நெஞ்சுக்கு நீதி
அ.தி.மு.க.வைக் கைப்பற்ற · 282 / 391
66. அ.தி.மு.க.வைக் கைப்பற்ற "ஜெயா" சதி ஆரம்பம்! இந்திரா காந்தியின் சோக முடிவைத் தொடர்ந்து டெல்லி அமளிக்காடாக மாறியது. 'மாறியது' என்பதை விட "மாற்றப்பட்டது" என்பதே பொருந்தும். அப்போது மத்திய அமைச்சராக இருந்த எச்.கே.எல்.பகத் தூண்டி விட்டுத்தான் சீக்கிய மக்களைக் குண்டர்கள் வேட்டையாடினார்கள் என்ற செய்தி பரவியது. ஐநூறுக்கு மேற்பட்ட சீக்கியர்கள் வெட்டுண்டும், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட சீக்கியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டும் கொல்லப்பட்டார்கள் (1984 இல் நடைபெற்ற அந்தப் பயங்கரப் படுகொலைகளைத் தூண்டி அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் (1996 பிப்ரவரியில்) பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து முன்னாள் மத்திய அமைச்ர், பகத் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் உடல்நலக் குறைவுடன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது செய்தி).
இந்திரா காந்தியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெல்லி சென்றிருந்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் நாஞ்சிலார் டெல்லியில் சீக்கிய அப்பாவி மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களை எங்களுக்குச் சொன்னபோது திடுக்கிட்டோம்; அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் அந்த வன்முறைகள் தவிர்க்க முடியாதவைகள் என்பது போலப் புதிதாகப் பொறுப்பேற்ற பிரதமர் ராஜீவ் காந்தி அந்தப் பயங்கர அமளிக்கு ஆதரவாகப் பேசியிருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
4.11.84 தேசிய முரசொலியில் "வாழ்க இந்திரா! வீழ்க வன்முறை!" என்ற தலைப்பில் கடிதம் ஒன்ற எழுதினேன். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 2 ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் இலங்கையிலிருந்து "ஸ்ரீலங்கா" என்ற விமானம் சென்னை மீனம்பாக்கம் வந்தது. இரவு 11 மணிக்கு மீண்டும் அந்த விமானம் இலங்கைக்குப் புறப்பட வேண்டும். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்த இரண்டு பார்சல்கள் சர்வதேச விமானப் பயணிகள் வருகின்ற பகுதியில் இறக்கப்பட்டிருந்தன.
அதனை வாங்க யாரும் வரவில்லை. இலங்கை விமானத்தைத் தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தொலைபேசித் தகவல்கள் வந்ததின் பேரில் விமானத்தையும் அதில் வந்த பார்சலையும் பரிசோதிப்பதில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது இலங்கை விமானத்தில் வந்து கேட்பாரற்றுக் கிடந்த பார்சல் பயங்கரமாக வெடித்தது. விமான நிலையத்தின் ஒரு பகுதியே இதனால் இடிந்து விழுந்தது. இந்த வெடிகுண்டு விபத்துக் காரணமாக முப்பது பேர் அந்த இடத்திலேயே மாண்டனர்.
சுமார் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 25.7.1983 அன்று இலங்கையில் பயங்கர கலவரம் மூண்டு, ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை சிங்களர்களும், இராணுவத்தினரும் படுகொலை செய்த நிகழ்ச்சி நடந்து ஓராண்டு முடிந்ததையொட்டி 23.7.84 முதல் ஒரு வார காலம் இலங்கைத் தமிழர்கள் துக்கம் கடைப்பிடித்தனர். அந்த ஒரு வார காலத்தில் பெரிய அளவில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அதற்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அடக்கு முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
விடுதலைப்புலிகளைத் தேடிப்பிடித்து அடக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு தமிழர்களைச் சுட்டுக் கொல்வதிலும், சித்ரவதை செய்வதிலும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை இராணுவம் கைது செய்தது. உடனடியாகத் தலையிட்டு ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பிரதமர் இந்திரா காந்திக்குக் கழகத்தின் சார்பில் நீண்ட தந்தி ஒன்று அனுப்பினேன். இந்திரா காந்தி அவர்களும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிற்கு இலங்கைச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன என்று கடிதம் எழுதினார்.
