நெஞ்சுக்கு நீதி
மீண்டும் இந்த ஆதிக்க எதிர்ப்புப் · 287 / 391
71. மீண்டும் இந்த ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகப் பதுங்கிக் கொண்டிருந்த இந்தித்திணிப்பு முயற்சி 1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அந்த ஆண்டு செப்டம்பர்த் திங்களில் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் "இந்தி வாரம்" கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலகங்களிலே பணியாற்றுவோர் அனைவரும் இந்தியிலேதான் கையெழுத்துப் போடவேண்டுமென்றும் தெரிவித்திருந்ததை எதிர்த்தும், நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதைக் கண்டித்தும் தமிழகம் கிளர்ந்தெழுந்தது.
தி.மு.கழகத்தின் சார்பில் தமிழகம் எங்கும் இந்தி எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. கல்லூரிகளை, பள்ளிகளை மாணவர்கள் புறக்கணித்தனர். ஆங்காங்கு இந்தியை எதிர்த்துக் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. "இந்தி அரக்கி" கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. சட்டக்கல்லூரி மாணவர்கள் ப.கலைராசன், க.உதயகுமார் ஆகியோர் தீக்குளிக்க முயன்று தக்க தருணத்தில் காப்பாற்றப்பட்டனர். இந்தி எதிர்ப்புப் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கழகத்தின் தலைமைச் செயற்குழு 27.9.86 அன்று கூடி, நவம்பர்த் திங்கள் 17ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவு நகலைக் கொளுத்துவது என்றும், நவம்பர் 8,9 ஆகிய நாட்களில் கோவையில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்துவதென்றும் முடிவெடுத்தது.
அந்த நேரத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களை நிருபர்கள் சந்தித்து, "மத்திய அரசின் சுற்றறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன" என்று கேட்டபோது, "தேவையற்றது, தேவை இல்லாதவற்றை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது.
தொலைக்காட்சி மூலமும் இந்தியைத் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தி, தனிப்பெரும்பான்மை மொழியாக இருக்கலாமே தவிர, இந்தியாவின் பெரும்பான்மை மொழி அல்ல; வளர்ச்சி அடைந்த மொழியுமல்ல. இந்தியைத் திணிப்பது தவறு" என்றார். அடுத்து ஒரு நிருபர், "தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
என்று கேட்டதற்கு, "நியாயமான கிளர்ச்சி என்றே கருதுகிறேன். தமிழ்நாடு ஆரம்பம் முதலே இந்தியை எதிர்த்து வருகிறது" என்றார். மேலும் ஒரு நிருபர், "இந்தியை இங்குள்ள முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் எதிர்ப்பதாகச் சொல்கிறாரே?" என்று கேட்டதற்கு, "அவர் ராஜீவ் காந்தியின் பின்னால் போகும் வரையில் இந்தியை எதிர்த்து எப்படிப் போராட முடியும்? இந்தித் திணிப்பை எதிர்த்து என்ன செய்யப் போகிறார் என்று அவரே சொல்லட்டும், பார்ப்போம்" என்றார்.
86ஆம் ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய நாட்களில் கோவையில் இந்தி எதிர்ப்பு மாநாடு மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நவம்பர் 17ஆம் தேதி அரசியல் சட்டமொழிப் பிரிவின் நகல் எரிப்புப் போராட்டம் தொடங்கப்படும் என்று அந்த மாநாட்டில் அறிவித்தேன். நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் போராட்டம் தொடங்கியது. அரசியல் சட்டமொழிப் பிரிவின் நகலை எரிக்கப் புறப்பட்ட பேராசிரியர் அவர்களை வடபழனி சிங்காரவேலர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வழியனுப்பி வைத்து உரையாற்றினேன்.
சென்னை நகரின் ஏழு தொகுதிகள் சார்பில் 17ஆம் தேதி பேராசிரியர் தலைமையில் இந்தியை எதிர்த்து மொழிப் பிரிவின் நகல் எரிக்கப்பட்டது. 12 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட முதல் நாள் போராட்டத்தில் 302 பேர் கைதாகினர். கோவை தொண்டாமுத்தூர் அருகிலுள்ள நரசீபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் நவம்பர் 19ஆம் தேதிய போராட்டத்தில் கலந்துகொள்ளப் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் அதற்குள் முன்கூட்டிக் கைது செய்து விடுவார்களோ என்று கருதி கழகக் கொடியைக் கையில் ஏந்தியபடி தீக்குளித்துத் தன்னுயிரை தியாகம் செய்தார், யாரும் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிக்கை மூலம் மிகவும் உருக்கமாக மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.
