நெஞ்சுக்கு நீதி
உச்சகட்டம்! · 294 / 391
சதித் திட்டத்தின் உச்சகட்டம்! நா ன் நிதிநிலை அறிக்கை படிக்க முற்படும்போது காவல் துறையைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகத் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் போதும் என்று காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும்; காவல் துறையைக் கண்டித்து வெளி நடப்பு செய்தால் மட்டும் போதாது, கலவரமே செய்து ஆட்சிக் கலைப்புக்கு வழி காண வேண்டுமென்று செல்வி ஜெயலலிதாவும் செயல்படுகிற அளவுக்குக் காவல் துறையினர் மீது அவர்கள் கண்ட குற்றம்தான் என்ன?
மார்ச் 15 டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் சந்திப்புக்குப் பிறகு, சென்னைக்கு நான் திரும்பிய சில நாட்களில் 18-3-89 அன்று மாலை செல்வி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டதாக யு.என்.ஐ. நிறுவனத்தின் மூலம் செய்தி தெரிய வந்தது. அவரது கைப்படவே எழுதப்பட்ட அந்த ராஜினாமா கடிதம்; பேரவைத் தலைவர் கைக்குக் கிடைத்ததும், பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள், செல்வி ஜெயலலிதாவுக்கு சட்டமன்ற விதி 24ன்படி ஒரு கடிதம் அனுப்பி, தாங்கள் எழுதிய ராஜினாமா கடிதம் தங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் எழுதி அனுப்பப்பட்டதா என்று கேட்டதற்கு; அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா அவர்கள்; தனது ராஜினாமா என்பதை மறுத்து விட்டதால் பிரச்சினை அத்துடன் முடிந்து போயிற்று!
அதுபற்றி செய்தியாளர் என்னைக் கேட்டபோது யாரையும் முறைகேடான வகையில் பதவியிலிருந்து வெளியேற்றும் மனப்பான்மை எங்கள் அரசுக்கு இல்லை என்றும், அதனால்தான் அந்தக் கடிதத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் முறைப்படி பேரவைத் தலைவரால் செல்வி ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது என்றும் பதில் அளித்தேன். ஆனால் இந்தச் சம்பவங்களுக்கு முன்பு ஏதோ ஓர் புகாரின் பேரில் போலீசார் திரு. நடராஜன் (சசிகலா) அவர்கள் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதற்கும் இதற்கும் தொடர்பு படுத்திப் போலீசார் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு; போலீஸ் துறைப் பொறுப்பும் முதல் அமைச்சராகிய என்னிடம் இருந்ததைக் காரணம் காட்டி; துரும்பைத் தூணாக்கிடும் முயற்சியில் செல்வி ஜெயலலிதா ஈடுபட்டதாலும்; யாரோ ஒருவர் டெல்லியிலிருந்து- பேரவையில் பெரும் அமளி நடந்தால், அதை வைத்து ஆட்சியைக் கலைத்திட ராஜீவ்காந்தியும் தயாராக இருப்பதாகத் தவறான தகவல் கொடுத்திருந்ததாலும்; அந்த நம்பிக்கையில் நிதி நிலை அறிக்கை படிக்கும் நாளில் செல்வி ஜெயலலிதா மிகுந்த ஆவேசத்துடன் போர் முழக்கமிடத் தொடங்கினார்.
இப்படியொரு கலவரத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதை நான் உளவுத் துறை வாயிலாக அறிந்து, என் இருக்கைக்கு முன்பு; நிதிநிலை அறிக்கையைப் படித்திட வசதியாக ஒரு சிறிய சாய்வு மேஜையை தற்காலிகமாகவும், தற்காப்புக்காகவும் அமைத்திடச் செய்தேன். அத்துடன் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தகவலைச் சொல்லி, எது நடந்தாலும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பு 1988 ஜனவரி 28ஆம் நாள் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப் பேரவையே ரணகளமாகி, பேரவைக்குள் காவல்துறை தலைவர் தேவாரம் தலைமையில் போலீசார் நுழைந்து தாக்குகிற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்டது போல, தி.மு.க.
ஆட்சியையும் கலைத்து விடலாம் என்பதுதான் திட்டம்! அந்தத் திட்டத்தை நிறைவேற்றிடத்தான்; நிதிநிலை அறிக்கையைப் படிப்பதற்கு நான் காலை 11 மணிக்கு எழுந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா குறுக்கிட்டு; "முதலமைச்சர் கிரிமினல் குற்றவாளி! அவர் நிதிநிலை அறிக்கை படிக்கக் கூடாது! அவரும், அவருடன் கூட்டுப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்" என்றார்.
அந்தச் சமயம்; ஆவேசத்துடன் உறுப்பினர் திரு.பி.எச். பாண்டியன் எழுந்தார். அவர் ஜானகி அம்மையார் அணியின் சார்பில் வெற்றி பெற்றவர். அவர் உரத்த குரலில் "இங்கேயுள்ள 234 உறுப்பினர்களும் சமமானவர்கள்தான். அதனால் ஜெயலலிதா எந்த வகையிலும் மேலானவர் அல்ல" என்று சொன்னதுதான் தாமதம்; அ.தி.மு.க.
