நெஞ்சுக்கு நீதி
தோற்றமும், முடிவும் · 299 / 391
முஜிபூர் தோற்றமும், முடிவும் ரா மச்சந்திரா மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் தி.மு.க. ஆட்சியில் அரசாங்கம் எடுத்துக் கொண்டது பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியில் அது மீண்டும் தனியார் வசமானதைப் பற்றியும் ஒன்பதாவது அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். அந்த மருத்துவமனையிலேதான் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாகத் தொடங்குவதாக இருந்தேன். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எந்தவொரு அரசு கட்டிடத்திற்கும் சூட்டக் கூடாது என்பது எம்.ஜி.ஆர்.
அரசின் கொள்கை. ஆனால் அவருடைய ஆட்சியிலேயே மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அதன் தொடக்க விழா நடைபெறும் சமயத்தில் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார். அதன் பிறகு ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நல்ல இடம் கூட ஒதுக்கப்படவில்லை. தரமணி என்ற இடத்திலே ஒரு சிறிய வாடகை வீட்டில் அது அனாதையாக இயங்கி வந்தது. அதுமட்டுமல்ல; அந்தப் பெயரேகூட மறந்து போய்விட்டது.
உதாரணமாக, 24-6-1989 அன்று காலையில் சென்னை பிரசிடெண்ட் ஓட்டலில் உள்ள மண்டபத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் தீப்புண் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை சீராக்க அறுவை சிகிச்சைத் துறையின் 15-வது ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, அமைச்சர் டாக்டர் பொன்முடி, டாக்டர்கள் கலா நிதி, மாதங்கி, லலிதா காமேஸ்வரன், லலிதா அனந்தசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அந்த விழாவில் எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் மருத்துவப் பல்கலைக் கழகம், மருத்துவப் பல்கலைக்கழகம் என்றே குறிப்பிட்டுப் பேசினார்கள். அதைக் கவனித்த நான் பேசும்போது, "இங்கே பேசிய அத்தனை பேரும் மருத்துவப் பல்கலைக் கழகம் என்று குறிப்பிட்டார்களே அல்லாமல், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று யாருமே குறிப்பிடவில்லை. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று அந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் உட்பட யாருமே குறிப்பிடவில்லை.
ஒருவேளை துணை வேந்தருக்கு அப்படிச் சொன்னால் முதல் அமைச்சர் கருணாநிதிக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ என்று பயம் வந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் அப்படி எண்ணக் கூடியவன் அல்ல நான். அதனால்தான் சட்டமன்றத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் அன்னையார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அன்னை சத்தியா போக்குவரத்துக் கழகம் பெயர் மாற்றப்படுமா என்று ஒரு உறுப்பினர் கேட்டபோது - என் தாயின் பெயர் மாற்றப்பட்டது அந்தக் காலம், அத்தகைய குறுகிய நோக்கம் இந்த அரசிற்குக் கிடையாது என்று நான் பதில் கூறியதை எண்ணிப் பார்த்து தைரியமாக துணை வேந்தர் போன்றவர்கள் அவர் எந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருக்கிறார் என்பதை தைரியமாகச் சொல்லலாம்.
நான் இங்கே பார்த்தேன். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் மருத்துவப் பல்கலைக் கழகம் என்றார், உணவமைச்சரும் மருத்துவப் பல்கலைக் கழகம் என்றார். பேசிய அத்தனை பேருமே- கலாநிதி உட்பட மருத்துவப் பல்கலைக் கழகம் என்று மட்டுமேதான் சொன்னார்கள். இங்கு நான் கூறிக் கொள்கிறேன், "டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்" மிக விரைவில் நல்ல உயர்ந்த மாட மாளிகை போன்ற கட்டிடங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய அளவிற்கு அமையும்" என அறிவித்தேன்.
நான் அறிவித்தவாறு 31-8-1989 அன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவும், பல்கலைக் கழகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தமிழக ஆளுநர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பல்கலைக் கழகத்தினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பல்கலைக் கழகக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி நான் உரையாற்றினேன்.
அந்த விழாவிலே நான் உரையாற்றும் போது, "40 ஆண்டுக் காலம் கலைத்துறை, அரசியல் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் என்னோடு தோளோடு தோள் நின்ற எனது அருமை நண்பர், மறைந்த முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரால் தொடங்கப்பட்டு- ஆனால் அதிகாரபூர்வமாக இதுவரையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்து இன்று நடைபெறுகிறது. "முகம் நக நட்பது நட்பன்று நெஞ்சத் தகம் நக நட்பது நட்பு" என்ற வள்ளுவரின் குறள் மொழிப்படி நட்பின் இலக்கணத்தை இதயத்தில் பதித்து இன்று தமிழக அரசின் சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது" என்று கூறித்தான் என்னுடைய உரையைத் தொடங்கினேன். அந்தப் பல்கலைக் கழகத்திற்கான கட்டிட வடிவமைப்பைக்கூட நானேதான் வரைந்து கொடுத்தேன். எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற அடுத்த ஆண்டே கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்ட காரணத்தால் அந்தப் பணிகள் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் விரைவாக நடைபெறவில்லை. மீண்டும் நான்காவது முறையாக 1996-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டிடப் பணிகளைத் துரிதப்படுத்தி 31-7-1998 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு.கிருஷ்ணகாந்த் அவர்களை அழைத்து ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட எம்.ஜி.ஆர்.
பல்கலைக் கழகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. கட்டிட முகப்பில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையினை நான் திறந்து வைத்து உரையாற்றினேன். ஆளுநர் திருமதி பாத்திமா பீபி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, விழாவில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, மத்திய அரசின் இன்றைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன், ஆர். எம். வீரப்பன், எஸ். திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். 4-8-1989 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் வி.எல்.
எத்திராஜ் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட நான், அந்தக் கல்லூரி இருக்கின்ற சாலைக்கு எத்திராஜ் சாலை என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தேன். அன்றைய தினமே தமிழகத்திலே உள்ள பெரிய தொழிலதிபர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து தமிழகத்திலே தொழில் வளம் பெருகவும், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவும், புதிய பல தொழிற்சாலைகளை அமைக்கவும் ஆலோசனை நடத்தினேன். அரசின் சார்பில் தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளும் தாமதமில்லாமல் கிடைக்குமென்றும் உறுதி அளித்தேன்.
