உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இலங்கை சென்ற இந்திய
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இலங்கை சென்ற இந்திய · 286 / 391

70. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை! ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச்த் திங்களில் இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள் அதிகரித்தவண்ணமிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை இராணுவம் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும் வயதானவர்களையும் குழந்தைகளையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்தனர்.

தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டேயிருந்ததால், 26-3-96 அன்று சென்னையில் 'டெசோ'வின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மே திங்கள் 4ஆம் நாள் மதுரை மாநகரில் டெசோ சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் கலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் இந்தியாவிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி, மத்திய அரசு தனது மெத்தனத்திலிருந்து விடுபட்டுத் தக்க தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டினையொட்டி அன்று பிற்பகலில் அனைத்திந்திய தலைவர்களும் பல்வேறு தமிழீழ இயக்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளத் தக்கவகையில் ஒரு கலந்துரையாடல் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு 1-5-86 அன்று இலங்கை வானொலியிலும், 2-5-86 அன்று சில ஏடுகளும் - இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கமும், டெலோ இயக்கமும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாகவும், அதில் டெலோ இயக்கத் தலைவரான சிறீ சபாரத்தினத்தை விடுதலைப்புலி இயக்கத்தினர் கைது செய்து கொண்டுபோய் விட்டதாகவும் செய்தி வந்து, அந்தச் செய்தியை 'டெலோ' இயக்கத்தினரே மறுத்து அறிக்கை விடுத்தனர்.

மதுரையில் செய்தியாளர்கள் இதுபற்றி என்னிடம் கேட்டபோது - இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதற்குத் தமிழ்நாட்டிலே உள்ள அரசியல் தலைவர்கள் மாத்திரமல்லாமல், இந்திய நாடு முழுமையுமுள்ள பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த முக்கியமான நேரத்தில் இப்படியொரு சம்பவம் போராளிகளுக்குள் நடைபெற்றிருக்குமானால் அது விரும்பத்தக்கதல்ல. யார் முதலில் செய்தார்கள் என்பது இப்போது முக்கியமல்ல.

போராளிகள் இயக்கத்தில் இரண்டு பெரும் பிரிவுகளான புலிகள் இயக்கமும், டெலோ இயக்கமும் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள முயற்சி செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய பிரச்சினைக்குச் சுமூக தீர்வு காண ஒருமுகமான ஆதரவு திரளுகின்ற நேரத்தில் இந்த நல்ல வாய்ப்பை அவர்களே இழந்து விடுகின்ற குற்றத்திற்கு ஆளாவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினேன்.

இதே பிரச்சினை பற்றி சென்னையில் வாஜ்பாயி அவர்களை நிருபர்பள் கேட்டபோது, "ஈழ விடுதலைப் போராளிகளே, உங்கள் மோதலை நிறுத்துங்கள், ஒன்றுபடுங்கள்; தனித் தமிழ் ஈழம் காண என்ன வழி என்பதை முடிவு செய்யுங்கள்" என்றார். 4-5-86 அன்று மதுரையில் பிற்பகல் 2.30 மணி அளவில் கருத்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டி.யு.எல்.எஸ். சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.ஈ.எல்.எப்.

சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராச பெருமாள், பிளாட் சார்பாக வாசு தேவர் ஆகியோர் பேசினார்கள். அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களான என்.டி.ராமாராவ், அடல் பிகாரி வாஜ்பாயி, எச்.என்.பகுகுணா, ராம்வாலியா, எம்.பி.உபேந்திரா, எம்.பி.அப்துல் ரஷீத் காபூல், எம்.பி., ஜஸ்வந்த் சிங், எம்.பி., கர்நாடக உள்துறை அமைச்சர் ராச்சையா, கர்நாடக அரசு கொறடா பெருமாள் ஆகியோரும் மற்றும் தமிழகத் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, நெடுமாறன், அய்யணன் அம்பலம், அப்துல் சமத் ஆகியோரும் மற்றும் முரசொலி மாறன், எம்.பி., ஆர்க்காடு வீராசாமி, செ.கந்தப்பன், வை.கோபால்சாமி எம்.பி., காவேரிமணியம் அக்கினிராஜ், பொன் முத்து ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டார்.

