நெஞ்சுக்கு நீதி
தேசிய முன்னணியின் தோற்றம் · 289 / 391
73. தேசிய முன்னணியின் தோற்றம் எம். ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகும், ஜானகி அணியினரின் ஆட்சிக் கலைப்புக்குப் பிறகும், அ.தி.மு.க.வின் இரண்டு குழுவினரும் ஒருவரையொருவர் தாக்கி அப்போது கூறிக்கொண்ட வார்த்தைகள் எல்லாம் இலக்கிய (?) தரமிக்கவை! எழுதவே கை கூசுகிறது; எனினும் வரலாற்று உண்மைகளை முழுமையாக மறைக்கக் கூடாதல்லவா; அதனால் வேறு வழியின்றிச் சிலவற்றை மட்டும் குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒருநாள் சிந்திய முத்துக்கள் இவை:- "ஜெயலலிதா எனும் சித்து விளையாட்டுக்காரி அரசியல்வாதியே அல்ல! பொதுவாழ்விலுள்ள சிலருக்குப் பொழுதுபோக்குச் சாதனமே தவிர கொள்கை, குறிக்கோள் இவையெல்லாம் ஜெயலலிதாவிற்கு அறிமுகமற்றவை! அவரது தொழிலுக்கு இவை தேவையுமற்றவை! பால்கனிப் பாவையிடம் பல்வேறு வகைகளிலும் வந்த பணம் குவிந்து கிடக்கிறது. பெரிய இடங்களில் தன்னை விற்கவும் - கீழ்மட்டத்தில் சபலப் புத்திக்காரர்களைப் பணத்தால் அடித்துப் பிடித்து வரவும் அவரால் முடியும்!
கவர்ச்சி காட்டிப் பணம் பறிப்பது, பணத்தைக் காட்டி ஆள் பிடிப்பது அங்கே கைவந்த கலை!" என்றார். இந்தக் காளிமுத்துவைப்பற்றிக் குழந்தைவேலு, எம்.பி., கூறியவை இதோ:- "அரசியல் அநாகரிகத்தின் ஒட்டுமொத்தம் ராபின் மெயின் புகழ் காளிமுத்து அரசியல் விவேகமில்லாமல் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார். யார் நயவஞ்சக நாரீமணி? யார் தமிழ் நாட்டுக் கீலராக இருந்தார்கள் என்பது வாழ்க்கை வரலாறுகளைச் சரியாகப் படித்தவர்களுக்குத் தெரியும்.
தான் கண்ட கணவனை மறந்தவர்கள் எல்லாம் அன்னையாகி விடமுடியாது. எத்தனைப் பேரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்ற விதியைக் தனக்காக உருவாக்கிக் கொண்டு அரசியல் அசிங்கத்தை ஏற்படுத்திவரும் காளிமுத்து தற்போது இங்கிலாந்து கீலருக்கு டீலராக மாறியுள்ளார்."
ஜெயலலிதா 4.2.88 அன்று தன் வீட்டு பால்கனியில் இருந்தவாறு பேசியவை:- "சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல சாராய புள்ளி ஒருவரிடம் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டாமல் இருந்த பலகோடி ரூபாய் பணம் சிக்கியது. அங்கிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை அதிகாரிகள் கை பற்றியபோது அதில், அது இந்த ஜானகி அம்மையாருக்குச் சொந்தமான பணம் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் ஜானகி அம்மை- யாரிடம் விசாரித்தபோது அது தனது பணம் என்ற ஒப்புக் கொண்டார்.
இது முன்னாள் மந்திரிகளான பொன்னையன், முத்துசாமி, வீராசாமி, நல்லுசாமி ஆகிய சாமிகள் எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் பொது மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் இது, ஒன்றுமறியாத சூதுவாது தெரியாத ஜானகி பாப்பாவுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் நடிகை ஜெயந்தி வீட்டை வாங்கினார் ஒன்றும் தெரியாத இந்தப் பாப்பா! இதை நான் புரட்சித்தலைவரிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார்."
