நெஞ்சுக்கு நீதி
ஈழத்தமிழருக்கான போராட்டங்களும் · 284 / 391
68. ஈழத்தமிழருக்கான போராட்டங்களும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றியும்! அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும், வெறுப்பு அரசியல் தன்மைக்கும் மற்றுமொரு உதாரணம் 85ஆம் ஆண்டு தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தைக் காலி செய்ய அது மேற்கொண்ட செயலாகும். 8.5.85 அன்று பேரவைத் துறையின் தலைவர்கூட அல்ல, அந்தத் துறையின் அரசுச் செயலாளர் எழுதிய கடிதத்தில் தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும், போர்டிகோவில் கழகத் தலைவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வேறொரு சிறிய இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றும் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்திற்கு உடனடியாக எழுதிய பதிலில் இனிச் சுவரொட்டிகள் ஒட்டப்படமாட்டாது என்றும், கழகத் தலைவர்களின் கார்களும் போர்டிகோவில் நிறுத்தப்படமாட்டாது என்றும் எழுதிவிட்டு, அலவலகத்தைக் காலி செய்ய வேண்டுமென்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த போது பயன்படுத்தி வந்த அலுவலகத்தையே அந்தக் கட்சி எதிர்க்கட்சியாக ஆனபின்னரும், தி.மு.கழக ஆட்சியிலே பெருந்தன்மையோடு வழங்கியதைச் சுட்டிக் காட்டி அதே பெருந்தன்மையை அ.தி.மு.க. அரசும் பின்பற்றும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தேன்.
15.5.85 அன்று அதே அதிகாரி மீண்டும் எழுதிய கடிதத்தில் குழுக்கள் கூடுவதற்கு இடம் தேவைப்படுவதாகவும், பேரவைச் செயலகத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்றும் எழுதிவிட்டு, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற அலுவலகத்தில் கட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்றும், கழகச் சட்டமன்ற அலுவலகத்திலே கட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் எழுதியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதிலில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற அலுவலகத்திலே பலமுறை நடைபெற்ற கட்சிக் கூட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் காட்டிவிட்டு, பேரவைச் செயலகத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்ற அடிப்படையிலேதான், என்னுடைய காரைக்கூட போர்ட்டிகோவிற்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு நடந்து வருவதாகவும், சுவரொட்டி ஒட்டப்படுவதும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்ததோடு, இதற்கு மேலும் காலி செய்ய வேண்டுமென்றால் அதனை ஏற்க இயலாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தேன்.
25.5.85 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி, ஜனதா கட்சிகளின் சட்டமன்றக் கட்சி அலுவலகங்களை, அ.தி.மு.க. அரசு பூட்டி சீல் வைத்து விட்டது. 27.5.85 அன்று பேரவைச் செயலாளர் பேராசிரியருக்கு எழுதிய அடுத்த கடிதத்தில் 31ஆம் தேதிக்குள் இடத்தினை மாற்றிக்கொள்ளாவிட்டால் பலவந்தமாகச் செயலகத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எழுதியிருந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகச் சிறை சென்ற நான் 30ஆம் தேதி விடுதலையாகி, மறுநாள் கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்திலே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கட்சி அலுவலகத்தைச் சுற்றி போலீசாரைக் குவித்து வைத்துக்கொண்டு, சட்டமன்றத்துறை அதிகாரிகள் ஒருசில அலுவலர்களின் துணையோடு, கழகச் சட்டமன்ற அலவலகத்திற்குள் புகுந்து பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்றனர்.