19ஆம் தேதி கோவை மாவட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் மு.கண்ணப்பன், மு.ராமநாதன், இரா.மோகன், மு.தமீம், கோமதிராமய்யா, இராசம்மாள் ஆகியோர் தலைமையில் அரசியல் சட்ட நகலை எரித்துவிட்டு சுமார் ஐநூறு பேர் கைதாகினர். 21ஆம் தேதி தென்னார்க்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் வி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் பழனியப்பன், எஸ்.பி.பச்சையப்பன், முத்தையன், வானூர் முத்துவேல் ஆகியோர் தலைமையில் 1,474 பேர் கைதாகினர்.
23ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் எம்.கமலநாதன், ஆர்.சின்னச்சாமி, எம்.பி., முனுசாமி, பி.வி.எஸ்.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 351 பேர் கைதாகினர். மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானவர்கள் அனைவரும் ரிமாண்டு காவலில்தான் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்களே தவிர, அவர்கள் மீது வழக்கு நடைபெற்று நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்புக் கூறவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
24.11.86 அன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் எழுப்பிய பிரச்சினைக்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் அரசியல் சட்ட நகலை எரித்ததைக் காரணமாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர், பொன்னுரங்கம், சு.பாலன், அ.செல்வராசன், பரிதி இளம்வழுதி, இரா.சின்னசாமி, கோவை மு.ராமனாதன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் தகுதியை இழந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். என்னுடைய இந்தத் தீர்ப்பை ஆளுநருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பவிருக்கிறேன்; உரிய முடிவுகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.
அப்போது கழக உறுப்பினர் மதுராந்தகம் ஆறுமுகம் எழுந்து, "அண்ணாவின் படத்தின் கீழ் இருந்து கொண்டு இப்படிப்பட்ட தீர்ப்பினை வழங்குகிறீர்களே, முறைதானா? அண்ணாவே அரசியல் சட்டத்தின் நகலை எரிக்க முயன்றவர்தானே? வேண்டுமானால் இங்குள்ள அண்ணாவின் படத்தை எடுத்துவிட்டு இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்குங்கள்" என்றார்.
மேலும் கழகத்தின் சார்பில் நாஞ்சிலாரும், ரகுமான்கானும் எழுந்து பேசுவதற்கே அனுமதிக்கப்படாததால், அனைத்துக் கழக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். பேரவைத் தலைவர் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அப்துல் சமது, குமரி அனந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்ட போதிலும், பேரவைத் தலைவர் மறுபரிசீலனைக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இந்தத் தீர்ப்புப் பற்றிச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "பேரவைத் தலைவரின் தீர்ப்பு மிகக் கொடுமையான சர்வாதிகாரமாகும்.
அவரது அறிவிப்பு காரணமாக அரசியல் சட்ட 17-வது பிரிவின் நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ளமாட்டார்கள். தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி அறப்போராட்டம் நடைபெறும்" என்று அறிவித்தேன்.
தேர்தல் கமிஷனுக்கும், ஆளுநருக்கும் தனது முடிவை அனுப்பப்போவதாகவும், அவர்கள் உரிய முடிவுகளை மேற்கொள்வார்கள் என்றும் முதல்நாள் பேரவையிலே அறிவித்துவிட்டு, மறுநாள் அந்த உறுப்பினர்களின் இருக்கைகளில் எல்லாம் "வெற்றிடம்" என்று அவசர அவசரமாக எழுதி வைத்து விட்டார்கள்.
அதுபற்றி ரகுமான் கான் எழுந்து விளக்கம் கேட்க, அவருக்குப் பேசவே அனுமதியில்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகளினால் போராட்டம் நின்றுவிடவில்லை. 25ஆம் தேதி காமராஜர் மாவட்டத்தில் தங்கபாண்டியன், பெ.சீனிவாசன், ச.அமுதன் ஆகியோர் தலைமையில் 288 பேரும், 27-11-86 அன்று சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம், செ.கந்தப்பன், ப.தா.முத்து, அர்ஜுனன், சுபாஷ் ஆகியோர் தலைமையில் 1300 பேரும் கைதாகினர்.