என்.டி.ராமாராவ் அவர்களும், வாஜ்பாயி அவர்களும் எடுத்துத் தெரிவித்த கருத்துக்களையொட்டி எட்டுப் பிரிவாக இயங்கும் தமிழீழத் தலைவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து அந்தக் கூட்டத்தில் உறுதி அளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன். ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் அவர்கள் இனிமேல் ஒன்றுபட்டுச் செயல்படுவதாக உறுதி அளித்தார்கள். அன்று மாலையில் மதுரை ரேஸ் கோர்ஸ் திடலில் நடைபெற்ற மாநாட்டில் பல இலட்சம் தமிழ் மக்கள் திரண்டு ஈழத் தமிழர்களுக்காக டெசோ சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியைப் பாராட்டி ஆதரவு தெரிவித்தனர்.

என்.டி.ராமாராவ் மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். டெசோ அமைப்பின் சார்பில் மதுரையிலே மாநாடு என்பதைக் கேள்விப்பட்ட மத்திய அரசு இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது. தமிழக அரசோ திடீரென அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியது. மதுரையிலே வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு பகுகுணா கூறும் போது, "1956 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் குருஷேவுக்கும் புல்கானினுக்கும் கல்கத்தாவில் ஒரு வரவேற்புத் தரப்பட்டபோது நான் பார்த்த கூட்டத்திற்குப் பிறகு அதே அளவு கூட்டத்தை இன்றைக்குத்தான் மதுரையில் பார்த்தேன்" என்றார்.

5-5-86 தேதிய எக்ஸ்பிரஸ் ஏடு, "மதுரை நகர வரலாற்றில் அண்மையில் இப்படியொரு பெரிய மாநாடு நடந்ததில்லை. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினரும், தொண்டர்களும் படாதபாடுபட்டனர்" என்று எழுதியது.

'டெசோ' மாநாட்டின் வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. 6-5-86 அன்று, டெலோ தலைவர் சபாரத்தினமும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொண்டவில் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டதாக இலங்கையிலிருந்து ஒரு செய்தி வந்து - அது பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா என்ற வேதனை கலந்த உணர்வோடு விசாரிக்கக் கூறினேன். அந்தச் செய்தி உண்மைதான் என்று கூறப்பட்டது. சிறீ சபாரத்தினம் விடுதலைப்புலி இயக்கத்தினரோடு நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்பதை எல்.டி.டி.இ.

ஆலோசகர் பாலசிங்கம் சென்னையிலே தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி 18-5-86 அன்று பெரியார் திடலில் டெலோ ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் பண்பாட்டு இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சபாரத்தினம் உருவப் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன். பேசும்போது போராளி இயக்கங்கள் இனியாவது ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை இரத்துச் செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31-5-86 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்குக் கண்டன ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் என்னுடைய பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.

31-5-86 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், இரயில், போக்குவரத்து உட்பட அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. 3-6-86 அன்று காலை 8.30 மணி முதல் அன்று இரவு வரையில் கலைவாணர் அரங்கில் என்னிடம் வைக்கப்பட்ட உண்டியலில் பிறந்த நாள் மாலை அணிவிப்பதற்குப் பதிலாகப் போடப்பட்ட நிதி இரண்டு இலட்சத்து எழுத்தைந்தாயிரம் ரூபாயாகும்.