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, அவர்தான் வழிகாட்டி, வாழ்க்கைத் துணைத்தலைவர் என்றெல்லாம் கூறிய ஜெயலலிதா 1980-ஆம் ஆண்டு "குமுதம்" இதழுக்கு அளித்த பேட்டியில், "திரு.சோபன்பாபுவுடன் தான் கடந்த ஏழு வருடங்களாக 'கோயிங் ஸ்டெடி' என்றும், அவர் ஒரு நேர்மையான, பண்பான மனிதர் என்பதால், அந்த நட்பு தன் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும், அவரின் நட்பைத் தான் மறைக்க விரும்பவில்லை" என்றும் தெரிவித்திருந்தாரென்று ஒரு ஏடு எடுத்து வெளியிட்டிருந்தது.
மற்றொரு ஏடு, எம்.ஜி.ஆர். சிங்கப்பூர் ஏடான "தமிழ் முரசு"க்கு அளித்த பேட்டியை எடுத்து வெளியிட்டிருந்தது. அது வருமாறு:- நிருபர்:- உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதா நடிக்காதது ஏன்? எம்.ஜி.ஆர்.:- பண்போடு பழகி, திறமையோடு நடித்து எனக்கு ஒத்துழைப்புத் தருபவர்கள்தான் இப்போது என்னோடு நடிக்கின்றார்கள். ஜெயலலிதா ஏன் நடிக்கவில்லை என்பதை இப்போது நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நிருபர்:- சமீபத்தில் சிங்கப்பூருக்கு வந்த ஜெயலலிதா ஜப்பானுக்கு வந்தபோது உங்களைப் பார்க்கவில்லை என்று கூறினார்.
ஆனால் தமிழகத்தில் 'நவமணி' இதழுக்கு அளித்த பேட்டியில் உங்களைப் பார்த்ததாகக் கூறியிருக்கிறார். உண்மையில் உங்களைப் பார்த்தாரா? இல்லையா? எது உண்மை? எம்.ஜி.ஆர்.:- பச்சோந்திகள் ஏன் நேரத்திற்கு நேரம் நிறம் மாறுகின்றன என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அது அதனுடைய இயற்கை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல ஆளுக்கும் இடத்திற்கும் தகுந்தாற்போலப் பதில் சொல்பவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?
அவர்கள் வளர்க்கப்பட்ட வழி அப்படி. 22.1.85 தேதிய "அண்ணா" இதழில் வெளிவந்த மற்றொரு செய்தியையும் அப்போது எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதில் 84-ஆம் ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, "ஜெயலலிதாவை வயதுக்கும் தகுதிக்கும் மீறிய பொறுப்பில் உட்கார வைத்தது என்னுடைய தவறு. அவரை நம்பி நாம் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. 1977-இல் நடந்த தேர்தலிலும், 1980-இல் நடந்த தேர்தலிலும் இந்த அம்மையார் நம்மோடு இல்லை.
என்னைக் கேட்காமலேயே என் பெயராலேயே அறிக்கைகள் விடுவது குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து அறிக்கை விட்டதும் கண்டிக்கத்தக்கது. இவைகள் எதுவும் கட்சியையோ, என்னையோ கலந்து பேசித்தெரிவித்த கருத்துக்கள் இல்லை. இப்படிப் பலமுறை எனக்குத் தெரியாமல் பல இடங்களில் என் பெயரைப் பயன்படுத்துவதை என்னாலே இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. ஜெயலலிதா வேறு கட்சிக்குப் போவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த அம்மையாரைப் பிடித்துக் காரியங்கள் செய்து கொள்ளலாம் என்று நம்பியிருப்பவர்கள் அந்த அம்மையார் பின்னாலே போவது பற்றியும் எனக்குக் கவலையில்லை" என்று கூறியிருந்தார். திண்டுக்கல்லில் நாவலர் பேசும்போது, "சூர்ப்பனகை" என்கிறார்கள். வால்மீகியும் கம்பனும் இராமாயணத்தில் ராமராஜ்யத்துக்குப் பிறகு ஜானகி ராஜ்யம் என்று குறிப்பிடவில்லை. வீணாக இராமாயணத்துக்குள் போக வேண்டாம். இராமன் ஏகபத்தினி விரதன் உங்கள் கூற்றுப்படி பார்த்தால் எம்.ஜி.ஆரை தர்மசங்கடத்தில் கொண்டுவந்துவிடும்" என்றார்.