பின்னர் போலீஸ் அதிகாரி உள்ளே வந்து எங்களையெல்லாம் கைது செய்திருப்பதாகக் கூறிப் பேருந்துகளில் ஏற்றி கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று என்னுடன் பேராசிரியர், நீலநாராயணன், முரசொலி மாறன் எம்.பி., ஆர்க்காடு வீராசாமி, செ.கந்தப்பன், சி.டி.தண்டபாணி, என்.வி.என்.சோமு எம்.பி., எல்.கணேசன் எம்.பி., நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், ரகுமான்கான், மு.க.ஸ்டாலின், என்.கணபதி, எஸ்.பி.சற்குணம், செ.குப்புசாமி, சா.கணேசன், மிசா ஆர்.கணேசன், எம்.எல்.சி., டி.ஆர்.பாலு, எஸ்.கே.வடிவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செல்வராசன், ஆர்.சின்னச்சாமி, ப.பொன்னுரங்கம், அரக்கோணம் ராசு, பரிதி இளம்வழுதி, மலர்மன்னன், சு.பாலன், நன்னிலம் மணிமாறன், சோ.மா.இராமச்சந்திரன், ஆலந்தூர் ஆப்ரகாம் மற்றும் செ.கண்ணப்பன், மா.கன்னியப்பன், ஆலந்தூர் பாரதி, மைனர் மோசஸ், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, எஸ்.ஏ.எம்.உசேன், எல்.பலராமன், கோ.சிட்டிபாபு, மணிமுடி, வழக்கறிஞர் கிள்ளிவளவன் மற்றும் மகளிர் அணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாங்கள் கைதான பிறகு சட்டப்பேரவைத் துறை அதிகாரி, கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகப் பெயர்ப் பலகையைக் கழற்றித் தன் கால்களால் உடைத்தெறிந்தார் என்று பின்னர் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட எங்களை என்ன செய்வதென்று புரியாமல், இரவு 7.30 மணி அளவில் விடுதலை செய்வதாகக் கூறி அனுப்பிவைத்தனர். இதுகுறித்து 2.6.85 அன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடிப்பேசி, அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்குப் பலத்த கண்டனம் தெரிவித்ததோடு, அரசின் பல்வேறு குழுக்களிலிருந்து தங்களை விலக்கிக்கொள்வதென்றும், சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுவிலும் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி அராஜக முறையில் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தைவிட்டு எங்களை விரட்டியதன் விளைவுதான், இன்று வானுயர்ந்து நிற்கும் அண்ணா அறிவாலயம். 10.6.85 தேதிய முரசொலியில்தான் அந்த மாளிகை உருவாக வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதி, அதற்கான நிதியினைக் கழக உடன்பிறப்புக்கள் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அந்த வேண்டுகோள் வீணாகவில்லை. சட்டமன்றக்கட்சி அலுவலகத்திலிருந்து அகற்றிவிட்டால் கழகம் அழிந்து விடுமென்று கருதியவர்களின் கெடு நினைப்பு, கருகிப் போனது.
சட்டமன்றத்திலும் கழக அலுவலகத்தைக் காலி செய்தது பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் அதனைச் செவிசாய்க்க மறுத்ததோடு, இனிமேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி, முஸ்லீம் லீக் போன்ற கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சுயேச்சைகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். இதற்கும் சேர்த்து எதிர்ப்பு தெரிவித்துச் சட்ட மன்றக் குழுக்களிலிருந்து தி.மு.கழகமும், மற்றக் கட்சிகளும் விலகிக் கொண்டன.
அதன்பிறகு தான் ஆகஸ்ட் திங்கள் துவக்கத்தில் அரசு தன் பிடிவாதத்தை விட்டு, அரசியல் கட்சிகளை சுயேச்சைகள் என்று அழைக்க மாட்டோம் என்றும், சட்டமன்றக் கட்சிகளுக்கு அலுவலகங்களை ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துக் குழுக்களிலிருந்து விலகியதைத் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். மற்றக் கட்சிகளை சுயேச்சைகள் என்று கூறமாட்டோம் எனக் கூறியதை ஏற்றும், மற்றக் கட்சிகளுக்குச் சட்டமன்றக் கட்சி அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டதையேற்றும், குழுக்களிலிருந்து விலகியதை தி.மு.கழகம் உட்படத் திரும்பப் பெற்றுக் கொண்டோம்.
