நெஞ்சுக்கு நீதி
மேலவை - கழக வெற்றிகளும்; · 285 / 391
69. மேலவை - கழக வெற்றிகளும்; மேலவைக் கலைப்பும்! அதிகார பலம், பண பலம், ஆட்சியாளர்களை ஆதரிப்பதற்கென்றே இருக்கின்ற பத்திரிக்கைகளின் பலம் ஆகியவற்றை முறியடித்து உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை நாட்டோரும் நல்லோரும் பாராட்டி வாழ்த்தினர். அனைத்திந்திய ஏடுகளும் புகழ்ந்து எழுதின. 26.2.86 தேதிய "இந்து", "தமிழ்நாட்டில் நகராட்சித் தலைவர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியை ஈட்டியிருக்கின்றது.
97 நகராட்சிகளில் தி.மு.கழகம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அனைத்திலும் வென்றது. அங்குள்ள 12 நகராட்சிகளில் 11ஐ அது வென்றது; மீதமுள்ள ஒன்றை அதன் ஆதரவு கட்சியான முஸ்லீம் லீக் பெற்றது. மூன்று அ.தி.மு.க. அமைச்சர்களைப் பெற்ற சேலம் மாவட்டத்தில் 8 நகராட்சிகளில் 7 நகராட்சிகளைத் தி.மு.க. கைப்பற்றியது. செங்கை அண்ணா மாவட்டத்தில் தி.மு.கழகக் கூட்டணி 8இல் 7 இடங்களைப் பெற்றது. தென்னார்க்காட்டில் 7இல் 6 இடங்களைப் பெற்றது.
குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 இடங்களையும் பெற்றது" என்று எழுதியது. "இந்தியன் எக்ஸ்பிரஸ்" எழுதும்போது, "16 ஆண்டுக் கால இடைவெளிக்குப் பின்னர் நடந்த நகராட்சித் தலைவர்கள் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கோட்டைகள் பல தி.மு.கழகத்தால் கைப்பற்றப்பட்டன. தி.மு.க. வெற்றிக்கு மற்றொரு காரணம் எம்.ஜி.ஆர்.ஆட்சி மீது கூறப்பட்ட ஊழல்புகார்கள் ஆகும்.
எதிர்ப்புகளைக்கண்டு அஞ்சாது அயராது தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தனது அரசியல் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தற்போது உண்மையிலேயே அ.தி.மு.க. கோட்டையைப் பிளந்திருக்கிறார். நகராட்சித் தேர்தில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தமிழகச் சட்டமன்ற மேலவையில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றை தி.மு.க. கைப்பற்றும், அது ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்கு ஆத்திரமூட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எக்ஸ்பிரஸ் ஏடு எழுதியபடியே, அ.தி.மு.க.விற்கும், அதன் தலைமைக்கும் கழகத்தின் வெற்றி பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதோடு, மேலவையிலே கழகத்தில் பலம் பெருகும் என்பதை அதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் அதனைத் தடுக்க என்ன வழிகளையெல்லாம் கையாளலாம் என்ற சிந்தனையிலே இறங்கியது. 10.2.86 அன்று காலையில் திருச்சியில் தி.மு.கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டமும் மாலையில் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடைபெற்றது.
உள்ளாட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து 'எகனாமிக் டைம்ஸ்' ஏடு 28.2.86 தேதிய தலையங்கத்தில் "உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் தமிழகத்தின் முதலமைச்சரும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் நிறுவனரும், கவர்ச்சிகரமானவருமான எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் அவரது கடும் எதிரியும் தோல்வியைக் கண்டு துவளாத தலைவருமான மு.கருணாநிதிக்கும் இடையில் நடக்கும் போட்டி என்று கூறப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மூன்றில் அ.தி.மு.க.விடம் கடும் தோல்வி கண்ட தி.மு.க., இந்தத் தேர்தலில் வியத்தகு வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தான் ஒரு வீறு கொண்ட அரசியல் சக்தியே என்பதை மீண்டும் நிலைநாட்டிவிட்டிருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் திரு. கருணாநிதிக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட வெற்றியாகும். பத்தாண்டு கால அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு மாநில அளவில் விரும்பியேற்கக் கூடிய தலைவராகும் வாய்ப்புடன் அவர் எழுச்சி கண்டிருப்பதற்கு இந்திய அரசியலில் இணை காண்பது அரிதேயாகும்" என்று எழுதியிருந்தது.
அதுபோலவே 20.2.86 தேதிய "இந்துஸ்தான் டைம்ஸ்" ஏடும், 26.2.86 தேதிய "நியூஸ் டைம்" ஏடும், 1.3.86 தேதிய "ஈநாடு" ஏடும், 2.3.86 தேதிய "இந்து" ஏடு இரண்டாவது முறையாகவும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கழகம் பெற்ற வெற்றியைப் பாராட்டி எழுதியிருந்தன. 1986அம் ஆண்டு பிப்ரவரியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப்பாண்டவர் இந்தியாவில் பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் ஒருநாள் சென்னை வந்திருந்து கடற்கரையில் திரண்ட பத்து இலட்சம் தமிழ் மக்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் சார்பில் ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள் போப்பாண்டவரை வரவேற்று உரை- யாற்றினார். அதே நாளில் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற மற்றொரு விழாவில் அனைத்து மதத் தலைவர்களும் கூடி, போப்பாண்டவருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்புத் தெரிவித்தனர். இந்தியாவிற்குக் கிழக்கே உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜானாதிபதியாக இருபதாண்டுக் காலம் இருந்தவர் மார்க்கோஸ். 1986ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது, மார்க்கோஸ் அவர்களை எதிர்த்து, 53 வயது விதவையான கோரகன் அகினோ போட்டியிட்டார்.
இவரது கணவரான பெனிங்கோ அகினோ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வந்ததைக் கண்டு பயந்த ஜனாதிபதி மார்க்கோஸ் ஆள் வைத்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார் என்று கூறப்பட்டது. எனவே 7.2.86 அன்று நடைபெற்ற தேர்தலில் மார்க்கோஸை எதிர்த்து விதவையான கோரகன் அகினோ போட்டியிட்டார். தேர்தலில் எவ்வளவோ தில்லுமுல்லுகள் ஆளுங்கட்சியால் செய்யப்பட்ட போதிலும் அகினோ பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நிலையிலிருந்தபோது, மார்க்கோஸ் நிருபர்களிடம் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர்; எனவே தேர்தலையே இரத்துச் செய்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
அகினோ தேர்தலில் தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்தபோதிலும், அதையொட்டிப் பயங்கர கலவரம் மூண்டது. வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதாகவும், அதில் மார்க்கோஸ் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அகினோ போராட்டம் நடத்தினர். அமெரிக்க அரசு இவருக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் இராணுவ அமைச்சராக இருந்த என்ரில் என்பவரும், மற்றும் இராணுவத்தில் பெரும் பகுதியினரும் திருமதி அகினோவை ஆதரித்தனர்.
இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் புரட்சி வெடித்தது. மார்க்கோஸ் வெளிநாட்டிற்குத் தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து திருமதி அகினோ பிப்ரவரி 26ஆம் தேதி புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். திருமதி அகினோவிற்கு எதிராக அதே ஆண்டில் ஜூலைத் திங்களில் மார்க்கோஸ் ஆதரவாளர்கள் டொலன்டினோ என்பவர் தலைமையில் புரட்சி நடத்த முற்பட்டபோது ஒரேநாளில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரால் அடக்கப்பட்டனர். 86ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் இறுதியில் இராமனாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், சேதுபதி மண்ணில் கழகக் கொள்கைகளை சங்கநாதம் செய்த சிங்கமறவனுமாகத் திகழ்ந்த எம்.எஸ்.கே.
சத்தியேந்திரன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்து அதிர்ச்சியடைந்தேன். இராமனாதபுரம் சென்று அவரது இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினேன். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அத்தனைக் கழகத் தோழர்களும் அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த அந்த நகரில் திரண்டிருந்தனர். தனது 44 வயதிற்குள் தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாவட்டக் கழகச் செயலாளராக அரும் பணியாற்றிக் கழகத்தினர் அனைவரது ஒருமித்த அன்பைப் பெற்ற அந்த உடன் பிறப்பின் மறைவு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியோடு நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி மார்ச் 23ஆம் தேதி அதற்கான தேர்தல் நடைபெற்றது. பட்டதாரிகள், ஆசிரியர்கள் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டிய தேர்தல் இது. இந்த நான்கு பதவிகளிலும் ஏற்கனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவி வகித்திருந்த படியாலும், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மிகப் பெரிய தோல்வியை ஆளுங்கட்சி சந்திதிருந்தபடியாலும், இந்த மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் தாங்கள் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று எண்ணி ஆளுங்கட்சி துவக்க முதலே முனைப்புடன் பணியாற்றத் தொடங்கியது.