1988-ஆம் ஆண்டு மே திங்களில் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் ஈரோடு தொகுதியில் நிற்க எண்ணியிருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த முத்துசாமி கேரளாவில் தேயிலைத் தோட்டம் வாங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிப் பேசினார். அப்போது முத்துச்சாமி ஜானகி அம்மையாரின் அணியிலே இருந்தார். எனவே, ஜெயலலிதாவிற்குப் பதிலளிக்கும் வகையில் முத்துச்சாமி 30.5.88 அன்று வெளியிட்ட அறிக்கையில் "புரட்சித்தலைவர் காலத்திலேயே ஜெயலலிதா என்னை ஒழிப்பதற்குப் பல திட்டங்களைத் தீட்டித் தோல்வியடைந்தார்.
புரட்சித் தலைவர் மீதே இலஞ்சக் குற்றச்சாட்டுக் கூறி மத்திய சர்க்காருக்கு அவர் புகார் செய்த உண்மை புரட்சித்தலைவருக்குத் தெரியும். புரட்சித்தலைவர் உயிரோடிருக்கும் போதே அவரைக் களங்கப்படுத்திட ஜெயலலிதா முயற்சி செய்தார். புரட்சித் தலைவர் மருந்து செலவுகளுக்கு நான் ஐந்து கோடி ரூபாய் வசூலித்ததாக பச்சைப் பொய்யாக, அவதூறாகக் கூறியிருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா அணியிலே மிகவும் தீவிரமாக இருந்து ஆதரித்து வந்த நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சில நாட்களுக்குப் பின் ஜெயலலிதாவிடம் வேறுபாடு கொண்டு தனி அணியாக - நால்வர் அணியாகச் செயல்பட முற்பட்டனர். ஜெயலலிதா அணியில் ஏற்பட்ட இந்த உட்கட்சிப் பிரச்சினை குறித்து, 30.6.88 அன்று திடீரென ஜெயலலிதா நாவலர் வீட்டிற்குச் சென்று நாவலரைச் சந்தித்துப் பதினைந்து நிமிடநேரம் உரையாடினார்.
பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா விரைவில் உட்கட்சிப் பிரச்சினைக்குத் தீர்வு சுமூகமாக ஏற்படுமென்று நம்புவதாகத் தெரிவித்தார். இருதரப்பினரிடமும் சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்தவர்களிடம் நாவலர் அணியினர், ஜெயலலிதா தன் குடும்ப நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் அரசு அதிகாரி நடராஜனை அரசியல் ஆலோசகராகப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டதாகவும், அதற்கு ஜெயலலிதா நடராஜனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னிடம் யாரும் இனிமேல் வர வேண்டாமென்று கூறிவிட்டதாகவும் ஏடுகள் செய்தி வெளியிட்டன.
