நெஞ்சுக்கு நீதி
சீனத்து மாணவர்கள்! · 297 / 391
செங்குருதியில் குளித்த சீனத்து மாணவர்கள்! சோ ளக் கொல்லைக் காவலுக்கு ஒரு பொம்மை; பறவைகள் அந்தப் பொம்மையின் மீதே கூடு கட்டிக்கொண்டு சோளக் கதிர்களைச் சுவைத்துக் கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ; அப்படி சில அரசுகள் இந்த நாட்டில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் அமைந்துவிடுகின்றன. உலக வரலாற்றில் அன்று முதல் இன்று வரை குன்றனைய ஊழல் புரிந்த அரசுகளின் வரிசையில் 1989ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு லிபரல் ஜனநாயகக் கட்சியின் அரசு, தன்னை இணைத்துக் கொண்ட பரிதாபம் நடைபெற்றது.
அக்கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த தகேஷிதா என்பவர், "ரெக்ரூட்" என்ற மிகப் பெரிய தொழில் நிறுவனத்திடம் பத்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது. ஆளுங்கட்சியின் தலைவராக இருந்த ஷிண்டோரா அபி என்பவர்; அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று ஒப்புக் கொண்டார். பிரதமர் தகேஷிதாவோ; அவரும் அவரது உதவியாளர்களும் "ரெக்ரூட்" நிறுவனத்திடம் பணம் வாங்கியது உண்மையென்றும்; ஆனால் அது லஞ்சமாக வாங்கப்பட்டதில்லையென்றும் கட்சிக்காக வாங்கப்பட்ட நன்கொடை என்றும் கூறினர்.
இந்த ஊழலை எதிர்த்து ஜப்பானில் ஏற்பட்ட கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல்; தகேஷிதா பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இந்த ஆண்டில் ஜப்பானில் மட்டுமல்லாமல் புரட்சியில் பூத்த புது மலர் எனப்படும் சீனப் பெருநாட்டிலும் எதிர்பாராத விதமாக மாணவர்களின் கிளர்ச்சியொன்று வெடித்துக்கிளம்பியது. தமிழ் மொழி காத்திடும் போருக்குப் புது வலிவூட்டி இரத்தத் தடாகத்திலே தங்கள் உடல்களை மிதக்க விட்ட தாய்நாட்டு மாணவச் செல்வங்களின் மன உறுதியையும், தியாகச் செயல்களையும், துப்பாக்கி ரவைகளைத் தும்பைப் பூச்செண்டுகளாக அவர்கள் தமது நெஞ்சகத்தில் தாங்கிக் கொண்ட வீரதீர நிகழ்ச்சிகளையும்; பாளையங்கோட்டை தனிமைச் சிறைக் கொட்டடியிலிருந்து கேட்டறிந்து இதயம் நொறுங்கிப் போனவன் நான் என்ற காரணத்தால்; மாணவர்கள் போராட்டம் எங்கு நடைபெற்றாலும், எந்தக் காரணங்களுக்காக நடைபெற்றாலும் அதன் தன்மையும், அதனால் ஏற்படும் விளைவுகளும் எப்படியிருக்குமென்பதை நன்கு உணர்ந்தவன் என்ற முறையில் அந்தப் போராட்டச் செய்திகளை அறிந்து கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டினேன்.
1989-ஆம் ஆண்டு சீனாவில் அந்தப் போராட்டம் வெடித்த அதே ஏப்ரல் திங்கள் 29-ஆம் நாள் "வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்திடுங்காண்; மக்களிடை எழுச்சிக்கு மருந்தாகுங்காண்" என்று மாணவர்களைப் போற்றிப் பாடி வீறு கொள்ளச் செய்திட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 99-வது பிறந்த நாள் விழாவிலே கலந்து கொண்டு, அவரது 100-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப்படுமென்றும், அவரது குடும்பத்தினர்க்கும் பதிப்பகத்தினருக்கும் பத்து இலட்சம் ரூபாய் கொண்ட பொற்கிழி வழங்கப்படுமென்றும் அறிவித்து, அவ்வாறே அளித்து மகிழ்ந்திருக்கிறேன்.
