நெஞ்சுக்கு நீதி
என்னுரை · 292 / 391
என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச்சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்தைத் 'தினமணி கதிர்' இதழில் தொடர்ந்து எழுதினேன்.
இரண்டாம் பாகத்தை 'குங்குமம்' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து, இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்தி இரண்டாவது அகவையின்பொழுது எழுதுகிறேன். இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில்- மிகப் பெரும் பகுதி- பொது வாழ்வுக்கே செலவாகியிருக்கிறது என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத் தர வல்லதாகும். எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும்- பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டுமென்பது என் தணியாத ஆசை.
நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, "ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோமா? இனிமேல் நடக்க முடியாது." என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக- "பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம் தானே!"
என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும். அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன். வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்! எனக்கோ; போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? ஏன் கிடையாது? கொட்டும் குளிரில், பனிப் பாறைகளில் ஊர்ந்து சென்று பகையைத் தாக்கும்போது சூடாக ஒரு கோப்பைத் தேநீர், அவனும் அருந்துவது உண்டு.
அதுவே அவனுக்குப் பெரிய இன்பம். மீனைச் சுவைத்துச் சாப்பிடும்பொழுது, அதன் முள் நாவிலே குத்தி விடுவதுண்டு. அதனால் சிறிது ரத்தமும் கசிவதுண்டு. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன் துண்டுகளைச் சுவைப்போரைப் பார்த்திருக்கிறோம். சில பேருக்கு மீனின் முள் தொண்டையிலே அடைத்துக் கொண்டு, அவஸ்தைப்படுவதும் உண்டு. என் வாழ்வு, இதில் இரண்டாவது வகை. "உன்னை ஒருவன் இழித்துப் பேசினான்" என்று தன் நண்பனிடம் ஒரு நண்பன் கூறினான்.
அதைக் கேட்ட அந்த நண்பன் வியப்புற்று, "அப்படியா! இருக்காதே! என்னை அவன் இழித்துப் பேசியிருக்கமாட்டானே! நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே! பிறகு எப்படி அவன் என்னை ஏசியிருக்க முடியும்?" என்று கேட்டான். இந்த உரையாடல் துணுக்கில் இந்த உலகத்தின் படமே தெரிகிறதல்லவா? இத்தகைய உலகில்தான் நமது வாழ்க்கைப் பந்து உருளுகிறது. அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்.
கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து 'அவுட்' (Out) ஆகாமல் பந்து, (Goal) கோலுக்குள் நுழைந்திட வேண்டும். (Goal) கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான் எனினும் விடாமுயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை. 'ஓய்வெடுத்துக் கொள்க!'
என்று சில மாற்றுக்கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன். அந்த உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத! மூன்றாம் பகுதியாக, அது வெளிவரக்கூடும். இந்த முதல் பகுதியைத் தொடர்ந்து துணையாக, அவ்வப்போது நான் கேட்ட அரசியல் குறிப்புகளைத் தந்து உதவிய, தி.மு.க.
தலைமை நிலைய நண்பர் சண்முகம், தம்பி சண்முகநாதன், நண்பர் மறைமலையான் ஆகியோர் மறக்க முடியாதவர்கள். இதன் முதற்பதிப்பை, 'தினமணிக் கதிர்' நிறுவனத்தார் வெளியிட்டனர். முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பையும், இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பையும் 'திருமகள் பதிப்பகம்' நண்பர் திரு.இராமநாதன் அவர்கள் வெளியிடுவதற்கு முன்வந்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அரிய முயற்சிக்கு என் நன்றி!
★ பெற்றெடுத்த தாய் தந்தை ★ அறிவூட்டிய பெரியார் ★ ஆளாக்கிய அண்ணா ஆகியோருக்கு இது காணிக்கை நிகழ்ச்சி சுருக்கம் 1. முன்னுரை 2. 28-12-1988 பேரவை தகராறு 3. ஜெ-ஜா அணி தகராறு 4. ஜா ஆட்சிக் கலைப்பு 5. தேர்தல் காலம் நீடிப்பு 6. தேசிய முன்னணி தொடக்க விழா 7. பொன்னர் சங்க நூல் வெளியீட்டு விழா 8. வேட்பாளர்கள் அறிவிப்பு 9. தேர்தல் வெற்றி - நன்றி 10. விகிதாச்சார பிரதிநிதித்துவம் 11. சட்டமன்றத் தலைவராகத் தேர்தல் 12.
அமைச்சரவை அறிவிப்பு 13. பதவியேற்பு விழா 14. நன்றி அறிவிப்பு கூட்டம் 15. வி.பி.சிங் பாராட்டு 16. ஜனதா தள நிகழ்ச்சி 17. வி.பி.சிங் கோபாலபுரம் வருகை 18. அண்ணா காமராஜர் பெயர் விமான நிலையத்திற்கு 19. பெண் ஆசிரியை நியமனம் 20. தலைமைச் செயலகச் சங்கத்தினர் பாராட்டு 21. பேரவைத் தலைவர் தேர்தல் 22. டெல்லிப் பயணம், பிரதமர் ராஜிவ் சந்திப்பு 23. டெல்லியில் பிரதமரிடம் நிதி கேட்பு 24. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் சந்திப்பு.
25. டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பு 26. கலைத்துறையினர் பாராட்டு 27. ஆளுநர் உரை 28. மது விற்பனையில் ஊழல் 29. வைகோ இலங்கை பயணம் 30. 9வது நிதிக் குழு வருகை 31. சாவி - இயல் இசை நாடக மன்றத் தலைவர் 32. சாவி மறைவு - கைதான நிகழ்ச்சி 33. மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித ஒதுக்கீடு 34. எந்தெந்த வகுப்பினர் எவ்வளவு பேர்? 35. ஈழப் பிரச்சினை குறித்து பேச்சு 36. நிதிநிலை அறிக்கை - திருநாவுக்கரசு பேச்சு 37.
ஜெயலலிதா ராஜினாமா கடிதம் 38. நிதிநிலை அறிக்கை பறிப்பு - பேரவை கலவரம் 39. ஆளுநரிடம் விளக்கம் 40. அலெக்சாண்டரின் பெருந்தன்மை 41. மேற்கு வங்கத்தில் காங்கிரசார் கலவரம் 42. கர்நாடக அரசில் பொம்மை மீது புகார் 43. கலவரம் பற்றி தினமணி தலையங்கம் 44. கழக ஆட்சியின் மிக முக்கிய சாதனைகள் 45. தாளமுத்து நடராஜன் மாளிகை திறப்பு விழா 46. இந்தியத் திரைப்படத் துறையின் பவள விழா 47. எம்.ஜி.ஆர். நினைவக அபிவிருத்திக்கு 30 லட்சம் 48.
கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி 49. பொம்மை வழக்கு - 356வது பிரிவு 50. கோர்பசேவ் வரலாறு 51. சத்துணவுத் திட்டத்தில் முட்டை 52. யுனெஸ்கோ கூரியர் வெளியீட்டு விழா 53. ஆட்சி மொழியாக தமிழ் 54. ஈழப் பிரச்சினை குறித்து முரசொலி மாறன் கடிதம் 55. ராஜிவ் காந்தி மாறனுக்குப் பதில் கடிதம் 56. கலைஞர், செல்வா, அமிர்தலிங்கம் படம் 57. விடுதலைப் புலிகள் பிரச்சினை 58. மோகன்தாஸ் புத்தகம் 59. டெசோ மாநாடு 60.
கலைஞர் பிறந்த நாளில் வசூலான நிதி பங்கீடு 61. மண்டல் குழு பரிந்துரை 62. இட ஒதுக்கீடு 63. சீனாவில் மாணவர்கள் புரட்சி 64. பாரதிதாசன் நூல்கள் நாட்டுடமை 65. சஞ்சீவ ரெட்டியார் பேச்சு 66. திரைப்படத் துறையினர் சந்திப்பு 67. ராஜிவ் காந்தியுடன் இலங்கை பற்றி பேச்சு 68. கல்கி பாராட்டு தலையங்கம் 69. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி 70. நடந்தாய் வாழி காவேரி 71. நடுவர் மன்றம் 72. எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் 73.
எத்திராஜ் பெண்கள் கல்லூரி விழா 74. ராஜாதி ராஜா வெற்றி விழா 75. வங்க தேச உதயம் 76. பூட்டோ வரலாறு 77. பஞ்சாயத்துராஜ் சட்டம் 78. வானூர் மாரிமுத்து அரசு நிலம் கைப்பற்றல் 79. தேசிய முன்னணி சார்பில் கூட்டம் 80. ஆர்.வெங்கட்ராமனுடன் ஜெ. சந்திப்பு 81. தொலைக்காட்சி பெட்டிகள் உடைப்பு 82. அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு 83. மாநிலங்களவை தேர்தல் 84. வட சென்னை அனல் மின் நிலையம் 85. சாதி மத பேதமற்ற சமுதாய அமைப்பு 86.
போடி கலவரம் 87. இதயம் மணியம் நூல் வெளியீட்டு விழா 88. மனிதச் சங்கிலி போராட்டம் 89. மத்திய அரசிடம் அதிக அரிசி 90. மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டிடங்கள் 91. காமராஜர் தங்கையோடு சந்திப்பு 92. தலைமைக் கழகத்திடம் விருதுகள் 93. அண்ணா பிறந்தநாள் கைதிகள் விடுதலை 94. கால்நடைப் பல்கலைக் கழகம் 95. பரலி நெல்லையப்பர் குடும்பத்திற்கும் ஓய்வூதியம் 96. ராஜராஜன் விருது 97. கருணானந்தம் மறைவு 98. அபூர்வ சகோதரர்கள் படம் வெற்றி விழா 99.
