உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இடைத் தேர்தல் வெற்றிகளும் -
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இடைத் தேர்தல் வெற்றிகளும் - · 283 / 391

67. இடைத் தேர்தல் வெற்றிகளும் - ஈழத்தமிழருக்கான போராட்டங்களும்! பொ துத்தேர்தல் நடந்து முடிந்து ஒரு திங்களே ஆகியிருந்த நிலையில் 1985 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 28-ஆம் தேதியன்று வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கும், பெரம்பூர், எழும்பூர் சட்டமன்றத் தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வடசென்னை நாடாளுமன்றத் தெகுதியில் 80ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நின்று வெற்றிபெற்று நாடாளுமன்றத் துணைத் தலைவராகவும் பதவி பெற்று பின்னர்க் கட்சிக்குத் துரோகம் செய்து விட்டுப்போன ஜி.லெட்சுமணன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அ.தி.மு.க.

தோழமையோடு போட்டியிட்டார். அவரை எதிர்த்துத் தி.மு.கழக அணியின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான என்.வி.நடராசன் அவர்களின் மூத்த மகன் வழக்கறிஞர் என்.வி.என்.சோமு போட்டியிட்டார். அதுபோலவே பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயமரியாதை வீரர் இளம்பரிதியின் மகன் இளம்வழுதியும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்டநாள் கழக உடன்பிறப்பு சு.பாலனும் போட்டியிட்டனர். ஒரு திங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தேர்தலிலே தோல்வியைச் சந்தித்த தி.மு.கழகம், இந்த இடைத்தேர்தலிலே மூன்று இடங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றி குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடு, "ஒரு மாதத்திற்கு முன்னால் பதினான்கு சதவிகித இடங்களை மட்டுமே வென்ற தி.மு.கழகம் இப்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் டிசம்பர் தேர்தலில் அ.தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்குக் காரணமாக இருந்த அனுதாப அலை தணிந்துவிட்டது என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது" என்று எழுதியது.

30.1.1985 அன்று நாட்ளுமன்ற மக்கள் அவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க "கட்சித் தாவல் தடை மசோதா" எந்தக் கட்சியும் எதிர்ககாத நிலையில் நிறைவேறியது. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை மனத்திலே கொண்டு, ஆந்திர மாநிலம், கர்நாடகம், சிக்கிம், குஜராத், ஒரிசா, இமாசலப் பிரதேசம், இராஜஸ்தான், புதுவை ஆகிய மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் மார்ச்த் திங்கள் 5-ஆம் தேதி நடைபெறுமென்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

புதுவையில் இந்திரா காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் உடன்பாடு கொண்டு, இந்திரா காங்கிரஸ் 20 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.கழகம் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு உடன்பாடு கண்டு தி.மு.கழகம் 22 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் என்று போட்டியிட்டன. இதற்கிடையே 85ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17ஆம் தேதியன்று, சென்னை பெரியார் திடலில், பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் - நான் எழுதிய "குறளோவியம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் நூலை வெளியிட, தினகரன் கே.பி.கந்தசாமி அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அந்த விழாவில் - என்னுடைய தமிழ் ஆசிரியர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், ஆட்சி மொழிக்காவலர் சி.இராமலிங்கனார், மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் தமிழ்க் குடிமகன், பத்திரிகையாளர் சாவி, டாக்டர் மா.நன்னன், டாக்டர் மெ.சுந்தரம், பேராசிரியர் ஹமீது, நாவலாசிரியர் சாண்டில்யன், ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்க்கனிப் பதிப்பகத்தின் சார்பில் என் மகள் கனிமொழி வரவேற்புரையாற்றிட, மூவேந்தர் முத்து நன்றி கூறினார். இந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை, திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து உலகத்திற்கு அளித்த ஓவியர் - பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு நடமாட முடியாத நிலையில் இருந்த வேணுகோபால் சர்மாவிற்கு, நிதியாக அல்ல - காணிக்கையாக வழங்குவதாக அறிவித்து, அவர் எங்கேயிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லி, அவரை அந்த விழாவிற்கு அழைத்து வந்து மேடையிலேயே அந்த நிதியினை வழங்கினேன்.