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்பவேண்டுமென்று கேட்பது முட்டாள்தனம் என்று இராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் விமர்சித்தார். அவ்வாறு விமர்சித்த ஆர்.வெங்கட்ராமன் அந்த அமைச்சர் பதவியில் நீண்ட நாள் நீடிக்கவில்லை. 30.8.84 ஆம் தேதியோடு துணை ஜனாதிபதியாக இருந்த இதயதுல்லா அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்த காரணத்தினால் இந்திரா காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.வெங்கட்ராமன் நிறுத்தப்பட்டு அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
84 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 5 ஆம் நாள் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி வீரர்களில் ஒருவரும் மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும் தனிப்பட்ட முறையிலே எனக்கு மிகவும் வேண்டியவருமான மதுரை முத்து திடீர் மாரடைப்புக் காரணமாகக் காலமானார். தனது ஆரம்ப கால அரசியலில் தென்பாண்டி மண்டிலத்தில் விழுப்புண் பல பெற்றுத் திராவிட இயக்கத்தை எதிர்நீச்சல் போட்டு வளர்த்த அடலேறு அவர். தென் மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் செல்லும் போதெல்லாம் அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டது கிடையாது.
1972 ஆம் ஆண்டு கழகத்திற்கு எதிராக எம்.ஜி.ஆர். பேசிய போது அவரைக் கழகத்திலிருந்து விலக்க வேண்டுமென்று முனைப்பாக நின்றவர்களில் மதுரை முத்துவும் ஒருவர். ப.உ.சண்முகம், சத்தியவாணி முத்து, அரங்கண்ணல், முரசொலி மாறன் போன்றவர்கள் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுப்பதைச் சற்றுத் தாமதிக்கலாம் என்று யோசனை கூறியபோது அவர்களை வேகமாக எதிர்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை விடவேண்டுமென்று குரல் கொடுத்தார்.
ஆனால் அதே மதுரை முத்து பின்னர் மதுரை மாவட்ட உட்கட்சிக் குழப்பம் காரணமாகத் தி.மு.க.விலிருந்து விலகி எம்.ஜி.ஆர். கட்சியிலே இணைந்தார். எனினும் மொழிப்பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை போன்றவற்றில் மத்திய மாநில அரசுகளைக் கண்டிக்கவும் அவர் தவறவில்லை. 1986 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2 ஆம் தேதியன்று மதுரையிலே நான் திறந்துவைத்த மதுரை மாநகர் மாவட்டத் தி.மு.கழகக் கட்டிடத்திற்கு "மேயர் முத்து மன்றம்" என்று பெயர் சூட்டினேன்.
பதினைந்து நாட்களுக்கு முன் சென்னை மருத்துவமனைக்கு வந்து தன்னைப் பார்த்து விட்டுப் போன இந்திரா காந்தி பிரதமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தோ ராஜுவ் காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தோ எம்.ஜி.ஆருக்கு எதுவும் தெரியாது. 8ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்ட அவர் சரியாக ஒரு மாதத்திற்குப் பின் நவம்பர் 5 ஆம் தேதி இரவு தனி விமானம் மூலம் நியூயார்க் நகருக்கு மருத்துவ சிகிச்சையைத் தொடருவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடைய துணைவியார் ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, பத்து மருத்துவர்கள் உட்பட 24 பேர் கொண்ட குழுவே எம்.ஜி.ஆருடன் அமெரிக்கா சென்றது. 1984 ஆம் அண்டு டிசம்பர்த் திங்கள் 24 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெறுமென்றும், 20.11.84 முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்குமென்றும் தேர்தல் கமிஷன் 13.11.84 அன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்த விரும்பும் மாநிலங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆளுநரிடம் சட்டமன்றத்தைக் கலைக்கும்படி சிபாரிசு செய்தால் அந்த மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களையும் மக்களவைக்கான தேர்தலுடன் இணைத்து நடத்திட இயலுமென்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அ.தி.மு.க.வும் இந்திரா காங்கிரசும் உடன்பாடு கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட நோய் இந்திரா காந்தியின் திடீர் சாவு இரண்டையும் பயன்படுத்தி, அந்த அனுதாப அலையிலே தமிழகச் சட்டமன்றத் தேர்தலிலும் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணிய அ.தி.மு.க. பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்து உடன்பாடு பற்றிப் பேசிய பின் மக்களவைத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் இணைத்து வைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அதற்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலே விரைவாக நலம் பெற்று வருவதாகவும் சில நாட்களில் தாயகம் திரும்பவிருப்பதாகவும் ஏடுகள் மூலம் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டனர். தமிழகச் சட்டமன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் இணைத்து வைத்துக் கொள்ள முன் வந்த மத்திய அரசும் தேர்தல் கமிஷனும் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த புதுவை மாநிலச் சட்டமன்றத் தேர்தலைத் மக்களவை தேர்தலுடன் இணைத்து வைத்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.