தேர்தல் நிதி வாங்குவதற்காக மட்டுமே இதுவரை தங்களை அமைச்சர்கள் சந்தித்திருப்பதாகவும், அப்போது தான் முதல் முறையாகத் தொழில் வளத்தைப் பெருக்குவதற்காக அரசு அழைத்திருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் தொழிலதிபர்கள் தெரிவித்தது இன்னமும் நினைவிலே உள்ளது. 6-8-1989 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் 125-வது படமான "ராஜாதி ராஜா" திரைப்பட வெற்றி விழாவிலே கலந்துகொண்டு அதிலே சிறப்பாக நடித்த ரஜினிகாந்த் அவர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினேன்.
ரஜினி தனது நன்றியுரையில், எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையிலே கட்சியையும் உடன் பிறப்புகளையும் நான் காப்பாற்றி விட்டதாகவும், தமிழகத்தையும் இந்தத் தலைமுறையையும் என்னால்தான் காப்பாற்ற முடியுமென்றும் கூறினார். நான் உரையாற்றும்போது, "ரஜினி எவ்வளவு எளிய நிலையிலேயிருந்து உயர்ந்திருக்கிறார் என்பதை எண்ணியெண்ணி நான் பூரித்துப் போனதுண்டு. எளிய நிலையிலே இருந்து உயர்ந்தவர்கள் சில நேரங்களில் ஆணவம் பிடித்து அலைவார்கள்.
அடங்கா பிடாரித்தனமாக இருப்பார்கள். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவார்கள். இவைகளுக்கெல்லாம் நேர்மாறாக படத்திலே தான் ரஜினியின் ஆர்ப்பாட்டங்கள் அதிகமே தவிர- வாழ்க்கையிலே ஒரு அடக்கமான மனிதராக ரஜினி இருப்பதை நான் ஏதோ உபச்சாரத்திற்காகச் சொல்கின்ற வார்த்தையெனக் கருத வேண்டாம். நான் பல முறை சாலையிலே அவர் காரிலே செல்கின்ற நேரத்தில் அவரே எதிரே காரை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்.
அப்போதுகூட காரை நிறுத்தி விட்டு அவர் வணக்கம் செய்கின்ற பாங்கும் அதிலே இருக்கின்ற பணிவும் மரியாதையும் என்னை மிகவும் கவர்ந்தது உண்டு. அவர் தன்னை ஒரு கட்சிக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஒரு கட்சியின்பால் ஆதரவு காட்டுபவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. சொல்லிக் கொள்வதில்லை என்றாலும்கூட அவருடைய உள்ளத்தில் இந்த நாட்டிற்கு, சமுதாயத்திற்குத் தேவையான சில கருத்துக்களைப் பதிய வைத்திருப்பது அவருடைய உரிமை.
ஆனால் வெளிப்படையாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஒரு நடிகர் என்கின்ற முறையில் நடு நிலையோடு இன்றைக்குத் திரைவானிலே அவர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். எந்த வம்புக்கும் போகாதவர். வந்த வம்பை விடாதவர். எனவே திரைவானத்தில் என்றைக்கு அவர் தோன்றினாரோ அதுமுதல் இதுவரையில் ஒரு நிலையான இடத்தை அவர் பெற்றிருக்கிறார். திறமையான நடிகர், ஆற்றல் வாய்ந்த நடிகர், இன்றைக்கு தமிழ்நாட்டிலே வளரும் பிள்ளைகள் எல்லாம் ரஜினியை தங்கள் உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே இடம் பெற்று விட்ட நடிகர்" என்று கூறிப் பாராட்டினேன்.
இந்தச் சிறப்பான விழா நடைபெற்றதற்கு மறுநாளே அருமைத் தம்பி கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "எல்லா நதியிலும் என் ஓடம்" என்ற அரியதொரு மொழி பெயர்ப்புத் தொகுப்பு நூலினை வெளியிடும் விழாவிலே கலந்து கொண்டேன். நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும் இல்லா விட்டாலும் அவர் எழுதிய நூலினைத் தொடர்ந்து வெளியிடும் வாய்ப்பு எனக்கு மட்டுமே உரியதாக இருந்து வருகின்றது. அந்த நூலுக்கு அணிந்துரை அளிக்கும் வாய்ப்பினையும் நான் பெற்றிருந்தேன்.
பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சிப் பிடியில் இருந்து கிழக்கு பாகிஸ்தான்- தற்போதைய வங்காள தேசம் விடுவிக்கப்பட விடுதலைப் போர் நடத்தியவர் ஷேக் முஜிபூர் ரகுமான் அவர்கள். வங்காள தேசத்தின் தந்தை என்றுதான் இவரை அழைப்பார்கள். அவருடைய போராட்டத்திற்கு அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், இந்திய ராணுவத்தையும் அனுப்பி கிழக்கு பாகிஸ்தானை விடுவித்து டிசம்பர் 1971-இல் புதிய வங்கதேசம் உருவாக உதவி செய்தார்.
முஜிபூர் உண்மையான ஜனநாயகவாதி. மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி தேர்தல் முறையிலே ஒரு நாட்டைத் தோற்றுவித்தவர் இவர். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவரை யாராலும் மக்களிடமிருந்து பிரிக்க முடியவில்லை. வெளிநாடு சென்று படிக்காதவராக இருந்த போதிலும், படித்த மக்களும், படிக்காத மக்களும் இவரை விரும்பினர். மாணவனாக இருந்தபோதே ஒரு சாதாரண தொண்டராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர்தான் இவர்.
பலமுறை சிறை சென்றவர். 1954-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முன்னணி அரசிலே அமைச்சராக இருந்த போதிலும், அந்த அரசு கலைக்கப்பட்ட போது மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். 1955-ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, 56-இல் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைத்தபோது, அதிலே ஒரு அமைச்சரானார். 1958- இல் அயூப்கான் ராணுவப் புரட்சி நடத்தியபோது முஜிபூர் ரகுமான் மீண்டும் கைது செய்யப்பட்டு பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.
14 மாத சிறை வாசத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், 1962 பிப்ரவரியில் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். தன்னுடைய இளமைக் காலம் முழுவதையும் சிறையிலேதான் கழித்தார். 7-3-1971 அன்று 20 லட்சம் மக்கள் இவரது முன்னால் திரண்டு, சுதந்திரம் வேண்டி தங்கள் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள்முன் முஜிபூர் ரகுமான் சுதந்திரமே நமது கோரிக்கை என்று முழங்கினார். 25-3-1971 அன்று பாகிஸ்தான் ராணுவம் ஷேக் முஜிபூர் அவர்களைக் கைது செய்து மேற்கு பாகிஸ்தானுக்குக் கொண்டு போய் தனிமைச் சிறையிலே அடைத்தது.