அந்த விழாவில் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களுக்கு திரு.வி.க. விருதும், அதே விருதுகள் டாக்டர் சுப்பு ரெட்டியார், மணவை முஸ்தபா ஆகியோருக்கும், பாரதிதாசன் விருது, கவிஞர்கள் முடியரசன், பொன்னிவளவன், அப்துல் ரகுமான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. விழாவில் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன், அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா மகிழ்ச்சியில் இருந்த போதிலும், சீனத்து மாணவர்களின் கிளர்ச்சி என்னவாயிற்று என்றறியும் துடிப்பு மிகையாக இருந்தது. ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அங்கே மாணவர்கள் போர்க் கொடி உயர்த்தியிருந்தார்கள். மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாயினும்; நல்வாழ்வுத் திட்டங்களையே நிறைவேற்றுவதாயினும்; அதனைச் சர்வாதிகார அடிப்படையில்தான் நடைமுறைப் படுத்துவது என்று சங்கற்பம் செய்து கொண்டு பரிபாலனம் நடத்துவோர் முன்பு ஜனநாயக உரிமைகள் தேவை என்ற கோரிக்கை, அவ்வளவு எளிதில் ஒரு மலரைக் கிள்ளிப் பறிப்பது போல் நிறைவேறிவிடுமா?
மரத்தைப் பிளப்பது போலத்தானே சிரமம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அதன் காரணமாக, மாணவர்களின் முதற்கட்டப் போராட்டமாக அமைந்த உண்ணாவிரதப் போராட்டம் உதாசீனப்படுத்தப் பட்டு விட்டது எனினும், ஒரு வார காலம் நீடித்த அந்தப் போராட்டம் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ளும் போராட்டமாக உருவெடுத்து, தலைநகர் பீகிங்கில் தியானன்மென் சதுக்கத்திலேயே மிகப் பெருங்கிளர்ச்சியாக மாற்றம் பெற்றது. கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஜாவோ ஜியாங்கும், சீனப் பிரதமர் லீ பெங்கும் அந்த மாணவர்கள் மத்தியில் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.
பீகிங் நகரில் இராணுவ சட்டம் முதன் முறையாகப் பிறப்பிக்கப்பட்டது. பல இடங்களில் போலீசாருக்கும் மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமுற்றனர். போலீசாருக்கு உதவிட ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைக்கப்பட்ட அந்த ராணுவம், பீகிங் நகரை நோக்கி ஐந்து கல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, மாணவர்களும் பொதுமக்களும் எதிரே சென்று தடுத்து நிறுத்தி விட்டார்கள். இராணுவம் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், அவர்களுக்குத் துணை நின்ற தொழிலாளர்களும், பொதுமக்களும், சீனத்துச் சிந்தனையாளர்களும் இணைந்து போராட்டத்தை விரிவுபடுத்திட ஓர் அமைப்பினை உருவாக்கினார்கள். அந்த அமைப்புக்குத் தலைவராக மாணவரான சியாலிர்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளரான ஜாவோ ஜியாங் அந்தப் போராட்டத்தால் கவரப்பட்டு, மாணவர்களை ஆதரிக்கத் தொடங்கியதால், அவருக்கும் மற்ற தலைவர்களுக்குமிடையே மனக்கசப்பும் மோதலும் ஏற்பட்டது.