எனினும் தி.மு.கழகத்திற்கு முதலில் இருந்த சட்டமன்றக் கட்சி அலுவலகத்தை ஒதுக்காது வேறு ஒரு மிகச் சிறிய பொந்துபோன்ற அறை ஒதுக்கியதால், அதனையேற்க மறுத்துவிட்டோம். இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவடையாமல் தொடர்ந்து அவர்கள் படுகொலைக்காளாகி வந்த நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த நான், அந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போவதில்லை என்றும், அந்நாளைத் தமிழீழ மக்களின் எழுச்சி நாளாகக் கொண்டாடவேண்டுமென்றும் கழக உடன்பிறப்புக்களைக் கேட்டுக் கொண்டேன்.
85-ஆம் ஆண்டு ஆகஸ்ட்த் திங்களிலில் திம்புவில் இலங்கை அரசு தரப்பினருக்கும், தமிழீழத் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது. பேச்சுவார்த்தை அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இலங்கையில் முப்படையினரின் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததால், திம்பு மாநாட்டில் கலந்து கொண்டிருந்த தமிழீழத் தலைவர்கள், பேச்சுவார்த்தை முறிந்து விட்டதாகக் கூறி வெளிநடப்புச் செய்தார்கள்.
திம்பு பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்ட நிலையில் திடீரென ஒருநாள் மத்திய அரசு சென்னையிலே தங்கியிருந்த தமிழீழத் தலைவர்களை வெளியேற்ற முடிவெடுத்து, அதன் முதற்கட்டமாக 23.8.85 அன்று தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரஹாசன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேற்ற ஆணை பிறப்பித்து, தமிழகக் காவல்துறை மூலம் அவர்களைக் கைது செய்தது. நாடு கடத்தப்பட்ட பாலசிங்கம் உடனடியாக இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னையில் கைது செய்யப்பட்டதும், சந்திரஹாசன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து, தன்னை அனுப்புவதாக இருந்தால் இலங்கைக்கே திருப்பி அனுப்பட்டும் என்றார். இந்திய அரசின் இந்தக் கொடுமையான உத்தரவை எதிர்த்து "டெசோ" அமைப்பின் சார்பில் 25.8.85 அன்று சென்னையில் கண்டனப்பேரணி ஒன்றை நடத்தினோம். பத்து மணி நேர அவகாசத்தில் கூட்டப்பட்ட அந்தப் பேரணியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
பேரணி முடிவில் நான் பேசும்போது, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால், பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று அறிவித்தேன். சந்திரஹாசன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே அவர் விமானத்திலிருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதால், மீண்டும் அவரை பம்பாய்க்கே அழைத்து வந்தனர். அவருக்கு என்னவாகுமோ என்று சென்னையிலே கலங்கிக் கொண்டிருந்த அவரது இல்லத்தாரை நானும் பேராசிரியரும் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
27.8.85 அன்று 'டெசோ'வின் அமைப்புக் கூட்டம் சென்னை அன்பகத்தில் என் தலைமையிலே நடைபெற்று, நாடு கடத்தும் ஆணையைப் பிறப்பித்த மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த ஆணையை பிரதமர் ராஜீவ் காந்தி உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்பதை வலியுறுத்தி 30.8.85 அன்று தமிழகத்தில் ரெயில் நிறுத்தப்போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று தமிழகத்தில் எந்த ஊரிலாவது ரெயில் ஓடினால் அங்குத் தமிழன் இல்லை; தி.மு.க.
செயல்படவில்லை என்று பொருள்; என்று நான் அறிவித்தேன். ரெயில் நிறுத்தப்போராட்டம் அறிவித்ததையொட்டி அ.தி.மு.க. அரசு 5000 பேரை முன் கூட்டியே கைது செய்தது. இருந்த போதிலும், 30-ஆம் தேதி தமிழகம் முழுதும் ரெயில்கள் ஓடவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுப் பொதுச் செயலாளர் பேராசிரியர், ப.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட சந்திரஹாசனை என்ன செய்வதென்று தெரியாமல் பம்பாயில் ஒருநாள் தங்க வைத்திருந்த மத்திய அரசு அவர் மீது மட்டும் தன் உத்தரவைத் திரும்பப்பெற்று சென்னைக்கு அவர் திரும்ப அனுமதித்தது.