பங்களா தேசத்தில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ததோடு பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். உலக நாடுகள் கொடுத்த வலியுறுத்தல் காரணமாக பங்களா தேஷ் விடுதலைக்கு பாகிஸ்தான் ஒத்துக்கொண்டது. 10-1-1972 அன்று சிறையிலிருந்து விடுதலையான முஜிபூர் ரகுமான் சுதந்திரம் பெற்ற தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார். வங்காள தேசத்தின் அதிபராக முஜிபூர் ரகுமான் சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதற்குப் பிறகு முஜிபூருக்கு எதிராக ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் பரூக், ரஷீத், பஜ்லூல் ஹீடா ஆகியோர் சுதந்திராக் கட்சியை உருவாக்கிப் போராடி வந்தனர்.
1975-ஆம் ஆண்டு அந்தக் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளால் முஜிபூர் ரகுமான் அவர்களும் அவருடைய மனைவி பாத்திமா பேகம் உட்பட அவருடைய குடும்பத்தினர் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் முஜிபூர் ரகுமானின் மகள் ஹசினா பேகம் மேற்கு ஜெர்மனியில் அப்போது இருந்த காரணத்தினால் உயிர் தப்பினார். பெற்றோரை இழந்த பிறகு தந்தை முஜிபூர் ரகுமானின் அவாமி லீக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஹசினா ஏற்று நடத்தி வருகிறார்.
11-8-1989 அன்று இரவு ஹசினா வீட்டில் தங்கியிருந்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் சில தீவிரவாதிகள் ஆட்டோ ரிக்ஷாவில் ஹசினா வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்கு வெளியே இருந்தபடியே வெடிகுண்டுகளை வீசினர். இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். உடனே ஹசினா வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். அதற்குள் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். இந்தத் தாக்குதலில் இருந்து ஹசினா அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவரைத் தாக்கிய தீவிரவாதிகள் தப்பியோடும்போது அவர்களின் தலைவர்கள் பரூக், ரஷீத் ஆகியோருக்கு ஆதரவாகக் கோஷம் போட்டுச் சென்றனர். ஹசினாவைச் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததைக் கண்டித்து அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் டாக்காவில் போராட்டம் நடத்தினார்கள். அந்த நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஹசினா 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே வெற்றி பெற்று அந்த நாட்டின் அதிபராக ஐந்தாண்டுகள் பதவி வகித்து 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே தோல்வியைத் தழுவினார்.
"வங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் அவர்களையும், அவரது மகள் ஹசினாவையும் நினைவு கூர்ந்திடும் நேரத்தில் மாவீரன் பூட்டோ அவர்களைப் பற்றியும் ஒருசில வரிகள் எழுதாமல் விட மனம் வரவில்லை. பூட்டோ 1958-ஆம் ஆண்டு தனது 30-வது வயதில் பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவையிலே இடம் பெற்று 1963-இல் அந்நாட்டின் வெளி விவகாரத் துறை அமைச்சரானார். 1967-ஆம் ஆண்டு அரசிலிருந்து விலகி பாகிஸ்தான் மக்கள் கட்சி என்றொரு புதுக் கட்சியைத் தோற்றுவித்தார்.
1970-இல் நடைபெற்ற தேர்தலில் மேற்கு பாகிஸ்தானில் பூட்டோவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், கிழக்கு பாகிஸ்தானில் முஜிபூர் ரகுமான் தலைமையிலே இருந்த அவாமி லீக் கட்சி ஒட்டுமொத்தமாகப் பெரும்பான்மையான இ
டங்களிலே வெற்றி பெற்றது. கிழக்கு பாகிஸ்தானுக்கு சுயாட்சி வேண்டுமென்று முஜிபூர் ரகுமான் வைத்த கோரிக்கையை பூட்டோ ஏற்க மறுத்ததால் உள்நாட்டுப் போர் அங்கே தொடங்கியது. இந்தியாவின் குறுக்கீடு காரணமாக பாகிஸ்தான் தோல்வி அடைந்து கிழக்கு பாகிஸ்தானை இழந்தபோது, 1971 டிசம்பரில் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். 1974-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேசத்தை பூட்டோ ஏற்றுக்கொண்டார். 1977-இல் பூட்டோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், ஜியா உல் ஹக் செய்த ராணுவப் புரட்சியிலே பூட்டோ பதவியிலிருந்து தூக்கி யெறியப்பட்டதோடு, சிறைப்படுத்தப்பட்டு, கொலைக் குற்றமும் சாட்டப்பட்டு 1979-ஆம் ஆண்டில் பல வெளிநாடுகளின் எதிர்ப்பிற்கிடையே பூட்டோ கொல்லப்பட்டார்."
அந்த நேரத்தில் "மாவீரன் மடிந்தான்" என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி :- "நடந்து விடக்கூடாது என்று நாடுகள் பல கோரிக்கை விடுத்துத் தடுக்க நினைத்த அந்தக் காரியம் நடந்தே விட்டது. பாகிஸ்தான் நிலப்பரப்பைக் கட்டியாண்ட புகழ்மிக்க மனிதன் பூட்டோ தூக்கில் தொங்கவிடப்பட்டு அவன் உடலைப் புதைகுழிக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். சர்வாதிகாரம் பேசியது பின்னணியிலிருந்து! அதற்கேற்ப நீதியின் உதடுகள் அசைந்தன!
விளைவு, இஸ்லாமிய சமுதாயத்தின் ஏற்றமிகு விளக்கு ஒன்று அணைக்கப்பட்டு விட்டது. அவன் கடைசி வரையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கருணை மனு போட முடியாது என மறுத்து விட்டான். ஆனால் அவனுக்காகப் போடப்பட்ட கருணை மனுக்கள் அத்தனையும் எதேச்சாதிகாரத்தின் காலடியில் விழுந்து கசங்கிக் கிழிந்து உருத் தெரியாமல் போய்விட்டன. ஒருவகையில் அந்த மனிதனுக்கு நிம்மதிதான்! "இதோ! அதோ!"