போராட்டம் உச்சகட்டத்தை அடையவே; சீன ராணுவம் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 மாணவர்கள் பலியானார்கள் என்ற செய்தி வந்தது. அப்போது எனக்கு மாணவர்கள் மாயூரம் சாரங்கபாணி, சிவகங்கை ராஜேந்திரன் நினைவுதான் நெஞ்சைப் பிழிந்தது. மொழிப் போரில் உயிர் நீத்த மாணவ சிங்கங்கள் அவர்கள். அங்கே சீனாவில் ஜனநாயக உரிமை கேட்கும் போரில் மாணவர்கள் மடிந்து போகிறார்கள். இங்கே ஜனநாயக உரிமை இருந்தும் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சீனாவில் நிலைமை மேலும் மேலும் விபரீதமாகவே போராட்டத்தை அடக்கிட, மறியல் செய்த மாணவர்கள் மீது ராணுவ டாங்கிகளை ஏற்றியதில் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தச் செய்தி ஜூன் முதல் வாரத்தில் சீன வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன்; கலவரம் வெடித்ததில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்டார் எனும் செய்தியும் வந்தது. மூவாயிரம் மாணவர் இறந்து, பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் காயமுற்றதைத் தொடர்ந்து, இராணுவ அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்ற ராணுவ வீரர்கள் மறுத்தனர்.
அப்படி மறுத்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சீன அரசின் இந்தக் கொடுமையான நடவடிக்கைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தன. சீனாவுக்கு ஆயுத உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. மாணவர்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவிய பிரதமர் லீ-பெங்கை இளம் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டதில் அவர் காலில் குண்டு பாய்ந்த காயத்துடன் தப்பினார். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புரட்சியில் பூத்த புதுமலர் என சிறப்பிக்கப்பட்ட செஞ்சீனம்; செங்குருதியில் குளித்த எதிர்ப் புரட்சியொன்றைக் காண நேரிட்ட அந்த 1989-ஆம் ஆண்டினை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. மாணவர்கள் தொடங்கிய மொழிப் புரட்சியினால் இங்கே வெற்றி கிடைத்து இந்தி ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டதென்றால்; அதற்கு இங்கே ஜனநாயக முறை இருந்ததே காரணம்; ஆனால் அங்கே ஜனநாயக உரிமை கோரியே போராட வேண்டியிருந்ததால் அந்தப் போராட்டம் நசுக்கப்பட்டது!
சீனாவில் மாணவர்களைச் சுட்டுத் தள்ளி அவர்கள் மீது ராணுவ டாங்கிகளை ஏற்றி மூவாயிரம் பேரைச் சாவுக் குழியில் தள்ளிய அதே 4-6-1989 அன்றுதான் பத்தாண்டு காலம் சர்வாதிகாரியாக இருந்து ஈரான் நாட்டை வழி நடத்திக் கொண்டிருந்த கோமேனி அந்த நாட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அந்தத் துயரத்தை வெளிப்படுத்த ஈரான் மக்கள் அனைவரும் கறுப்புடை அணிந்து, கறுப்புக் கொடியுடன் 40 லட்சம் பேர் திரண்டனர் என்றும், கூட்ட நெரிசலில் இறுதி ஊர்வலத்தில் பலர் நசுங்கி மாண்டனர் என்றும் செய்திகள் வந்தன.
இதற்கு முதல் வாரம் 26-5-1989 அன்று தேசிய முன்னணியின் தலைவர்களில் ஒருவரான வி.பி.சிங் அவர்கள் சென்னையில் என்னை என் இல்லத்தில் சந்தித்து, விரைவில் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்தும் விவாதித்தார். அப்போது பிஜு பட்நாயக், பி. உபேந்திரா ஆகியோர் உடனிருந்தனர். அதே ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற எனது 66-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது; "டாக்டர் கருணாநிதி எனது நெருங்கிய நண்பர்களிலே ஒருவர்.
அவர் எப்படி உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று கேட்கலாம். ஆதி காலத்திலிருந்து அவர் எனக்கு நெருங்கிய நண்பரல்ல. எமர்ஜன்சி காலத்தில் நானும் அவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் இரவு பகல் என்று பாராமல் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். நான் மக்களவையில் சபாநாயகராக இருந்தபோது சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ராஜாஜி அவர்களையும் அண்ணா அவர்களையும் டாக்டர் கருணாநிதி அவர்களையும் சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டபோது, அண்ணாவும் கருணாநிதியும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.