சமரச முயற்சி தோல்வியடைந்ததை அடுத்துத் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடனடியாகக் கட்சியின் கணக்கு விவரங்களைக் காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஜெயலலிதா கட்சியின் கணக்குகளைத் திருநாவுக்கரசிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து கே.ஏ.கிருஷ்ணசாமி ஒரு கூட்டத்தில் பேசும்போது அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட நாவலர் ஒரு பெண்ணால் அவமானப் படுத்தப்பட்டாரே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது என்றும், இந்த அளவிற்கு நாவலர் மேலேயிருந்து கீழே விழுந்துவிட்டார் என்று வருத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
28.7.88 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் நாவலர், அரங்கநாயகம் அணியினர் தன் முதுகில் குத்தி விட்டதாகவும், தான் மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதற்காக இரண்டு மாதம் ஓய்வெடுக்கப் போவதாகவும், அதற்குப் பின்னர்த் தொண்டர்களை நேரில் வந்து சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்- கும் வகையில் 29.7.88 அன்று நாவலர் விடுத்த அறிக்கையில் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்றும், அவரைப் புறக்கணித்து விட்டுக் கட்சியை நடத்துவோம் என்றும், கழகத்தின் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்ட ஜெயலலிதா ஜனநாயக மனப்பான்மை கிஞ்சிற்றும் இல்லாமல் ஜனநாயகப் பண்பாடுகளுக்குக் கடுகளவும் மதிப்புக் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக ஆதிக்க அதிகார மனப்பான்மையோடும் சர்வாதிகாரப் போக்கோடும் நடந்து வருவதாகவும், ஜெயலலிதா, தானேதான் கழகம், தானே எந்தக்குழுவையும் உருவாக்க முடியும், தானே அதைக் கலைக்க முடியும், கழகத்தின் நிதியை தானே தன் பெயரில், தனது பலவகைப்பட்ட பெயர்களில் தானே வைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணிக்கொண்டு ஆணவம், ஆதிக்கம், சர்வாதிகாரம் போன்ற தீய தன்மைகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் என்றும் இன்னும் வேகமாகவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பின் 2.8.88 அன்று நால்வர் அணியினரைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். அதுபற்றி எஸ்.டி.சோமசுந்தரம் கூறும்போது, ஏற்கெனவே நாவலர் எங்கோ விலை போய் விட்டதாகவும் அதனால்தான் சமரசத்திற்கு நாவலர் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாவலர், "எங்களை நீக்க ஜெயலலிதாவிற்கு உரிமை இல்லை; எம்.ஜி.ஆர்.
காலத்திலிருந்து நாங்கள் கட்சியில் இருக்கின்றோம். எங்களுக்குப் பிறகு கட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா எங்களை நீக்க அவருக்கு அதிகாரம் கிடையாது" என்றார். அப்போது அருகே இருந்த திருநாவுக்கரசிடம் ஒரு நிருபர், "ஜெயலலிதாவிடம் கணக்குக் கேட்டீர்களே, என்ன ஆயிற்று?"
என்று கேட்டதற்கு, திருநாவுக்கரசு, "சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்திற்குக் கணக்குக் காட்ட வேண்டுமென நோட்டீஸ் அனுப்பிப் பத்துநாள் கெடு கொடுத்தேன். அதிலிருந்து திசை திருப்பத்தான் எங்களையெல்லாம் நீக்குவதாக அறிவித்திருக்கிறார். கட்சிப் பணத்தை ஜெயலலிதா தனது சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தியுள்ளார். அவர் மீது கையாடல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு தொடரவிருக்கிறேன்" என்றார்.
அரங்கநாயகம், "நாங்கள்தான் ஜெயலலிதாவைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தோம் அவரை நீக்க எங்களுக்கு உரிமை உண்டு. எங்களை நீக்க ஜெயலலிதாவிற்கு அதிகாரம் கிடையாது" என்றார். நாவலர் அணி பிரிந்ததைப் பற்றி ஜெயலலிதா கூறும்போது, "நம்மை விட்டுப்பிரிந்து சென்றவர்கள் பற்றிக் கவலையில்லை. தலைமுடியை சீவும் போது சில ரோமங்கள் உதிர்வது வழக்கம். உதிர்ந்த முடிகளை எடுத்து சீவி, சிங்காரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்றார். இதற்குப் பதிலளிக்க முற்பட்ட நாவலர், "அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரிடமெல்லாம் சர்ட்டிபிகேட் வாங்கிய நான், இந்த எச்சில் இலையிடம் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டிய நிலை வந்து விட்டது" என்றார்.