என்று நாள்தோறும் அவனைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தார்கள். இனி அவனுக்கு எந்தப் பிரச்சினை பற்றியும் கவலையில்லை. மிரட்டல்கள் அவன் அடக்கம் செய்யப்படும் இடத்திற்குச் சென்று அவன் உள்ளத்தை உலுக்க முடியாது. ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தையும், ரதகஜ துரக பதாதிகளையும் வைத்துக் கொண்டு யாரையும் பழி தீர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு பாகிஸ்தானில் பூட்டோவிற்குக் கிடைத்த பரிசே சான்று! பூட்டோ தலை சிறந்த இராஜ தந்திரி!
அற்புதமான நிர்வாகி! அவன் இதயத்தில் ஊறிய இரக்க உணர்வு; முஜிபூர் ரகுமானை மரணப் படுகுழியிலிருந்து காப்பாற்றிப் "பங்களாதேஷின்" அதிபராகவே ஆக்கியது. அந்தக் கருணை மிகுந்த செயலுக்குக் கைமாறாகக் கூட பூட்டோவுக்குக் கருணை காட்டப்படாதது- நெஞ்சு வெடிக்கும் வேதனைச் செய்தியாகும். மனிதச் சோலையில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன! அவற்றில் பல மணம் வீசாத அழகு மலர்களாகத் திகழ்கின்றன! அத்தர் தரும் ரோஜாவும் அரிய மணம் பரப்பும் மல்லிகை முல்லையும் மயக்கும் மனோரஞ்சிதமும் புவியெனும் பூஞ்சோலையில் குலுங்குகின்றன!
அந்த மலர்களில் வாசமிகுமலராக விளங்கிய மனிதர்தான் பூட்டோ! இன்று அந்த மலரைக் கசக்கி எறிந்து விட்டார்கள். அந்த மலர் தானாக வாடி உதிர்ந்திருந்தால் இத்துணை அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது. படிப்படியாக வளர்ந்து, உயர்ந்து பாகிஸ்தான் மக்களால் மட்டுமின்றி- பல்வேறு நாட்டு மக்களாலும் பாராட்டப் பெற்ற அந்தக் கீர்த்தி மிக்க மனிதன்; கடந்த இரண்டொரு ஆண்டுகளாகப்பட்ட வேதனை கொஞ்சமல்ல! அயூப்கானும், யாகியாகானும் இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே நல்லுறவை வளர்க்க நாட்டம் கொள்ளவில்லை.
அந்த நிலையில் மாற்றம் வேண்டுமென பூட்டோ விரும்பியதுண்டு. பூட்டோவுக்குத் தூக்கு மேடையைத் தந்தவர்- களுக்குக் கூட இந்தியா- பாகிஸ்தான் நல்லுறவில் விருப்பம் இருக்கலாம், ஏற்படலாம். கடைசி தடவையாக மனைவி மக்கள் தங்கள் குடும்பத்துத் தலைவனைச் சந்தித்து மூன்று மணி நேரம் உரையாடினார்களாம். சாவூருக்குச் செல்ல விடை தாருங்கள் என்று அவன் கேட்டிருப்பான். விழிகளை நீர்வீழ்ச்சிகளாக்கிக் கொண்டு அவன் வீட்டு விளக்குகள் திரும்பியிருக்கின்றன.
அந்தச் சந்திப்பில் எந்தவகையான உணர்ச்சிகள் கொந்தளித்தன என்று யாரால் வர்ணிக்க முடியும்? எத்தனையோ பேர் மரண தண்டனைக்கு ஆட்படுகிறார்கள். தூக்குக் கயிற்றில் தொங்குகிறார்கள். அந்த உயிர்களில் ஒன்றாகப் பூட்டோவின் உயிரையும் கருதுகிற சமத்துவ முழக்கம் இப்போது எடுபடாது! அண்டத்தில் கோடானு கோடி கோள்கள் இருக்கின்றன. எண்ணி மாளாத அளவுக்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கோள்களைத்தானே, சில நட்சத்திரங்களைத்தானே உலகம் அறிந்திருக்கிறது.
அப்படி உலகறிந்த ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு முடிவா? கேள்விக்குறி இதயத்தைப் பிழிந்தெடுக்கிறது. பூட்டோ என்றைக்கும் வாழுகின்ற புகழ்மிக்க மனிதர்களிலே ஒருவராகி விட்டார். தூக்கு மேடை அவர் உறுதியைக் குலைக்கவில்லை! சிறைக் கொடுமைகள் அவர் உடலைத்தான் இளைக்க வைத்ததே தவிர உள்ளத்தைக் களைக்க வைக்கவில்லை! குறை இல்லாத மனிதர் என்று கூற முடியாவிடினும், கம்பீரமாக நின்று கருணை கேட்காமலே மடிந்துவிட்ட அந்த மாவீரனின் செயலைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியாது" பஞ்சாயத்து ராஜ் சட்டம் பற்றி விவாதிப்பதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 5-5-89 அன்று மாநாடு ஒன்றினைக் கூட்டியிருப்பதாகவும் அதிலே கலந்து கொள்ள வேண்டுமென்றும் எனக்கு எழுதியிருந்தார்.
மே 5-ந் தேதியன்று சென்னையில் சட்டமன்றப் பொன் விழா சிறப்பாக நடைபெறவிருப்பதாகவும், எனவே பிறிதொரு நாளில் அந்தக் கூட்டத்தினைத் தள்ளி வைத்து நடத்தலாம் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். தேதியைத் தள்ளிவைக்க அவர்களால் இயலாத காரணத்தினால் தமிழக அரசின் சார்பில் அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நாஞ்சிலாரை அனுப்பி வைத்தேன். உள்ளாட்சி மன்றங்களுக்கு வேண்டிய அனைத்து அதிக அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்பதில் மற்ற எந்த அரசுக்கும் நாங்கள் இரண்டாவதாக இருக்கவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளை அதிக அதிகாரங்கள் கொண்டவைகளாக இருக்கச் செய்ய வேண்டும் என்பதில் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒருமித்த உடன்பாடு இருக்கிறது. இதை மேலும் விரிவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மாநில அரசுகள் அதை சட்டத்தின் மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். கிராம நிர்வாக அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகள் மாநில அரசின் வரம்பிற்குள்தான் இருக்க வேண்டும்.