நிதியைப் பெற்றுக்கொண்ட வேணுகோபால் சர்மா அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் அவர் கடந்த மூன்றாண்டுக் காலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் - இந்த உதவி தன்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டதாகவும், வள்ளுவர் எழுதிய "ஈகை" என்பதற்கு இதைத்தான் எடுத்துக்காட்டாகக் கருதுவதாகவும், இந்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது என்றும், வள்ளுவருக்கு உருவம் தந்த கைகளால் நன்றிக் கடிதத்தைக்கூட எழுத முடியாமல் இருப்பதை நினைத்து வருந்துவதாகவும் எழுதியிருந்தார். (அந்த மாபெரும் ஓவியருக்கு தனிப்பட்ட முறையிலே என்னால் செய்யப்பட்ட உதவி அது என்ற போதிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி ஏற்பட்டபோது, முதலமைச்சர் நிதியிலிருந்து கணிசமான நிதியினையும், அவருடைய குடும்பத்தாரை தலைமைச் செயலகத்திற்கே வரவழைத்து வழங்கி மகிழ்ந்தேன்.)

நான் எழுதிய 'குறளோவியம்' நூலினை வெளியிடுவதற்காள விழாவிற்காகக் கலைவாணர் அரங்கம் வேண்டுமென்று அ.தி.மு.க. அரசை அணுகியபோது, ஒரு மாத காலத்திற்குக் கலைவாணர் அரங்கம் காலியாக இல்லை என்று கூறித் தருவதற்கு மறுத்துவிட்டார்கள். அவ்வாறு மறுத்துவிட்ட போதிலும் நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று கலைவாணர் அரங்கம் காலியாகத்தான் இருந்தது. புதுவை மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் ராஜீவ் காந்தி 28.2.85 அன்று நள்ளிரவு மூன்று மணிக்குச் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அவரை வரவேற்றதோடு, பின்னர் ஆளுநர் மாளிகைக்கும் சென்று அதிகாலை 3.15 மணிக்குச் சந்தித்து அரை மணி நேரம் உரையாடினார். எம்.ஜி.ஆர். பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்ததும், ஜெயலலிதா ராஜீவ்காந்தியைச் சந்தித்து அரை மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். மார்ச்த் திங்கள் முதல் வாரத்தில் நடைபெற்ற அந்தத் தேர்தல்களில் புதுவையில் இந்திரா காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணியும், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலே இந்திரா காங்கிரசும், ஆந்திராவிலே தெலுங்கு தேசமும், கர்நாடகாவிலே ஜனதா கட்சியும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் சங்கராம் பரீட்சத் கட்சியும் வெற்றி பெற்றன.

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' வார இதழைத் தொடங்கி நடத்தி வந்த அலுவலகத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் - நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டுமென்று விரும்பி, 1985ஆம் ஆண்டு மார்ச்த் திங்களில் மூன்று இலட்ச ரூபாய் கொடுத்து, அண்ணா அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கியது. இலங்கையில் சிலகாலம் நின்றிருந்த கொடுமைகள் மீண்டும் 1985ஆம் ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.

இலங்கையிலே தமிழர் வாழும் பகுதிகளிலே திட்டமிட்டுச் சிங்களவரைக் கொண்டுவந்து குடியேற்றினர். அப்பாவி தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். சிங்கள இராணுவம் அன்றாடம் தமிழர்களைக் கொன்று குவித்தபடி இருந்தது. இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்குத் தமிழகத்தில் ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டுமென்று நானும், பேராசிரியரும், காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் கலந்தாலோசித்து - "தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு" (டெசோ) என்ற அமைப்பினை உருவாக்குவதென்று திட்டமிட்டு, அதனை 26.4.85 அன்று திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டடத்தில் அறிவித்தேன்.

பூர்வாங்கமாக நான் அந்தக் கூட்டத்தில் அறிவித்த போதிலும், மே திங்கள் 13 - ஆம் தேதிதான் அமைப்பு ரீதியாக "டெசொ" அமைப்பு உதயமாயிற்று. அந்த டெசோ அமைப்புக்குத் தலைவராக நானும், உறுப்பினர்களாக பேராசிரியர், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் இடம் பெற்றோம். ஈழத் தமிழருக்கு ஆதரவாக, திராவிட முன்னேற்றக்கழகப் பொதுக்குழு எடுத்த தீர்மானத்தின்படி - ஏப்ரல் திங்கள் 29 - ஆம் தேதி சென்னையிலே நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதியன்று திருச்சியில் 3000 பேரும், மே 3-ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6-ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7-ஆம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8-ஆம் தேதி வடஆர்க்காட்டில் 2,500 பேரும், 13ஆம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ஆம் தேதி செங்கை அண்ணா மாவட்டத்தில் 3000 பேரும், 17ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18ஆம் தேதி ராமநாதபரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ஆம் தேதி நெல்லை, குமரி புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டுக் கைதாயினர்.

அ.தி.மு.க. அரசு கைதானவர்களில் பாதிப்பேரை மட்டும் வழக்கிலே சேர்த்துக் கொண்டு, எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் முயற்சியிலே ஈடுபட்டது. அப்படியும் தமிழகம் முழுவதும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க தி.மு.கழகம் எடுத்த அந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தனர். மேலும் முதலிலேயே நான் அறிவித்திருந்தபடி 16.5.85 அன்று செங்கை அண்ணா மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

பேராசிரியர், நாஞ்சிலார், மதுரை ஆதீனம் ஆகியோர் காஞ்சிபுரம் வந்து என்னை வழியனுப்ப, மறியல் நடத்தச் சென்ற என்னையும், என்னுடன் வந்த ஆயிரம் பேரையும் கைது செய்து, செங்கற்பட்டு நீதி மன்றத்தின் முன் கொண்டுவந்து, நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்ட தன் பேரில் சென்னைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். செங்கற்பட்டு நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுமே, அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத 25 வயதே நிரம்பிய கழகக் காளை வேணு, நீதிமன்ற வளாகத்திற்குள்ளே இருந்த அளவற்ற கட்டுக்காவலையும் மீறித் தன் உடலுக்குத் தீயிட்டுக்கொண்டார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையிலே சேர்த்து சிகிச்சை அளித்தும் பயனின்றி 22.5.85 அன்று அவர் மறைந்தார். அதைப்போலவே திருச்சி ஆண்டாள் தெருவைச் சேர்ந்த கல்யாணி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் என்ற பார்ப்பன இளைஞர் 17.5.85 அன்று அண்ணா சிலை அருகே வந்து நின்று தன் உடலுக்கு தீ வைத்துக் கொண்டு, மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டும் பயனில்லாமல் மறுநாள் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மதுரையில் பொன்னையன் என்ற தோழர் நான் கைதான செய்தியைக் கேட்டு, அந்த அதிர்ச்சியிலேயே தன் உயிரை விட்டார்.

என்னை விடுதலை செய்யவேண்டுமென்று கோரி, திருச்சிச் சிறையிலே மறியல் போரில் ஈடுபட்டுக் கைதாகிக் காவலில் இருந்த ரமேஷ் குமார் என்ற சீர்காழி தோழர் எரியும் அடுப்புக்குள் குதித்துத் தீக்குளிக்க முயன்றபோது, பலத்த காயங்களோடு காப்பாற்றப்பட்டு மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டார். 19.5.85 அன்று தர்மபுரியில் பெரியண்ணன் என்பவரின் மகன் அப்புலு என்ற கழகத் தோழர் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டு "கலைஞரை விடுதலை செய்" என்று முழங்கிக் கொண்டே தன் உயிரைவிட்டார்.

தஞ்சை வலங்கைமானில் ரங்கன் என்ற கழகத் தோழர் தன் கையிலே கழகத்தின் இருவண்ணக் கொடியைச் சுற்றிக் கொண்டு, ஒரு மரத்தில் ஏறித்தூக்குப் போட்டுக் கொண்டு மறைந்தார். மேலும் நான் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகத் திருச்சி சிறைச்சாலையிலே இருந்த கழகத் தோழர்கள் உண்ணாவிரதமும், கண்டன ஊர்வலமும் சிறைக்குள்ளேயே இருக்க முற்பட்டபோது, சிறைக் காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்- பட்டு, அதன் காரணமாக இருநூறுக்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

திருச்சிச் சிறையிலே நடைபெற்ற இந்தக் கொடுமையான சம்பவத்தைக் கண்டித்துப் பேராசிரியரும், மற்றும் தமிழகத்திலே உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கைகளை விடுத்தனர். ஆனால் சிறையிலே தாக்கப்பட்ட கழகத் தோழர்கள் மீதே அ.தி.மு.க. அரசு வழக்குப்போட்டது. தமிழகத்திலே மறியல் செய்த கைது செய்யப்பட்டவர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுக்கப்பட்ட நேரத்தில், அதே காரணத்திற்காகப் புதுவையிலே மறியல் நடத்திக் கைதான கழகத் தோழர்கள் அனைவரையும் புதுவை மாநில அரசு கைதான அன்று மாலையிலே விடுதலை செய்தது.

ஆனால் தமிழக அரசு கைது செய்தவர்களை எல்லாம் 15 நாட்கள் காவலில் வைத்து, அதற்குப் பின் நீதிபதியின் முன் நிறுத்தியபோது பல மாவட்டங்களில் நீதிபதிகள் கைதானவர்களை எல்லாம் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அந்த வகையில் 30ஆம் தேதி வரை சிறையிலே இருந்து அன்றோடு காவல் கெடு முடிவடைந்த காரணத்தினால், செங்கற்பட்டு நீதிமன்றத்திற்கு அன்று அழைத்துச் செல்லப்பட்டேன். நீதிபதி என்னைப் பார்த்துக் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டபோது, "நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் சட்டப்படி நான் குற்றவாளியாக இருக்கலாம்; ஆனால் எனது தமிழ் இன உணர்வு அடிப்படையில் என் மனசாட்சிப்படி நான் குற்றவாளி அல்ல" என்று கூறினேன்.

உடனே நீதிபதி நான் சிறையில் இருந்த 15 நாட்களைத் தண்டனைக் காலமாக அறிவித்து, விடுதலை செய்தார். 85ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரத்தில் டெல்லியில் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் சந்தித்துப் பேசி இலங்கைப் பிரச்சினையில் ஒரு சமரசத் திட்டத்தை வகுத்தார்கள். இராணுவமும், விடுதலைப்புலிகளும் போர் புரிவதை மூன்று மாதத்திற்கு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அமைதியான சூழ்நிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்பதும் தான் அந்தச் சமரசத் திட்டமாகும்.

இந்தச் சமரசத் திட்டத்தைக் கழகத்தின் சார்பில் நானும் வரவேற்று இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது என்றும், சிங்கள இராணுவம் தாக்குதலை உண்மையாகவே நிறுத்திக்கொள்ள முன்வரவேண்டுமென்றும் அறிக்கை விடுத்தேன். போர் நிறுத்தம் என்பதற்கு ஒப்புக்கொண்ட இருதரப்பினரில், விடுதலைப் போராளிகளின் இயக்கங்கள் ஒன்று- பட்டு அதனை வெறும் வார்த்தை அளவில் இல்லாது செயல் அளவிலும் கடைப்பிடித்த போதிலும், சிங்கள இராணுவம் தன் கொலை வெறித்தனத்தை நிறுத்தவில்லை.

இதுகுறித்து இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன். இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே சமரசப் பேச்சு 8.7.85 அன்று பூட்டான் தலைநகரான திம்புவில் தொடங்கியது. இதில் விடுதலைப்புலிகளும், மற்ற போராளி இயக்கப் பிரதிநிதிகளும், அமிர்தலிங்கம், சிவ.சிதம்பரம் போன்றவர்களும் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்ற போதிலும

், உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடருவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கிடையே 30.6.85 அன்று சென்னை பெரியார் திடலில் மதுரை ப.நெடுமாறன் எழுதிய "மத்திய - மாநில உறவுகள் - சில குறிப்புகள்" என்ற நூலினை தி.சு.கிள்ளிவளவன் தலைமையிலே நான் வெளியிட, அரசியல் நிர்ணயசபையின் முன்னாள் உறுப்பினர், பழம்பெரும் தியாகி எல்.கிருஷ்ணசாமி பாரதி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் குறைகூறி, அந்தக் கட்சியிலே ஜெயலலிதாவிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் அமைச்சர்கள் எல்லாம் இலஞ்சம் வாங்குவதாகவும் தெரிவித்து, அதன் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து எம்.ஜி.ஆரால் நீக்கப்பட்டு, வெளியே வந்து "நமது கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்த எஸ்.டி.சோமசுந்தரம், ப.மாணிக்கம், அ.நல்லசிவம், எம்.ஏ.லத்தீப், மன்னர்மன்னன், எம்.கே.டி.சுப்பிரமணியம் ஆகியோர் அந்த விழாவிலே உரையாற்றினர்.