இந்த நிதியினைப் பல்வேறு போராளி இயக்கங்களுக்கு எவ்வாறு பிரித்தளிப்பது என்பது பற்றி மறுநாள் 4ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் கலந்து பேசி முடிவெடுத்தோம். அதன்படி அந்த நிதியில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மறைந்த சபாரத்தினம் குடும்ப நிதியாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், டெலோ இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், ஈழ மக்கள் புரட்சிகர அமைப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும் அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

4ஆம் தேதி மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இறுதியாக நான் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச்சை முடிப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் மேடைக்கு அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு வெடி குண்டு வெடித்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதனை முதலில் வாணவேடிக்கை என நினைத்தனர். பின்னர்தான் அது வெடிகுண்டு என்று தெரிந்தது. வெடிகுண்டு வெடித்ததன் காரணமாக அங்கிருந்த படகு ஒன்று சிதறிய போதிலும் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் தப்பினோம்.

ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து 1987ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இறுதியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் அதிலே கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர்கள் அதிகமாக உள்ள வடக்கு கிழக்கு மாநிலங்களை ஒரே நிர்வாக அமைப்பின்கீழ்க் கொண்டுவருவதென்றும் அங்கே மூன்று மாதத்தில் தேர்தல் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இந்தியாவிலிருந்து அமைதிப்படை அனுப்பப்பட்டு; அப்படையினர் இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த உதவுவார்கள் என்றும் கூறப்பட்டது. கொழும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றுவிட்டுத் திரும்ப இந்தியா புறப்பட்டபோது நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைப் பார்வையிடலின் போது, அணிவகுப்பில் நின்று கொண்டிருந்த இலங்கை இராணுவ வீரன் ஒருவன் தன் கையிலிருந்த துப்பாக்கியின் கட்டையினால் ராஜீவ் காந்தியின் தலையில் ஓங்கி அடித்தான்.

ராஜீவ் காந்தி சட்டென்று நகர்ந்து கொண்டதால், துப்பாக்கிக் கட்டையின் அடி அவரது தோளில் விழுந்தது. உடனே அவருக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்த இராணுவ அதிகாரி துப்பாக்கியால் தாக்கியவனைப் பிடித்துக் கொண்டார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்துகொண்டு ராஜீவ் காந்தி இந்தியா திரும்பினார். கொழும்பு ஒப்பந்தம் பற்றித் தி.மு.கழகம் கருத்துக் கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், களத்தில் நிற்கின்ற விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளாத ஒப்பந்தம் முழுமையாகாது என்றும் தெரிவித்தது.

ஆனால் கொழும்பு ஒப்பந்தத்தை அ.தி.மு.க. வரவேற்றதோடு, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படவிருந்த எம்.ஜி.ஆர். தனது பயணத்தைச் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு சென்னையிலே ராஜீவ் காந்திக்கு நடைபெற்ற கொழும் ஒப்பந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பாராட்டினார். இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் அங்கே உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். மேலும் பதினைந்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தின் தோழர்கள் பிடிப்பட்ட காரணத்தில் சயனைட் அருந்தி உயிரை விட்டனர்.

ஒரு சில நாட்களிலேயே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கச் சென்ற இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கியது. சிங்களவருக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் என்ற நிலைமாறி, இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் என்ற அளவிற்கு ஆனது. இருதரப்பிலும் பலத்த சேதமும் ஏற்பட்டது. 15.10.87 அன்று தளபதி கிட்டு சென்னையில் தங்கியிருந்த வீட்டிலேயே தமிழகக் காவல் துறையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அதுபற்றி விசாரிக்கச் சென்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் வை.கோபால்சாமியும் கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன். இலங்கையில் இந்திய இராணுவம் தமிழர்களைக் கொல்வதை நிறுத்த உடனடியாக முயற்சி மேற்கொள்ள உதவிட வேண்டுமென்று கேட்டு எட்டு மாநில முதலமைச்சர்களுக்கும், மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் தந்திகளை அனுப்பினேன்.

