உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இராஜராஜ சோழன் விருது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இராஜராஜ சோழன் விருது · 301 / 391

இராஜராஜ சோழன் விருது -ஆம் ஆண்டின் உலகச் சிறப்புகளில் இடம்பெறத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றை கர்னல் பஜாஜ் என்ற ஓர் இந்தியரும், மற்றொன்றை கலிபோர்னியாவைச் சேர்ந்த விக்டோரியா மார்டன் என்ற ஒரு யுவதியும் நடத்திக்காட்டினர். கர்னல் பஜாஜ் உலகின் தென்முனையான அண்டார்டிகாவை நடந்தே சென்று அடைந்தார். இத்தகைய கால்நடைப் பயணம் மேற்கொண்டு தென் முனையை அடைந்தவர்கள் உலகத்தில் 22 பேர்; அவர்களில் ஒருவர்தான் பஜாஜ் எனும் இந்தியர்.

அதே அண்டார்டிகா வரையில் 1200 கிலோ மீட்டர் தொலைவு பனித் தரையில் சறுக்கிக் கொண்டு விக்டோரியா மார்டனும் அந்தப் பெண்மணியின் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினரும்; அந்த நெடுந்தூரத்தைக் கடந்து சென்று இதுவரை எவருடைய காலடித் தடமும் படாத பாதையில் வெற்றி முகட்டை எட்டியதும் அந்த ஆண்டின் சிறப்புக்குரிய செய்தியாகும். இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 81வது பிறந்தநாள் கழக அமைப்புகளின் சார்பாகக் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி என் தலைமையிலான கழக அரசும் பங்கேற்றது என்பதற்கு அடையாளமாக அண்ணா பிறந்தநாளையொட்டி; ஆயுள் தண்டனை பெற்ற 285 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அந்தக் கைதிகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அவர்களை விடுதலை செய்த நிகழ்ச்சியாகும் அது. அந்தப் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு அண்ணா விருது வழங்கும் விழாவும், கழகத்தின் சார்பில் முப்பெரும் விழாவும் கொண்டாடப்பட்டது. கழக விழாவில், பெரியார் விருது: காரைக்குடி ராம சுப்பையா அவர்களுக்கும், அண்ணா விருது: புலவர் கோவிந்தன் அவர்களுக்கும், கலைஞர் விருது: இசைமுரசு நாகூர் அனீபா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தை அடுத்து வேளாண்மையில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்ற முனைப்புடன் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட ஒரு வேளாண்மைப் பள்ளி சென்னை சைதாப் பேட்டையில் நிறுவப்பட்டது. 1883-ஆம் ஆண்டு இந்திய கால்நடைக் கொள்ளை நோய் ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி சென்னை வேப்பேரியில் தனியாக ஒரு கால்நடை மருத்துவப் பள்ளி 1903-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வேளாண்மைப் பள்ளி 1905-ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.

இங்கிலாந்திலுள்ள அரசினர் கால்நடை மருத்துவக் கல்லூரியிலுள்ள டாக்டர் மேஜர்கன் என்னும் கால்நடை மருத்துவ நிபுணர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரியை நிறுவியிருந்தார். சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரியை நிறுவும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஜி.எம்.வி.சி. பட்டப் படிப்பு வகுப்பிற்கு 20 மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள அரசினர் கால்நடை மருத்துவக் கல்லூரியின் தகுதிக்கு ஈடாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி 1-10-1903-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் உயர்தரக் கல்வி அங்கீகரிக்கப்பட்டு சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பெற்றது. இவ்வாறு இந்தியாவிலேயே பி.வி.எஸ்ஸி. என்னும் பட்டப் படிப்பை வழங்கும் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரியாகச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விளங்கியது. இத்தகைய புகழுக்குரிய சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி இருந்த இடத்திலே ஆசியாவிலேயே முதல் கால்நடைப் பல்கலைக் கழகம் தி.மு.கழக ஆட்சியிலே அறிவிக்கப்பட்டு, தொடக்க விழா 20-9-89 அன்று நடைபெற்றது.