மேலும் அவர், "திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து கட்சியில் பணியாற்றியவன் நான். 'ஆணையிடு; கட்டுப்படுகிறேன்' என்றார் அண்ணா. அப்படிப்பட்ட என்னை 'மயிர்' என்கிறார் ஜெயலலிதா. மேலும் அவர் பேடி என்று கூறியிருக்கிறார். பேடி என்பதை எப்படி அறிந்தார்? ஆண்மை உள்ளதா இல்லையா என்பதை இந்தப் பெண் சோதனை செய்தாரா? ஜெயலலிதா ஒரு பெண்ணே அல்ல, பெண் என்பதற்குக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாதவர்" என்றார்.
இந்த நால்வர் அணியினர் கோவை மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒன்றாகச் சென்றபோது, ஜெயலலிதா அணியைச் சேர்ந்தவர்கள், இந்த நால்வரின் படத்தைப் போட்டு, அதற்குக் கீழே "படத்தில் கண்ட நான்கு பைத்தியங்கள் ஊருக்குள் வருகிறார்கள், கழகத் தோழர்களே, உஷாராக இருங்கள்" என்று அச்சடித்த சுவரொட்டிகளை நகரமெங்கும் ஒட்டியிருந்தார்கள்.
அரங்கநாயம், "ரோமத்தை உதாரணம் காட்டிப் பேசும் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சியை நடத்தும் தகுதியில்லை; பியூட்டி பார்லர் நடத்துவதற்குத் தான் தகுதியுள்ளது" என்றார். "தி.மு.கழகப் பழமரத்திலும், அ.தி.மு.க. பழமரத்திலும் ஆசைதீரக் கனிகளைத் தின்று கொழுத்தவர்கள் புது மரத்தைத் தேடிச் சென்று விட்டதாக" ஜெயலலிதா கூறியதற்கு, நாவலர், "இது மன நோயால் பெரிதும் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் இளம்பெரும் மூதாட்டி ஜெயலலிதா அம்மையாரின் அதிசய கண்டுபிடிப்பாகும்.
தி.மு.க., அ.தி.மு.க. பழ மரத்தோட்டத்தை நாங்கள் எல்லாம் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா என்னும் பழம் தின்னி வௌவால் தோட்டத்தின் பக்கமே வந்ததே இல்லை. இந்தப் பழம் தின்னி வௌவாலைத் தோட்டத்திலே குடியிருக்க அனுமதிப்பதே தவறு. அனுமதித்தால் தோட்டமும் நாமும் அழிந்து விடுவோம்" என்றார்.
நால்வர் அணியின் பொதுக்குழு 11.9.88 அன்று சென்னையில் நடைபெற்று, தலைவராக நாவலரும், பொதுச்செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே பொதுக்குழுவில் ஜெயலலிதாவைப் பொதுச் செயயலாளர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும் அறிவித்தனர். இதற்குச் சில நாட்களுக்குப் பின் நால்வர் அணிக்குள்ளேயும் கருத்து வேறுபாடு தோன்ற ஆரம்பித்தது. நால்வர் அணி விரைவில் ஜானகியம்மாள் அணியுடன் இணையுமென்று திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் தெரிவிக்க 1.11.88 அன்று நாவலர் விடுத்த அறிக்கையில் ஜானகி அணியுடனோ, ஜெயலலிதா அணியுடனோ இணைந்து தாங்கள் பணியாற்றப் போவதில்லை என்றார்.
