நெஞ்சுக்கு நீதி
மலேசியா உலகத்தமிழ்மாநாடு · 288 / 391
72. மலேசியா உலகத்தமிழ்மாநாடு ஆம் ஆண்டு ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்களில் கோவை மாவட்டச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, 19 ஆம் தேதி ஈரோடு நகரிலும், 20ஆம் தேதி வெள்ளக் கோவிலிலும் நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குமாரபாளையத்தில் தங்கியிருந்தேன். வெள்ளக்கோவில் நிகழ்ச்சிக்காக உரிய அனுமதியைப் பெற்றுக் கழக நண்பர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கழகத்தின் ஏற்பாடுகளைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர் 19ஆம் தேதி இரவு வெள்ளக்கோவிலில் கழகக் கூட்டத்திற்காகப் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினர்.
கூட்டத்திற்காகப் போடப்பட்டிருந்த மேடைக்குத் தீயிட்டனர். அங்குள்ள நிரந்தர மேடையையொட்டிப் போடப்பட்டிருந்த மேடை முழுவதும் எரிந்துவிட்டது. கழகக் கொடிக் கம்பங்களை எல்லாம் வெட்டியெறிந்தனர். என்னுடைய கட்-அவுட்டைக் கீழே தள்ளினர். இதனைத் தடுக்க முன் வந்த கழக உடன்பிறப்புக்களையெல்லாம் வெறிகொண்டு தாக்கிக் காயப்படுத்தினர். அனைத்திற்கும் ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகக் காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்தது.
மேலும் திடீரென்று முன் அனுமதி எதுவுமின்றி வெள்ளக்கோவில் நகரில் போட்டிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து அதனை நடத்தப் போவதாக அறிவித்தனர். காவல் துறையினர் திடீரெனக் கூட்டத்திற்குத் தடை உத்தரவு பிறப்பித்துவிட்டு, குமாரபாளையத்தில் ஜே.கே.கே. சுந்தரம் இல்லத்தில் தங்கியிருந்த என்னைச் சந்தித்துக் கூட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று கூறினர். நான் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் வெள்ளக்கோவில் கழக நண்பர்களுடன் கலந்து கொண்டு கூறுவதாகக் கூறினேன்.
இருந்தாலும் மீண்டும் 5.30 மணிக்குக் காவல்துறையினர் என்னிடம் வந்து என்னைக் கைது செய்திருப்பதாகக் கூறினர். இதற்குள் நான் தங்கியிருந்த இடத்திற்கருகே ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கூடிவிட்டனர். அவர்கள் அனைவரும் நான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வேனுக்கு முன்படுத்து "அடக்குமுறை சர்வாதிகாரம் ஒழிக" என்று முழங்கிக் கொண்டே மறியல் செய்தனர்.
பின்னர் நானே அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிறகு அவர்கள் வழிவிட்டனர். அப்போது என்னுடன் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், சி.டி.தண்டபாணி, ஜே.கே.கே. சுந்தரம், பி.ஏ.சாமிநாதன், மு.கண்ணப்பன், சுப்புலட்சுமி ஜெகதீசன், மா.சுப்ரமணியம் மற்றும் கழகத் தோழர்கள் பலரையும் கைது செய்து சேலம் ஆயுத போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் கைது செய்யப்பட்டபோதிலும், வெள்ளக்கோவிலில் தொடர்ந்து கூட்டத்தை நடத்திட வேண்டுமென்றும், நான் மீண்டும் மே திங்களில் வந்து அங்கே கூட்டத்தில் கலந்து கொள்வதாகச் செய்தி அனுப்பியதன் பேரில் வெள்ளக்கோவிலில் தடையை மீறிக் கழகக் கூட்டம் நடைபெற்றுக் கழகத் தோழர்கள் உரையாற்றினர்.
கூட்டத்திற்கு 25,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்த காரணத்தால் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியாமல், கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும், முக்கிய கழகத் தோழர்களையும் கைது செய்தனர். நான் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், கோவை, சேலம், பெரியார், வேலூர், தர்மபுரி போன்ற இடங்களில் பதற்றநிலை ஏற்பட்டு, சாலை மறியல், கடையடைப்புப் போன்ற நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.