நாமக்கல்லாருக்கு பாராட்டு 100. வி. பி. சிங் ஆட்சிக்கு பாஜக, கம்யூனிஸ்ட் ஆதரவு 101. நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் 102. வன்னியர் சங்கத்தின் போராட்டம் 103. சட்டமன்ற உறுப்பினர்கள் குடும்ப நலத் திட்டம் 104. மூப்பனார் இல்ல மண விழா 105. ராஜிவ் காந்தி நன்றி 106. எம்.ஜி.ஆர். நினைவகம் திறப்பு விழா 107. திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 108. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 109. பிரதமர் தேர்வில் வி.பி.சிங் 110.
தமிழகத்திற்கு கூடுதல் அரிசி 111. மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறன் 112. மார்க்கோஸ் அகினோ வரலாறு 113. மத்திய உள்துறை அமைச்சரின் மகள் கடத்தல் 114. இலங்கைப் பிரச்சினை 115. பத்மநாபா கொலை 116. விடுதலைப் புலிகள் பிரச்சினையில் ஜெயலலிதா 117. பனாமா சர்வாதிகாரி நொரிகா 118. ஜெயில் சிங் பாராட்டு 119. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் 120. மண்டல் கவிதை 121. கண்ணகி சிலை 122. எம்.ஜி.ஆர்.சிலைக்கு அனுமதி 123. திருவள்ளுவர் திருநாள் 124.
ஆளுநர் அலெக்சாண்டர் சென்று பர்னாலா வருகை 125. ஆர்.எம்.வீ.மீது ஜெ.பாய்ச்சல் 126. மீனம்பாக்கம் லாரி விபத்து 127. திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் 128. விஜயகாந்த் இல்லத் திருமணம் 129. திருச்சி 6வது மாநில மாநாடு 130. நெல்சன் மண்டேலா 131. அமைப்பு ரீதியாக உருவாகாத கட்சிகள் 132. வி.பி.சிங், தேவிலால் தகராறு 133. மாநிலங்களவை தேர்தல் 134. செ.கந்தப்பன் மறைவு 135. பிறந்த நாள் விழாவில் மது தண்டவதே 136.
வ.ரா.துணைவியாருக்கு நிதி உதவி 137. ஜெகஜீவன்ராம் சிலை திறப்பு விழா 138. ஓட்டல்கள் சங்கப் பொன்விழா 139. ஜெ. கட்சியிலிருந்து திருநாவுக்கரசு நீக்கம் 140. ஜெ அணி - ஜா அணி - சமாதானம் 141. கிருபானந்தவாரியார் கல்லூரி, சிலை திறப்பு 142. குவைத் ஈராக் போர் 143. ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டி பாராட்டு 144. அண்ணா அருங்காட்சியகம் திறப்பு 145. தேசிய ஒருமைப்பாட்டு குழுக் கூட்டம் 146. ரத யாத்திரை 147. மதச் சார்பற்ற - மத நல்லிணக்க அணி 148.
வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் 149. சந்திரசேகர் பதவியேற்பு 150. பட்டதாரிகளே இல்லாத குடும்பச் சலுகை 151. ஆட்சிக் கலைப்புக்கான வேலைகள் 152. சந்திரசேகர் 153. இங்கிலாந்தில் தேர்தல் 154. வி.பி.சிங் அவர்களுக்கு வரவேற்பு 155. தலாய்லாமா 156. இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 157. இலவசக் காங்க்ரீட் விடுதிகள் திட்டம் 158. சஞ்சீவ ரெட்டி பேச்சு 159. ஜெ.வீட்டில் சந்திரசேகருக்கு விருந்து 160. பர்னாலாவிடம் ஜெ.
புகார் 161. ஜெ.குடியரசு தலைவரிடம் புகார் 162. ஏடுகள் தலையங்கம் 163. கழகத்தில் காளிமுத்து 164. சட்டமன்றத்தில் அதிமுக அராஜகம் 165. வி.சி.சுக்லா சந்திப்பு 166. தமிழகச் சட்டப் பேரவை கலைப்பு 167. ஏடுகள் தலையங்கம் 168. கண்டனப் பொதுக்கூட்டம் 169. வைரமுத்து கவிதை 170. நரேந்திர தேவா நினைவகம் 171. சந்திரசேகர் பற்றி முரசொலி மாறன் பேச்சு 172. பாட்னாவில் தேசிய முன்னணி பேரணி 173. வைகோ கட்டுரை 174. பி.ராமமூர்த்தி நினைவகத் திறப்பு விழா 175.
மற்ற மாநிலங்களில் அரசியல் 176. ஜார்ஜியா 177. தென்னரசு மறைவு 178. 1991ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் 179. ராஜிவ் காந்தி படுகொலை 180. கழக ஆட்சியில் ராஜிவ் காந்தி பாதுகாப்பு 181. தேர்தலில் தி.மு.க. தோல்வி 182. நரசிம்மராவ் பிரதமர் ஆனார் 183. டாக்டர்ராமதாஸ் உண்ணாவிரதம் 184. இந்தியாவில் கடத்தல்கள் 185. வாரன் ஹேஸ்டிங்ஸ் எட்மண்ட் பர்க் 186. ஆர்.நாகராஜன் கைது 187. கச்சத்தீவு பற்றி ஜெயலலிதா 188. துறைமுகம், எழும்பூர், முசிறி இடைத்தேர்தல் 189.
பேருந்துகளுக்கு முன்கூட்டியே வரி ரத்து 190. கே.பி.ராமலிங்கம் கைது 191. கரசேவை பற்றி ஜெயலலிதா 192. அவுங்சான் புதல்வி அனுபவித்த கொடுமை 193. மதுரை பாண்டியம்மாள் வழக்கில் தீர்ப்பு 194. நாகராஜன் வாக்குமூலம் 195. கர்நாடகத்தில் வன்முறை 196. பேரணிக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் 197. பேரணி நடத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து 198. பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் 199. மதுரையில் பவள விழா மாநாடு 200. அதிமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் 201.
வெற்றிகொண்டான் மீது நடவடிக்கை 202. நன்னிலம் நடராசன் மீது நடவடிக்கை 203. சட்டமன்ற கூண்டிலே முரசொலி செல்வம் 204. யாசர் அராபத் 205. கும்பகோணம் மகாமக விழாவில் ஜெ. 206. சந்திரலேகா மீது திராவகம் 207. பிறந்த நாள் விழா ரத்து 208. தலைமைக் கழகத் தேர்தல் 209. அதிமுக ஆட்சியில் இலவச மின்சாரம் 210. மதுரை சிறையில் அனுமதி மறுப்பு 211. பம்பாய் பங்கு மார்க்கெட் ஊழல் 212. அதிமுக மதுரை மாநாடு 213. ராஜிவ் காந்தியால் வெற்றி பெறவில்லை 214.
குடியரசுத் தலைவராக சங்கர் தயாள் சர்மா 215. ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி 216. முரசொலி பொன் விழா 217. சிவசுப்ரமணியம் கமிஷன் விளம்பரச் செலவு 218. ஆந்திரா, கர்நாடகாவில் அரசுக்கு எதிர்ப்பு 219. அயோத்தியில் கரசேவை துவக்கம் 220. அத்வானியுடன் ஜெ. சந்திப்பு 221. கரசேவை பற்றி கவிதை 222. கரசேவை நிகழ்ச்சிகள் 223. தலைமுறை இடைவெளி 224. அமெரிக்கத் தேர்தல் 225. சமூக நீதி வெற்றியும் சில சங்கடங்களும் 226.
அன்பில் தர்மலிங்கம் மறைவு 227. கோவை தி.மு.க. மாநாடு 228. ஆசிரியர் பயிற்சி பள்ளி அனுமதி ரத்து 229. அதிமுக காங்கிரஸ் உறவு முறிவு 230. சட்டப் பேரவையில் தர்ணா, உண்ணாவிரதம் 231. ராணிப்பேட்டை தொகுதி இடைத் தேர்தல் 232. விடுதலைப் புலிகள் தப்பித்தல் 233. இலங்கையில் தேர்தல் 234. தமிழக ஆளுநர் மாற்றம் 235. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு 236. மண்டல் குழு பரிந்துரைகள் அல்ல 237. வைகோ பற்றி தலைமைச் செயலாளர் கடிதம் 238.
தஞ்சை பொதுக்குழு மதிமுக உதயம் 239. வைரமுத்து கவிதை 240. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் 241. ஆளுநர்கள் மாற்றம் 242. இந்திரா காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு 243. 356வது பிரிவு பற்றி முக்கிய தீர்ப்பு 244. ஜெ. மீது காங்கிரஸ் ஆளுநரிடம் ஊழல் புகார் 245. சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சி அனுபவித்த வேதனைகள் 246. சாதிக், கோவை ஜானகிராமன் மறைந்தனர் 247. சமூக நீதிக்காக மீண்டும் போர்க்குரல் 248. சேஷன் புத்தகத்தில் அண்ணா பற்றி 249.
சந்தனக் கடத்தல் வீரப்பன் 250. தமிழகத்தில் ஆளுநர்-முதல்வர் மோதல் 251. கி.ஆ.பெ.விசுவநாதம் மறைவு 252. இலங்கையில் குண்டு வெடிப்பு 253. ஜெயா காங்கிரஸ் 254. நிதிப் பற்றாக்குறை-ஜெ.புகார் 255. காவல்துறை அலுவலகம் இடிப்பா 256. கணக்கு கவியரங்கம் 257. சி.எஸ்.ஜெயராமன் மறைவு 258. தஞ்சை உலகத் தமிழ் மாநாடு 259. சிறையிலி
ருந்து 9 பேர் தப்பினர் 260. அன்னை மேரியாக ஜெயலலிதா 261. பீகார், மணிப்பூரில் சட்டப் பேரவை தேர்தல் 262. டாக்டர் ராமதாஸ் கைது 263. ஆட்சியாளரின் வன்முறைத் தாக்குதல்கள் 264. ஆளுநரிடம் புகார் மனு 265. குன்றக்குடி அடிகளார் மரணம் 266. செயல்படாத பிரதமர் நரசிம்ம ராவ் 267. சட்டப்பேரவை செயலாளருக்கு பதவி நீடிப்பு 268. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீது தாக்குதல் 269. வளர்ப்பு மகன் திருமணம் 270. ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் 271.
