நெஞ்சுக்கு நீதி
கடிதப் போக்குவரத்து · 295 / 391
ராஜீவ் - மாறன் கடிதப் போக்குவரத்து "இ ம்மென்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்; இவ்வாறங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில், இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுள படிக் கெல்லாம் பொய் கூறி அறங் கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்" என்று எந்தப் பாரதிப் புலவர் 1917 அக்டோபர் புரட்சியினால் ஆர்த்தெழுந்த பொதுவுடைமைப் பூங்கா சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் "புதிய ருஷ்யா" என்ற தலைப்பில் ஆவேசமான வரிகளைப் பாடினாரோ; அந்தச் சமதர்ம பூமி, தனது 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிவிட்டு அடுத்த மூன்றாண்டுகளில்; 1990-1991 ஆம் ஆண்டுகளின் வாக்கில் உலக நாடுகளின் கண்களுக்குப் பின்னடைவுப் பிரதேசமாகத் தோற்றமளிக்கத் தொடங்கி விட்டது.
அந்த வீழ்ச்சியின் கதாநாயகனாகச் சரித்திரம் சித்தரிப்பது; தொடக்கத்தில் சோவியத் யூனியன் மக்களால் மலையளவு புகழப்பட்டு; பிறகு அவர்களே மறந்து போய் விடுகிற அளவுக்கு ஆகி- விட்ட கோர்ப்பசேவ் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயத் தொழிலைச் செய்து கொண்டே, அதை வைத்துப் பல்கலைக் கழக சட்டப்படிப்பு வரையில் தேர்வு பெற்று; சிறந்த சிந்தனையாளராக விளங்கிய அவர், பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் அணி அமைப்பாளராகப் பொறுப்பேற்று, தனது 39-வது வயதில்; ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் ஆதிக்கம் சோவியத்தில் தொடங்கிய போது "ஸ்டவ்ரோ போவ்" என்ற பகுதிக்கு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக ஆனார்.
1977-ஆம் ஆண்டு விவசாய அறுவடை முறையில் ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டுபிடித்ததின் காரணமாக, கோர்ப்பசேவ் பெரிதும் புகழப்பட்டார். பின்னர் 78-ஆம் ஆண்டு பிரஷ்னேவ் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்தபோது, இவரது செல்வாக்கு மாஸ்கோ வரையில் பரவியது. அப்போது சோவியத் யூனியன் தலைவர்கள் வரிசையில் 20-வது இடத்துக்கு உயர்ந்தார். 1985-ஆம் ஆண்டு அவர் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கே உயர்ந்தது; சோவியத் ஆய்வாளர்கள் மத்தியில் பரபரப்புடன் கவனிக்கப்பட்டது.
1984ல் ஆந்த்ரப்போவ் இறந்து போனதும், இவர்தான் அடுத்து பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக; செரன்கோ என்பவர் பொறுப்பேற்றார். அவரின் உடல்நிலை சரியாக இல்லாததால் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை முழுமையாகக் கவனித்து வந்த கோர்ப்பசேவ், செரன்கோவின் மறைவுக்குப் பிறகு 1985-ல் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார். தொடர்ந்து 1990-ஆம் ஆண்டின் வாக்கில் சோவியத் யூனியனின் அதிபராகவும் பொறுப்பேற்றார்.
சோவியத் மக்கள், கோர்ப்பசேவுக்கு முன்னாலிருந்து மறைந்த தலைவர்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்து; அவரிடம் தனியாக ஒரு மரியாதை கொள்ளத் தொடங்கினர். லெனினுக்கு; பேசுவதில் சிறு குறைபாடு- ஸ்டாலினுக்கு பெரிய மீசை- பிரஷ்னேவுக்கு முடிகள் அடர்த்தியான புருவம்- குருஷேவுக்கு முழுமையான வழுக்கை- ஆகியவைகளுடன் கோர்ப்பசேவுக்கு முன்தலையில் உள்ள பெரியதொரு தழும்பை ஒப்பிட்டு; அது பைபிள் குறிப்பிடும் மாதிரியான தூதராக வந்துள்ளார் என்பதற்கு அடையாளமென சோவியத்தில் மக்கள் பேசிக் கொண்டதாக செய்திகள் வந்தன.