29.11.86 அன்று செங்கை அண்ணா மாவட்டத்தில் மதுராந்தகம் ஆறுமுகம், ஆலந்தூர் ஆப்ரகாம், டி.கே.பொன்னுவேலு, டி.நாகரத்தினம், வி.பி.அகிலன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் 1400 பேரும், 1.12.86 அன்று பெரியார் மாவட்டத்தில் என்.கே.கே. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.கணேசமூர்த்தி, சம்பூர்ணம் சாமிநாதன், மா.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 934 பேரும் கைதாகினர். இந்தி பேசாத மக்களின் நியாயமான அச்சத்தைப் போக்கிட, வருங்காலத் தலைமுறையின் நலன்களையும் கட்டிக்காத்திட நேருவின் உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இணைக்கக் கோரி, இந்தி பேசாத மாநிலச் சட்டமன்றங்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுப் பத்து மாநில முதலமைச்சசர்களுக்கு நான் கடிதம் எழுதினேன்.
என்.டி. ராமாராவ், கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, திரிபுரா முதல்வர் நிருபன் சக்ரவர்த்தி ஆகியோர் உடனடியாக ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள். 3.12.96 அன்று பசும்பொன், முகவை மாவட்டங்களில் தா.கிருட்டிணன், சோனையா ஆகியோர் தலைமையில் 334 பேர் கைதாகினர். 9.12.86 அன்று சென்னையில் என் தலைமையிலும் மற்றும் அதே நாளில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, குமரி மாவட்டங்கள் சார்பிலும் அறப்போரில் ஈடுபடுவதென அறிவிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் பேராசிரியர் சென்னை சிறைச்சாலையில் இருந்த நிலையில் நானும் சிறைக்குச் செல்வதால், கழகத்தின் அன்றாடப் பணிகளைக் கவனிக்கப் பொருளாளர் சாதிக் பாட்சா அவர்களைத் தலைவராகவும், நாஞ்சிலாரைத் துணைத் தலைவராகவும், நீலநாராயணனை அமைப்பாளராகவும் கொண்டு ஒரு நிர்வாகப் பணிக் குழுவை அறிவித்தேன். 9ஆம் தேதியன்று இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து - இந்தி ஆதிக்க வாசகங்களைக் கொளுத்தியதற்காக நான், ஆர்க்காடு வீராசாமி, மைனர் மோசஸ், எஸ்.பி.சற்குணம், ஆயிரம் விளக்கு உசேன், நாஞ்சில் கென்னடி ஆகியோர் சென்னையிலும், தஞ்சையில் மன்னை கோ.சி.மணி, நாகூர் அனீபா ஆகியோர் தலைமையிலும், திருச்சியில் அன்பில் தர்மலிங்கம், எஸ்.கே.வடிவேலு, பொற்சொல்லி இள முருகு ஆகியோர் தலைமையிலும், புதுக்கோட்டையில் பெரியண்ணன் தலைமையிலும், நெல்லையில் வை.கோபால்சாமி எம்.பி., தம்பிதுரை ஆகியோர் தலைமையிலும் ஆயிரக்கணக்கிலே சட்டத்தின் நகலை எரித்துக் கைதாகினார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கடலூர் சிறையிலிருந்த கலியபெருமாள், நான் கைதாகிவிட்டேன் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் தன் உயிரை விட்டார். அவருடைய மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சென்னைச் சிறைச்சாலையில் நான், பேராசிரியரர் உட்படக் கழகத் தோழர்கள் 2000 பேர் 12.12.86 அன்று உண்ணாவிரதம் இருந்தோம். மேலும் என்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி, போடியில் முருகன், திருச்சி மாவட்டம் அல்லூர் காளிமுத்து இருவரும் தீக்குளித்து மாண்டனர்.
