உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"நடந்தாய் வாழி காவேரி!"
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"நடந்தாய் வாழி காவேரி!" · 298 / 391

"நடந்தாய் வாழி காவேரி!" நா ன் பிறந்த வருடமான 1924க்கும் காவிரிப் பிரச்சினைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூர் ராஜ்யமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஐம்பது ஆண்டுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரி நீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது பற்றி கலந்து பேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்சினை ஏற்படின் மத்திய அரசை நாடியோ, நடுவர் தீர்ப்பை நாடியோ, உரிய முடிவெடுக்கக் கூடிய வழிவகை காண்பது பற்றி தீர்மானித்திட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ஆம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமாகும்.

இடைப்பட்ட ஐம்பதாண்டு காலமும் பெரும்பகுதி பிரச்சினைகள் எதுவும் அதிகமின்றி நிலைமை இருந்ததற்கு மாறாக; 1974-க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924- ஆம் ஆண்டு ஒப்பந்தமே 1974-ஆம் ஆண்டு முடிந்து விடுகிற அதற்கு வாதிடத் தலைப்பட்டு; ஒப்பந்தமென்று முன்னதாகவே 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968-ஆம் ஆண்டு ஹேமவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக அரசு, தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன்; மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது.

மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி 19-8-1968 அன்றும் 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரித் தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சு வார்த்தையை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.கே.எல். ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். கர்நாடக முதலமைச்சர் திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் பொதுப்பணித் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் கலந்துகொண்டார். நான், தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று கலந்துகொண்டேன்.

முக்கியமாக 1892,1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது. முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர் 1969-ல் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9-ஆம் நாள், மீண்டும் கே.எல். ராவ் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு எதுவும் ஏற்படவில்லை. தமிழக மக்கள், தங்களின் அன்னையாக - அருள்பாலிக்கும் தெய்வமாக- அன்பு மருமகளாக ஆண்டாண்டு காலமாக ஏற்றுப் போற்றி வரும் காவிரியைப் பிரிந்து விட நேரிடுமோ என்ற கவலையில் ஆழ்ந்தனர்.

அந்தக் கவலை இன்னும் முழுமையாகத் தீர்ந்திடாத நிலையிலேயே நான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். காவிரியின் மீது எத்துணை அன்பும், பக்தியும், மரியாதையும் தமிழ் மக்கள் கொண்டுள்ளனர் என்பதற்கு நமது பழைய இலக்கியங்கள் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கின் போது ஆடவரும், பெண்டிரும் கொண்டாடி மகிழும் விழாக்கள் சான்றாக விளங்குகின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டும்பொழுது 1975-ஆம் ஆண்டு; தமிழக அரசின் சார்பில் காவிரிப்பூம்பட்டினத்தை புதிய பூம்புகாராக உருவாக்கிப் பெருவிழா கொண்டாடிய நாளில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய நீண்ட கவிதையில் காவிரி பற்றிக் குறிப்பிட்ட பகுதி நினைவுக்கு வருகிறது.

"குடகுமலை உச்சியிலே கோலங்காட்டி அழகுமகள் காவிரியும் ஆடவந்தாள் ஆடவந்த ஆரணங்கை அடைவதற்கு ஓடிவந்த கர்நாடகத்தான் "அணை" என்றான் - அவன் கையணையைத் தாண்டிக் கல்லணைக்குள் நுழைந்து - தன் கற்புநெறி காப்பதற்குத் தஞ்சைக்குத் தாவி வந்தாள் பூம்பாவை காவிரியின் புகார் கேட்டுச் சோழ மன்னன் பூம்புகாரின் கடல் அலையைக் கணவனாய் ஆக்கிக் காத்தான் பிறந்த வீட்டை மறந்திடாமல் - என்றும் புகுந்த வீட்டு வளமும் பெருக வாழ்வதுதான் பெண்மணிக்குப் பெருமையென்றால் - நம் கண்மணியாம் காவிரிக்கும் அது பொருத்தம்தானே?"

"நடந்தாய் வாழி காவேரி" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் யாத்துத் தந்த இலக்கிய காலத்துக்கு முன்பிருந்தே எத்தனையோ நூற்றாண்டுகளாக; "மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து" தமிழ் மங்கையர், மறவர், மழலையர் என இந்த மண்ணின் மைந்தர் களித்திடக் களித்திட, சதங்கை கட்டி ஆறுகளில் வாய்க்கால்களில் ஓடைகளில் சங்கீத ஒலியெழுப்பி வந்து கொண்டிருக்கும்; காவேரி காய்ந்து போனால் கருகிப் போகுமே கழனியை நம்பியுள்ள உழவர் வாழ்வும் - அந்த உழவர்களை நம்பியுள்ள அனைத்து மாந்தரின் வாழ்வும் - என்ற கவலை, ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிடினும் எனக்கு என்றுமே உண்டு.