உறுப்பினர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு என்னால் எழுதிக்காட்ட முடியாத இழிதகை சொற்களால் பாண்டியனை அர்ச்சித்தனர். அவரும் பதிலுக்கு அவற்றை விட மோசமான சொற்களால் தாக்கிடத் தலைப்பட்டார். பாண்டியன் அவர்கள் அப்போது பயன்படுத்திய அந்தக் கடுமையான வார்த்தைகள், ஜெயலலிதாவை மட்டுமல்ல, பேரவையின் கண்ணியத்தையே பாதித்தவைகளாகும். அந்த பி.எச்.பாண்டியன்தான் இதை நான் எழுதும் இந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது ஜெயலலிதாவின் பெருந்தன்மைக்கு அடையாளம் என்பதை நான் சுட்டிக் காட்டாவிடில் இந்த வாழ்க்கை வரலாறுக்கு "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பு பொருந்தாமல் போய் விடும். பேரவைத் தலைவர் அந்த அமளியை அடக்கிட அரும் பாடுபட்டு ஓரளவு வெற்றி கண்டார். நான் அமைதியாக சிறிது நேரம் இருந்துவிட்டு, நிதிநிலை அறிக்கையைப் படிக்க முற்பட்டேன். ஆனால் அந்த அமைதி மின்னல் வெட்டாகத் தோன்றி மறைந்தது.
மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்களும், அவரது கட்சி உறுப்பினர்களும் என்னைச் சூழ நின்று கொண்டு "படிக்காதே! படிக்காதே" என்று கூச்சலிட்டதுடன் அவர்கள் கட்சியின் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் என் மீது பாய்ந்து என் கையிலிருந்த நிதிநிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்துக் கிழித்தெறிந்தார்.
அதைத் தடுக்க முனைந்த போது என் முகத்தில் ஒரு குத்து விழுந்து, எனது மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கித் தரையில் சிதறியது. நான் தாக்கப்பட்டவுடன் இரு தரப்பிலும் மோதுதல் - அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலி பெருக்கி கம்பியால் தாக்கியதில் ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திட்டமிட்டுக் கலவரம் நடத்தப்படுவதை உணர்ந்த நான் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் அறைக்குச் சென்றேன்.
நான் தாக்குண்டு வருவதையும், என் கண்ணாடி நொறுங்கியதையும் கண்டு செய்தியாளர்கள் கண்ணீர் வடித்து தழுதழுத்த குரலில் எனக்கு ஆறுதல் கூறினர். பேரவைத் தலைவர் தமிழ்க்குடி- மகன் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார். அவையிலிருந்து அ.தி.மு.க. வினரும், அவர்களைத் தொடர்ந்து அவர்களது தோழமைக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறிவிட்டனர். பின்னர் 11.30 மணிக்கு நிதிநிலை அறிக்கையை நான் பேரவையில் படித்தேன்.
"எங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் குடி கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு சார்பில் அவர் உறங்குகின்ற இடம் நோக்கித் தொழுது இந்த அறிக்கையை அவை முன் வைக்கிறேன்." என்று கூறி பல்வேறு திட்டங்களும், மக்கள் நலப் பணிகளும் நிறைந்த அந்த அறிக்கையைப் படித்து முடித்ததும்; அவையில் கலவரம் செய்த அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒரு வாரகாலம் தற்காலிக நீக்கம் (சஸ்பென்ஷன்) செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
ஆனால் அடுத்த நாளுக்கு அடுத்த நாள் 27-3-89 திங்கட் கிழமை அன்று சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள்; அ.தி.மு.க. உறுப்பினர்களைத் தற்காலிகமாக ஒரு வார காலம் நீக்கி வைத்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். உடனே நான் எழுந்து; "எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை நான் அணுகுகிறேன். அன்றைய தினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப் பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப்பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் வந்து அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.
அவ்வாறு அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்காக பாரத ரத்னா சி. சுப்ரமணியம் அவர்கள் ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் ஏடு வெளியிட்ட செய்தியில்- "செல்வி ஜெயலலிதா தன் கட்சியினரான 28 உறுப்பினர்கள் கொண்ட தாக்குதல் படையை நோக்கி 'அடி', 'குத்து' என்று உத்தரவுகளைப் பிறப்பித்ததை எல்லோரும் கேட்க முடிந்தது.
ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் முதலமைச்சரை நோக்கிப் பாய்ந்து அவர் முகத்தில் குத்தினார். இதில் முதல்வரின் கண்ணாடி தரையை நோக்கிப் பறந்தது. இன்னொரு அ.தி.மு.க. உறுப்பினர் முதலமைச்சர் படிப்பதற்காக வைத்திருந்த பட்ஜெட் உரை புத்தகத்தைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். இதர அ.தி.மு.க. உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். படத்தில் வரும் சண்டைக் காட்சியை நினைவூட்டும் விதமாக மைக்குகளைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தி.மு.க.
உறுப்பினர்களைத் தாக்கத் தொடங்கினார்கள்" - என்று எழுதியிருந்தது. இதற்கிடையே செல்வி ஜெயலலிதா அவர்கள், அவையில் தன்னைத் தாக்கி விட்டதாகவும்- ஆட்சியை உடனே கலைக்க வேண்டுமென்றும், பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் தந்திகள் அனுப்பி வைத்தார். ஆளுநரிடமும் முறையிட்டுக் கொண்டார். தேவகி மருத்துவமனையில் இருந்தவாறு; அ.தி.மு.க.-இந்திரா காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து இனி வரும் தேர்தல்களில் தி.மு.க.வை எதிர்க்கும் என்று செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.
பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் விளக்கிக் கூறுவதற்காக பேரவைத்தலைவர் தமிழ்க்குடிமகன் ராஜ்பவன் சென்று ஆளுநரைச் சந்தித்தார். குழப்பத்திலே இருந்த ஆளுநர் அலெக்சாண்டர் அவர்களிடம் தமிழ்க்குடிமகன் அவர்கள், "சற்று சிந்தித்துப் பாருங்கள். சுமார் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு பல சோதனைகளைச் சந்தித்த கலைஞர் அவர்கள் 13 ஆண்டு கழித்து மீண்டும் முதல்வராக வந்திருக்கிறார். அவர் நிதிநிலை அறிக்கை படிக்கும்போது எல்லாம் அமைதியாக நடந்து முடிய விரும்புவாரே தவிர அதற்கு மாறாக அவரது ஆளுங்கட்சிக்காரர்களைக் கொண்டே ஒரு கலவரத்தைத் தூண்டி, மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு நல்ல நிகழ்ச்சியைக் களங்கப் படுத்திக் கொள்ள நினைப்பாரா?"
என்று கேட்டுவிட்டு; அவர் கண்ணெதிரே அவையில் நடந்தவைகளை விபரமாக விவரித்துச் சொன்னவுடன் ஆளுநர் அலெக்சாண்டர் மனத்தில் இருந்த குழப்பம் நீங்கியதாக நான் கேள்விப் பட்டேன். பிறகு நானும் பேரவைக் கலவரப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குப் போய் ஆளுநரிடம் பேரவையில் நடந்தவைகளை விபரமாகச் சொன்னேன். ஆளுநர் அலெக்சாண்டர் கண்டிப்பானவர் என்பது மட்டுமல்ல; கண்ணியமிக்கவருங்கூட! அவரது பொறுப்பான தன்மைக்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.
1993ஆம் ஆண்டு அவர் மராட்டியத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த போது; அந்த மாநிலத்தில் மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதாக அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பு பல ஆண்டுகளாகக் கிடப்பிலே போடப்பட்டதால் ஒரு கிளர்ச்சிக்கு ஏற்பாடாகிறது எனச் செய்தியறிந்து உடனே நான் தமிழ் நாட்டிலிருந்து தி.மு.க. சார்பில் லட்சக்கணக்கான தந்திகளை மராட்டிய முதல்வர் திரு. சரத்பவாருக்கும், மராட்டிய ஆளுநர் அலெக்சாண்டருக்கும் அனுப்பச் செய்தேன்.
கடிதங்களும் இருவருக்கும் எழுதினேன். எங்கள் கோரிக்கையை கவனிப்பதாக மராட்டிய ஆளுநர் அலெக்சாண்டர் எனக்குக் கடிதம் எழுதினார். அடுத்து சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்கப்பட்டதற்கான மராட்டிய அரசின் ஆணையின் ஒரு பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்தார் என்றால்; நான் அப்போது இங்கே முதலமைச்சராக இல்லாத நேரத்திலும் என் மீதும், நான் வைத்த கோரிக்கையின் மீதும் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை உணர முடிகிறதல்லவா!
அவரைப் போன்றவர்களால்தான் ஆளுநர் பதவி மட்டுமல்ல; எந்தவொரு பதவிக்குமே பெருமை சேர்கிறது என்று ஒவ்வொருவரும் எண்ணிப் பெருமைப்படலாம். மத்தியில் ஆட்சியிலே இருந்த காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் சிங் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடுத்தார். டெல்லியிலிருந்து சென்னை வந்த அவர் நேராகச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பூச்செண்டு கொடுத்துவிட்டு, நிருபர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவின் கட்சி பாதிக்கப்பட்ட கட்சி என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் என்ற முறையில் தமிழக முதல்வரைச் சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு, அவர் விரும்பினால் என்னை வந்து பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில் அரசியல் சாசனப்படி தமிழக அரசு செயல்பட வேண்டும், எல்லா இடங்களிலும் எதிர்க்கட்சிகள் உள்ளன, இந்திரா காங்கிரசும் பல மாநிலங்களில் எதிர்க் கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஒரு சர்ச்சை அல்லது விவகாரம் வரும்போது அதை விவாதித்து தீர்வு காண வேண்டும்.
