நெஞ்சுக்கு நீதி
சமுதாய அமைப்பு · 300 / 391
சாதி மத பேதமற்ற சமுதாய அமைப்பு "பி றப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" -என்பது திருக்குறள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால்; எல்லா உயிர்களும் ஒன்றுதான், அதில் உயர்வு, தாழ்வே கிடையாது என்கிறார் வள்ளுவர். பிறப்பால் எல்லோரும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் எப்போது வேறுபடுகிறார்கள் என்றால் அவர்கள் செய்கின்ற தொழிலைப் பொறுத்து அவரவர்களுடைய சிறப்புகள் வேறுபடுகின்றன.
இன்றைக்குக்கூட குறளுக்குப் பொருள் கூறுகிற சிலர் செய்தொழில் என்பது அவரவர் ஈடுபட்டிருக்கிற தொழில்கள்; ஒருவர் கொல்லராக, ஒருவர் தச்சராக, ஒருவர் ஆசிரியராக, ஒருவர் மருத்துவராக, ஒருவர் சங்கீத வித்வானாக - அப்படிப்பட்ட தொழில்களைச் செய்கிறவர்கள் என்று வள்ளுவர் குறிப்பிட்டிருப்பார்; எனவே அந்தத் தொழிலைப் பொறுத்துத்தான் வேற்றுமை என்று எண்ணிக்கொண்டு பொருள் உரைப்பார்கள். ஒரு தொழிலுக்கும் இன்னொரு தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டை அல்ல; குறிப்பிட்ட ஒரு தொழிலிலேயே யார் தனித்தன்மை பெற்றிருக்கிறார்களோ- தனிச் சிறப்பு பெற்றிருக்கிறார்களோ அதை வைத்துத்தான் செய்தொழிலில் சிறப்பு ஒவ்வாமல் போகக் கூடும் என்பதை வள்ளுவர் குறிப்பிட்டு, அந்த வேற்றுமையைப் பற்றி மட்டுமே விளக்குகிறார்.
உதாரணமாக சங்கீதம் பாடுவதும் ஒரு தொழில்தான். சில சங்கீத வித்வான்களின் பாட்டை காதுகொடுத்துக் கேட்கவே முடிவதில்லை. அதேசமயம், இன்னொரு வித்வான் பெரிய அவையிலே அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ரசிக்கக்கூடிய அளவுக்கு இசையைப் பொழிவார். இருவரும் சங்கீத வித்வான்கள்தான். ஆனால் அந்தத் தொழிலுக்குள்ளே இருக்கிற சிறப்பு வேறுபட்டு அவர்கள் இருவரையும் பிரித்துக் காட்டுகிறது. அந்தப் பிரிவைத் தவிர அவர்களுக்கிடையே வேறு எந்தப் பிரிவும் இல்லை என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
இதனைப் புரிய வைத்த இயக்கம்தான் சாதி மதப் பித்து கூடாது என்று சாடிய சுயமரியாதை இயக்கமாகும். அந்த இயக்கத்தில் என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்ற முறையில் சாதி மதப் பித்து சமுதாயத்தை நோயுறச் செய்யும் ஒருவகையான கிருமி என்பதை அறிந்து அந்தக் கிருமியைப் பரவ விடாமல் தடுக்க வேண்டுமென்பதில் இளமைக்கால முதலே ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். பெரியோர் முதல் பேரப்பிள்ளைகள் பேத்திகள் வரையில் காதல் திருமணம் அதுவும் பெரும்பாலும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்ற பெருமை, என் குடும்பத்திற்கு உண்டு.
1944-ஆம் ஆண்டுக்கு முன்பே நான் எழுதிய "தூக்கு மேடை" நாடகத்தில் சாதி மத வேறுபாட்டை ஒழிக்கும் இளைஞனாக நடித்து, "சாதி சாதி என்று பேசுகிறீர்களே; பாதிக்குதே பசி என்றுரைத்து வீதியிலே புரளும் வடக்கு மலைப் பரதேசிக்கு உங்கள் சாதி சாதித்த நீதி என்ன? வேதியர்க்கு வெண்பட்டும் வெண் பொங்கலும் அளித்த சாதி அவர்கள் வைத்திடும் மீதியையாவது நாதியற்றவர்க்கு அளிக்க நினைத்ததா? பேதியும் பீதியும் சேரிக்கென்றே விடுத்தது உமது சாதியல்லவா?