17-10-87 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 22-10-87 அன்று இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்னுடைய தலைமையில் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ராமாராவ், பொதுச்செயலாளர் பேராசிரியர், சுப்ரமணியசுவாமி, உபேந்திரா, எம்.பி., அஜீத் சிங் எம்.பி., பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் சென்னையிலே நடைபெற்றது. 24-10-87 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று கழகத்தின் சார்பில் அறிவித்ததையொட்டி, தென் பிராந்திய ரெயில்வே ஜெனரல் மானேஜர் ரெயில் போக்குவரத்து அன்றைய தினம் இரத்துச் செய்யப் படுவதாக அறிவித்துவிட்டார்.

'இந்து' பத்திரிகையின் செய்தியாளர் 24-10-87 அன்று வெளியிட்ட செய்தியில் இந்தியாவை நம்பிய இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது என்றும், பொதுமக்களை இந்தியபடை கொன்றது உண்மைதான் என்றும் எழுதியிருந்தது. மற்றும் இந்தியாவிலே வெளிவரும் பல்வேறு ஆங்கில கிழமை இதழ்களும், அந்தச் செய்தியை ஊர்ஜிதம் செய்து எழுதியிருந்தன. அக்டோபர்த் திங்கள் இறுதியில் நடைபெற்ற இரண்டு நாள் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

6-11-87 அன்று ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாகப் பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்

, மாணவர்கள், மகளிர், பாட்டாளி மக்கள் கலந்துகொண்ட மனிதச் சங்கிலி ஒன்று சென்னையிலும், 11-11-87 அன்று தமிழகம் முழுதும் தி.மு.கழகத்தின் சார்பிலும் - மனிதச் சங்கிலி ஒன்றும் நடைபெற்றன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் உரையாற்றிய அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே குழந்தைவேலு, ஆலடி அருணா ஆகியோரும், இந்திய இராணுவம் இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் 9-11-87 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி தான் பேசும் அந்த நேரம் வரை இந்திய அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பியதும், பேச இயலாத நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை, பேசினார் என்றும், உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்றும் கூறிப் பதவிப் பிரமாணம் இரகசியமாகச் செய்துவைத்த ஆளுநர் குரானாவே சில நாட்கள் கழித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் "நீங்கள் செயல்படவில்லை - சட்டப்படி செயல்படவில்லை; அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டுவதில்லை; முக்கிய முடிவுகளை எனக்கு அவ்வப்போது தெரிவிப்பதில்லை, நான் பத்திரிகைகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழக அரசில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து நான் இருட்டிலே ஆழ்த்தப்பட்டிருக்கிறேன்" என்றார். ஆளுநர் மாத்திரமல்ல, நாளிதழ்கள், வார இதழ்கள், வட மாநிலங்களிலிருந்து வெளிவந்த ஏடுகள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் பற்றி வியர்சனங்களைச் செய்தன. டெல்லியிலிருந்து வெளிவரும் 'இந்துஸ்தான் டைம்ஸ்,' இதுவரை எம்.ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை பற்றி மட்டும் தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவர் மனநிலை பற்றியும் சந்தேகப்பட வேண்டியதாயிருக்கிறது" என்று எழுதியது.

3-7-86 தேதிய 'ஸ்டேட்ஸ் மென்' ஏடு "கட்சி நடத்தும் திறனை இழந்துவிட்ட ஒரு கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து இழைத்து வரும் தன்மைகளை மத்திய அரசு கண்டும் காணாமலும் கேட்டுக்கொள்ளாமலும் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரண்மனையைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு இடையிலான ஆதிக்கப் போரின் விளைவாகத் தலைமைச் செயலாளரான டி.வி.அந்தோணி உச்சநீதிமன்றத்திடம் வசமாக மாட்டிக்கொள்ள நேர்ந்தது. கடந்த ஒன்பதாண்டுக் காலத்தில் தங்கள் உத்தியோக கௌரவத்தையும் நேர்மையையும் பெரிதனெ மதித்த மூத்த அதிகாரிகள் வெளி மாநிலங்களை நாடிப்போயிருக்கிறார்கள் அல்லது பெரும் கவர்ச்சிகரமான தமது உத்தியோகங்களை விட்டே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