அதற்குப் பரிகாரம் வன்முறையாகாது என்றார். அகில இந்திய அளவில் தெலுங்கு தேசம், ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அசாம் கண பரிஷத், அகாலி தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க. வின் செயல்பாட்டினையும் அதற்கு ஆதரவு தெரிவித்த இந்திரா காங்கிரசையும் கண்டித்து டெல்லியில் அறிக்கை விடுத்தனர். அரசியல் சாசனப்படி தமிழக அரசு செயல்பட வேண்டுமென்று கூறிய மத்திய அமைச்சரின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதே பிப்ரவரி திங்கள் 27ந் தேதி என்ன செய்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
1989-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி மேற்கு வங்க சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம். திரு. ஜோதிபாசு அவர்களின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அங்கே நடைபெறுகிறது. அந்த மாநில கவர்னர் பேராசிரியர் நூருல்ஹாசன் முதல் நாளன்று உரை நிகழ்த்த வருகிறார். அப்போது மேற்கு வங்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்துஸ் சத்தார் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ஜோதிபாசுவை வசைபாடும் வகையில் எழுதப்பட்ட விளம்பர அட்டைகளைக் கையிலே எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
ஆளுநர் உரை நிகழ்த்தத் தொடங்கியதும், ஜோதிபாசுவின் ஊழல்களைப் பற்றிக் குறிப்பிடு என்று குரலெழுப்பினார்கள். கவர்னர் தொடர்ந்து படிக்க முயற்சிக்கையில் கையிலே வைத்திருந்த அட்டைகளை கவர்னர் மீது வீசினார்கள். அதனைத் தொடர்ந்து அந்தக் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஓடிச் சென்று கவர்னரைச் சூழ்ந்து கொண்டார்கள். கவர்னரின் மேஜை மீது எரிந்து கொண்டிருந்த விளக்கை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அணைத்தார்.
கவர்னரின் பின்னாலிருந்த கா
ங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரை முன் பக்கமாகப் பிடித்துத் தள்ளினார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல அவரது கையைப் பிடித்து அடித்தார்கள். இவைதான் காங்கிரஸ்காரர்கள் அரசியல் சாசனத்தை மதித்து அப்போது நடந்து கொண்ட விதம் என்று அனைத்து ஏடுகளும் விமர்சித்திருந்தன. இது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. அதே திங்களில் கர்நாடகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சி இதோ! கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த திரு.பொம்மை அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட எம்.டி.
சீட் கோட்டாவில் சொந்தமாகத் தொழில் செய்யும் ராமகிருஷ்ண ரெட்டி என்ற டாக்டருக்கு இடம் தரச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். இது வேண்டியவருக்கு சலுகை காட்டும் ஊழல் என்றும், முதல்வர் பொம்மை பதவி விலக வேண்டுமென்றும் இந்திரா காங்கிரசார் கர்நாடக மேலவையிலே போராட்டம் நடத்தினர். "ராமகிருஷ்ண ரெட்டி அரசு டாக்டர் இல்லாவிட்டாலும் திறமை மிக்கவர், புத்திசாலி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றவர், எனவேதான் மேல் படிப்பு படிக்க எனக்குரிய தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு சீட் தரச் சொன்னேன்.
இதை ஊழல் என்று கருதினால் நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு போடுங்கள், தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் கட்டுப்படுகிறேன்" என்று முதல்வர் பொம்மை பதிலளித்தார். மேலும், இவருக்கு இடம் வழங்க பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், இந்திரா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திருமதி கே.எஸ். நாகரத்தினம்மா பரிந்துரை கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் முதல்வர் கூறியும் காங்கிரசார் கேட்கவில்லை. போராட்டம் நடத்தியதோடு மேலவையிலே தர்ணாவும் மேற்கொண்டு அமளியில் ஈடுபட்டனர்.
மேலவைத் தலைவர் எவ்வளவு சொல்லியும் கேளாததால் பின்னர் 12 இந்திரா காங்கிரஸ் உறுப்பினர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள். இந்திரா காங்கிரஸ் கட்சியின் நடைமுறை குறித்து 28-3-89 தேதிய தினமணி இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த சில வாசகங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். "கடந்த வார சட்டமன்ற அமளிகள் தமிழகத்தில் உரசினால் பற்றிக் கொள்ளும் பாஸ்பரஸ் சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் தருணத்தில் இ.காங்கிரஸ் தலைவர்களின் சிந்தனைப்போக்கு கவலை தருவதாக இருக்கிறது.
சட்டமன்றத்தில் நிகழ்ந்த ஜனநாயக விரோதமான காட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் நிலவும் கெடுபிடியான அரசியல் சூழ்நிலைக்கும் ஆளும் கட்சி மட்டும் பொறுப்பல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் சம பொறுப்புண்டு. குறிப்பாக சட்டப்பேரவையில் அமளிகள் உருவாவதற்கு எதிர்க்கட்சிகளின் சண்டித்தனமான செயல்முறையே காரணமாக இருந்தது. காங்கிரசும் அ.தி.மு.க.வும் சட்டமன்றத்திலும் வரும் தேர்தல்களிலும் இணைந்து செயல்படப் போவதாக தினேஷ் சிங்கைச் சந்தித்தபிறகு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இதில் ஆட்சேபிப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் மத்திய அரசின் அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்து இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசைக் கவிழ்ப்பது இக்கூட்டு முயற்சியின் நோக்கமாக இருக்கக் கூடாது." இதுபோன்ற கருத்தினை அழுத்தம்திருத்தமாக தமிழகத்தில் மட்டுமின்றி வடமாநிலத்து ஏடுகளும் வெளியிட்டதைக் காண எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. 356 பிரிவு குறித்து முக்கிய தீர்ப்பு! எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழிகளில் ஒன்று; "நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்" என்பதாகும்.
இதனை எனது வாழ்க்கை வரலாறு கொண்டு மாத்திரமல்ல; என்னுடன் இரண்டறக் கலந்துள்ள இந்த திராவிட இயக்க வரலாறு கொண்டும் எண்ணிப் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தின் வைகறைப் பொழுது எனப்படும் 1916ஆம் ஆண்டிலிருந்து இந்த 85 ஆண்டு கால நீண்ட தூரப் பயணத்தில்; தொடக்கத்தில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆட்சி மன்றப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் உரிமை முழக்கத்தினால்; அடித்தட்டு மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை, கல்வி வேலை வாய்ப்புக்களில் தலை தூக்கிப் பார்க்கச் செய்ய முடிந்தது என்றாலும் சமூக ரீதியான விழிப்புணர்வையும், அரசியல் ரீதியான உரிமைகளையும் அந்த மக்கள் முழுமையாகப் பெற்றிட வாய்ப்புகள் வராமலே போயிற்று.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே டாக்டர் அம்பேத்கர் எழுப்பிய குரலும், அண்ணல் காந்தியடிகள் காட்டிய பரிவும், பெரியார் புரிந்த கர்ச்சனையும் கண்மூடிக்கிடந்த மக்களைத் தட்டியெழுப்பிடப் பெரிதும் துணையாக அமைந்தன. இந்தியா முழுமையும் அடிமைச் சங்கிலி அறுக்கப்பட்ட ஆனந்தத்தில் மிதந்தாலும்; தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஓர் ஏக்கம் இருக்கத்தான் செய்தது. சுதந்திரம் பெற்ற பிறகு 1947 முதல் ஓர் இருபதாண்டு காலம்; இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியே நடைபெற்றது.
ஆனால் வட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மிகப் பெருந்திட்டங்கள், பிரமாண்டமான தொழிற்சாலைகள், இவற்றுக்கு ஈடாகத் தமிழ்நாட்டில் திட்டங்களோ, தொழில் வளங்களோ இல்லை. ஏதோ பெருந்தலைவர் காமராசர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த ஒன்பதாண்டு காலத்தில் சிறார்க்குக் கல்விக்கண் திறக்கப்பட்டதுடன் சில தொழிற்சாலைகள், அணைக்கட்டுத் திட்டங்கள் எனத் தமிழகம் பெற்ற நன்மைகள் பட்டியலிடப்பட்டன. அதனால்தான் "வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது" என்ற வருத்தமும்; "சிந்திரித் தொழில் சிறக்கிறது அங்கே!
முந்திரித் தொழிலும் சிதைகிறது இங்கே!" என்ற ஆதங்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோஷங்களாக வெளிப்பட்டன. 1957-ஆம் ஆண்டு; வெட்டவெளியில் முழங்கினால் மட்டும் போதாது; சட்டசபையிலும் முழங்கினால்தான்; கோஷங்களாக இருக்கக்கூடிய நமது கொள்கைக்கும் கோரிக்கைகளுக்கும் வெற்றி கிடைக்கும் என்பதற்காக; வெறும் சமுதாய இயக்கமாக மட்டுமன்றி அரசியல் துறையிலும் பணியாற்ற முனைந்து, அண்ணா அவர்கள் தலைமையில் 15 பேர் சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபோது; அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்களையும், நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களையும் பார்த்து; "எங்களைக் காட்டி; டெல்லியிடமிருந்து தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டியவைகளைப் பெறுங்கள்!"
என்று அண்ணா கேட்டுக் கொண்டார். தமிழ் உணர்வு போற்றுகிற இயக்கமாகவும், தமிழ் மொழி காத்திடும் இயக்கமாகவும், தன்மான இயக்கக் கொள்கைகளைப் பரப்பிடும் இயக்கமாகவும், சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபடும் இயக்கமாகவும், அதே சமயம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் இயக்கமாகவும் இருந்து எழுப்பிடும் குரலுக்குச் செயல்வடிவம் கிடைக்க வேண்டுமானால் ஆட்சி பீடத்தில் இந்த இயக்கம் அமர வேண்டுமெனத் தமிழ் மக்கள் விரும்பினார்கள்.
அவர்கள் விருப்பம் 1967-ல் நிறைவேறி, அண்ணா அவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வந்தது. எதிர்க்கட்சியாக இருந்து வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்தும் வாய்ப்பை அண்ணாவும் அவர் தலைமையில் இருந்த கழக ஆட்சியும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அதன் விளைவுதான் சென்னை ராஜ்யத்துக்கு தமிழ்நாடு என்று பெயர். சுயமரியாதைத் திருமணங்கள் இதுவரை நடைபெற்றவைகளும் இனி நடைபெறப் போகிறவையும் சட்டப்படி செல்லும் என்ற பேரவைத் தீர்மானம்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் - ஆங்கிலம் என்ற இரு மொழிகளுக்குத்தான் இடம்! இந்திக்கு இடமில்லை என்ற உறுதியான நிலை! அண்ணாவின் மறைவுக்குப் பிறகும்; தி.மு. கழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளும், திராவிட இயக்கத்தின் தொடக்க காலத் தீர்மானங்களும் எனது தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலும் அரசாணைகளாகவும் அல்லது சட்டங்களாகவும் பிறப்பிக்கப்பட்டன. நல்ல எண்ணத்துடன் பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் 1960-ல் கொண்டு வரப்பட்ட 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்ச வரம்புச் சட்டம்; பெரும் நிலச் சுவான்தாரர்களின் முன்னேற்பாட்டுத் தந்திரத்தால் வெற்றியே பெறாமல் போனதை உணர்ந்து; கழக ஆட்சியில் 1970-ல் 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து அதன் வாயிலாக 1 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கர் நிலம் உபரி நிலமாகக் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகள் 1 லட்சத்து 37 ஆயிரம் பேருக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
இதில் 62 ஆயிரம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள். இந்தியாவிலேயே கழக ஆட்சியில் முதன் முறையாகக் குடியிருப்புமனைச் சட்டம் 1971-இல் கொண்டு வரப்பட்டு, மிராசுதாரர்களின் நிலங்களில் வீடு கட்டிக் குடியிருந்த 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்க்கு அந்த வீடுகள் சொந்தமாக்கப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் மட்டும் 1 லட்சம் பேர்! 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் சௌந்திரபாண்டியனார் தலைமையில் பெரியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானமான "பெண்களுக்கும் ஆண்களைப் போல சொத்தில் சம பங்கு" என்பதை; 60 ஆண்டுக்குப் பிறகு 1989-ல் சட்டமாக ஆக்கிய பெருமையும் தி.மு.க.
ஆட்சிக்கு உண்டு. காமராசர் ஆட்சியில் பள்ளி இறுதி வகுப்பு வரை என்றிருந்த இலவசக் கல்வி, கழக ஆட்சியில் புகுமுக வகுப்பு வரையிலே இலவசக் கல்வியென விரிவு படுத்தப்பட்டது. மின்விளக்கு இல்லாத கிராமங்களே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க சபதம் செய்து அறிவித்து எல்லா கிராமங்களுக்கும் மின்விளக்கு வசதி செய்திட வழி காணப்பட்டது. 20 ஆயிரம் ஆதிதிராவிடர் காலனிகளில் 18 ஆயிரம் காலனிகளுக்கு மின் விளக்கு வசதி செய்து தரப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மீனவர்களுக்கும் இலவசமாக வீடு கட்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பேருந்துகளை தேசிய மயமாக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தடைப்பட்டது. 1974-ஆம் ஆண்டு; அரசு அலுவலர் பணியாற்றும் காலத்தில் இறந்தால் 10 ஆயிரம் ரூபாய் குடும்பப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்ந்து பின்னர் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது.
கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது பின்னர் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் திட்டமும், 1971-ஆம் ஆண்டு இரவலர் மறுவாழ்வுத் திட்டமும், 1972-ஆம் ஆண்டு கண்ணொளி வழங்கும் திட்டமும், 1973-ஆம் ஆண்டு கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டமும், 1974-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் மறு வாழ்வுத் திட்டமும், கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டமும், ஆதிதிராவிடர்களுக்கு இலவச காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டமும் கழக ஆட்சியின் சாதனைப் பட்டியலிலே இடம் பெற்ற திட்டங்களாகும்.
ஆகஸ்ட் 15 அன்று கோட்டையிலே விடுதலை நாளன்று கொடியேற்ற உரிமை இந்தியாவிலே உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றதும் கழக ஆட்சிக் காலத்திலே நான் மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான். இந்தப் பட்டியலின் தொடர்ச்சியாகத்தான் 1989-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போதும், தேர்தல் அறிக்கையிலே அறிவித்த பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், சீர்மரபினர்க்கும் 20 சதவிகிதம் கல்வி வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்தது, நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தியது, வட சென்னையில் புதிதாக அனல் மின் நிலையம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது, ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவாக மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம் என்ற பெயரில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பெண்களுக்கு இளங்கலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கியது ஆகியவைகள் எல்லாம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட சீர்மிகு திட்டங்கள்தான்.
பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, முதியோர் உதவித்தொகை பெற அதற்கு முன்பு இருந்த எண்ணிக்கை உச்சவரம்பு நீக்கப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாற்றியமைக்கப்பட்ட குறுகிய காலப் பயிர்க் கடன்களின் தவணை தவறிய கடன்தொகைகள் அனைத்தும் அறவே ரத்து செய்யப்பட்டதோடு, குறுகிய, மத்தியக் காலக் கடன்கள் மீதுள்ள அபராத வட்டியும் அறவே தள்ளுபடி செய்யப்பட்டது.
நீண்ட காலக் கடன்கள்மீது ஒத்தி வைக்கப்பட்டிருந்த வட்டியும் அறவே தள்ளுபடி செய்யப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் வரை கடன் நிவாரணம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கூட்டுறவு, வணிக, கிராமிய வங்கிகளிடமிருந்து கடன் பெற்றிருந்த சுமார் 19 லட்சம் விவசாயிகளுக்கு 508 கோடி ரூபாய் கடன் நிவாரணம் அளிக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டு, கழக ஆட்சியிலேதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் சேர்ந்து கல்வி, வேலை வாய்ப்பில் 18 சதவிகிதம் என்றிருந்த ஒதுக்கீட்டினை மாற்றி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் 18 சதவிகிதம் என்றும் மலைவாழ் மக்களுக்கு தனியாக ஒரு சத விகிதம் ஒதுக்கீடு என்றும் ஆக்கப்பட்டது. இத்தனை சாதனைகளுக்கும், மக்கள் நல்வாழ்வு வளர்ச்சித் திட்டங்களுக்கும் வழி வகுத்ததும்; வழி வகுத்திடக் கூடியதுமான நிதிநிலை அறிக்கையை நான் படிக்கத் தொடங்கியபோது அ.தி.மு.க.வினர் ஆரம்பித்த கலவரம் ஒவ்வொரு நாளும் அவையிலே தொடரவே செய்தது.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் கறுப்புத் துணி அணிந்து கொண்டும், வாயைக் கட்டிக்கொண்டும், அவைக்கு வருவதும், கேள்வி நேரம் முடிந்ததும் ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பி அதைக் காரணமாக வைத்து கூச்சலிட்டவாறு வெளிநடப்பு செய்வதுமாக இருந்தனர். நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் முடிந்து 3-4-1989 அன்று நான் பதிலுரை ஆற்ற முற்பட்ட போதும் அவர்கள் அமைதியாக இருந்து என்னுரையைக் கேட்கத் தயாராக இல்லை. நிதிநிலை அறிக்கையைப் பாராட்டி 27-3-89 நாளிட்ட இந்து, 29-3-89 நாளிட்ட பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் மற்றும் எகானமிக் டைம்ஸ் ஏடுகள் எழுதியிருந்தன.
பதில் உரையில் எந்தெந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கான விவரங்கள்- மாநிலத்திட்டக் குழு, பாசன மேம்பாட்டு நிலைக்குழு, இந்து அறநிலையத் துறை ஆக்கப்பணி ஆலோசனைக் குழுக்கள் பற்றிய அறிவிப்பு- விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி விகித உயர்வு ஆகியவை இடம் பெற்றிருந்தன. 1974-க்கு முன்பே அடிக்கல் நாட்டப் பெற்று, கட்டி முடிக்கப்பட்டிருந்த சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலுவலகத்திற்கான 12 மாடிக் கட்டிடத்திற்கு இந்தி எதிர்ப்புத் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ப
ெயர் சூட்டி 14-4-1989 அன்று திறப்பு விழா நடத்தி வைத்தேன். இந்தியத் திரைப்படத் துறையின் 75-வது ஆண்டு விழாவையொட்டிய பவள விழா மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 50-வது ஆண்டு பொன் விழா 16-4-89 மாலை- சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி விழாவை குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் தொடங்கி வைத்தார். ஆளுநர் அலெக்சாண்டர், மத்திய தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சர் எச்.கே.எல்.
பகத், மாநில செய்தித்துறை அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 75 கலைஞர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. கலைத்துறைப் பணிக்கான முதல் பதக்கம் எனக்கு மத்திய அமைச்சர் எச்.கே.எல். பகத் அவர்களால் வழங்கப்பட்டது. மற்ற கலைஞர்களுக்கு பதக்கங்களை நான் வழங்கினேன். பதக்கம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் நடிகர் திலகம் சிவாஜி, ஏ. நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், அசோக் குமார், மது, நடிகை சாரதா, எம்.என்.நம்பியார், இயக்குநர் கிருஷ்ணன், கவிஞர் மருதகாசி, ஜி.
உமாபதி, இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி, ஏ.வி.எம். சரவணன், நடிகை அஞ்சலி தேவி, ஜி.பி. சிப்பி, நௌசாத் அலி, பி.கே. கரஞ்சியா, சுந்தர்லால் நஹாதா, பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் பலராகும். விழாவில் நான் உரையாற்றும் போது, அரசியல் துறையில் ஆயிரம் மாறுபாடுகள் கடைசி காலத்தில் ஏற்பட்டாலுங்கூட ஆரம்ப காலந்தொட்டு 40 -ஆண்டு கால கலையுலக வாழ்க்கையில் ஒன்றாகப் பழகிய என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பெயரால் தமிழக அரசின் சார்பில் தரப்படுகிற கலைஞர்களுக்கான ஒரு விருது வழங்கப்படு மென்று அறிவித்தேன்.
மேலும் அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே 30 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி எம்.ஜி.ஆர். மறைந்து அடக்கம் செய்தவிடத்தில் எந்தவிதமான நினைவு மேடையும் கட்டப்படாமல் கற்கள் மட்டுமே கொட்டிக் கிடந்த நிலையை மாற்றி உடனடியாக அந்த இடத்தை அழகுபடுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூறி அவ்வாறே அந்த இடம் அழகு படுத்தப்பட்டது. அந்த வாரம் 21-4-1989 அன்று இரவு கர்நாடக மாநிலத்தில் எட்டு மாதகாலமாக திரு.பொம்மை அவர்கள் தலைமையிலே நடைபெற்று வந்த ஜனதாதள அரசு திடீரென்று 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டு, மாநில சட்டப் பேரவையும் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் பூட்டாசிங் அவர்கள் அந்த அறிவிப்பினைச் செய்தார். பொம்மை அமைச்சரவைக்கு ஆதரவு அளித்து வந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் விலக்கிக் ஆதரவை கொண்டதால் அவரது அரசு சிறுபான்மையாகி விட்டது என்று மாநில ஆளுநர் வெங்கட சுப்பையா அளித்த அறிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் இந்த ஆணையைப் பிறப்பித்தார். உடனடியாக குடியரசுத் தலைவரை முக்கிய தலைவர்கள் சந்தித்து கர்நாடக அரசு கலைப்பு குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அந்தக் குழுவில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர்., ஜனதாதள தலைவர் வி.பி.சிங், நாடாளுமன்ற ஜனதாதள தலைவர் மதுதண்டவதே, அரியானா முதல்வர் தேவிலால், சி. மாதவ ரெட்டி, பி. உபேந்திரா (தெலுங்கு தேசம்), வாசுதேவ் ஆசார்யா (மார்க்சிஸ்ட்), சதுரணன் மிஸ்ரா (இந்தியக் கம்யூனிஸ்ட்), தினேஷ் கோஸ்வாமி (அஸ்ஸாம் கண பரிஷத்), எஸ்.சி. சின்ஹா (எஸ். காங்), அமர்ராய் பிரதான் (பார்வர்டு பிளாக்), பயஸ் திர்கே (ஆர்.எஸ்.பி.), தி.மு.
கழகத்தின் சார்பில் என்.வி.என். சோமு எம்.பி., ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொம்மை அரசுக்கு 19 பேர் முதலில் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்தபோதிலும், அதிலே 7 பேர் அன்று மாலையே தங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருவதாகக் கூறினர். மேலும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் 4 உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை பொம்மை அரசுக்குத் தருவதாகக் கூறினார்கள். முதல்வர் பொம்மை அவர்களோ, 27-ந்தேதி சட்டசபையைக் கூட்டுங்கள், அதிலே எனக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
மத்திய, மாநில அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்த சர்க்காரியா கமிஷன், ஒரு அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை சட்டசபையைக் கூட்டித்தான் முடிவு செய்ய வேண்டுமென்று கூறியிருந்தபோதிலும், உச்ச நீதிமன்றத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் நாகாலந்து அரசை டிஸ்மிஸ் செய்தது சரியா என்ற பிரச்சினையிலே தீர்ப்பு கூறியபோது, சட்ட சபையைக் கூட்டித்தான் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு கட்ட வேண்டுமென்று தெரிவித்ததற்கும் மாறாக கர்நாடக அரசு கலைக்கப்பட்டது என்பதுதான் ஜனநாயகத்தில் ஒரு வேதனையான நிகழ்ச்சியாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை அவர்களும் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கு ஐந்து ஆண்டுக் காலம் நடைபெற்று 1994-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11-ஆம் நாள் உச்ச நீதிமன்றத்திலே தீர்ப்பளிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டில் கர்நாடக அரசு கலைக்கப்பட்டது குறித்தும், 1988-இல் நாகாலந்து அரசு கலைக்கப்பட்டது குறித்தும், 1991-ஆம் ஆண்டில் மேகாலய அரசு கலைக்கப்பட்டது குறித்தும், 1992-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாலயப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் கலைக்கப்பட்டது குறித்தும் அந்தந்த மாநிலங்களின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி திரு.
ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் விசாரணையை நடத்தி, வரலாற்றில் இடம் பெறத்தக்க தீர்ப்பினை வழங்கினார்கள். இந்தத் தீர்ப்பிலே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டது செல்லும் என்று தீர்ப்பளித்த போதிலும், கர்நாடக அரசு, நாகாலந்து, மேகாலயா மாநிலங்களில் அரசு கலைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் மட்டும் போதாது, குறிப்பிட்ட காலத்துக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், அப்போதுதான் அது செல்லுபடியாகும் என்ற சிறப்புக்குரிய தீர்ப்பு அந்த வழக்கிலேதான் வழங்கப்பட்டது. எந்த ஒரு வழக்கிலாவது, மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் உத்தர விட்டது செல்லாது என்று நீதிமன்றம் கருதுமானால் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் கலைக்கப்பட்ட அரசை உயிர்ப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தார்கள்.
இதே காலகட்டத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்ச்சி சோவியத் யூனியனில் நடைபெற்ற தேர்தல். 26-3-1989 அன்றுதான் சோவியத் அதிபர் மைக்கேல் கோர்பசேவ் அவர்களும், லட்சக்கணக்கான சோவியத் மக்களும் அந்த நாட்டிலே முதன்முதலாகப் பல வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலில் வாக்களித்தனர். இந்தத் தேர்தல்; அதிபர் யார் என்பதை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல் இல்லை என்ற போதிலும், அந்த நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு, பாதுகாப்புத் துறைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பிற்கான தேர்தலாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து; சோவியத் யூனியனின் அதிபராக 1990-ஆம் ஆண்டு கோர்பசேவ் பொறுப்பேற்றுக் கொண்ட சூழலில் சோவியத்தில் ஜனநாயக சமதர்மக் கொள்கை, பொருளாதாரத்தில் சீர்திருத்தம் போன்ற புதிய நிலைகளை அறிமுகப்படுத்தினார். எரிமலையில் திடீரென பனிக்கட்டிக் குழம்பு வழியத் தொடங்குகிறதே என உலகம் வியப்புடன் பார்த்தபோது; எரிமலையே வெடித்துச் சிதறிய காட்சியைப் பார்க்க நேரிட்டது.
இதற்கான விளக்கத்தை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