ஏனெனில் இந்த உலகிற்கு நான் வந்து முதலில் எழுப்பிய குரல், காவிரிக்கரை ஓரத்திலேதான்! காவிரியை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களால் அந்தப் பிரச்சினை தமிழகத்தின் வாழ்வுப் பிரச்சினையாகவே கருதப்பட்டது. தேசிய உணர்வு - ஒருமைப்பாடு - ஒரே நாடு - இந்த அடிப்படைகளில் மட்டுமல்லாமல் பழைய ஆயக் கட்டுகளின் உரிமை என்ற சட்ட விதிமுறைகளின் படியும் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் குரல் அழுத்தம் திருத்தமான நியாயத்தின் அடிப்படையில் எழுந்ததேயாகும்.

திரும்பத் திரும்ப நமது வலியுறுத்தலினால் 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12, மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. எனவே 1971 ஜூலை 8-ஆம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிற்கு ஆணை வழங்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்கு பிரச்சினையை விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார். 21-5-1972 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, வழக்கு இல்லாமலே பேச்சு வார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம் என்று உறுதி கூறியதின் பேரில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது.

அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73, ஆகிய நாட்களில் மத்ய பாசன அமைச்சர்கள் கே.எல்.ராவ் முன்னிலையிலும், 27-6-74 அன்று கே.சி. பந்த் முன்னிலையிலும், 29-11-1974, மற்றும் 15-2-75 ஆகிய நாட்களில் பாபு ஜெகஜீவன்ராம் முன்னிலையிலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. எனினும் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தம் தமிழகத்தின் பாசனத்தைப் பாதுகாக்கும் அளவுக்கு மேட்டூரில் தேவைப்படும் நீர் கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்காததால் இரவு முழுதும் விடிய விடியப் பேசியும் இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட வில்லை.

பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சிகளைக் கலந்தாலோசித்து தமிழக அரசு மத்திய அரசினை நடுவர் மன்றம் அமைக்குமாறு கோரி 1975 மே திங்களில் கடிதம் எழுதியது. 25-8-1976 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியில் மத்திய அரசால் மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. 1977-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசும் அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து 5-8-78, 3-9-78, 9-10-78, 18-9-80, 27-12-80, 13-8-81 ஆகிய நாட்களில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையிலும், 14-10-81 மற்றும் 15-10-81 ஆகிய நாட்களில் தமிழக, கர்நாடக மாநில அரசுகளின் இடையேயும் 5-4-83 அன்று மத்திய அமைச்சர் ராம் நிவாஸ் மிர்தா அவர்கள் முன்னிலையில் இரண்டு மாநில முதலமைச்சர்களும், 5-1-84 அன்று பெங்களூரில் இரண்டு மாநில முதல் அமைச்சர்களும், 5-11-1985 அன்று அதிகாரிகள் மட்டத்திலும், பேச்சுவார்த்தை நடைபெற்றது.

23-11-85 அன்று சென்னையில் தமிழக, கர்நாடக மாநில முதல் அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பயன் எதுவும் ஏற்படாததால், வேறு வழியின்றி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று தமிழகத்தின் சார்பில் கோரப்பட்டது. 16-6-1986 அன்று மத்திய அமைச்சர் பி.சங்கரானந்த் முன்னிலையில் மாநில முதல் அமைச்சர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 6-7-1986 அன்று நடுவர் மன்றம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற மத்திய அரசின் விருப்பத்திற்கு தமிழக அரசு இணங்கவில்லை. தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதையொட்டி 19-9-1988 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால், நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிற்கு ஆணை வழங்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் 25-9-1988 அன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

18-10-1988 அன்று பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது. 1989-இல் கழக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் இதற்கு முடிவு காண முற்பட்டபோது கர்நாடக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. எனினும் கர்நாடக மாநில ஆளுநரோடு 8-8-1989 அன்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதால் அப்போது சுமுகமான முடிவு காண முடியாவிட்டால் உடனடியாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் 27-7-1989 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். 8-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கடிதம் மூலம் கவர்னர் ஒப்புக்கொண்ட நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், திடீரென்று கர்நாடக கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினால்தான் பயனுள்ளதாக இருக்குமென்று கடிதம் மூலமும் ஏடுகள் மூலமும் தெரிவித்து விட்டார்.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்று திரு.வி.பி. சிங் பிரதமராக 2-12-1989 அன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவர் பிரதமர் பொறுப் பேற்ற பிறகு காவிரிப் பிரச்சினையில் ஏற்பட்ட திருப்பங்கள் காரணமாக அவற்றைத் தொடர்ந்து 1999 வரையிலான சில முக்கிய முன்னேற்றங்களை இந்த அத்தியாயத்திலேயே குறிப்பிட வேண்டியிருக்கிறது. அரசின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு; நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கடிதம் எழுதினேன்.

அதனையொட்டி டெல்லியில் மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சர் கூட்டியிருந்த காவேரி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது 1968-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திலே நான் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், வீரேந்திர பட்டீல் முதல் அமைச்சராகவும் இருந்து தொடங்கிய பேச்சுவார்த்தை 22 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே பிரச்சினைக்காக 24 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த பிறகு 25-வது தடவையாகப் பேச்சுவார்த்தை நான் முதல்வராகவும், வீரேந்திர பட்டீல் அவர்கள் முதல்வராகவும் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மத்தியிலே நீர்ப்பாசனத் துறை அமைச்சர்களாக இருந்த டாக்டர் கே.எல்.