அந்தந்தப் பகுதிகளிலே உள்ள அமைச்சர்கள் அதிகாரத்தையும் பணத்தையும் வைத்துக்கொண்டு பகீரதப் பிரயத்தனம் செய்து தங்கள் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்யப் பாடுப்பட்டனர். இந்தத் தேர்தலில், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்ட பட்டதாரிகள் தொகுதியில் தி.மு.கழக வேட்பாளர் எல்.கணேசன் 18,126 வாக்குகளும், அ.தி.மு.க. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் 4,950 வாக்குகளும் பெற்று, கழக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கோவை, நீலகிரி, பெரியார், சேலம் மாவட்டப் பட்டதாரிகள் தொகுதிகள். தி.மு.கழக வேட்பாளர் கே.எம்.தண்டபாணி 13,210 வாக்குகளும், ராஜகோபால் என்ற சுயேச்சை வேட்பாளர் 10,180 வாக்குகளும், ஜனார்த்தனம் என்ற அ.தி.மு.க. வேட்பாளர் 5,079 வாக்குகளும் பெற்றதில் தி.மு.கழகம் வெற்றி பெற்றதோடு, அ.தி.மு.க. மூன்றாவது இடத்தைத்தான் பெற்றது. சென்னை, செங்கை-அண்ணா மாவட்ட ஆசிரியர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் 4,910 வாக்குகளும், அடுத்து தி.மு.கழக வேட்பாளர் 4,471 வாக்குகளும், அடுத்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 1,575 வாக்குகளும், நான்காவதாக அ.தி.மு.க.
வேட்பாளர் 1,524 வாக்குகளும் பெற்றனர். இங்கே கழக வேட்பாளர் 400 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், அ.தி.மு.க. நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது. அடுத்து மதுரை, காமராஜர், இராமனாதபுரம் மாவட்ட ஆசிரியர் தொகுதியில் மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்துக் கழக ஆதரவு வேட்பாளர் வாக்குகளைப் பெற்றார்.
மொத்தம் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் இரண்டு இடங்களிலும், மற்ற இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். ஏற்கெனவே நான்கு இடங்களைப் பெற்றிருந்த ஆளுங்கட்சி நான்கு இடங்களையும் இழந்தது. எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை -பால் வளத்துறை - பத்திரப்பதிவு முத்திரைத்தாள் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியிடமிருந்து தொழிலாளர் நலத்துறையை திடீரென்று ஏப்ரல் திங்கள் முதல் வாரத்தில் அவரிடம் தெரிவிக்காமலேயே முதலமைச்சர் மாற்றிவிட்டார்.
இதற்கான அறிவிப்பு 7.4.86 அன்று வெளிவந்ததும், கே.ஏ.கிருஷ்ணசாமி உடனடியாக ஆளுநர் குரானாவைச் சந்தித்து, அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். நிருபர்களிடம் இந்தச் செய்தியை ஆளுநர் தெரிவித்தபோது, அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுத்து, அவர் மூலமாக பரிந்துரையோடு வருவதுதானே முறை என்று நிருபர்கள் கேட்டதற்கு ஆளுநர், பதவி விலகல் கடிதத்தைத் தான், முதலமைச்சருக்கு அனுப்பி அவருடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு செயல்படப்போவதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரைச் சமாதானப்படுத்திவிடும் முயற்சியில் ஒருசிலர் ஈடுபட்டிருப்பதாகவும், தொழிலாளர் நலத்துறைக்குப் பதிலாக வேறு ஏதாவதொரு துறையைப் பெற்றுத் தருவதாகக் கூறிய போதிலும், கே.ஏ.கிருஷ்ணசாமி பிடிவாதமாகத் தனக்குத் தொழிலாளர் நலத்துறையே திரும்ப வேண்டுமென்று கேட்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்தது. 8.4.86 அன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை மானிய விவாதத்திற்கு ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்ததால், அந்தத் துறைக்கான மானியம் முதலமைச்சர் பெயரில் போடப்பட்டிருந்தது.
