலால் அவர்களை ராஜ்பவனில் நான் சந்தித்து விளக்கியதுடன், அந்த மாதத்திற்கு மத்திய அரசு வழங்கும் 40 ஆயிரம் டன் அரிசி நீங்கலாக மேலும் 50 ஆயிரம் டன் அரிசியை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்தக் கோரிக்கையை டெல்லி சென்றதும் உடனடியாக நிறைவேற்றி தமிழகத்திற்கு 90 ஆயிரம் டன் அரிசி அந்த மாதத்தில் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்து, அந்தத் தகவலைத்தான் செயற்குழு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அவசரச் செய்தியாக அவர் தெரிவித்திருந்தார். துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தேவிலால் அவர்கள் பிறப்பித்த முதல் ஆணையே தமிழகத்திற்குக் கூடுதலாக அரிசி வழங்குவதற்கான ஆணைதான். மத்திய அமைச்சரவையிலே தி.மு.கழகம் இடம் பெறுவது பற்றி முடிவெடுக்க எனக்கும் பொதுச் செயலாளருக்கும் செயற்குழு அதிகாரம் அளித்தது.
செயற்குழு எங்களுக்கு அதிகாரம் அளித்த அன்றையதினம் மாலையிலேயே வி.பி. சிங் அவர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்து விட்டது. உடனடியாக முரசொலி மாறனை டெல்லிக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். கழகம் தமிழகத்திலே வெற்றி பெறாத நிலையில் அதனை ஏற்றுக் கொள்ள முரசொலி மாறன் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் வி.பி. சிங் அவர்கள் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளித்தே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதன் காரணமாக 5-12-1989 அன்று டெல்லியில் பதவியேற்ற புதிய அமைச்சரவைப் பட்டியலில் முரசொலி மாறனும் இடம் பெற்றார்.
மற்றும் மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், அஜித் சிங், சரத் யாதவ், முப்தி மகமது சையத், அருண் நேரு, ஆரிப் முகமது கான், ராம்விலாஸ் பஸ்வான், நீலமணி ரவுத்திரே, ஐ.கே.குஜ்ரால், எம். எஸ். குருபாதசாமி, உபேந்திரா, உன்னி கிருஷ்ணன், தினேஷ் கோஸ்வாமி ஆகியோரும் அமைச்சரவை முதல் பட்டியலிலே இடம் பெற்றார்கள். இணை அமைச்சர்களாக மேனகா காந்தியும், மனுபாய்பட்டேல் கோட்டேடியாவும் இடம் பெற்றனர். பட்டியலில் காபினட் அமைச்சராக நாதுராம் மித்ராவும், இணை அமைச்சராக யஸ்வந்த் சின்காவும் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் 5-12-89 அன்று பதவியேற்கவில்லை.
அமைச்சரவையில் ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 பேரும், தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் இடம் பெற்றனர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற முரசொலிமாறன் பொறுப்பில் மத்திய பொதுப்பணித் துறை, அச்சகத் துறை, அரசினர் குடியிருப்புகள், தேசிய கட்டுமானப் பணி நிறுவனம், நில மேம்பாட்டுத் துறை, டெல்லி பெருநகர வளர்ச்சி ஆணையம், வீட்டு வசதி மற்றும் குடியிருப்பு போன்ற துறைகள் இடம் பெற்றன.
நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்றது தெரிந்ததே. ஆந்திரப் பிரதேசத்தில் என்.டி.ஆர். தலைமையிலான தெலுங்கு தேசம் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே, சட்டமன்றத் தேர்தலிலும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து, இந்திரா காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை- யான இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட என்.டி.ராமராவ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, மற்றொரு தொகுதியில் தோற்றுவிட்டார்.
இந்திரா காங்கிரஸ் சட்டப் பேரவைக்கட்சித் தலைவராக திரு. சென்னாரெட்டி 1-12-89 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி அமைத்தார். கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்து, இந்திரா காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களிலே வெற்றி பெற்று, என்னுடைய நீண்டநாள் நண்பர் வீரேந்திர பட்டீல் தலைமையிலே ஆட்சி அமைந்தது. உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் யார் முதல்வர் என்பதில் கடும் போட்டி நிலவியது.
