நெஞ்சுக்கு நீதி
அசைக்க முடியாத இமயம்! · 290 / 391
74. அசைக்க முடியாத இமயம்! ஆயிரங்காலத்துப் பயிர்! "நெ ஞ்சுக்கு நீதி" யின் மூன்றாவது பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தைத் தொடங்கியபோது என்னை வெறும் நாராக வைத்துக் கொண்டு, என்னை ஆளாக்கிய வரலாற்று வேந்தனின் புகழ் மலர்களைத் தொடுத்து மாலையாக்கப் போவதாகக் கூறியிருந்தேன். அதன்படி முதல் பாகம் அண்ணா அவர்களின் மறைவு வரை உள்ள காலம் வரை நீடித்தது.
அதற்குப்பின் இரண்டாவது பாகத்திலும், மூன்றாவது பாகத்திலும் என்வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு மாறாக, என்னைத் தலைவனாகக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தின் வரலாற்றைத்தான் எழுதி வந்தேன். என்பதை இதனைத் தொடர்ந்து படித்து வருபவர்கள் நன்கு உணர்ந்திருக்கலாம். 1988 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் இந்த மூன்றாம் பாகம் நிறைவுற இருக்கிறது. 1989ஆம் ஆண்டுத் துவக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆனாலும் அந்த ஆட்சியை இரண்டாண்டுக் காலத்திற்கு மேல் நீடிக்கவிடவில்லை. அந்த இரண்டாண்டுக் காலத்திற்குள் கழக ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகள் வருமாறு:- ★ ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் சொத்திலே உரிமை. ★ இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். ★ காவிரிப் பிரச்சினைக்காக நடுவர் மன்றம் போராடிப் பெற்றது. ★ கிழக்காசியாவிலேயே முதலாவதாகக் கால்நடைப் பல்கலைக் கழகம்.
★ மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கும் சீர் மரபினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இருபது சதவிகித தனி ஒதுக்கீடு; ★ பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு, குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் இளங்கலைப் பட்டப்படிப்பு இலவசம். ★ ஆதி திராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு பதினெட்டு சதவிகிதம் என்றிருந்ததை, ஆதி திராவிடர்களுக்கு மட்டும் பதினெட்டு சதவிகிதம் என்றும், பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் சதவிகிதம் என்றும் உயர்த்தித் தரப்பட்டது.
★ ஆதிதிராவிடப் பழங்குடி மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம்; அவர்கள் குடும்பத்தில் முதல் மாணவராக இருந்தால் தொழிற்கல்வி வரை இலவசம். ★ வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதம் ஒதுக்கீடு. ★ அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பெண்களுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி. ★ சிறுபான்மையோருக்கு நலக்குழு. ★ வேலை வாய்ப்பினைப் பெருக்கிட, எண்ணற்ற திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள், 35,000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம்.
★ வடசென்னையில் புதிதாக அனல்மின் நிலையம். ★ திருச்சியில் புதிதாக வேளாண்மைக் கல்லூரி. ★ நெல்லையில் மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் புதிய பல்கலைக் கழகம். ★ பாரதிதாசன் நூல்கள் தேசிய உடமையாக்கப்பட்டது. அது சம்பந்தமாக பத்து இலட்சம் ரூபாய் அளவில் நிதிஉதவி வழங்கப்பட்டது. ★ வள்ளுவர் படத்தினை வரைந்த ஓவியர், மறைந்த வேணுகோபால் சர்மா அவர்களின் குடும்பத்துக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
★ திரைப்படத் துறையில் அண்ணா, கலைவாணர், பாரதிதாசன், எம்.ஜி.ஆர்., ராஜா சாண்டோ பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. ★ காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. ★ திரைப்பட நகர் ஒன்றினை உருவாக்கத் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ★ வணிகர் நல வாரியம். ★ விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் காவலர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்; மாதாந்திர மானியம் உயர்வு.
★ ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவியாக 5000 ரூபாய் வழங்கும் திட்டம். ★ கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கு இருநூறு ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம். ★ குடும்பத் தலைவர்களை இழந்து பரிதவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு 3,000 ரூபாய் உதவி அளிக்கும் திட்டம். ★ சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் முட்டையோடு சாப்பிட வசதி. இப்படி எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அந்த ஆட்சியைக் கவிழ்த்திடத்தான் எத்தனையெத்தனைச் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன தெரியுமா?