அப்போது ராஜாஜி என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கும்போது டாக்டர் கருணாநிதியைக் காட்டி, இவர்தான் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் என்று அப்போதே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே ராஜாஜி அவர்கள், கருணாநிதி மிகவும் சிறந்தவர், கண்ணியமானவர், பிரகாசிக்கப் போகிறவர் என்பதை அறிந்து வைத்திருந்தார். ராஜாஜியைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவரை உடம்பெல்லாம் மூளையைப் பெற்றவர் என்று சொல்வதுண்டு.
நான் இங்கு வந்திருப்பதற்குக் காரணமே டாக்டர் கருணாநிதி அவர்களை வாழ்த்துவதற்காகத்தான். அவர் மிகவும் என்னிடத்திலே அன்பு கொண்டவர். அது மட்டுமல்ல, இந்த நாட்டிற்கு பல நல்லது செய்திருக்கிறார். எமர்ஜென்சியை எதிர்த்து தமது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தவர். அந்த அளவுக்கு எமர்ஜென்சியை எதிர்த்து நாட்டிற்கு அரும்பணி ஆற்றியவர் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். டாக்டர் கருணாநிதி 90 வயதிற்கு மேல் நிச்சயமாக வாழ்வார்.
அதே நேரத்தில் அவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் தொண்டாற்றுவது மாத்திரமல்ல, அவருடைய சேவை இந்தியாவிற்கே தேவை. அவருக்கு கருணாநிதி என்று பெயர்வைத்த அவரது பெற்றோர் மிக அருமையான பெயரை வைத்திருக்கிறார்கள். கருணை உள்ள அந்தப் பெயர் கொண்ட அவர், இந்திய மக்களுக்கே அவரது கருணையால் நன்மைகள் கிடைக்கச் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
இப்படி அவர் பேசியபோது: எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவரை அழைத்து சட்டமன்ற மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் படத்தைத் திறக்கச் செய்தாரே; அப்போதும் அவர் (சஞ்சீவ ரெட்டி) இதே "எமர்ஜென்சி" செய்தியைச் சொல்லி பேரவை மண்டபத்தில் என்னைப் பாராட்டியதை நினைவு கூர்ந்து நெகிழ்ந்து போனேன். "நெருக்கடி நிலை" தீதானது என்ற போதிலும் எவ்வளவு பெரிய உள்ளம் படைத்த தலைவர்களை எனக்கு நெருக்கமான நண்பர்களாக்கியிருக்கிறது என்ற பெருமிதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் திரைப்படத் துறை பிரச்சினைகள் குறித்து என்னிடம் கலந்து பேச வேண்டுமென்று, திரைப்படத் தயாரிப்பாளர்கள்- விநியோகஸ்தர்கள்- திரைப்பட அரங்கு உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று அவர்களின் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து விவாதித்தேன். அதன் விளைவாக 9-6-1989 அன்று வெளியிட்ட அறிக்கையில், கேளிக்கை வரியைக் குறைத்தும் - சினிமா அரங்குகளில் நியாயமான அளவு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தும்- குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான படங்களுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்குவது என்றும்- திரைப்படத் துறைக்குப் பல சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு; அந்தச் சலுகைகள் படிப்படியாக விரிவாகக் கிடைக்கவும் கழக ஆட்சியில்தான் வழி காணப்பட்டது.
11-6-1989 அன்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற என்னை, செய்தியாளர்கள் சந்தித்தபோது "பிரதமர் ராஜீவ் காந்திக்கும் உங்களுக்கும் உறவுமுறை இப்போது எப்படியிருக்கிறது?" என்று கேட்டனர். அதற்கு நான் பதில் அளிக்கும் போது, "அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையிலும், நான் தி.மு.க. தலைவர் என்ற முறையிலும் எங்களிடையே அரசியல் ரீதியான உறவு இல்லை எனினும்; அவர் இந்தியப் பிரதமர் என்ற முறையிலும், நான் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் என்ற முறையிலும் எங்கள் உறவு நன்றாகவே இருக்கிறது.