போதிமரத்துப் புத்தன் புலம்பியதும், ஆதிமகனாம் வள்ளுவன் அலறியதும் சாதி ஒழிய வேண்டுமென்றுதானே!" என்ற வசனம் பேசிய காலத்தையும்- இந்த அத்தியாயத்தை எழுதும் 2001-வது ஆண்டையும் எண்ணிப் பார்க்கும்போது; இப்போது கழக அரசு பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழ்நாட்டில் 130-க்கு மேற்பட்ட இடங்களில் அமைத்து ஒவ்வொன்றிலும் சகல சமூகத்தினரையும் குடியமர்த்தியுள்ள இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ முடிகிறது என்றாலும் அந்த மகிழ்ச்சி இன்னமும் முழுமை அடையவில்லை.
ஆம், ஏறத்தாழ அறுபதாண்டு இடைவெளியிருந்தும்கூட, சாதி மதம் போன்றவற்றால் உருவான ஏற்றத் தாழ்வு முற்றாக முடிவுறவில்லையே என்ற கவலையினால்தான்; "விவேகமெனும் வெள்ளி முளைத்து, சாதி மதப் பித்து எனும் சனி தொலைந்தால்தான்; சமத்துவம் எனும் ஞாயிறு தோன்றும்" என்று நான் எழுதிய கருத்து- சமத்துவபுர முகப்புகளில் கழக அரசின் சார்பில் எழுதப்பட்டது.
இந்த 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பிரசித்தி பெற்ற ஆங்கில ஏடுகளில் ஒன்றான 'இந்துஸ்தான் டைம்ஸ்'க்காக என்னிடம் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புப் பேட்டி எடுத்தார்கள். அதில் கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி; "உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய இலட்சிய வெற்றி எதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"
என்பதாகும். அதற்கு நான் அளித்த பதிலில்; "ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சு கேட்க வந்து குழுமியிருப்போர் அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் முடிந்து கலைந்து செல்லும்போது தனித்தனி சாதிகளாகக் கலைந்து செல்கிறார்கள். அந்த நிலை மாறி, தமிழர்களாகவே கூட்டத்தில் அமர்ந்து, எழுந்து செல்லும்போதும் தமிழர்களாகவே கலைந்து செல்லும் காலம் வந்தால் அதுதான் நான் எதிர்பார்க்கும் இலட்சிய வெற்றி என்பதாகும்" எனக் குறிப்பிட்டேன்.
1944-ஆம் ஆண்டு என் திருமணத்திற்குப் பிறகு சிதம்பரத்தில் மாமனார் வீட்டுக்கு முதல் இரவுக்காகச் சென்ற போது ஊருக்குள் நான் நுழையக் கூடாது என்று 144 தடை விதிக்கப்பட்டது. காரணம்; அப்போது சிதம்பரத்தில் நடைபெற இருந்த "வர்ணாஸ்ரம்" மாநாட்டைக் கண்டித்து நான் வெளியிட்ட "முரசொலி" துண்டு அறிக்கையில் எழுதியிருந்ததுதான். அப்போது எனக்கு வயது 20தான்! "ஒரே இரத்தம்" என்று நான் தீட்டிய புத்தகம், திரைப்படமாகக் கூட வெளி வந்தது.
"அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சிகளில் புலியும் மானும் ஒரே துறையில் தண்ணீர் குடித்ததாக வர்ணிப்பார்கள். ஆனால் இந்தக் காலத்தில் புலியும் மானும் கூட வேண்டாம்; மானும் மானுமாவது ஒரே துறையில் தண்ணீர் அருந்த முடிகிறதா?" என்பது அந்தப் படத்தில் சாதிக் கொடுமையைக் கண்டிக்கும் ஓர் உரையாடலாகும். இவ்வாறு சாதி சமய வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண வேண்டுமென்ற ஆவலை உயிரணுக்களில் சுமந்து கொண்டு அத்துடன் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்து அதனை நடை முறைப்படுத்த செயல்பட்டுக் கொண்டிருந்த போதுதான், அதாவது 1989-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் சாதிக் கலவரத்துக்கான தீப்பொறி கிளம்பி, சுற்று வட்டாரப் பகுதிகளில் அந்தக் கலவரத் தீ, 11 உயிர்களைப் பலி வாங்கிய சோக நிகழ்ச்சி நடைபெற்றது.
தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோரல்லாதார்க்கும் இடையில் ஏற்பட்ட அந்தக் கலவரம் மூன்று நாட்கள் நீடித்தது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருந்த நான், சென்னையில் 21-9-1989 அன்று நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, கலவரப் பகுதிகளுக்குச் சென்றேன். போடி, தேனி, கண்டமனூர் பகுதிகளுக்கு அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி. மணி, பொன். முத்துராமலிங்கம், நேரு, தங்கவேலு மற்றும் கழக முன்னோடிகளான தென்னரசு, தா.கிருட்டிணன், நீலநாராயணன், சி.டி.
தண்டபாணி, வைகோ, கம்பம் ராமகிருஷ்ணன், மூக்கையா, அதியமான், ஆசையன், செல்வராஜ், எஸ்.ஏ.எம். உசேன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர். உடனடியாக எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பியது. நிவாரணச் செலவுகளுக்காக 25 லட்ச ரூபாய் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு, தமிழகத்தில் மதுரை வட்டாரத்தில் 11 உயிர்களைப் பலி கொண்ட சாதிக் கலவரம் நடைபெற்ற ஆண்டு மாத்திரமல்ல; அதே ஆண்டில் உலகின் பல பகுதிகளில் நம் உள்ளத்தை ரணமாக்கக் கூடிய துயர நிகழ்ச்சிகள் எத்தனையோ நடைபெற்றிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் பார்க்கலாம். அந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் இங்கிலாந்து ஷெபீல்ட் நகரத்துக் கால்பந்து மைதானத்தில் பந்தாட்டம் காண வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக 95 பேர் மூச்சுத் திணறி மாண்டனர். மது அருந்தக் கூடாது என்று போராடிய மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் பரோடாவில் விஷச் சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 325 பேர் பலியான கொடுமை நடைபெற்றது. பெங்களூரிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 18 அன்று லலித் பூர் அருகே கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
ஹிராயின் மற்றும் கஞ்சா எனும் போதைப் பொருள்களைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 65 பேர் அதே மாதத்தில் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்காட் எனும் மாவட்டத்தில் ராஜ புகாரி கிராமத்தில் நாகாலந்து தீவிரவாதிகள் புகுந்து 30 பேரைக் கொலை செய்தனர். இலங்கையில் இரு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 52 பேர் மாண்டனர். வங்கதேசத்தில் அதே ஆண்டு மே திங்கள் 27 அன்று வீசிய கடும் புயலால் 200 பேர் பிணமாயினர்.
காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் இறந்தனர். சென்னை பக்கிங்காம் கால்வாயில் பேருந்து விழுந்ததினால் 30 பயணிகள் மரணமுற்றனர். அதே ஆண்டு லக்னோவில் பேருந்து ஒன்று மின்கம்பியில் உராய்ந்ததினால் 30 பயணிகள் கருகிச் செத்தனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து பரமாரியோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கி 120 பயணிகள் பலியாயினர். பிலிப்பைன்சில் மிட்டநோவா தீவில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் இரண்டு ரயில்கள் திடீரெனத் தீப்பற்றியதால் 1500 பேர் கருகிப் போயினர். இத்தனை சோகங்களையும் உள்ளடக்கிய ஆண்டாகத் திகழ்ந்த 1989-ஆம் ஆண்டு இனிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஆண்டாகவும் இருந்துள்ளது. அவற்றில் ஒரு நிகழ்ச்சியாக "இதயம் பேசுகிறது" பத்திரிகையின் ஆசிரியர் மணியன் அமெரிக்கா பற்றி எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா அமைந்தது. எழுத்தாளர் திரு. வாசவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்த நூலை நான் வெளியிட்டேன்.