எனவே நேரம் அதிகமாக அதிகமாக இது போன்ற செய்திகள் வரத்தொடங்கவே, ஆட்சியாளர்கள் இரவு 11.30 மணியளவில் எங்களையெல்லாம் விடுதலை செய்வதாக அறிவித்து விடுதலை செய்தனர். வெள்ளக்கோவில் கூட்டத்திற்கு அன்று என்னைச் செல்லவிடாமல் தடுத்துவிட்டபோதிலும், மீண்டும் ஜூலைத் திங்களில் வெள்ளக்கோவில் சென்று கழக வளர்ச்சி நிதியையும் பெற்றுக் கொண்டு நீண்டநேரம் உரையாற்றினேன். 1976 இல் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய நிலையில் ஓய்வான நேரத்தில் திரைப்படத்துறையிலும் மீண்டும் சற்றுக் கவனம் செலுத்திட நேரம் கிடைத்தது.
குறிப்பாக வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி, காலம் பதில் சொல்லும், மாடி வீட்டு ஏழை, தூக்கு மேடை, பாலைவன ரோஜாக்கள், ஒரே ரத்தம், புயல் பாடும் பாட்டு, நீதிக்குத் தண்டனை, பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள், தென்றல் சுடும், நியாயத்தராசு, பொறுத்தது போதும், பாசமழை, காவலுக்குக் கெட்டிக்காரன், வீரன் வேலுத்தம்பி போன்ற திரைப்படங்கள் முக்கியமானவையாகும். முரசொலியில் அன்றாடம் நான் எழுதும் உடன்பிறப்புக் கடிதங்களின் முதல் பத்துத் தொகுதிகளின் வெளியீட்டு விழா 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 12ஆம் நாள் சென்னையில் ஏ.வி.எம்.
ராஜேஸ்வரி மண்டபத்தில், டி.செங்கல்வராயன் தலைமையிலே நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் நூல்களை வெளியிட முதல் பிரதியை எஸ்.நல்லபெருமாள் பெற்றுக் கொண்டார். துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலார், அரங்கண்ணல், எஸ்.எஸ். தென்னரசு, கி.வீரமணி, அப்துல் சமது, காசி ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நான் நன்றியுரையாற்றினேன். அதுபோலவே 26.8.87 அன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நான் கவிதை நடையிலே எழுதிய "சங்கத் தமிழ்" நூல் வெளியீட்டு விழா, டாக்டர் வ.சுப.
மாணிக்கம் தலைமையிலே நடைபெற்றது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் நூலினை வெளியிட டாக்டர் ந.சஞ்சீவி முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.தென்னரசு வரவேற்புரையாற்றிட, பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் சாலமன் பாப்பையா, டாக்டர் தமிழ்க்குடிமகன், மதுரை ஆதீனம், கவியரசு வைரமுத்து, எஸ்.நல்லபெருமாள், வை.கோபால்சாமி, பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் நன்றியுரையாற்றிட, நானும் விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றினேன்.
இதற்கு முன்பு ஜூன் திங்கள் 2ஆம் நாள் சென்னை கலைவாணர் அரங்கில் நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பும் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பும் வெளியிடுவதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் தலைமைக் கழகப் பொறுப்பாளராகக் கழகத்தின் துவக்க நாள் முதற்கொண்டு பணியாற்றிய சண்முகம் திடீரென மறைந்துவிட்ட காரணத்தினால் இரத்துச் செய்யப்பட்டது. தலைமைக்கழகம் சண்முகம் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
இடுகாட்டில் நடந்த இரங்கல் கூட்டத்தில் என் பேச்சை முடிக்கும்போது, "கழகத்தின் வரலாற்றுக் குறிப்புப் புத்தகம் - எழுதப்படாத புத்தகம்தான் தலைமைக்கழகத்தின் சண்முகம். அந்தப் புத்தகத்தை இப்போது எரிக்கப் போகிறோம். இந்த வரலாற்றுக் குறிப்பு நமக்கு எப்படிக் கிடைக்கப்போகிறது என்ற ஆதங்கத்தோடு எரிக்கப்போகிறோம். இயற்கைவிட்ட வழி வேறு இல்லை என்பதால் எரிக்கப் போகிறோம். ஆனால் என்றென்றும் நம்முடைய நெஞ்சத்தில் நிலையாக நிற்கப் போகின்ற சண்முகம் வாழ்க" என்று கூறினேன்.