அதற்காக 2 கோடியே 56 இலட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடமும் கழக ஆட்சியிலே அமைக்கப்பட்டு 1998-ஆம் ஆண்டு என்னால் திறந்து வைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மூன்றாவது முறை பொறுப்பேற்றபோது எப்படி முதன் முதலாக கால்நடைப் பல்கலைக் கழகத்தைத் துவக்கினோமோ, அதைப் போலத்தான் நான் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற காலத்திலே கோவையிலே வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைத் துவக்கினேன். அந்தப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்குக் காரணமே 1969-ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம் நாள் நான் மேற்கொண்ட பஞ்சாப் மாநிலப் பயணம் தான்.

அதைப்பற்றி விரிவாக நெஞ்சுக்கு நீதி இரண்டாவது பாகத்தில் எழுதியிருக்கிறேன். அந்தப் பயணத்தின்போது ஒரு நாள் பஞ்சாப்பில் உள்ள தொழில் நகரமான லூதியானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கேயுள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மனையியல் கல்லூரி கட்டடத்தை நான்தான் அப்போது திறந்து வைத்தேன். அந்த விவசாயப் பல்கலைக் கழகத்தை நான் பார்வையிட்டதன் விளைவுதான் தமிழகத்திலே கோவையில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் தொடங்கப்படுவதற்கான முதல் காரணமாகும்.

இந்தியத் திருநாட்டு விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட மறைந்த கவிஞர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவருக்கு மாதம் 100 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கிட 1970- ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஆணை பிறப்பித்திருந்தேன். அவர் மறையும் வரையில் அந்த ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். 1989-இல் மீண்டும் கழக அரசு ஏற்பட்ட போது நெல்லையப்பரின் மகள் 60 வயதான திருமதி பூங்கோதை அம்மாள் தனது கணவர் 68 வயதான நிலையில் கண்பார்வை இழந்து வாத நோய் ஏற்பட்டு மிகுந்த நலிவுற்ற நிலையில் இருப்பதாகவும், தனது தந்தையாருக்கு அளித்ததைப் போலவே தனக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை மனு ஒன்றினை என்னிடம் அளித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்டு, அந்த அம்மையாரின் ஆயுட்காலம் வரை மாதம் 500 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்க அக்டோபர் 89- இல் ஆணையிட்டேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் தமிழில் சிறந்த படைப்பிலக்கியங்களை எழுதுபவர்களுக்கு "இராஜ ராஜன்" விருதினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் 1989-ஆம் ஆண்டு நான் எழுதிய வரலாற்றுப் புதினமான "தென் பாண்டிச் சிங்கம்" சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

விருது தேர்வுக் குழு உறுப்பினர்களான தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ச. அகத்தியலிங்கம், பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ். முத்துக் குமரன், அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு, நீதிபதி ஜனார்த்தனம், அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநர் கோ. செல்வம், அவ்வை நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா 25-5-1990 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழக ஆளுநராக அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பதவியேற்ற சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தலைமையிலே நடைபெற்றது.

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக அப்போது இருந்தவரும், ஆற்றல் வாய்ந்தவரும், அரசியலில் நேர்மையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருபவரும், சரியென்று தனக்குப்பட்டதை யார் எதிர்த்த போதிலும் தயங்காமல் எடுத்துக் கூறுகின்ற துணிவு பெற்றவரும், ஆங்கிலத்தில் தலைசிறந்த புலமை பெற்றவருமான திரு. சங்கர் தயாள் சர்மா அவர்கள் அந்த விழாவிலே கலந்து கொண்டு இராஜராஜன் விருதினையும், படைப்பிலக்கியப் பரிசாக ஒரு இலட்சம் ரூபாயையும், முத்தமிழ் அறிஞர் என்ற சிறப்பினையும் எனக்கு வழங்கினார்.

கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, இந்திரா காந்தி பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி, அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருமதி இராதா தியாகராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குடியரசுத் துணைத் தலைவர் திருமிகு சங்கர் தயாள் சர்மா அவர்கள் என்னைப் பாராட்டி அந்த விழாவிலே பேசும்போது, "இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மனிதர்களான அண்ணா அவர்களையும், காமராஜர் அவர்களையும் முதலமைச்சர்களாகப் பெற்ற பெருமையும் அதிர்ஷ்டமும் இந்த மாநிலத்திற்கு உண்டு.

தமிழகத்தின் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர், எழுத்துலக அறிஞர். அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார், நாடகங்கள் தீட்டியிருக்கிறார். அவரது உரைநடையும் சொல்லாட்சித் திறனும் எண்ணற்ற மக்களுக்கு கருத்துக்களை எடுத்துச் சொல்லும் கருவி என்பதை அனைவரும் அறிவீர். மிகச் சிறந்த நாடகக் கதாசிரியராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, பெரும் புகழ் பெற்றிருக்கின்ற டாக்டர் கருணாநிதி அவர்கள் வரலாற்றுப் புதினங்களைப் படைத்திருக்கிறார்.

அவர் தமிழ் இலக்கியத்தின் சிரஞ்சீவி. இன்றைய விருதுக்குரிய அவரது படைப்பான "தென்பாண்டிச் சிங்கம்" தென் தமிழ்நாட்டின் தமிழர்கள் போற்றும் வீரத்தையும் மானத்தையும் கற்பையும் ஒழுக்கத்தையும் போற்றிவந்ததை விவரிக்கும் நூலாகும். கருணாநிதியின் இன்னொரு வரலாற்றுப் புதினமான ரோமாபுரிப் பாண்டியன், ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் இடையிலே நிலவிய வணிக, கலாச்சார வரலாற்றுத் தொடர்புகளைப் பின்னணியாகக் கொண்ட நூலாகும்.

மற்றொரு நூலான பொன்னர் சங்கர் தமிழ்நாட்டில் சேலம், பெரியார் மாவட்டப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நிலவிய மரபுகளையும் கலாச்சாரங்களையும் விவரிப்பதாகும். உரைநடை, கவிதை, நுண்ணிய கலைகள், நாடகத் துறை அனைத்திலும் சிறந்து விளங்கும் கலைஞர் கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று பட்டம் சூட்டி அழைக்கலாம். மிகச் சிறந்த அரசனும், தேர்ந்த அறிவாளனுமான இராஜ ராஜ சோழன் விருது கருணாநிதி அவர்களுக்கு வழங்குவது மிகவும் பொருத்தமாகும்" என்று உணர்ச்சி மிக்கதோர் உரையாற்றினார்.

உரையாற்றியதோடு மட்டுமல்லாது, தனது உரையை அவர் முடிக்கையில் "இந்த அற்புதமான நாவலை வழங்கிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு ஒரு பரிசினை என் சார்பில் வழங்கிட விரும்புகிறேன்" என்று கூறி அன்பின் அடையாளமாக அழகிய பேனா ஒன்றை வழங்கினார்.

நான் நன்றி கூறிப் பேசும்போது; "இங்கே வழங்கப்பட்ட விருதுடன் ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கான காசோலை ஒன்று என்னிடத்திலே தரப்பட்டிருக்கின்றது. அந்தக் காசோலை தமிழுக்கே பயன்பட வேண்டுமென்று நான் கருதுகின்றேன். என்னைப் பெரியாரின் கைகளிலே ஒப்படைத்து பேரறிஞர் அண்ணாவின் நிழலிலே வளரச் செய்து, உங்களையெல்லாம் என்னுடைய உடன்பிறப்புகளாக ஆக்கிய பெருமைக்குரியவர்கள் என்னுடைய தாய் அஞ்சுகம் அம்மையாரும், தந்தை முத்து வேலரும் ஆவர்.