பதிமூன்று ஆண்டுக் காலம் எதிர்க்கட்சியாக இருந்து விட்டு, மூன்று தேர்தல்களில் தோற்றுவிட்டு, அதற்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்காக எத்தனையோ சாதனைகளைச் செய்வதற்காக நிதி நிலை அறிக்கையை நானே என் கைப்படத் தயாரித்து, அதனை அவையிலே தாக்கல் செய்ய 25.3.89 அன்று சட்டப் பேரவைக்கு வந்தேன். ஆனால் அதற்கு முன்பே புலனாய்வுத் துறையினர் மூலமாக ஜெயலலிதா தலைமையிலே வெற்றிபெற்று எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றிருந்த அ.தி.மு.க.வின் ஒரு அணியினர் அன்றைய தினம் பேரவையிலே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி, என்னை நிதிநிலை அறிக்கையைப் படிக்கவிடாமல் செய்யவும், அந்தக் கலவரத்தைக் காரணமாகக் காட்டிச் சட்டமன்றத்தையே கலைக்கவும் திட்டமிட்டு வந்திருப்பதாகச் செய்தி கிடைத்து, அமைச்சர்கள் மூலம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் மிகுந்த பொறுமையோடு இருக்க வேண்டுமென்று கூறியிருந்தேன்.
அமைச்சர்களோ, முதல்வரோ, இப்போது பேசும்போது எதிர்க்கட்சிச் சார்பில் யாராவது குறுக்கிட்டால் உடனடியாக அமரச் செய்தும், மீறிப் பேச முனைந்தால் அவையை விட்டே அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதே, அப்போது என்ன செய்தார்கள் தெரியுமா? நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் துவங்கும்போது ஜெயலலிதா எழுந்து நின்று கொண்டு, சுற்றிலும் தன் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை நிறுத்திக் கொண்டு, என்னை நோக்கி "நீ படிக்கக் கூடாது" என்றார்.
நான் மிகவும் பொறுமையாக அவர் கூறுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது ஜெயலலிதா, தன் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து "பட்ஜெட்டைப் பிடுங்குடா" என்றும், "குத்துடா" என்றும் கூறவே, ஒரு உறுப்பினர் என் கையிலிருந்து பட்ஜெட்டைப் பிடுங்க முற்பட்டு, அது கிழிந்து அவர் கையில் பாதியும் என் கையில் பாதியுமாக இருந்தது.
மற்றொரு உறுப்பினர் என்னை நோக்கிக் குத்துவதற்காக முனைந்தபோது, நான் சட்டென்று குனிந்து கொண்டதால், என் கண்களிலே இருந்த மூக்குக் கண்ணாடி கீழேவிழுந்து உடைந்தது. அதற்குப் பிறகு ஆளுங்கட்சிக்காரர்களும், அவர்கள் என்னைத் தாக்கியதால், இவர்களும் என்னுடைய அறிவுரையையும் மீறி, என்னைக் குத்துவதை நேரிலே கண்டுவிட்டதால் அவர்களும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். உடனே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா தன் தலையைத் கலைத்துப் போட்டுக் கொண்டு, தான் ஒரு பெரிய நடிகை என்பதைத் திறம்படச் செய்து காட்டினார்.
எனினும் எதிர்க்கட்சிக்காரர்கள் என் கையிலிருந்து நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கியதையும், என்னைக் குத்துவதற்காக முற்பட்டதையும் புகைப்படக்காரர்கள் நன்றாகப் புகைப்படம் எடுத்திருந்த காரணத்தால், நான் அதனை எடுத்துக் கொண்டு போய் மறுநாள் ஆளுநரிடமும், அதற்குப்பின் ஒருநாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களிடமும் நேரில் காட்டி விளக்கிய பிறகு அவர்களும் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். தற்காலிகமாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இருந்தாலும் ஏடுகள் மூலமும், கூட்டங்கள் மூலமும் இன்றுவரை அவர்கள்தான் தாக்கப்பட்டது போலவும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து விட்டது போலவும் சொல்லிச் சொல்லியே ஒரு பொய்யை உண்மையாக்க முயன்றனர். இத்தனைக் கலவரங்களையும் செய்துவிட்டு அவர்கள் அவையை விட்டு வெளியேறிய பிறகு, நான் நிதி நிலை அறிக்கையை அன்றைய தினம் தொடர்ந்து படித்தேன். 5.5.69 அன்று தமிழகச் சட்டமன்றத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா, கழக ஆட்சியில் சிறப்பாக நடைபெற்றது.