தலைமைக் கழகப் பொறுப்பாளர் சண்முகம் மறைவைத் தொடர்ந்து அந்த ஆண்டில், அக்டோபர் 6ஆம் தேதியன்று திருச்சி துறையூர் பகுதியில் கழகம் வளர்க்க அரும்பாடுபட்ட அருமை நண்பர் து.ப. அழகமுத்து அவர்களும் அதே திங்கள் 10ஆம் தேதி- யன்று என்னுடைய அருமை உடன்பிறப்புக்களில் ஒருவரான விளநகர் கணேசன் அவர்களும், டிசம்பர் 2ஆம் தேதியன்று மற்றொரு உடன்பிறப்பு ஆலந்தூர் ஆப்ரகாம் அவர்களும் மறைந்தார்கள். 1987ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டாடுவதைப் போல முப்பெரும் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டபோது, அந்த விழாக்களோடு இணைத்து செப்டம்பர் 16ஆம் தேதி தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட "அண்ணா அறிவாலயம்" திறப்பு விழா பொதுச்செயலாளர் பேராசிரியர் தலைமையிலே நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தை நான் திறந்து வைத்தேன். அண்ணாவின் துணைவியார் அண்ணியார் விழாவிலே கலந்து கொண்டார்கள். அண்ணா அறிவாலயம் கட்டுவதற்காக நிதி வசூலித்துத் தந்த கழகத்தின் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் அந்த விழாவில் கேடயங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். அதிக நிதி வசூலித்துத் தந்தவர்கள் என்ற வகையில் முதல் பரிசினைத் தட்டிச் சென்ற சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் டி.ஆர்.பாலுவிற்கு இரண்டரை சவரனில் கணையாழியும், இரண்டாவது பரிசைப் பெற்ற சேலம் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.கே.வடிவேலுவிற்கு ஒன்றரை சவரனில் கணையாழியும்; ஆறுதல் பரிசாக நெல்லை மாவட்டக் கழகத்திற்கு ஒன்னேகால் சவரனில் கணையாழி அந்த மாவட்டக் கழகச் செயலாளர் கோரியவாறு வை.கோபால்சாமிக்கும் என்னால் அணிவிக்கப்பட்டன.
மேலும் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் நிதி வசூலித்துக் கொடுத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கோவை மு.கண்ணப்பன், மதுராந்தகம் ஆறுமுகம், தஞ்சை கோ.சி.மணி, ஈரோடு என்.கே.கே. பெரியசாமி, செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஒரு சவரனில் கணையாழிகள் அணிவிக்கப்பட்டன. அந்த விழாவிலே கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அவர்கள், அவர் கையில் அணிந்திருந்த மோதிரங்களைக் கழற்றி எனக்கு அணிவித்தார். அவற்றைத் திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டேன்.
1987ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 15ஆம் நாள் அன்று மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்று மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரேயொரு நாள் மட்டும் மலேசியா சென்று மாநாட்டிலே கலந்து கொண்டு ஆய்வரங்கினைத் தொடங்கி வைத்து உரையாற்றினேன். 14ஆம் தேதி நள்ளிரவில் புறப்பட்டு, 15ஆம் தேதி விடியற்காலை 6 மணியளவில் நான் சென்ற விமானம் கோலாலம்பூரை அடைந்தது.