அவர் சோவியத் ரஷ்யாவின் தலைமையை ஏற்ற பிறகு, முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். சோவியத் யூனியனின் தேசிய இனங்கள் வாரியாக மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமையை நடைமுறைப்படுத்தினார். உள்நாட்டில் கிலாஸ் நோஸ்த் (சுதந்திர சமுதாயம்) மற்றும் பெரெஸ்த் நோய்க்கா (பொருளாதாரச் சீரமைப்பு) போன்ற ஜனநாயக ரீதியான கொள்கைகளை வகுத்ததுடன்; வெளி விவகாரங்களில் படைபலக் குறைப்பு, அணு ஆயுதக் குறைப்பு ஆகியவற்றை மேற்கொண்டார்.
இவற்றால் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளும்- பின் விளைவுகளும்- சோவியத்தை பலவீனப்படுத்திய காலகட்டத்தில்; 1979-ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அனுப்பப்பட்டிருந்த ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் கோர்ப்பசேவ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியோடு தாலிபான்களால் தாக்கப்பட்டு தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. கோர்ப்பசேவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1990- ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15-ஆம் நாள் வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாத அளவிற்கு கலவரங்களும், குழப்பங்களும், பொருளாதார வீழ்ச்சியும் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டன. சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து சிதைந்ததற்கும், பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டதற்கும் பல காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது தொடர்ந்த போரும், அதில் சந்தித்த தோல்வியும்தான் ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
சோவியத்தின் பழைய தலைவர்களுடன் கோர்ப்பசேவை ஒப்பிட்டு- அனைவரிலும் உயர்ந்தவர் என்றும் "தூதர்" என்றும் புகழ்ந்து பேசிய மக்கள், பின்னர் அவரை மறந்தே போய்விட்டனர். டுனீஷ்ய தலைநகரில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தேசிய கவுன்சில் கூட்டம் 2-4-1989 அன்று நடைபெற்று யாசர் அராபத் அதிபராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது அந்த ஆண்டின் வரலாற்று நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதே ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தின் 61-வது திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்று சட்டமாக ஆக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் பயனாகத்தான் வாக்காளர்களின் வயது 21-லிருந்து 18 ஆகக்குறைக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 326-வது பிரிவை இதற்காகத் திருத்தி அமைக்க நாடாளுமன்றத்திலே மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலப் பேரவைகளிலும் அந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு அவராலும் அங்கீகாரம் தரப்பட்டு சட்டமாக ஆக்கப்பட்டது.
மார்ச் 31, 1989 அன்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.டி. உக்கம்சந்த், சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு கோழி முட்டை வழங்குவதற்கான செயற்குறிப்பு ஏதாவது உள்ளதா என்று கேள்வி நேரத்தின்போது கேட்க, அந்தத் துறையின் அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் எழுந்து பதில் அளிப்பதற்கு முன்பு நான் குறுக்கிட்டு எழுந்து சத்துணவுத் திட்டம் உண்மையிலேயே சத்துணவுத் திட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு கோழி முட்டை வழங்கப்பட வேண்டுமென்ற கருத்து கழகத் தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டது உண்மைதான் என்றும், ஜூன் திங்கள் 3-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்தேன்.
அறிவித்ததோடு நில்லாமல் 1989-இல் ஜூன் 3-ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முட்டை வழங்கப்பட்டது. ஏழைப் பெற்றோர்கள் தங்களால் வாங்கிக் கொடுக்க முடியாதது குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதற்கிருந்த வரவேற்பைக் கண்ட கழக அரசு பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முட்டை என்றிருப்பதை வாரம் ஒரு முட்டை என்று மாற்றி அதன்படியே வழங்கி வந்தது.
ஏழைக் குழந்தைகள் அதனை மகிழ்ச்சியோடு சாப்பிட்டு வந்தார்கள். (கழக அரசு காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆயிற்றே; எனவே 2001 தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக அந்தப் பள்ளிக் குழந்தைகளின் உணவிலே கை வைத்து, இனிமேல் முட்டை கிடையாது, அதற்குப் பதிலாக உருளைக்கிழங்கு போடுகிறோம் என்று கூறி முட்டை வழங்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது!) 1989 ஏப்ரல் முதல் வாரத்தில் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்து- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 198 இடங்களில் போட்டியிட்டு 28 இடங்களை மட்டுமே பெற்ற அ.தி.மு.க.வும்- 208 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இ.காங்கிரசும் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா அதே நாளில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனையும், உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கையும் சந்தித்தார். செய்தியாளர்களிடம் பின்னர் ஜெயலலிதா கூறும்போது, இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் பேசியதாகவும், இந்த இரு கட்சிகளுக்கிடையே எம்.ஜி.ஆர். காலத்திலேயே கூட்டணி இருந்ததால் மீண்டும் கூட்டணி அமைப்பதில் எந்த சிரமமும் இல்லை என்றும், இந்தக் கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரதியுபகாரமாக எதையும் பெற விரும்பவில்லை என்றும், இனி நடைபெறவிருக்கின்ற எல்லா தேர்தல்களிலும் கூட்டணி நீடிக்குமென்றும், 25-3-89 தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்காக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்த விசாரணை வெளி மாநில நீதிபதியைக் கொண்டோ அல்லது சி.பி.ஐ.