2.11.88 அன்று எஸ்.டி. சோமச
ுந்தரம் அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் கோடி கோடியாக இலஞ்சம் வாங்கிச் சம்பாதித்தார்கள்; அவர்கள் மீது மத்திய அரசு விசாரணைக் கமிஷன் அமைத்து அவர்கள் இலஞ்சம் வாங்கிய பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுக்கு நடுரோட்டில் சாட்டையடி தர வேண்டும் என்றார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது இரண்டாவது இடத்தில் இருந்து சலுகைகளை அனுபவித்த நாவலர் 13.11.88 அன்று நெல்லையில் நிருபர்களிடம் பேசும்போது, அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தத் தகுதியுமில்லாத எட்டு சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு எம்.ஜி.ஆர். அனுமதி கொடுத்தார் என்றும், தான் கல்வி அமைச்சராக இருந்திருந்தால் அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கவிட்டிருக்கமாட்டேன் என்றும் கூறினார். (நாவலர் குற்றஞ்சாட்டிய கல்வி அமைச்சர், அப்போது அவரது அணியிலே இருந்த அரங்கநாயகம் தான்) 16.11.88 அன்று நால்வர் அணியிலிருந்த திருநாவுக்கரசு அதிலிருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அவருடைய அணியிலே சேர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவரை அந்த அணியின் பொருளாளராகவும், ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும் ஜெயலலிதா நியமித்தார். திருநாவுக்கரசு ஜெயலலிதா அணியிலே சேர்ந்ததைப்பற்றி நாவலர் விடுத்த அறிக்கையில் தன் தலைமையிலே இயங்கும் அணி எந்தவொரு கட்டத்திலும் அப்படியொரு முடிவை எடுக்காது என்றும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொள்வது பற்றித் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா தன்னை முதல்வராக ஏற்கச் சம்மதிக்கும் கட்சியுடன்தான் சட்டமன்றத் தேர்தலில் கூட்டுச் சேருவேன் என்று 8.12.88 அன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
11.12.88 அன்று தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ஜெயலலிதா அணியுடன் கூட்டு இல்லை என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 15.12.88 அன்று நாவலர் தன் அணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பைத் தற்காலிகமாக அரங்கநாயகம் கவனிப்பார் என்றும் அறிவித்தார். 1988-ஆம் ஆண்டு இந்திய அளவில் ஒருமாற்று ஏற்பாட்டைக் காணவேண்டும் என்பதற்காக டெல்லியில் ஏழு கட்சித் தலைவர்கள் கூடிப்பேசி "தேசிய முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கினோம்.
தி.மு.கழகம், ஜனதா, லோக்தளம், ஜனமோர்ச்சா, காங்கிரஸ் (எஸ்), அஸ்ஸாம் கன பரிஷத், தெலுங்கு தேசம் ஆகிய இந்த ஏழு கட்சிகள் தேசிய முன்னணியில் அங்கம் பெற்றன. 6.8.88 அன்று டெல்லியில் நடைபெற்ற இந்த ஏழுகட்சியின் கூட்டத்திற்கு தி.மு.கழகம் சார்பில் நான், முரசொலி மாறன், ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு, வை.கோபால்சாமி ஆகியோர் சென்றிருந்தோம். இந்தக் கூட்டத்தில் தேசிய முன்னணியின் தலைவராக ஆந்திர முதல்வர் என்.டி.
ராமாராவ் அவர்களும், அமைப்பாளராக வி.பி.சிங். அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் தேசிய முன்னணியின் தொடக்க விழாவினைச் சென்னையில் நடத்தலாம் என்று நான் கூறியதை அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். அதன்படி செப்டம்பர்த் திங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழாவுடன் இணைத்து செப்டம்பர் 17-ஆம் தேதி தேசிய முன்னணி தொடக்கவிழாவைப் பேரணி நடத்தி, பொதுக்கூட்டமும் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.