அந்த விழாவில் ஜி. வெங்கடேஸ்வரன், எழுத்தாளர்கள் இந்துமதி, விக்ரமன், எம். கோபால கிருஷ்ணன், எஸ். நல்ல பெருமாள், அவ்வை நடராஜன், ஜி. உமாபதி, டாக்டர் வேங்கட சுப்பிரமணியம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மணியன் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். திரு.மணியன் எழுதி வெளிவந்துள்ள பயணக் கட்டுரைப் புத்தகங்களைப் பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேசியதோடு, சுற்றுலா நோக்கத்தையும் ஓரளவு மனத்திற் கொண்டுதான் இராமாயணமும், சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்கக் கூடுமோ என்று நினைக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டேன்.
இதிகாசமான இராமாயணம் வடக்கே அயோத்தியிலே தொடங்கி, தண்டகாரண்யம், கிஷ்கிந்தை, ராமேசுவரம், வேதாரண்யம், இலங்கை எனத் தொடர்கிறது. சிலப்பதிகார இலக்கியமோ சோழ நாட்டிலே காவிரிப்பூம்பட்டினத்திலே தொடங்கி, திருவரங்கம் வழியாகச் சென்று, பாண்டிய நாடான மதுரையம்பதிக்கும் சென்று, அத்துடன் நில்லாமல் கற்பரசி கண்ணகிக்குச் சிலையெடுக்கக் கல் கொண்டு வர சேரன் செங்குட்டுவன் வடபுலம் வரையில் சென்று கனகவிசயரை இமயச்சாரலில் வென்று திரும்பியது வரையில் தொடர்கிறது.
எனவே, நூலாசிரியர்களின் மூல நோக்கம் எதுவாக இருப்பினும், சுற்றுலாவுக்குத் தேவையானவைகளும் அவர்களை அறிந்தோ அறியாமலோ இடம் பெற்றிருக்கின்றன இந்த நூல்களில் என்று சுட்டிக் காட்டினேன். கழக அரசு பொறுப்பேற்ற அதே ஆண்டில் தமிழகத்தில் உணவுப் பொருள்கள் விநியோகத்திற்குச் சங்கடம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருந்தது. மத்திய அரசு அதற்கு முன்பு வரை மாதந்தோறும் 80 ஆயிரம் டன் அரிசி வழங்கி வந்ததை, 40 ஆயிரம் டன்னாக உடனடியாகக் குறைத்து விட்டது.
அதைப் போலவே பாமாயில், சர்க்கரை ஆகிய வற்றையும் தமிழகத்தின் தேவைக்கேற்ப அனுப்ப மத்திய அரசு தயாராக இல்லை. தமிழக அரசின் சார்பில் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் மத்திய அரசுக்கு இது பற்றி பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவைகளை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாத நிலையில் தமிழகத்திலிருந்து பிரதமருக்கு நூற்றுக்கணக்கான தந்திகளை அனுப்புமாறு நான் கேட்டுக்கொண்டதை அடுத்து ஏராளமான தந்திகள் அனுப்பப்பட்டன.
தமிழகத்தின் உணவு நிலை இந்த அளவிற்கு இருந்த போது, திரு. மூப்பனார் அவர்கள் இந்து இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் - முதல் அமைச்சர் கருணாநிதி பொது மக்களைப் பாதிக்கும் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவை பண்டிகை காலத்தில் போதுமான அளவிற்கு நியாயமான விலையில் கிடைக்க தனது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்திட வேண்டும். மாநில அரசே அதற்குரிய பரிகாரங்களைக் கண்டறியுமானால் மத்திய அரசின் முழு ஒத்துழைப்புக்கு எங்களால் உறுதி கூற முடியும் என்று கூறியிருந்தார்.
அதுபற்றி நான் எழுதும்போது, "தமிழ்நாடு சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக விளங்குபவரும், கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருப்பினும் கண்ணியமும் கனிவுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கக் கூடியவருமான திரு.மூப்பனார் அவர்கள் கூறியதாக இந்து இதழில் ஒரு செய்தி படித்தேன். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்குவதில் மாநில அரசின் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க நான் தயாராக இல்லை.
திரு. மூப்பனார் அவர்கள் கூறியிருப்பதைப் போல நானே இந்தப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி நாள் தோறும் உணவு அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இன்னும் இதில் இந்த அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென திரு. மூப்பனார் கூறியுள்ளாரே, அந்தத் தனி கவனம் பிப்ரவரி திங்களிலேயே பிரதமரைச் சந்தித்து நிலையை விளக்கியதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது.