எனவே அவர்கள் நினைவாக இந்தத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 'அன்னை அஞ்சுகம் முத்துவேலர் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று துணை வேந்தரையும், இணை வேந்தரையும் கேட்டுக் கொண்டு இந்த ஒரு லட்சத்து ஒரு ரூபாயையும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குத் திரும்ப அளிக்கிறேன். இந்தத் தொகையைக் கொண்டு அதன் மூலம் கிடைக்கின்ற வட்டியைக் கொண்டு, அரிய இலக்கியங்களைப் படைத்துப் புகழ்பெற்ற டாக்டர் கால்டு வெல், மறைமலை அடிகளார், ந.மு.

வேங்கடசாமி நாட்டார், கா.சு.பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோரின் படைப்புகள் தொடர்பாக ஆய்வுரைகள் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட வேண்டுமென்றும், அந்த ஆய்வுரைகள் ஆண்டுதோறும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று என் விருப்பத்தை வெளியிட்டேன்.

என்னுடைய நீண்ட நாள் நண்பர்களில் ஒருவராக இருந்தவரும், மிகப் பெரிய சுயமரியாதை வீரரும், சிறந்த கவிஞரும், என்னோடு இணைந்து தந்தை பெரியார் அவர்களின் ஈரோடு அலுவலகத்தில் பணியாற்றியவருமான கவிஞர் கருணானந்தம் அவர்கள் நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்து 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 28-ந்தேதி மறைந்து விட்டார் என்ற செய்தி கடலூர் சுற்றுப் பயணத்தில் இருந்த எனக்குக் கிடைத்தது. கலைஞானி கமலஹாசன் நடித்து வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் வெள்ளி விழாவும் அதில் பங்கேற்ற நடிகர், நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் 15-10-89 அன்று வள்ளுவர் கோட்டத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி, ஆந்திர நடிகர் நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் கேரள நடிகர் மது ஆகியோர் கலந்து கொண்டனர். "அபூர்வ சகோதரர்கள்" படம் வெளியிடுவதற்கு முன்பே கமலஹாசன் என்னை அழைத்து அந்தப் படத்தினைத் திரையிட்டுக் காட்டினார். அப்பொழுதே நான் அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற என் நம்பிக்கையைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வெள்ளி விழாவில் அந்தப் படத்திலே பங்கேற்ற கலைஞர்களுக்கெல்லாம் பரிசுகளை வழங்கி பாராட்டி உரையாற்றினேன்.

அந்த விழாவில் நடிகர் கமலஹாசன் 50 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார். 19-10-1989 அன்று நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் அவர்கள் உத்தமர் காந்தி அடிகளுடைய அறவழிப்பாதையைத் தன்னுடைய பாதையாக ஏற்றுக் கொண்டு, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வீரர்களை உசுப்பி விடவும், களத்தில் நின்ற தளபதிகளை ஊக்கப்படுத்தவும், அவருடைய பாடல்களை முரசுகளாக ஆக்கியவர்.