தேசிய முன்னணியின் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோதுதான் 6.8.88 அன்று காலை என்.டி.ராமாராவ் அவர்கள் ஆந்திரபவனில் காலைச் சிற்றுண்டி அருந்த என்னை அழைத்திருந்தார். அதற்குச் சென்றுவிட்டு, தேசிய முன்னணி குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, திரும்பினால் வரிசையாக பத்திரிகைக்காரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சிறப்புப் பேட்டி தேவையென்று வலியுறுத்தியதால் பகல் 1.30 மணி வரையில் அந்தப் பணிக்கே நேரம் சரியாக இருந்தது.
இடையே டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் வந்து என்னைச் சந்தித்த வண்ணமிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு தேசிய முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக 2.30 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தேன். குளிக்கும்போது தான் ஒரு அதிர்ச்சி. என்.வி.என். சோமுவும், வை. கோபால்சாமியும், நண்பர் சீனுவும் வந்து குளியலறைக் கதவைப் பரபரப்புடன் தட்டினார்கள். பதறிப்போய் கதவைத் திறந்தேன். "அண்ணே, நிலநடுக்கம்!
பூமி அதிர்ச்சி! கட்டிடம் ஆடுகிறது" என்று கூச்சலிட்டபடியே என்னைக் குளியலறையிலிருந்து வேகமாக அழைத்து வந்தனர். ஓட்டலில் 7-வது மாடியில் நாங்கள் இருந்தோம். ஒரு நிமிடத்திற்கு மேலாகத் தொடர்ந்து அந்தக் கட்டிடம் அதிர்ந்து கொண்டிருந்தது. அறையில் உள்ள பொருட்கள் அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தன. ஆனது ஆகட்டுமென்று அமைதியாகவே உடை உடுத்திக் கொண்டு கீழே இறங்கினோம். அஸ்ஸாம் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் வரையில் ஏற்பட்ட அந்த நில நடுக்கம் டெல்லியில் நான் தங்கியிருந்த ஓட்டல் வழியாகத்தான் பயணம் நடத்தியிருக்கிறது.
தேசிய முன்னணிக் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். கூட்டம் நடக்குமிடத்தின் வாசலில் இந்திரா காங்கிரசைச் சேர்ந்த இளைஞர்கள் நூறுபேர் வேகமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடையே நுழைந்து என்.டி.ராமாராவ் என்னைக் கட்டித் தழுவி வரவேற்றுக் கூட்டம் நடக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மூன்று மணி நேரம் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் 11பேரில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டேன்.
தேசிய முன்னணி சார்பில் 71அம்ச செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. தேசிய முன்னணியின் செயலாளர்களில் ஒருவராக முரசொலிமாறனும் பிரச்சாரக்குழு உறுப்பினர்களில் ஒருவராக வை.கோபால்சாமியும், தி.மு.கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டனர். செப்டம்பர் 16-ஆம் தேதியன்று மாலையில் முப்பெரும் விழாவோடு இணைத்து அண்ணா அறிவாலயத்தில் எழுப்பப்பட்ட "கலைஞர் திருமண மண்டபம்", வெற்றிச்செல்வி அன்பழகன் "இலவசக் கண் மருத்துவமனை" கட்டிடங்களின் திறப்பு விழாக்களும், ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்குவிழாவும் நடைபெற்றன.
செப்டம்பர் 17, 1988 - தேசிய முன்னணியின் தொடக்க விழா - சென்னையில் தந்தை பெரியார் பிறந்த தினமும் அதுவென்பதால், அன்று காலையில் பெரியார் சிலைக்கு நானும், ஆந்திர முதல்வர் என்.டி.ஆர்., தேசிய முன்னணியின் அமைப்பாளர் வி.பி.சிங், அஸ்ஸாம் மாநில முதல்வர் மகந்தா ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினோம். அண்ணா அவர்களின் நினைவிடத்தையும் காண- வேண்டுமென்று வி.பி.சிங் தெரிவித்ததன் பேரில், பெரியார் சிலையிலிருந்து நேராக அண்ணா சதுக்கத்திற்கும் அவர்களையெல்லாம் அழைத்துச் சென்றேன்.