டத்தோ சாமுவேல், டத்தோ சுப்பிரமணியம், டத்தோ பத்மநாபன், துணை சபாநாயகர் விஜயேந்திரன் மற்றும் அமைச்சர் பெருமக்கள், பேராசிரியர் மாரிமுத்து போன்ற தமிழரிஞர்கள் ஏறத்தாழ ஐம்பது பேர் விமானத்தின் அருகே வந்து என்னை வரவேற்றார்கள். பரவாயில்லை, விரைவில் தங்கும் விடுதிக்குச் சென்றுவிடலாம் என்றுதான் எண்ணினேன். அடுத்து விமான நிலையத்தின் ஒரு கூடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே நூறு பேர் சூழ்ந்திருந்து என்னை வரவேற்றார்கள்.
அங்கேயே செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அதை முடித்துக் கொண்டு காருக்குப் போகிறோம் என்று நினைத்து வெளியே வந்தபோதுதான் தெரிந்தது; பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்கள் - முதியோர், இளைஞர்கள், தாய்மார்கள் என்றளவில் உணர்ச்சிப் பெருக்கோடு என்னைச் சூழ்ந்து கொண்டு அன்பையும் பாசத்தையும் கொட்டியபோது நான் திக்குமுக்காடிப் போனேன். என்னுடைய முகத்திலே நான் அணிந்திருந்த கண்ணாடி போன இடம் தெரியவில்லை.
நான் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அங்கே போய், என்னை வரவேற்பதற்காக விமான நிலையம் வந்து வாசல் வரை என்னை அழைத்து வந்த ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் இருவரையும் கூட்டத்தினர் அப்படியே தள்ளிக் கொண்டு போய்விட்டனர். என்னை எப்படி காரில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது காவல்துறையினருக்குப் பெரும்பாடாகிவிட்டது. வரவேற்க வந்த அமைச்சர்கள் எல்லாம் தங்களைக் காவல் துறையினராக மாற்றிக் கொண்டு அந்த மனிதக் கடலில் தங்களைத் தெப்பமாக்கி என்னைக் காரில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வரங்கினைத் தொடங்கிவைத்தேன. அன்று மாலையில் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அளித்த விருந்தில் கலந்து கொண்டேன். மலேசிய தொலைக்காட்சிக்குத் தனியாகப் பேட்டியளித்தேன். அவசர அலுவல்கள் காரணமாக மறுநாளே தமிழகத்திற்கு வரவேண்டியிருந்ததால், மலேசியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளின் அழைப்பையேற்று அனைத்திலும் கலந்து கொள்ள இயலாத நிலையைத் தெரிவித்தபோது, அனைத்து அமைப்புகளும் சேர்ந்து அன்று இரவு ஒரேயொரு பொதுக் கூட்டத்திலாவது கலந்து கொள்ள வேண்டுமென்றும், இல்லாவிட்டால் அந்த நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைத் திருப்தி செய்ய இயலாதென்றும் தெரிவித்தார்கள்.
அதன் பேரில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலே கலந்து கொண்டேன். டத்தோ சாமுவேல் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்கள் உரையாற்றிய பிறகு நான் உரையாற்றினேன். அந்தக் கூட்டத்தில் பேசும்போது தான் - "சாவுக்கு அஞ்சாத தமிழன் எங்கே? எங்கே? புறநானூற்றுத் தாய் எங்கே? எங்கே? ஈழத்தில், ஈழத்தில்!"