சட்டரீதியாக மத்திய அரசு இதில் தலையிட முடியாது. மாநில அதிகாரங்களில் மத்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் நேரடிக் கொள்கை என்று கூறி தலையிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், "எங்கள் அரசு பொறுப்புக்கு வந்து மூன்று மாதக் காலத்திற்குள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவிக் காலம் 3 ஆண்டுதான் என்று குறைக்கப்பட்டிருந்ததை 5 ஆண்டு காலமாக நீடித்துக் கொடுத்திருக்கிறோம். அதேபோல நகர் மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவிக் காலமும் ஐந்தாண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி 15-5-1989 அன்று நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் பற்றிய 64-வது சட்டத் திருத்தத்தை முன் மொழிந்தார். மக்கள் அவையிலே அவர்களுக்கிருந்த பெரும்பான்மை காரணமாக ஒரே நாளில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவர்களுக்குக் கிடையாது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதம் வந்தபோது நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் முரசொலிமாறன் கலந்துகொண்டு, மக்களுக்கே அதிக அதிகாரம் தருவதாகக் கூறிக் கொண்டு மிட்டா மிராசுகளிடமும், சாதித் தலைவர்களிடமும் அதிகாரத்தைத் தருவதா என்றும், பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய பஞ்சாயத்து ராஜ்யத்தில் உள்ள இரண்டு அடுக்கு முறையே நீடிக்கலாம் என்றும், இல்லாவிட்டால் குழப்பங்கள் பல உருவாகும் என்றும் விளக்கினார்.
இரண்டு அடுக்கு முறையை வைத்துக் கொண்டு அதில் சில சீர்திருத்தங்களைச் செய்தால் போதும் என்பதே கழகத்தின் கருத்து என திட்டவட்டமாகக் கூறினார். மாநிலங்கள் அவையில் மசோதா நிறைவேறுவதற்குப் போதுமான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால் மாநிலங்களவையில் மசோதா தோற்றுவிடும் என்பதால் அன்றையதினம் மசோதாவின் மீது வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற முன்வரவில்லை. அதைப்பற்றி மத்திய பாராளுமன்ற விவகார ராஜாங்க அமைச்சர் ஜேக்கப் அவர்களிடம் கேட்ட போது, பஞ்சாயத்து ராஜ் சட்டம் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்றும், இப்போதுள்ள சூழ்நிலையில் அரசு கொண்டு வரும் தீர்மானம் எதுவும் தோல்வி அடைவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்கள்.
பிறகு அடுத்து அக்டோபரில் நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியடைந்தது. ராஜீவ் காந்தி காலத்திலே அந்த மசோதா தோல்வியடைந்த போதிலும், பிறகு 1993-ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கும் பஞ்சாயத்து ராஜ் பற்றிய தி.மு.கழகத்தின் கருத்து அப்படியே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதைத் தவிர மற்றவைகளில் காமராஜர் காலத்து முறையே இருக்க வேண்டுமென்பதுதான் என்றைக்கும் தி.மு.கழகத்தின் கருத்தாகும்.
மாவட்டங்களின் அளவில் முன்பு இருந்தது போன்று ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறும் "மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள்" இருக்கலாம். இந்தச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து காமராஜர் விரும்பிய ஈரடுக்கு முறை பஞ்சாயத்து ராஜ் தேவையான திருத்தங்கள் சிலவற்றுடன் அமைவதுதான் பெருந்தலைவர் காமராஜருக்கு உண்மையான நினைவுச்சின்னமாக இருக்க முடியும்.
அரசு அலுவலர் பாடிய ஆனந்தப் பள்ளு! அரசு நிலத்தையே அமைச்சர்கள் அபகரிக்கலாம் என்ற அநீதி; நீதியாகி விடுகிற நிலைமைகளையெல்லாம் இந்த நாடு காணுகிற துர்ப்பாக்கியமான சூழ்நிலையில் பதவிப் பொறுப்புக்கு வருவது; மக்களுக்குப் பணியாற்றிடக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று கருதிக்கொண்டு, தூய்மையுடன் தொண்டாற்ற வேண்டுமேயல்லாது, அதைப் பயன்படுத்திக்கொண்டு தன்னை வளப்படுத்திக் கொள்ளும் செயலில் யார் ஈடுபட்டாலும் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முற்படுவேனே தவிர, ஒரு துளியும் ஊக்கப்படுத்திட மாட்டேன் என்று கழகப் பொதுக் குழுக் கூட்டங்களிலும், சட்டமன்றக் கழக உறுப்பினர்களின் கூட்டங்களிலும் நான் அடிக்கடி கூறி வந்தபோதுதான், தென்ஆற்காடு மாவட்டம் வானூர் தொகுதியின் கழகச் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் இருந்த மாரிமுத்து அவர்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு ஜூனியர் விகடன் வார இதழிலே வெளிவந்திருந்தது.
அதை நான் படித்ததும் உடனடியாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு அந்தச் செய்தி உண்மைதானா என்று விசாரிக்கச் சொன்னேன். மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தச் செய்தி உண்மைதான் என்று கூறியதும், கழக ஆட்சியில் ஒரு சிறு தவறும் நடைபெறக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருந்த நான், உடனடியாக அந்தச் சட்டப்பேரவை உறுப்பினருக்கு, அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீட்டினை ஏன் இடிக்கக்கூடாது என்று காரணம் கோரும் அறிக்கையை அனுப்பச் சொன்னேன்.
அந்த நோட்டீசுக்கு அந்தச் சட்டமன்ற உறுப்பினர் எனக்கெழுதிய பதிலில், "நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சேரியின் மையத்தில் குடியிருக்கும் என்னை கழகத்தவர்களும், பல சமூகப் பெரியவர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் சிரமமும், கூச்சமும் இன்றி சந்திக்கவும், சுலபமாகத் தொடர்பு கொள்ளவும் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே சாலையோரத்தில் உள்ள குளம் புறம்போக்கில் கையகப்படுத்தி வைத்திருந்த இடத்தில் பல சிரமங்களுக்கு இடையில் சிறிய குடியிருப்பை அரைகுறையாகக் கட்ட முடியாத நிலையில் வைத்துள்ளேன். மிகச் சாதாரணமான என்னை சட்டமன்ற உறுப்பினராக நாட்டுக்கு அறிமுகம் செய்து, இந்த நிலைக்கு ஆளாக்கிய தங்களின் பெயருக்கும், புகழுக்கும், அரசுக்கும், இயக்கத்துக்கும் இந்த வீடு களங்கம் ஏற்படுத்தும் என தாங்கள் கருதினால் அவ்வீட்டை அரசுக்கோ அல்லது ஊராட்சி மன்றத்துக்கோ தானமாக ஒப்படைத்து விடுகிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.