ஆனாலும் அவையில் அந்த மானியக் கோரிக்கையை நாவலர் முன் மொழிந்தார். 9.4.86 அன்று கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பரிந்துரைப்படி கே.ஏ.கிருஷ்ணசாமியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அன்று இரவு கே.ஏ.கிருஷ்ணசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாகவும், அரசியலுக்கே முழுக்குப் போடப்போவதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய போதிலும், மறுநாள் 10ஆம் தேதி காலையில் அ.தி.மு.க.விலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாகச் செய்த முடிவைக் கைவிட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
இதேநாளில் தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக ஆளுநரால் நியமிக்கப்பட்டுப் பதவியிலே இருந்த மூன்று பேரின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி, அமைச்சரவை செய்த பரிந்துரையின் பேரில் வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.ஜி.ஆரின் சொந்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி, ஜி.சுவாமிநாதன் ஆகியோர் ஆளுநரால் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கெனவே திவாலானவர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
வழக்குத் தொடுக்கப்பட்ட செய்தி ஏடுகளில் வந்ததும், அவசர அவசரமாக அன்றைய தினமே திவாலானவர் சார்பில் நீதி மன்றத்தில் அவர் கொடுக்க வேண்டிய கடன் பாக்கித் தொகையைக் கட்டிவிட்டார்கள். அதுவும் முதலில் கடன் பாக்கி ஏழு இலட்சம் ரூபாய் என்று கூறப்பட்டு முற்பகலில் அந்தத் தொகையை செலுத்தி, பின்னர் மனுவை விசாரித்தபோது மேலும் மூன்று இலட்சம் ரூபாய் கடன் பாக்கியிருப்பதாகத் தெரிவித்ததின் பேரில் அதையும் கட்டிவிட்டார்கள் என்று செய்தி வந்தது.
ஆனாலும் திவாலான ஒருவரை ஆளுநர் எவ்வாறு விசாரிக்காமல் மேலவை உறுப்பினராக நியமித்தார் என்றும், அரசு தரப்பிலே எப்படிப் பரிந்துரை செய்யலாம் என்றும் ஏடுகளிலே எழுதினார்கள். ஒரே நாளில் அந்த நடிகையின் பத்து இலட்சம் ரூபாய் கடனை அவசர அவசரமாகக் கட்டியது யார்? என்றெல்லாம் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு யாரும் பதில் கூறவில்வை. மாறாக, வெண்ணிற ஆடை நிர்மலா தனது மேலவை உறுப்பினர் பதவியை அவராகவே ராஜினாமா செய்துவிட்டார்.
உள்ளாட்சி மன்றத் தேர்தல், சட்டமன்ற மேலவைத் தேர்தல் ஆகியவைகளில் தி.மு.கழகம் பெற்ற மகத்தான வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. அரசு, மேலவையில் தி.மு.கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் நான் மேலவையில் எதிர்க்கட்சித்தலைவராக ஆகப்போகிறேன் என்பதை அறிந்ததும் ஆண்டாண்டுக் காலமாகச் சிறப்போடு நடைபெற்று வந்த தமிழகச் சட்டமன்ற மேலவையையே கலைக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்றனர்.
9.5.86 அன்று பேரவையில் கழக உறுப்பினர் ரகுமான்கான் மேலவையைக் கலைக்கும் உத்தேசம் இந்த அரசுக்கு உண்டா என்று கேட்டதற்கு, அவை முன்னவ
ர் நாவலர் எழுந்து, "தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவையைக் கலைப்பதற்கான செயற்குறிப்பு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப்படுமேயானால் இந்த அவைக்குத் தெரியாமல் எடுக்க முடியாது. ஆனால் இப்போது, இந்த நேரம் வரையில் சட்டமன்ற மேலவையைக் கலைக்கும் எந்தச் செயற் குறிப்பும் அரசிடம் இல்லை" என்றார்.