நவம்பர் 22ஆம் தேதியன்று அண்ணாநகரில் நடைபெற்ற தேர்தல் மாநாட்டில் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டேன். இந்தத் தேர்தலில் தி.மு.கழகத்தோடு உடன்பாடு கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள், 17 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஜனதா கட்சி 17 சட்டமன்றத் தொகுதிகளிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உழவர் உழைப்பாளர் கட்சி பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சி ஒரு நாடாளுமன்றத் தொகுதி 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு நாடாளுமன்றத் தொகுதி 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டன.
கழகம் 13 நாடளுமன்றத் தொகுதிகள் தோழமைக் நாடாளுமன்றத் கட்சிகளுக்குப் போக மீதமுள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 158 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தலில் ஜெயலலிதா ஆதரவாளர்களுக்கும், ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர்களுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. ஜெயலலிதா ராஜீவ் காந்தியிடம் புகார் கூற தூதுவரை அனுப்பிய நேரத்தில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே பட்டியலை வெளியிட்டுவிட்டார்.
தமிழகத்திலே வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடங்கியது. பொதுவாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் அந்தந்தத் தொகுதியிலே உள்ள தேர்தல் அதிகாரியின் முன்சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு அவர் முன் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையிலே வாய் பேச முடியாத நிலையில் கையெழுத்துப் போட முடியாத நிலையில் இருந்து கொண்டு தமிழகத்திலே உள்ள ஆண்டிப்பட்டித் தொகுதிக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
எம்.ஜி.ஆரின் வேட்பு மனுவை அமெரிக்காவிலிருந்து ஒருவர் கொண்டு வந்தார். அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதுவரக அதிகாரி அவரே மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அவர் முன்னால் எம்.ஜி.ஆர். உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதற்கெல்லாம் மத்திய அரசு முழுஒத்துழைப்பும் தந்தது. வெளிநாட்டில் ஒருவர் இருந்து கொண்டு இந்தியாவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படலாமா என்று ஏடுகள் பல ஐயப்பாடுகளை எழுப்பின.
கடந்த முறை இதே ஆண்டிப்பட்டித் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நின்று வெற்றி பெற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியினையும் ஒதுக்கிடாததால் அவர் "எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ஆர். புரட்சிக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கி அக்கட்சியின் சார்பில் சேடப்பட்டித் தொகுதியிலே போட்டியிட்டார். நோய்வாய்ப்பட்ட நிலையிலே எம்.ஜி.ஆர். தோற்றமளித்த படங்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி மறைந்த இந்திரா காந்தியின் படங்களும் கிராம மக்கள் மத்தியிலே அந்தக் கூட்டணிக்குப் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தித் தந்தன.
24 ஆம் தேதி தேர்தல் என்றால் அதற்கு ஐந்து நாட்களுக்கு முன் 19 ஆம் தேதியன்று எம்.ஜி.ஆருக்கு அமெரிக்க மருத்துவமனையிலே மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதியின் ஒரு சிறுநீரகம் எடுத்து எம்.ஜி.ஆருக்குப் பொருத்தப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை பற்றி அறிந்து கொள்ளக்கூட ஆர்வமின்றி, அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் தங்கள் தொகுதியிலே தீவிரப் பிரச்சாரத்திலே அன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க மருத்துவர்களின் பெருமுயற்சியின் காரணமாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று எம்.ஜி.ஆர். நலத்தோடு இருப்பதாகச் செய்திகள் வந்தன. நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்ததன் காரணமாக 84 ஆம் ஆண்டு தேர்தலிலே போட்டியிடவில்லை. 2.12.84 அன்று நள்ளிரவில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரமான போபாலில் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து விஷவாயு கசிந்து வெளியேறியதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டனர். தெருக்களிலே ஆடுமாடுகள், நாய்கள் எல்லாம் இறந்து சிதறிக் கிடந்தன. மீண்டும் விஷவாயு கசியுமோ என்று பீதிகொண்டு இரண்டரை இலட்சம் மக்கள் போபாலைவிட்டு வெளியேறினார்கள். தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவரும் விவசாயிகளுக்கு விரோதமாக நடைபெற்ற அ.தி.மு.க.ஆட்சியை அகற்ற இடைவிடாது உழைத்து வந்த வருமான நாராயணசாமி நாயுடு சாத்தூர், கோவில்பட்டித் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்கக் கூறியபோதிலும் கேளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தூங்கும்போதே இறந்துவிட்டார். கழகத் தோழர்கள் அவரது உடலை அவருடைய சொந்த ஊரான வையம்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு எனக்கும் தகவல் தெரிவித்தனர். கழகத்தின் சார்பில் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா அவர்களை அனுப்பிவைத்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.