இந்திரா காந்தி கொலை வழக்கு தீர்ப்பு 272. ஜெ.-ரஜினிகாந்த் மோதல் 273. ஆர்.எம். வீரப்பன் பதவி பறிப்பு 274. தி.மு.க.-தேசிய முன்னணி உறவில் விரிசல் 275. விடுதலைப் புலிகள் தப்பினர் 276. தெலுங்கு தேசம் கட்சியில் பிளவு 277. சிலம்புச் செல்வர் மறைவு 278. விழுப்புரத்தில் பா.ம.க. நடத்திய மாநாடு 279. யாசர் அராபத் 280. திருச்சி தி.மு.க. மாநாடு 281. அதிமுக ஆட்சியின் ஊழல்கள் 282. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் 283.
த.மா.கா.உதயம் 284. தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழா 285. திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா 286. திருக்குறள் உரை வெளியீட்டு விழா 287. அ.ச.ஞா., சங்கராச்சாரியார் பாராட்டு 288. தேர்தல் பிரச்சாரம் 289. வல்லநாடு சம்பவம் 290. போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்ட லாரி 291. தேர்தலில் மகத்தான வெற்றி 292. பதவியேற்பு விழா 293. மக்களவை தேர்தல் முடிவுகள் 294. புதுவையில் கழக ஆட்சி 295. சாதனைப் பட்டியல் 296. த.மா.கா.பிரிவு 297.
நள்ளிரவில் கைது 298. ராமச்சந்திர ஆதித்தன் கண்டனம் நெஞ்சுக்கு நீதி நான்காம் பாகம் நெஞ்சுக்கு நீதி மூன்று பாகங்களை எழுதி முடித்து வெளியிட்டு விட்டு, இப்போது நான்காம் பாகத்தை எழுத ஆரம்பிக்கிறேன். எனக்கு 77 வயது நிறைவுற்று 78ஆம் வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் என்னுடைய 64-வது வயதில் மூன்றாம் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன்; ஏறத்தாழ இடையில் 14 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மூன்றாம் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து இந்த நாலாம் பாகத்தைத் தொடங்குகிறேன்.
ஆம் ஆண்டு நான் பிறந்தது முதல் 1969 வரையில் முதல் பாகமும், 1969 முதல் 1976 வரையில் இரண்டாம் பாகமும், 1976 முதல் 1988 வரையில் மூன்றாவது பாகமும், தீட்டப் பெற்று, இந்த நாலாம் பாகம் 1989 முதல் அரும்புகிறது. அரும்பு என்பதால் மலர் போன்று விரியும் என் வாழ்க்கை வரலாறு என்று யாரும் எண்ணிடக் கூடாது. மூன்று பாகங்களையும் படித்து முடித்தவர்களுக்குத் தெரியும்; முள்ளும், கல்லும், புதரும், காடும் நிரம்பிய பாதைதான் நான் பயணித்துக் கொண்டிருப்பது என்ற உண்மை!
போர்க்களத்தில் பாய்ந்து வரும் ஈட்டிகளும், அம்புகளும் நம்மீது முத்தமாரி பொழியும் என்றெண்ணுவது எத்துணை பைத்தியக்காரத்தனமோ அதைப் போன்றதுதான் பொது வாழ்வில் நம்மீது பகைவர்கள் பனிமலர்களை அள்ளி வீசுவார்கள் என்று எதிர்பார்ப்பதுமாகும் என்பதை இத்தனையாண்டுக் கால அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுக்கத் தவறவில்லை. இந்தியத் திருநாட்டில் - தமிழ் விளையும் தாய் நிலத்தில் - தஞ்சைத் தரணியில் - எங்கோ ஒரு மூலையில் - திருக்குவளை எனும் அழகிய சிற்றூரில் - அஞ்சுகத்தம்மை, முத்துவேலர்க்கு, ஒரு சாதாரண குடும்பத்துப் பிள்ளையாகப் பிறந்த நான்; பெரியார்க்கு மாணவனாவேன்; அண்ணாவுக்குத் தம்பியாவேன், ஆயிரம், லட்சம் என்று எண்ணற்ற உடன்பிறப்புக்களின் அன்புக்குரிய ஓர் உடன்பிறப்பாவேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட இல்லை!
ஏன்; கனவுகூடக் கண்டதில்லை! நான் காணாத கனவுகள்கூட உயிர்பெற்று பொது வாழ்வுக் கடலில் என்னைச் சுமந்து செல்லும் கட்டுமரங்களாக என் கண் எதிரே தோன்றியதையும் அவற்றில் நான் ஏறிச் சென்றதையும், கடல் அலையில் கட்டுமரங்கள் கவிழ்ந்து கவிழ்ந்து நிமிர்ந்ததையும் எண்ணிப் பார்த்திட அண்மையில் எனக்கோர் வாய்ப்பு கிடைத்தது. கண்ணியமுடன் கடமையாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் ஆளவந்தார் இட்ட கட்டளைப்படி இல்லாத வழக்கொன்றை இட்டுக்கட்டி, செய்யாத குற்றத்துக்குச் சிறையில் அடைக்கிறோமென்று, நள்ளிரவில் வீட்டுக் கதவை நொறுக்கி - படுக்கையறையில் புகுந்து கைது செய்து, கை முடங்கிடும் அளவுக்கு அடித்து உதைத்து நகராட்சி வண்டிகளில் தெருநாயை அடித்துப் போட்டு இழுத்துச் செல்வார்களே அதுபோல, இழுத்துச் சென்று பூட்டி வைத்தனரே; அந்த ஐந்து நாட்கள் தன்னந்தனியனாக இருந்த போதுதான் இந்த நாலாவது பாகத்தை எழுதுவதற்கான சிந்தனை துளிர்த்தது.
அன்று நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கண்ணீரும் செந்நீரும் சிந்திக் கிடக்கும் எழுத்துக்களை நிமிர்த்தி வைத்து விவரிப்பதற்கு இந்த நான்காம் பாகத்தின் இறுதிப் பகுதியில்தான் இயலும் என்பதாலும்; அதுதான் வரிசைப்படி அத்தியாயவாரியாக பொருத்தமாக இருக்கும் என்பதாலும்; இப்போது அதனை இத்துடன் நிறுத்துகிறேன். மீண்டும் தொடர்ந்து எழுதிடும் எண்ணம் ஏன் வந்தது? எப்போது வந்தது? என்பதற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியைக் கோடிட்டுக் காட்ட வேண்டியதாயிற்று.
இந்த வரிகளைப் படிக்கும் என் உடன்பிறப்புகள் கலங்குவது என் மனக் கண்களுக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியைத் தொலைக்காட்சிகளில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட பார்த்து விட்டுப் பதறிய உள்ளங்களின் உணர்வுகளை அறிந்து அவற்றையே என் மனக் காயங்களுக்கு மருந்தாக ஆக்கிக் கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த 67 அன்பு உடன்பிறப்புகள் என் பொருட்டு உயிர் விட்டும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டும் பலியானார்களே அதை மட்டும் என்னால் என்றும் மறக்க முடியாது.
இப்படி ஒரு கொடுமையான பகையை என்மீது கொட்டிட வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு சிலர் 1988ஆம் ஆண்டே செயல்படத் தொடங்கிவிட்டனர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் முதல் அமைச்சர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து; அண்ணா சொல்வாரே "சந்து முனை சிந்து பாடிகள்" என்று; அப்படி ஒரு அணியினரைப் பற்றி இன்னொரு அணியினர்; கேட்போர் காதுகளைப் பொத்திக் கொள்கிற அளவுக்கும் - படிப்போர், கண்களை மூடிக்கொள்கிற அளவுக்கும் காழ்ப்பு மொழி கச்சேரிகளை நடத்தினர்.
இதுபற்றி "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகம் 73-வது அத்தியாயத்தில் இயன்ற அளவு விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். மறுபடியும் அவற்றை நினைவுபடுத்தத் தேவையில்லை யென்றே கருதுகிறேன். அந்த இரு அணிகளின் இறுதிக் கட்ட நேரடி வன்முறை மோதுதல் 28-12-1988 அன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற போது, தங்கள் தங்கள் அணியின் பக்கம் ஆதரவு தந்து உதவிடுமாறு என் வீட்டுக்குப் பலர் படையெடுத்ததும்; எந்த அணிக்கும் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடையாது என்று நாங்கள் அறிவித்து விட்டதும்; அப்போதே நாடறிந்த செய்தியாகும்.
பேரவையில் நடந்த பயங்கர அமளியைத் தொடர்ந்து மத்திய காங்கிரஸ் அரசு, தமிழக ஜானகி அணி ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப் படுத்தியது. 24 நாள் நடைபெற்ற ஜானகி அம்மையாரின் ஆட்சி முடிவுற்றது. அது பற்றிச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "கிரீடத்தை சூட்டி விட்டு, தலையை வெட்டி விட்டது போல, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, "பாரத ரத்னா" பட்டத்தை வழங்கி விட்டு, அவர் அமைத்த ஆட்சியை ராஜீவ் கலைத்து விட்டார்" என்று கூறினேன்.
ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் ஆட்சியை வரவேற்று அறிக்கை வெளியிட்டார். அவரது அணியில் அப்போது இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் ஜானகி அம்மையார் ஆட்சி கலைக்கப்பட்டதை வரவேற்று, அவரை முதலில் முதல்வர் பதவி வகிக்க கவர்னர் குரானா அழைத்ததே தவறு என்று குறிப்பிட்டார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள், 9-1-1988 அன்று விடுத்த அறிக்கையில் அமைச்சரவை அமைத்திட ஜானகி அம்மையாரை கவர்னர் குரானா அழைத்தது சரி என்று கருத்தறிவித்தார்.
மத்திய அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜானகி அணியினரும் ஜெயலலிதா அணியினரும் ஒருவர் மீதொருவர் சேறு வாரி இறைத்த அறிக்கைப் போராட்டக் களங்களாகவே நாளேடுகளின் பக்கங்கள் விளங்கின. நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைப் போன்ற முன்னணித் தலைவர்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பதும் எதிர்ப்பதுமான புதிய அணியொன்றை நடத்திக் கொண்டிருந்தனர். ஆதரிக்கும்போது அவரை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடியும், எதிர்க்கும்போது காலில் போட்டு மிதித்து குப்பைத் தொட்டியில் வீசுவது போலவும் நாவலர் அவர்கள் அறிக்கை விட்டதும், அதே பாணியில் ஜெயலலிதா மறுப்பு அறிக்கை வெளியிட்டதும், அந்த நேரத்துத் தமிழக அரசியல் வரலாற்றில் தெளிந்த காவிரியாற்றுக்குப் பதிலாக, கழிவு நீரோடைகள் தோன்றி மூக்கைத் துளைத்து நடுநிலையாளர்களின் மூளையையும் குழப்புவதாகவே இருந்தது.
ஒரு மாநிலத்தில் ஓர் ஆட்சி இடையிலே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அடுத்த தேர்தலை நடத்துவதுதான் ஜனநாயக மரபு. ஆனால் தமிழகத்தில் 1988 ஜூலை திங்களுக்குள் முறைப்படி பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. கவர்னராக இருந்த குரானாவுக்குப் பதில் அலெக்சாண்டர் அவர்கள் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த ஒரே மாற்றத்தைத் தவிர, சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான எந்த சமிக்ஞையும் காட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் அணியைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அதற்கான அவகாசத்தைப் பெற்றிட; 1988 ஜூலை மாதத்திற்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கூடுதலாக ஆறு மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளப்பட்டது. அதன்படி 1989 ஜனவரி திங்களுக்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டுமென்றாலுங்கூட, அதற்கு மேலும் கால நீட்டிப்பு செய்யலாமா என்று டெல்லி வட்டாரத்தில் காங்கிரசார் யோசித்துக் கொண்டிருந்தனர்.
அதனை அறிந்து கழகத்தின் பொதுக்குழுவை, 1988 நவம்பர் திங்களில் கூட்டி, தேர்தலை மேலும் தள்ளி வைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்தால் மாநிலம் தழுவிய அளவில் கழகம் போராட்டத்தை நடத்துமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தைப் பொதுக்குழுவில் எனதருமை நண்பரும் சிறுகதை மன்னரும் சிந்தாமணி எனும் இயற்பெயரும் தென்னரசு எனும் புகழ்ப் பெயரும் கொண்டவருமானவர் முன் மொழிந்தார். தீர்மானத்தை வழி மொழிந்தவர் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்து வைத்துக் கீர்த்தி பெற்ற சி.டி.
தண்டபாணி அவர்களாவார். இத்தகைய அரசியல் சூழலில்தான் தி.மு.க., ஜனதா, லோக்தளம், ஜனமோர்ச்சா, காங்கிரஸ் (எஸ்), அசாம் கண தந்திர பரிட்சத், தெலுங்கு தேசம் ஆகிய ஏழு கட்சிகளின் முன்னணியான "தேசிய முன்னணி" என்ற பெரியதோர் அமைப்பினை 6-8-1988 அன்று டெல்லியில் கூடி உருவாக்கியிருந்தோம். அதன் தலைவராக திரு. என்.டி.ராமராவும், அமைப்பாளராக திரு. வி.பி.சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் என் விருப்பத்தையேற்று "தேசிய முன்னணி" தொடக்க விழாவை செப்டம்பர் 16, 17 தேதிகளில் சென்னையில் நடத்துவதென முடிவாயிற்று.
தேசிய முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் 11 பேரில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டேன். செயலாளர்களில் ஒருவராக முரசொலி மாறனும், பிரச்சாரக் குழு உறுப்பினர்களில் ஒருவராக வைகோவும் நியமிக்கப்பட்டனர். சென்னையில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான ஊர்வலத்தைக் கண்ட வி.பி.சிங், என்.டி. ராமராவ், தேவிலால், எஸ்.ஆர். பொம்மை, மகந்தா, பிஜு பட்நாயக், ஐ.கே.குஜரால், பர்னாலா, பீம்சிங், தத்தா சாமந்த், பகுகுணா, உன்னிகிருஷ்ணன், உபேந்திரா, அஜீத் சிங், ராம்தன் மற்றும் வட நாட்டுத் தலைவர்கள் தங்கள் வாழ்நாளில் இப்படியொரு மகத்தான பேரணியைக் கண்டதில்லை எனப் பாராட்டினார்கள்.
பட்டொளி வீசிக் காற்றில் படபடக்கும் கறுப்பு சிகப்பு வண்ணக் கொடிகளுடன் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞர்களின் அணிவகுப்பு அந்தப் பேரணிக்குப் புதிய கம்பீரத்தை அளித்தது. கடற்கரையில் 30 லட்சம் பேர் கூடிய கடலை வெல்லக் கூடிய பொதுக்கூட்டத்தில் என்னுடைய உரையை முடிக்கும்போது குறிப்பிட்டதாவது:- "பேரறிஞர் அண்ணா ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு முறை பேசும்போது நான் பாரத முன்னேற்றக் கழகம் என்று பெரிய அளவில் கட்சியின் பெயரை மாற்றத் தயாரில்லை.
ஆனால் அகில இந்திய அளவில் சில எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஒரு அமைப்பை உருவாக்குமேயானால், அந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளின் அமைப்பில் தி.மு.கழகம் இடம் பெறும்" என்று சொன்னார். அன்றைக்கு அண்ணா சொன்னதை இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். நாற்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுயமரியாதையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டதுதான் தி.மு. கழகம். மாநிலக் கட்சிகள் ஒரு காலத்திலே ஓரங்கட்டப்பட்டதுண்டு.
மாநிலக் கட்சிகள், பிராந்திய கட்சிகள் என்றெல்லாம் பேசப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டதுண்டு. ஆனால் இன்றைக்கு தேசிய முன்னணி என்ற ஆரத்தில் பதக்கங்களாக தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத், தி.மு.கழகம் போன்றவைகள் எல்லாம் பளபளக்கின்ற காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். அதுதான் தேசிய முன்னணி. இந்தியாவினுடைய சரித்திரத்தை எழுதியவர்கள் ஒரு தவறு செய்து விட்டதாக வின்ஸ்டன் ஸ்மித் என்ற வரலாற்றுப் பேராசிரியர் சொன்னார்.
இந்தியாவின் சரித்திரம் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்? அது காவேரி தீரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றார். ஆனால் அன்றைக்கு யாரும் அதை எழுதவில்லை. இன்றைக்கு நாம் எழுதுகிறோம். தென்னகத்திலிருந்து சரித்திரத்தை எழுதுகிறோம். இந்தச் சரித்திரம் - அரசியல் சரித்திரம். இந்த அரசியல் சரித்திரத்தை நாம் வெற்றிகரமாக எழுதி முடிப்போம். இது ஏதோ ராஜீவ் காந்தியின் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக அல்ல.
காங்கிரஸ் ஆட்சியை நீக்குவதற்காக அல்ல. கள்ளிக் காட்டை அழிப்பது கள்ளிக் காட்டின் மீதுள்ள கோபத்தால் அல்ல. "அங்கே ஒரு நந்தவனத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக! நாடு வாழ- நலிவு தீர- உண்மையான கூட்டாட்சித் தத்துவம் மலர- மாநிலங்கள் உரிமையோடு வாழ- உறவுக்குக் கை கொடுக்க- உரிமைக்குக் குரல் கொடுக்க- அந்தந்த மொழிகளும் மத்திய ஆட்சியில் சம அந்தஸ்து பெற- பொருளாதாரத்திலே ஒரு தலைகீழ் மாற்றத்தைச் செய்ய- இந்த நாட்டிலே உள்ள பொருளாதாரம் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றதே, அதை மாற்றியமைக்க- இந்த முன்னணி பணியைத் தொடங்குகின்றது."
நள்ளிரவு 1.45 மணிக்கு என்னுடைய பேச்சைத் தொடங்கி, 2.20 மணிக்கு முடித்தேன். மாலை 5 மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்து அமர்ந்த மக்கள் அதே இடத்தில் 10 மணி நேரம் அமர்ந்திருந்து வரலாறு படைத்தனர். 1988-ஆம் ஆண்டு முடிவடையவிருந்த டிசம்பர் திங்களில் அனைத்துக் கட்சிகளும் பொதுத் தேர்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தன.
கழகமும் அந்தப் பணியிலே ஈடுபட்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேர்காணலில் ஈடுபட்டிருந்த நேரத்தில் 17-ந்தேதியன்று நான் எழுதிய பொன்னர் சங்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. டாக்டர் நன்னன் தலைமையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் நூலினை வெளியிட முதல் பிரதியை டாக்டர் வா.செ. குழந்தைசாமி பெற்றுக் கொண்டார். சிலம்பொலி செல்லப்பன், நன்னியூர் ராஜேந்திரன், சக்திக்கனல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 18-12-1988 அன்றும்- இரண்டாவது பட்டியல் 21-12-1988 அன்றும் மூன்றாவது பட்டியல் அதே 21-ந்தேதி மாலையிலும் வெளியிடப்பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.கழகம் 198 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 21 இடங்களிலும், ஜனதாதளம் 10 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 இடங்களிலும் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் நான் துறைமுகம் தொகுதியிலிருந்தும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அண்ணாநகர் தொகுதியிலிருந்தும் போட்டியிட்டோம்.