என்று குறிப்பிட்டேன். மறுநாள் 16ஆம் தேதி காலை விமானத்தில் புறப்பட்டுச் சென்னை திரும்பினேன். அணு ஆயுத ஒழிப்பு சம்பந்தமாக உலகத்தின் இரண்டு முக்கிய வல்லரசு நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் அதிபர்கள் கார்பசேவ் அவர்களும், ரீகன் அவர்களும் 87ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் வாரத்தில் வாஷிங்டன் நகரில் சந்தித்துப் பேசினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாக அது கருதப்பட்டது. 8.12.87 அன்று நள்ளிரவு 12.34 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
அதன்படி 300 மைல் முதல் 3400 மைல் வரை கண்டம் விட்டு கண்டம் சென்ற தாக்கும் ராக்கெட்டுகளை இருநாடுகளும் அழிப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. 21.12.87 அன்று சென்னையில் நேரு சிலை திறப்புவிழாவிலும், மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் வந்தார். எம்.ஜி.ஆர். தலைமையில் ராஜீவ் காந்தி, நேரு சிலையினைத் திறந்து வைத்து உரையாற்றினார். அந்த விழாதான் என் அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
கலந்து கொண்டு உரையாற்றிய அவரது இறுதி விழா என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 23.12.87 அன்று பெரியார் மாவட்டத்தில் பல்வேறு கழக நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று இரவே புறப்பட்டு 'நீலகிரி துரித ரெயில்' மூலமாக சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் 5.45 மணி அளவில் வந்து இறங்கினேன். ஆர்க்காடு வீராசாமியும், டி.ஆர்.பாலுவும் புகைவண்டி நிலையத்திற்கே வந்திருந்தார்கள். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
விடியற்காலை 3.45 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி மிக்க செய்தியைத் தெரிவித்தனர். அரசியலில் எவ்வளவோ கருத்து மாறு பாடுகளுக்கிடையே இருவரும் நடந்து கொண்ட போதிலும், என்னால் அந்தச் செய்தியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இருவரும் என்னைக் கைத்தாங்கலாகத் தான் காருக்கு அழைத்து வந்தனர். 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் என் கண்முன்னால் வரவில்லை.
கோவை சிங்காநல்லூரில் நானும் அவரும் இளம் வயதிலே பழகிய அந்த நாட்கள்தான் என் நிலைவிலே அலைமோதின. புகைவண்டி நிலையத்திலிருந்தே நேராக தியாகராயர் நகரிலே வழியிலே மாலை வாங்கிக் கொண்டு ராமாவரம் சென்றோம். நகரிலே அதற்குள் செய்தி பரவியிருக்கவில்லை. எம்.ஜி.ஆர். இல்லத்தின் வாயிற்புறக் கதவுகள் சாத்தியிருந்தன. பின்னர் நான் வந்த செய்தி அறிந்ததும் முன்னாள் அமைச்சர் மாதவன் என்னருகே வந்து என்னை அழைத்துக் கொண்டு போனார்.
நான் அவ்வாறு
முடிவெடுத்து உடனடியாகச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்காவிட்டால் பின்னர் நான் சென்றிருக்கவே முடியாது. அந்த அளவிற்கு இரண்டு கட்சிகளுக்குமிடையே காழ்ப்புணர்ச்சி பரவியிருந்தது. நேரம் ஆக ஆக, செய்தி பரவத் தொடங்கி ஆங்காங்கு சமூக விரோதிகள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். சென்னையில் அண்ணா சாலையில் பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தினரால் வைக்கப்பட்டிருந்த என்னுடைய சிலையைக் கடப்பாரை கொண்டு இடித்துத் தள்ளினர்.
அதைக் காரணமாக வைத்துக் கொண்டு கழகத் தோழர்கள் எதிர் நடவடிக்கைகளில் இறங்கிவிடக்கூடாது என்பதற்காக அமைதி காத்திட வேண்டுமென்று அறிக்கை விடுத்தேன். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு இரங்கல் செய்தி தெரிவித்ததோடு, கழகத்தின் பொது நிகழ்ச்சிகளை ஒரு வார காலத்திற்கு இரத்துச் செய்து அறிவித்தேன். கழகக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். என்னுடைய சிலையை உடைத்தது பற்றி "செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்தச் சின்னத் தம்பி என் முதுகிலே குத்தவில்லை - நெஞ்சிலேதான் குத்துகிறான்; அதனால் நிம்மதி எனக்கு!"
என்று எழுதினேன். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் என்னுடைய சிலை உடைக்கப்பட்டது பற்றிக் கண்டனம் தெரிவித்ததோடு, மீண்டும் சில நாட்களில் அந்தச் சிலை திரும்ப வைக்கப்படுமென்று அறிவித்திருந்தார். நான் உடனடியாக விடுத்த அறிக்கையில் முதலிலே சிலை வைக்கப்பட்டதே என்னுடைய விருப்பத்திற்கு மாறாகத்தான் என்றும், மீண்டும் அந்தச் சிலையினை வைக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டேன்.
