உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மாநில அரசு தீர்மானம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மாநில அரசு தீர்மானம் · 296 / 391

மண்டல் பரிந்துரை- மாநில அரசு தீர்மானம் பி ரதமர் ராஜீவ் காந்திக்கு முரசொலி மாறன் எழுதிய கடிதமும், அதற்கு அவர் எழுதிய பதிலும் ஏறத்தாழ 35 ஆண்டுக்கால இலங்கைத் தமிழர் பட்ட வேதனைகளையும், அந்த வேதனை துடைக்க இங்குள்ள தமிழர்கள் எடுத்த முயற்சிகளையும் என் மனத்திரையில் நிழலாட விடுகின்றன. இலங்கைப் பிரச்சினை பற்றிய கடந்த கால நிகழ்ச்சிகள், முன்னும் பின்னுமாகக் காட்சியாகின்றன. 1958-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பேரணி, சென்னையில் நடத்தப்படுகிறது.

அதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே 29-1-1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானத்தை நான்தான் முன் மொழிகிறேன். திரு.பொன்னம்பலனார் அவர்கள் அதனை வழி மொழிகிறார். உரிமைகளுக்காக வாதாடி வந்த ஈழத் தமிழர் தந்தை செல்வா அவர்கள் 1972-ஆம் ஆண்டு திரு அமிர்தலிங்கம் அவர்களுடன் சென்னை வந்து என்னையும், மற்றும் பல தலைவர்களையும் சந்தித்து; ஈழத் தமிழர்களின் நலனுக்கு அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார்.

அங்கு தமிழர்கள் படும் அவதி மேலும் மேலும் அதிகமாகவே 1976-ஆம் ஆண்டு ஈழத்தில் வட்டுக் கோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில், செல்வா அவர்கள் தமிழர் ஐக்கிய முன்னணி என்பதை, தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி என மாற்றி அறிவித்ததுடன், ஈழத் தமிழகம் சுதந்திரம் பெற வேண்டுமென்ற பிரகடனத்தையும் வெளியிடுகிறார். அவரும் அவரது இயக்க முன்னோடிகளும்; அந்த விடுதலைப் போராட்டத்தை அண்ணல் காந்தியடிகளைப் போல அமைதி வழியிலேயே நடத்திட முனைகின்றனர்.

1977-ல் தந்தை செல்வா மறைந்த பிறகு; அமிர்தலிங்கம் போன்றவர்கள் அதே வழியில் சுதந்திர இயக்கத்தை நடததி வந்தபோதிலும்; 1983-ஆம் ஆண்டு; அதுவரையில் அடுக்கடுக்காக நடைபெற்று வந்த சிங்கள வெறியர்களின் அக்கிரமங்களுக்குச் சிகரம் வைத்தாற்போல, அரசின் அதிகார வர்க்க துணையுடன் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோர் வெளிக்கடைச் சிறைச்சாலையில் சித்ரவதைக்காளாகிக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி, உலக நாடுகள் அனைத்திலும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை உலுக்குகிறது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தக் கொடிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை (Genocide) என்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்தியத் திருநாடு முழுதும் இலங்கைத் தமிழர்களுக்காக அக்கறை காட்டத் தொடங்குகிறது. தமிழ் ஈழம் அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எல்.டி.டி.ஈ. (விடுதலைப் புலிகள்), டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ், ப்ளாட் ஆகிய இயக்கங்கள் ஆயுதமேந்தி விடுதலைப் போராட்டம் நடத்த முன்வந்தபோது; அந்த இயக்கங்களுக்காக இந்தியாவில் முகாம் அமைக்கும் வசதிகளைச் செய்து கொடுத்து; ஆயுதங்களையும் அன்றைய இந்திரா காந்தி அரசு வழங்கியதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.