சட்டமன்றத்திற்கு அ.தி.மு.க 130 இடங்களிலும், காங்கிரஸ் 62 இடங்களிலும், தி.மு.க. 22 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், முஸ்லீம்லீக் 2 இடங்களிலும், ஜனதா 3 இடங்களிலும், கா.கா.தே.கா 2 இடங்களிலும், அ.இ.பா.பி 2 இடங்களிலும், குடியரசு கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. நாடாளு- மன்றத்தில் பிரதமராக ராஜீவ் காந்தி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிப் பிரமாணம், அமைச்சரவை அமைப்புப் போன்ற செயல்பாடுகள் நிறைவேறிய நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.
அமெரிக்காவில் இருந்ததால் எந்தவிதமான முடிவையும் மேற்கொள்ள முடியாமல் தேக்கநிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆரை மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்து அந்தத் தீர்மானத்தைக் கொண்டு போய் ஆளுநரிடம் கொடுத்தார்கள். எம்.ஜி.ஆர் இல்லாதநிலையில் என்ன முடிவெடுப்பத
ு என்பது பற்றிச் சட்டவல்லுநர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக ஆளுநர் குரானா கூறினார். அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை பெற்றுவருவதற்காக நாவலரும் தலைமைச் செயலாளர் கே.சொக்கலிங்கமும் 4.1.85 அன்று அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கச் சிறிது காலதாமதமாகுமென்ற நிலை இருக்குமானால் இடைப்பட்ட காலத்தில் அவர் நியமிக்கக் கூடிய வேறு ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என்று யோசனை தெரிவித்து எம்.ஜி.ஆருக்கு ஆளுநர் ஒரு கடிதம் எழுதியதால் நாவலர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்றிருப்பதாகவும், எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் ஆளுநர் நிருபர்களிடையே கூறினார்.
எம்.ஜி.ஆரைப் பார்த்த பிறகு நிருபர்களைச் சந்தித்த நாவலர் பிப்ரவரி முதல் வாரத்தில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பிப் பதவியேறிபார் என்று கூறினார். ஆளுநருக்கு எம்.ஜி.ஆர். அனுப்பிய பதிலில் தான் ஜனவரி மாத இறுதியில் சென்னை திரும்பி வந்து பதவியேற்கும் வரையில் காபந்து அரசினை நீடிக்க அனுமதிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு நாவலர் திரும்பியபோது 13.1.85 அன்று டெல்லி விமான நிலையத்திற்குச் சென்று ஜெயலலிதாவும் சேலம் வழக்கறிஞர் கண்ணனும் வரவேற்றார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு முன்னிலையில் சென்னையில் 20ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மாநிலங்கள் அவை அ.தி.மு.க கட்சித் தலைவராக ஆர்.மோகனரங்கமும் அதுவரை துணைத்தலைவராக இருந்த ஜெயலலிதாவிற்குப் பதிலாக ஆலடி அருணாவும் கொறடாவாக வலம்புரி ஜானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்களவை நிர்வாகிகள் தேர்தல் நடப்பது பற்றித் தனக்கு எதுவும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூட்டத்துக்கு அழைப்பு எதுவும் தனக்கு வரவில்லை என்றும் அந்தக் கூட்டத்தில் கலந்து- கொள்ளாத ஜெயலலிதா அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.
நிர்வாகிகள் தேர்தல் எம்.ஜி.ஆரின் ஆலோசனைப்படி நடந்ததாகக் கூறியிருக்கிறார்களே என்று ஒரு நிருபர் ஜெயலலிதாவிடம் கேட்டபோது "எம்.ஜி.ஆர். அனுப்புவதாகச் சொல்லப்பட்டு வரும் கடிதம் எல்லாம் முழுக்க முழுக்க மோசடியானது" என்றார். மேலும் அவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி. மற்றும் சிலரால் எம்.ஜி.ஆர்.கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அது குறித்து உண்மை தெரிய பாரபட்சமற்ற விசாரணை தேவை என்றார்.
"உங்களுக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி விரோதியா? அல்லது வீரப்பனா?" என்று ஒரு நிருபர் கேட்டபோது "கருணாநிதி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். தனிப்பட்ட முறையில் எனக்கு விரோதி அல்ல. ஆனால் வீரப்பன் என்னை விரோதியாகப் பார்க்கிறார்" என்றார்.