"கலைஞரை விடுதலை செய்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு நீடாமங்கலம் கோவிந்தராசும், மற்றும் குளித்தலையைச் சேர்ந்த சீனிவாசனும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். இதுதவிர, கூடுவாஞ்சேரி சுப்பிரமணியம், சேலம் அருணாசலம், மருதூர் மூக்கன், சென்னையில் கலைஞர்பித்தன் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்தனர். இந்தியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிப்பதாக அறிவித்த பேரவைத் தலைவரின் முடிவைக் கண்டித்து, டிசம்பர் 22ஆம் தேதி தமிழகச் சட்டமன்றம் முன்பு தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்ட அ.தி.மு.க. ஆட்சியினர் மொழிப் பிரச்சினையில் அண்ணா நடத்திய போராட்டத்தையே மறந்துவிட்டு, தி.மு.கழகத்தைப் பழிவாங்கத் துடித்தனர். இதோ அண்ணா காலத்துப் போராட்ட நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறேன். 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13ஆம் தேதி சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் திறப்பாளர் இனமானப் பேராசிரியர் அன்பழகன், அங்கே நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானம் - இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சி மொழி பற்றிய 17வது நகலை எரித்திட வேண்டும் - என்பதுதான்!
அந்தத் தீர்மானத்தின் படி 17.11.63 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களே சென்னையில் அரசியல் சட்டப்பிரிவின் நகலை எரித்து அறப்போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காகக் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு வந்த அண்ணா அமைந்தகரையில் நுழைந்தவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதுபோலவே 16.12.63 அன்று மதுரையில் மதுரை முத்துத் தலைமையில் சட்டப்பிரிவின் நகல் எரிப்புப் போராட்டம், அதற்குப் பார்வையாளனாகச் சென்றிருந்த என்னையும், என்.வி.நடராசன், மன்னை ஆகியோரையும் கைது செய்து வழக்குப் போட்டார்கள்.
அண்ணா அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு ஆறுமாதம் தண்டனை தரப்பட்டு 13.6.64 வரை அண்ணா சிறையிலிருந்தார். 18.11.63 அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அண்ணா கைது பற்றி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து, காரசாரமாகப் பேசினார். முதலமைச்சர் பக்தவத்சலம் அளித்த பதிலில் சமாதானமடையாமல் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தி.மு.கழகம் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது.
22.12.86 அன்று பேரவையில் - இந்தி ஆதிக்க எதிர்ப்புச் சட்ட நகல் எரிப்பு அறப்போரில் பங்கேற்றுச் சிறை சென்றிருந்த பத்துக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறித்துச் சட்டமன்றத்திலே ஒரு தீர்மானம் நாவலர் நெடுஞ்செழியனால் முன்மொழியப்பட்டது. ஏற்கனவே, ஏழு கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை நீக்கியதாக அவைத்தலைவர் அறிவித்த உத்தரவு போதாது என்பதற்காகவே இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிவதாக நாவலர் தெரிவித்தார்.
பதவியை விட்டு நீக்கிய தீர்மானத்தை விட அதனை முன்மொழிந்தது நாவலர் நெடுஞ்செழியன் என்பதை அறிந்துதான் சிறையிலிருந்து நாங்கள் மிக அதிகமாக வருந்தினோம். என் செய்வது; சில மனிதர்களைப் பதவி ஆசை எதையும் செய்யவைக்கிறது. இதே நாவலர் 21.1.64 அன்று, அண்ணா அரசியல் சட்ட நகல் எரிப்புப் போரில் ஈடுபட்டுச் சிறையிலிருந்தபோது, சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் "அரசியல் சட்டத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கழகத்தைச் சேர்ந்த யாருக்குமில்லை.
அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டமும், மறியல் போராட்டமும் தி.மு.கழகத்தால் நடத்தப்படுகின்றன என்றால் இந்தித் திணிப்பை எதிர்ப்பதன் அறிகுறியாகத்தானே தவிர, அரசியல் சட்டத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் இந்த மன்றத்தில் வீற்றிருக்கிறோம்" என்று ஆரம்பித்து, அந்தப் போராட்டத்தின் அவசியம் பற்றியும் முக்கியத்துவம் பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினார்.
அதே நாவலர், அதே தி.மு.கழகம் நடத்திய அதே மாதிரியான அறப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, மக்கள் தேர்ந்தெடுத்த பேராசிரியர் உள்ளிட்ட பத்துக் கழகச் சட்ட
மன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறிப்பதற்காகத் தீர் மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இந்தித் திணிப்புக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் ஆட்சியிலே கூட எடுக்கப்படாத அந்த நடவடிக்கை அண்ணாவின் பெயரிலே கட்சியை வைத்துக் கொண்டிருப்பவர்களின் ஆட்சியிலே எடுக்கப்பட்டதுதான் விந்தையிலும் விந்தை. மேலும் இதே சட்ட நகல் எரிப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டவர்தான் வை.கோபால்சாமி எம்.பி.,.