தமிழ்நாட்டில் காவல் துறைத் தலைவராகவும், எம்.ஜி.ஆர். அவர்களிடம் நெருக்கம் மிகக் கொண்டவராகவும் இருந்த திரு.கே.மோகன்தாஸ் அவர்கள் 1992-இல் எழுதிய "எம்.ஜி.ஆர். மேன் அண்ட் மித்" என்ற நூலில், "விடுதலைப் போராளிகளின் ஒவ்வொரு பயிற்சி முகாமும் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதிபோல் மத்திய நிறுவனங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த முகாம்களுக்குள் மாநிலப் புலனாய்வுத் துறையினரோ, மாநிலக் காவல் துறையினரோ நுழைய அனுமதிக்கப்பட வில்லை" என்றும்; "ஒவ்வொரு குழுவினரும் உளவு வேலை பார்ப்பதற்கென்று தனிப் பிரிவை நடத்தி வந்தனர்; அதில் விடுதலைப் புலிகளின் பிரிவே சிறந்து விளங்கியது.

இந்தத் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து நான் அவ்வப்போது தெரிவித்து வந்த காரணத்தால் அந்தக் குழுக்களின் தலைவர்களையும், குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவரையும் சந்திக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஒரு சமயம் என்னிடம் தெரிவித்தார். மத்திய ஏஜன்சிகளின் கழுகுக் கண்காணிப்பையும் மீறி மாநில உளவுத்துறை அந்த அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தது. எனவே அந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதற்கு அதிகச் சிரமம் தேவைப்படவில்லை.

சோதனை செய்த பிறகு எம்.ஜி.ஆர். இல்லத்தில் உள்ள அவரது அறைக்குள் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். விவாதம் பொதுவான முறையில் அமைந்திருந்தது. பயிற்சி முகாம்கள் குறித்து எம்.ஜி.ஆர். முன்னெச்சரிக்கையுடன் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் தீவிரவாதிகள் (ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு பேர் வந்திருந்தனர்) இலங்கை இராணுவத்தினரும், காவல்துறையினரும் ஏதுமறியாத தமிழர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் குறித்துச் சொன்னார்கள்.

எம்.ஜி.ஆர். பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். ஆனால், விடுதலைப் புலிகளின் ஏகத் தலைவர் பிரபாகரனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் கண நேரத்தில் ஒரு நேச உணர்வு ஏற்பட்டது, வெளிப்படையாகத் தெரிந்தது. எம்.ஜி.ஆர். தனது அற்புதமான உள்ளுணர்வு காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டுவிட்டார். இதன் விளைவாகப் பின்வரும் ஆண்டுகளில் அரசாங்கப் பணத்திலிருந்தும், தனது சொந்தப் பணத்திலிருந்தும் அவர்களுக்கு நிதி உதவி செய்தது எல்லோரும் அறிந்த உண்மை" என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதே புத்தகத்தில் பிறிதோர் இடத்தில் காவல் துறைத் தலைவர் மோகன்தாஸ் அவர்கள்; "போராளிகளிடமிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன - இன்றைய சர்வதேசச் சந்தையில் அதன் மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய்"; என்று எழுதிவிட்டு; "பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆயுதங்களை போராளிகளிடமே திருப்பிக் கொடுக்குமாறு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்" என்றும் எழுதியிருக்கிறார்.

மற்றுமொரு அழுத்தமான சான்றாக; இந்திய வெளியுறவுச் செயலாளராகவும் - இலங்கையில் இந்தியத் தூதுவராகவும் இருந்த- ஜெ.என். தீட்சித் அவர்கள்; அவர் எழுதிய "அசைன்மென்ட் கொழும்பு" என்ற நூலில்; "விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமைதிப்படையை ஏவி விடப்பட்ட பிறகும் கூட, ஆயுதங்களையும் அத்யாவசியப் பொருள்களையும் வாங்குவதற்கான பணத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் மட்டுமல்ல; தமிழ் மக்களின் பேராதரவையும் திரட்டிப் பெரியதோர் எழுச்சியை பல்வேறு இயக்கங்களும், குறிப்பாக தி.மு.கழகம், வீரமணி அவர்களின் தலைமையில் உள்ள திராவிடர் கழகம், மதுரை நெடுமாறன் தலைமையில் இருந்த காமராஜ் காங்கிரஸ் இயக்கம் ஆகியவை இணைந்த தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கமும் (டெசோ) உருவாக்குகின்றன. மதுரையில் 4-5-1986 அன்று டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணி, நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று நடத்திய ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப்.

சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப் பெருமாள், ப்ளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் வருகைதந்து கலந்து கொண்டனர். அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், வாஜ்பய், எச்.என்.பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, அப்துல் ரஷீத் காபூல், ஜஸ்வந்த்சிங், ராச்சய்யா, சுப்பிரமணியம் சுவாமி, உன்னிகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் அன்பழகனார், முரசொலி மாறன், எல்.

கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு இந்திய நாட்டுத் தலைவர்களின் ஆதரவும் பெருகுகிறது ஈழத் தமிழர் பிரச்சினைக்கு! அது மட்டுமல்ல, அதற்கென தமிழகத்தில் எத்தனையோ அறவழிப் போராட்டங்கள் - நானும் கழகத்தினர் ஆயிரக் கணக்கானோர் சிறையேகிய நிகழ்ச்சிகள் - அதன் தொடர்பாக தீக்குளித்து சாவுகள் - ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நானும் பேராசிரியர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல்- இப்படி நாடு முழுதுமே ஈழத் தமிழர்களின் பக்கம் ஆதரவுக்கரம் நீட்டியும் கூட; அந்த ஆதரவுக்கு முட்டுக்கட்டை போல சில நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன.

அவை பிறகு தொடர் கதையாகவும் ஆகிவிடுகின்றன. போராளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மதுரை மாநாட்டிலேயே அவர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமை தெளிவாகத் தெரிந்த காரணத்தினால், கலந்து கொண்ட எல்லா தலைவர்களும் "ஒற்றுமையாகச் செயல்படுங்கள்" என்றே அவர்களுக்கு அறிவுரை கூறினர். சென்னைக்கு வந்த திரு. வாஜ்பய் அவர்கள் நிருபர்களிடம் பேசியபோது, "ஈழ விடுதலைப் போராளிகள், தங்களுக்குள் மோதலை நிறுத்திக் கொண்டு, ஒன்றுபட்டு, தனித் தமிழ் ஈழம் காண என்ன வழியென்பதை முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

அதே கருத்தைத்தான் நானும் அவர்களுக்கு "உங்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம்" என்று பலமுறை தொடர்ந்து சொல்லி வந்தேன். அந்த மாநாட்டிலும் சொன்னேன். மாநாட்டிற்கு சில மாதங்களுக்கு முன்பே ஒரு நாள் அவர்களையெல்லாம் என் வீட்டிற்கு அழைத்து ஒற்றுமையை உருவாக்குவதற்கு விரும்பினேன். அவர்களில் ஈ.பி.ஆர். எல்.எப். பத்மநாபா, டெலோ ஸ்ரீசபா ரத்தினம், ஈராஸ் பாலகுமார் ஆகியோர் வந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ.)

சார்பில் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் வரவில்லை. நீண்ட நேரம் நாங்கள் காத்திருந்தும் அவர்கள் வராத காரணத்தினால் மற்ற மூன்று இயக்கத்தினரும் என்னுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கின்றனர். மதுரையிலே டெசோ மாநாடு மே திங்கள் 4ந்தேதி முடிந்ததற்கு அடுத்த நாளைக்கு அடுத்த நாள் அதாவது 6-5-86 அன்று டெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபா ரத்தினம் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்ட செய்தி வருகிறது.

அதன் பிறகு 3-6-1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவினையொட்டி எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட நிதி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை போராளி இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று தி.மு. கழகப் பொதுக் குழுவில் முடிவெடுத்து, மறைந்த சபாரத்தினம் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், டெலோ இயக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், ஈராஸ் இயக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், ஈ.பி.ஆர்.எல்.எப்.