முலாயம் சிங் யாதவ் அவர்களும், அஜித்சிங் அவர்களும் பிடிவாதமாக இருந்த நிலையில் மது தண்டவதே, முப்தி மகமது சையத், சிமன்பாய் படேல் ஆகியோர் முன்னிலையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று, முலாயம் சிங் யாதவ் சட்டப் பேரவை ஜனதா தளத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5-12-89 அன்று உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து திடீரென்று 30-12-89 அன்று விலகிக் கொண்டு அந்தப் பதவியிலே அந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த திருநாவுக்கரசையோ, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனையோ நியமிக்காமல் எஸ்ஆர்.
ராதாவைத் தேர்ந்தெடுத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலகிக் கொண்ட போதிலும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலே தொடர்ந்து நீடித்தார். அகாலி தள (மான் பிரிவு) தலைவரும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிம்ரஞ்சித் சிங் மான் 2-12-89 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது இந்திரா காந்தி கொலை சதி வழக்கு உட்பட எல்லா வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, பாகல்பூர் மத்திய சிறையிலிருந்து அவரும், வேறு நான்கு பேரும் விடுதலையானார்கள்.
1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சிறை வைக்கப்பட்டிருந்த மான் 2-12-89 அன்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அரசு வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். அதனையேற்றுக் கொண்டு நீதிபதி அவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார். அதைப் போலவே, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு நிதம்பூர் ஓய்வு விடுதியில் காவலில் வைக்கப்பட்டிருந்த சிரோமணி குருத்வார பிரபந்தக் கமிட்டித் தலைவர் ஜி.எஸ்.
தோரா அவர்களும் 2-12-89 அன்று விடுவிக்கப்பட்டார். முன்னாள் பஞ்சாப் முதல்வரும், ஐக்கிய அகாலி தள (பாதல்) தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் அவர்களும் டேராடூன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில் 1-12-1989 அன்று அதிபர் திருமதி அகீனோவின் அரசைக் கவிழ்க்க ராணுவப் புரட்சி நடத்திட செய்த முயற்சியை அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் அரசுப் படையினர் முறியடித்தனர். அகீனோவின் வேண்டுகோளுக்கிணங்க அரசுப் படைகளுக்கு உதவ அமெரிக்க ராணுவம் வந்தது.
அந்த நாட்டின் தலைநகர் மணிலாவில் கலகப் படையினருக்கும் அரசுப் படையினருக்கும் கடுமையான சண்டைகள் நடந்து, பின்னர் கலகப் படையினர் ஒடுக்கப்பட்டனர். அதிபர் மாளிகை மீதே கலகப் படையினர் விமானம் மூலம் குண்டுகளை வீசியபோதிலும் அகீனோ உயிர் தப்பினார். திருமதி அகீனோவிற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்தது. உடனடியாகக் கலகப் படையினர் ஒடுக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலே ஆங்காங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
1986-ஆம் ஆண்டு சர்வாதிகாரி மார்க்கோஸ் செய்த தேர்தல் தில்லு முல்லுகளை எதிர்த்து பல லட்சம் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் திருமதி அகீனோ ஆட்சிக்கு வந்தார். ஆனால் அகீனோவை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று மார்க்கோசின் கும்பல் கலகம் விளைவித்த காரணத்தால் அகீனோ; நாட்டில் நெருக்கடி நிலையை அமல் செய்தார். அவரைப் பொறுத்தவரையில் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கலவரம் ஆறாவது முயற்சியாகும்.
1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்தாவது அதிரடிப் புரட்சியை நடத்திய கர்னல் கிரிகாரியோ உசைன் அப்பொழுது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1989-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டார். அவர்தான் இந்த ஆறாவது புரட்சிக்கும் காரணம் என்று ஒரு தரப்பினரும், மார்க்கோசிடம் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் பேபியன் வெர் என்பவர்தான் காரணம் என்று மற்றொரு தரப்பினரும் கூறினார்கள்.