மூலமாகவோ நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவருக்கு விஷம் வைத்துக் கொலை செய்ய கழக அரசில் உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றும், அவருடைய உதவியாளர்களை விபத்தில் சிக்க வைத்துத் தீர்த்துக்கட்ட சதி செய்யப்படுகிறது என்றும், அது தொடர்பாக அவர் மீது நான் வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியதோடு, அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் வேண்டிக் கொண்டிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அவர் விருப்பப்படி பிரதமர் ராஜீவ் அவர்கள் எந்த விசாரணைக் கமிஷனும் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணத்திற்குப் பிறகு தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த திரு. மூப்பனார் அவர்கள் அனுப்பிய ராஜினாமாவை பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்றுக் கொண்டு - அந்தக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தியை நியமனம் செய்தார். ஆனால் இந்த நியமனத்திற்கு எதிராக தமிழக இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒரு பகுதியினர் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த நியமனத்தை ரத்து செய்து விட்டு தொடர்ந்து மூப்பனார் அவர்களே நீடிக்க வேண்டுமென்று கோரி அறிக்கை விடுத்தனர்.
அந்த அறிக்கையை டெல்லி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. தென் மொழிகள் புத்தக நிறுவனத்தின் சார்பில் 11-4-1989 அன்று சென்னையில் தேவநேயப் பாவாணர் மத்திய நூலக சொற்பொழிவு அரங்கில் நடைபெற்ற யுனெஸ்கோ கூரியர் இந்தியா சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த இதழை வெளியிட்டேன். மால்கம் ஆதி சேஷையா முதல் சிறப்பிதழைப் பெற்றுக் கொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த ஞானம், கூரியர் தமிழிதழ் ஆசிரியர் மணவை முஸ்தபா ஆகியோர் இந்த விழாவிலே கலந்து கொண்டனர்.
அந்த விழாவிலே பேசிய ஞானம் அவர்கள், இந்தியாவிலே இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில்தான் இந்த இதழ் வெளியிடப்பட வேண்டுமென்று மத்திய அரசு பிடிவாதம் செய்ததாகக் குறிப்பிட்டார். அதைச் சுட்டிக் காட்டிப் பேசிய நான், "மத்திய அரசு இந்தியாவைப் பொறுத்தவரையில் எதைப் பிடிவாதமாகச் சொன்னதோ அதைத்தான் நாங்களும் பிடிவாதமாகச் சொல்கிறோம். இந்தியாவிலே எப்படி கூரியர் இதழ் இந்தியிலும், தமிழிலும் இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்களோ அதைப் போல இந்தியாவின் ஆட்சி மொழியாகக் கூட, இந்தியும் தமிழும் இருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் விருப்பம்.
இந்தியாவிலே இருக்கின்ற எல்லா தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக வேண்டுமென்ற நிலை எய்த நீண்ட பல ஆண்டுகளாகும் என்றாலும்கூட உடனடியாக ஆகக் கூடிய எல்லா தகுதியும் தமிழுக்குத்தான் இருக்கிறது என்பதை இதன் மூலம் மிக நன்றாக உணரலாம்" என்று குறிப்பிட்டேன்.
அந்த நிகழ்ச்சியிலே மட்டும் நான் இந்தக் கருத்தினைத் தெரிவிக்கவில்லை. 1978-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23, 24 ஆகிய நாட்களில் புலவர் கோவிந்தன் தலைமையில் திருச்சி மாநகரில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் முன்மொழிந்து நான் வழி மொழிந்து நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திலேயே தமிழையும் மத்திய அரசின் ஆட்சி மொழி ஆக்குக என்று வலியுறுத்தியும், அனைத்து மாநில ஆட்சி மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாகச் சேர்த்து அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும், அதுவரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தோம் என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கதாகும்.