இயக்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் அளிப்பதென முன்வந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தவிர ஏனைய இயக்கத்தினர் முன்வந்து அதனைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் சார்பில் கடைசிவரையில் யாரும் வந்து அந்த நிதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிறகு அந்தத் தொகையையும் மற்ற போராளிகள் இயக்கத்திற்குப் பிரித்துத் தரப்படுகிறது. 1989-ல் கொழும்பு நகரில் அமிர்தலிங்கம் அவர்களும், யோகேஸ்வரனும் அவரது இல்லத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

அதற்கடுத்த வாரத்தில் உமாமகேஸ்வரன் என்ற முகுந்தன், (பிளாட் இயக்கத் தலைவர்) இலங்கையில் கொல்லப்படுகிறார். எனவே ராஜீவ்காந்தி அவர்கள் என்னிடம் கலந்துரையாடியதற்கேற்பவும் கடிதம் எழுதியதற்கேற்பவும் ஈழப் பிரச்சினையில் ஒரு நல்ல முடிவு காண்பதற்காக வழிவகுத்திட வேண்டுமேயென்று எண்ணிக் கொண்டிருந்தபோது முன்னும் பின்னுமாக இந்த நிகழ்ச்சிகள் என் மனக்கண் முன்னால் நிழலாடியது என்பது இயற்கைதானே! ஆனால் அந்த முயற்சி சற்று சுணங்கிப் போய் இருந்த சூழலில் 1989 மே திங்கள் 2-ம் தேதியன்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க.

உறுப்பினராக இருந்த கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் இலங்கைப் பிரச்சினை குறித்து என்னைக் கேட்டபோது, "நான் முதல் அமைச்சர் பொறுப்பையேற்றவுடன் இந்தப் பிரச்சினையில் சுமுகமான முடிவு காண விடுதலைப்புலிகள் உள்ளிட்ட எல்லோரையும் அழைத்துப் பேச வேண்டும் என்று டெல்லிக்கு இரண்டுமுறை சென்ற சமயம், பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவரும் உடனடியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் வாய்ப்பை உருவாக்குவதாகச் சொன்னார்.

நானும் இதுகுறித்து தாக்கீது வரும், வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது தடைப்பட்டுள்ளதற்கு அரசியல் காரணங்களா அல்லது வேறு என்ன காரணங்களா என்பது தெரியாது! ஆனால் பிரேமதாசா இப்போது இந்த வாய்ப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்களின் நிபந்தனைகளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது" என்று குறிப்பிட்டேன்.

இதற்கிடையே 1989 மே 4-ஆம் நாளன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. அந்தப் பேச்சுவார்த்தையில் பிரேமதாசா கலந்து கொண்டார். 1989 ஜூன் இறுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டதாகவும், ஒருவரையொருவர் எதிர்த்து போர் புரிய மாட்டோம் என்றும், எல்லா பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்றும் அறிவித்தனர்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட கோரிக்கை முழுமையாக நிறைவேறியதாகவோ, ஈழத் தமிழர்களின் உரிமைக்குப் பாதுகாப்பாக அவர்கள் கேட்ட தமிழ் ஈழம் அமைப்பதற்கான முடிவு ஏற்பட்டதாகவோ அல்லது விடுதலைப் புலிகள் அதை இனி பிரச்சினையாக்க மாட்டார்கள் என்பதாகவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் அந்தப் பிரச்சினை முற்றுப் பெறவில்லை; இந்தியாவைப் பொறுத்தவரையில் மேலும் முயற்சிகள் தொடருகின்றன என்று கருதுமளவுக்கு இருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் திருச்சியில் 5-11-1989 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, "இலங்கைத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க.

அரசுக்கும் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்" என்றும்; அதே நாளில் கோவையில் பேசும்போது, "இலங்கைத்தமிழர் பிரச்சினையில் முழு ஒத்துழைப்பு தந்து வருவதற்காக தி.மு.க. அரசுக்கு ராஜீவ்காந்தி மீண்டும் பாராட்டு தெரிவித்தார். ஆனால் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க. கைகோத்துக் கொண்டதற்கு அதிருப்தி தெரிவித்தார்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (6-11-1989) ஏடு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தேர்தலில் எதிரெதிர் அணியில் இருந்த நிலையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஒருமித்த கருத்து உருவாக்கிட அது இடையூறாக இல்லை என்பது பிரதமர் ராஜீவ் அவர்களின் பேச்சிலிருந்து தெளிவாயிற்று. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிக் கிடக்கும் மக்களை தனி ஒதுக்கீடுகள், சிறப்புத் திட்டங்கள் மூலமாகக் கைதூக்