அருமை நண்பர் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தைத் தொலைக் காட்சியில் கடைசிவரையில் பார்த்துக் கொண்டிருந்தேன்; என் கண்- களில் நீர் அருவியெனக் கொட்டியபடி! அனைத்தையும் கடந்த எங்கள் நட்பின் ஆழம் அது! எம்.ஜி.ஆரின் உடல் அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பாகவே அந்தக் கட்சியிலே உட்கட்சி மோதல் ஆரம்பமாகிவிட்டது. 28.12.87 அன்று தற்காலிக முதல்வர் பொறுப்பிலே இருந்த நாவலர், தலைமைச் செயலகத்திலே செயலாளர்களிடம் கூறும்போது, தான் முதலமைச்சர் தேர்தலில் நிற்கப் போவதாகவும், அது முடிந்த முடிவு என்றும் தெரிவித்தார்.
ஆளுநர் குரானாவை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சந்தித்து எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என். ஜானகி அம்மையாருக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், முதல்வர் தேர்தலில் அவர்கள் போட்டியிடப்போவதாகவும் கூறினார். 31.12.87 அன்று ஜானகியம்மாள் விடுத்த அறிக்கையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பெரும்பான்மையோரின் விருப்பத்திற்கிணங்க முதலமைச்சர் பதவியையேற்கச் சம்மதிப்பதாகவும், அதற்கு நாவலர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்..
நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்க நாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றவர்கள் கூடி ஜெயலலிதாவைப் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தனர். ஜானகி அம்மையார் ஆதரவு அணியினர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், முறைப்படி அந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை என்றும் அறிவித்தனர். அ.தி.மு.க.வின் 97 சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி ஜானகி அம்மாளை முதல்வராகத் தேர்ந்தெடுத்து, ஆளுநர் குரானாவிடம் தெரிவித்தார்கள்.
தங்களுக்கு 70 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர். ஆளுநர், ஜானகியம்மாளை அமைச்சரவை அமைக்கும்படி கூறி, நாவலருக்கும் தகவலை நேரில் தெரிவிக்க, அவர் இடைக்கால முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஜானகியம்மாள் தலைமையிலான அமைச்சரவை 6.1.88 அன்று பதவியேற்றது. ஆளுநர் குரானாவிற்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த விஷயத்தில் அவர் முறைகேடாக நடந்து கொண்டார் என்று எழுதியிருந்தார்.
அதற்கு கவர்னர் எழுதிய பதிலில் தவறு எதுவும் நடைபெறவில்லை என்றும், மூன்று வாரத்திற்குள் பேரவையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று ஜானகியம்மையாரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். கி.வீரமணி அவர்கள் 9.1.88 அன்று விடுத்த அறிக்கையில், அமைச்சரவை அமைக்க ஜானகி அம்மையாரை அழைத்தது சரி என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா - நாவலரை ஆதரிக்கும் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வடமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரகசியமாக வைக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆரின் மருத்துவச் செலவிற்காக ஐந்துகோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு ஜானகி அணி சார்பில் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, அது ஜெயலலிதாவின் குழப்ப நிலையைக் காட்டுவதாகவும், ஜெயலலிதாவின் எந்தச் சவாலையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு, அது தினத்தந்தியின் முதல் பக்கத்தில் வெளியானது. அந்த ஒரு மாத காலம் அ.தி.மு.க.வின் இருதரப்பினரும் மாறிமாறி அறிக்கை விட்டுக்கொண்டும், அந்த அலுவலகத்திலே அடித்துக் கொண்டுமிருந்தார்கள்.