டெல்லி சென்ற போது ராஜீவ் காந்தி அவர்கள் என்னுடன் மிகுந்த ஆர்வமுடன் கலந்துரையாடிய ஈழப்பிரச்சினை குறித்து; மீண்டும் அவரிடமிருந்து தொடர்ந்து எந்தத் தகவலுமில்லையே என்பதற்காக அதுபற்றி அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் முரசொலி மாறன் பிரதமர் ராஜீவ்காந்திக்கு 1989 மே 2-ஆம் நாள் பின்வரும் கடிதத்தை எழுதினார்: அன்பார்ந்த பிரதமர் அவர்களுக்கு, இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் 1989-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் தங்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தியது குறித்து நினைவு கூர்கிறேன். அதன் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், இலங்கை அதிபர் திரு. பிரேமதாசா, இப்பிரச்சினைக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளார். முன்னரே நாம் தொடர் நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கருத வேண்டியுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்பிலிருந்து, இப்பிரச்சினையில் எவ்வித தொடர் நடவடிக்கையும் இல்லாமல் விடப்பட்டுள்ளது என்பது தெரியவரும். தங்களை நேரில் கண்டு பேச, நான் முயற்சி எடுத்தும் தங்களைப் பார்க்க அனுமதி கிடைக்காததால், இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
இதற்கு அரசியல் தவிர பிற காரணங்கள் இருக்குமானால், இதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது சரியென்று கருதுகிறேன். முரசொலி மாறனின் கடிதத்திற்கு பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 15-5-1989 தேதியிட்டு எழுதிய பதில் வருமாறு:- அன்புடைய திரு. மாறன், தங்களுடைய மே 2-ஆம் நாளிட்ட கடிதத்தைக் கண்டு வியப்படைகிறேன். திரு. கருணாநிதி அவர்கள் ஒரு தி.மு.க. தூதுவர் அல்லது ஒரு தூதுக்குழுவை விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுப்பலாம் என்று கூறிய போது நான் அந்தப் பயணம் வெற்றி பெறு வதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மகிழ்ச்சியோடு செய்து கொடுப்பேன் என்று கூறியிருந்தேன்.
திரு. கருணாநிதி மார்ச் 15 மற்றும் 16-ஆம் தேதி என்னுடன் சந்தித்துப் பேசிய பிறகு நீங்கள் மீண்டும் எ
ன் அலுவலகத்தைச் சார்ந்த திரு. ரோனென்சென் மற்றும் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த திரு. குல்தீப் சகதேவ் அவர்களுடனும் இப்பேச்சுவார்த்தைகளின் வழிமுறைகள் பற்றியும் வரம்புகள் பற்றியும் கலந்து பேசியிருக்கிறீர்கள். அப்போது முதலாவதாக விடுதலைப் புலிகளோடு தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தீர்கள். விடுதலைப் புலிகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள் பற்றிய ஒப்புக் கொள்ளப் பட்ட வரம்புகள் குறித்தும், யாழ்ப்பாணத்திற்குச் செல்ல வேண்டிய குழுவின் உறுப்பினர்கள் யார் என்பது பற்றியும் மார்ச் 27-ஆம் தேதி தாங்கள் டில்லிக்குத் திரும்பிய பிறகு எனக்கு உறுதி செய்வீர்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இதுபற்றி திரு. கருணாநிதியிடமிருந்து ஒரு கடிதம் மூலம் எனக்குத் தெரிவிப்பதாகவும் இருந்தது. மேலும் இதுபற்றி என்னுடைய அலுவலகத்திற்கு எந்த செய்தியும் வராத காரணத்தினால், ஏப்ரல் 12-ஆம் நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்பு கொண்டார்கள். அதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அதிகாரி திரு. சகதேவ் உங்களைச் சந்தித்து ஏற்கனவே ஒப்புக் கொண்டதை வலியுறுத்தியதோடு, தி.மு.க. எடுக்கவிருக்கும் முயற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சரைக் கலந்து பேசியபின் எங்களுடன் தொடர்பு கொள்வதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப்பிறகு உங்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மே 2-ஆம் நாளிட்ட கடிதம் தான். நீங்கள் அரசியல் காரணம் என்று குறிப்பிட்டிருப்பது எனக்குப் புரியவில்லை. எங்களது ஆவணங்களும், நாள் வாரியான நிகழ்வுகளும் மிகவும் தெளிவாக உள்ளது. எங்கேயோ நமது தொடர்புகளில் இடைவெளி இருப்பது தெளிவாகிறது.
