உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பதிப்புரை · 291 / 391

பதிப்புரை தலைவர் கலைஞரின் சுயசரிதமான 'நெஞ்சுக்கு நீதி' முதல் மூன்று பாகங்களையும் படித்து இன்புற்று மகிழ்ந்த எமது நெஞ்சிற்கினிய வாசகர்களுக்கு இந்த நான்காவது பாகத்தையும் தருவதற்கு மிகவும் பெருமைப்படுகிறோம்; மகிழ்ச்சி அடைகிறோம். கலைஞர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, இயக்க வரலாறு மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புகளை தெள்ளிய ஆற்று நீர் போல 'நெஞ்சுக்கு நீதி' முதல் பாகம் முதல் மூன்றாம் பாகம் வரை தொகுத்துக் கொடுத்துள்ளார்.

இதோ! 'நெஞ்சுக்கு நீதி'யின் நான்காம் பாகம் வாசகர்களின் கரங்களில் பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களை வருடும் போது ஏற்படுகின்ற உணர்வுடன் வாசகர்களின் கரங்களை வருடிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய வரலாற்று நிகழ்வுகள்; இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்; அவற்றைத் தீர்க்க கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள்; ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தமிழகத்தில் கழகம் செய்த சாதனைகள் ஆகியவற்றை தனக்கேயுரிய கற்கண்டுத் தமிழில் சமைத்த இனிப்புப் பொங்கலாய் 'நெஞ்சுக்கு நீதி' நான்காம் பாகத்தில் வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார், கலைஞர் அவர்கள்.

இத்தகைய பெருமை வாய்ந்த, இந்த நூலை வெளியிட அனுமதி அளித்த இருபதாம் நூற்றாண்டின் தொல்காப்பியர்; அறிஞர் இலக்கியக் கடல் கலைஞருக்கு பெரிதும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். வழக்கம் போல், இந்த நூலை வாங்கிப் பயனடைந்து எம் நிறுவனத்தைப் பெருமைப் படுத்தும் இனிய வாசகர்களையும் நினைவு கூர்கிறோம். 'நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகத்தை கலைஞர் எழுதி, அதனையும் நாங்கள் வெளியிடும் பாக்கியத்தை காலம் எங்களுக்குத் தர வேண்டும் என்று இறைஞ்சுகிறோம்.

இந்நூல் வெளியிடுவதற்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் காலத்தே செய்துதவிய திரு.சண்முகநாதன் அவர்களையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவு கூர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். முன்னுரை 'நெஞ்சுக்கு நீதி' நான்காவது பாகத்தில் உங்கள் விழி மலர்கள் விரிகின்றன. முதற்பாகம், நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல் 1969 வரையிலான என் வாழ்க்கை வரலாற்றையும், என் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த இயக்க வரலாற்றையும் மற்றும் உலக வரலாற்றுக் குறிப்புகளையும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதாகும்.

1969 முதல் 1976 வரை ஏழாண்டுக் கால வரலாற்றுக் குறிப்புகளையும், என் வாழ்க்கைக் குறிப்புகளையும் தொகுத்தளிப்பது தான் 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகம். 1976க்குப் பிறகு 1991 வரையிலான 15 ஆண்டுக்கால சரித்திர நிகழ்வுகளை நினைவூட்டுவது தான் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகம். மூன்றாம் பாகத்தில் 1988ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் தான் முழுமையாக எழுதப்பட்டுள்ளன. எனவே இந்த நான்காம் பாகத்தில் 1989 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடந்த முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.

இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் முதல் பாகம் 755 பக்கங்கள்; இரண்டாம் பாகம் 586 பக்கங்கள்; மூன்றாம் பாகம் 612 பக்கங்கள். நான்காம் பாகம் 633 பக்கங்கள் என மொத்தம் 2586 பக்கங்கள் என அமைந்துள்ளது. நான்காம் பாகத்தை என் எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைத்திடும்போது உங்களிடம் தந்துள்ளேன். 'நான்காம் பாகம் முற்றும்' என்று எழுதுவதற்கே இயலாமல் இன்னும் பல நிகழ்ச்சிகள் காத்துக் கிடக்கின்றன.

காலம் இடம் தந்தால்; அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விட்டுப் போனவைகளையும் இட்டு நிரப்பி 'ஐந்தாம் பாகம்' தருவதற்கு முயற்சி எடுப்பேன். இல்லையேல் என்னைத் தொடர்ந்து தொண்டாற்றுபவர்கள் அப்பணி மேற்கொள்வர்.