கழகத்தின் தேர்தல் அறிக்கையை 30-12-1988 அன்று வெளியிட்டு விட்டு 1-1-1989 முதல் 19-1-1989 வரை கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். சோவியத் குடியரசின் ஆர்மேனிய மாநிலத்தில் காகஸஸ் மலைத் தொடர் பகுதியில் 7-12-1988 அன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். பல கிராமங்கள், நகரங்களிலிருந்த கட்டிடங்கள் இடம் தெரியாமல் தரை மட்டமாகி விட்டன. 80 ஆண்டு காலத்தில் இது போன்ற பூகம்பம் ஏற்பட்டதே இல்லையென டாஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
அப்போது அமெரிக்கா சென்றிருந்த சோவியத் அதிபர் கார்பசேவ் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக நாடு திரும்பினார். 1989-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் 146 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும், ஜனதா தளம் 4 இடங்களிலும், முஸ்லீம் லீக் 4 இடங்களிலும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் 1 இடத்திலுமாக தி.மு.க. அணி மொத்தம் 170 இடங்களிலும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.
27 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், தமிழக ஜனதா 2 இடங்களிலும், ஜானகி அம்மையார் தலைமையிலான அ.தி.மு.க.1 இடத்திலும், மற்றவர்கள் 3 இடத்திலுமாக வெற்றி பெற்றன. வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அதே நேரத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும், கழகத்தின் வெற்றிக்காக தமிழகத்திலே சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்த ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான என்.டி.ராமராவ், தேசிய முன்னணியின் அமைப்பாளர் வி.பி.சிங், ஜனதா தளக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஜித் சிங், அரியானா மாநில முதல்வர் தேவிலால், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, கர்நாடக முதல்வர் எஸ்.ஆர்.
பொம்மை மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உபேந்திரா, மதுதண்டவதே, ஜேத்மலானி ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு நான் விடுத்த செய்தியில் "தங்களுக்குப் பணியாற்றுவதற்காக தமிழ் மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றியை அமைதியாகவும் அடக்கமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் கொண்டாட வேண்டுகிறேன். யாருடைய மனமும் புண்படக் கூடிய அளவிற்கு தயவுசெய்து எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.
இவர் காட்டிய அன்பும் அவர் காட்டிய பண்பாடும்! கழகத்தின் வெற்றி பற்றி நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டிய போதிலும் "33, 44 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற தி.மு. கழகம் ஆட்சியில் அமரலாமா" என்ற கேள்வியை இந்திரா காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த போது, 1961ஆம் ஆண்டு டிசம்பரில் கோவையில் நடைபெற்ற கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தியாவிற்கு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டுமென்று கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டினேன்.
அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டால், தனிப்பட்டவர்கள் தேர்தலிலே போட்டியிட்டு, ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கக் கூடிய வாக்குகளின் சதவிகித அடிப்படையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படும். உதாரணமாக ஒரு கட்சி 30 சதவிகித வாக்குகளைப் பெறுமேயானால் அந்தக் கட்சி சட்டமன்றத்திற்கு 30 சதவிகித உறுப்பினர்களை அனுப்பலாம். இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, லக்ஸம்பர்க், மால்டா, மொனாக்கோ, நெதர்லாந்து, நார்வே, போர்த்துக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ரஷ்யா (50 சதவிகிதம்), இஸ்ரேல், கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா (50 சதவிகிதம்), நியூஸிலாந்து, அங்கோலா, மடகாஸ்கர், செனகல், தென்னாப்பிரிக்கா, கயானா, மெக்சிகோ, பனாமா, அர்ஜண்டினா, பிரேசில், சிலி, பெரு, வெனிசுலா போன்ற நாடுகளிலே அமுலிலே உள்ளது.
இந்த முறையைப் பின்பற்றினால் மொத்தத்தில் அதிக சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற கட்சி குறைந்த இடங்களிலும், குறைந்த சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிகள் அதிக இடங்களிலும் மன்றங்களுக்கு வர முடியாது என்பதை விளக்கியதுடன், தமிழ்நாட்டில் 1952 சட்ட மன்றத் தேர்தலில் 35 சதவிகித அளவிற்கு வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 152 இடங்களையும், மற்ற தேர்தல்களில் கூட அவ்வாறே குறைந்த சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிகள் அதிக இடங்களைப் பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டதையும் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டி, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் உண்மையான ஜனநாயகம் ஒளிவிட முடியும் என்றும் கூறினேன்.
1989 சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 22ஆம் நாள் வந்ததையொட்டி ஜனவரி 25 அன்று தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த மு.கண்ணப்பன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனார் முன்மொழிய, பொருளாளர் சாதிக் பாட்சா வழி மொழிந்திட, என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் அலெக்ஸாண்டரைச் சந்தித்து என்னையும் சேர்த்து 17 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை அளித்தேன். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் வருமாறு:- பேராசிரியர் அன்பழகனார், சாதிக் பாட்சா, நாஞ்சிலார், மு.கண்ணப்பன், கே.பி.கந்தசாமி, கோ.சி.மணி, ஆர்க்காடு வீராசாமி, பொன்.முத்துராமலிங்கம், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டாக்டர் ராம கிருஷ்ணன், பொன்முடி, கே.என்.
நேரு, சந்திரசேகரன், ச. தங்கவேலு. ஜனவரி 27 அன்று நானும் அமைச்சர்களும் ஆளுநர் அலெக்ஸாண்டர் அவர்கள்முன் பதவிப்பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்திலே நடைபெற்றது. அந்த விழா நிகழ்ச்சிக்கு தேசிய முன்னணி அமைப்பாளர் வி.பி.சிங், ஆந்திர முதல்வர் என்.டி.இராமராவ், கர்நாடக முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை, கேரள முதல்வர் இ.கே. நாயனார், அஜீத்சிங், உபேந்திரா, ராம் விலாஸ் பஸ்வான் ஆகிய வெளி மாநிலத் தலைவர்கள் வந்திருந்தனர்.
அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில், அன்று வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளி மாநிலத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர். உள்ளத்தில் ஊறிக்கிடந்த உணர்வுகளை ஒளிவு மறைவின்றி அந்தக் கூட்டத்தில் உணர்ச்சிமயமாக வி.பி.சிங் வெளிப்படுத்தினார். அவரது பேச்சின் சுருக்கமாக ஒரு பகுதி, வருமாறு:- "இன்று காலையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று, கலைஞர் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அந்தக் கோட்டத்தைக் கட்டி முடித்த கலைஞர் கருணாநிதி அவர்களை அதன் திறப்பு விழாவுக்கு அழைக்காதது மாத்திரமல்ல; அவர் நாட்டிய அடிக்கல்லையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறிந்தார்கள். அவ்வாறு கலைஞர் நாட்டிய அடிக்கல்லை அப்புறப்படுத்தியவர்கள், தமிழ் மக்களின் இதயங்களிலே அவர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்பதையும், அதனை எந்தக் காலத்திலும் எந்தச் சக்தியும் அப்புறப்படுத்த முடியாது என்பதையும் ஏனோ அறியவில்லை.
13 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள், பாண்டவர்கள் குருக்ஷேத்திரப் போர்க்களத்திற்கு வந்தது போல வந்து, அடிக்கல்லை அகற்றியவர்களுக்குச் சரியான பாடம் கற்பித்திருப்பதோடு, எந்த வள்ளுவர் கோட்டத்தை அவர் உருவாக்கினாரோ; அந்தக் கோட்டத்துக்குள்ளேயே வந்து பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். இந்த வெற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வெற்றி."
தேசிய முன்னணியின் அமைப்பாளரும் அகில இந்திய அளவில் மட்டுமில்லாமல் அனைத்து நாடுகளிலும் ஒளி- பரப்பியவாறு புகழ் மலையின் உச்சியில் ஏறிக் கொண்டிருந்த தேசத் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப் பட்டவருமான திரு.வி.பி.சிங் அவர்களின் அந்த உரை கேட்டு, கடற்கரை மணற்பரப்பில் தேனடை போல் திரண்டிருந்த தமிழ்ப் பெருமக்களும், களம் பல கண்ட காளையராம் கழகத்து உடன்பிறப்புக்களும் மெய்சிலிர்த்துக் கையொலி எழுப்பி, வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்த காட்சி; வாழ்நாளில் சில நேரங்களில்தான் வாய்க்கும். 1989 ஜனவரியில் நடைபெற்ற இந்த நன்றியறிவிப்புப் பொதுக் கூட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்ட போது அவர் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதே ஆண்டு டிசம்பர் திங்களில்தான் அவர் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் பிரதமராக இருந்த போதும்; அந்தப் பதவியில் அமர்வதற்கு முன்பு எத்தகைய கொள்கை உறுதிப்பாட்டுடனும் மனிதநேயப் பண்புடனும்; குறிப்பாக என் போன்றோரிடம் கொண்டிருந்த நட்புக்கு எள் முனையளவு குறைவுமின்றி இருந்து வந்தாரோ; அதிலே எந்த மாற்றமுமின்றி-மகுடத்திற்குத் தனிப்பெருமை வந்துவிட்ட தாகக் கருதாமல்; எளியவராகவும், இனியவராகவுமாகத்தான் திகழ்ந்தார்.