சந்திரஹாசன் திரும்பிய போதிலும் பால சிங்கம், சத்தியேந்திரா ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் ஓயாதென்று தெரிவித்தேன். அமிர்தலிங்கம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கையிலே கடத்திச் செல்லப்பட்டு, அவர்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுச் சாலைகளில் பிணங்களாக வீசப்பட்டார்கள்.
இவர்களைக் கடத்திச்சென்று சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்று இலங்கை அரசின் செய்திக் குறிப்புத் தெரிவித்த போதிலும், விடுதலைப்புலி இயக்கத்தினர் இந்தக் கொலையைச் செய்தது தாங்கள் அல்ல என்றும், இலங்கை அரசு வேண்டுமென்றே தங்கள் மீது பழி சுமத்துகின்றது என்றும் தெரிவித்தார்கள். செப்டம்பர்த் திங்கள் திரிகோணமலையில் மட்டும் 200க்கு மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி ஏடுகள் மூலம் வந்ததும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சர்வதேச அமைதிப்படை ஒன்றை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுத்தேன்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்துத் தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக "டெசோ" அமைப்பின் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதென்றும் அதில் நான், பேராசிரியர், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் கலந்துகொள்வதென்றும் முடிவெடுத்து, அக்டோபர் 3-ஆம் தேதி கோவையிலும் 4-ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 5-ஆம் தேதி தூத்துக்குடியிலும், 6-ஆம் தேதி திருச்சியிலும், 7-ஆம் தேதி சேலத்திலும், 13-ஆம் தேதி வேலூரிலும் மிகப்பெரிய பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தினோம். இதற்கிடையே 7.10.85 அன்று பாலசிங்கம் மீது பிறப்பித்த நாடு கடத்தும் உத்தரவையும் இந்திய அரசு திரும்பப் பெற்று, அவர் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று உடல்நலம் பெற்று வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். 85ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தமிழக அரசுக்குச் சொந்தமான கப்பல்களை வாங்கவும் அப்படியே உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவும் ஐப்பான் நாட்டிற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து நேராக அமெரிக்காவிற்குச் சென்றார். ப்ரூக்லின் மருத்துவமனையில் மீண்டும் சோதனைகள் முடிந்து அவர் நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தபின் 24.8.85 அன்று சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பியபிறகு 84ஆம் ஆண்டு செப்டம்பரில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த ஜெயலலிதா, மீண்டும் அவருடைய ஒப்புதலோடு கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை கருதி ஜெயலலிதாவைத் துணை முதலமைச்சராக ஆக்கப்போவதாகவும் சில ஏடுகள் செய்தி வெளியிட்டு, அதுபற்றி அமைச்சர் காளிமுத்து அளித்த பேட்டியில் ஜெயலலிதா துணை முதலமைச்சரானால் தான் கடைசிவரை எதிர்ப்பேன் என்றார்.
மேலும் தன்னுடன் 85 சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அதனை எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்தார். இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் நிருபர்கள் கேட்டபோது, காளிமுத்துவின் பேட்டி ஏற்கெனவே கொடுத்ததாக இருக்கும் என்றும், தற்போது அமைச்சர்கள் யாரும் பேட்டியோ அறிக்கையோ தரக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும், துணை முதலமைச்சர் அமைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் 1.11.85 அன்று தெளிவாக்கினார்.