அங்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, நேராக அண்ணா அறிவாலயத்திற்கு தேசிய முன்னணியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம். தலைமைக்குழுக் கூட்டம் சிலமணி நேரம் சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறகு அறிவாலயத்திலேயே தேசிய முன்னணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 4 மணி அளவில்தான் தேசிய முன்னணியின் பேரணி அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தலைமைக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அண்ணா சாலை ஸ்தம்பித்து போக்குவரத்துக்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது.
மதிய உணவு அறிவாலயத்திலேயே தலைவர்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடியால், அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கூட வரமுடியாத அளவிற்கு அண்ணா சாலையில் போக்குவரத்து அடைபட்டு விட்ட காரணத்தால், தலைவர்கள் எல்லாம் தங்குமிடத்திற்குச் செல்லாமலேயே பேரணியைப் பார்வையிட, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி அருகே அழகுற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைக்குச் சென்றனர். என்.டி.ஆர்.
மட்டும் வீட்டிற்குச் சென்று விட்டு வரவேண்டுமென்று தெரிவித்திருந்தபடியால், நான் மட்டும் அவரை ஒரு காரிலே அழைத்துக் கொண்டு ஊர்வலத்திற்குள் புகுந்து அவருடைய இல்லம் சென்று திரும்பினோம். காரிலிருந்து என்.டி.ஆர். அந்த எழுச்சியைப் பார்த்துவிட்டு அப்படியே மெய்மறந்து அமர்ந்து விட்டார். தேசிய முன்னணியின் தலைமைக்குழுக் கூட்டம், பேரணியைப் பார்வையிடல், இரவு பொதுக்கூட்டம் ஆகியவற்றில் என்.டி. ராமாராவ், வி.பி.சிங்., தேவிலால், எஸ்.ஆர்.பொம்மை, மகந்தா, பிஜு பட்நாயக், ஐ.கே.குஜ்ரால், பர்னாலா, பீம்சிங், தத்தா சாமந்த், பகுகுணா, உன்னிகிருஷ்ணன், உபேந்திரா, அஜீத்சிங், ஜெயக்குமார் சர்மா, பல்லா, ராம்தன் மற்றும் கழகத்தின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டோம்.
தேசிய முன்னணியின் பேரணியில் சுமார் முப்பது இலட்சம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழகத்தின் அனைத்து ஏடுகளும் சென்னை மாநகரம் கண்டிராத பேரணி என்று எழுதின. எக்ஸ்பிரஸ் ஏடு, அண்ணாசாலை கறுப்பு சிவப்பு வண்ணக் கடலானது என்றும், "கலைஞர் தலைமையிலான தி.மு.க. நடத்திய தேசிய முன்னணியின் துவக்க விழாப் பேரணியே நாட்டின் மிகப் பெரிய பேரணி" என்றும் எழுதியது.
இரவு 8 ஆகியும் ஊர்வலம் முடியக் கூடிய அறிகுறியே தெரியாததால், கூட்டத்திற்கு இனியும் தாமதிப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்து, பாதிப் பேரணியிலேயே கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். தேசிய முன்னணியின் தலைவர்கள் பலரும் தனித்தனியே என்னிடம் வந்து பேரணியின் சிறப்பைப் பற்றி வியந்து கூறிப்பாராட்டடினர். கடற்கரைக் கூட்டத்திலும் தி.மு.கழகத்தைப் பெரிதும் பாராட்டினர். பொதுக் கூட்டத்தில் பேசிய என்.டி.ஆர்.
தேசிய முன்னணியை என்னையே பொறுப்பேற்று நடத்த வேண்டுமென்று உளப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டார். வி.பி.சிங். பேசும்போது, இலங்கையிலே நடைபெறும் படுகொலைக்கு இந்திய அரசுதான் பொறுப்பு என்றும், போர் நிறுத்தத்தை நீடித்து இந்திய இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