அந்த விழாவில் சட்டமன்ற மேலவை முன்னாள் தலைவர்கள் மாணிக்கவேலு, மா.பொ.சி., முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்கள் புலவர் கோவிந்தன், பி.எச்.பாண்டியன் ஆகியோருக்கும், சட்டப்பேரவையில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கும், நான்கு முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பேரவையின் துணைத்தலைவர்களாக இருந்தவர்களுக்கும், அன்றைய பேரவைத் தலைவர், துணைத் தலைவர், பேரவையின் முன்னாள், அந்நாள் செயலாளர்களுக்கும் பொன்விழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பொன்விழா மலரை நான் வெளியிட, அவை முன்னவர், கல்வி அமைச்சர் பேராசிரியர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
டெல்லியில் 6.6.89 அன்று நடைபெற்ற தலைமைக் குழுக்கூட்டத்தில், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றும், அதனால் இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கில் இறந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் வீணாகியுள்ளதாகவும், எனவே இந்தியப் படையை மரியாதையுடன் திரும்பப்பெற வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11.6.89 அன்று திருச்சியில் நிருபர்களிடம் நான் கூறும்போது, இலங்கையில் தனித்தமிழ் ஈழம் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சிதான் என்றும், இல்லையென்றால் இலங்கையிலிருந்து இந்தியப்படை வாபஸ் ஆவதுதான் முறை என்றும் கூறினேன்.
மீண்டும் அதே திருச்சியில் 29.6.89 அன்று நிருபர்களிடம் கூறும்போது இலங்கையில் அமைதியும், ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வும் ஏற்பட முறையான பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தரமான தீர்வு காண முடியுமென்பதுதான் தி.மு.கழகத்தின் கருத்து; அப்படி ஒருநிலை உருவாக வேண்டுமென்பதற்கான முயற்சிகளிலிருந்து நான் பின்வாங்க மாட்டேனென்று கூறினேன். 2.7.89 அன்று கூடிய கழகப் பொதுக்குழுவிலும் இந்தியப் படையைப் படிப்படியாக திரும்பப் பெற வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.7.89 அன்று இலங்கைத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோர் இலங்கையில் அமிர்தலிங்கம் இல்லத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, போலீஸ் காவலர்களையும் மீறி மூன்று பேர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து மூன்று பேரையும் நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். இதிர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் இருவரும் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். சிவசிதம்பரம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பித்துச் செல்ல முயன்ற போது, பாதுகாவலர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் மூவரும் அந்த இடத்திலேயே பலியானார்கள். அமிர்தலிங்கம் அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்த விரும்பி, மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய அரசின் சார்பில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானத்தில் நானோ அல்லது வேறு யாரோ செல்வது குறித்து என்னுடன் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தொலைபேசியில் பேசுவாரென்று கூறப்பட்டது.
ஆனால் அவ்வாறு தகவல் வந்தபடி நட்வர்சிங் என்னோடு தொடர்பு கொள்ளவில்லை என்பதால், கடைசியில் மங்கையர்க்கரசி அம்மையாருக்கு இரங்கல் தந்தியை அனுப்பினேன். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர், உமாமகேஸ்வரன் என்கிற முகுந்தன் 19.7.89 அன்று இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்களின் மறைவு குறித்து சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உரையாற்றினேன்.
29.7.89 முதல் இலங்கையிலிருந்து இந்திய ராணுவம் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும் என்ற இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டறிக்கை விடுத்தன. இலங்கை அரசும் இந்திய அரசும் மோதுதலை தவிர்த்துக் கொண்டதைப் போலத் தமிழீழப் போராளிகளும் மோதுதலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டேன். 1989 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியையும், தென் மாநிலங்களில் வெற்றியையும் பெற்றது.
நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி.சிங் அவர்கள் தலைமையில் அரசு அமைக்க, பி.ஜே.பி., பொது உடமைக்கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க முன் வந்ததால் - பிரதமராக வி.பி.சிங் அவர்களும் துணைப்பிரதமராக தேவிலால் அவர்களும் பதவியேற்றார்கள். அமைச்சரவையில் தி.மு.கழகமும் இடம் பெற வேண்டுமென்று வி.பி.சிங் கூறி, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவராக இருந்த முரசொலி மாறனை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்.
வட ஆர்க்காடு அம்பேத்கர், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத் தொடக்க விழா நிகழ்ச்சிகளிலும், வேறு சில நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டபோது, தங்க செங்கோல், ஒரு மணி மாலை, இரண்டொரு மோதிரங்கள் ஆகியவைகளை எனக்குப் பரிசாக வழங்கினார்கள். அவைகள் அனைத்தையும் 2.10.89 அன்று முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்ப்பதற்காகத் தலைமைச் செயலாளரிடம் வழங்கினேன். அதுபோலவே காமராசர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில், 55 ஊராட்சிகள் சேர்ந்து அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் எனக்கு 55 பவுன் செயின் ஒன்றைப் பரிசாக வழங்கினார்கள்.
கழகத்தின் சார்பில் இந்தப் பரிசு வழங்கப்பட்டதால், இந்தச் செயினைத் தலைமைக் கழகத்திற்கு அளிப்பதாக அறிவித்து, அவ்வாறே வழங்கினேன். 1989 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் இலங்கைப் பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு தீர்வுகாண வேண்டுமென்று விரும்பி, பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கலந்து கொண்டு அவர் தெரிவித்த யோசனையின் பேரில் பல்வேறு போராளிக் குழுவினரையும் தனித்தனியாகச் சந்தித்து, நான், பேராசிரியர், மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரும் உரையாடினோம்.
பேச்சுவார்த்தையின் விவரங்களை 19.12.89 அன்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விளக்கினேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் தர்க்கா வலசை கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் பற்றி 22.1.90 அன்று சட்டப்பேரவையில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கைப் பிரச்சினையில் எப்படியாவது ஒரு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று நான் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் ஈழப் போராளிகள் தமிழகத்திலே ஈடுபட்ட நடவடிக்கைகளைக் காரணமாகக் காட்டி, தி.மு.கழக ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டுமென்ற முயற்சியிலே தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
எனவே லத்தீப் அவர்கள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை எல்லாம் விளக்கினேன். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு வி.பி.சிங் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வருகை தந்தார். அப்போது சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், தமிழக மக்களின் சார்பில் பிரதமரிடம், சென்னை மீனம்பாக்கம் விமான நி
லையத்திற்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பெயர்களைச் சூட்ட வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டதன் பேரில், பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து திரும்பிய போது, முதலமைச்சர் என்ற முறையில் நான் சென்று வரவேற்காதது ஏன் என்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்சும், அ.தி.மு.க.
உறுப்பினர் பொன்னுசாமியும் 30.3.90 அன்று பேரவையில் கேட்டபோது, "இந்திய இராணுவத்தின்பால் எனக்கும் என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிற தி.மு.கழகத்திற்கும், தி.மு.கழக ஆட்சிக்கும் எந்த நேரத்திலும் மரியாதை, மதிப்பு உண்டு என்றும், இலங்கையில் 1,800 இந்திய இராணுவத்தினரும், 5000 தமிழர்களும் பலியாகக் காரணமாக இருந்த இந்திய அரசின் செயலைக் கண்டித்தே நான் அங்குச் செல்லவில்லை" என்பதையும் விளக்கினேன். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் ஈழப் போராளிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டுக் கூறியதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பெரிய அதிகாரிகள் தமிழகம் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போராளிகளின் பயிற்சி முகாம்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு, போராளிகளின் நடமாட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தினர்.