தவறை உணர்ந்து புறம்போக்கு நிலத்தையும் அதில் அவர் கட்டியுள்ள வீட்டையும் அரசு உபயோகத்திற்கு எவ்வித நஷ்ட ஈடும் இன்றி தந்துவிட முன்வந்ததையேற்று, அந்த வீட்டினை அரசு எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பித்ததோடு, அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அரசு இடத்தைத் திருப்பிக் கொடுக்க வந்ததற்காக அவரையும் பாராட்டியதோடு, கழகத்தினர் யாரும் அத்தகைய செயலிலே ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தேன். இந்த நடவடிக்கை குறித்து 17-9-1989 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ் "தனது கட்சிக்காரராயிற்றே என்று முதல்வர் இந்தச் செய்தியைப் பற்றி அலட்சியமாக இருந்துவிட வில்லை.
செய்தி உண்மை என்று அறிந்ததும் தக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். வேறு வழியின்றி எம்.எல்.ஏ., அந்த வீட்டை அரசிடமே ஒப்படைத்துவிட்டார். இந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டி ஆட்சிக்கு நற்பெயர் தேடித் தருவதில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று தன் கழகத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர். உள்நோக்கம் ஏதுமின்றி, ஒரு பொறுப்போடு உண்மைச் சம்பவங்களைச் செய்தியாக பத்திரிகைகள் வெளியிடும் போது அரசு தீர விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் பாராட்டத்தக்க உயர்வான செயலாகும்.
ஊழல் புகார்களைப் பத்திரிகைகள் சொன்னால், பதிலுக்கு அந்தப் பத்திரிகைகளை மிரட்டுவதும் அவற்றின் மீது கட்சி சாயம் பூசுவதும்தான் இன்று அரசியலில் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடையே தமிழக முதல்வர் கடமையை உணர்ந்து செயல்பட்டிருப்பதை ஓர் ஆரோக்கியமான திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும்" என்று பாராட்டி எழுதியிருந்தது.
அதே ஆண்டில்தான் ஸ்வீடன் நாட்டில் இருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பிரதமர் ராஜீவ்காந்தி பதவி விலக வேண்டுமென்று தேசிய முன்னணி வலியுறுத்தியது. அதையொட்டி 30-8-89 அன்று இந்தியா முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்திட முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் முழு அடைப்பு நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் 16-8-1989 அன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டிலும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதென்று
அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை எப்படியாவது முறியடிப்பது என்று அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வேலை நிறுத்தத்திற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு யாரும் ஆதரவு தரக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர். முதலமைச்சர் என்ற முறையில் செய்தியாளர்கள் முழு வேலை நிறுத்தம் பற்றி என்னிடம் கேட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகம் முழு அடைப்பில் மற்ற தோழமைக் கட்சிகளோடு கலந்து கொள்ளும்.
சட்டம், ஒழுங்கு, அமைதிக்குக் குந்தகம் ஏற்படாமல் தி.மு.க. அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்று கூறினேன். 26-8-1989 அன்று சென்னை பனகல் பூங்காவில் தேசிய முன்னணி சார்பில் முழு வேலை நிறுத்தம் பற்றி விளக்கிட மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், என்.டி. ராமராவ், வி.பி. சிங், ஜோதிபாசு, தேவிலால், ராமகிருஷ்ண ஹெக்டே, ராஜேஸ்வர ராவ், உபேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸ் மற்றும் அவர்களுடைய தோழமைக் கட்சிகள் எல்லாம் இணைந்து அந்த முழு வேலை நிறுத்தத்தைத் தடுக்க படாத பாடுபட்ட போதிலும் "பாரத் பந்த்" மிகச் சிறப்பான முறையில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கிற்கும் பாதகம் வராமல் நடைபெற்றது. அனைத்துத் தரப்பு மக்களும் அந்த முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்கித் தந்தார்கள் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தம் குறித்து 1-9-89 தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் செய்தியாளர் என்.
கணபதி எழுதிய கட்டுரையில், "எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முழு அடைப்பு காங்கிரசல்லாத கட்சிகள் ஆளும் பிற மாநிலங்கள் போலன்றி தமிழ்நாட்டில் மிக அமைதியாக நடந்து முடிந்தது. அது முதலமைச்சர் கருணாநிதியின் நிர்வாகத் திறமையை மீண்டும் உறுதி செய்வதாக இருந்தது. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தி.மு. கழகத்தின் தலைவர் என்ற வகையில் முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமல்ல, அதே நேரத்தில் அந்த முழு அடைப்பை அமைதியான வகையில் நடத்துவதுமாகிய பொறுப்புமிக்க பணி கருணாநிதிக்கு இருந்தது.
ஏதாவது பெருமளவில் வன்முறைகள் நடந்திருந்தால் அது அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் விதியாகவே மாறியிருக்கும். மிகுந்த கவனத்துடனும் மிக்க நிதானத்துடனும் செயல்பட்டு, கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய இரு பொறுப்புகளிலுமே கருணாநிதி பெரும் சாதனை படைத்துவிட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.கழகத்தின் ஆதரவோடு வெற்றிகரமாக நடைபெற்ற அந்த முழு வேலை நிறுத்தம் பற்றி 31-8-89 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா; தமிழக மக்கள், தி.மு.க. ஆட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டதால், தமிழகச் சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தமிழகத்தில் அமல்படுத்தவேண்டுமென்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவின் கீழ் மாநிலங்களை உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றும், அரசியல் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மாநில அரசுகளைச் செயல்படச் செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றும் செய்தியாளர்களிடம் அவர் கூறியது என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியதாகும்.
அத்துடன் அப்போது சென்னைக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை ஜெயலலிதா சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்து, அதற்கு ஓர் காரணமும் கூறினார். அதாவது 1987-ஆம் ஆண்டு "எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக"த் தொடக்க விழாவிற்கு குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வரவிருந்ததாகவும், அப்போது அ.தி.மு.க. சார்பில் ஒரு நினைவுப் பரிசு வழங்கத் தயார் செய்து வைத்திருந்ததாகவும், அந்த நேரம் எம்.ஜி.ஆர்.