தமிழகத்திலே கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன குற்றம் செய்ததாகக் கூறிப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்களோ, அதே செயலைச் செய்தவர்தான் வை.கோபால்சாமியும்! ஆனால் அவர் அந்தச் செயலிலே ஈடுபட்டார் என்பதற்காக மாநிலங்களவையில் மத்திய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்தே எந்த அளவிற்கு அ.தி.மு.க. காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபற்றி ஆனந்தவிகடன் 28.12.86 தேதிய இதழ் தலையங்கத்தில், "சட்ட எரிப்புக் குறித்து நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று காத்திருக்காமல் இத்தனைக் குழப்பங்கள் செய்திருப்பதைப் பார்த்தால் அரசியல் சட்டத்தை மதிக்கும் உணர்வைவிட, பழிவாங்கும் அவசர உணர்ச்சியே அரசிடம் தெரிகிறது; ஜனநாயகத்தின் முகத்தில் சேறு வீசப்பட்டிருக்கிறது" என்று எழுதியது.
23.12.86 ஆம் தேதியோடு எனக்குக் காவல் கெடு முடிவடைந்ததால், அன்று எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என் வருகைக்காகக் காத்திருந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற கழகத் தோழர் தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தார். மீண்டும் 26.12.86 அன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அப்போது நான் தந்த வாக்கு மூலத்தில் "கழனியில் களைபறிக்கும் விவசாயி, கழனியை அவமதித்தவன் ஆகமாட்டான். ஐந்து கோடி தமிழர்களின் எதிர்காலத்தில் இருள் சூழாதிருக்கவே போராடினோம். எனவே நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று முடிவாகக் கூறினேன்.
இதற்கிடையே இந்தப் போராட்டம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த இளைஞர் புகழேந்தியும், உளுந்தூர்பேட்டையில் பன்னீர்செல்வம் என்ற இளைஞரும், மேலூரில் ஜெகஜீவன்ராம் என்ற இளைஞரும் தீக்குளித்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி இறந்தனர். 30.1.87 அன்று எனக்குப் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றேன். பேராசிரியருக்கும், அவரது அணியினருக்கும் ஒன்பது வார தண்டனை அளிக்கப்பட்டதால், அவர்கள் அதற்கு முன்பாகவே ஒன்பது வாரம் சிறையிலே இருந்துவிட்ட காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நான் சிறைக்குச் சென்றதும், கைதிகளுக்கு வழங்கப்படும் சிறை உடையைக் கொடுத்து என்னை அணிந்து கொள்ளக் கூறினர். அதுகண்டு என்னுடன் கைதாகிச் சிறையில் இருந்த ஆர்க்காடு வீராசாமியும் மற்றவர்களும் கண் கலங்கினர். பதைத்தனர். சிறை அதிகாரிகளிடம் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை நான் சமாதானப்படுத்திவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியினருக்கு இப்படியொரு விருப்பம் இருக்கின்றது போலும்; என் தாய்மொழியைக் காக்க, இந்தியை எதிர்த்து நான் போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்திருக்கும் போது, சிறை ஆடைகளை அணிவதும் எனக்குக் கிடைத்த பெருமைதான், என்று அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டேன்.