நாவலர் இவ்வாறு பதில் கூறியதற்கு மறுநாளே 10.5.86 அன்றே ஏடுகளில் மேலவையைக் கலைப்பதற்காக 13-ஆம் தேதி மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று செய்தி வந்தது. மேலவையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் நாவலர் அவையிலே தெரிவித்ததற்கு மாறாக ஏடுகளில் இப்படிச் செய்தி வந்திருக்கிறதே என்று கேட்டதற்கு நாவலரால் உறுதியான பதில் கூற இயலவில்லை. ஏடுகளில் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கைவிட்டனர்.
மேலவையைக் கலைப்பது என்பது ஜனநாயக விரோதமான நடவடிக்கை. ஜனநாயகத்தை அரசு உண்மையிலேயே மதிப்பதாக இருந்தால் மேலவைக் கலைப்பு எண்ணத்தை உடனேவிட்டுவிடவேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கூறினார். மக்களை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப மேலவைக் கலைப்புப் போன்ற விபரீத வேலைகளில் ஈடுபடாதீர் என்றும், அரசியல் வெறித்தனத்துடன் மேலவையைக் கலைக்க முயற்சி செய்வது ஜனநாயகம் ஆகாது என்றும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அறிக்கை விடுத்தார்.
சட்டமன்ற மேலவையை ஒழிக்க முயல்வது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றார் ப.நெடுமாறன். மேலவைக் கலைப்புப் பற்றி ஆலோசிக்க 12.5.85 அன்று மாலையில் அன்பகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடி மேலவைக் கலைப்பு என்ற ஜனநாயக விரோதப்போக்கை அ.தி.மு.க. அரசு கைவிடாவிட்டால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராடும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். மேலவைக் கலைப்பு, அ.தி.மு.க. அரசின் குறுகிய அரசியல் நோக்கமே என்று மார்க்சிஸ்ட் கட்சி கருத்துத் தெரிவித்தது.
மேலவைக் கலைப்புக்கு மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற பல மாநிலங்களில் மேலவை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் - தமிழகத்திலே அந்தக் கட்சி எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் மேலவைக் கலைப்பு மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்படும்போது மொத்தம் 234 உறுப்பினர்களில் பாதிப்பேரான 117பேர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அல்லது சபைக்கு வந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
அப்போதுதான் மசோதா நிறைவேற இயலும். இந்த நிலையில் இந்திரா காங்கிரஸ் அவையிலே இருந்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மேலவைக் கலைப்புக்கு ஆதரவாகக் கிடைக்காமல் போய்விடும். அதேநேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டால், மொத்த உறுப்பினர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் வாக்களித்து மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று அரசு கருதியது. மேலவைக் கலைப்புப் பற்றி 13.5.86 அன்று சட்டமன்ற மேலவையில் ஒத்திவைப்புத் தீர்மானங்களை சாதிக் பாட்சா, பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன், ப.மாணிக்கம், மயில்சாமி, சங்கரலிங்கம் ஆகியோர் கொடுத்திருந்தனர்.
மேலவைத் தலைவர் மா.பொ.சி. "இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல; மாகாணப்பிரச்சினை, அதுவும் பொதுப் பிரச்சினை என்பதால், முதலில் அனுமதி மறுக்க எண்ணிய நான், பின்னர் அனுமதிக்க முடிவு செய்தேன்" என்றார். அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய நான், "எனக்காக வாதாட நான் விரும்பவில்லை; அப்படி வாதாடும் வழக்கமும் எனக்குக் கிடையாது" என்று ஆரம்பித்து மேலவையை ஏன் கலைக்கக்கூடாது என்பதற்கான வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.ராதா குறுக்கிட்டு, "இந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பேசுவதற்கு அனுமதித்திருக்கக் கூடாது" என்றார்.
அதற்கு மேலவைத் தலைவர், "இதை நான் அனுமதிக்கவில்லை என்றால், இந்தப் பதவியிலே இருக்க நான் தகுதியற்றவன்" என்றார். முடிவாக நான் கூறும்போது, "நான் எதிர்க்கட்சித் தலைவனாக வந்துவிட்டதால்தான் இந்த மேலவைக் கலைப்புக்கு முதலமைச்சர் முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலவை கலைக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கூறுகிறேன். நான் இல்லாவிட்டால், இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்குமென்றால் மன்றத்தின் மரபு காக்கவும், ஏனைய மன்ற உறுப்பினர்களின் நன்மைக்காகவும் நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
கருணாநிதி ஒழிந்தான். இனிக்கவலையில்லை, அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக் கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் எடுக்க முன் வரட்டும்" என்றேன். பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பேசும்போது "மேலவைக் கலைப்பு என்ற முடிவு அமைச்சரவையைக் கூட்டி எடுக்கப்பட்டதா" என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் வீரப்பன், அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்கவில்லை என்றும், முதலமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு அது என்றும் கூறினார். மேலவைத் தலைவர் ம.பொ.சி.யும் இறுதியில் மிகவும் உருக்கத்தோடு மேலவையைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், 14.5.86 அன்று மேலவைக் கலைப்புத் தீர்மானம் பேரவையிலே நாவலரால் முன்மொழியப்பட்டது.