இறந்துவிட்டதால் அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றும், இருந்தாலும் தற்போது அந்த நினைவுப் பரிசினை குடியரசுத்தலைவரிடம் வழங்குவதற்காகச் சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். அவ்வாறே செப்டம்பர் 1-ந்தேதி காலையில் ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்து அந்த நினைவுப் பரிசினை அளித்தார். அந்தப் பரிசளிப்பு சந்திப்பே; கழக ஆட்சியைக் கலைக்கவேண்டுமென்ற பரிந்துரையை வற்புறுத்துவதற்காகத்தான்! ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற சிபாரிசுகள், மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் தி.மு.க.
தனது போர்க்குணத்தை விட்டுவிடாமல்தான் ஆட்சியை நடத்தி வந்தது. மாநில ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோமே என்பதற்காக மத்திய அரசின் ஜனநாயக விரோதப் பிரகடனங்களையோ, நடவடிக்கைகளையோ தி.மு.க. ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு உதாரணமாகத்தான் 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை (எமர்ஜன்சி)யை எதிர்த்து ஆட்சியை இழந்த நிகழ்ச்சியும் 500-க்கு மேற்பட்ட கழகத்தினர் அடக்குமுறைக்கு ஆளான நிகழ்ச்சியுமாகும். அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழகத்திலே தி.மு.கழக ஆட்சி மூன்றாவது முறையாக அமைந்த பிறகு மத்திய அரசின் நிர்வாகப் பொறுப்பிலே உள்ள தொலைக்காட்சி, வானொலி போன்றவை தமிழக அரசின் நிகழ்ச்சிகளை ஒலி, ஒளி பரப்பாமல் இருட்டடிப்பு செய்வதில் முனைந்து செயல்பட்டன. தமிழகத்திலே மாத்திரமல்லாமல் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளி பரப்பப்படுவதில்லை என்று பரவலாகப் புகார் எழுந்தது. 17-6-1989 அன்று கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று என்னுடைய தலைமையிலே நடைபெற்று, அதிலே தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகம் அறிவித்த இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்திலே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 26-6-1989 அன்று சென்னை மாநகரிலே மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்று கண்டனப் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், கழகத்தின் முன்னணித் தலைவர்களும், எதிர்க்கட்சியினரும் உரையாற்றியதோடு, மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் அந்த மேடையிலேயே உடைத்து நொறுக்கப்பட்டன.
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான கழகத் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களின் ஊதியத்தைச் சமப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கொள்கை என்றும், ஊதியக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கொள்கையை நிறைவேற்ற வழி வகை செய்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம். குடியரசுத் தலைவர் ஆட்சியில் 1988-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஐந்தாவது ஊதியக் குழுவின் அறிக்கையை உடனடியாகப் பெற்று அதன் பரிந்துரைகளை முன் தேதியிட்டு 1-6-1988 முதலே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையிலே அறிவித்திருந்தேன்.
அதன்படி 16-5-1989 அன்று ஐந்தாவது ஊதியக் குழுவின் அறிக்கையினைப் பெற்று, ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னர் 11.3 இலட்சம் அரசு அலுவலர்களுக்குப் பயனளிக்கக் கூடிய அறிவிப்பினை 8-6-1989 அன்று அறிவித்தேன். 32 பிரிவு அலுவலர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும், 8 பிரிவு அலுவலர்களுக்கு மத்திய அரசு ஊதியத்தைவிட அதிகமாகவும் அளிக்க ஒப்புக்கொண்டதோடு, அலுவலர்களுக்குத் திருமண முன்பணம் உயர்வு, ஊனமுற்றோருக்கு ஊர்திப்படி, 2 லட்சம் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதியம் உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டன.
அந்த ஆண்டில் பயங்கரமான நிதி நெருக்கடி இருந்த போதிலும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 400 கோடி செலவினை அரசு ஏற்றுக் கொண்டது. அரசின் இந்த மகத்தான அறிவிப்பினை தலைமைச் செயலக ஊழியர் சங்கம், தலைமைச் செயலக அரசு அலுவலர் கூட்டமைப்பு, குடிநீர் வாரிய தலைமைச் செயலக அலுவலர் சங்கம், தகவல் சுற்றுலாத் துறை அதிகாரிகள் சங்கம், அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் நலச்சங்கம், மாநகராட்சிப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பு, தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் பேரவை, அரசு அலுவலர் முன்னேற்றக் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக நிர்வாகப் பணியாளர் முன்னேற்றச் சங்கம், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், பெரியார் மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம், மாநில ஓய்வூதியர் சங்கம், அனைத்து மாநில ஓய்வூதிய சங்க ஒன்றியம், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை ஆய்வாளர்கள் மன்றம், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் சங்கம், தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம், அச்சுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், வணிகத் திட்டங்கள் தணிக்கைத் துறை அலுவலர் மன்றம், ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு உதவி மருத்துவர் சங்கம், தமிழ்நாடு திட்டக்குழு அலுவலர் நலச் சங்கம், தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலர் சங்கம், உடற்கல்வி இயக்குநர் கழகம் ஆகியவை நன்றி தெரிவித்து பாராட்டுக்களைக் குவித்தன.
இதனை அறிவித்த மறுநாள் சேலம் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த என்னிடம் செய்தியாளர் ஒருவர் அரசு அலுவலர்களுக்கு அதிக ஊதிய உயர்வு கொடுத்ததால் 400 கோடி ரூபாய் செலவாகுமே, என்ன செய்யப் போகிறீர்கள், கஜானா காலி என்று வேறு சொல்லியிருந்தீர்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு நான் பதில் கூறும் போது, "கஜானா காலி, என்று சொல்லிவிட்டு ஓடிவிடவில்லை. சமாளிப்போம் என்று தன்னம்பிக்கையோடுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.
200 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருமானம் ஐ.எம்.எப்.எஸ். மூலம் கிடைக்கும். ஏற்கனவே இருந்த ஆட்சியில் ஐ.எம்.எப்.எஸ். சில்லறைக் கடைகளைக் கொடுத்த வகையில் 4 கோடி ரூபாய்தான் அரசுக்கு ஆண்டு வருமானம் கிடைத்தது. நாங்கள் அதனை மாற்றி ஏல முறையைக் கடைப்பிடித்ததால் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு அந்தச் சில்லறைக் கடைகள் மூலமே வருமானம் கிடைத்திருக்கிறது. டாமின் என்ற கனிமக் கல் நிறுவனம் ஊழல்களின் காரணமாக பல கோடி ரூபாய் இழப்புக்கு ஆளாகி இருந்தது.