நான் பேசும்போது மத்திய மாநில உறவுகள் பற்றியும், மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினேன். 1950 ஆம் ஆண்டு சென்னை ஓட்டல் ஒன்றில் ஒரு அறையில் தங்கிக் கலைவாணரின் படத்திற்காகத் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது ஆம்பூர் சம்பங்கியைச் சந்தித்தேன். அதுமுதல் என் நெருங்கிய நண்பராகப் பழகினார். சிரித்த முகம் - குறு குறுப்பான பார்வை-குளிர்ச்சி நிறைந்த பேச்சு-குழைந்து குழைந்து பழகி எவரையும் தன்வயப்படுத்தும் பண்பு-தலைதாழாத் தன்மான உணர்வு- இத்தனைக்கும் சொந்தக்காரரான ஆம்பூர் சம்பங்கி சென்னை மருத்துவமனையில் கடைசி மூச்சு விட்டுக்கொண்டிருப்பதாக ஆர்க்காடு வீராசாமி கூறியதும், விரைந்து மருத்துவமனைக்குச் சென்று என் கண்ணீரைக் கொட்டியும் அந்தச் சம்பங்கிப் பூ உதிர்ந்தேவிட்டது.

அவரது துணைவியாருக்கும் அருமைச் செல்வங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து குறைந்த வயதிற்குள்ளாகவே கழகத்தினர் அனைவரது அன்பையும் பெற்றுத் தஞ்சை மாவட்டக் கழகச் செயலாளராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தாழை மு.கருணாநிதி சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்தவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு - பின் சண்டிகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்று நலமடைந்த நிலையில் சென்னை திரும்பினார்.

நலம்பெற்று விட்டார் என்று நான் நினைத்திருந்த நேரத்தில் - மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளாகி 30.7.86 அன்று மறைந்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பின்னர் நானும் திருவாரூர் தொகுதியிலே உள்ள தாழக்குடி என்ற அந்தக் கிராமத்திற்குச் சென்று இறுதி ஊர்வலத்திலே பங்கேற்றேன். நான்காண்டுக் காலமாக சீக்கியர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருந்து வந்த தகராறுக்கு 24.7.85 அன்று சமரசம் காணப்பட்டது.

அதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும், சீக்கியர்களின் தலைவர் லோங்கோவாலும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி - அதுவரை பஞ்சாப் மாநிலத்திற்கும், அரியானா மாநிலத்திற்கும் பொதுவாக இருந்து வந்த சண்டிகார் நகரம், பஞ்சாப் மாநிலத்தில் சேரும் என்றும், அதற்குப் பதிலாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தி பேசும் பகுதிகள் சிலவற்றை அரியானா மாநிலத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும், அந்த மாற்றம் 26.1.86 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூலைத் திங்களில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின் வெற்றி நீண்ட நாள் நீடிக்க வில்லை. பிரதமருடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அகாலி தளத் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால், ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒரு கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த நான்கு பேர் எழுந்து லோங்கோவாலை நோக்கிச் சுட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டும் பயனின்றி அன்றிரவு இறந்து போனார்.

நான்கு பேர் சுட்டதில் இருவர் பிடிபட்டனர். இருவர் தப்பிவிட்டனர். அந்த நிகழ்ச்சி பற்றி என்னிடம் நிருபர்கள் கேட்ட- போது, "ஜனநாயக நாட்டில் ஓட்டு முறை மூலம் (பேலட்) காணவேண்டிய தீர்வுகளை வேட்டு முறை மூலம் (புல்லட்) காண முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று கூறினேன்.

லோங்கோவாலை அடுத்து சீக்கியர் கட்சிக்குத் தலைவராக சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்பட்டார். லோங் கோவாலைச் சுட்டுக் கொன்ற கொலையாளி ஜியான்சிங் கொடுத்த வாக்குமூலத்தில் தான் பிந்தரன்வாலேயின் சீடன் என்றும், தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டான். இதன்பின் செப்டம்பர்த் திங்களில் பஞ்சாப்பில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்று சீக்கியர் கட்சி அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

அந்தக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக பர்னாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.கழகத்தின் சார்பில் பர்னாலாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துத் தந்திக் கொடுத்தேன்.