இடையில் இந்த உறவைக் கெடுக்க தமிழ்நாட்டில் உள்ள ஒருசில அரசியல்வாதிகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு ராஜீவ் காந்தியைச் சுற்றி இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. அரசின் மீது சேறு வாரி இறைக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று கூறினேன்.
பின்னர் நான்கு நாட்கள் கழித்து பிரதமர் ராஜீவ் அவர்கள் ஆந்திராவிலிருந்து பீகார் செல்லும் வழியில் 15-6-1989 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் ஆளுநர் அலெக்சாண்டர் அவர்களும், நானும், அமைச்சர்களும், முரசொலி மாறனும் வரவேற்றோம். விமானநிலையத்திலேயே ராஜீவும், நானும், மாறனும் தனியாகச் சென்று சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். இலங்கைப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையில் இடையில் தொய்வு ஏற்பட்டுவிட்டதையும், டெல்லிக்கு வந்ததும் தன்னை மாறன் சந்திக்க வேண்டுமென்றும் ராஜீவ் கூறினார்.
தி.மு.கழக அரசினைப் பாராட்டி 9-7-1989 அன்று "கல்கி" வார இதழ் ஒரு நீண்ட தலையங்கம் எழுதியிருந்தது. எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருப்பினும்; அவற்றைக் கண்ணியமாகச் சுட்டிக் காட்டுவதிலும்- அதே போலப் பாராட்டும் பண்பிலும் எப்போதுமே என்னைக் கவர்ந்த வார ஏடுகளில் கல்கியும், ஆனந்த விகடனும் முக்கியமானவைகளாகும். "கிருஷ்ணா திட்டம், எம்.ஜி.ஆர். ஆரம்பித்த திட்ட மாயிற்றே, அதை ஏன் நாம் தொடர வேண்டும்?
முன்பு நாம் தொடங்கிய வீராணம் திட்டத்தை அ.தி.மு.க. அரசு "அம்போ" என்று விட்டுவிடவில்லையா? என்று முதல்வர் நினைக்கவில்லை. மாறாக, ஆந்திர முதல்வரைச் சந்தித்துப் பேசி, இருபதே நிமிஷங்களில் ஒரு நல்ல முடிவுக்கு வந்துள்
ளார். யாருக்குமே புரியாத காரணங்களுக்காக எம்.ஜி.ஆர். முன்பு நிறுத்தி வைத்திருந்த தவணைத் தொகைகளையும் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்தாற்போல் நடக்க வேண்டிய காரியங்களுக்கு ஒரு திட்டம் வகுத்துத் திரும்பியுள்ளார். இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும்; அது என்றென்றும் நீடித்தால் சமுதாயத்துக்குத் தீங்குதான் ஏற்படும்; மெய்யான முன்னேற்றம் என்பது மக்கள், தாங்களே தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளக்கூடிய முறையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் என்ற அர்த்தமுள்ள சொற்களைக் கூறியிருக்கிறார் முதல்வர்.
சொல்லைச் செயலாக்கும் நோக்கில் தமிழகத்தைத் தொழில் மயமாக்குவார் என்று நம்புகிறோம்." இவ்வாறு எழுதப்பட்டுள்ள "கல்கி" தலையங்கத்தில், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை அரசுடைமை ஆக்கியதையும், எம்.ஜி.ஆர். பெயரால் மருத்துவப் பல்கலைக் கழகம் திறப்புவிழா நடத்தியதையும்; பெருந்தன்மைக்கு உதாரணங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு: "நாங்கள் எங்களை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதுவதாக நினைத்து விட வேண்டாம்; விமர்சனங்களை வரவேற்கவே செய்கிறோம் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் முதல்வர் பேசியிருப்பது அவர் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது" என்று பாராட்டியுள்ளதுடன்; முத்தாய்ப்பாக, "அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து அரசியல் ஞானி நிலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை முதல்வர் சொல்லாலும் செயலாலும் நிரூபித்து வருகிறார்" என முடிப்பது மாத்திரமல்ல, எனக்கு எச்சரிக்கையாக "சரிந்து விடாமல் அவர் முன்னேற வாழ்த்தும் போதே, இந்த மலைப் பாதையில் வழுக்குப் பாறைகள் மிகுதி என்றும் உஷார்படுத்தி வைக்கிறோம்" என்றும் எழுதியது.
அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டதைப் போலவே 1-7-1989 அன்று ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியும், அதன் ஆராய்ச்சி நிறுவனமும் அதனைச் சார்ந்த மருத்துவமனையும் தமிழக அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு; ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி என்ற பெயரே தொடருமென்றும் அறிவிக்கப்பட்டு; அதே வளாகத்திற்குள் "தாமரை" என்ற ஒரு தன்னாட்சி பெற்ற உயர்மட்ட மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தொடக்க விழாவும் 12-7-1989 அன்று நடைபெற்றது. கல்கி போன்ற ஏடுகளும், மற்றும் பலரும் பாராட்டத்தக்க வகையில் அரசுடைமையாக்கப்பட்ட ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி பற்றி இந்த இடத்திலே ஒரு முக்கிய செய்தியைக் கூறியாக வேண்டும்.
1991-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு அ.தி.மு.க. வந்த நிலையில்; ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் அறக்கட்டளையினர் அக்கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வேடிக்கை என்னவென்றால்; தி.மு.க. ஆட்சியில் அந்தக் கல்லூரியை அரசுடைமை ஆக்க முனைந்தபோது கல்லூரியின் அறக்கட்டளையினரே அவர்கள் குழுவில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு வழங்கியதுடன்; அரசுடைமையாக்கிய விழாவிலும் கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு; பிறகு அ.தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும்; அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததுதான்! உயர்நீதிமன்றத் தீர்ப்பில், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, உயர்நீதி மன்ற தீர்ப்புப்படி அந்த மருத்துவக் கல்லூரியை அந்தத் தனியார் அறக்கட்டளைக்கே விட்டுக் கொடுத்து விட்டது.
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை உருவாக்கி நடத்திய போதே, அதற்கான நிலம் கையகப்படுத்துதல்- அது அரசு நிலமா? தனியார் நிலமா? போன்ற பிரச்சினைகள் பலவாறாக இருந்ததையெல்லாம் எடுத்து விளக்கித்தான் அந்தக் கல்லூரி அமைப்புக் குழுவினரிடம் கலந்து பேசி, அவர்களே தி.மு.க. அரசு எடுத்துவைத்த நியாயத்தை உணர்ந்து, அவர்களது குழுவில் ஒப்புதல் தீர்மானமே நிறைவேற்றுகிறார்கள். பின்னர் கழக ஆட்சி மாறியதும், நீதிமன்றத்துக்குப் போகிறார்கள்.
சென்னை நீதிமன்றத்தில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்ததும்; அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, அதற்கு மாறாக அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அந்தக் கல்லூரியை அந்தத் தனியார் அறக்கட்டளையிடமே ஒப்படைத்து விடுகிறது. இதன் மர்மம் என்ன? அதனை ஆராய்ந்து பயனில்லை! எப்படியோ அந்த ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியும் அதன் தொடர்புடைய மருத்துவமனையும் இப்போதும் திறமையானவர்களால் நடத்தப்படுகிறது எனினும்; அது அரசுடைமையாக்கப்பட்டதற்கும் பின்னர் தனியுடைமையானதற்கும் இடையே உள்ள மர்மக்கதையின் முடிச்சை அவிழ்த்து உண்மை உணரும் உரிமையை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்.