இதற்கிடையே அமைச்சர் வீரப்பன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தேவையில்லாமல் என் பெயரை இழுத்து எம்.ஜி.ஆர்.தான் கருணாநிதியை முதலமைச்சராக ஆக்கினார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், திருச்சிக்குச் சென்ற "நமது கழகம்" கட்சித் தலைவர் எஸ்.டி.சோமசுந்தரத்திடம் நிருபர்கள் வீரப்பன் இவ்வாறு கருணாநிதியை எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சராக ஆக்கினார் என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, எஸ்.டி.சோமசுந்தரம்; "பேரறிஞர் அண்ணா இறந்தபோது கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியவர்களில
் யார் முதலமைச்சராக வருவது என்ற பேச்சு மேலெழுந்தவாரியாகப் பேசப்பட்டது. தி.மு.கழக எம்.எல்.ஏ.க்களில் தக்கோலம் ராமசாமி மட்டுமேதான் நாவலர் முதலமைச்சராக வர ஆதரவு தெரிவித்தார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் கருணாநிதியைத்தான் ஆதரித்தார்கள். இருவரில் யாரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் தேர்தல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு எம்.பிக்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் தக்கோலம் ராமசாமிதான் நாவலர் முதலமைச்சராக வரவேண்டுமென முன்மொழிந்தார். அவர் சொன்னதை யாரும் வழிமொழியவில்லை. எம்.ஜி.ஆர்.தான் கலைஞர் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கினார் என்று சொல்வது சரியல்ல. தி.மு.கழகம் ஏதோ ராமாவரம் தோட்டத்தில் இருந்தபொருள் அல்ல, தி.மு.கழகம் ஜனநாயக முறையில் வளர்க்கப்பட்ட இயக்கம். சட்டமன்ற உறுப்பினர்களின் மெஜாரிட்டி பலம் கருணாநிதிக்கு இருக்கிறது என்பதை எம்.ஜி.ஆர்.
தெரிந்துகொண்டதும், அந்த மெஜாரிட்டி பக்கம் சேர்ந்து கொண்டார். ஆர்.எம்.வீரப்பன் அப்போது எம்.ஜி.ஆரின் கணக்குப் பிள்ளையாகத் தான் இருந்தார். தி.மு.கழகத்தின் அரசியல் விவரம் முழுவதும் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை" என்று பதிலளித்தார்.
மத்திய மாநில உறவுகள் பற்றி அறிக்கை பெறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா கமிஷன் 30.12.85 அன்று சென்னைக்கு வந்தபோது, தி.மு.கழகத்தின் சார்பில் நீண்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பெற்று, அந்தக் கமிஷனிடம் சாதிக் பாட்சா, நாஞ்சிலார், முரசொலி மாறன், ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு, சி.டி.தண்டபாணி ஆகியோர் சென்று அளித்தனர். மத்திய மாநில உறவுகள், மாநில சுயாட்சி, மொழிப் பிரச்சினை, ஆளுநர் பதவி தேவையற்றது என்பன போன்ற தி.மு.கழகத்தின் கருத்துக்கள் அந்த அறிக்கையிலே இடம் பெற்றிருந்தன.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. 98 நகர்மன்றங்கள், 382 ஊராட்சி ஒன்றியங்கள், 626 நகரப் பஞ்சாயத்துக்கள், 12610 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அ.தி.மு.க.வும், இந்திரா காங்கிரசும் உடன்பாடு கொண்டு எதிர்த்துப் போட்டியிட்டன.
ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள் எல்லாம் தி.மு.க.வோடு உடன்பாடு கொள்ள விரும்பிய போதிலும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் இரா.செழியன் விடாப்பிடியாகத் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். ஆனாலும் அந்தக் கட்சியின் ஓரிரு மாவட்டத் தலைவர்கள் தி.மு.க. அணியோடு உடன்பாடு கொண்டு போட்டியிட்டனர். நகர்மன்றத் தலைவர்கள் பதவிக்கு மொத்தம் 512 பேரும், உறுப்பினர்கள் பதவிக்கு 11,098 பேரும் போட்டியிட்டனர்.
அது போலவே ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பதவிக்கு 1439 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை உள்ளாட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டேன். தேர்தல் நாள் நெருங்கிய நிலையில் அ.தி.மு.க. அணியின் சார்பில் முக்கியமான ஏடுகளில் எல்லாம் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றில் "87 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயக் கடைகளை மூடினால், கருணாநிதி அரசியலைவிட்டு விலகத் தயாரா?"
என்று கேட்டிருந்தார்கள். விளம்பரம் வெளியான அன்றே நான் பெரிய குளம் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் "21ஆம் தேதி முதல் அதாவது உடனடியாகத் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை, சாராயக்கடைகளை மூடுவதாக அறிவித்தால் ஓராண்டுக் காலம் நான் அரசியலே பேசுவதில்லை; நாளைக்கே தமிழ்நாடு அரசாங்கம் கவர்னர் மூலமாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கத் தயாரா?"