கிவிட மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை 12-5-1989 அன்று சட்டப் பேரவையில் முன்மொழிந்தேன். மொரார்ஜி தேசாய் அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில் 20-12-1978 அன்று மண்டல் குழு அமைக்கப்பட்டு, 31-12-1980 அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பணிகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடி மக்களுக்கு உள்ளது போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிரப்பப்படாமல் உள்ள இடஒதுக்கீட்டளவு மூன்றாண்டு- களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கொடுப்பது போலவே - அதே அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் பிற்படுத்தப்பட்டோர் நல முன்னேற்ற வாரியம் அமைக்க வேண்டும். இதனை நாம் இந்த மாநிலத்திலே 71-ஆம் ஆண்டே அமைத்து விட்டோம். மேலும் மைய, மற்றும் மாநில அரசுகளின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், தனித்துறை அமைக்க வேண்டும் என்று மண்டல் குழு சிபாரிசு செய்திருக்கின்றது.

மாநில அளவிலே நாம் 1971-ஆம் ஆண்டே இதற்கென தனி இலாகா, தனி அமைச்சர் என்று உருவாக்கி விட்டோம். 1976-க்கு முன்பே கழக ஆட்சியிலே பலமுறை மத்திய அரசிலும் இப்படிப்பட்ட இட ஒதுக்கீடுகள் தேவை என்பது வலியுறுத்தப்பட்டது. 1973-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அலகாபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதும் இதனை நான் வலியுறுத்தி இதற்கென ஒரு குழு அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

1976-க்குப் பிறகு கழகம் எதிர்க்கட்சியாக இருந்த அந்தக் காலகட்டத்திலேகூட, தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், மற்றுமுள்ள சமுதாய நல அமைப்புகள் டெல்லி வரையிலே சென்று, டெல்லியிலே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகள், தலைவர்களோடு சேர்ந்து டெல்லியிலே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். டெல்லியில் உண்ணாநோன்புகள் எல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நாட்டில் மக்கள்தொகையிலே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 52 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட மலைசாதி மக்கள் 22.5 சதவிகிதம். இந்த 52 சதவிகித பிற்படுத்தப்பட்ட மக்களில் மத்திய அரசின் வேலை வாய்ப்பில் எத்தனை சதவிகிதம் கிடைத்திருக்கிறது என்றால் பொதுவாக மொத்தத்தில் கிடைத்திருப்பது 12.55 சதவிகிதம்தான். அதிலும் குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும், மத்திய அரசு வங்கி போன்றவைகளிலும் கிளாஸ் 1 என்ற பணிக்கு மேல்நிலை உத்தியோகங்கள் என்ற அளவிலே எடுத்துக் கொண்டால் 4.69 சதவிகிதம்தான் பின்தங்கிய மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரே ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு ஓரம் கட்டப்பட்டிருந்தார்கள் என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். கிளாஸ் 1 அதிகாரிகள் பாதுகாப்புத் துறையில் மட்டும் மொத்தம் 1379 பேரில் தாழ்த்தப்பட்டோர் 48 பேர்- பிற்படுத்தப்பட்டோர் 9 பேர். தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினருக்கான இடஒதுக்கீடு 22.5 சதவிகிதப்படி அவர்களுக்கு 310 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.

அதைப்போலவே மண்டல் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் அளித்திருந்தால் 372 இடங்களும் கிடைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் எடுத்துக்காட்டித்தான் நாம் இந்த 27 சதவிகிதம் பின்தங்கிய மக்களுக்கு மத்திய அரசிலும் பொதுத் துறையிலும் வங்கிகளிலும் மத்திய அரசு சார்புடைய நிறுவனங்களிலும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்குமாறு கேட்டு வருகிறோம்.

இந்தக் கருத்துக்களை எடுத்து வைத்து நான் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது உரையாற்றினேன். என்ன காரணத்தினாலோ 1980 முதல் சுமார் பத்தாண்டு காலம் மண்டல் கமிஷன் அறிக்கை, குளிர்ப்பதனப் பெட்டிக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது.