நெஞ்சுக்கு நீதி
சதி ஆரம்பம்! · 293 / 391
ஆட்சியைக் கலைக்க சதி ஆரம்பம்! வை கோ அவர்களின் ஈழப் பயணம் குறித்த அவரது கடிதம் என் கைக்குக் கிடைத்த அதே 24-2-1989 அன்று டெல்லியிலிருந்து தமிழகம் வந்த ஒன்பதாவது நிதிக் குழுவை தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் வரவேற்றேன். மாநில அரசின் நிதி வருவாயைப் பெருக்கிட பல்வேறு துறைகளில் தி.மு.க. அரசு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த கால அரசில் உருவாக்கப்பட்ட அரசியல் ரீதியான வாரியங்கள், கழகங்கள் என இருந்த 77 பதவிகளில் 41 பதவிகள் நிர்வாகச் சீர்திருத்தம் கருதியும், சிக்கனம் கருதியும் ரத்து செய்யப்பட்டன.
அமைச்சர்கள், அதிகாரிகள் மிகுந்த சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதையும், அரசு நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடைபெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தியதில் மிகக் கண்டிப்பாக இருந்தேன் எனினும், கலை, இலக்கியத் துறை தொடர்புடைய இயல் இசை நாடக மன்றத்துக்குத் தலைவராக பழம் பெரும் எழுத்தாளர் - பல எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்துலகச் சிற்பி "சாவி" என்ற சா. விசுவநாதன் அவர்களை நியமிக்க விரும்பினேன்.
எனது வலியுறுத்தலின் பேரில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்கு முன்பே அவரது நெருங்கிய நட்பும் - நகைச்சுவை உணர்வுடனும் கருத்தாழத்துடனும் எழுதும் திறனும்- அத்துடன் என்னிடம் அவர் நெஞ்சாரக் கொண்டிருந்த இனிய உறவும்- அவர் வாழ்வாங்கு வாழ்ந்து அந்த முழுமையான வாழ்வு, நானும் அவரும் அமர்ந்திருந்த அவரது 85-வது பிறந்தநாள் விழா மேடையில் யாரும் எதிர்பாராத வகையில் முடிவுற்றதும்; இந்த வரிகளை மையினால் அல்ல; என் கண்ணீரால் எழுதிட வைத்துள்ளன.
என் கரங்களில் நினைவுக் கேடயத்தை வழங்கினார். எனக்குப் பெரிய மல்லிகை மாலை ஒன்றை அணிவித்து கட்டித் தழுவிக் கொண்டார். எனக்கு அணிவிப்பதற்காக அவரே கடைக்குச் சென்று தனியாகக் கட்டச் சொல்லி வாங்கி வந்த மாலையாம் அது. பின்னர் அவருக்கு வாழ்த்து இதழ், நினைவுக் கேடயம், பொன்னாடை அனைத்தும் மக்களின் பெருத்த கையொலிக்கிடையே சென்னை நாரதகான சபாவில் வழங்கப்பட்டன. அந்த இனிய காட்சியை அவரது துணைவியாரும், குடும்பத்தாரும், உற்றார் உறவினர்களும் அரங்கத்தில் அமர்ந்து ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"நன்றி கூறி நான் பேசிவிடுகிறேன். நீங்கள் எனக்கு முன் பேசி விட்டால் பிறகு கூட்டம் கலைந்து விடும்" என்று ஒலி பெருக்கியிடம் சென்றார். எழுத்தாளர் சிவசங்கரி அவரைக் கைத்தாங்கலாக ஒலி பெருக்கியின் முன்னால் அழைத்துச் சென்றார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, அவருக்கு சற்று உடல் நலிவு என்று! எங்களுடன் மேடையிலிருந்த கவிப்பேரரசு வைரமுத்துவும், ஆர்க்காடு வீராசாமியும், ஆர்.எம்.வீரப்பனும், மேயர் மு.க.ஸ்டாலினும், பொள்ளாச்சி மகாலிங்கம், ஏவி.எம்.சரவணன், முனைவர் வா.செ.குழந்தை சாமி, ராணி மைந்தன் ஆகியோரும் சுருக்கமாகப் பேசுமாறு சாவியிடம் கேட்டுக் கொண்டனர்.
"நான் தினமணிக் கதிர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். அப்போது கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்ட நேரம். நான் கலைஞருக்கு ஆதரவாக இருந்து வந்தேன். அதனால் அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்களுக்கும் எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து எனக்கு ஓய்வு பெறும் வயதாகிவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு சீட்டு அனுப்பி விட்டார்கள். இதனைக் கேள்விப்பட்ட கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? எனக்காக "குங்குமம்" தேசத்தை உருவாக்கி அதற்கு என்னை ராஜாவாக ஆக்கியவர் கலைஞர்."
இவ்வாறு ஒலி பெருக்கியில் சாவி அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றது. திடுக்கிட்டு அவர் அருகில் ஓடினோம். அரங்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து சாவி சொன்னார்; "எனக்கு நெஞ்சு வலிக்கிறது" என்று! அடுத்த கணம் அப்படியே சாய்ந்தார். சாய்ந்தவர் சாய்ந்தது தான். எழுத்தாளர்கள் சூழ இருந்த அந்த எழில் மிகு அரங்கில்; பல எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய அந்தப் பண்பார்ந்த எழுத்தாளர் தனது முழுமையான வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிக் கொண்டார்.
அவரது அரிய நகைச்சுவைப் படைப்பான "வாஷிங்டனில் திருமணம்" என்ற நாடகம் எந்த நாரத கான சபாவின் சார்பில் பலமுறை நடைபெற்று ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதோ அதே நாரத கான சபா மேடையில் இப்படியொரு முடிவுக்கு அவர் ஆளானார் என்பது எவ்வளவு பெரிய சோகம். இது நடந்தது இதே 2001-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 20-ஆம் நாள்! காந்தியடிகளுடன் நவகாளி யாத்திரைக்குச் சென்று அவரைப் பேட்டி கண்டு, அதை மக்களுக்கு எழுதிக் காட்டியவர் அவர்.
நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சிறை புகுந்த தேசியவாதிகளில் ஒருவர் அவர். "பாரதமாதா"வின் சுதந்திரத்திற்காக சிறைசென்ற அவர்; இந்தச் சுதந்திர நாட்டில் பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் சிறை செல்ல வேண்டியிருந்தது. அவரது "சாவி" பத்திரிகையில் அட்டைப் படமாக யாரோ ஒரு பெண்ணின் ஓவியம் இடம் பெற்றதற்காக; அதிலே ஏதோ ஆபாசம் இருப்பதாகக் கூறி 11-5-1992 அன்று செல்வி ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்டார்.
தேச விடுதலைக்காக முகம் வாடாமல் சிறை சென்ற சாவி அவர்கள், பத்திரிகை அட்டைப்படத்துக்காகக் கைது செய்யப்பட்டதால் வாடி வதங்கிப் போனார். செய்தி கேள்விப்பட்டு நானும், கழக முன்னோடிகளும் காவல் நிலையம் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் கூறி அவரை ஜாமீனில் எடுக்கிற ஏற்பாடுகளைச் செய்தோம். அந்த நிகழ்ச்சி எங்கள் இனிய நட்பை மேலும் மேலும் மெருகேற்றி ஒளிவிடச் செய்தது. அந்த நல்லவரின் நினைவாக நான் வைக்கும் விளக்கு வரிசையாக இந்த வாக்கிய வரிசை, இந்த அத்தியாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கட்டும்.
தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலப் பிரச்சினை, தீர்க்கப்படாமலே இருந்தது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்க்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தனித்தனி இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் சமுதாயப் புரட்சி சாதனையாக இருந்த போதிலும் குறிப்பிட்ட சில சமூகத்தினர், தங்களின் சமுதாயத்தின் மிகப் பின்தங்கிய நிலையை எடுத்துரைத்துத் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்து, அதற்கான தனி இட ஒதுக்கீடு கோரிப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதன் உச்ச கட்டமாக இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் 1987-ஆம் ஆண்டு பெரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை அடக்கிட அன்றிருந்த அ.தி.மு.க. ஆட்சியினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தார்கள். அதற்குப் பிறகும் அவர்களின் கோரிக்கை நிறைவேறாமலே இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கூறி டாக்டர் இராமதாஸ் அவர்களை என் வீட்டுக்கே அழைத்து அவரிடமும், வீரபாண்டி ஆறுமுகத்திடமும், தீரனிடமும் விவாதித்து அந்த விவாதத்தின் விளைவாக 13-3-1989 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற முடிவாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சீர்மரபினருக்கும் இருபது சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த முடிவையொட்டி சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்கனவே இந்த இட ஒதுக்கீடு உரிமைப் போரில் பலியாகிவிட்ட சுமார் 30 பேர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்ச ரூபாயும், மாதாந்திர ஓய்வூதியமாக தலா மூவாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வாறே முறைப்படி வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவீதமென கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒதுக்கப்பட்டதால்; அவர்களுக்குப் பல மடங்கு அதிகப் பயன் கிட்டியது என்பதை சமூக நீதியில் அக்கறையுள்ளோர் அனைவரும் இன்னமும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
படரக் கொழுகொம்பின்றி தவித்துக் கொண்டிருந்த பச்சைக் கொடியை அழுத்தமான மரமொன்றில் தவழவிட்டு, அதன் கிளைகளில் எல்லாம் படரவிட்டது போன்ற பூரிப்பை மிகவும் பின்தங்கிய சமுதாயத்து இளைஞர்கள் தங்கள் புன்னகை மூலம் வெளிப்படுத்தினர். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியிலும், பின்னர் அ.தி.மு.க. ஆட்சியிலும் படிப்படியாக விரிவடைந்த இட ஒதுக்கீடு இந்தப் புதிய ஆணையின் விளைவாக பொதுத் தொகுப்பில் (Open Competition) 31 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர்க்கு 30 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 20 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோர்க்கு 18 சதவிகிதம், ஆதிவாசிகளுக்கு 1 சதவிகிதம் என்பதாக அமைந்தது.
அழுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்திலிருப்போரில், ஓரிருவருக்கு பதவி வாய்ப்புகள் அளிப்பதென்பது அவற்றை அளித்திட்ட நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கலாம்; ஆனால் அதை விட அந்த மொத்த சமுதாய மக்களும் முன்னேற்றம் பெற்றுப் பயனடையக் கூடிய வாய்ப்பு வசதிகளையும், உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குவதில் வெற்றி கிட்டுவதே முழுமையான மறுமலர்ச்சியாக இருக்க முடியும் என்ற உறுதியான எண்ணத்துடன்தான் தி.மு.க. அரசு திட்டங்களைத் தீட்டியது.
சட்டங்களை இயற்றியது. அப்போதுகூட மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 107 சமூகங்களுக்கும் சேர்த்துத்தான் 20 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதிலே வன்னியர்களுக்கு குறைவாகத்தானே கிடைக்கும் என்றார்கள். அதுபற்றி 22-4-1989 அன்று நான் விளக்கமளித்த போது, அந்தப் பட்டியலிலே 107 சமூகங்கள் என்று எண்ணிக்கையிலே இருந்த போதிலும், வன்னியர் மட்டும் 68 லட்சம் பேராகும். அந்தப் பட்டியலில் உள்ள மற்ற வகுப்பினரை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான வகுப்புகளில் வெறும் ஆயிரக்கணக்கிலேதான் மக்கள் இருக்கிறார்கள்.
உதாரணமாக நரிக் குறவர்கள் 20,162 பேர், ஜோகி 19,848 பேர், யோகீஸ்வரர் 18,618 பேர், தாசரி 15,907 பேர், பட்ராஜூ 15,700 பேர், ஸ்ரீவைஷ்ணவா 15,354 பேர், தொண்டமான் 14,036 பேர், குன்னுவர் மன்னாடி 11,055 பேர், நோக்கர் 7,559 பேர், மகேந்திரா 7,418 பேர், பேஸ்தா சிவியர் 7,063 பேர், மொண்டாடன் செட்டி 6,254 பேர், மொண்டு கொல்லா 5,700 பேர், புன்னான் வேட்டுவ கவுண்டர் 4,562 பேர், டொம்மாரா 4,436 பேர், குருகினி செட்டி 4,225 பேர், கொரச்சா 3,429 பேர், முட்லகம் பட்டி 1,575 பேர், ஜாம்புவனோடை 1,399 பேர், எரவல்லர் 1,377 பேர் என்று இருபதாயிரத்திற்கு உட்பட்டவர்களே 20 சாதியினராகும். 20 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் பட்டியலை மேலும் பார்த்தால் வேட்டுவ கவுண்டர் 17,430, ஒட்டர் 16,977, கந்தர்வக் கோட்டை கள்ளர் 14,556, போயாஸ் 12,478, ஆத்தூர் கீழ்நாடு குறவர் 7,994; உப்புக் குறவர் 7,626; தெலுங்கப்பட்டி செட்டி 5,184; கொட்டப்பால் 4,888; ஜோகிஸ் 4,512; செங்கயம் புடி குறவர் 3,136; சேலம் உப்புக் குறவர் 2,782; சூரமரி ஒட்டர் 2,691; கலாகுறவர் 887; தோகமலை குறவர் 512; குடுதாசரீஸ் 482; பட்டு துர்காஸ் 441; டோங்கா 287; டோம்ஸ் 260; மொண்டா கொல்லா 64; சாரங்கா பள்ளி குறவர் 54; தொப்பை கொறச்சா 51; வயல்பாடு அல்லது நாவல்பேடா கொறச்சா 15; என்று இது போன்ற எண்ணிக்கை கொண்டதையெல்லாம் சேர்த்துத்தான் 107 சமூகங்கள் என்று விளக்கினேன்.
இதற்கிடையே மாநிலங்களவைக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்படவே தி.மு.க. வேட்பாளர்களாக இயக்கத்தின் நீண்ட கால முன்னோடிகளான தா. கிருட்டிணன், விடுதலை விரும்பி இருவரும் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றனர். 9-3-1989 இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில்; இலங்கையில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, விடுதலைப் புலிகள் குறித்து பிரதமரும் முதலமைச்சர் கருணாநிதியும் மேலும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்த செய்தி வெளிவந்தது.
அதைத் தொடர்ந்து, 15-3-1989 அன்று டெல்லியில் நடைபெற்ற திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என்னைப் பிரதமர் ராஜீவ் சந்திக்க விரும்பியதன் காரணமாக அன்றைய தினம் காலையிலும், மீண்டும் 16-ந் தேதி மாலையிலுமாக இருமுறை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து இந்திய அரசின் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து விவாதித்தோம். வைகோவின் இலங்கைப் பயணம் எதிர்பாராத ஒன்று என்று கூறி, அது குறித்து என் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தபோது, பிரதமர் ராஜீவ் இடை மறித்து, அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை; அவர் பத்திரமாக இருப்பதே மகிழ்ச்சி என்று மெத்தப் பெருந்தன்மையுடன் கூறினார்.
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விரைவில் டெல்லியில் உள்ள முரசொலி மாறனுடன் தொடர்பு கொண்டு தகவல் அனுப்புவதாகவும் கூறினார். அண்ணா தலைமையில் 1967ல் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அண்ணா அவர்கள் படித்த நிதிநிலை அறிக்கையையும், நான் படித்த நிதிநிலை அறிக்கைகளையும் நாங்களேதான் எழுதுவோம். புள்ளி விபரக் குறிப்புகளை அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்வோம். நிதிநிலை அறிக்கை தயாரிக்க நிதித்துறை செயலாளர்களும் எனது ஆலோசகராக (Adviser) இருந்த அறிவுசால் அன்பு நண்பர் திரு.குகன், ஐ.ஏ.எஸ்., அவர்களும் பெரிதும் துணை புரிவார்கள்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் ஒன்றுதான் மூன்றாவது முறையாக நான் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக சட்டப் பேரவையில் 25-3-1989 அன்று வைக்கப்படுமென அறிவிக்கப் பட்டது. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நான் படிக்கும் நிதிநிலை அறிக்கை. அந்த நிதிநிலை அறிக்கையினை நான் படித்தபோது சட்டமன்றத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து நான் கூறுவதைவிட, அன்றைக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க.விலே ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப் பேரவையில் பேசியதை அப்படியே குறிப்பிடுகிறேன்.
அவரது பேச்சு வருமாறு :- "இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாக சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து "நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்" என்று சொன்னார்.
நான் உடனே மிகுந்த வேதனையோடு சொன்னேன். "தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களை பத்தாண்டு காலம் கௌரவ மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவு செய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டா
வது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்" என்று நான் வாதாடிய- துடன்; "முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர் மீது கை வைக்கிறபோது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும், ரகளை நடக்கும். புரட்சித் தலைவர் இருக்கும்போது எவ்வளவோ பிரச்சினை நடந்திருக்கின்றன.
அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தாக்கியிருப்போம். அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும். பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்" என்று வாதாடினேன்.
"மூத்த தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக்கிறேன்" என்று சொன்னார். "நான் முடியாது" என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து "சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார்.
உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கி கிழியுங்கள்" என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டார். டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, திரு. ராகவானந்தம், திரு. மாதவன், திரு. எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், "யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?"
என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன். செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, "புறப்படலாம், நேரம் ஆச்சு" என்றார். மூத்த தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்து விட்டு, "தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சியிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?"
என்றேன். அவர், "எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன். இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது" என்று சொன்னார். நான் உடனே தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று "இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம். நீங்களும் எங்களோடு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றும், அத்துடன், "இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?"
என்றும் மறைமுகமாகக் கேட்டேன். நேரிடையாகச் சொல்லாமல், அவர் "நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசி விட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல் துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்யப்போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு" என்று சொன்னார்.
செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். நான் வேகமாக வந்து, "திரு. மூப்பனார் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்த விதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்துவதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ்காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்" என்று சொன்னேன்.
"மூப்பனார் எப்போதும் இப்படித்தான். எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது" என்று கூறியதுடன் "நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?" என்றார். அதன்பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு.கே.கே.
எஸ்.எஸ்.ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, "இன்றைக்கு மாலையே ஆட்சியை கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே வந்தார்." திரு. திருநாவுக்கரசு அவர்களின் இந்த நேரடி வாக்கு மூலத்தின்படி, ஆட்சியைக் கலைப்பதற்காகவே திட்டமிட்டு நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவத்தை சுருக்கமாகவாவது அறிந்து கொள்ள அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வோம்.