அதுகுறித்து ஆளுநர் ஆட்சியிலே நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், இப்பொழுது அதன் தொடர் நடவடிக்கையாக அந்தத் தவறுகளுக்குக் காரணமாக இருந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்ததோடு டாமின் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் செம்மைப் படுத்தியிருக்கிறோம். டாமினில் மீதியுள்ள கல்லை தனியார்களுக்கு டெண்டர் விடுவதின் மூலம் அரசுக்குக் கணிசமான வருமானம் வரும் என்றும் எதிர்பார்க்கிறோம். அதே போல மற்றும் பல்வேறு துறைகளில் நிர்வாக மேம்பாடு செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டேன்.
பொதுவாக அரசு அலுவலர்க்கு ஊதிய உயர்வு, பல்வேறு சலுகைகள், ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்படுவது; வளர்ச்சித் திட்டங்களுக்கு மேலாகச் செலவாகி விடுகிறது என்ற ஒரு கருத்து சில பத்திரிகையாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் பரப்பப்பட்டு மக்கள் குழப்பத்திற்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், சட்டமன்றத்திலும் அரசு நிகழ்ச்சிகளிலும் நான் உரையாற்றும்போது, "அரசு அலுவலர்க்கு ஆசிரியர் உட்பட அனைவர்க்கும் தருகிற ஊதியம் என்பதும், திட்டச் செலவுக்குள்தான் அடங்குகிறது. அவர்கள் வேலை பார்க்காமல் திட்டங்கள் நிறைவேறாது என்பதால்; திட்டச் செலவையும் அலுவலர்க்கான ஊதியச் செலவையும் பிரித்துப் பார்த்துப் பேசுவது சரியல்ல" என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
"சித்திரச் சோலைகளே உமை நன்கு திருத்த இந்தப் பாரினிலே, எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே!" எனும் புரட்சிக் கவிஞரின் கவிதையை நெஞ்சில் பதித்திருக்கும் எனக்கு பாடுபடும் மக்களின் மீதுள்ள பரிவும்- அவர்களால் சமுதாயத்துக்குக் கிடைக்கும் பயனும் மறக்கக் கூடியவைகளா? 1989-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் மாநிலங்கள் அவைக்கான தேர்தல் ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றபோது தி.மு.
கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், விடுதலை விரும்பி, ஜெ.எஸ். ராஜூ, ஜி. வெங்கட்ராமன் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவினைப் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், தமிழ் மாநிலச் செயலாளருமான திரு. ஏ. நல்லசிவன் அவர்களும் நிறுத்தப்பட்டார். இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் அவர்களும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார்.
அந்தத் தேர்தலில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவையில் தி.மு.கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாகவும், அ.தி.மு.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 லிருந்து குறைந்து ஆறாகவும் ஆகியது.
1989-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 1-ஆம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் என்னுடைய தலைமையில் வடசென்னை பகுதியில் எண்ணூர் தீவில் சென்னை அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆளுநர் அலெக்சாண்டர் அந்தப் பகுதியிலே அமைந்த குடியிருப்புப் பகுதிக்கு அடிக்கல் நாட்டினார். மாநிலத் தொகுப்பின் மின் உற்பத்தித் திறனை விரைந்து அதிகரிக்க வேண்டிய இன்றியமையாமையைக் கருத்திற் கொண்டு சென்னை அனல் மின் திட்டம் தீட்டப்பட்டது.
ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து பிரிவுகளை நிறுவுவதற்கான திட்ட அறிக்கை மத்திய மின் ஆணைக் குழுமத்திற்கு அனுப்பப்பட்டு, மூன்று பிரிவுகளுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே வழங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டிருந்ததால் இத்திட்டத்தினை இரண்டு கட்டங்களாக - அதாவது முதற் கட்டத்தில் மூன்று பிரிவுகளும் பின்னர் எதிர்காலத்தில் இரண்டாவது கட்டமாக இரண்டு பிரிவுகளும் நிறுவலாம் என்று மத்திய மின் ஆணைக் குழுமம் ஆலோசனை வழங்கியது. அதற்கேற்ப முதற்கட்டத்தில் ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்று பிரிவுகளை அமைக்கும் வகையில் திட்ட அறிக்கை மாற்றப்பட்டு மத்திய மின் குழுமத்தின் பரிந்துரை பெறப்பட்டு 721 கோடி ரூபாய் செலவில் அதனை அமைக்க திட்டக் குழுவின் அனுமதியையும
் பெற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா கழக ஆட்சியில் நடைபெற்றது. இதற்காக ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டபோது தனிப்பட்ட சில நிலவுடைமையாளர்கள் நீதிமன்றத்தின் துணையோடு அந்த அனல் மின் நிலையம் அமைவதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நிலத்தைத் தர மறுத்தார்கள். அதிகாரிகள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் திட்டத்திற்கான பணியிலே தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த நிலச் சொந்தக்காரர்களை நேரில் வரச் சொல்லி, அவர்கள் உச்ச நீதிமன்றத்திலே பெற்றிருந்த இடைக்காலத் தடையைத் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். உடனே அந்த நில உடைமையாளர்களான வி.ஜி.பன்னீர் தாஸ் அவர்களின் சகோதரர்கள் வி.ஜி.சந்தோஷம் அவர்களும் செல்வராஜ் அவர்களும் அந்தப் பகுதியிலே ஒரு அதிசய உலகத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களுடைய அண்ணன் கண்ட கனவு என்று அவர்களுடைய அண்ணன், மறைந்த பன்னீர் தாஸைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
நான் அப்போது அவர்களிடம் "உங்கள் அண்ணன் கண்ட கனவு வொண்டர்லான்ட் (அதிசய உலகம்); ஆனால் எங்கள் அண்ணன் கண்ட கனவு இந்தத் தமிழகத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்பதாகும்; அதற்காக உங்கள் அண்ணன் கண்ட கனவை விட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.
பிறகு அவர்களும் தாமாகவே முன் வந்து அந்த இடத்தை விட்டுக் கொடுக்க முன் வந்தார்கள். நான் அதற்காக அந்த அடிக்கல் நாட்டு விழாவின் போது நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவ்வாறு தொடங்கப்பட்ட வட சென்னை அனல் மின் நிலையம் இன்றைய தினம் கழக அரசின் சாதனைப் பட்டியலில் ஒரு மைல் கல்லாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