அத்தகைய முரசு முழக்கத்தால் கவிச் சக்கரவர்த்தி பாரதியாருடைய பாராட்டையும் பெற்று தமிழ்நாட்டு விடுதலை வீரர்கள் அத்தனை பேருடைய வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் உரியவராகத் திகழ்ந்தவர். அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகச் சிறைப்பட்ட நேரத்திலே சிறையிலிருந்து எழுதிய புதினம்தான்மலைக்கள்ளன். அந்த மலைக் கள்ளன் படத்திற்கு கோவை பட்சி ராஜா ஸ்டுடியோவைச் சேர்ந்த நண்பர் ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள் தயாரிப்பாளராக இருந்து, அதனைத் தயாரித்தபோது அதற்கு திரைக்கதை வசனம் எழுது கின்ற பொறுப்பு என்னிடத்திலே ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல்லாருடைய கதை- என்னுடைய வசனம்- அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகன் மூன்றும் இணைந்து அந்தப் படம் உருவாயிற்று. ஸ்ரீராமுலு நாயுடு என்னைச் சந்தித்து இதற்கு வசனம் எழுத வேண்டும் என்று கேட்டபோது, "நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை காங்கிரஸ் கவிஞராயிற்றே; கதைக்குரிய அவரிடம் நான் வசனம் எழுதலாமா என்று கேளுங்க" என்றேன். கதைக்கு உரியவர் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார், நீங்கள்தான் எழுத வேண்டுமென்று சொன்ன பிறகு, மலைக்கள்ளன் படத்திற்கு நான் உரையாடல் எழுதினேன்.

அந்தப் படம் தென்னகத்திலே மாத்திரமில்லாமல் வடபுலத்திலே உள்ள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு திரையுலகத்திலே ஒரு பெரும் புரட்சியை உருவாக்கியது. 69-ஆம் ஆண்டில் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு நான் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில்- நாமக்கல்லார், பல தொல்லைகளுக்கு குடும்பத்தோடு ஆளாகியிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அரசின் சார்பில் மாதந்தோறும் ஒரு மானியத் தொகை அவருக்கு அனுப்புவது என்று தீர்மானித்து அதையும் 1967 முதல் முன்தேதியிட்டு வழங்க ஆணை பிறப்பித்தேன்.

அவர் மறைவதற்கு முன்பு என்னைப் பற

்றி அவர் கைப்பட எழுதிய கவிதை ஒன்றினை அவருடைய மருமகன் அனுமந்தன் அவரது மறைவிற்குப் பிறகு கொண்டு வந்து தந்தார். அது வருமாறு:- "இணையேதுமில்லா இலக்கணச் சிறப்பும் ஈடெங்கு மில்லா இலக்கியம் குறளும் அன்பும் பண்பும் அறமும் புகட்டும் கதைகள் நிறைந்த காவியம் பலவும் உடையது என்று உயர்ந்தோர் போற்றக் கணக்கிட முடியா காலம் வாழ்ந்தும் கன்னித் தமிழ் என இன்னும் திகழும் என்றும் உள்ளநம் தென்றமிழ் அதனில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாளில் கற்றவர் நடத்திய கவியரங் கங்களில் தலைமை தாங்கித் தலைவர் உரையெனக் கலைஞர் டாக்டர் கருணா நிதியவர் உரைத்த கவிகளின் தொகுப்பை ஊன்றிப் படித்து மகிழ்ந்து பாராட்டு கின்றேன் கனியின் ரசமும் தேனும் கலந்துள இன்சுவை போன்ற இனிய கருத்துடன் நடுவில் பலமுறை நகைச்சுவை கூட்டி குற்றம் கடியும் கொள்கை துலங்க இடையிடையே அதை இடித்துக் கூறிக் கசப் பில்லாமல் கண்டனம் செய்யும் காட்சிகள் சிலவும் காணத் தக்கதாய் பதங்களைப் பிரித்துப் பொருளை மாற்றும் வித்தையும் ஆங்காங்கு விரவியதாகக் கல்வி யறிவும் கற்பனைத் திறனும் நிரம்பிய தென்று நிச்சயம் மதிக்கலாம் கலைஞரெனப் புகழ் பெற்றக் கருணாநிதியார் கவிஞ ரென்றும் புகழ் பெறக் கண்டு மகிழ்வோம்.