அவரது ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நன்மைகள் பல எனினும்; சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் முதலமைச்சராக இருந்த என் வேண்டுகோளை ஏற்று நீண்ட காலக் கோரிக்கையாக இருந்த காவேரிப் பிரச்சினைக்கு 1990 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுக்கக் காரணமாக இருந்தவர் அவர்! மண்டல் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான மண்டல் கமிஷன் அறிக்கை; பல்லாண்டு காலமாகக் கிடப்பிலே போடப்பட்டிருந்ததை எடுத்து தூசி தட்டி, இந்தியா முழுமையுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக நடைமுறைப்படுத்தும் நிலையை உருவாக்கிட ஆணை பிறப்பித்தவர் அவர்!
அதன் விளைவாக அவரும், நானும் கொடுத்த விலை மிக அதிகம்! அதனைப் பிறகு விவரிக்கிறேன். அவரது இதயம் எத்தகையது என்பதற்கு; அவர் இந்தியப் பிரதமராகவும், நான் தமிழக முதல்வராகவும் இருந்த காலத்தில் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்போது நினைவு படுத்தாமல் என் பேனா நகர மறுப்பதால்; அந்தப் பாசமும், பரிவும், உணர்வும், உருக்கமும் மிகுந்த நிகழ்ச்சியைச் சில வரிகளில் குறிப்பிடுகிறேன்.
பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அந்தப் பதவிப் பொறுப்பை ஏற்ற பின்னர் எனது அழைப்பின் பேரில் சென்னை நிகழ்ச்சி யொன்றுக்கு வருகிறார். அந்தச் சமயம் என் நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தேர்தல் நேரத்தில் தனது தலைமையில் இயங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைக் கலைத்துவிட்டு, தேசிய முன்னணியில் இணைந்திருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜனதா தளத்துடன் சேர்ந்து, தமிழக ஜனதா தளக் கட்சியின் தலைவருமானார்.
எனவே அவரது வேண்டுகோளையேற்று பிரதமர் வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு, நானும் பிரதமரும் கலந்து கொள்கிற நிகழ்ச்சிக்கு வருவதாக ஏற்பாடு. சிவாஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் அவர்களும் சிவாஜியும் என்னை வலியுறுத்தி அழைத்ததின் பேரில் நானும் அவருடன் சென்றேன். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக ஜனதா தள நிர்வாகிகளும், தொண்டர்களும், ஏராளமான சிவாஜி ரசிகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில்தான் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தேசிய முன்னணியுடன் உறவு கொள்ளத் தொடங்கியிருந்ததால் அந்த அரசியல் மாற்றத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத காரணத்தாலோ; அல்லது யாரோ சிலர் தூண்டிவிட்டோ; அந்த விழாவில் நான் பேசத் தொடங்கியதிலிருந்து பேச்சை முடிக்கும் வரையில் சிலர் எதிர்ப்புக் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். சிவாஜி அதனைத் தடுக்க முனைந்தும் அந்த ரசிகர்கள் கட்டுப்படவில்லை. பிரதமர் கலந்து கொள்கிற ஒரு நிகழ்ச்சியில் அசம்பாவிதம் துளியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக; அவர்களை அடக்கப் பாய்ந்த போலீசாரை எச்சரித்து அமைதிப்படுத்தி; நான் என் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வி.பி.சிங் அவர்கள் பேசுவதற்கு வழி விட்டேன்.
மேடையிலிருந்தவாறே நடந்தவைகளைப் புரிந்து கொண்ட அவர், மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவராக அங்கு பேசுவதற்கே தயக்கம் காட்டி மறுத்துவிட்டார். பிறகு நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதின் பேரில்; சில நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிவிட்டு, அந்த ரசிகப் பெருமக்களில் சிலரின் செயலுக்குத் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டு; நான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னுடன் புறப்பட்டார்.
பிரதமருக்காக தி.மு.க. தேசிய முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரைப் பாராட்டுக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில், திடீரென வி.பி.சிங் அவர்கள் என்னைப் பார்த்து, "முதலில் உங்கள் வீட்டுக்குச் செல்லலாம்" என்றார். அவருடன் என் காரில் வந்த அவரது செயலாளர்களில் ஒருவர்; "இல்லை! கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அங்கே போய் விட்டு அங்கிருந்து கடற்கரை கூட்டத்துக்குச் செல்ல சரியாக இருக்கும்" என்றார்.
உடனே வி.பி.சிங் அவர்கள் சற்றுக் கடுமையாக உரத்த குரலில்; அந்தக் குரலும் தழுதழுத்திட "இல்லை! இல்லை! முதலமைச்சர் வீட்டுக்கே போகிறோம்!" என்று முடிவாகக் கூறவே; கார் என் வீட்டுக்கே சென்றது. காரிலிருந்து இறங்கியதும் என் வீட்டுக்குள் நுழைந்த வி.பி.சிங் அவர்கள் என்னுடன் மாடி அறைக்கு வந்து: "மிகவும் வருந்துகிறேன். பெரியார் திடல் நிகழ்ச்சியில் நடந்
த, அந்த விரும்பத்தகாத சம்பவத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அநாகரீகமாக சில பேர் நடந்து கொண்டது என் நெஞ்சுக்கு நிரம்ப வலியை ஏற்படுத்தி. விட்டது" என்றவாறு என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். அவர் கண்களில் இருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. என்னை ஆறுதல் படுத்துவதற்காக அதிகார பூர்வமான நிகழ்ச்சி நிரல் இன்றி; திடீரென என் வீட்டுக்கு வந்துவிட்ட பிரதமர் வி.பி. சிங்கை; நான் ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்த வேண்டியதாயிற்று.
வீட்டிலிருந்து நேரே கடற்கரை மேடைக்குச் சென்றோம். செல்லும் வழியில் பிரதமர் அவர்களும் நானும் அண்ணா சதுக்கம் சென்று; அன்று பிப்ரவரி 3 அண்ணா நினைவு நாளையொட்டி மலரஞ்சலி செலுத்தினோம். அடுத்து நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்திற்கு தமிழக ஜனதா தளத் தலைவராக இருந்த நடிகர் திலகம் சிவாஜியும் வந்திருந்தார். அவரும் பிரதமர் வி.பி. சிங்கைப் பாராட்டி, வரவேற்று, வாழ்த்திப் பேசினார். பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒட்டி பதிலுக்கு இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்று வி.பி.சிங் கவலையுடன் எதிர்பார்த்தார்.
எனினும்; கழக உடன்பிறப்புகள் காட்டிய கண்ணியத்தையும்- கட்டுப்பாட்டுணர்வையும் கண்டு; மிகவும் வியப்புற்று, என்னிடம் மனம்விட்டுப் பாராட்டினார். அந்தக் கூட்டத்தில்தான் பேசும்போது, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு அண்ணா பெயரும், காமராஜர் பெயரும் சூட்ட வேண்டுமென்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன். உடனடியாக பிரதமர் வி.பி.சிங் அவர்கள், மேடைக்குச் சற்றுத் தொலைவில் பிரதமருக்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த (Hot Line) தொலைபேசியில் டெல்லிக்குத் தொடர்புகொண்டு; தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசினார்.
பின்னர், மேடைக்கு வந்து உரையாற்றினார். உரை நடுவே சென்னையில் உள்ள உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும்; வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் அடையாளச் சின்னங்களாக மட்டுமல்ல; வி.பி. சிங் அவர்களின் விரைந்து முடிவு எடுக்கும் செயலின் அடையாளமாகவும் அந்த இரண்டு பெயர்களும் என்றைக்கும் அந்த விமான நிலையங்களின் முகப்பில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்.
மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே 1989ஆம் ஆண்டில் தான்; இப்போது இந்த நான்காம் பாகத்தை எழுதும்போது அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருக்கும் புஷ் அவர்களின் தந்தை ஜார்ஜ் புஷ் அவர்கள் அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார். தமிழகத் தேர்தல் நடைபெற்ற அதே காலகட்டத்தில் மிஜோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அதே சமயம் மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்திரா காங்கிரசின் மேலிடத்தை எதிர்த்து அக்கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கிளர்ச்சி செய்தனர். ஒரு லாட்டரி ஊழல் வழக்கில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்கின் மீது மாநில உயர்நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததையொட்டி, அவர் பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கட்டளையிட்டது. அவர் பதவி விலகிய போதிலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது ஆதரவு நிழலிலேயே இருந்தனர்.
எனவே மேலிடத்திலிருந்து பூடாசிங்கும், பொத்தேதாரும் மத்தியப் பிரதேசத்துக்குச் சென்று, சமரசம் பேசி மோதிலால் வோரா என்பவரை முதல்வராக ஆக்கினார்கள். தமிழகத்தில் கழக அமைச்சரவையின் முதல் கூட்டம் பிப்ரவரி முதல் நாளே (1989) நடைபெற்று... அரசு, மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களிலும் உள்ளாட்சித் துறையிலும் ஏற்படும் காலி இடங்களில் 30 சதவிகித இடம் பெண்களுக்கே என்றும், ஆரம்பப் பள்ளிகளில் 1வது 2 வது வகுப்பு ஆசிரியர்களாக பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.