25ஆம் தேதியன்று சட்டப்பேரவை கூடுமென்றும், ஆளுநர் உரையாற்றுவார் என்றும், 28ஆம் தேதி பேரவையில் பலப்பரீட்சை நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அவசர அவசரமாக டெல்லி சென்று ராஜீவ்காந்தியைச் சந்தித்துத் தனது அணிக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதன் பிறகு ராஜீவ்காந்தி, பிளவுபடாத அ.தி.மு.க.வை ஆதரிப்போம் என்று கூறிவிட்டார். 28ஆம் தேதி சட்டப் பேரவையில் ஒரு யுத்தமே நடைபெற்றது.
செருப்புகள், சோடா பாட்டில்கள், சரமாரியாக வீசப்பட்டன. பேரவைத் தலைவரான பி.எச்.பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். கடைசி நிமிடத்தில் இந்திரா காங்கிரஸ், ஜானகி அணியினருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து வந்திருந்தபடியால், இந்திரா காங்கிரஸ், ஜெயலலிதா அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபுறமாகவும், ஜானகி அணியினர் ஒருபுறமாகவும் நின்று பேரவையிலே இருந்த அத்தனை மைக்குகளையும் உடைத்து அவற்றையே ஆயுதமாக ஆக்கிக் கொண்டு போரிட்டனர்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, அப்போது நடைபெற்ற அத்தனை ஜனநாயக முறைகேடுகளுக்கும் ஆதரவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காந்தியைப் பார்த்து ஆதரவு கேட்டு வந்த பிறகு அப்படியே மாறிவிட்டது. பேரவையில் இந்தப் பிரச்சினை எழுந்தபோது, அப்போதுதான் காங்கிரஸ் தங்களைக் கைகழுவிவிட்டது என்று தெரிந்த பிறகு, ஜானகி அணியினருக்கு திடீரென்று தி.மு.கழகத்தின் ஞாபகம் வந்து அந்த அணியைச் சேர்ந்த மாதவன், ராஜாராம், ராகவானந்தம், ஆலடி அருணா, ஜேப்பியார், பட்டுராஜன் ஆகியோர் என் இல்லத்திற்கு வந்து ஜானகி அம்மையாரை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
அப்போது நான், ஏற்கனவே கழகத்தின் செயற்குழுக் கூடி, அ.தி.மு.க.வின் இருதரப்பினரையும் ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டபடியால் தன்னிச்சையாக எந்த முடிவையும் அந்த நிலையில் எடுக்க இயலாது என்று கூறினேன். அந்த நேரத்தில் ஜானகி அம்மையாரும் தொலைபேசி மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்களும், வேறு சில தலைவர்களும் என்னைச் சந்தித்து ஜெயலலிதாவிற்கு எதிராகப் பேரவையில் ஜானகி அணியினருக்கு ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களிடமும் நான் "தி.மு.கழகம் அடிக்கடி முடிவைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்கிற இயக்கம் அல்ல. எனவே செயற்குழு முடிவிற்கு மாறாக நான் தனியே அந்த நிலையில் எதுவும் செய்ய இயலாது" என்று கூறினேன். பேரவையில் நடந்த அத்தனைப் போராட்டங்களுக்குமிடையே பேரவைத் தலைவர் 33 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டதாகவும், ஜானகி அம்மையாரின் மீதுள்ள நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார். 24 நாட்கள் பதவியிலிருந்த ஜானகி அம்மையாரின் அமைச்சரவையை மத்திய அரசு 30.1.88 அன்று கலைத்தது.
தமிழகச் சட்டசபையும் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இதுபற்றி என்னை நிருபர்கள் கேட்டபோது, "கிரீடத்தைச் சூட்டிவிட்டு, தலையை வெட்டிவிட்டது போல, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாரத ரத்னா பட்டத்தை வழங்கிவிட்டு அவர் அமைத்த ஆட்சியை ராஜீவ் காந்தி கலைத்துவிட்டார்" என்று கூறினேன்.
நாவலர் நெடுஞ்செழியன் இந்திரா காங்கிரசின் முடிவை வரவேற்றும், ஜெயலலிதா குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வரவேற்பு அளித்தும் அறிக்கைவிட்டனர்.