16.5.90 அன்று தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்த நிருபர்கள், விடுதலைப்புலிகள் சார்பில் பாலசிங்கம் உங்களைச் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறதே, உண்மையா என்று கேட்டனர். அதற்கு நான், "பத்திரிகைகளில் அப்படி ஒரு தகவல் வந்திருக்கிறது. எனக்கு எந்தத் தகவலும் இல்லை. மேலும் என்னை விடுதலைப் போராளிகள் சார்பில் சந்திக்க வேண்டுமென்றால் மத்திய அரசின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் சந்திக்க முடியும்" என்று கூறினேன்.
பயிற்சி முகாம் பற்றிக் கேட்டதற்குத் தமிழ்நாட்டில் எந்தப் போராளிக்குழுக்களுக்கும் பயிற்சி முகாம் கிடையாது என்றும், ஆனால் ஒவ்வொரு போராளிக் குழுவிற்கும் தமிழ்நாட்டில் அலுவலகங்கள் இப்பதாகவும் கூறினேன். இலங்கைப் பிரச்சினை முடிவுறாத நிலை குறித்து ஜூன் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரிடம் வலியுறுத்தியதன் தொடர்பாக 19ஆம் தேதி மாலையில் பிரதமர் இல்லத்தில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் கூட்டினார்.
அந்தக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, கேரள மாநில முதல்வர் நாயனார், ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக், அஸ்ஸாம் மாநில முதல்வர் மகந்தா, இமாசலப்பிரதேச முதல்வர் சாந்தகுமார், சிக்கிம் முதல்வர் பண்டாரி, புதுவை முதல்வர் டி.ராமச்சந்திரன், மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி மகமது சயீத், முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோஸ்வாமி, உபேந்திரா, உன்னி கிருஷ்ணன் மற்றும் அத்வானி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், வாஜ்பாய், சிட்டபாசு எம்.பி., சாமர் முகர்ஜி எம்.பி., இந்திரஜித் குப்தா, பரூக்கி ஆகியோர் வந்திருந்தனர்.
இலங்கைப் பிரச்சினை குறித்து அனைத்து விவரங்களையும் அவர்களிடம் விளக்கினேன். அனைவரும் ஆழ்ந்த கவலையோடு பிரச்சினைகளைக் கேட்டனர். நீண்ட நேரம் அவர்களிடம் பேசிவிட்டுத் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பினேன். வந்தது தான் தாமதம் - சென்னையிலிருந்து தொலைபேசியில் கொடுமையான செய்தி, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் பத்மநாபா, மற்றும் பத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகச் செய்தி வந்தது.
இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் வளம் ஏற்பட வேண்டுமென்பதற்காகவும், போராளிக் குழுக்களிடையே ஒற்றுமை ஏற்படவேண்டுமென்பதற்காகவும், இந்தியாவின் முக்கிய தலைவர்களையெல்லாம் சந்தித்து, அவர்களின் ஆதரவைக் கோரி வந்த எனக்கு அந்தச் செய்தி மிகவும் வருத்தத்தை அளித்தது. உடனடியாகத் தமிழகக் காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்று கூறினேன். இரவோடு இரவாக சந்தேகப்பட்ட 350க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் தீவிரவாதிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியிலிருந்து மறுநாள் சென்னை திரும்பியதும், மருத்துவமனைக்கு நேராகச் சென்று கொலையுண்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தினேன். மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தேன். ஆயுதங்களுடனோ, அல்லது ஆயுதங்கள் இல்லாமலோ தமிழகத்தில் எந்தப் போராளிக் குழுவினரும் தங்கவோ, நடமாடவோ அனுமதி கிடையாது என்று அறிவித்தேன்.
இலங்கைப் பிரச்சினை இவ்வாறு இருக்கும் போது 7.8.90 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இருபத்தேழு சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பைச் செய்தார். இதற்காக 21.8.90 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் பாராட்டுத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அவர்கள் ஏற்றதை எதிர்த்து வடமாநிலங்களில் பி.ஜே.பி. கட்சியினர் வெளிப்படையாகவும் காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாகவும் ஆர்ப்பாட்டங்களிலும், கலவரங்களிலும் ஈடுபட்டனர். அ.தி.மு.க. சார்பில் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்குப் பேட்டி அளித்த ஜெயலலிதா மண்டல் குழு அறிக்கை அமலாக்க முடிவு அவசர முடிவு என்றும், அந்த முடிவை எடுப்பதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அதனை வைத்திருக்க வேண்டுமென்றும் கூறினார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முன்வந்த காரணத்தினால் அவரது ஆட்சியைக் கவிழ்க்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு, அவரது ஆட்சியைக் கவிழ்த்தனர். இந்திரா காங்கிரசும், அதன் தலைவர் ராஜீவ் காந்தியும் தங்களது ஆதரவைத் தெரிவித்து சந்திரசேகர் அவர்களைப் புதிய பிரதமராக ஆக்கினார்கள். பிரதமாராக அவர் பதவியிலே இருந்தபோதிலும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ராஜீவ் காந்தியின் விருப்பப்படியேதான் நடந்தன.
ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.சிங் அவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் தி.மு.கழகத்தின் சார்பில் தமிழகம் முழுதும் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பெருமைப்படுத்தினோம். வி.பி.சிங் அவர்களுடன் அந்த நிகழச்சிகளிலே நானும், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், எஸ்.ஆர்.பொம்மை ஆகியோரும் கலந்து கொண்டோம். தமிழகம் முழுதும் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடி, வி.பி.சிங் அவர்களை வரவேற்றனர்.
வி.பி.சிங் அந்த நிகழ்ச்சிகளிலே பேசும்போது "நான் உண்மையிலேயே டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர் பக்கத்திலே இருந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இப்போதும்கூட தன்னுடைய அரசுக்கு ஆபத்து நேரும் என்கிற நிலைமை இருந்தபோதும், அதைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக இலட்சியத்திற்காக என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார்" என்று கூறினார்.
வி.பி.சிங் அவர்களுக்கு அந்த இரண்டு நாட்கள் தி.மு.கழகம் அளித்த வரவேற்பின் காரணமாக மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருந்த பிரதமர் சந்திரசேகர், அவருக்குத் துணையாக இருந்த ராஜீவ் காந்தி, அவரைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்த ஜெயலலிதா ஆகியோருக்குத் தி.மு.கழகத்தின் மீதுள்ள எரிச்சலைத் தீர்த்துக் கொள்ள - அன்றே கழக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதற்கு என்ன காரணம் கூறுவது என்று யோசித்துப் பார்த்து, இறுதியாக ஈழ விடுதலைப் போராளிகள் மீது பழியைப் போட்டு, தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதென்று தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் மூலமாக அறிக்கை தரும்படி கேட்டு, நியாயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற ஆளுநர் பர்னாலா தமிழக அரசின் மீது தவறாக அப்படியொரு அறிக்கையைத் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
ஆளுநர் அறிக்கை தராவிட்டாலும் பரவாயில்லை, இருக்கவே இருக்கிறார் குடியரசுத் தலைவர் என்று கருதிக்கொண்டு அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் மூலமாகத் தமிழக அரசைக் கலைப்பதாக 30.1.91 அன்று பிரகடனம் செய்தார்கள். இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் மக்களிடம் வாக்குப்பெற்று, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வந்த கழக அரசை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணி பிரதமர் வி.பி.சிங் அறிவித்த மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கத்தை ஆதரித்த குற்றத்திற்கரகத் திட்டமிட்டுப் பழி வாங்கினார்கள்.
ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பெரியாரின் அறிவியக்கக் கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு அண்ணாவின் வழிமுறைகளால் அழுத்தமான கட்டிடமாக உருவாகியுள்ள தி.மு.கழக மெனும் இந்த இலட்சிப் பாசறை - சோதனைகள், வேதனைகள், சூழ்ச்சிகள் ஆகியவற்றுக்கிடையே அசையாத இமயமாகவே எழுந்து நின்று; கொள்கை முரசம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிராம் இந்த கழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டுமென்பதே எனக்கு என்றுமே தணியாத ஆசை!
"என்னை முழுதும் அறிந்தவர்கள் தான் கழகத்திலே இருக்கிறார்கள் : அதிலே, முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத்தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உன்டு : அவர் மூலமாக- நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்திருக்கிற காரியங்களைப் போலப் பலமடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு இன்னும் கிடைக்க வேண்டியிருக்கிறது :" - அறிஞர் அண்ணா. 3.6.1968