சங்கடங்களை விளக்கி ஆறு மாத காலமாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் பயனற்றுப் போனபிறகு தான் தந்திகள் கொடுக்கப்பட்டன. அந்தத் தந்திகளுக்கும் பதில் எதுவும் கிடைக்காத நிலையில் தான் அக்டோபர் 7-ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி நடத்துவதென்று தி.மு.கழகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டேன். 6-ஆம் தேதியன்று மத்திய உணவு அமைச்சர், நண்பர் திரு. சுக்ராம் அவர்கள் தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்தார்.
தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்படும் 40 ஆயிரம் டன்னுக்கு மேலாக கூடுதலாக நவம்பர் முதல் 5 ஆயிரம் டன்னும், டிசம்பரில் மேலும் 10 ஆயிரம் டன்னும் தருவதாகக் கூறினார். அது போதுமானதல்ல என்றும், அக்டோபரில் 10 ஆயிரம் டன்னும், நவம்பர் முதல் 20 ஆயிரம் டன்னும் அதிகமாகத் தர வேண்டுமென்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திக் கூறினேன். என்னைச் சந்திப்பதற்கு முன்னால் தமிழக உணவமைச்சர் ஆர்க்காடு வீராசாமியோடும், அதிகாரிகளோடும் ஒரு மணி நேரம் மத்திய அமைச்சர் உணவு நிலை குறித்து விவாதித்தார்.
செய்தியாளர்கள் அதைப்பற்றிப் பிறகு என்னிடம் கேட்ட போது, மத்திய அமைச்சர் இங்கே வந்து நிலைமைகளை விசாரித்த வகையில் மகிழ்ச்சிதான் என்றும், தருவதாகக் கூறுகிற அரிசியின் அளவுதான் போதுமானதாக இல்லையென்றும் கூறினேன். அக்டோபர் 7-ந் தேதியன்று தி.மு.க. அறிவித்ததைப் போல மனிதச் சங்கிலி தமிழகம் முழுதும் நடைபெற்றது. சென்னையில் குறளகம் அருகிலிருந்து மனித
ச் சங்கிலி தொடங்கி, கிண்டி வரை நீண்டிருந்தது. அதில் தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ஜனதா தளம், முஸ்லீம் லீக், தமிழக முன்னேற்ற முன்னணி, திராவிடர் கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. குறளகம் அருகில் நான், சி.பி.ஐ., தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் ப.மாணிக்கம், ஜனதா தளம் சார்பில் பூவராகன், கலிவரதன் ஆகியோர் கலந்து கொண்டோம். பிறகு நான் ஒரு ஜீப்பில் ஏறி மனிதச் சங்கிலியைப் பார்வையிட்டேன்.
ஏ.நல்லசிவன், எம்.பி., கி. வீரமணி, அப்துல் லத்தீப், ராஜ சேகரன், வன்னிய அடிகளார் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். மனிதச் சங்கிலியைத் தொடர்ந்து அக்டோபர் 18, 19, 20, 21, 22 ஆகிய ஐந்து நாட்களும் தமிழகம் முழுவதும் கழகச் சார்பில் எழுச்சிநாள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுத்து, அவ்வாறே ஆயிரக்கணக்கான கழகக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 1989-ஆம் ஆண்டு பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டிடத்திற்கு "தீரன் சின்னமலை மாளிகை" என்று அங்கே நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவிலே அறிவித்தேன்.
அதைப் போலவே மானாமதுரையில் நடைபெற்ற அரசு விழாவிலே சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள இடத்திற்கு மருது பாண்டியன் நகர் என்றும், அங்கே கட்டப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டிடத்திற்கு பன்னீர் செல்வம் மாளிகை என்றும், ராமனாதபுரம் மாவட்டத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு சேதுபதி நகர் என்றும், கலெக்டர் அலுவலகக் கட்டிடத்திற்கு சிங்கார வேலர் மாளிகை என்றும் பெயர் சூட்டினேன். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு "ராஜகம்பீரன் மாளிகை" என்றும், அலுவலக வளாகத்திற்கு "இரா.