1989 பிப்ரவரி 5ஆம் நாள் புதிய சட்டப் பேரவை கூடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். 6-2-89 அன்று தலைமைச் செயலக அலுவலர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு, பழிவாங்கும் மனப்பான்மை கழக அரசிடம் கிடையாது என்றும், வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த அலுவலர்க்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுமென்றும் அறிவித்தேன். 8-2-89 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவராக முனைவர் தமிழ்க்குடிமகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மதுரை யாதவா கல்லூரியின் முதல்வராக இருந்து என்னிடம் நிறைந்த அன்பு கொண்டிருந்தவர். அவர் இந்தப் பொறுப்புக்கு வரவேண்டுமென்று நானே விரும்பி அழைத்து அவர் இளையான்குடி தொகுதியில் வென்று, பேரவைத் தலைவரானார். பேரவையின் துணைத் தலைவராக நாமக்கல் துரைசாமி தேர்ந்தெடுக்கப் பட்டார். சட்டப்பேரவையில் எனது பாராளுமன்ற செயலாளராக எல். கணேசன் நியமிக்கப்பட்டார். 9-2-89 அன்று டெல்லியிலே நடைபெற்ற முதல் அமைச்சர்கள் மாநாட்டிலே கலந்து கொள்ளவும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைச் சந்திக்கவும் டெல்லி சென்றேன்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக பிரதமருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததோடு, பிரதமர் ராஜீவ் அவர்கள் என்னிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விளக்கமாகப் பேச வேண்டுமென்றும் நான் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கிச் செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் நடந்தபோது தி.மு.க.வை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தை மிகக் கடுமையாகச் செய்த ராஜீவ் காந்தியா; நம்மோடு இவ்வளவு அன்புடன் பழகுகிறார் என்ற திகைப்புடனும், வியப்புடனும், நேரு குடும்பத்தின் பண்பாடு இது என்ற நினைப்புடனும் நான் அவர் கூறியவாறு மேலும் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கிச் செல்வதற்கு ஒப்புதல் அளித்தேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை சுமுகமாகத் தீர்வதற்கு ஏதாவது பெரிய அளவில் வழி பிறக்காதா என்ற நம்பிக்கை வேறு ஏற்பட்டதால் அவர் சொன்னதை உடனடியாக ஏற்றுக் கொண்டேன். ஈழப் பிரச்சினையில் ஒரு திருப்பம் கடந்த அத்தியாயத்தில் நேரு குடும்பத்தின் பண்பாடு என பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து எழுதியதைத் தொடர்ந்து, இந்த அத்தியாயத்தைத் தொடங்கும் பொழுது நேருவின் 113-வது பிறந்த நாள் நவம்பர் 14-ஆம் தேதி என்பதும் 2001-ஆம் ஆண்டு இந்த நான்காம் பாகம் நான் எழுதும் போதும் அதே நாள் (நவ.
14) என்பது பொருந்தி வருவதும் வியப்புக்குரியதாகவும் மனநிறைவு தருவதாகவும் இருக்கிறது. 31 ஆண்டுகளுக்கு முன்பு 14.11.1970 நேரு பிறந்த நாளன்று சென்னையில் "நேரு கண்ட ஜனநாயகம்" எனும் தலைப்பில் என் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்தக் கவியரங்கில் கவிஞர்கள் கண்ணதாசன், அப்துல்ரகுமான், எஸ்.டி.சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகுசுந்தரம் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டி நூற்றுக்கணக்கானோர் குதிரைப் படையின் தாக்குதலுக்கு ஆளாகிற அளவுக்கும், மொய்தீன் பிச்சை என்ற கழகத் தொண்டர் மாண்டு போகிற நிலைமைக்கும் - நேரு அவர்களுக்கும் தி.மு.கழகத்திற்கும் அரசியல் ரீதியான கருத்து மோதுதல் இருந்த போதிலும்; நாட்டு விடுதலைக்காகத் தியாகப் போரில் ஈடுபட்ட தலைவர்கள் எக்கட்சியினராயினும் அவர்களிடத்திலே மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்ற கண்ணியமிக்க கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கும் தலைமை இந்தக் கழகத்தின் தலைமை என்பதால்; அண்ணா வகுத்த அந்த வழியில் பண்டித நேருவின் தியாக வரலாற்றின் மீது எனக்கு அசைக்க முடியாத பற்று உண்டு.
அதனை 1970-ல் நான் தலைமையேற்ற கவியரங்கத்திலேயே விரிவாகப் பாடியிருக்கிறேன். அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் நினைவுபடுத்துகிறேன். "மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின் கொடிபறித்து விடுதலைக் கொடி பிடித்த கொள்கை வீரன் அடி கொடுத்தால் வாங்கிக் கொண்டு அடக்குமுறை தாங்கிக் கொள்ள அண்ணல் வகுத்தவழி அயராதுழைத்த சிங்கம்! இளமையின் எழிலை இருட்டுச் சிறையில் கழித்த தியாகி! எண்ணையிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம் எனினும் எண்ணையிட்டார் விடுதலை வேள்விக் கென்போம்.
பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும் குணமலையாய்த் திகழ்ந்தார் என்போம். பணியின் விரைவைப் பம்பரம் என்பர்; பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்! இடி இடிக்கும் பேச்சில் - இளமை துடி துடிக்கும் எழுத்தில் - தேன் ஒரு படி இனிக்கும் பண்பில் - அதிர் வெடி முழக்கும் செயலில் - விடாப் பிடியிருக்கும் குணத்தில் - விடுதலைக் கொடியிருக்கும் கையில் - கொஞ்சம் முடியிருக்கும் தலையில்" அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் மாறுபாடு கடந்து நேருவின் மீது நான் கொண்டிருந்த அந்த மரியாதையின் தொடர்ச்சியாகத்தான்; அந்தப் பாரம்பர்யத்தில் வந்த அவரது பேரன் ராஜீவ் காந்தியின் பண்பாடும் என்னைக் கவர்ந்தது எனலாம்.
ஒரு முதலமைச்சர், ஒரு பிரதமரை மரியாதை நிமித்தம் சந்திப்பது - அதுவும் இருவேறு கட்சிகளின் தலைவர்கள் என்கிற போது; அந்தச் சந்திப்பு மரியாதை அளவில் ஒரு சில நிமிடங்கள்தான் நீடிக்கும். ஆனால் ராஜீவ் காந்தி அவர்களோ; ஈழத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசவேண்டும்; அதற்கு வாய்ப்பாக டெல்லியிலே நான் மேலும் இரண்டு நாள் தங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு திருப்பம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையோடு ராஜீவ் விருப்பப்படி டெல்லியில் மேலும் ஒருநாள் தங்கப் போவதாக சென்னைக்கு அறிவித்துவிட்டு அங்கே தங்கினேன்.
மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் டெல்லியில் நான் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த முழுமையான விபரங்களை எனக்கு விளக்கிட மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை இணை அமைச்சராக இருந்த நட்வர்சிங் அவர்களை ராஜீவ் அனுப்பி வைத்து விட்டார். அவருடனும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும் நானும் தம்பி முரசொலி மாறனும் நீண்ட நேரம் விவாதித்தோம். மாலையில் மீண்டும் பிரதமர் ராஜீவ், நட்வர்சிங், முரசொலி மாறன் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பிரதமருடன் நானும் மாறனும் மட்டுமே, ஈழப் போராட்டம் பற்றிய முக்கிய பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். அப்போது மனந்திறந்து பேசிய ராஜீவ், விரைவில் இலங்கைக்கு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும், பிரபாகரனைச் சந்தித்து பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான வாய்ப்புகளையும் உருவாக்கிடத் தக்க வழிவகைகளை வகுத்துத் தருவதாகவும், சென்னைக்குச் சென்றபிறகு மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் உறுதிபடக் கூறினார்.
அன்றைய தினம் டெல்லியில் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கொடுத்த செய்தி வெளியீட்டில் "இலங்கையில் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் சந்தித்து, இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதித்து, வன்முறைக்கு முடிவு காணுகிற சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து நல்லிணக்கமும், முழு அமைதியும் ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதமரிடம் தமிழக அரசின் நிதிநிலை நெருக்கடியை விளக்கிக் கூறி, குறைந்தபட்சம் ரூபாய் 200 கோடி அளவுக்காவது உடனடியாக மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அன்றைய தினமே, குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களையும், குடியரசுத் துணைத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்களையும், மத்திய நிதி அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் அவர்களையும் சந்தித்தேன். நாடாளுமன்ற தி.மு.க.
குழுவின் தலைவர் தம்பி முரசொலி மாறனும் என்னுடன் வந்திருந்தார். தமிழக அரசுக்கு உடனடியாக நிதியுதவி தேவையென்று பிரதமர் ராஜீவிடம் வலியுறுத்தியதை நிதி அமைச்சர் சவானிடமும் நினைவுபடுத்தி ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். டெல்லியில் ஏராளமான செய்தியாளர்கள் நிரம்பியிருந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் விடுத்த கேள்விக் கணைகளுக்கு விடையளித்தேன். அன்றைய டெல்லி "இந்தியன் எக்ஸ்பிரஸ்", "கவனத்தைக் கவர்ந்த கருணாநிதி" (Karunanidhi steals the show) எனும் தலைப்பிட்டுப் பாராட்டி எழுதியிருந்தது.
11.2.1989 காலை சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை முன்னிட்டு நான் 10.2.1989 இரவு சென்னை திரும்பினேன். 11.21.989 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் எனக்கு மிகப்பெரிய பாராட்டு விழா, கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்ட முதலமைச்சர் என்பதற்காக நடத்தப்பட்டது. இசைஞானி இளையராஜா அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார்.
இயக்குனர் பாலச்சந்தர், இயக்குனர் பாரதிராஜா, ஏ.வி.எம். சரவணன், ஜி. உமாபதி, வலம்புரி சோமநாதன், கவியரசு வைரமுத்து, நடிகர்கள் கலைஞானி கமலஹாசன், புரட்சி கலைஞர் விஜயகாந்த், வி.கே. ராமசாமி, நாகேஷ், ஜெய்சங்கர், கலையரசி ராதிகா, செந்தாமரை மற்றும் பல கலைஞர்கள் அந்த விழாவிலே கலந்துகொண்டு என்னைப் பாராட்டியும் வாழ்த்தியும் உரையாற்றினர். நடிகர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். பிறகு 11.3.1989 அன்று தென்னிந்திய நடிகர் சங்க விழாவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் படத்தைத் திறந்து வைத்தேன்.
இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார். இதற்கிடையே சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டு கழக அரசின் கொள்கை கோட்பாடு எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி விவாதம் விரிவாக நடைபெற்றது; பேரவையில் என் பதிலுரை 17.2.1989 ஆம் நாளன்று இடம் பெற்றது. "கடந்த காலத்தில் மதுவிலக்கு சட்டத்தின் தொடர்பாக அரசினால் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்து, மது உற்பத்தியாளர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதனால் மாநில அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பெரும் வருவாய் இழப்பு கோடிக்கணக்கிலே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றி நிதி வருவாயைப் பெருக்கிட சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்" என்று ஆளுநர் உரையிலே குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி; நான் பதிலுரை பகர்ந்தபோது கடந்த காலத்தில் எத்தகைய சலுகைகள் அளிக்கப்பட்டு, வரிவிலக்களிக்கப்பட்டு, அவற்றுக்கான ஆணைகளே பிறப்பிக்கப்- பட்டு அதன் காரணமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு நிதி வருவாய் குறைந்து; அது மது உற்பத்தியாளர்களுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் பங்கிடப்பட்டது எவ்வாறு என்பதை விளக்கியதுடன்; கடந்த கால அரசு பிறப்பித்திருந்த ஆணையை ரத்து செய்ததின்மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு மேலும் 100 கோடி ரூபாய் கிடைத்திட வழிவகுக்கப்பட்டுள்ள விதங்களையும் விரி
வாக விளக்கினேன். இந்த முடிவினை ஆதரித்தும், என் விளக்கத்தை ஏற்றுக் கொண்டும் - 20.2.1989 இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கத்தில் "மதுபான வகைகளுக்குக் குறைந்த ஆயத் தீர்வையும், அதிகமான விலையும் என்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இமாலய ஊழலை முதல்வர் கருணாநிதி தடுத்து நிறுத்தி, வருவாய் இழப்பையும் தவிர்த்துள்ளார்" என்று எழுதியது.
21.2.1989 இந்து இதழில் வந்த தலையங்கத்தில், "சாராய வியாபாரத்தில் இந்த மாநிலத்தில் நடந்துள்ள ஊழல்களைச் சுட்டிக்காட்டி, அந்த ஓட்டைகளை அடைத்து ஒரே வீச்சில் மாநிலத்தின் அரசு கருவூலத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஆதாரத்தை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் திரட்டியுள்ளார்" என்று பாராட்டப்பட்டிருந்தது.
டெல்லியிலிருந்து வெளிவரும் "இந்துஸ்தான் டைம்ஸ்" 20.2.1989 அன்று எழுதிய தலையங்கத்தில் "இருபதே நாள் ஆட்சியில் ஓர் இமாலய சாதனை" என்று புகழாரம் சூட்டியிருந்தது. 22.2.1989 வெளிவந்த "எகனாமிக் டைம்ஸ்" என்ற ஆங்கில ஏடும் இதே விதமாகப் பாராட்டியிருந்தது. இத்தகைய மகிழ்ச்சிகரமான சூழலில் அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது; ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி டெல்லியில் பிரதமர் ராஜீவ்காந்தியிடம் பேசியது குறித்து அதன் தொடர்ச்சியான செய்தி என்ன வரப்போகிறது; எப்போது வரப்போகிறது என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
அந்தச் சமயத்தில்தான் - அதாவது 1989 பிப்ரவரி திங்களில் தலைமைக் கழகச் செயலாளர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்கள் (வை. கோபால்சாமி) ரகசியமாக இலங்கையில் ஈழப் பகுதிக்குச் சென்றிருப்பதாக ஒரு செய்தி பரவியது. அச்செய்தி குறித்து கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் 19.2.1989 அன்று விடுத்த அறிக்கையில், "வைகோ, இலங்கை சென்றது குறித்து என்னிடமோ, தலைவரிடமோ கலந்து பேசி அனுமதி பெறவில்லை.
பிரதமர் ராஜீவ் காந்தியுடன் முதல்வர் கலைஞர் அண்மையில் பேசியதற்கும் இந்தப் பயணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று விளக்கியிருந்தார். சட்டப்பேரவையில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் இதைப்பற்றி விளக்கம் கேட்டபோதும், பிரதமர் ராஜீவ் காந்தியிடம் நான் பேசியதற்கும் இந்தப் பயணத்திற்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்தேன். பின்னர் 24.2.1989 அன்று, 5.2.1989 எனத் தேதியிட்டு வைகோ எழுதிய கடிதம் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நண்பர் வாயிலாக எனக்குக் கிடைத்தது.
அந்தக் கடிதம் வருமாறு:- "எனது உயிரினும் மேலான சக்தியாய் இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காமல் என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் கலைஞர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன். கடுகளவு கூட வருத்தமும் கோபமும் என்மீது எந்தக்கட்டத்திலும் ஏற்படா வண்ணம் பயம் கலந்த பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான், பல இரவிலும் பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக நான் எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத் திருநாட்டில் வவுனியா காட்டுப் பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்றுகொண்டிருப்பேன்.
தமிழகத்தில், வரலாறு இதுகாறும் கண்டறியாத மகத்தான அத்தியாயத்தைப் படைத்து விட்டீர்கள். தரணி எங்கும் வாழும் தமிழர்கள் களிப்புடனும் பெருமிதத்துடனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்குத் தங்களால் விடிவும் விமோசனமும் பிறக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் உலகமெங்கும் வாழும் தன்மான உணர்வுள்ள தமிழர்கள் ஏக்கத்தோடும் தவிப்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் உலகம் உள்ளவரை சாகா வரம் பெற்ற சிரஞ்சீவி உயிரோவியங்களாக சங்கத்தமிழையும் குறளோவியத்தையும் எண்ணற்ற பல காவியங்களையும் தமிழன்னைக்கு ஜொலித்திடும் ஆபரணங்களாகச் சூட்டி விட்டீர்கள். சராசரி முதல் அமைச்சராக உங்களை என் மனம் கணிப்பதில்லை. செந்நீரில் கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மாற்றி தரணியில் தமிழனுக்கும் தலைநிமிர்ந்து வாழும் நிலை அமைந்திட என் தலைவன் காரணமானார் என்பதையும் அகிலம் காண வேண்டும் என்பது எனது தணியாத தாகம்.
ஈழப் போர்க் களத்தில் பிரபாகரன் உறுதியான நிலையொன்றை எடுத்துக் கொண்டு அதிலேயே வலுவாக ஊன்றி நிற்கிறார். அந்தகாரத்துக்கு இடையே மின்னிடும் ஒரே ஒளி ரேகையாக உங்களை நம்பியிருப்பதாக மரண பயங்கரத்தின் பிடியிலிருந்து எழுதினார். காலமறிந்து, இடமறிந்து, மாற்றார் வலியறிந்து தன் வலியையும் கணித்து வியூகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனது ஈழப் பயண எண்ணத்துக்குக் காரணமாயிற்று.
13 ஆண்டுகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்கு குன்றிமணி அளவு கூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல், மத்திய அரசுடன் மோதுகிற நிலையையும் தவிர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாதமாக்கக் கூடிய வழிமுறைகளைக் காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சினையை விவாதித்து கருத்துக்களைப் பரிமாறி அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற மனப்பான்மையை உருவாக்கிடவும் உண்மை நிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்- டுள்ளேன். சிங்கள ராணுவத்தினிடமோ, இந்திய ராணுவத்தினிடமோ, நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக அரசுக்கோ, இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எதுவும் ஏற்படா வண்ணம் நான் செயல்படுவேன்.
என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர் அமைப்புக்களின் அழைப்பினை ஏற்று ஈரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்கிறேன் என்று எனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறியுள்ளேன். எனது பயணத் திட்டத்தை எவரும் அறிய மாட்டார்கள். ஆனால் எதையும் அறிந்து கொள்ளும் தங்களின் உள்ளுணர்வுதான் "பாயும் புலி பண்டாரக வன்னியனி"ன் இந்த வார அத்தியாயத்துக்கு "நண்பர்கள் சந்திப்பு" என்று தலைப்பு தந்தது போலும்.
"இரத்தம் கசியும் இதயத்தின் குரல்" என்ற எனது நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் "நான் தாயானேன்" எனக் குறிப்பிட்டீர்கள். "மானம் எனது மகன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு" என்ற தங்களின் வரிகளை ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்கியுள்ளேன். தொண்டைக் குழியில் ஜீவன் இருக்கும்வரை தங்கள் புகழையே என் உதடுகள் உச்சரிக்கும். வாழ்நாளில் தங்களின் அன்பையும் பாசத்தையும் பிறவிப் பெரும் பயனாகப் பெற்றிருக்கிற தங்களின் தம்பி, வை.கோபால்சாமி, 5-2-89."
கடிதத்தைப் படித்ததும் என் இதயத்தில் எத்தனையோ மின்னல் வீச்சுகள்! இடிக்குமுறல்கள்! ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இப்போதுதானே பிரதமர் ராஜீவிடம் பேசிவிட்டு வந்திருக்கிறோம்; அந்தச் சூழ்நிலை கெட்டுவிடுமோ? என்ற கவலையுடன்; இவர் இலங்கையிலிருந்து பத்திரமாகத் திரும்பி வரவேண்டுமே என்ற பதற்றமும் என்னைப் பற்றிக் கொண்டது. பழுக்கக் காய்ச்சிய ஓர் இரும்புத் துண்டு நீரை உறிஞ்சிவிடும் சக்தி கொண்டது என்பதற்காக; அந்த முயற்சியை, ஆறு, குளம், ஏரிகளில் செய்து பார்க்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் அவரது ஈழத்து ரகசியப் பயணம் அமைந்தது.