நிர்வாகமே முழுமையாகச் சீர்குலைந்து எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் அதிகாரமும் கூட ஒரேயடியாகச் சரிந்துவிட்டது" என்று எழுதியது. ஐதராபாத்திலிருந்து வெளிவரும் "நியூஸ் டைம்", "திவால் நிலையிலிருந்து விடுபடாத ஒரு நடிகையைச் சட்டமன்ற மேலவைக்கு நியமனம் செய்ய எம்.ஜி.ஆரே பரிந்துரை செய்துவிட்டு, பிறகு ஒரு வாரத்திற்குள் சட்டமன்ற மேலவையை ஒழித்தது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல காரியங்கள் அண்மைக் காலத்தில் நடந்திருப்பதைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரானபோது, மருத்துவ ரீதியில் அவர் அந்தத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உடல்நலம் கெட்டுள்ள முதலமைச்சரால் அரசு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போய்விட்ட நிலையில் ஒரு சிறு அதிகாரக் கும்பல், இரகசிய போலீசார், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் நீங்கலாக வேறுயாரும் அணுக முடியாதநிலையில் அவருடைய உத்தரவுகளில் பல நிறைவேற்றப்படுவதில்லை எனப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்" என்று எழுதியது.

புகழ்பெற்ற ஏடான "இல்லஸ்ட்ரேடட் வீக்லி", "அதிகார லகானைப் பிடிப்பதற்கு முற்றிலும் இயலாதவராகிவிட்ட ஒரு முதலமைச்சரை அதிகாரிகள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறத்தில் அ.தி.மு.க.வில் உள்ள இரு முகாம்களுக்கு இடையே கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. இலஞ்ச ஊழல் புகார்கள் பெருகிவிட்டன. திருத்த முடியாத அளவுக்கு அரசின் புகழ் கெட்டுப் போயிருக்கிறது" என்று எழுதியது.

12-7-86 தேதிய "பிளிட்ஸ்" இதழ் "சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. தனது கட்சியும், தமிழ் மாநிலமும் கெட்டுச் குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர். வீடியோவில் சினிமாக்கள் பார்த்துக் கொண்டும், கம்ப்யூட்டர்களில் விளையாடிக் கொண்டுமிருக்கிறார்" என்று எழுதியது.

முதலமைச்சரை விளக்கம் கேட்டு ஆளுநர் குரானா எழுதிய கடிதத்தையும், அதற்குத் தலைமைச் செயலாளர் மீது பழிபோட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எழுதிய பதிலையும் அப்படியே நகல் எடுத்து "இந்தியா டுடே" ஏடு வெளியிட்டிருந்தது. பம்பாயிலிருந்து வெளிவரும் ஏடான "டைம்ஸ் ஆப் இந்தியா", 16-7-86 தேதிய இதழில் "முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிர்வாகத்தின் பேரில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். தன் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.

ஏன், தனது சொந்த குடும்பத்தின் மீதும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்பது தெளிவாகிறது. தனது கட்சிப் பொதுக்குழுவினால் ஊழல் மந்திரிகள் என்று கூறப்பட்ட அமைச்சர்களை நீக்குவதற்குக் கூட அவர் இயலாதவராக இருக்கிறார். உண்மையில் தான் தமிழ்நாட்டை ஆள்வதாக நடத்தும் கேலிக்கூத்தை - சிறப்பு நாடகத்தை எம்.ஜி.ஆர். தொடர முடிகிறதென்றால் அது மத்திய அரசு சாதுர்யமாக தரும் அங்கீகாரத்தால்தான்" என்று எழுதியது.

இவையனைத்தும் இந்தியா முழுதுமுள்ள ஏடுகளில் எழுதப்பட்ட கருத்துக்கள். அவைகளைத்தான் தொகுத்துத் தந்துள்ளேன்.