ராவ், கே.சி. பந்த், ஜெகஜீவன்ராம், ராவ்பிரேந்திரசிங், ராம்நிவாஸ் மிர்தா, பி. சங்கரானந்த் ஆகியோரால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லை. 1970-ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினையை நடுவர் மன்றத்திற்கு விட வேண்டுமென்று தி.மு.க. அரசினால் விடுத்த கோரிக்கை 1975-ஆம் ஆண்டு தி.மு.க. அரசினால் புதுப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசினால் 1986-ஆம் ஆண்டும் ஆளுநரால் குடியரசுத் தலைவர் ஆட்சியில் 1988-ஆம் ஆண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அந்தக் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் உடனடியாக இதனை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அனுப்ப வேண்டுமென்று குறிப்பிட்டேன். அதற்குப் பிறகும் பேச்சு வார்த்தையிலே முடிவு வராததால் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வி.பி. சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மனுவினை அளிக்க சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக் கொண்ட போதிலும், கடைசி நேரத்தில் வர மறுத்து அவர்கள் தனியாகச் சென்று ஒரு மனுவினை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவது போல 1924-ஆம் ஆண்டின் காவேரி ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது என்பதாகும். அதனை ஏடுகளில் படித்து விட்டு தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அ.தி.மு.க.வைக் கண்டித்தனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தின் சார்பில் திரு. ரெங்கநாதன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தினை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டது. உடனே பிரதமர் வி.பி. சிங் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் என்ன தெரிவிக்கலாம் என்று கேட்டார். இனிமேல் நாங்கள் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இல்லை, இதைத் தெளிவாக்கி விடுங்கள், அப்போதுதான் எங்களுக்கு நடுவர் மன்றம் கிடைக்குமென்றேன்.

அதனையொட்டி உடனடியாக 24-4-1990 அன்று சட்டப் பேரவையில் தீர்மானத்தையும் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பிவைத்தோம். அது மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இனி பேச்சு வார்த்தை இல்லையென்றால் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நடுவர் மன்றம் அமைந்த பிறகு, இந்தப் பிரச்சினையை முழுவதும் விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு நீண்ட நாளாகும் என்பதால் ஒரு இடைக்காலத் தீர்ப்பு வழங்குங்கள் என்று கழக அரசின் சார்பில் 28-7-1990 அன்று வேண்டுகோள் விடுத்தோம்.

5-1-1991 அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றது. நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பு அளியுங்கள் என்று உச்சநீதிமன்றத்திடம் 10-1-1991 அன்று கழக ஆட்சியிலே ஒரு வழக்கு தொடர்ந்து "அதிகாரம் உண்டு" என்று 26-4-1991 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நடுவர் மன்றம் அளித்த இடைக்கால ஆணைதான் ஆண்டு ஒன்றுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்ந

ாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டும் என்பதாகும். இந்த ஆணைப்படி கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க மறுத்த நிலையிலேதான் இடைக்கால ஆணையை நிறை- வேற்றுவதைப் பற்றிக் கண்காணிப்பதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமென்று கோரி பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எங்களையெல்லாம் அழைத்து வைத்து 9 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அதிலும் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் வாரத்தில் ஏற்பட்டபோது தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழ், ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்தும் அந்த ஒப்பந்தத்தை வரவேற்றுப் பாராட்டியிருந்தன.

ஆனால் ஜெயலலிதா மட்டும் தங்களுக்கு உடன்பாடான ஒப்பந்தம் அல்ல, நிராகரிக்கிறோம் என்று அறிக்கை விடுத்தார். இந்த இடைக்கால ஆணையை நிராகரிக்க வேண்டுமென்று கர்நாடக மாநில சட்டப் பேரவை 1991-ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தற்போது 1998-இல் பிரதமர் முன்னிலையிலே ஏற்பட்ட ஆணையம் அமைக்கும் ஒப்பந்தத்தின்படி கர்நாடக மாநிலம் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையான 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற போது அந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி தி.மு. கழகம் கலந்து கொண்டது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் 1989-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டபோது அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாதது மாத்திரமல்ல, தி.மு.கழகத்தைக் கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கையும் விடுத்தார்.

அதுபோலவே 1991-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அ.தி.மு.க. அரசு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டியபோது தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பே அனுப்பவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நல்லசிவன் அவர்களுக்கு முதலில் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பிவிட்டு பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்ட அநாகரீகமும் நடை பெற்றது.

எப்படியோ நீண்ட கால இன்னல்களைச் சந்தித்து; 1998- இல் காவிரி ஆணையம் ஒன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டாலும் கூட; நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் தமிழகம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய நிலைதான் இன்று வரையில் இருக்கிறது. இரு மாநில மக்களும் மகிழத்தக்க அந்த இறுதித் தீர்ப்பு வந்த பின்னர்தான் "நடந்தாய் வாழி காவேரி" என்ற சிலப்பதிகாரத்தின் கவிதை வரிகளை நம்மால் உரக்க இசைக்க முடியும்.

உளமார இசைக்க முடியும்.