தர்மலிங்கம் வளாகம்" என்றும் 30-9- 1989 அன்று நடைபெற்ற திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத் துவக்க விழாவின்போது பெயர் சூட்டினேன். அன்று மாலையில் வேலூரில் நடைபெற்ற விழாவில் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திற்கு ஈ.வெ.ரா. மணியம்மையார் வளாகம் என்றும், ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சி.பி. சிற்றரசு மாளிகை என்றும், புதிய பேருந்து நிலையத்திற்கு ஜனாப் உபயதுல்லா பேருந்து நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இந்த இரண்டு விழாக்களிலும் எனக்குப் பரிசாக வழங்கப்பட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கச் செங்கோல், ஒரு மணி மாலை, இரண்டு மூன்று மோதிரங்கள் போன்ற பொருட்களை முதல் அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் அவர்களிடம் 2-10-1989 அன்று வழங்கினேன். அவைகளை மாத்திரமல்ல, என்னுடைய பிறந்த நாளில் திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் முன்னின்று 60 பவுன் கொண்ட ஒரு பவுன் மாலையை எனக்கு அணிவித்தார்.
அதை கட்சி நிதிக்காகக் கொடுத்துவிட்டேன். அதைப் போலவே மதுரையில் கழகச் சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனும், பொன். முத்துராமலிங்கமும் முன்னின்று 60 பவுன் கொண்ட ஒரு மாலையை எனக்கு அணிவித்தார்கள். அதையும் கட்சி நிதிக்காகக் கொடுத்து விட்டேன். கோவையில் கழகச் சார்பில் கண்ணப்பன் அவர்கள் முன்னின்று 60 பவுன் கொண்ட ஒரு மாலையை எனக்கு அணிவித்தார்கள். அதையும் கட்சி நிதிக்காகக் கொடுத்து விட்டேன். காமராஜர் மாவட்டம், விருதுநகரில் 8-10-1989 அன்று நடை பெற்ற அரசு விழாவில், 51 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களை ஏழையெளிய மக்களுக்கு வழங்கி, அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு குமாரசாமி ராஜா பெயரையும், அலுவலகக் கட்டிடத்திற்கு ஏ.வி.பி.
ஆசைத் தம்பி பெயரையும் சூட்டினேன். விழாவிற்குச் சென்ற நான் விழா முடிந்தபிறகு நேராகக் காமராஜரின் இல்லத்திற்குச் சென்று அவருடைய தங்கை திருமதி நாகம்மையாரைச் சந்தித்தேன். அந்த அம்மையார் என்னைக் கண்டதும் "ராஜா, நீ நூறாண்டு வாழ வேண்டும்" என்று கூறி வாழ்த்தினார்.
மாவட்ட நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்ததில் இருந்து பத்தாயிரம் ரூபாயை அந்த அம்மையாரிடம் வழங்கினேன். அடுத்து திருத்தங்கலில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் தம்பி தங்கபாண்டியன் முன்னின்று நடத்திய அந்த விழாவில் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 55 பவுன் சங்கிலி ஒன்றினை எனக்கு வழங்கியபோது அதனையும் தலைமைக் கழகத்தில் ஒப்படைப்பதாகக் கூறி அவ்வாறே ஒப்படைத்தேன்.
மதுரை மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 10-10-89 அன்று சென்னை திரும்பினேன். வந்ததும் வராததுமாக மீனவச் சமுதாயத்திலே பிறந்து ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற பொன்னுரங்கம் மறைவு, பெரணமல்லூர் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் எட்டியப்பன் மறைவு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தத்துவமேதை என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரருமான டி.கே. சீனிவாசன் அவர்களின் மறைவு ஆகிய மூன்று செய்திகளும் அடுத்தடுத்த நாட்களில் வந்து என்னைச் சோர்வடையச் செய்தன.
என்னுடன் அளவற்ற அன்புடனும் அதே நேரம் அடிக்கடி ஊடல் கொண்டும், எதற்கும் அஞ்சாமல் எண்ணியதை எண்ணியவாறு எடுத்துக்கூறும் என் இனிய நண்பர் டி.கே.எஸ். இன்றில்லையெனினும் அவரது மகன்கள் டி.கே.எஸ். இளங்கோவன், டி.கே.எஸ். வில்லாளன் இருவரையும் பார்க்கும் போதெல்லாம் டி.கே. சீனிவாசனின் நினைவு என் நெஞ்சில் அலை பாயாது இருப்பதில்லை.