என்றேன். அதற்குப் பிறகு அவர்கள் அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டார்கள். இந்தத் தேர்தலில் எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையிலே சில காலம் இயங்கிய "நமது கழகம்", தி.மு.கழக அணியோடு உடன்பாடு கொள்ள முதலில் பேச்சுவார்த்தை நடத்தி, திருவோணம், கொள்ளிடம், வேப்பூர், மேலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான இடங்களில் போட்டியிட உடன்பாடு கண்டு முதல்நாள் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுவிட்டுச் சென்ற பிறகு, மறுநாள் காலையில் அந்தக் கட்சியின் தலைவர் எஸ்.டி.
சோமசுந்தரம் தொலைபேசி மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு அந்த நான்கு இடங்களிலும் தி.மு.கழக வேட்பாளர்களே போட்டியிடட்டும் என்று கூறினார். பின்னர் அவர் விடுத்த அறிக்கையில் அவரது கட்சித் தொண்டர்கள் உடன்பாட்டிற்கு ஒப்புதல் தரவில்லை என்று தெரிவித்திருந்தார். உள்ளாட்சி மன்றத்தேர்தல்கள் குறித்துத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைக் கவனிக்க எஸ்.என்.தென்னரசு, கோவை மு.இராமநாதன், வை.கோபால்சாமி, மலர்மன்னன், பழனி மாணிக்கம், வழக்கறிஞர் பழனியப்பன் ஆகியோரைக் கொண்டக் குழு ஒன்று கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டது.
11.2.86 அன்று மாலையில் விழுப்புரம் கூட்டத்தில் பேசிவிட்டு மைலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கே பேசிவிட்டு, காரில் ஏறும் நேரத்தில் என்னை நோக்கி திராவகமும் கண்ணாடித் துகள்களும் கலந்த கலவை ஒன்று ஒரு புட்டியில் அடைக்கப்பட்டு வீசப்பட்டது. அது குறி தவறி நான் காரில் உட்காரும் இடத்திற்கு நேராக உள்ள காரின் முன்புற கண்ணாடி மீது மோதிச் சிதறிக் கீழே விழுந்தது.
காரின் முன்புறக் கண்ணாடி உறுதியாக இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் போயிற்று. அடுத்து, மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசும் போது மதுராந்தகம் ஆறுமுகம் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு விம்மி விம்மி அழுதவாறே தனக்கும் இப்படிப்பட்ட அரசியல் நடத்தத் தெரியும் என்றும் அதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டுமென்றும் என்னைக் கேட்டுக்கொண்டார். அதுபற்றிப் பின்னர் நான் பேசும்போது, "எதையும் அமைதியோடு சமாளிப்போம்!
அமைதியோடு சந்திப்போம்! அவர்கள் கல்லை எறியட்டும் - நாம் சொல்லால் அவர்களைச் சந்திப்போம்! அவர்கள் கத்தியை வீசட்டும்! நாம் நமக்குள்ள புத்தியால் அதைச் சந்திப்போம்! அவர்கள் திராவகத்தை வீசட்டும், நாம் நமக்குள்ள திறமையால் அதைச் சந்திப்போம்! அவர்கள் கண்ணாடித் துண்டுகளை நம் மீது வீசட்டும். நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தால் சந்திப்போம்" எனக் கூறினேன். ஆளுங்கட்சியினரின் அராஜகங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், இலட்சக்கணக்கிலே பணத்தைக் கொட்டிச் செலவழித்த நிலை அனைத்தையும் மீறி தி.மு.க.
அணி அந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது. மொத்தம் 97 நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலே 72 இடங்களிலே கழகக் கூட்டணி வெற்றி பெற்றது. தி.மு.கழகம் மட்டும் தனித்து 64 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், முஸ்லீம் லீக் 1 இடத்திலும், ஜனதா 2 இடங்களிலும், கழக ஆதரவு சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
அதுபோலவே ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி மன்றங்கள், ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் தி.மு.கழக அணி பெரும் வெற்றியைப் பெற்றது.