கலைத் திறனோடு கவித் திறன் பெருகிச் சீரும் சிறப்பும் செல்வமும் செழிக்கப் பல்லாண்டு வாழப் பரமனைப் பணிந்து மனமார வாழ்த்தி மங்கலம் பாடுவோம்" என்று எழுதியிருந்தார். அப்படிப்பட்ட தமிழ்க் கவிஞர், நாமக்கல்லாரின் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நான் அவருக்கும் எனக்குமிருந்த நீண்ட நாள் தொடர்புகளைப் பற்றியெல்லாம் விளக்கியதோடு தலைமைச் செயலகத்திலே கழக ஆட்சியிலே கட்டப் பட்டு, அதுவரை பெயர் வைக்கப்படாமல் இருந்த பத்து மாடிக் கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து அவ்வாறே சூட்டப்பட்டு இன்றைக்கும் தலைமைச் செயலகத்திலே அந்தக் கட்டிடம் வானுயர நின்று கொண்டிருக்கின்றது.

17-10-1989 அன்று இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் திரு. ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி ஒன்பதாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 22 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவித்தார். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, கர்நாடகம், உ.பி., சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்கள். அதன் காரணமாக; காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் ராஜீவ் காந்தி கோலாலம்பூர் புறப்படுவதாக இருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் பற்றி விவாதிக்க தேசிய முன்னணியின் தலைமைக் குழுக் கூட்டம் 20-10-1989 அன்று காலையில் புதுடெல்லியில் ஆந்திர பவனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், வி.பி. சிங், அரியானா முதல்வர் தேவிலால், அஸ்ஸாம் முதல்வர் மொகந்தா, எஸ். உன்னிகிருஷ்ணன், பிஜு பட்நாயக், அஜித் சிங், முரசொலி மாறன், எம்.பி., பி. உபேந்திரா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, டாக்டர் கலாநிதி, மப்டி மகமது சையத், ராம கிருஷ்ண ஹெக்டே, சந்திரபாபு நாயுடு, ஜெயபால் ரெட்டி, ஆரிப் மகமது கான், சத்தியநாராயண ரெட்டி, மாதவ ரெட்டி, ஐ.கே.குஜ்ரால், தினேஷ் கோஸ்வாமி ஆகியோரும் கலந்து கொண்டோம்.

தேர்தல் அறிக்கை நீண்ட விவாதம் நடைபெற்று இறுதியாக்கப்பட்டது. தேசிய முன்னணியில் ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத், சோஷலிஸ்ட் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே முதலாவதாகத் தொகுதிப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு- பின்னர் அந்த உடன்பாடு தேசிய முன்னணியில் நேரடியாகப் பங்கு பெறாத பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற கட்சிகளையும் சேர்க்கும் வியூகத்துடன் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது தி.மு.கழகம் பா.ஜ.க.வோடு உறவு கொண்டிருப்பது குறித்து மதவாத அணி, மதச்சார்பற்ற அணி என்றெல்லாம் பேசுபவர்களைக் காணும்போது அப்போது தேசிய முன்னணியின் சார்பில் வி.பி. சிங் தலைமையில் ஆட்சி அமைந்த போது அந்த ஆட்சியை பா.ஜ.க.வும் ஆதரித்தது, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல, ஏற்கனவே 1967-ஆம் ஆண்டு எல்லா மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய 3 மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதிய கிரந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்தது.

ஜனசங்கத்திற்கும், பா.ஜ.க.விற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஜனசங்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் பா.ஜ.க.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்போது அரசில் அங்கம் வகிக்கா விட்டாலும், சில நிபந்தனைகளோடு கூடிய ஆதரவை வெளியிலிருந்து இந்த அரசுகளுக்குத் தர ஒப்புக் கொண்டது. 1977-இல் நடைபெற்ற தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் அரசு அமைந்தது. அந்த அரசிலே இடம் பெற்றிருந்த தலைவர்கள் வாஜ்பய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோராகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்தது. அதைத் தொடர்ந்து, 1989-90-இல் வி.பி. சிங் தலைமையில் மத்தியிலே ஆட்சி அமைவதற்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாரதிய ஜனதா கட்சியும் வெளியிலே இருந்து ஆதரவு வழங்கின.