ஒரு வார காலத்திற்கு இந்தப் புரட்சி தொடர்ந்த போதிலும் பின்னர் எதுவும் செய்ய முடியாமல் கலகப்படையினர் அடங்கிவிட்டனர். பல்லாண்டு காலமாக கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் பிரித்து வந்த பெர்லின் சுவரை இடிக்கும் பணி 1989-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. கம்யூனிச நாடான கிழக்கு ஜெர்மனியிலிருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேற்கு ஜெர்மனிக்குச் சென்றனர். கிழக்கு ஜெர்மனியின் முன்னாள் அதிபரான எரிச்ஹொனேக்கர் டிசம்பர் திங்கள் முதல் வாரத்தில் திடீரெனக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அவரது ஆட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற ஆட்சிக் காலத்தில் பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்து லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள் என்று கூறி, அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று பொதுமக்கள் உறுதியுடன் கிளர்ச்சி நடத்தியதையடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுக் காலமாக கிழக்கு ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வந்த இவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்தது பலூன் போல வெடித்த பிறகு பொதுமக்கள் கிளர்ந்து எழுந்தனர்.
கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுவும், பொலிட் பீரோவும் கூண்டோடு பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 26 பேர் கொண்ட தற்காலிகக் குழு ஒன்று இவர்களிடமிருந்து அதிகாரத்தை மேற்கொண்டது. இவர்கள் மீது நடக்கும் விசாரணையில் ஒத்துழைத்து ஆதாரங்களைக் கொடுத்து உதவுமாறு இந்த ஆட்சிக் குழு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆதாரங்களை அகற்றிச் சென்று அழித்துவிடாமல் கண்காணித்து வருமாறு எல்லா அரசாங்க அலுவலகங்களுக்கும் புதிய பிரதமர் ஹேன்ஸ் மேட்ரா ஆணை பிறப்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்ற மற்றொரு நாடான செக்கோஸ்லோவியாவிலும் அந்த ஆட்சிக்கு மாணவர்களே முடிவு கண்டனர். 1939-ஆம் ஆண்டு நாஜிகளால் கொல்லப்பட்ட மாணவர்கள் நினைவாக செக்கோஸ்லோவிய மாணவர்கள் நடத்திய அமைதி ஊர்வலம் ஒன்றின் மீது அந்த நாட்டுப் போலீசார் மிருகத்தனமாகத் தாக்கியதையடுத்து மாணவர் சமூகம் கொதித்தெழுந்தது. மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்தக் கிளர்ச்சியே அந்த நாட்டில் நடந்த அமைதிப் புரட்சிக்குத் தொடக்கமாக அமைந்தது. கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசு அங்கே உருவாவதற்கு வழி வகுத்துக் கொடுத்தது. அதன் விளைவாக பிராகாவின் பழைய நகர் பகுதியில் இருந்த நாடகக் கலை அகாடெமி, மாணவர்களின் புரட்சிக்கான தலைமையிடமாக மாறியது. தொடங்கப்பட்ட 72 மணி நேரத்தில் இந்தக் கிளர்ச்சி மின்னல் வேகத்தில் மக்களிடம் பரவியது. அவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல வீதியிலே இறங்கி விட்டனர்.
இடைநிலைப் பள்ளிச் சிறுவர்கள் கூட இந்தக் கிளர்ச்சியில் மும்முரமாக ஈடுபட்ட செயல் மற்றவர்களின் ஆதரவையும் பெற உதவியது. மாணவர்களுக்கு உணவு விடுதிகள் இலவசமாகவே உணவு வழங்கின. ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட தங்கள் வீடுகளில் தயாரித்த உணவுப் பொருட்களை வழங்கிட முன்வந்தனர். நாட்டின் பல பகுதிகளுக்கும் தொலைபேசியில் தகவல் தந்ததன் விளைவாகப் போராட்டம் பல பகுதிகளுக்கும் காட்டுத் தீ போலப் பரவியது. மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் அந்த நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு அப்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