மாலை நேரத்தில் சிறைச்சாலைக்குள்ளே வளாகத்தில் ஓய்வாக நடக்கக் கூடாது என்று கூறி, அதற்கும் தடை விதித்தனர். அதையும் ஏற்றுக்கொண்டேன். கடுங்காவல், கைதி உடை என்று கேள்விப்பட்டு அருப்புக் கோட்டை மாரியப்பன், சத்திரப்பட்டி வேதமாணிக்கம், பால சமுத்திரம் அப்துல் ரசாக், முள்ளிப்பட்டு ஏ.நடராசன் ஆகியோர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். நாங்கள் விடுதலை ஆவதற்குப் பதினாறு நாட்கள் இருக்கும்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அவசர அவசரமாக ஒரு ஆணை பிறப்பித்து, என்னையும், மற்றும் பல்வேறு சிறைகளில் இந்தப் போராட்டம் காரணமாகச் சிறையிலிருந்தவர்களையும் விடுதலை செய்தார். 13.2.87 அன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் மரணமடைந்தார். அவரது இல்லத்திற்குச் சென்று கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். கிண்டி காந்தி மண்டபத்துக்கும் காமராஜர் நினைவாலயத்திற்கும் இடையே அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சட்டமன்றத்தில் அதுவரை ஒன்பதாவது இடத்தில் இருந்த முரசொலி நிருபரின் இருக்கையைத் தேவையில்லாமல் 19வது இடத்திற்கு பேரவைத் தலைவர் மாற்றினார். அதுபோலவே முன்வரிசையிலே அமர்ந்திருந்த கழக உறுப்பினர் ரகுமான்கானைப் பின் வரிசையிலே இடம் ஒதுக்கி அங்கே அமரச்செய்தார். ஆனந்தவிகடன் ஏட்டின் அட்டையில் ஒரு கார்ட்டூன்! "மேடையிலே இருக்கிறவர்களில் யாரு எம்.எல்.ஏ., யாரு மந்திரி?"
என்று ஒருவர் கேட்க, அடுத்தவர் "ஜேப்படி திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடி திருடன் மாதிரி இருக்கிறவர் மந்திரி" என்று கூறுவது போல வரையப்பட்டிருந்தது. யாரையும் தனிப்பட்ட முறையிலோ, எந்த மாநிலத்தவர் என்றோ சித்திரிக்கப்படவில்லை. உடனே சட்டப்பேரவைத் தலைவர், "ஆனந்தவிகடன் இதழ் அடுத்த வாரமே வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லா விட்டால் உரிமைக்குழு விசாரணை இல்லாமலேயே தண்ட னையைத் தீர்மானிக்கும்" என்றார்.
அதற்கு ஆனந்தவிகடன் ஆசிரியர் பால சுப்பிரமணியம், "கொலைக்காரனுக்குக் கூட விளக்கம் தர அனுமதி அளிக்கிறது சட்டம்; ஆனால் விளக்கம் கேட்காமலே மன்னிப்புக் கேள் என்று கூறுவது நியாயமல்ல. ஆனந்த விகடன் எந்தக் காரணம் கொண்டும் மன்னிப்புக் கேட்காது" என்று கூறிவிட்டார்.
4.4.87 அன்று பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, பேரவையில் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்மானம் நிறைவேற்றி, அவசர அவசரமாக அவரைக் கைது செய்து சிறையிலே அடைத்து விட்டார்கள். திருவண்ணாமலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நான் சென்று கொண்டிருந்தபோது, வானொலியில் பாலசுப்பிரமணியத்தின் கைது செய்தியைக் கேட்டு, காரை நேராக திண்டிவனம் விடச்சொல்லி, அங்கிருந்தே ஒரு அறிக்கை எழுதித் தொலைபேசி மூலம் ஏடுகளுக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனந்தவிகடன் ஆசிரியரைக் கைது செய்தது தவறு என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 6.4.87 அன்று பேரவையைத் தி.மு.கழகம் புறக்கணிக்கும் என்றும் அந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தேன். தேசிய பத்திரிகையாளர் சங்கம், அனைத்திந்திய அமைப்புகள், சென்னை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பாகவும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு, அவர்களும் 6ஆம் தேதி பேரவையைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
4ஆம் தேதி மாலையில் கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியம் திடீரென 6ஆம் தேதியன்று அரசினரால் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுத்த அறிக்கையில், தன் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஆட்சியினரிடம் தான் எதிர்பார்ப்பது பெருந்தன்மையை அல்ல என்றும், எழுத்துரிமையைத்தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அவர் விடுதலை செய்யப்பட்டதால், அவருக்குத் தண்டனை அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று தி.மு.
கழகமும் மற்ற எதிர்க்கட்சிகளும் கேட்டபோது, பேரவைத் தலைவர் மறுத்துவிட்டபடியால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்புச் செய்தன. (ஆனந்தவிகடன் ஆசிரியர் பால சுப்பிரமணியம் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்று 1995 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில்தான், சென்னை உயர்நீதிமன்றம்; ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் அடையாளப் பூர்வமாகத் தமிழக அரசு சார்பிலே தரவேண்டுமென்று தீர்ப்பளித்து, அதன்படி ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது.)