ஏடுகளில் இதைக் கண்டவுடன் அமைச்சர் வீரப்பனின் ஆதரவாளரான அமைச்சர் காளிமுத்து விடுத்த அறிக்கையில் "கட்சிக்குள்ளே தம்மை எதிர்ப்பவர்களை எல்லாம் வீழ்த்த எதிர்க்கட்சிகளோடு ஜெயலலிதா தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுகிறார். கட்சியை விட்டே நீக்க வேண்டிய ஜெயலலிதாவைத் தமது பெருந்தன்மை காரணமாக எம்.ஜி.ஆர். ராஜ்யசபை துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து மட்டும் அகற்றியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அப்பல்லோ மருத்துவமனையிலே இருந்த போதே கட்சியைக் கைப்பற்ற ஆள் திரட்டியவர் ஜெயலலிதா" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் 24.1.85 தேதி "மன்ற முரசு" இதழில் எழுதும்போது, "தன் பதவி பறிபோன உடனேயே புரட்சித் தலைவர் நல்ல உணர்வில் இல்லை என்று கூசாமல் வாய்க்கொழுப்போடு சொல்லுகிற ஜெயலலிதாவின் வேசித்தனமான விளக்கங்களை நாடு புரிந்து கொண்டது."
என்றும், "நலம் பெற்றுவரும் தங்கத் தலைவனை எதற்கும் துணிந்த கொடுமைக்காரி ஜெயலலிதா தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் தந்துவிடாதீர்கள்" என்றும் எழுதியிருந்தார் என்றால், அப்போது அந்தக் கட்சியிலே எந்த அளவிற்கு உட்கட்சிக் குழப்பம் தலைதூக்கி நின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
4.2.1985 அன்று எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். அவர் உடல் நலம் பெற்றுத் திரும்பி வந்தமைக்காக வாழ்த்துத் தெரிவித்து மேலும் பல்லாண்டு காலம் அவர் நலமோடு வாழ்ந்திட வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கடிதம் ஒன்றை அவருக்கு நான் எழுதினேன். 6 ஆம் தேதியன்று எம்.ஜி.ஆர் ஆளுநர் குரானாவைச் சந்தித்தார். அதுபற்றிப் பின்னர் ஆளுநர் நிருபர்களிடம் கூறும்போது எம்.ஜி.ஆரிடம் விரைவில் அமைச்சரவை அமைக்கும்படி தான் கேட்டுக் கொண்டதாகவும் அவருக்குப் பேச்சுத்திறனில் குறைபாடு இருப்பினும் முதல்வராகப் பதவியேற்க அது தடையாக இருக்காதென்றும், அவர் நான்கு வார்த்தைகளை மட்டுமே கூறினால் போதுமென்றும், உறுதிமொழி முழுவதையும் கூட அவர் சொல்லத் தேவையில்லை என்றும் கூறினார்.
1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்றார். மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஐந்தே நிமிடங்களில் முடிந்தது. பேரவைத் தலைவர் ராஜாராம், மேலவைத் தலைவர் ம.பொ.சி., உயர்நீதிமன்றத் தலைமைநீதிபதி சந்துர்கர், மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றனர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலே இருந்த அமைச்சர்களோ செய்தியாளர்களோ அனுமதிக்கப்படவில்லை.
மேலும் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே அன்று பதவியேற்றாரே தவிர அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை. அரசியல் சட்ட விதிமுறைப்படி ஒரேயொருவர் மட்டும் முதலமைச்சராகப் பதவியேற்று அமைச்சரவை இல்லாத நிலை இருக்கக் கூடாது. ஏற்கனவே கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் பதவி விலகியபோது குண்டுராவ் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தான் மட்டும் முதலில் பதவியேற்றுக் கொண்டு மற்ற அமைச்சர்களை டெல்லி சென்று மேலிடத்தில் கலந்தாலோசித்து விட்டு, பதவியேற்கச் செய்வதாக ஆளுநரிடம் தெரிவித்தபோது அதற்குச் சட்டத்தில் இடமே இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்க வேண்டுமென்று ஆளுநர் கூறிவிட்டார்.
எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டது முதல் அவரைச் சந்திக்க விடாமல் தடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சேலம் வழக்கறிஞர் கண்ணன் மூலமாக 19.2.85 அன்று தலைமைச் செயலகத்தில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசினார். 25.2.85 அன்று எட்டாவது தமிழகச் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் கூடி, தற்காலிகப் பேரவைத் தலைவர் ப.உ.சண்முகம் அவர்களால் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
ஆனால் இந்த முதல் கூட்டத்திற்கே முதல்வர் எம்.ஜி.ஆர். வரவில்லை.