தி.மு.க., முஸ்லீம் லீக், ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன. எதிர்பார்த்தது போலவே இந்திரா காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தீர்மானம் நிறைவேறுவதற்குத் துணைபுரிந்தது. நாவலர் பேசும்போது - மேலவைக் கலைப்பு திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், ஏழெட்டு மாதங்களாகத் தன்னைப்போன்ற அமைச்சர்களிடம் பேசி விளக்கம் பெற்று முதலமைச்சர் எடுத்த முடிவு என்றும் கூறினார். ஆனால் அதே நாவலர் 9-ஆம் தேதி பேரவையில் ரகுமான்கான் கேட்ட கேள்விக்கு, மேலவையைக் கலைக்கின்ற உத்தேசமே இல்லை என்றார்.
இரண்டாண்டுகளுக்கு முன் தி.மு.க. சார்பில் மேலவையில் ஐந்து உறுப்பினர்களாகி, நான் எதிர்க் கட்சித் தலைவனாக ஆகக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் மேலவையில் நான்கு உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அ.தி.மு.க. என்ன செய்தது தெரியுமா? ஆளுநர் நியமனம் செய்த மேலவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் கட்சியிலே சேரச் செய்து அந்தக் கட்சியின் சார்பிலும் ஐந்து உறுப்பினர்கள் என்று கூறி எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வராமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதை அறிந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு மேலவையை எதற்காக இப்போது கலைக்கின்றார்கள் என்பது நன்றாகவே புரிந்தது. மேலவைக் கலைப்பு முடிவைத் தங்கள் கட்சி விரும்பவில்லை என்றாலும் தோழமைச் கட்சியான அ.தி.மு.க.விற்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று மூப்பனார் டெல்லியில் நிருபர்களிடம் கூறினார். மேலவை ஒழிப்புத் தீர்மானம் பற்றி 25.5.86 தேதிய "கல்கி"யில் "எம்.ஜி.ஆரின் சிகரமான சாதனை" என்ற தலைப்பில் அ.தி.மு.க.
அரசின் செயலைக் கிண்டல் செய்து தலையங்கம் எழுதியதோடு, ஒரு கார்ட்டூனும் வெளியிட்டிருந்தார்கள். அதே தேதியில் "ஆனந்த விகடன்" இதழும் அந்தத் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் நடை முறை பற்றிக் கண்டனம் தெரிவித்து எழுதியிருந்ததோடு, "குழப்பத்தின் மறுபெயர்தான் தமிழக இந்திரா காங்கிரஸ்" என்று முடித்திருந்தது.
தமிழக ஆளுநர் குரானா அவர்கள்கூட, மேலவைக் கலைப்பு அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். தமிழகத்தின் மிகப் பெரிய சான்றோர், அறிஞர்கள் எல்லாம் இடம்பெற்றுப் பல்வேறு பிர்ச்சினைகளில் தங்கள் சீர்மிகு கருத்துக்களை எடுத்துக்கூறிப் பல்லாண்டுக் காலமாக ஒளி வீசிக்கொண்டிருந்த ஒரு மன்றம், அ.தி.மு.க. ஆட்சியின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகிக் கலைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, தமிழகச் சட்டமன்ற மேலவையைக் கொண்டு வருவதற்கு முயற்சியெடுத்து அதற்கான தீர்மானம் எல்லாம் சட்டப் பேரவையிலே நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட போதிலும், கழக ஆட்சி இரண்டாண்டுக் காலத்திலே கலைக்கப்பட்ட காரணத்தினால், சட்டமன்ற மேலவையை மீண்டும் அமைக்க முடியாமல் போய்விட்டது.
